நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Que deviendrons dans cette l ‘Ile ?

Nous deviendrons maigres, etiques et puis morts de faim: vila mon fentiment et notre histoire.

– (L ‘Ile des esclaves) Pierre de Marivaux

மேற்குதிசையில் மூன்று முலை மலைக்குப் (Trois Mamelles) பின்னே, பதுங்கியிருந்த நிலவு சீண்டியதில் மலையுச்சியிலிருந்து தூக்கக்கலக்கதுடன் இறங்கும் மேகங்கள். கிழக்குத் திசையில் சினமுற்ற நாகத்தைப்போல உஸ்.. உஸ்ஸ்சென்று சீறிக்கொண்டு வீசும் எதிர் காற்று. தென்மேற்குத் திசையிலிருந்து விறைத்து விழும் மழைத்தூறல்கள், பின்முதுகிலும், பிடரியிலும், சடசடவென பட்டுத் தெறிக்கின்றன. நீர்நிலைகளின் கரையோரங்களில் கொறக்….கொறக்கென்று, கத்துகின்ற தவளைகள், இவர்கள் காலடிகளின் முன்னேற்றதிற்கொப்ப வரிசைவரிசையாய், பொத்..பொத்தென்று நீரில் குதிக்கின்றன. இவ்வோசைகளுக்கிடையே, கரையிலிருந்து நீரில் இறங்கி சடசடவென்று வாலினை இருபக்கங்கங்களிலும் அடித்துக்கொண்டு, நீந்திச் செல்லும் முதலையை நினைத்து எச்சரிக்கையாய் நடக்கவேண்டியிருக்கிறது.

கிளைகளின்அசைவுகள், இலைகளில் விழும் மழைத்துளிகள், நுரையும், குமிழ்களுமாய் களக்.. களக்கென்று ஓசையெழுப்பி சுழித்து ஓடும் ஓடைகள்; நதிகள். மலைச்சரிவுகளிலும், அதனையொட்டிய பள்ளத்தாக்குகளிலும் கேட்கின்ற இவற்றின் எதிரொலிகள் -இது தவிர காடுகளில் இரவுக்கென்றே புதிராய் படைக்கபட்ட சத்தங்களிருந்தும், இவர்களுக்கென்னவோ நாராசமாய்க் காதில் விழுகின்றன.

மூவரையும் அண்டவிடாமல் போல்பிரபுவின் பண்ணை விலகிப் போகின்றதோ ? அப்படித்தான் இருக்கவேணும். கைலாசமும், சில்வியும், பொன்னப்ப ஆசாரியும் ஏதோ திகைப் பூண்டை மிதித்ததற்கொப்ப கடந்த இரண்டுசாமமாய்ப் பாதையைத் தவறவிட்டு, சுற்றிச்சுற்றி வருகின்றார்கள். அடர்த்தியாய் இறங்கியிருந்த இருட்டு, நடக்கின்ற மூவரையும் பிரித்திருந்தது. கரிசல் மண்ணில் கலந்துக்கிடந்த சரைளைக் கற்கள் ஈரப்பாதங்களில் நெருஞ்சி முட்களாய்த் தைத்தன. பூனைகாசரைச் செடிகளை உரசி நடந்ததில், கெண்டைக்கால்களிற் தினவெடுத்தது. அவ்வப்போது காலில் ஒட்டிக்கொண்டு இரத்தம் உறிஞ்சும் அட்டைகளை கவனமாய் பிய்த்து எறிந்தனர். ஈரச்சகதியில் கால்கள் பதியுந் தோறும், சளக் சளக்கென்று, சேறும் தண்ணீரும் தொடைகளுக்கிடையிற்படிந்து ஒழுகிக் கொண்டு எரிச்சல்படுத்தியதில் அக்கறைகொள்ளாமல் நடக்கின்றார்கள்.

மூவரிடத்திலும் அசாத்திய மெளனம். சொல்லவொணாத் துயரம் நெஞ்சிற் குமைந்துக்கொண்டிருக்கின்றது. கால்கள் பின்னுகின்றன. சுவாசம் அடைத்துகொள்கிறது. ஒவ்வொரு நொடியும் யுகமாக நீள்கிறது. இவர்களெதிரே கிழக்கில் சிவத்த கீழ்வானமும், மேலே தெரிந்த கறுத்தமேகமும் அபசகுனமாய்த் தோன்றியது.

