வடிகால்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

க்ருஷாங்கினி


நேற்று திடாரென்று நீ கொதித்ததால் என் மனம் கடினமாகிவிட்டது. ஏமாற்றம்! ஏமாந்துவிட்டேனோ என்று முதல் முறையான தயக்கம். எதிர் பார்த்திருந்தால் அவை எதிர்பார்ப்புக்கள். ஆனால் எதிர்பாராததால் இது ஏமாற்றம்.

நீ கேட்டாயே, உன்னை என் வட்டத்திலிருந்து தள்ளிவிட்டேனோ என்ற சந்தேகத்தை; நீ இல்லாமல் எனக்கென்று வட்டமே கிடையாது. மேகங்கள் வானில் நிரம்பினால்தான் நிலவுக்கென்று கோட்டை. இல்லா விட்டால் பாதுகாப்பு இல்லாத வெறும் தனி நிலாதான். இப்போது என் மனம் வெட்டவெளியில் திறந்து விடப்பட்ட எலிதான்.

எப்போதாவது அனல் வீசியிருந்தால், அல்லது வீசலாம் என்ற நிலையிருந்தாலும் சுட்டது எதிர்பார்ப்புடன் இணைந்திருக்கும். இந்த திடார் கொதிப்பு என் மனதில் உன்பகுதியைக் கல்லாக்கித் தனியே நிற்கவைத்து விட்டது; இளகிய மனதுடன் ஒட்டாது.

குழந்தை இருவருக்குமே பொது என்ற எண்ணம் தவறோ ? உனக்கே தெரியும், நான் உன்னைச் சேர்வதற்குமுன் எனக்கு என்று இருந்த தனி இடம். திரும்பவும் அங்கே போகச் சொல்வது நியாயமா ? காலில் உறுத்திய முள்ளைக் களைந்து, நிம்மதிப்பட்டு நீண்டநாட்கள் கடந்தபின் திரும்பவும் குத்திக் கொள்ள அவர்கள் தயாராயில்லை.

‘ பணத்தை எடுத்துக்கொண்டு செல் ‘ எனக் கூறும்போது உன் பணம் என்ற எண்ணமும் சொல்லின் சூடும் என்னை உடல் முழுதும் நனையவைத்து நடுங்கி ஒரு மூலையில் நிற்கவைத்துவிட்டது. உன் சாவியில் என் எழுத்து திறந்தது. ஆனால், அது இப்படி உன்னைப்பற்றி எழுதப் பயன்பட்டு விட்டதே! தீட்டிய மரம்தான். ஆனால் வேறு வழியில்லை.

கில்லியை தாண்டு நெடுந்தூரம் கெல்லியெறிந்தால் மற்றவர்கள் மகிழ்ச்சி தான் கொள்வார்கள். அந்த அலட்சியம் என்னைமட்டும்தான் கவலை கொள்ளச் செய்யும். என்னை உன்னிடமிருந்து கத்தியால் கீறி, கையால் கொஞ்சம் தள்ளியும் வைக்கச் சொன்ன சக்தி எது என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

என்னையே என்னுள் வைத்து தண்டித்திருக்கிறேன், இது மறுமுறையும் திருப்பப் படக்கூடாது என்று. அது எவ்வளவு நாட்கள் கட்டுப்படும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. எனக்கு கோபம் அடக்கத் தெரியாத ஒன்று. நீ, கோபத்தை அடக்கி வழிசெலுத்தி விடுவதாலேயே அதன் அனல் அதிகம்.

நன்றாகவே தாக்கப்பட்டேன்!

எனக்கு இந்த நிகழ்ச்சியின் பாதிப்பை அழுகையில் கரைக்கத் தெரிய வில்லை; கரையவும் மாட்டேன் என்கிறது. கையின் துணையும் கொண்டால் சிறிதளவு நிம்மதி வரும். வடிகால் இதுதான்.

ஆனால் ஒன்று, இனி எப்போது நான் ‘ அடிப்பேன் ‘ என்ற வார்த்தையை உபயோகித்தாலும் அது என் மனதை முதலில் பலமாக அடித்துவிட்டுத்தான் எதிராளியைத் தாக்கும். இதுவும் பிட்டுக்கு மண் சுமந்த பரமன் கதைதானே! இனி நான் கையை ஓங்கினால் அது முதலில் என் முதுகில் அறையும்.

உன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்தி என்னிடம் பணிந்த உன் ஆண்மை உன் பலத்தையும் என்னிடமே பிரயோகிக்கட்டுமே!

—-

nagarajan63@yahoo.com

Series Navigation

author

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

Similar Posts