சாகா வரம்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

டாக்டர் என் சுவாமிநாதன்


சிவஞானம் படுக்கையில் புரண்டு படுத்து சற்று கண்விழித்தார். அருகில் அமர்ந்திருந்த மகளைக்கண்டதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற ‘எப்ப வந்த, உமா ? ‘ என்றார்.

‘வந்து அரைமணியாவுது. நீங்க தூங்கிட்டுருந்தீங்க. குடிக்க ஏதாச்சும் தரவா ? ‘ என்றாள் உமா.

‘வேண்டாம் ‘ என்று சாடையில் பதில் வந்தது.

அவள் பையிருந்து சில தாள்களை எடுத்து, ‘ அப்பா, நீங்க தினஒளிக்கு எழுதியிருந்த கட்டுரைய வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டாங்க. இது புரியலயாம். நம்ப முடியாம இருக்காம் ‘என்றாள்.

‘மனிதன் சாக வேண்டாம் ‘ என்ற தலைப்பில் இருந்த சிவஞானத்தின் கட்டுரையை உரக்கப் படிக்கலானாள்.

‘மனிதன் வாழும்போது புது செல்கள் மரபணுக்களால் புதிது புதிதாய் ஏற்படுகின்றன. ஒவ்வொரு முறை மரபணுக்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும்போதும், மரபணுவில் டெலொமியர் என்னும் பொருளின் நீளம் குறைந்து விடுகிறது. ஒரு ஒலிநாடாவின் முனையை ஒவ்வொருமுறை பிரதி எடுக்கும்போதும் சிறிதளவு நறுக்கிவிட்டால், சீக்கிரம் அதிலுள்ள

செய்திகளும் நீக்கப்படும் அல்லவா ? அது போல டெலோமியர் முற்றிலும் குறைந்தால், மரபணுக்கள் உருமாறி தங்களைப் புதுப்பிக்க முடியாமல்போய் மூப்பு வருகிறது. டெலோமியரின் நீளம் குறைய டெலோமெரேஸ் என்ற என்சைமே காரணம். இந்த என்சைமைச் செயலிழக்க வைக்கும் ஒரு வேதிப்பொருள் கண்டுபிடித்தால் , டெலோமியர் குறையாமல் மூப்பே இல்லாமல் மனிதன் சாகாமல் நீண்ட நாள் இருக்கலாம் ‘

அவரை பெருமையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘நல்லாத்தான அப்பா எழுதி இருக்கீங்க. ஏன் திருப்பி அனுப்பினாங்க ? ‘

சிவஞானம் கையை அசைத்தார். ‘சயின்ஸ் எல்லாருக்கும் புரிஞ்சிராதம்மா. போதும்…. இப்ப எனக்கு தலையை சுத்துது ‘ என்றார்.

‘நீங்க தூங்குங்க. நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வரேன் ‘ என்றவள்,பையிலிருந்து ஒரு பிஸ்கெட் பெட்டியை அருகில் மேசையில் வைத்துவிட்டு,அவர் உடலில் விலகியிருந்த போர்வையை சரியாக போர்த்திவிட்டு அகன்றாள்.

அவள் போய் அரைமணி நேரம் சிவஞானம் கூரையை வெறித்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நினைவில் மரபணு, டெலோமியர், மூப்பு, சாகாமை போன்ற சொற்கள் நடமாடின. தலையை வலித்தது. எழுந்து வெளியே போக

உடல் துடித்தது.

அங்கு வந்த ஒரு பணியாளை சைகை செய்து அருகில் அழைத்தார்.

‘எனக்கு வெளியில போய் உட்காரணும். இங்க படுக்கப் பிடிக்கல ‘ என்றார்.

‘இதப்பாருங்க, உங்களை வெளில அழச்சிட்டு போனா எனக்கு வேலை போயிரும். ஒங்களக் கவனமா பாத்துக்க சொல்லி உத்தரவு. கார் விபத்துல நீங்க பொழச்சதே பெரிய விஷயம். தலையில் நல்லா காயம் பட்டு ஆறு மாசமா கோமால இருந்தீங்க. இப்பத்தான் ரெண்டு நாளா ஒங்களுக்கு சுய நினைவு வந்துருக்கு. பேசாம படுங்க. ஒங்களுக்கு ஏதாச்சும் கொண்டாரவா ? ‘ என்றான் கேசவன்.

‘வேணாம்பா. எனக்கு ஒண்ணும் வேண்டாம். கொஞ்சம் காத்தாட வெளியில இருக்கணும்போல இருக்கு. இந்த ரூம் எனக்கு ஜெயிலு மாதிரி இருக்கு. சக்கர நாற்காலில வச்சு ஒரு ரவுண்டு என்னை அழச்சிட்டு போயேன். நாளக்கி என் பொண்ணு என்னப்பாக்க வரச்சே ஒனக்கு பணம் குடுக்க சொல்றேன் ‘.

பணம் என்றவுடன் கேசவன் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.

‘அதில்ல சார், வெளிய போகக்கூடாது. நாம மூணாவது மாடில இருக்கோம். வேணுன்னா இதே மாடில வரண்டாப்பக்கம் சின்ன மொட்ட மாடி இருக்கு. அங்க உங்கள ஒரு அரைமணி ஒக்காத்தி வெக்கிறேன். எனக்கு இன்னம் மூணு ரூமுல வேல இருக்கு. முடிச்சிட்டு அரைமணில வரேன் ‘.

கேசவன் சொன்னபடியே வந்தான். சக்கர நாற்காலியில் கைத்தாங்கலாக உட்கார வைத்தான். அவர் கையில் சிக்காதவாறு குளுக்கோஸ் ஏறும் பாட்டிலை எடுத்து பின்னால் மாட்டினான்.

ரத்த நாளத்துள் குத்தப்பட்டிருந்த ஊசி இடம் பெயராமல் இருக்கிறதா என்று சோதித்தான்.

மொட்டைமாடிக்கு அழைத்துபோய் நிழலாக இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினான்.

மடியில் ஒரு தட்டை வைத்து அதில் பிஸ்கெட்டுகளை பரப்பினான். உள்ளே போனான்.

சிவஞானம் காற்றை ரசித்து மூச்சை இழுத்துவிட்டார். அவருக்கு ஒரு சிகரெட் தேவைப்பட்டது. ஆனால் கிடைக்காது என்று அறிந்து, சிகரெட் குடிப்பதுபோல் காற்றை வாயால்இழுத்து விட்டார்.

அப்பொழுதுதான் அந்தப் பெரியகுரங்கு அவர் கவனத்தில் பட்டது. அது மாடி சுவர் மீது இருந்தது.

அவர் ஒரு பிஸ்கெட்டை எடுத்து அதனருகே ஏறிந்தார். அதை அது லட்சியம் செய்யவில்லை.

அவரையே பார்த்துக்கொண்டு இருந்தது.

திடாரென்று அவருக்கு ஒரு சல்யூட் வைத்தது.

பழக்கின குரங்கோ என்று அவர் ஐயுற்றார். அதைப்பார்த்து புன்னகை செய்து,

‘கம், கம் ‘ என்று அழைத்தார்.

குரங்கு தைரியம் வந்தாற்போல் அருகில் வந்தது.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது…

குரங்கு மெதுவாக பேசியது !

‘சார், நான் தான் ஜம்பு ‘ என்றவுடன் அவர் மிரண்டு போனார்.

தான் காண்பது கனவோ என்று தோன்றியது

மறுபடியும் குரங்கு ‘சார், நான்தான் ஜம்பு, உங்க ஆராய்ச்சி அசிஸ்டன்ட் ‘ என்றது.

அவர் அதை வெறித்து பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

குரங்கு சொல்லியது, ‘ அய்யா நீங்கதான் டாக்டர் சிவஞானம். நெனைவு இருக்கா ?

மரபணு ஆராய்ச்சியில நீங்க பெரிய விஞ்ஞானி. மனிதன் சாகாம இருக்கணும்னு

ரகசியமா ஆராய்ச்சி பண்ணி ஒரு மருந்து கண்டுபிடிச்சீங்க. அது வேலை செய்யுதான்னு பார்க்க எனக்கு கொடுத்து சோதிச்சீங்க. உங்க மேல உள்ள நம்பிக்கைல, சாகாம இருக்கணும்கிற சுயநலத்துல நான் அதை சாப்பிட்டேன். அதுல நீங்க எதிர்பாராத பக்க

விளைவு ஏற்பட்டு நான் குரங்காயிட்டேன். என்னைத்திருப்பி மனுசனா மாத்தற துக்கு வேற கெமிக்கல் வேணும், அது இன்னொரு விஞ்ஞானிகிட்ட இருக்கு, வாங்கிட்டுவரேன்னு நீங்க போனீங்க. திரும்பி வரலே. கார்ல போறப்ப உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுத்துன்னு ஆசுபத்திரியிலே சேத்துருக்கறதா பேசிக்கிட்டாங்க. என்ன ஏதாச்சும்

செஞ்சுருவாங்களோன்னு பயந்து தப்பி ஓடிட்டேன். இங்க படுக்கையில இருக்கீங்க. நான் உங்கள தேடி இங்க உள்ள வரமுடியல. ஆறு மாசமா வெளியில திரியறேன். இந்த ஊருல நான் யாருகிட்ட போயி உங்க ரகசிய ஆராய்ச்சிய புரிய வெச்சு, என் நெலமையைச் சொல்லி அழறது ? தேங்காமூடி, வாழப்பழம்னு கெடச்சத திங்கறேன். என் குரல்

கொறஞ்சுகிட்டே வருது. வேற யாருகிட்ட போயி நான் இதெல்லாம் சொல்லி விளக்கறது ? என்னைப் பேசற கொரங்குன்னு சர்க்கஸ்ல அடச்சிடுவாங்க.. கொஞ்சநாள்ல சுத்தமா

பேச முடியாம போயி சாகாத குரங்காவே வாழணுமோன்னு பயமா இருக்கு. அய்யா, தயவு செஞ்சு என்னை திருப்பி மனுசனா மாத்திருங்க. ‘

சிவஞானத்துக்கு ஏதோ மங்கலான நினைவுகள் வந்தன. என்ன ஆராய்ச்சி செஞ்சேன்,என்ன மாற்று மருந்து தேடினேன்,

என் நோட்ஸ் எங்க போச்சு. எனக்கு விபத்து நடந்து தலையில் அடிபட்டதுனால எல்லாம் மறந்து போச்சோ என்று குழம்பினார்..

அப்பொழுது தெருவில் டமால் என்று ஒரு ஓசை கேட்டது. ஜம்பு தாவி ஓடி எட்டிப்பார்த்தது.

திரும்பி வந்து ‘ஆல்பா டெலிவிஷன் வேன் மேல ஒரு லாரி இடிச்சிடுத்து, அதான் சத்தம் ‘ என்றது.

சிவஞானத்துக்கு மூளையில் ஏதோ பளிச்சிட்டது.

என்ன கெமிகலைத் தேடிப் போனேன் ?

‘ஆல்பா..ஆல்பா….அந்த மாத்து மருந்து பேரு… ஆ, ஆ, நெனவு வந்துது. ஆல்பா க்ளோரொக்ஸி …. ‘

‘ஹை, சொல்லுங்க சார், சொல்லுங்க ‘ என்று ஜம்பு சக்கரநாற்காலியின் கையைப்பிடித்துக் கொண்டு குதித்தது.

குதித்த வேகத்தில் மேலே தொங்கிய குளுக்கோஸ் பாட்டில் கழன்று தரையில் பட்டு கீழே விழுந்து சிதறியது.

தெருவில் நடந்த விபத்தை பார்க்க அந்தப்பக்கம் வந்த டாக்டர் ஒருவர், சிவஞானத்தையும் பக்கத்தில் குதிக்கும் அந்தக் குரங்கையும் பார்த்து அதிர்ச்சியுடன், ‘ யாரு இந்த பேஷண்டை இங்க கொண்டு வந்தது. குரங்கு ஒண்ணு அவரை படுத்துது. சீக்கிரம் வாங்க ‘என்று கத்தினார்.

ஜம்பு ஓடி அருகிலுள்ள மரத்திலேறி ஒளிந்தான்.

பணியாட்கள் விரைந்துவந்து சக்கரவண்டியை உள்ளிழுத்து அவரைக் கொண்டுவந்து படுக்கையில் கிடத்தினார்கள். புதிய குளுக்கோஸ் பாட்டில் உடனே பொருத்தப்பட்டது.

டாக்டர் நர்சிடம் கத்தினார், ‘என்ன இது பொறுப்பில்லாம. இவருக்கு தலையில காயம் பட்டிருக்கு. வெளியில அழச்சிட்டு போகலாமா ? யாரு இதை அனுமதிச்சது ?இன்னம் ஆறு மாசம் இவரு படுக்கையவிட்டு நகராம பாத்துங்க. அந்த சன்னல் கதவுக்கு கம்பி

வலை போடச்சொல்லுங்க குரங்கு வந்துராம ‘

சிவஞானம் களைப்புடன் மெதுவாக, ‘ டாக்டர், ஒடனே எனக்கு இப்ப ஆல்பா க்ளோராக்ஸி டெல்டா அமினோ.. ‘என்று தொடங்கினார்.

அவரைப்பேச விடாமல் டாக்டர் நர்சைப் பார்த்து, ‘பாத்தீங்களா, ஹாலுசினேஷன்..தலையில காயமில்ல, அதான் ‘ என்று சொல்லி சிவஞானத்தைப் பார்த்து, ‘கவலப்படாதீங்க சிவஞானம், உங்களுக்கு சரியாயிடும். உங்களுக்கு எப்ப என்ன மருந்து குடுக்கணும்னு

எங்களுக்கு தெரியும், நீங்க எதுவும் சொல்லத் தேவையில்ல. நர்ஸ்,

குவிக்கா ரெண்டு ஸிஸி வாலியம் எடுங்க ‘ என்று மயக்கமருந்தை வாங்கிகுளுக்கோஸ் குழாய் வழியே உள்ளே ஏற்றினார்.

டாக்டர் நர்ஸைப் பார்த்து, ‘நான் இல்லாதபோது ஏதாவது அந்த மருந்து

வேணும் இந்த மருந்து வேணும்னு சொல்வாரு. படிச்ச ஆளுங்ககிட்ட

இதான் பிரச்னை. டாக்டர் பொறுப்புனு விடமாட்டாங்க. நீங்க ஒண்ணும்

கண்டுக்காதிங்க. வேளாவேலைக்கு மயக்க மருந்து கொடுத்துடுங்க ‘

என்றார்.

சிவஞானம் ஏதோ சொல்ல முயன்று ‘ டாக்டர் , டாக்டர்..கொரங்கு, கொரங்கு, கொரங், கொர ‘ என்று சொற்கள் சரிவர வெளிவராமலே மயக்கத்தில் ஆழ்ந்தார்.

‘நோயாளிங்க இப்படித்தான் சமயத்துல வலிதாங்காம டாக்டர்களைக் கொரங்கு, கோட்டான்னு வாயில வந்தபடி திட்டுவாங்க. நாம அதை மனசில வெச்சிக்கப்படாது ‘ என்று டாக்டர் நர்சைப் பார்த்து சொன்னார்.

‘ஆமா, சார், நான் அதெல்லாம் கண்டுக்கிறதுல்ல. நான் வாங்காத

திட்டா ‘ என்று தலையை அசைத்து நர்ஸ் ஆமோதித்தாள்.

ஜம்பு தன் தலைவிதியை நொந்து கொண்டு ராமர் கோயிலை நோக்கித் தாவியது.

****

nswaminathan@socal.rr.com

Series Navigation

author

டாக்டர் என் சுவாமிநாதன்

டாக்டர் என் சுவாமிநாதன்

Similar Posts