கைலாசம், சில்வி, பொன்னப்ப ஆசாரி மூவரும் இருள் பிரியும் முன்னே பாம்ப்ள்மூஸ் பிரதேசத்தை நெருங்கியிருந்தார்கள். போல் பிரபுவின் பண்ணையைநோக்கி அண்டை அயல்களிலிருந்த பண்ணை முதலாளிகளும், அவர்களது நம்பிக்கைக்குரிய அடிமைகளும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பண்ணையை நெருங்கியிருந்தபோது, விளைந்தப் பயிர்கள் எரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தன. பண்ணையை ஒட்டியிருந்த, அடிமைகளின் கபான்களும் அவற்றுள்ளிருந்த தட்டுமுட்டுச் சாமான்களும் எரிந்துகொண்டிருக்கின்றன. வெட்டபட்ட கறுப்பு அடிமைகளின் உயிரற்ற உடல்கள். உயிருக்குப் போராடும் ஒன்றிறண்டு உயிர்களின் ‘செக்கூர்.. செக்கூர்*.. ‘ என்கின்ற மரண ஓலங்கள். அடிமைகளில் சிலர் அங்குமிங்குமாக ஓடி, மரவாளிகளில் தண்ணீர்சுமந்து அவசரகதியிற் தீயினை அணைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதபாணிகளாகவிருந்த அடிமைகள் இருவர், மூவரையும் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.

‘போல் பிரபுவை பார்க்கவேணும் ‘, கைலாசம்.

‘எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாதென்பது, முதலாளியின் உத்தரவு. குவர்னருக்கு ஆள் அனுப்பப்பட்டிருக்கிறது. தெத்தாஷ்மான்* வருகின்றவரை அந்நியர் எவரையும் உள்ளேவிடக்கூடாதென்பது பிரபுவின் கட்டளை. ‘ பண்ணையின் அடிமைக் காவலாளி ஒருவன், தெளிவாய் வசனம் பேசினான்.

‘இல்லை இது மிகவும் அவசரம். போல் பிரபுவை அவசியம் பார்த்தாகவேணும். எங்கள் பெண்ணொருத்தியைத் தேடிவந்திருக்கிறோமென்று அவரிடம் உடனே சொல்ல வேணும் ‘

‘நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கவேணும். உங்களினத்தைச் சேர்ந்த்வன் மரூன் ஒருவன், தனது கூட்டத்துடன் பண்ணைக்குள் புகுந்து இருபெண்களைப் பலவந்தப்படுத்தியிருக்கிறான். தூங்கிக்கொண்டிருந்த எங்கள் மலகாஷ்அடிமைகளை வெட்டிப்போட்டு அவர்கள் கபான்களை கொளுத்திப்போட்டார்கள். ‘

‘கைலாசம் இவன் என்ன சொல்லுகிறான் ? நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நீலவேணிக்கு ஆபத்தாக முடியும். இவனைச் சமாளித்துவிட்டு, எப்படியாவது உள்ளே புகவேணும். ‘

முதல் அடிமைக்காவலனுடன் மற்றொருவன் ஓடிவந்து இணைந்து கொள்ளுகிறான். ‘மலபாரிகள் உம்மிடம் வம்பு பேசுகிறார்களா ? ‘

‘இவர்களுக்கு வேண்டிய மலபார்ப் பெண்ணொருத்தி பண்ணையில் இருக்கவேணுமென, சாதிக்கிறார்கள். முதலாளியின் உத்தரவைச் விளக்கினால், நம்புவார்களில்லை. நடந்திருக்கும் பயங்கரத்தையும் உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை. ‘

‘இவர்களிடம் என்ன பேச்சு. துப்பாக்கியை உனக்குப் பல் குத்தவா கொடுத்திருக்கிறார்கள். எடுத்து சுடுவதுதானே ? இந்த நாய்கள் நமது சனங்களுக்குச் செய்துள்ள பாதகங்களுக்கு, ஒரு மலபாரியைக் கூட தீவில் விட்டுவைத்திருக்கக்கூடாது. உயிரோடு எரித்திருக்கவேணும். ‘

‘கைலாசம், இப்படியே இந்த மடையர்களுடன் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தால், நீலவேணியைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் என்னுடன் வர இயலாதெனில் நான் மாத்திரம் உள்ளே போகிறேன். ‘ – பொன்னப்ப ஆசாரி.

‘ ‘ஆசாரி! அவசரப்படாதே. அவர்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீலவேணி உண்மையாகவே, இங்கே இருக்கின்றாளா என்பதனை அறியாமல் வீணாக நம் உயிரைப் பணயம் வைப்பதில் விவேகமில்லை. அப்படி, இங்கே இருப்பாளென்றாலும், நம்மால் செய்வதற்கு ஒன்றுமில்லை. தவிர மரூன்கள் பிரச்சினைவேறு புதிதாய் முளைத்திருக்கின்றது. கும்பெனி நிருவாகம், மரூன்கள் பிரச்சினையை ஒழித்தே தீருவதென தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தில் குவர்னர், மிகவும் கண்டிப்பாய் இருக்கிறார். போல்பிரபு, ஏற்கனவே கைசாலத்தினை எவ்வாறு வஞ்சிக்கலாமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். நாமேதும் செய்யப்போக, நம்மை மரூன்களுக்குக் கூட்டாளிகளென சித்தரித்து, நம்மைத் தூக்கிலிட ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியமில்லை. – சில்வி.

‘…. ‘

‘கைலாசம்! நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம். நீ விரைவாகப் போர் லூயிக்குத் திரும்பவேணும். உமது தாயாரையும், சீனுவாச நாய்க்கரையும் இங்கே அழைத்து வருவது முக்கியம். அதற்குள் குவனரும் மற்றவர்களும் வந்துசேர்ந்துவிடுவார்கள். நாம் நினைப்பதுபோல நீலவேணி போல்பிரபுவின் பண்ணையிலிருப்பது உண்மையென்றால், அப்பிரச்சினையை காமாட்சிஅம்மாளும், சீனுவாச நாய்க்கரும் குவர்னரிடம் பிரஸ்தாபிதால் மாத்திரமே தீர்வு காண முடியும். ‘ -சில்வி

சில்வியும், பொன்னப்ப ஆசாரியும் காத்திருக்க, கைலாசம் போர்லூயிக்குச் சென்று காமாட்சி அம்மாளுடனும், சீனுவாச நாயக்கருடனும் மீண்டும் திரும்பிவந்தபோது பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது. தம்பிரான், அனாக்கோவுடன் வந்திருந்தார். பாவாடைச் செட்டி, நாராயணசாமிபிள்ளை, எட்டியான் என தீவின் முக்கிய மலபாரிகள் வந்திருந்தனர். குவர்னர், கும்பெனி அதிகாரிகள், சொல்தாக்களுடன் வந்திருந்தார். மலபாரி மரூன் ஒருவன் காட்டிற் திரிந்த வேறு மரூன்கள் சிலருடன் போல் பண்னையிற்புகுந்து மலகாசி அடிமைகளில் சிலரை வெட்டிப்போட்டானென்றும், அவர்களது உடமைகளைக் கொளுத்திப்போட்டானென்றும் செய்தி பரவ போர்லூயி, பாம்ப்ள் மூசு, மொக்கா, விலெம்ஸ் பிரதேசங்களிலும் ராம்ப்பார் பகுதிகளிலும் மலபாரிகள் எனப்படும் தமிழர்களின் கபான்கள் கொளுத்தப்பட்டன. பெண்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். அவர்களின் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. தக்க சமயத்தில் கும்பெனி தலையிட்டுத் தீவினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டது. தீவு முழுக்க ஏதோ புயலடித்து ஓய்ந்திருந்த அமைதி. கும்பெனி சொல்தாக்கள், ஆயுதமேந்திய அடிமைகள், தீவில் ஏற்படவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதத்தை தடுத்த திருப்தியிலிருந்தார்கள்.

முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்க, மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். குவர்னர் நடுநாயகமாக வீற்றிருக்க, போல்பிரபு தலையினைத் தொங்கப்போட்டுக்கொண்டு அவரருகே உட்கார்ந்திருந்தான். பறங்கியர்கள் வரிசையாகப் போல்பிரபுவை நெருங்கிச் சென்று, அவனது கைகளைப் பிடித்து தங்கள் வருத்தங்கைளை தெரிவித்துவிட்டு இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.

காமாட்சிஅம்மாளும், நாய்க்கரும் குவர்னரிடத்தில் நீலவேணியைக் குறித்து குவர்னரிடம் பிரஸ்தாபிக்கவேண்டிய கட்டாயம் இல்லாமற் போய்விட்டது. பண்ணையில் வெட்டப்பட்ட அடிமைகளின் உடல்களோடு, நீலவேணியின் உடலும், கமலத்தின் உடலும் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த மரமொன்றில் காதுகள் அறுபட்டும், அடித்துக் காயப் படுத்தபட்டும், காத்தமுத்து தூக்கிலிடபட்டிருந்தான்.

போல்பிரபு, நேற்றிரவு நடந்தது என்னவென்று குவர்னருக்கு விளக்கமாகத் தெரிவித்தான். தங்கள் பண்ணைக்கு வரவேண்டிய அடிமையென்றும், நாயக்கர் ஜாகையில் இருப்பது சரியல்லவென்றும் கூறி, நீலவேணியை தன் மகன் பண்ணைக்கு அழைத்து வந்தவனென்றும்., அப்படி அவளை அழைத்துவந்ததே தன்மகனின் துர்ச்சாவுக்குக் காரணமாகிப்போச்சுது எனவும் வியாகூலத்துடன் உரைத்தான்.

குவர்னர், ‘நண்பரே!..என்ன நடந்ததென்பதை, முற்றாகச் சொன்னால்தானே எங்களுக்குப் புரியும்,. அதுவன்றி, இதுவயணம் நமது தேசத்துக்கும் தெரிவிக்கவேணுமென்பது கும்பெனியின் கடமை. நீர் அறியமாட்டாரா ? ‘ என்று கூறவும், போல்பிரபு தொடர்ந்தான்.

‘நேற்று நள்ளிரவு கழிந்தபிறகு, திடாரென்று மேற்தளத்தில், பெண்களின் அபயக்குரல் கேட்டு விழித்துக்கொண்டேன். ஒரு சில அடிமைகளை அழைத்துக்கொண்டு மாடிக்கு ஓடினேன். அங்கே நான் கண்ட காட்சி உலகில் வேறெந்தத் தகப்பனுக்கும் நேரக்கூடாது. என் ஒரே மகன் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். அருகில், என் மகனால் கருணைக்காட்டபட்டு பண்ணைக்கு அழைத்துவரப்பட்ட நீலவேணி முழுநிர்வாணமாய், பலவந்தம் செய்யப்பட்டு, சீவனின்றிக் கிடக்கிறாள். மறுபக்கம் அடிமை கமலா என்பவளும், தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடிக் கொண்டு முனகுகிறாள். அவைளை விசாரித்ததில், மலபாரி மரூன் ஒருவன் பலவந்தமாகக் நீலவேணியை சேர்ந்ததாகவும், அவளைக் காப்பாற்றவந்த என் மகனைக் கொன்றுபோட்டதோடு, இவளையும் தாக்கிய மலபாரி, காவலர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பதுங்கிக் கொண்டதாகத் தெரிவித்தாள். அந்தக் கணமே, எங்கள் ஆட்கள் ஒவ்வொரு அறையாகத் தேடிச் சென்று பதுங்கியிருந்த அந்த மிருகத்தை பிடித்து இழுத்துவந்தார்கள். இவனைப் பிடித்துவைத்திருந்து, குவர்னர் வசம் ஒப்படைத்திருக்கவேண்டும். புத்திரனை இழந்த சோகத்தில், அவனை நான் தண்டிக்கலாச்சுது. குவர்னர் மன்னிக்கவேணும். ‘

‘போல் நீர் செய்ததில் தவறேதுமில்லை. இதுபோன்ற நேரங்களில் மரூன்களைப் பண்ணை முதலாளிகள் தண்டிப்பதென்கின்ற வழக்கத்தினை கும்பெனியும் அனுமதிப்பதென்பது தீவறிந்த சேதிதானே. அதுவன்றி எங்கள் வேலைகளை நீங்கள் குறைத்திருக்கின்றீர்கள். அதற்காக கும்பெனி உங்களுக்கு நன்றி சொல்லவேணும். வீண் கவலை வேண்டாம், பண்ணைக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு கும்பெனி பொறுப்பு. ‘

குவர்னர் வார்த்தைக்கேட்டு, வந்திருந்த பறங்கியர் தங்கள் தலையை உயர்த்தி ஆமோதித்தனர்.

மலபாரி மனிதர்களுக்கிடையே, நின்றிருந்த அனாக்கோவிற்கு, போல்பிரபு கூறுவதனைத்தும் உண்மையல்ல இட்டுக் கட்டியகதை என்று அறிந்த்வன் ஆதலால், நிலை கொள்ளாமல் தவித்தான். தம்பிரானைப் பார்த்தான். கண்களால் அவர் காட்டிய குறிப்பு அவனை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சல் ஊட்டியது. காத்தமுத்து குறித்து கைலாசம் இதற்குமுன் கேட்டதில்லை என்பதால், போல்பிரபுவை அறிந்திருந்த கைலாசத்திற்கு, அவன் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், சூதாய் இருக்கவேணுமென்று நினைத்தான்.

‘மலபாரி மரூனா ? எங்கள் மக்களில் மரூன்களென்று எவரும் இருந்ததில்லையே ? ‘ கைலாசம்..

‘இதில் அதிசயம் என்ன இருக்கின்றது. இவன் மிசியே தெலாகுருவா பண்னையிலிருந்து சில நாட்களுக்கு முன்னால் தப்பியோடிக் காட்டில் பதுங்கியிருந்தவன். நேற்று சில மலகாசி மரூன்களுடன் பண்ணைக்குள் புகுந்து அநியாயங்களைப் பண்ணியிருக்கிறான். ‘ குவர்னர் போல்பிரபுவிற்கு ஆதரவாகப் பேசினார்.

பிரெஞ்சுத் தீவின் குவர்னர் லாபூர்தொனே, பிரெஞ்சுத் தீவின் நிர்வாக அதிகாரி மிஸியே ‘திதியே ‘, பண்ணை முதலாளிகள் தெலகுருவா, போல் அஞ்ஞெல், வீல்பாகு, மலபாரிகளான சீனுவாசநாயக்கர், விசாலாட்சி அம்மாள், கைலாசம், சில்வி, பொன்னப்ப ஆசாரி, தம்பிரான், ஆகியோர் பார்த்துக்கொண்டிருக்க, எருது பூட்டிய பண்ணை வண்டியொன்றில் கறுப்பு அடிமைகள் சிலர் நீலவேணி, கமலா, காத்தமுத்து, உடல்களையும், வெட்டுண்டு இறந்துபோன மலகாசி அடிமைகள் உடல்களையும் வாரிபோட்டுக்கொண்டு, தீவில் கறுப்பர்களைப் புதைப்பதற்கென்று தனியாகப் பராமரிக்கபட்ட கல்லறைக்குக் கொண்டு போனார்கள்.

நாயக்கரும் மற்றவர்களும் கேட்டுக்கொள்ள நீலவேணி உடலுக்கு, அபக்கிரியைச் செய்யத் தீர்மானிக்கபட்டது. தம்பிரான் கும்ப பூசை செய்வித்தார். நாயக்கர் ஸ்நானம் செய்து சிவகும்பத்தைத் தலையில் வைத்துக் கும்பத்தில் துவாரம் செய்து சிதையை மூன்றுதரம் சுத்தித் தலைப்பக்கத்தில் நின்று உடைத்து, பிரேதத்தின் வாயில் அரிசி இட்டு, குண்டாகினியை எரியபண்ணி நெய், தேன், பால் சிரசில் விட்டுத் தீயிட்டார்கள்.

எரிகின்ற சிதையில் விழப்போன பொன்னப்ப ஆசாரியை கைலாசமும், எட்டியானும் பிடித்திழுத்துவந்தார்கள், அவர்களிடமிருந்து விலகி ஓடியவன் கிழக்குத் திசைக்காய் ஓடினான். மூர்ச்சையாகிகிடந்த நாய்க்கரையும், விசாலாட்சி அம்மாளையும் ஒரு வண்டியிற் போட்டுக் கொண்டு, போர் லூயியில் இருக்கின்ற மலபார் குடியிருப்பிற்கு மற்றவர்கள் போய்ச்சேர்ந்தனர்.

மலபாரிகள் புறபட்டுச் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குதிரை பூட்டிய வண்டியில், போல் பிரபுவின் மகன் பிரான்ஸிஸ் அஞ்ஞெல் உடலைச் இரு குதிரைகள் பூட்டிய சாரட்வண்டியொன்றில் அலங்கரித்த சவப்பெட்டியொன்றில் வைத்தனர். வெள்ளையர்கள் கல்லறைப்பகுதிக்குக் போவதற்குமுன்னர், போர் லூயி லசாரிஸ்துகளின் தேவாலயத்தில் வைத்து பூசைப்பலி சென்மாலோ பிரதேச வழக்கத்தின்படி நடைபெற்றது. அதற்குப்பிறகு நடந்த சவ நல்லடக்க நிகழ்ச்சியில், குவர்னர், அவரது மதாம் உட்படத் தீவின் பிரதானமக்கள் கலந்துகொண்டார்கள்.

அன்று மாலை மலபாரிகளின் குடியிருப்புகளில் சோகம் கவ்விக் கொண்டிருந்தது. கைலாசம் சில்வியோடு கடற்கரைக்குப் போயிருந்தான். காமாட்சி அம்மாள், நாயக்கர் கபானுக்குத் திரும்பியிருந்தார். நாயக்கரும், அவரது பாரியாளும் தங்கள் சோகத்தைக் குறைத்து அமைதிகொள்ளட்டுமென காத்திருந்தார்.

‘அண்ணா, நான் ஒன்று சொல்வேன். நீர் ஏற்றுக்கொள்ளவேணும். இனி இத்தீவு வாழ்க்கை நமக்குச் சரிவராது. தெய்வானைக்காகவென்று புதுச்சேரி செல்லவிருப்பதை இனியும் நான் தள்ளிப் போடப்போவதில்லை. குவர்னரிடம் புறபடுவதற்கான ஏற்பாட்டினை உடனே செய்யச் சொல்வோம். நீங்களும் என்னுடன் வருகின்றீர்கள். உங்களைத் தீவில் விட்டுவிட்டு நாங்கள் மாத்திரம் போகப்போவதில்லை. நாளை குவர்னரை பார்த்துவருவோம்.. ‘ என்றவள், துக்கவீடென்பதால், சொல்லாமற் புறப்பட்டார்.

நாயக்கரிடம் தெய்வானையைக் குறித்து பேசியபோதுதான், அவளைக் காலையில் காபானில் நிறுத்திவிட்டுப் கைலாசத்துடன் புறப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. நீலவேணியை குறித்தச் சங்கதிகளைச் சொல்லாமலே இருவரும் புறப்பட்டிருந்தனர். தோழி நீலவேணியின் தீடார்ச் சாவு, தெய்வானையை என்ன பாடுபடுத்துமோ என்று நினைக்க காமாட்சி அம்மாளிற்கு அச்சமாகவிருந்தது. அவளிடம் இதை பக்குவமாகச் சொல்லவேண்டும். கடவுளே! எப்படி இந்த பாரத்தை இறக்கிவைக்கப்போகிறேன்..வேகமாய்த் காமாட்சி அம்மாள் தங்கள் காபானிற்கு ஓடிவந்தார். கதவு திறந்து கிடந்தது. விளக்கின்றி கபான் இருட்டிலிருந்து. மனதிற் பயம் சேர்ந்துகொண்டது. உடல் நடுங்கியது. சோர்ந்து தரையிற் சாய்ந்தாள்.

எப்படியோ, காமாட்சி அம்மாளும், கைலாசமும் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் அந்த சேதி தெய்வானைக்கு கிடைத்திருந்தது. இரவில் நித்திரை கொள்ளுகின்ற நேரங்களைத்தவிர, தோழியர் இருவரும்.சேர்ந்தே இருந்திருக்கின்றார்கள். சந்தோஷத்தையும் துக்கத்தையும் சேர்த்தே கண்டிருக்கிறார்கள். ‘பாவிப்பெண்ணுக்கு இப்போதுமட்டும் என்ன நேர்ந்தது ? என் சம்மதமின்றி செத்துப்போக யார் தீமானித்தார்கள். போடி போ.. எவ்வளவு தூரம் போவாய் ? எங்கே போவாய் ? வானமென்றாலும், வந்து சேருவேன். பஞ்ச வர்ணக் கிளியே, நீலவேணியை நீ பார்த்தாயா ?, பாடுகின்ற குயிலே என் தோழியை நீ கண்டாயா ? வானரமே கடல் கடக்கும் எண்ணமேதுமுண்டா ? அங்கே என் உயிர்த் தோழயைக் கண்டால் அவசியம் வரவேணும் என்று சொல் ‘, எதிர்ப்படுகின்ற மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றையும் நீலவேணியை பார்த்தீர்களா என்று கேட்டவளாய் காட்டில் வெகு தூரம் தெய்வானை வந்திருந்தாள்.

/தொடரும்/

* Detachements – Slave patrol force

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts