நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


….Les mouvements revolutionnaires ont toujours ete antipersonnalistes, c ‘est-a-dire reactionnaires, c ‘est-a-dire defavorables a la liberte de l ‘esprit, de la personne, des jugements personnels. Tout en etant diriges contre le despotisme et la tyrannie, les revolutions ont toujours abouti, a un certain moment qui etait un moment de deception, a la dictature et a la tyrannie, a la suppression de la liberte…

-Nicolas Berdiaeff, De l ‘esclavage et de la liberte de l ‘homme, 1939

போல் பிரபுவின் பண்ணை அளவுக்கதிகமான விபரீதத்தைச் சந்தித்த அடையாளமின்றிக் காரிருளில் மூழ்கிக் கிடக்கிறது. உயிர்தப்பிய பண்ணை அடிமைகள், தட்டி வாசலை அடைத்துவிட்டு, தூக்கமின்றி, நேற்றைய பயங்கரத்தை நினைத்தவண்ணம், உடல் நடுக்கத்துடன் விழித்தபடி இருக்கிறார்கள். தீ நாக்குகளுக்குத் தப்பிய, விளைந்தகரும்புகளின் சோலைகள் காற்றில் உரசிக்கொள்வதோ அல்லது கபானுக்குக்கு வெளியே ாட்டுப் பூனைகளின் நடமாட்டமோ இவர்களைத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறது. பகலில் பண்ணை மேஸ்திரிகளுடைய சவுக்கடிகளின் உடற் தழும்புகளுக்குப் பழகியிருந்த அடிமைகள், இரவுகளில், மரூன்களின் மனதுகளில் ஏற்படுத்திய பயப்புண்களை ஆற்றும் வகைதெரியாது ஈயோட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

மனவியையும், பெண்ணையும் மிஸியே மதாம் தெலக்குருவா தங்கள் பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறர்கள். இவரையும்கூட அழைத்திருந்தார்கள். நாசூக்காக மறுத்துவிட்டார். இவருக்கு அமைதி வேண்டியிருந்தது.

நேற்றிரவு நடந்த சம்பவத்தைத் தனக்குச் சாதகமாகத் திசைதிருப்ப நினைத்து, செய்த முட்டாற் தனமான காரியங்களினால், தேவையின்றி தனது அடிமைகளக் கொல்ல நேர்ந்தது. புதுச்சேரியிலிருந்து கள்ளத்தனமாக ஆட்கள் கொண்டுவருவதில் இடி விழுந்திருக்கின்ற நேரத்தில் இப்படியான காரியங்கைளைச் செய்வதற்குமுன் தீர யோசிச்சிருக்கவேணும்.

தன்மகன் செய்த காரியத்திற்கு இந்திய நீக்ரோக்களான காத்தமுத்துவையும் கமலத்தையும் தண்டிப்பதாக நினைத்து, நடந்த சம்பவத்தைத் திரித்து மலபாரிகள் ஆப்ரிக்க இனத்தவரிடையேயான கலவரமாய் காட்டவேணுமெண்ணு நினைத்தது முட்டாள்தனம். Il ne faut pas tuer son chien pour une mauvaise annee…தம்பிரானிடம் கலந்து ஆலோசித்திருக்கலாம். அவன் மலபாரி என்று நினைத்து, ஆப்ரிக்கன் லூத்தரை வரச் செய்து, காட்டிலிருந்த நமது ஆட்களை விடுதலை செய்து அழைத்துவந்து, எனது அடிமைகளை வெட்டிப்போட நானே ஏற்பாடு செய்திருக்கக்கூடாது.

பண்ணை வீட்டிற்கு வெளியே நாற்காலி ஒன்றைப் போடச் செய்து, உட்கார்ந்திருந்தார். எதிரே சிறிய மேசையில், சாராயப் போத்தல் திறக்கப்பட்டு இருக்கிறது. அடிமைப் பெண் சமைத்திருந்த, இந்துக்கள் மசாலவில் பிரட்டிய பன்றிக்குடல், பக்கத் தீனிக்கென்று தட்டு நிறைய இருக்கிறது. ஏற்கனவே இரண்டு போத்தல்கள் உள்ளே இறங்கியிருந்தன. கொதித்துக்கொண்டிருக்கும் மனதிற்கு சாராயம் இதமாக இருக்கிறது. வயிறு பெருத்து இருந்தது. அருகிற் குனிந்துப் பார்த்தார். மூத்திரம் போவதற்கான சீனப் பீங்கான் குடுவை நிறைந்திருந்தது. இவர் செய்கையை அடிமைப் பெண்ணொருத்தி தூர இருந்து கவனித்திருக்கவேண்டும். ஓடோடிவந்தாள். நிறைந்திருந்த குடுவையை ஊற்றிவிட்டுவந்தவள், இவர் மூத்திரம் போவதற்கு ஒத்தாசை செய்தாள். அந்தரங்கத்தைத் துடைத்தபின் மீண்டும் இருட்டில் போய் நின்றுகொண்டாள். எசமானின் தேவைகளுக்காகக் காத்திருந்தாள்.

மேலே வெள்ைளை நிலாவை விரட்டிச் செல்வதுபோலக் கறுப்பு மேகங்கள். கோபம் வந்தது. கோபம் மேகத்தின் மீதல்ல அதன் கறுப்பு வண்ணத்தின் மீது. கறுப்பு நிறத்தின் மீதான துவேஷத்தினை சிறுவயதிலிருந்தே மனதிற் பதியமிட்டுப் பராமரித்து வந்ததில் அது வளர்ந்து விருட்ஷமாகி இருக்கிறது. இன்றைக்கு அதனை வீழ்த்த ஆயிரம் கோடலிகளாலும் முடியாது. பால்ய வயதில் கறுப்புப் பூனை ஒன்றினை ஆணி சுத்தியல் சகிதம், சிலுவையில் அறைந்து, அது துடிதுடித்து மரணமடந்ததை வெகுநேரம் காத்திருந்து போல்பிரபு ரசித்திருக்கிறார்.

நேற்று நடந்த சம்பவங்கள் எளிதாய் மறந்து விடக்கூடியதல்ல. அநியாயமாகத் தம் மகனைக் கறுப்புநாய்கள் கடித்து குதறுமெனக் கற்பனை செய்து பார்த்ததில்லை. இவர் மட்டும் கொஞ்சம் முந்திகொண்டிருந்தால் மகனைக் காப்பாற்றி இருக்கமுடியும். மலபாரிகளை உடனே தண்டிக்க அவருக்கு விருப்பமில்லை. அவர்கள் உடல்களிலிலிருந்து கடைசித் துளி ரத்தம் சொட்டும்வரை பொறுமையோடிருந்து, ஆர்வமாய் முடிந்த இடத்திலெல்லாம் ஆயுதபிரயோகங்கள் செய்து, செய்வித்து மகிழ்ந்தார். அதுபோலவே, கமலத்தோடு வேண்டும்போதெல்லாம் சித்திரவதைசெய்து உறவு கொண்டு ஆனந்தித்ததைக் காட்டிலும், அடிமைகளை அவள் உடல் மீது நேற்று பிரயோகபடுத்தியதால் கிடைத்த சந்தோஷம் அதிகமென்றுதான் சொல்லவேணும். கடல் வாழ்க்கையில், சக மத்தலோக்களுடன் வைத்திருந்த ஓரினச் சேர்க்கை இச்சை ஞாபகத்திற்குவர, அவசரமாய் தூக்கிலிடுவதற்கு முன்னால் காத்தமுத்துவை கபளீகரம் செய்தார். ம்…இல்லை, அப்படியும் .உள்ளிருக்கும் மிருகக் குணம் அடங்கவில்லை, உறுமிக்கொண்டிருக்கிறது. கும்பெனி அதிகாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில், தீவிலுள்ள அத்தனை கறுப்பு மனிதர்களையும் சுலபமாய்க்கொன்று போடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது..

வழக்கம்போல மகள் பிரிஜித் இவருடன் சண்டை பிடித்தாள். உண்மையில் என்ன நடந்திருக்குமென்பது தனக்குத் தெரியும் என்று வாதிட்டாள். இவரது பதில் அவளுக்குத் திருப்திகரமாக இல்லை. பண்ணை பிரபுக்கள் அனைவரும், ஈவிரக்கமற்ற மனிதர்களென்றால், தன் தந்தையும், சகோதரனும் மிகவும் கொடியவர்கள் என்றும், அவர்களுக்கு பாவ விமோசனம் இல்லையென்றும், நரகமே காத்திருப்பதாகவும், சபித்திருந்தாள். அவளுக்கு வழக்கம்போல கறுப்பின மக்கள்மீது தேவையற்ற கரிசனம். அவளுடையக் கண்களும், சற்றே பழுப்பு கலந்த உடலும், நடையும், பல வருடங்களாக பண்ணையில் அடிமையாகவிருந்த மொசாம்பிக் கறுப்பன் ஒருவனை ஞாபகப்படுத்த, தன் பெண்ஜாதியைத் தொடுவதற்கு தைரியமின்றி, சம்பந்தப்பட்ட கறுப்பனை, இப்படித்தான் ஓர் இரவு குடித்து ஓய்ந்தபின், காத்தமுத்துவைக் கொல்வதற்கு உபயோகித்த உத்திகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். மகளானவள், பிரெஞ்சுத்தீவில் இனி இருக்கப்போவதில்லையென்றும், பிரான்சு தேசத்துக்குத் தன் தாயாருடன் திரும்பவிருப்பதாகவும் கூச்சலிடும்வேளை, தெலக்குருவா குடும்பத்தினர் வந்திருந்து அவளைச் சமாதானம் செய்கின்ற வகையில் அழைத்துச் சென்றார்கள்.

எதிரேயிருந்த மேசையில் போத்தல் முடிந்திருந்தது. சாராயத்தை முச்சூடும் குடித்திருந்தார். வயிறும் உடலும் எரிந்தன. வயிற்றின் தேவையைப் பன்றிக்குடலைத் தின்று முடித்துக்கொண்டார். திணவெடுத்திருந்த உடலுக்கு அடிமைப் பெண்களின் முரட்டு உடல்கள் தேவைப்பட்டன.

‘யாரங்கே ? ‘

‘மிஸியே.. ‘

‘இரண்டு அடிமைப்பெண்களை என்னறைக்கு அழைத்துபோ! ‘

‘உத்தரவு ஐயா.. ‘

அடுத்து சில நாழிகைகளில், மற்றொரு அடிமையின் துணையுடன், மதுவின் போதையில் தள்ளாடியபடி கட்டிலை நெருங்கினார். அடிமைப்பெண்கள், மெழுகு திரியின் வெளிச்சத்தில், இரூட்டிற் பிடித்த சிலைகளாக நின்று கொண்டிருக்கிறார்கள். அழைத்துவந்த அடிமையை அவ்விடம் விட்டு நீங்குமாறு சைகை செய்கிறார். பணிவாய்க் குனிந்து வெளியேறுகிறான்.

இவரைப் பார்த்தமாத்திரத்தில், பகல்முழுக்க உழைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்த பெண்களிருவரும், அனிச்சையாய்த் தங்கள் ஆடைகளைக் களைந்து, நிர்வாணமாக நின்றார்கள். அப்பெண்களிடம் இவர் எதிர்பார்க்கின்ற கிளர்ச்சியூட்டும்வாடை. அவ்வாடையின் ஈர்ப்பில், மனதிலேற்பட்ட விட்டில் பூச்சியின் மயக்கத்துடன், அருகிலிருந்த பெண்ணை நெருங்கினார். கர்பத்தின்காரணமாக, குயவன் சூளையில் அப்போதுதான் சுட்டெடுத்த கரும்பானையையை ஒத்து, மின்னிய கன்னங்களும், புடைத்திருந்த முலைகளும் இவரது உடலைச் சங்கடப்படுத்தின. கறுப்பு வண்ணத்தின் மீதான கசப்பு ஒளிந்துகொண்டது, அவளை இழுத்து அணைத்துகொண்டார். இவரது தொந்தியும், அவளது வீங்கிய வயிறும் அதிகமான நெருக்கத்தைத் தவிர்த்தன. அப்பெண்ணிடமிருந்து, ஆழமாக வெளிப்பட்ட பெருமூச்சு இவர் மார்பில் உஷ்ணமாகப் பரவியது. அம்மூச்சிலிருந்த தாகத்தை உணர்ந்தவராய், அவளது தடித்த உதடுகளில், சாராய மூச்சுடனானப் தனது பற்களைப் பதித்தார். வலி பொறுக்கமாட்டாமல் விலகிக்கொண்டாள். இமைகளை மூடியிருந்தாள், மென்மையாக முனகல்களை வெளிப்படுத்தினாள். அவளது கைகள், நாடகத் தனத்தோடு இவரை இறுக்கிக்கொள்ள காரணமிருக்கிறது. அடுத்து சில நாட்களுக்கு பண்ணையில் இவர்களுக்கு மக்காச் சோளமோ, மரவள்ளிக்கிழங்கு மாவோ கூடுதலாக வழங்கப்படும். இவர் நீட்டும் சுட்டுவிரல் அசைவைப் புரிந்தவளாய், இன்னொருத்தி தற்காலிகமாக கிடைத்த தகுதியை நழுவவிடாமல் அவசரமாய் கட்டிலில் ஏறி கால்களைப் பரப்பித் தன் முறைக்காகக் காத்திருக்கிறாள். மீண்டும் நின்றிருந்தவளிடம் விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல நடந்துகொள்கிறார். சிறிது நேரம் தலைமுதல் கால்கள் வரை அவதானித்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில், அணிந்திருந்த இரவு ஆடையை களைந்துவிட்டு முழு நிர்வாணத்துடன் அவள் எதிரே கபகபவென்று சிரிக்கிறார். அப்பெண்மணியைத் தம் கால்களுக்கிடையில் அவசரப்படுத்துகிறார்..

சுவரிலிருந்த நிலைக்கடிகாரம் பதினோருமுறை அடித்து ஓய்ந்திருந்தது. பிரபு விழித்துக்கொண்டார். அடிமைப் பெண்கள் இருவரையும் காணவில்லை. காவலர்கள் அவர்களை எழுப்பி அழைத்துச் சென்றிருக்கவேண்டும். உடலில் அயற்சியிருக்க, ஒண்ணுக்குப் போகவேணும்போல இருந்தது. கீழே இருந்த குடுவையை எடுத்துப் போனார். வயிற்றிலிருந்த சுமை குறைந்தது. காற்றில் ஜன்னல்கள் மூடுவதும் திறப்பதுமாக இருந்தன. குளிர்ந்த காற்றும், தொடர்ந்து மழைச்சாரலும் உள்ளே விழுந்தன. அவசரமாய் எழுந்திருந்து ஜன்னற் கதவுகளைச் சாத்துகிறார். இவரைச் சாத்தவிடாமல் வெளியிலிருந்து கைகள் நீண்டு வருகின்ற கைகள் தடுக்கின்றன. ஆளுக்கொரு கையுடன் அங்கே நிற்பது, காத்தமுத்துவும், கமலமும், மூன்றாவதாய் நீலவேணியும்.. நோ(ன்), ழெ நெ க்ருவா பா.. பொய்., வீண்கற்பனை.. என்று சமாதனப்படுத்திக்கொண்டவராய்க் கட்டிலில் விழுந்தார். வேர்த்தது.

‘கிறிஸ்தோஃபெர் கொண்டெண்ட்(Christopher Condent)* … ‘

‘சே..கீ..(C ‘est qui – யாரு) ?

‘என்னைத் தெரியவில்லை ?… ‘

‘கீ யே துய், கொமான் துய் சே மோன் நோ(ம்) (Qui est tu ? Comment tu sais mon nom -யார் நீ எம்பேரு உனக்கெப்படித் தெரியும்) ? ‘

‘எம்பேரு மதுரை, இந்திய மத்தலோ(Matelot -sailor). இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால அட்லாண்டிக் கடலில் என்ன நடந்ததுண்ணு ஞாபகமிருக்கா ? ‘ -குரலுக்குடைவன் மெல்லப் போல்பிரபுவை நோக்கி நடந்து வருகிறான். இருட்டு, மனித பிம்பத்தைத் துப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது.

‘நீ..நீ…. அனாக்கோ அல்லவா ?. தம்பிரானிடம் எடுபிடியாக இருந்தவன் தானே ? ‘

‘நான் அனாக்கோ இல்லை. மதுரை. எனக்கும் உனக்குமுள்ள இருபத்தைத்து ஆண்டுகாலக் கணக்கைத் தீர்க்க வந்திருக்கேன். ‘

‘நான் நம்ப மாட்டேன். மதுரையை என் கைகளாற் கொன்றிருக்கிறேன். நீ தம்பிரானிடம் இருந்தவன். உனக்கும் மதுரைக்கும் கொஞ்சம் உருவ ஒற்றுமை இருப்பதை வைத்து என்னை மிரட்டுகிறாய். தம்பிரானோடு உன்னை முதன்முறை பார்த்தபோது சந்தேகித்தது வாஸ்த்துவம். ஆனால் நீ அவனில்லை..தம்பிரான் அனுப்பினாரா ? ‘

‘கொண்டெண்ட்.. இனியும் என்னால் காத்திருக்கமுடியாது. இருபத்தைந்து ஆண்டுகளாக உன் ஈரலுக்காக பசியோடிருக்கிறேனடா.. அசையாமல் படுத்தாயானால், அதிக வதையின்றி, இரத்தசேதமில்லாமல் எடுத்துக்கொள்வேன். தம்பிரான் கபானிலிருந்து இதற்காக மசாலா கொண்டுவந்திருக்கிறேன். ‘

‘என்னைப் பயமுறுத்தாதே.. இதற்கெல்லாம் அச்சப்படுபவனல்ல நான். உண்மையைச் சொல், நீ யார் ? ‘

‘எந்த உண்மையை ? உங்களோடு மத்தலோவாக பணியிலிருந்த என்னை மற்றக் கடற்கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு ஒவ்வொரு நாளும், நான் கறுப்பன் என்பதால், சாட்டையால் அடித்தும், காலால் உதைத்தும், இரும்புமுட் கூண்டில் வாரக்கணக்கிற் பூட்டிவைத்தும் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்த உண்மையைச் சொல்லவா ? அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்யும்போது, ஒரு நாள் வதைகளைத் தாங்கமாட்டாமல், கப்பலில் இருந்த வெடி மருந்துக் கிடங்கிற்குத் தீ வைக்கப்போகிறேன் என்று நான் மிரட்டவும், பேடியைப்போல என் பின்புறமிருந்து சுட்டதும் அல்லாமல் வெறிகொண்ட மிருகத்தைப்போல மார்பினைக் கிழித்து, இதயத்தையும் ஈரலையும் பறித்து, வேகவைத்துத் தின்றாயாமே அந்த உண்மையைச் சொல்லவா ?

‘…! ‘

அல்லது இரண்டு ஆண்டுகள், இந்தியக் கடலோரங்களிலும், செங்கடலிலும் கடற்கொள்ளைக்காரனாக ஆட்டம்போட்டுவிட்டு, பூர்போன் குவர்னரைப் பணத்தால் மயக்கி, அவர் மைத்துனியை மணந்து, பிரெஞ்சு அரசாங்கத்தின் பொது மன்னிப்பைப் பெற்ற கதையைச் சொல்லவா ? அல்லது பிரான்சு தேசத்துக்கு மீண்டு, பிராத் (Pirate)தாகத் திரிந்த கிறிஸ்தோபர் கொண்டெண்ட்* என்கின்ற இரத்தவெறிபிடித்த ஓநாய், இன்றைக்குப் பிரெஞ்சுத் தீவில், போல்அஞ்ஞெல் பிரபு என்கின்ற அந்தஸ்துடன் வலம் வருகின்ற உண்மையைச் சொல்லவா ? இவற்றுள் எந்த உண்மையைச் சொல்ல ?

‘நீ… ‘

‘மிருகத்தைப்போல வேட்டையாடித் தின்றாயே, அந்த மலபாரி இந்தியன், மதுரை என்பவனின் புத்திரன். நீ நினைப்பது போல, தம்பிரானிடம் இதுநாள்வரை சேவகம் செய்து, உன் உயிரை வாங்கக் காத்திருந்த அனாக்கோ என்பதும் உண்மைதான். உன்னோடு கடற்கொள்ளை நடத்தியவனும், உன்னுடைய சதியால் மரூன் முத்திரை குத்தப்பட்டு மடகாஸ்கருக்கும், மொரீஸியஸ் தீவுக்குமாக தற்போது அலைந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து (Englaand), என்பவன் உன்னைபற்றிய முழு உண்மைகளையும் தெரிவித்துப்போட்டான். ‘

‘அனாக்கோ நான் சொல்வதைக் கேட்டாயானால், உணக்கு வேண்டிய பணமும், மடகாஸ்கருக்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாட்டினையும் செய்வேன் ‘

‘பைத்தியக்காரா!. என் தந்தையைக் கொன்ற கொடூரத்தின் சங்கதி அறிந்தநாள் முதல், இந்தப் பிச்சுவாவைத் தீட்டிப் பதம் பார்த்துவைத்திருக்கிறேன். நேற்று அப்பாவி காத்தமுத்துவையும், கமலத்தையும் கொன்றதற்கு நீ குவர்னரிடமும், மலபாரிகளிடமும் கூறிய பொய் காரணங்களைக் கேட்டுமென் ஆத்திரம் கூடியிருக்கிறது. பாதகா! நேற்று உன் பண்ணையில் ஈவிரக்கமின்றி அடிமைகளை வெட்டிப்போட்டதும், காட்டிற் பதுக்கிவைத்திருந்த ஆட்கள்தானே ? இனியும் உன்னை உயிரோடு விட்டுவைத்திருப்பது ஆபத்து. ‘

‘ ஏய் கிட்டே நெருங்காதே, என் ஆட்கள் சுற்றிலும் இருக்கின்றார்கள். .. ‘

‘கூப்பிடேன்! சொல்லப்போனால், அவர்கள் வெளியே என் அழைப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்… ‘ அனாக்கோ கையைத் தட்டுகிறான்.

ஒன்று, இரண்டு, மூன்று நான்கு பேர். நான்கு அடிமைகள் வரிசையாக வந்து நின்றார்கள். போல்பிரபுவிடம், உதைபட்டும், சாட்டை அடிகள் வாங்கியும், சேவகம் செய்பவர்கள். இவருக்காக மரூன்களை ஆயுதங்களுடன் விரட்டி ஓடுபவர்கள். வேட்டையின் போது புதர்களைக் கலைத்து காட்டுக்கோழிகளைத் துரத்துபவர்கள், சுடப்பட்டக் காட்டுப் பன்றியின் வாய்க்கும் குதத்திற்குமாக, முளைசீவிய மூங்கிற் கழியைச் செருகித் தூக்கிவருபவர்கள். இவர் மலசலம் கழித்தால் சுத்தம் செய்பவர்கள், பயமற்று எதிரே நிற்கின்றார்கள். சிரிக்கிறார்கள். நடக்கவிருக்கும் விபரீதத்தை உண்ர்ந்தமாத்திரத்தில், முதுகுத் தண்டில் சில்லென்ற உணர்ச்சி, உடல் முழுக்க எறும்புகள் ஊர்கின்றன. ஓடுவதற்கு முயற்சி செய்தவர், முடியாமற்போக அப்படியே உட்கார்ந்துகொள்கிறார். ஒருவன் அவர் கையைத் தொட்டு இழுக்கிறான். ஒருவன் அவர் சிவந்த உடலை ஆங்காங்கே கிள்ளிப்பார்க்கிறான். மற்றொருவன் ஓங்கி அறைகிறான். நான்காமவன் தனது முழு பலத்தையும் உபயோகித்து இவரது கால்களுகிடையில் எட்டி உதைக்கிறான்.

போல் பிரபு பைத்தியம் பிடித்தவர்போல தலையை இருகைகளுக்கிடையில் இறக்கிக்கொண்டு வலமும் இடமுமாக ஓடுகிறார். இருவர் பிடித்துக்கொள்ள, ஓர் அடிமை அங்கு நிரம்பிக்கிடக்கும் மூத்திரக் குடுவையை அவரது வாயில் சாய்க்கிறான். மூத்திரம் பிரபுவின் வாயில் நிரம்பி வழிகிறது. அடிமைகள் ஒதுங்கிக் கொள்ள, அனோக்கா, கண்கள் முழுக்கக் கொலைவெறியுடன், பிச்சுவாவை உயர்த்திய வேகத்தில் பிரபுவின் மார்பிற் செருகி வெளியே இழுத்தான்..

/தொடரும்/

*Piractical History of Madagascar, Author: Chris Rule

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts