நீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மாதாவுடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவுங் கைசலித்து விட்டானே – நாதா

திருவிருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை

கருப்பையூர் வாராமற் கா

– பட்டினத்தார்

—-

நண்பனே! உனக்கொரு விடுகதை போடுவேன். சிவஞான சித்தியார் எனது செவியிலிட்ட விடுகதை. எனக்கும் உனக்குமுள்ள இடைவெளியை விஸ்தாராமாய்ச் சொல்லும் விடுகதை, எனது கதை, ஆம்.. ஆன்மா தொழிற்படும்கதை..

ஓர் அரசன் அமைச்சர்களோடும், தனது படைத்தலைவர்களோடும், பரிசனங்களோடும் உலாச்சென்று திரும்பி அரண்மனையினில் புகும்பொழுது வாயில்தோறும் அவர்களை விடைகொடுத்து நிறுத்திவிட்டு, அந்தப்புரத்தில் தனித்துச் செல்கின்றான்.

யாரந்த அரசன் ? அவனது படைத்தலைவர்களும், பரிசனங்களும் யார் ? யோசித்துவை. நேரம்வரும்போது சொல்கிறேன்.

….

இருபதாம் நூற்றாண்டு….

‘பெர்னார் இவைகளெல்லாம் என்ன ? ‘ – ரிஷார்.

‘ஓலை நறுக்குகள்; இரண்டு மூன்று நூற்றாண்டுகள் தென்னிந்தியர்கள் எழுத உபயோகப்படுத்திய ஏடுகள். ‘ – பெர்னார்.

‘அப்படியா இவற்றில் இருப்பது என்ன ? பண்டைய தமிழ் இலக்கியத்தின் மூலமா ? ‘

‘இல்லை. சொல்லப்போனால், இதுவும் ஒருவகையில் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பினைப்போன்றதே. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், மாறனென்கிற புதுச்சேரித் தமிழரால் எழுதப்பட்டிருக்கிறது. தங்கள் சினேகிதர் பெர்னார் குடும்பத்தைச் சேர்ந்த மனிதரொருவர் சம்பந்தமான தகவல்கள் இவ்வோலை நறுக்குகளில் உள்ளன. அடடா..ஆனால் இதனைக் கொண்டுவருவதற்கு, நான் பட்டபாடு இருக்கின்றதே.. எப்படிச் சொல்வேன் ?. -வேலு.

‘ழெ நெ கொம்ப்ரான் பா சே கில் தி, கே தீத்-தோன் அமி ? ( Je ne comprends pas ce qu ‘il dit. Que dit-ton ami ? -அவர்சொல்வது எனக்கு விளங்கவில்லை. உன் நண்பர் என்ன சொல்கிறார். ‘ – ரிஷார்.

‘ரிஷார், செத் உய்ன் பர்த்தி ட் ‘அழாந்தா தன் தமுல் எக்ரி, சுய்ர் தெ ஃபேய் தெ பால்ம், கீ எத்தே யூத்திலிசே பர் செ ஆன்சேஸ்த்ர், ழெ தெ ‘எக்ஸ்ப்ளிக்கிறே பாந்தான் லெ தினே ( Richard, C ‘est une partie de l ‘agenda d ‘un tamoul, ecrit sur des feuilles de Palmier qui etaient utilisees par ses ancetres. Je t ‘ expliquerai pendant le diner-) வேலு சற்றுமுன் சொன்னதை பெர்னார் பிரெஞ்சில் மொழிபெயர்த்தான். பிறகு தன் பிரெஞ்சு நண்பனிடம், ‘எல்லாவற்றையும் சொல்லவேண்டுமென்றால், இப்போது நேரமில்லை, இரவு உணவின்போது தெரிவிக்கிறேன் ‘, என்பதாகத் தெரிவித்தவன், உள்ளூர் சிநேகிதனிடம், ‘வேலு! நீ மேலே சொல்லு. முழுவதையும் படித்துப்பார்த்தாயா ? நான் எதிர்பார்க்கும் செய்திகள் இதில் உண்டா. மாறன் யார் ? ‘ தொடர்ச்சியாகக் பெர்னார் கேள்விகளை அடுக்குகிறான்..

‘பெர்னார் உன் கேள்விகளை ஓரளவு ஞாபகம் வைத்துக்கொண்டு அதே வரிசையில் பதில்களைச் சொல்ல முயற்சிக்கிறேன் ‘. முழுவதும் படித்தாயா ? என்று கேட்டாய். படித்தேன் என்பதைவிட மேலோட்டமாகப் பார்த்தேன், என்றுதான் சொல்லவேண்டும். படித்தவரையில் நான் யூகித்தது என்னவென்றால், இதுவொரு முடிவும் ஆரம்பமும் இல்லாத நாட்குறிப்பு. இதுவரை கிடைத்துள்ள ஓலை நறுக்குகள், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கான குறிப்புகள் என நினைக்கிறேன். வேம்புலி நாயக்கர் நண்பரிடம், ‘நன்கு தேடிப்பார்க்குமாறு சொல்லியிருக்கிறேன். வேறு ஓலை நறுக்குகள், கிடைக்குமாயின், அவசியம் என்னிடம் கொண்டுவருவார்கள். இவ்வோலைச் சுவடிகளில் நீ எதிர்பார்க்கின்ற செய்திகளிருக்கின்றதா என்பதை நீதான் உறுதி செய்யவேண்டும். தவிர, இந்த நாட்குறிப்பு எழுதியது மாறனென்பதால், அவனைச் சுற்றியே வலம் வருகிறது என்பதையும் நாம் மனதில் நிறுத்தவேண்டும். இறுதியாக, இந்த ‘மாறன் ‘ என்பவன் யார் என்கின்ற கேள்வி எனக்குமுண்டு. உன் மூதாதையர் பெர்னார் குளோதன் நண்பர்களில் ஒருவனா ? அல்லது அவரது அலுவலக ஊழியர்களில் ஒருவனா என்பது தெளிவாகவில்லை. அதே சமயம், குளோதனின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்திருக்கிறான். குளோதனைப்பற்றிப் பேசும்போதெல்லாம், தெய்வானை என்கின்ற தமிழ்ப் பெண்ணொருத்தி வருகிறாள். இந்த நாட்குறிப்பில் குளோதனுக்கும் தெய்வானைக்குமுள்ள காதல் பேசப்படுகிறது. ஆனால் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை வைத்து இப்போதைக்கு, அவ்விருவருடைய காதலுக்கு ஏற்பட்ட முடிவினைக்குறித்தோ, அல்லது குளோதனின் இறப்புக் குறித்தோ ஏதும் சொல்வதற்கில்லை. நமக்கு அதிர்ஷ்டமிருந்து, வேறு ஓலைச்சுவடிகள் கிடைத்தால், கூடுதல் தகவல்கள் பெறலாம். ஓலைப்படிகளைத் தேதிவாரியாக வரிசைபடுத்தி யிருக்கிறேன். உனக்கு விருப்பமென்றால் இப்போதே படித்துப்பார்க்கலாம் ‘- வேலு.

‘இரு வருகிறேன் ‘, என்ற பெர்னார் அருகிலிருந்த அறைக்குச் சென்று, பேனாவும், ஒரு சில வெள்ளைத் தாள்களும் எடுத்துவந்தான். ‘மணி மூன்று டா போட்டுக்கொண்டுவா! ‘ எனப்பணியாளிடம் கட்டளையிட்டுவிட்டு, வேலு எதிரே வசதியாக உட்கார்ந்து கொண்டான். ‘எங்கே முதலாவது கட்டினைப் பிரித்துப்படி, கேட்போம் ‘, என்றான்.

அங்கே திடாரென்று ஒருவிதமான அமைதி நிலவியது. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம், ஓங்கி ஒலிக்கிறது. முதற் கட்டினுடைய கயிற்றினைப் பிரித்து, சுற்றியிருந்த துணியின் முடிச்சினை அவிழ்த்தான். பெர்னார் படிப்பதற்கு வசதியாக எழுந்து சென்று மேசை விளக்கை, வேலுவின் அருகில் வைத்தான். ஓலைச்சுவடியைப் பிரித்து வரிசையாய் ஓலைப்படிகளை வாசிக்க ஆரம்பித்தான்.

ஓலை -1

பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆனி(சூன்)மாதம் 26ந்தேதி புதன்கிழமை:

இந்தநாள் புதன்கிழமை காலமே வில்லியனூர்ச்சாவடிக்கு நொண்டிக்கிராமணியுடன் போய், சாவடிக்காவலன் வசமிருந்த எனது குதிரையைப் பிடிப்பிச்சுக்கொண்டு எனது வளவு சேர்ந்தேன். சாயங்காலம் மூன்றுமணிக்குமேலே வைத்தியரில்லம் புறப்பட்டுப் போனேன். நான் போனவேளை, துண்டினைத் தலையில்கொடுத்து, வைத்தியர் திண்ணையில் ஒருக்களித்து நித்திரைகொண்டிருக்கிறார். வாணியானவள் தகப்பானாருக்கு வெற்றிலைமடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்தமாத்திரத்தில், அவள் தகப்பனாரிடத்தில் தெரிவித்திருக்கவேணும், படுத்திருந்த சபாபதிப் படையாட்சி எழுந்துகொண்டார்.. நான் குதிரையை வீட்டெதிரே இருந்த கிச்சிலிமரத்தருகே காணிக் கல்லொன்றில் கட்டிப்போட்டு வரவும்,

ஓலை -2

‘வாடாப்பா மாறன் ? ஏது பார்த்து கனகாலம் ஆவுது. உன்னைகுறித்துத்தான், சித்தேமுன்னே நாங்கள் பேசலாச்சுது. பிராஞ்சு தேசத்துக்குப் கப்பலேறிவிட்டாயோ என்பதான சமுசயம் எங்களுக்கு ‘, என்றவரிடம்; ‘அந்தப்படிக்குத்தான் நடந்திருக்கவேணும்,. ஆனால் தெய்வரெத்தனத்தாலேயன்றி மனுஷர் எத்தனத்தில் ஏதும் நடப்பதில்லையென ‘ என்று சொல்ல அதைக்கேட்டுப்போட்டு, ‘ஏன் ? என்ன சங்கதி ? ‘ என்றவரிடம், புதுச்சேரிபட்டணத்திலே ஆட்கடத்துபவர்களிடம் துபாஷ் பலராம் பிள்ளையும் நானும் சிறைப்பட்டிருந்த வயணம் தொடங்கி, கும்பெனி அரசாங்கத்தால் மீட்க்கப்பட்ட வயணம்வரை ஆதியோடந்தமாக சொல்லலாச்சுது. இந்தச் சங்கதிகளை, சுறுக்காக அல்லாமல் இப்படிச் சொல்லும் நிமித்தியம் என்னவெனில், ‘இன்றையதினம் வாணியின் பூர்வோத்திரத்தை எப்படியாயினும் வைத்தியர் வாயால் அறியவேணும், எனது பட்ஷம் யோகமெனில், ஓரிரு வார்த்தைகளேனும் வாணியண்டை பேசவேணும் என்பதாகும்.

ஓலை – 3

எனது மனதிலிருப்பதை வைத்தியர் படித்திருக்கவேணும். இன்றிரவு, இங்கே போஜனம் பண்ணிவிட்டு நீ புதுச்சேரி பட்டணம் திரும்பலாமே ‘ என்றபோது நான் சம்மதி சொன்னேன். போஜனத்தின் போது, விளக்கொளியில் ஜொலித்த வாணி முகம் என்னைச் சங்கடப்படுத்தலாச்சுது. எல்லாவற்றையும் உதறிப்போட்டு, இந்தக் கணமே, அவள் கரம்பிடித்து வனாந்தரம், மலைகளென லோகமெங்கும் வலம்வரவேணுமென நினைப்பு கொண்டது வாஸ்த்தவம். இரவு முதல் ஜாமத்திற்குப் பிறகு, சபாபதி படையாச்சியும், நானுமாய் உப்பரிகையில் பாய்போட்டு அமர்ந்து, தாம்பூலம் தரித்தமாத்திரத்தில், ‘மாறன்! என்ன கவையாய் வந்தாய் ? எனக் கேழ்க்கவும், நான் தாமதமின்றி அவரிடத்தில், வாணியின் பிறப்புப் பற்றிய சந்தேகங்களை நிவர்த்திசெய்யவேணுமாய் கேட்டுப்போட்டேன். வைத்தியர் ஒருவேளை சொல்லுவாரோ, சொல்லமாட்டாரோவென்று நானிருந்து யோசனை பண்ணுகிறேன். அந்தமட்டில் வைத்தியர் என்பேரிலே மிகுந்த ஓய்வுபண்ணி, ‘நீ இது ரகசியம் வேறொருவர் அறியாமல் காத்தாயெனில், விபரமாய்ச்சொல்லமுடியும் என்றார். நான் அவ்வாறே சம்மதிபண்ண, அவர் தெரிவித்த வயணம்:

ஓலை -4

பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்னே, வைத்தியர் குடும்பம் கும்பகோணத்தில் ஜீவிதம்பண்ணி வந்திருக்கிறது. அவரது வளவிற்கு எதிர் வளவில், மதுரைநாயக்கர் நிருவாகத்தின் திருச்சிராப்பள்ளிக் கணக்கனாக உத்தியோகம் செய்த சீனுவாசநாயக்கர் என்பவர் வசித்துவந்திருக்கிறார். அதுசமயம் அவர்களது வீதியிலேயே குடித்தனம் பண்ணிவந்தவள் தாசி பவளமல்லி. இவள் குலத்தில் தாசியென்றாலும், தொழிலை வெறுத்து சங்கீதம், நாட்டியம் பக்தியென வாழ்ந்துவந்தவள். அவளுக்குத் தேவலோகத்துக் கன்னிகையையொத்த செளந்தர்யமும், நல்ல குணநலமும் வாய்க்கப்பெற்ற மங்கையொருத்தி குமுதவல்லி என்பதானப் பெயரில் பிறந்து, தாயைப்போலவே கணிகையர் தொழிலில் நாட்டமின்றி சங்கீதம், நாட்டியம் எனத் தேர்ந்து, சதா சர்வகாலமும் கும்பேசுவரர் ஆலயத்திற்குச் சேவகம் செய்துக்கொண்டு இருந்திருக்கிறாள். வைத்தியர் சபாபதிப்படையாட்சிக்கு உடன்பிறந்தவர்கள் எவருமில்லாததால், தாசி பவளமல்லி குமாரத்தி குமுதவல்லியை தன் உடன்பிறந்தாளாகப் பாவித்து வந்துள்ளார்.

ஓலை -5

திருமலை நாயக்கர் காலத்திலும், இராணி மங்கம்மாள் காலத்திலும் செல்வாக்குடனிருந்த மதுரை நாயக்கர் வம்சம், அவர்களின் பெயரன் விஜயரங்க சொக்கநாதன்* காலத்தில் அபகீர்த்தியை அடைந்திருந்த காலம். அவனுடைய தளவாய் கஸ்தூரிரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும், அமைச்சர்கள் நரவாப்பையா, வெங்கடராகவாச்சாராயாவின் துணையுடந்தானே, ஜனங்களிடம் பலவாறான வரிவிதித்து, இம்சித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அது எதனாலெனில், வாலிபப் பிராயத்தில் முடிசூடிக்கொண்ட மன்னன் விஜயரங்க சொக்கநாதன் குணம் வித்தியாசமாய் இருந்திருக்கிறது. தெற்கிலிருந்த கோயில்களில் அவன் விஜயம் பண்ணாத ஸ்தலங்கள் இருக்க முடியாதென்று சொல்கிறார்கள். வடக்கே திருக்கழுக்குன்றம் வரை சென்றுவந்திருக்கிறான். இரண்டுவருடத்திற்கொருமுறை தமது பரிவாரங்களுடன் ஸ்ரீரங்கம், ஜம்புகடேஸ்வரம், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ வைகுந்தம் என யாத்திரை மேற்கொண்டு, கோவில்களுக்கும் மடங்களுக்கும் மானியங்கள், நிவந்தமென்று வாரிக்கொடுத்தவன், ஸ்த்ரீ லோலனாகவும் இருந்திருக்கிறான்..

ஓலை -5

ஒருநாள் இரண்டாம் சொக்கநாதன் கும்பேஸ்வரரைச் தரிசணம் பண்ணவரச்சே, கோவிலில் நாட்டியம் பழகிக்கொண்டிருந்த குமுதவல்லியைக் கண்டு மோகித்திருக்கிறான். அப்படி இருக்க, அவளைக் காணவென்று கும்பகோணம் தவறாமல் வர ஆரம்பித்திருக்கிறான். தாசி குலவழக்கிற்கு மாறாக, எந்த ஆடவருக்கும் இணங்கமாட்டேனென்று வாழ்ந்த குமுதவல்லி, கர்ப்பமுறலாச்சுது.. தன் கர்பத்திற்குக் காரணமான ஆடவன் யாரென்ற ரகசியத்தை எவரிடத்தும் தெரிவிப்பதில்லையென்று உறுதியாய் இருந்திருக்கிறாள். கிழவி பவளமல்லியும் பலவாறாகத் தன் மகளிடம் நிர்ப்பந்தித்தும் பிரயோசனமில்லை. கர்ப்பமுற்றவள் உரிய காலத்தில் இரட்டைப்பேறாக ஆண்மகவொன்று, பெண்மகவொன்று பிரசவித்து, ஆணுக்குக் கைலாசமென்றும், பெண்ணுக்கு வாணியென்றும் பேர்சூட்டியிருக்கிறாள். பிள்ளைகள் வளர, வளர அவர்களிடம் ராஜ குடும்பத்துக் களையிருப்பதைக் கண்டு வைத்தியர் குடும்பமும், மற்றவர்களும் அதிசயித்திருக்கிறார்கள். இந்த நேரத்திலே வைத்தியர் வளவிற்கு தன் பிள்ளைகளுடன் குமுதவல்லி வந்திருக்க, திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்த, சீனுவாச நாயக்கரானவர் குமுதவல்லியின் பிள்ளைகளைக் கண்டு, அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆராக இருக்கவேணுமென்கிற சேதியை ஒருவாறு ஊகிக்கலாச்சுது..

ஓலை -6

அதன்பிறகு, வைத்தியம் பார்த்து ஜீவனம் பண்ணலாமென்று சபாபதிப் படையாட்சி புதுச்சேரி பட்டணத்திற்கு புறப்பட்டு வந்துபோட்டார். மன்னன் இரண்டாம் சொக்கநாதன் சரீர சுவஸ்தமில்லாதபடியினால், அவனிடம் சகாயமேதுமின்றி, இரண்டுபிள்ளைகளை வைத்துக்கொண்டு குமுதவல்லி கஷ்டஜீவனத்திலிருப்பதை அறிந்தமாத்திரத்தில், சீனுவாச நாய்க்கர் ஐந்துவயது பாலகனான கைசாலத்தினை அழைத்துவந்து, புதுச்சேரி வைத்தியரிடம் சேர்ப்பித்திருக்கிறார். அன்றுமுதல், கைலாசம் வைத்தியர் வளவில் அவரது புத்திரன்போன்ற அன்னியோன்யத்துடன் இருந்திருக்கிறான்.

ஓலை -7

இரண்டு வருடங்களுக்குப் பின்பு, ஒருநாள் ராத்திரி, சீனுவாச நாயக்கருக்கு வேண்டுதல்பட்டவரென்று, முதியவர் ஒருவர் வில்லியனூலிருந்த வைத்தியர் வளவுக்கு வந்திருக்கச்சே, அன்னாருடன் ஐந்துவயது மதிக்கும்படியான ஒரு சிறுமியும், சிறுவயதென்றாலும், முகத்தில் முதிர்ச்சி தெரிந்த பெண்ணொருத்தியும் இருந்திருக்கிறார்கள். அச்சிறுமியைக்காண, கும்பகோணம் குமுதவல்லியின் மகளைப்போல இருந்திருக்கிறது. வைத்தியர் அம்முதியவரிடம், ‘இதென்ன நீர் குமுதவல்லியின் மகள் வாணியை கூட்டிவந்திருக்கிறீர் ? குமுதவல்லியும் அவளது தாயாரும் என்னவானார்கள் ? இந்தப்பெண்மணி ஆர் ? என்று கேழ்க்கவும், அவர் சொன்ன விசேஷம்: ‘வைத்தியரே! நான் சீனுவாச நாயக்கரின் சினேகிதன். இதோ உம்மெதிரே இருக்கின்ற சிறுமிக்குப் பெயர் தேவயானி, மதுரை நாயக்கர் வம்சத்தின் வாரிசு. இப்பெண்மணியோ ராணி மீனாட்சியின் ஒன்றுவிட்ட சகோதரி காமாட்சி அம்மாள், ‘ எனத் தெரிவித்துப்போட்டு.

ஓலை -8

மன்னன் இரண்டாம் சொக்கநாதன் அகால மரணமடைந்துவிட்டானெனவும், பிள்ளைபேறற்ற அவனது பட்டமகிஷி ராணி மீனாட்சி, தனதுவாரிசாகப் பங்காருதிருமலையின் மைந்தன் விஜயகுமாரனை அறிவித்துப்போட்டாளென்றும், பங்காருதிருமலை, தளவாய் வெங்கடாச்சார்யாவோடு கூடிக்கொண்டு மதுரை ஆட்சியை தான் அபகரிக்கவேணுமென்கிற அபிலாஷையில் இருப்பதாகவும், குமுதவல்லியும், அவளது புத்ரி வாணியும், தளவாய் வெங்கடாச்சார்யா ஆட்களால் சிறைவைக்கபட்டிருக்கிறார்களெனவும், இப்படியான சமயத்தில்ில் தேவயானியையும், காமாட்சி அம்மாளையும் காப்பாற்றவேணுமானால், இவர்களை வைத்தியரிடம் சேர்ப்பிப்பது அவசியமென நாயக்கர் தீர்மானம் பண்ணியதாகவும், இந்தப்பக்கம் மீனாட்சியும், அந்தப்பக்கம் பங்காரு திருமலையும், ஒருவரையொருவர் நிர்மூலம் ஆக்குவதென்று சஙகற்பம் செய்துகொண்டிருக்கிரார்களென்றும், அரசுரிமைக்குப் பாத்தியதையாக உள்ள மற்றவர்களையும் சங்கரிக்க நினைப்பதாகவும், வருந்திக்கொண்டு கிழவர் சொன்ன மாத்திரத்திலே, வைத்தியர் அவருக்கு மிகுந்த உபசரணயான வார்த்ததைகள் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்..

ஓலை -9

ஒரு சில மாதங்களுப் பின்பு, வைத்தியர் வளவிலிருந்த காமாட்சி அம்மாளும், சிறுமி தேவயானியும், சீனுவாச நாயக்கரும் அவர்களுடன் கைலாசமும் பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். அவ்வாறு புறப்படும்போது நாயக்கர், தேவயானி, கைலாசம், வாணி ஆகியோரின் பிறப்பு ரகசியங்களை ஒருவரும் அறியக்கூடாதென, வைத்தியரிடம் வார்த்தைப்பாடு வாங்கிக்கொண்டவர், தம் ஆட்களிடம் குமுதவல்லியையும் அவளது புத்ரியைக் குறித்தும் தகவல்கள் அறியுமாறு வேண்டியிருப்பதாகவும், அப்படியான தகவலெதுவும் கிடைக்குமெனில், அவர்களைக் காப்பாற்றி, நாயக்கர் பிரெஞ்சுத் தீவிலிருந்து திரும்பி வரும்நேரம் ஒப்படைத்து ஆனமாத்திரம் சகாயம் செய்யவேணுமாய் வைத்தியர்சபாபதி படையாட்சியைக் கேட்டிருக்கிறார். அவ்வாறே பிரெஞ்சுத் தீவுக்குக் காமாட்சியம்மாள், சீனுவாசநாயக்கர், தேவயானி, கைலாசம் முதலானோர் புறப்பட்ட சில நாட்களிலேயே, குமுதவல்லி சீனுவாச நாயக்கர் ஆட்களின் உதவியால், தளவாய் வெங்கடாச்சார்யாவிடமிருந்து தப்பித்தவள், வாணியை வைத்தியரிடம் சேர்ப்பித்துப்போட்டாள். ‘ என்று ஆதியோடந்தமாக வைத்தியர் கூறிப்போட்டு, பின்னையும் இந்தச் சேதி அந்நிய மனுஷர்கள் அறியக்கூடதென்று சொல்லி என்னை எச்சரித்துப்போட்டார்..

ஓலை -10

வைத்தியரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு நான் புறப்பட்டபொழுது, இரவு மூன்றாம் சாமத்தை நெருங்கியிருந்தது. தெரியவேண்டிய சங்கதிகள் அறிஞ்சவனானபடியினால், இந்தத் தினம் மனதிற்குச் சந்தோஷமென்றே சொல்லவேணும். வைத்தியர் சொன்ன வயணத்தினால் பெர்னார்குளோதன் தேடுகின்ற தெய்வானை ஆர் என்றறிந்தேன். தெய்வானையும், வாணியும் சகோதரிகளாகவேணும் என்று சொன்னால், குளோதன் அதிசயப்பட்டுப்போவான். ஆனால் இப்போதைக்கு அவனிடம் உண்மையைச் சொல்லமுடியாது. வைத்தியரிடம் கொடுத்த வார்த்தையின்படி நடக்கவேணும். வளவிலிருந்து புறப்பட்டபோது, எனக்காக வாணி நித்திரைகொள்ளாமல் இருந்திருக்கவேணுமென நினைத்தேன். அவளைச் சந்திக்கவேணுமென்று மனதிலேற்பட்ட தாபத்தினை தணித்துக்கொண்டேன். வீதிக்கு வரச்சே, நிலா வானில் பாசாங்குடன் சிரிக்கிறது.

/தொடரும்/

* .History of the Nayaks of Madura – R Sathyanatha Aiyar

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts