நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


La terre ouvre son sein, du ventre des tombeaux

Naissent des enterres les visages nouveaux:

Du pr, du bois, du champ, presque de toutes places

Sortent les corps nouveaux et les nouvelles faces.

(Les Tragiques) – Agrippa d ‘AUBiGNE –

பிரெஞ்சுத்தீவு இழப்புகளை அலட்சியம் செய்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடலும், கரிசல் மண்ணும், வனமும், வானமும், விதிக்கபட்ட வரலாற்றை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு சாட்சிகளாக நிற்கின்றன. எண்பத்து நான்குலட்சம் பிறப்பு பேதங்களில்: நீலவேணி, கமலம், காத்தமுத்து, போல்பிரபு, மற்றும் முகமற்ற அடிமை உயிர்களின் முகவரி எங்கேயென்று இயற்கைமாத்திரமே அறிந்திருக்கின்றது. மனித உடம்பு மாயையினின்று தோன்றியதென்பதை, பஞ்சபூதங்களும் படித்திருக்கின்றன. அவற்றுக்கு தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமாகிய எழுவகைப் பிறப்பும், அவற்றின் இழப்பும் ஒன்றுதான். அதனாற்றான் கல் நெஞ்சத்துடன் எதற்கும் இரங்காமல் காலத்தோடு இணைந்து பயனிக்க முடிகின்றது. மனித உயிர்கள் அப்படியல்ல. அவர்களின் அழுகையும் சிரிப்பும், சுயநலங்கள் சார்ந்தவை. தம் மனதிற்கு ஏற்படும் இலாப நட்டங்களைப் பொருத்தவை. தங்கள் சீவனுக்குக் கிடைத்த அதிகப்படியான ஆயுளை, இழந்த உயிரோடு ஒப்பிட்டுத் தொடர்ச்சியாக அவரவர் உறவின் தன்மையைப் பொருத்து, காலத்தைத் தீர்மானித்து வருந்துவதும், பின்னர் மறந்துபோவதும் அவர்களுக்குக் கை வந்த கலை.

காத்தமுத்து, கமலம், நீலவேணி, போல்பண்ணையில் கொலையுண்ட அடிமைகளின் உயிர் இழப்பு குறித்து ஒப்பாரிவைப்பதற்கு மட்டுமல்ல முனுமுனுக்கக் கூட உறவுகள் இல்லை. மாறாக போல்பிரபுவின் கொலைச்செய்தி தீவு வாசிகளை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. பண்ணை முதலாளிகள் மிஸியே தெலாகுருவா தலைமையில் குவர்னரைக் காண கும்பெனி அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். போல் அஞ்ஞெல் கொலைக்குக் காரணமான மரூன்களையும், பண்ணையிலிருந்து தப்பிய அடிமைகளையும், கும்பெனிப் பிடித்து; தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கிலிடுவது அவசியம் என்று வற்புறுத்திவிட்டுப் போனார்கள் இப்பண்ணை முதலாளிகளே ஒரு வருடத்திற்கு முன்னார் மரூன்களை அடக்குவதற்கு, இவர்களைக் கொண்ட புதிய படையை (la milice),*1 குவர்னர் அறிவித்தபோது ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள். இன்றைக்கு கும்பெனி நிருவாகத்தின் நடவடிக்கைகள் போதாதென்று புலம்பிவிட்டுப் போகின்றார்கள். லாபூர் தொனே தன் சினத்தினை அடக்கிக்கொண்டு அவர்கள் முறைபாட்டை பொறுமையாகக் கேட்டு, தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், வந்தவர்கள் சமாதானம் அடைந்தார்கள்.

போல் அஞ்ஞெலின் திடார் இறப்பு கும்பெனி நிருவாகத்திற்கு விடப்பட்ட சவால். குவர்னர் தன் நண்பர் இறப்பைச் சொந்த இழப்பாகக் கருதினார். ஐந்து வருடத்திற்கு முன்னால் மூன்றுமாத இடைவெளியில் மனைவியையும், இரு பிள்ளைகளையும் இழந்தபோதுகூட லாபூர்தொனே இடிந்துபோகவில்லை. மனைவி பிள்ளைகளின் இழப்பு இயற்கையாய் நிகழ்ந்தது, மற்றவர்கள் இவரைத் தேடி வந்து ஆறுதல் கூறினார்கள். போல் அஞ்ஞெலின் இழப்பு நிருவாகத்தோடு சம்பந்தபட்டது. குவர்னர் பதவியைக் கேலிக்குரியதாக்கியிருந்தது. பறங்கியர்களின் குடியேற்றத்தை ஊக்கப்படுத்த, கும்பெனி நிருவாகம் முயற்சிகள் மேற்கொள்கின்ற நேரத்திலே அந்த முயற்சியை அதைரியப் படுத்துகின்ற வகையில் சம்பவம் நடந்துவிட்டது. இதுவன்றி குவர்னர் லாபூர்தொனேவிடத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுவதை வழக்கமாகக்கொண்ட பிரெஞ்சு முடியாட்சி, பிரெத்தாஞ்ன்(Bretagne) பகுதியில் ஓரளவு செல்வாக்குள்ள போல்பிரபுவின் இறப்பையும், அவனது மகனின் இறப்பையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. கிழக்கிந்திய கும்பெனியின் மஸ்கரேஞ் நிருவாகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அப கீர்த்தியை உடனடியாகக் களையவேண்டுமென குவர்னர் தீர்மானித்தார். இதுவும் தவிர மரூன்கள் பிரச்சினை கும்பெனிக்குத் தீராத தலைவலியாக இருந்துகொண்டிருக்கிறது.

பூர்போன் நிர்வாகி மிஸியே லெமெரி துய்மோன்*க்குக் கடிதம் போனது. மரூன்களை வேட்டையாடுவதற்கு கிறேயோல் இளைஞர் பட்டாளம் ஒன்றினைப் பிரெஞ்சு தீவுக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறுக் கேட்டுகொண்டார். கும்பெனி சொல்தாக்களுடன் கிறேயோல் இளைஞர் பட்டாளம் இணைந்துகொள்ள, இரவுபகலாக வேட்டையாடியதில் பண்ணையிலிருந்துத் தப்பிச் சென்ற நான்கு அடிமைகள் மாத்திரமே சிக்கியிருந்தார்கள். பிடிபட்ட மரூன்களால், அனாக்கோ எங்கு சென்றிருப்பான் என்பதனைச் சொல்ல முடியவில்ல. அனாக்கோ பிடிபடாமற் தப்பித்துச் சென்றது ஒரு வகையில் குவர்னருக்கு ஏமாற்றமென்றுதான் சொல்லவேணும். அவன் மடகாஸ்கருக்குச் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கும்பெனி சந்தேகித்தது. பிடிபட்ட நான்கு அடிமைகளும், போல் பிரபுவின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டார்கள்.

நீலவேணியின் எதிர்பாராத முடிவு தீவுவாசிகளை குறிப்பாக மலபாரிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தபோதிலும், சில கிழமைககளில் பெரும்பாலோர் மறந்து விட்டனர் என்றுதான் சொல்லவேணும். கைலாசம் நீலவேணியை மறந்திருந்தான், அவ்வாறே சில்விக்கும் நீலவேணியைக் குறித்து பெரிய அபிப்ராயங்கள் ஏதுமில்லை என்பதால் மறப்பது சாத்தியமாயிற்று. காமாட்சி அம்மாள் மறந்துவிட்டார். விசாலாட்சி அம்மாள் மறந்துவிட்டாள், நாயக்கர் மறந்துவிட்டார். தெய்வானைகூட ஓரிரு மாதங்களுக்குப்பிறகோ, வருடங்களுக்குப் பிறகோ நீலவேணியை மறந்துபோகலாம். நீலவேணியைச் சத்தியமாக நேசித்த பொன்னப்ப ஆசாரி குறித்து சரியானத் தகவல்களில்லை. ஒரு சிலர் நீலவேணியை எரித்தவிடத்தி அவனைப் பார்த்தாகச் சொல்லுகிறார்கள். மற்றவர்கள் எலுமிச்சை நதியோரம் கண்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், மேற்குக் கடற்கரையில் இரவு நேரங்களில் ‘நீலவேணி.. நீலவேணி ‘யென்று ஒலிக்கின்ற குரல் அவனுடையதாகத்தான் இருக்கவேணுமென்று நம்புகிறார்கள்.

காமாட்சி அம்மாளுடைய கபானில் சீனுவாச நாயக்கர், அவரது பெண்ஜாதி விசாலாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி கூடியிருந்தார்கள். அமைதியாக உட்கார்ந்திருவர்களிடையே ஒருவித இறுக்கம் தெரிந்தது. காலையில், காமாட்சி அம்மாளின் யோசனையின்படி நாயக்கர், குவர்னர் லாபூர்தொனேவைச் சந்தித்துவிட்டு வந்திருந்தார். குவர்னர், இரண்டொரு நாட்களில் புதுச்சேரிக்கு பாய்விரித்து புறப்படவிருக்கும் கும்பெனி கப்பலொன்றில் இவர்களது பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார். புதுச்சேரியிலும், கடலூரிலும் காமாட்சிஅம்மாளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவுள்ள மனிதர்களுக்குக் கைப்பட கடுதாசி கொடுப்பதாகவும் கூறியிருந்தார். தீவில் ஏற்பட்ட சமீபத்திய பிரச்சினைகளுக்கிடையிலும், குவர்னர் தங்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பதை நாயக்கர் வாயால் அறிய காமாட்சி அம்மாளுக்குப் பரம திருப்தி. ஆனால் தீவினைவிட்டுப் பிரியப்போகிறோம் என்பதான செய்தியைப், பிள்ளைகளிடத்தில் எப்படிச் சொல்வது என்பதில் தயக்கமிருக்கிறது. இம்மாதிரியான நேரத்தில் நாயக்கர் உடனிருந்தால் உதவியாய் இருக்குமென நினைத்து காலங்காத்தாலே கபானுக்கு வரவேணுமென்று சொல்லியிருந்தாள். நாய்க்கரும் காமாட்சி அம்மாளின் வார்த்தைப் பாட்டின்படி தமது பாரியாளுடன் வந்திருந்தார். இருக்கின்ற சூழ்நிலையை இலகுவாக்க வேணுமென்கிற எண்ணத்துடன், மடியிலிருந்த சுருக்குப் பையிற்கிடந்த காய்ந்துபோன வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவி, குதப்பியபடிப் பேசத் தொடங்கினார்.

‘தம்பிரான் இப்படிச் செய்வானென்று நான் நினைக்கவில்லை அம்மா! அவன் மாத்திரம் தக்க சமயத்தில் நம்மிடம் தகவல் தெரிவித்திருந்தால் பேதைபெண்ணைக் காப்பாற்றி இருக்க முடியும். எனக்கென்னவோ நடந்தது அனைத்தும் சூதாகத் தெரிகிறது. போல் பிரபு, தம்மகன் செய்த பாதகத்தை அப்பாவி காத்தமுத்து மீது சுமத்தியிருக்கவேணும். ‘

‘அண்ணா! கோழி போனதும் அல்லாமல், குரலும் போனது என்பது போல யாரை நிந்தித்து என்ன பயன். அந்தப் பெண்ணுக்கு அப்படியான விதி இருந்திருக்கின்றது, அதன்படி நடந்திருக்கின்றது. போல்பிரபுவுக்கும், அவன் மகனுக்கும், நமை ஆளும் ஈசன் அதற்கான தண்டனையை காலம் கடத்தாமல் வழங்கிப்போட்டான். தம்பிரான் உத்தமன் என்று நம்பினோம். அவன் பொய்யன் என்றால், கடவுள் அவனையும் தண்டிப்பார். நீங்கள் வியாகூலமில்லாமல் இருக்கவேணும். ‘

‘என்னமோ அம்மா.. உடற்புண்ணுக்கு மருந்துண்டு, மனப்புண்ணுக்கு மருந்துவேணாமா ? இப்படியான புலம்பல்கள் ஒருவகையில் அதற்கான களிம்பென்றுதான் சொல்ல வேணும். ‘

‘மனப்புண்ணுக்கு மருந்தென்று, ஆகாததைச் சொல்கின்றீர்களே. இது புண்ணை ஆற்றுவதற்குப்பதிலாகக் கிளறிக்கொண்டுதானே இருக்கும். தேவாரம், திருவாசகமென்று வாசித்துப்பாருங்கள். மனப்புண்ணுக்குமட்டுமல்ல உடற்வலிக்கும் அதனிடம் மகத்துவம் உண்டு. ‘

‘வாஸ்த்துவம் அம்மா.. எல்லாம் அவன் செயல், எனநினைத்து வாழப் பழகினோமென்றால், மனதிற்கும் நிம்மதி, உடலுக்கும் நிம்மதி. கைலாசம்… உன்னிடந்தான் கேட்கிறேன். நாம் அனைவரும் புதுச்சேரிக்குச் செல்லத் தீர்மானித்திருப்பது குறித்து உனது அபிப்ராயமென்ன ? ‘

‘நாம் என்றால் ? ‘

‘நீ, தெய்வானை, காமாட்சி அம்மாள் பிறகு நான் என் பெண்ஜாதி ‘

‘என் சம்மதமில்லாமலா ? ‘

‘கைலாசம் என்ன சொல்கிறாய் ? உன் சம்மததத்தை எதற்காகப் பெறவேண்டும் ? ‘

‘அம்மா! உங்களுக்குப் புதுச்சேரி செல்லவேணுமென்கிற எண்ணமிருப்பின் என் சம்மதம் பெறவேணுமென்கிற அவசியமேதுமில்லை. அது உங்கள் விருப்பம். அவ்வாறே தெய்வானை, என்ன முடிவு செய்துள்ளாள் என்பதை அறிந்துகொள்ள அக்கறையுண்டே ஒழிய எனக்கதை தெரிந்துகொள்வதில் அவசியம் ஏதுமில்லை. ஆனால் நான் உங்களுடன் புறப்பட்டு வரவேணுமெனில் என்னுடைய சம்மதத்தை அறிந்திருக்கவேணும். ‘

‘கைலாசம், நீயா என்னிடம் எதிர்வார்த்தையாடுகிறாய் ?. தாய் தன் மகனுக்குச் செய்யும் காரியங்களுக்கு மகனிடம் சம்மதம் பெறவேணுமா ? தன் மகனுக்கு எதைச் செய்யவேணும் அல்லது வேணாமென்பது தாய்க்குத் தெரியாதா என்ன ? ‘

‘அம்மா..நான் இல்லையென்று சொல்லவில்லை. சிறுவயதென்பது அறியாமைக்கு அருகிலிருக்கும் வயது மட்டுமல்ல, எதிர்க்கும் திறனற்ற வயதென்றும் சொல்லவேணும். அது கொடுத்த செளகரியத்தில், உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் எனக்குப்பிடித்ததென்று செய்தீர்கள். பசித்திருக்குமென்று சோறூட்டியதும், தூங்கு என்று தாலாட்டுப்பாடியதும், நள்ளிரவில் கப்பலேறியதும் உங்கள் விருப்பங்களன்றி எனதல்ல. இப்போது நான் வளர்ந்திருக்கிறேன். பிள்ளைகள் சுயபுத்தியோடு செயற்பட ஆரம்பிக்கின்ற மண்ணே சொந்த மண். என் மனதிற்கு உகந்ததைத் தீர்மானிக்கின்ற அறிவும் என்னிடம் உள்ளது. உங்கட் கையைப் பிடித்துக்கொண்டு கப்பலேறும் வயதல்ல இப்போது. ‘

‘…. ‘

‘இந்து தேசத்தோடு, உங்களுக்குள்ள பந்தம் நிஜத்தோடு சம்பந்தபட்டது. புலம்பெயர்ந்தவாழ்க்கை உங்களுக்கு அன்னியமாகத் தெரிவதில் ஆச்சரியங்களில்லை. ஆனால் பால்ய வயதில் நான் கண்டிருந்த இந்துதேசம் நிழல்களானவை, உறக்கத்தில் வருகின்ற கனவுகளைப்போல, விடிந்தால் எனக்குச் சொந்தமில்லாது போகிறது. ‘

‘கைலாசம், இந்த முடிவினை நாங்கள் எதற்காக எடுத்திருக்கிறோம் என்பதனை அறிந்தபிறகு உனது சம்மதத்தை சொல்லலாமில்லியா ? ‘

‘காரணம் எதுவாயினும், என்னால் புதுச்சேரிக்கு உங்களோடு வரமுடியாதென்பதே உண்மை. ‘

‘தம்பீ.. முதலில் நாங்கள் சொல்வதை முழுவதுமாக வாங்கிக்கொள். அவசரம் வேணாம், ஆற அமர யோசித்துக் கூறு. காமாட்சி அம்மாள்.. நான் சொல்வது சரிதானே ? ‘

‘உங்கள் வார்த்தைப்படி ஆகட்டும். ‘ என்று காமாட்சி அம்மாள் தெரிவிக்க, நாயக்கர் பின் வாசலுக்குச் சென்று குதப்பியிருந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு அமர்ந்தார். இவர் சொல்லப்போவதை எதிர்பார்த்து கைலாசம், தெய்வானை சில்வி மூவரும் காத்திருந்தார்கள்.

‘கைலாசம், இது தெய்வானையைக் குறித்த உண்மைகளென்றாலும் நீயும் சம்பந்தப்பட்டிருக்கிறாய் என்பதால், அறியத்தான் வேணும். இதோ உன்னருகில் இருக்கிற தெய்வானையின் உண்மையானபெயர் ஸ்ரீ தேவயானி. மதுரை திருமலை நாயக்கர் வம்சத்தின் தற்போதைய முறையான வாரிசு. இரண்டாம் சொக்கநாதர் எனவழைக்கப்பட்ட ஸ்ரீ விஜயரங்க சொக்கநாதர்*2காமாட்சி அம்மாள் தம்பதிகளின் திருக்குமாரத்தி. அரசரின் மூத்த மனைவியான மீனாட்சி அம்மாளுக்கும், காமாட்சி அம்மாளுக்கும் இருந்த குடும்பப் பகையின் காரணமாக, குழைந்தைப் பேறு இல்லாத தம் மூத்தமனைவிக்கு தெரிவிக்கக்கூடாதென தேவயானியின் பிறப்புகுறித்த உண்மையை அரசர் ரகசியமாக வைத்திருந்தார். துரதிஷ்டவசமாக அரசர் தம் இளம் வயதில் இறந்துபோக, மீனாட்சி*2 பட்டத்திற்கு வந்தார். பட்டத்திற்கு வந்த ராணி மீனாட்சி*, திருமலை நாயக்கரின் இளையசகோதரர் குமரமுத்து நாயக்கரின் வழிவந்த பங்காருதிருமலை நாயக்கரின் மகன் விஜயகுமாரனை சுவீகாரம் செய்துகொண்டார். காமாட்சி அம்மாளுக்குப் பிறந்திருந்த தேவயானி அரசகுல வாரிசு என்கிற உண்மை தெரியவந்தபோது, மீனாட்சிக்குக் கசந்தது. தேவயானியை கொல்வதற்கு ஆட்களை ஏவினாள். திருச்சிராபள்ளி அரசாங்கத்தில் உத்தியோகத்திலிருந்த நான் ஐந்துவயது குழந்தை தேவயானியையும், தாய் காமாட்சி அம்மாைளையும் காப்பாற்ற தீர்மானித்தேன். நள்ளிரவில், ஒரு வண்டிபிடித்து புதுச்சேரியில் வைத்தியராகவிருந்த உன் தாய்மாமன் வசம் சிலகாலம் காமாட்சி அம்மாளும் தேவயானியும் கடவுள் கிருபையால் நான்கு ஆண்டுகாலம் ஆபத்தின்றி இருந்தார்கள். தாய்மாமன் வீட்டில் வளர்ந்துவந்த நீ காமாட்சி அம்மாள் பிள்ளையாகிப்போனதும் அங்கேதான். ஆற்காட்டு நவாபுக்கு புதுச்சேரி கும்பெனி அரசாங்கம் வேண்டியவர்கள் என்பதாலும், சிறுமி தேவயானிக்கு, இரண்டாம் சொக்கநாதர் தாயாதிகளால் ஆபத்துவருகிறதென்றும் சொல்லக்கேட்டு, லாபூர்தொனேயுடன் வியாபாரம் செய்துவந்த கடலூர் ஆங்கிலேயன் ஒருவன் அவர்கள் கப்பலில் இங்கே அனுப்பிவைத்தான். இந்த நேரத்திற்றான், ராணி மீனாட்சியினுடைய சுவீகார புத்திரனின் தந்தை பங்காருதிருமலை நாயக்கன், தளவாய் வெங்கடாச்சார்யாவோடு சேர்ந்துகொண்டு நடத்திய சதியினை, ஆற்காடு நவாப் மருமகன் சந்தாசாகிப் தனக்குச் சாதகமாக உபயோகபடுத்திக்கொண்டு ராணி மீனாட்சியை சிறையில் வைக்க, அது தற்கொலையில் முடிந்தது. பங்காரு திருமலையும் கொல்லபட்டான். அவனது புத்திரனும், ராணி மீனாட்சியால் வாரிசென்ற அறிவிக்கப்பட்ட விஜயகுமாரனும் சிவகங்கையில் மறைந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. தளவாய் வெங்கடாச்சார்யா இப்போதைக்கு, விஜயகுமாரனோடு இருப்பதாகக் கேள்வி. புதுச்சேரியிலும்திருச்சியிலிருந்த சந்தாசாகிப் இப்போது மராத்தியர்களால் சிறைபிடிக்கபட்டிருக்க, மதுரை நிர்வாகம் மராத்தியர் வசம்.. புதுச்சேரி குவர்னர் ஆற்காட்டு இஸ்லாமியருக்கு ஆதரவென்றாலும், அங்கேயும் குழப்பம். லாபூர்தொனே யோசனைப்படி ஆங்கிலேயரின் உதவியுடன், மதுரை அரசாங்கத்தை மீட்பது உத்தமம். -நாயக்கர். ‘

‘நாயக்கரே!.. நான் தெய்வானையின் உடன் பிறந்தவனல்ல என்பது எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் மனதிற்பதிந்துள்ளது. அதனை உங்கள் பேச்சு உறுதிபடுத்துகின்றது. நீங்கள் சொல்லுகின்ற செய்திப்படி, நான் அன்னியன் என்பது மட்டும் புரிகிறது. அதற்கான காரணங்கள் எதுவாயினும் எனக்கவை வேண்டாம். இந்துதேசத்திற்கு நான் திரும்புவதில்லை என்பது ஏற்கனவே தீர்மானித்தாயிற்று. என்னை ஆதரித்த இப்புலம்பெயர்ந்த மண்ணுக்கு விசுவாசமாயிருப்பதும், பேதமற்ற இம்மக்களின் பிரியத்திற்கு எற்றவனாயிருப்பதும், என்னை சந்தோஷப்படுத்துகிறது. தெய்வானை இந்து தேசத்திற்குத் திரும்ப வேண்டுமென்பதற்குள்ள காரணங்களே, என்னை இங்கே இருக்கவும் வற்புறுத்துகின்றன. சில்வியை மணந்துகொண்டு, தீவிலேயே இருப்பதென்ற முடிவிலிருக்கிறேன். தாங்களும், அம்மாவும் என்னை ஆசீர்வதிக்கவேணும். ‘ தன் மனத்திலிருப்பதை சுருக்கமாகத் தெரிவித்த கைலாசத்தின் கண்கள் கலங்கியிருந்தன.

‘கைலாசம், உன் மாமன் புதுச்சேரியிலிருக்கும் வைத்தியர் சபாபதி படையாட்சிக்கு என்ன பதில் சொல்வேன். அவர் உனது தாய்க்கு என்ன மறுமொழி சொல்வார். அங்கே உன்னுடைய உடன் பிறந்தவள் ஒருவள் இருக்கின்றாளே.. ‘

‘அம்மா!.. இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். சற்றுமுன்னர், நமது நாயக்கர் இந்து தேசம் என்று குறிப்பட எனக்கேதும் தோன்றாததுபோன்றே, நீங்கள் புதிதாக சொந்தமென்று அறிமுகப்படுத்துகின்ற இவர்களால் எனக்கேதும் தோன்றவில்லை. புலம் பெயர்ந்தவனுக்கும், வளர்ப்பு மகனுக்கும் வித்தியாசங்களேதுமில்லை. எங்கே அன்பும், ஆதரவும் கிடைக்கிறதோ, அங்கே மட்டுமே இயல்பாய் முளைவிட்டு ஜீவிக்க முடியும். இந்த மண் எனது பூமி, நீங்கள் எனது அன்னை, தெய்வானை எனது சகோதரி. வேறு சங்கதிகள் வேணாம். ‘

கைலாசத்தின் வார்த்தையிலிருந்த உறுதியை நினைத்து, நாயக்கரும் அவரது பெண்ஜாதியும் நெகிழ்ந்துபோனார்கள். விசிம்பி அழத்தொடங்கிய தெய்வானையை காமாட்சி அம்மாள் தோளில் வாங்கிக் கொண்டாள். சில்வி கைலாசத்தின் முடிவை ஏற்கனவே அறிந்திருந்தவள் என்றபோதிலும், அங்கிருந்த மற்றவர்களின் துயரம் இவளையும் தொட்டிருந்தது. உரிமையாய் காமாட்சி அம்மாளின் மற்றொரு தோளில் தலைவைத்து விம்மினாள்.

/தொடரும்/

*1 La Bourdonnais – PH. Haudrere

*2.History of the Nayaks of Madura – R Sathyanatha Aiyar

தமிழகம் – புதுவை வரலாறும் பண்பாடும் – சு. தில்லைவனம்

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts