நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘முன்னை வந்தனர் எல்லாம் முடிந்தனர்

பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் ‘

– (திருமந்திரம்) – திருமூலர்

புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற அதிகாலை. உடலைச் சங்கடப்படுத்தாமல் ஊடுருவி, உள்ளத்தை மென்மையாய் வருடிக்கொண்டிருக்கும் இதமான காற்று. கரையொட்டாயிருந்த நாணற் புதர்களில் சிக்குண்டு மீண்டும் ‘களுக் ‘கென்று, ஓடும் நீரில் குதிக்கும், நீர்வாழினங்கள். உடலிருந்து விடுபட்ட சீவாத்மாக்களைப்போல, கூண்டிலிருந்து விடுபட்ட புள்ளினங்கள் சில நாழிகைநேரம் வெட்டவெளியில் திசையற்று பறப்பதும், பின்னர் திசையொன்றை தேர்வுசெய்து சிவ்வென்று பாய்வதுமாயிருக்கின்றன. மாறாக தான்போகுமிடம் எதுவென்றறிந்த களிப்பில், காவிரி சுழித்தும், குதித்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

சனங்களின் சுவாசங்கூட அறிந்திராத, அடர்ந்த மரங்களுக்கிடையில் வெண்மணல் செறிவுடன் கிடக்கும் நதிக்கரை. கரையில் நாணற்புற்கள் பரப்பி அதன்மீது புலித்தோல் விரித்து இடதுபாதத்தை வலது தொடையிலும், வலது பாதத்தை இடது தொடையிலும் வைத்து, முழங்காற்பகுதி தரையில் படுமாறும் கைகளைத் தளர்த்தி முழங்கால்மீது வைத்து நேராக நிமிர்ந்து பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். உடலில் அசைவில்லை, நெளிவில்லை. பூமியில் முளைவிட்டு நெடுநெடுவென்று வளர்ந்த கொடிமரத்தின் விறைப்பு அவரது சரீரத்திற் தெரிகிறது. இடது நாசியை வலது கைவிரல்களால் அடைத்து, வலது நாசிவழியாகக் காற்றை மிச்சம்வைக்காமல் வெளியேவிட்டுக் காற்றுப்பையை வெற்றிடமாக்குகிறார். பின்பு, இடது கைவிரல்களால் வலது நாசியை அடைத்துக்கொண்டு இடது நாசி வழியாகக் காற்றைக் உள்ளிழுத்து அறுபத்து நான்கு நொடி அளவு காத்திருந்து மீண்டும் சீராக வெளியேற்றுகிறார். இச்செயலை ஒருமுறை ‘கும்பகம் ‘ என்ற பெயரிட்டுச் சொன்னதாய் நினைவு. கடந்த சில மாதங்களாக, காவிரி நதிக்கரையையொட்டி அதிகாலையில் சிவலிங்க வழிபாடும், காலையிலும் மாலையிலும் அவர் பிராணாயாமம் பழகுவதையும் தேவராசன் அவதானித்து வந்திருக்கிறான்.

தேவராசனை, இன்றைக்கு இவ்விடம் அழைத்துவந்தவர் முருகப்பிள்ளை. அதிகாலையென்றபோதும், அவனுடல் வேர்த்திருக்கிறது. மிகவும் களைத்திருந்தான். நடப்பதனைத்தும் சில மாதங்களாக அவனது எண்ணத்திற்கு மாறாக நடக்கின்றது. நேற்றுவரை தனது கூட்டாளியாகவிருந்த பிரான்சுவா ரெமி, இவனை நட்டாற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பானென நினைத்தானில்லை. பிரெஞ்சுதீவுக்கு ஆள் கடத்தின விவகாரத்தில், பரமானந்தனையும், இவனையும் குற்றவாளிகளாக்கிப்போட்டு, பிரான்சுவா ரெமியும், சூதேயும் கும்பெனியில் எந்த விக்கினமுமில்லாமல் உத்தியோகம் பார்க்கிறார்கள். லாபூர்தொனேயின் கையாளான வேலாயுதமுதலியுந்தானே எப்போதும்போல கோட்டைவரை அலங்காரமாக பல்லக்கில் போகிறார். இவனொத்த சாமான்யசனங்களுக்கே கோன்செல் விசாரணையும், கோட்டைக் கச்சோத்தும், சாவடி முச்சந்திகளில் கசையடியும், காதறுப்பும் போலிருக்கிறது. வாணியும் அவள் தாயார் குமுதவல்லியும் திருச்சினாப்பள்ளிக்கு வந்திருப்பதாகச் சொல்ல இங்கே வந்து அவர்களைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். தன் மனச்சுமையை துறவி சாமியாரிடம் கொட்டி ஆறுதல் பெறவேணுமென நினைத்த மாத்திரத்தில், இவனெதிரே முருகப்பிள்ளை நிற்கிறார். துறவிச்சாமி அழைத்துவரச் சொன்னதாகத் தெரிவிக்கிறார். இவனை காலங்கார்த்தாலே ஒதுக்குபுறமான காவிரியின் நதிக்கரையில் விட்டுவிட்டு, அவசரமாய் சிவகங்கை போகவேணுமென்று புறப்பட்டுப்போனார். எதிரே தியானத்தில் துறவி சொக்கேசன். இந்தச் சாமியையைக்கூட விளங்கிக் கொள்வதென்பது கடினமாகவிருக்கிறது. வாணிக்குத் திருச்சினாபள்ளி ராச்சியத்தினைக் கையளிப்பேன் என்கிற வார்த்தைப்பாட்டைக் காப்பாற்றவேணுமென்கிற எண்ணமேதும், இந்தத் துறவியிடம் இல்லை. பின்னெதற்காக சத்திரத்தில் படுத்திருந்தவனை, இந்த அதிகாலை நேரத்தில் எழுப்பிக் கூட்டிவர முருகப்பிள்ளையை அனுப்ப வேணும் ?

உண்மையில் யாரிவர் ? கர்னாடக தேசமெங்கும் இந்து ராச்சியங்களை ஏற்படுத்தவேணுமென்று சொப்பனங் காணும், மதுரை நாயக்கர்களின் ராஜ குருவா ? எதிர்கால நிகழ்ச்சியையும், தொலைக்காட்சியையும் காணும் ஆற்றல்பெற்ற இருடியா ? அல்லாதுபோனால் சுடுகாடுகளுக்கு இரவுநேரங்களிற் சென்று பிணங்களைத் தின்றுவருவதாக உலவிவரும் தன்னைப் பற்றிய கட்டுகதைகளைப் பொருட்படுத்தாமல், ‘நித்தியவியாபக சைதன்னியமே ஆத்மா ‘ எனப்போதிக்கின்ற ஜடாமுடி தரித்த கபாலிக விரதரா ? சொக்கேசனா, தளவாய் வெங்கடாச்சாரியா ? யார் ?

‘தேவராசா.. தளவாயென்பதும், துறவியென்பதும் சராசரி மனிதர்களுக்காக நானணிந்துள்ள வஸ்திரம். அரவம் சட்டையை உரிப்பதுபோன்று, எந்த நேரத்திலும் அவிழ்த்துப்போடலாம். உண்மையில், நானொரு தாந்திரீவாதி. இளமையும் எழிலும்கொண்ட பெண்ணிடம் முத்திபெறமுடியும் என நம்புகிறவன். வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி. என்னை யாரென்று தெரிந்துகொள்ளவேணுமா ? எனது ரிஷிமூலம் அறியப்படவேணுமா ? ‘

பிராணாயாமத்தினை முடித்து எழுந்துவந்திருந்த சொக்கேசன் கேள்விகளைத் தொடுத்துகொண்டு எதிரே நிற்கிறார். கறுத்திருந்த முகமும், சிவந்து அக்கினிச் சுவாலையையுடன் தகித்துக் கொண்டிருக்கும் கண்களையும் கண்டமாத்திரத்தில், தேவராசன் வெட்டுண்டமரம்போல அவர் பாதங்களில் விழுந்தான்.

‘சாமி, இந்தப் பாவியை மன்னித்துத் தயவு பண்னவேணும், தங்கள் மகிமையை அறிந்திருந்தும் தப்பான எண்ணங்களை மனதில் ஓடவிட்டேன். ‘

‘பயப்படாதே!… மனுஷர்களுக்குச் சகலத்தையையும் அறியவேணுமென்கிற ஆவலிருக்கும் என்பது அறிந்ததுதானே. எமக்கிதுவரை விசுவாசமிக்க ஊழியனாய் இருந்திருக்கும் உன்னிடம் இனி நடக்கவிருக்கும் வினைப்பயனைச் சொல்லவேணுமென்றே அழைத்திருந்தேன். சில சங்கதிகளை உனக்கு விளங்கப்படுத்தவேணும். முதலாவதாக உம்முடைய தகப்பனின் உடன்பிறந்தாள் குமுதவல்லியின் புத்ரி வாணிமீது நீ கொண்டிருக்கும் பிரேமை மீதானது. அதனை நீ விட்டுவிடவேணும். அந்தப் பெண்ணுக்கு ராச்சியபரிபாலனம் பண்ணவேணும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இல்லையென்று, தன் நெருங்கிய பந்துக்களிடம் பிரஸ்தாபித்திருக்கிறாள். இந்த விஷயத்தில் உண்மையான வாரிசாகவிருக்கின்ற அவளது தமக்கையைப் போலவே ராச்சிய அபிலாஷைகளை வெறுத்தொதுக்குகின்ற மனப்பான்மையில் இருப்பதை எமது ஆட்கள் மூலம் அறிந்தோம்.. இனியும் வாணியையும் அவளது தாயார் குமுதவல்லியையும் நீ நம்பியிருப்பதில் பிரயோசனம் ஏதுமில்லை. தாயும் மகளும், ஓரிருகிழமைகளில் கோயில்பணியில் ஈடுபாடுகொண்டு, குடந்தை கும்பேஸ்வரர் கோவிலுக்குத் தங்களை அடிமைகளாக ஒப்படைத்துக்கொள்ள இருக்கிறார்கள். இப்படித்தான் நடக்கவேணுமாய் தீர்மானித்திருக்கிறபொழுது நம்மால் ஆவதென்ன ?

‘வாணிக்குத் தமக்கையொருத்தி இருக்கின்றாளா ? ‘

‘ஆமாம் ஒன்றுவிட்ட சகோதரி. நீயும் அறிந்ததவள்தான். வாணியின் தகப்பனான விசயரங்க சொக்கநாதனுக்கும் காமாட்சி அம்மாளுக்கும் பிறந்து, பிரெஞ்சுத் தீவில் தஞ்சம் புகுந்து இன்றைக்குத் திரும்பவும் திருச்சினாப்பள்ளிக்குத் தன் தாயாருடனும், கணக்கன் சீனுவாச நாயக்கனுடனும் வந்திருப்பவள் – நாமறிந்த பெண்- தேவயானி ‘

‘தேவயானிக்கும் திருச்சினாப்பள்ளி அரசுரிமைகோர விருப்பமில்லையென்று சொல்கிறீர்கள். திருச்சினாப்பள்ளி அரசாங்கமும், மராத்தியர்களிடமிருந்து திரும்பவும் துலுக்கர்வசம் வந்திருக்கிறது. இனி சிவகங்கையில் பதுங்கிவாழும் பங்காருதிருமலையின் வாரிசுகளுக்கு எதிரி நவாப் ஆசப் ஜாவா ? அவன் வசந்தானே திருச்சினாப்பள்ளி தற்சமயம் இருக்கிறது. உண்மையில் தளவாய் வெங்கடாச்சாரியான நீங்கள் அவர்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம் ? ‘

‘தேவராசா! பங்காரு திருமலையின் வாரிசுகளுக்கு, தளவாய் வெங்கடாச்சாரியின் கடமைகள் இனி பாத்தியதையில்லை. அதனை முருகப்பிள்ளைவசம் கையளித்துவிட்டேன், இனி அவன்பாடு. எனக்கிப்போது, அதிமுக்கியமாய் கவனிக்கவேண்டிய காரியமொன்றிருக்கிறது. இவ்வுலக மரத்திலிருந்து என்னுயிர்க்கனி விழுகின்ற நேரமும் வந்துவிட்டதை அறியவந்ததால் செய்யவேண்டியது. உனக்கதனை தெரிவிக்கவேணுமென்று காத்திருந்தேன். எனது பிறப்பின் நோக்கம் முடிவுக்கு வர இருக்கிறது. இரண்டொரு நாட்களில் கபாலத்திலுள்ள ‘பிரம்ம ரந்திர ‘ வாயில் மூலமாக, யோக முயற்சியால் ஆன்மாவை வெளியேற்றவேணும். ‘

‘சாமி ‘… முன்னால் நடந்து கொண்டிருந்த துறவி சொக்கேசனை மெளனமாய்ப் பின் தொடர்ந்தான். இருவருக்குமிடையில், உலர்ந்த வெண்மணலில் புதைந்தெழுந்த பாதங்களின் ஓசைமாத்திரம் தனித்து ஒலிக்கின்றது. தேவராசன் நிமிர்ந்து பார்த்தபோது அவர்முதுகில் வியர்வை முத்துகள், உடைந்து வடிகின்றன, அவற்றிலிருந்து ஒருவிதமான பன்னீர் மணம். மெளனம் கலைந்து, அடங்கியத் தொனியில் பேசுகிறார்.

‘தேவராசா..என் கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களும், ஏக்கங்களும் சித்தத்தில் பதிந்து கிடக்கிறன. அவ்வுணர்வுகள், அதிர்வுகளை எழுப்புகின்றன. பற்றுக்களின் தாக்கங்களால் அதிர்கின்றன. புறப்பொருள்களும், நிகழ்வுகளும், அகவுணர்வுகளும் சித்தத்தில் அதிர்வை ஏற்படுத்துவதும், சித்தம் அவற்றை அறிவதும் அவறிதற்கேற்பச் செயற்படுவதுமாக ஒரு தொடரியக்கம் நடந்தவண்ணமிருக்கிறது. அதிர்வேயில்லாத சமநிலைக்கு வர இயலாமல் களைத்து போனேன். அதிர்வுகளற்ற சித்தத்தை அடையமுடியாமலேயே ஆன்மா நீங்கிவிடுமோ என்கிற அச்சம் சில நாட்களாய் எனது மன உளைச்சலைக் கூட்டியிருக்கிறது. முப்பத்தாறு தத்துவங்களின் விரிவாகக்கிடக்கும் மாயா உலத்திலிருந்து விடுபட்டு உண்மையான சிவபோகத்துள் ஆன்மா அழுந்திடவேணுமென்று கனவுகண்டேன். மரணத்தைக் கண்டு அச்சமில்லை. முக்தியை பெறமுயன்ற என் வழிமுறையில் எங்கே பங்கம் நேர்ந்தது ? எதனால் நேர்ந்தது என்பதை அறியாமலேயே உயிர் நீங்கிவிடுமென்கிற அச்சம். சாம்பலும் சடையும், காவியும் தாழ்வடமும், கிரியையும் யோகமும், அகத்தில் எந்தமாற்றத்தையும் மூன்று நூற்றாண்டுகளாக கொண்டுவராததால் ஏற்பட்ட ஆன்மாவின் கவலை. எண்வகைச் சித்துகள் கைவரப்பெற்றும் நிறைவு காணாமல், அலைகின்றேன். தேகத்தை காயகற்பங்களால் திடமாக செய்து கொண்டவன், சித்தத்தை, சித்திசெய்துகொள்ளத் தவறிப்போனதால் ஏற்பட்ட வியாகூலம்.

‘காய கற்பமா ? ‘

‘ஆமாம். என் உடம்பை வளர்த்து அதன் மூலம் உயிரை வளர்க்கும் உபாயம். மூலிகைகளும், மூப்புச் சத்துக்களும் முறையோடு செய்த அமிழ்தம். அதனைப் பாகம் தவறாது புசித்துவந்தால் எப்போதும் மூப்பு அண்டாமல் செய்துகொள்ளலாம். கற்பங்களில் பலவகைகள் உண்டு. அவற்றை முழுவதுமாக உட்கொள்ள முடியாது, சிறிது சிறிதாகத்தான் புசித்து காயசித்தி பெறமுடியும். ‘

‘உங்கள் சித்தத்தை சித்தி செய்ய இயலாமற்போனதற்குத் தேவயானி ஏதோவொரு வகையிற் காரணமாக இருக்கலாமா ? ‘

‘சத்தியம். மூன்று நூற்றாண்டுகளாக இவ்வான்மா விடுதலைப் பெற வேணுமென்று காத்திருக்கிறது. உலகியலில் இருந்துகொண்டு இறைவனை நினைத்து அறவாழ்க்கை வாழ நினைத்த ஆத்திகனைப் திசை திருப்பி அல்லலுற வைத்தவள் தேவயானி. நான் பூரணத்தை, அதாவது முழுமையான ஆன்மப்பலனை உலகியல் வாழ்விற்கு உட்பட்ட அறம் பொருள் இன்பத்தின் வழியில் அடைய நினைத்தேன். அதனைச் செய்யவிடாமல் தடுத்தவள் இந்தப் பாதகி. தேவயானி வேறுயாருமல்ல, முற்பிறவியில், அக்கினிச் சாட்சியாக என்னைக் கைப்பிடித்த ஓர் அர்ச்சகர் பெண், நாசக்காரி. எனது ஆன்மாவைப் பாவத்தில் தள்ளியவள். இன்னொருவனைப் பர்த்தாவாக வரித்துக்கொண்டு பதிவிரதா தர்மத்தை துவம்சம் செய்தவள். அறியாமையினால், துர்மரணத்தினை வரவழைத்துப் பிறவியின் கர்மாவை உணராமல் என்னிடமிருந்து அவள் விலகிச் செல்ல நினைக்கிறாள். தூல உடம்பை விட்டு நீங்கிய, அவளது உயிரானது மீண்டும் மண்ணுலகில் வினைக்கு ஈடான பருவுடம்பு பெற்றுச் சனனமெடுக்கின்ற பிறவிகள் தோறும், அவளது வருகையை எதிர்பார்த்து, நான் காத்திருக்கிறேன் என்பதையும், அவளை விடாமல் நான் துரத்துகிறேன் என்பதையும் உணராத பேதைப் பெண். ‘

‘அப்படியானால் பிரெஞ்சுத் தீவில், அருணாசலத் தம்பிரான் என்பதாய்ச் சொல்லப்பட்டது ‘

‘நானே. அதுவும் எனது சித்துகளில் ஒன்று. ககனக் குளிகையினை வாயில் அடக்கிக்கொண்டு, தேவயானியின் மீதிருக்கும் ப்ரீதியால் இந்து மகா சமுத்திரத்தை எத்துணை முறை பறந்து கடந்திருப்பேன் தெரியுமா ? ‘

‘நீங்கள் சாகாக் கலையில் தேர்ந்தவர் என்றார்களே ?

‘ம்..மரணத்தைத் தவிர்க்க முடியாது, தள்ளிப்போடலாம். அப்படித்தான் தள்ளிப்போட்டு, ஒரு நாள் இரு நாளல்ல, முன்னூறு ஆண்டுகளாக அப்பெண்ணுக்காக காத்திருந்திருந்தேன். என்றாவது எனது ஸ்தூலவுடல் அவளது ஸ்தூலவுடலை ஸ்பர்சிக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தேன். அதற்கான காலமும் நேரமும் கூடிவிட்டது. அவளைக் கூடும் நாள் வந்திருக்கிறது. அந்நாள் கதிரவன் ஒளிபடக் காரிருள் மறைவதைப்போல எனது அறியாமை மெய்ஞ்ஞானசுடரில் அழிந்துபோகும் நாள். பிராகிருதிக்கும் புருஷனுக்குமிடையே எழும் உறவில் இருமைநிலை அறுந்து இருவரும் ஒன்றாய்க் கலந்து பேரின்பம் காணும் நாள். என் ஆன்மப் பயணத்தின் இறுதிகட்டத்திற்கு வந்திருக்கிறேன். ‘

‘சாமி…! ‘

‘தேவராசன்.! அவள் எனக்காகக் காரைக்கால் பட்டணத்தில் காத்திருக்கிறாள். ரக்தாஷி வருஷம், வைகாசிமாதம் 31ம் நாள் செவ்வாய்க்கிழமை பெளர்ணமி தினத்தில் இரவு இரண்டாம் சாமத்தில், தேவயானியின் பருவுடம்போடு, இந்தத் தாந்திரீக யோகி சம்போகிப்பதென்று நாள் குறித்தாகிவிட்டது. ‘,

கர்ணகடூரமாக குரலில் சொல்லி நிறுத்திய துறவி சொக்கேசன், ஹஹ்ஹா வென்கிற அமானுஷ்யமான சிரிப்புடன், கண்கள் மின்ன தாண்டவமாடுகிறார். தேவராசன் ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

/தொடரும்/

* இப்பகுதியை எழுத உதவிய நூல்கள்:

அ. சித்தர் தத்துவம் – Dr. க. நாராயணன்

ஆ. பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் – ஸ்ரீ தேவநாத சுவாமிகள்

இ. மரணத்தின் பின் மனிதர் நிலை – மறைமலையடிகள்

ஈ. சித்தர்களின் சாகாக்கலை- சி.எஸ் முருகேசன்

உ. Tantra – Daniel Odier

ஊ. La Reincanation J.H. Brennan

எ. Nos vies anterieurs – Joant Grant et Denys Kelsey

*

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts