மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

மாதங்கி


‘நீ என்னதான் சொல்லு ரகு, அவனவனுக்கு வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை; ஆபீஸ் விட்டு வீடு வர ஒன்பதாகிறது, அதன் பின், குளித்து, சாப்பிட்டு, ஏதோ பத்து நிமிஷம் தொலைக்காட்சி பார்க்கலாம் என்றால் அப்படியே களைப்பினால் தூக்கம் வந்துவிடுகிறது. பொருளார பின்னடைவினால், அலுவலகத்தில் ஆட்குறைப்பு வேறு செய்துவிட்டபடியால், விடுமுறையான சனிக்கிழமை அன்றும் முழுநாளும் அலுவலகத்தில் கழிந்து விடுகிறது; ஞாயிறுதான் அடித்துப் பிடித்து எழாமல், மெதுவாக எழுந்து, வந்த தபால்களைப் பார்ப்பது, தொலைபேசி, வீட்டுத்தவணை, நீர் மின்சாரக் கட்டணங்களை பார்ப்பது, மகனை இசை, துணைப்பாட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்று போய் விடுகிறது; இத்தனைக்கும் வீட்டுச் சாமான்கள் வாங்குவது, காய்கறிகள், வாங்குவது, சமையல், குழந்தைகளின் படிப்பு இத்தனையும் என் மனைவி பார்த்துக்கொண்டாலும், ஊருக்கு தொலைபேசியில் பேசுவது, நல்ல நாள் கிழமைகளில் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வது இதுவே பெரிய பாடாயிருக்கும் போது, அக்கம்பக்கத்தினருடன் நல்லுறவு வைத்துக்கொள்ள எல்லாம் எனக்கு நேரமில்லை, போததற்கு மாதாமாதம் வெளியூர் பிரயாணம் வேறு அலுவலகத்தில் வந்து விடுகிறது , ‘என்றேன் மதிய உணவு இடைவெளியில்.

ரகு மெளனத்துடன் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான். நானும் விடவில்லை. ‘நல்லுறவு என்றால் என்ன சொல்கிறாய், அக்கம்பக்கத்திற்கு உதவி செய்வதா, செய்யலாம்தான்; எனக்கும் கூடாது என்ற எண்ணம் இல்லை; ஆனால் என் வீட்டிற்கே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த

வீட்டிற்குச் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க முடியுமா; அக்கம்பக்கத்தில் உள்ளவருக்குத் தொந்தரவு தராமல் இருப்பதே இந்த காலத்தில் பெரிய நல்லுறவு தான், உபத்திரவம் கொடுக்காமல் இருப்பதே பெரிய உதவி, ‘ என்று முடித்தேன்.

எனக்கு நல்ல வேலை, வீடு, நண்பர்கள் இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் யார் எப்படி இருந்தால் என்ன; அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். அப்படி நான் ஊரில் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசரம் ஆபத்துக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; என் மனைவி அவர்கள் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தாலே போதுமே.

ரகுவிற்கு நான் நீட்டி முழக்கி விளக்கம் தரக்காரணம் அவன் கேட்ட ஒரு கேள்விதான்; வீடமைப்பு வளர்ச்சிக் கழககத்தின் குடியிருப்புப் பகுதிகளில், மக்கள் தத்தம் இல்லங்களுக்கு மின் தூக்கியில் செல்லும் போது கிட்டத்தட்ட ஐந்து பேர் ஒரே மிந்தூக்கியில் பயணித்தாலும் ஒருவரது முகத்தை மற்றவர் பார்ப்பதில்லை; வெவ்வேறு திசைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படியே தப்பித் தவறி பார்த்தாலும் அதில் உணர்ச்சி என்பது சிறிதுகூட இருப்பதில்லை; தங்களூக்கு வேண்டிய பொத்தானை தாங்களே தட்டிக்கொள்கிறார்கள், வெளி மனிதர்கள் என்றாலும் பரவாயில்லை, ஒரே ப்ளோக்குகளில் வசித்தாலும் இப்படி இருக்கிறதே ; நீ எப்படி அக்கம் பக்கத்தினரும் நல்லுறவு மேற்கொள்கிறாய் ‘ என்று என்னை விளித்திருந்தான்.

ரகுவும் நானும் அலுவலகத்தில் நல்ல நண்பர்கள். வெவ்வேறு இடங்களில் வசித்தாலும், காலை எட்டிலிருந்து இரவு எட்டு வரை ஒரே அலுவலகத்தில் இருப்பதால், மதிய உணவு வேளையில் எதாவது பேசிக்கொள்வோம்; ரகு அவ்வளவாக பேச மாட்டான். என்னை கேள்வி கேட்டு என்னை பேச வைப்பான்.

இரவு பெருவிரைவு ரயிலில் வீட்டிற்கு வரும்போதும், மதியம் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தேன். எங்கள் இல்லம் இருக்கும் தளத்தில் பத்து பன்னிரெண்டு வீடுகள் இருக்கும். மொத்தம் பதினொரு தளங்கள், ஆனால் வாயில் கதவுக்கு எதிர்புறம் ஒரே ஒரு வீடு இருக்கும், டோர் டு டோர் என்பார்களே அந்த முறையில் கட்டப்பட்ட ப்ளாட்டுக்கள். எதிர் வீட்டு குடும்பத்தலைவரை நான் இதுவரை பார்த்ததே கிடையாது, அவர் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது, என் மனைவிக்கு மலாய் தெரியாது. என் மனைவி இல்லத்தரசியாக இருப்பதால், காய்கறி வாங்கச் செல்லும்போது, மகனை பள்ளிக்கு இட்டுச்செல்லும் போது, அவ்வப்போது எதிர் வீட்டு அம்மாளைப் பார்ப்பதாகவும், ஹலோ என்று சொல்வார்கள் என்றும் , எங்கள் ஆறுமாத மகளை ஹலோ பேபி, ஸயாங், ஸ்யாங் என்றும் ஏதோ சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறாள்.

அவ்வளவே; எங்கள் வீட்டிற்கு நேர் கீழ்தளத்தில் சீனர் குடும்பம் உள்ளது. அவரை நான் ஒரு முறை ஆர். சி செண்டரில் பார்த்திருக்கிறேன். நாங்கள் வேலைக்குப் போவது வருவது எல்லாம் வெவ்வேறு நேரம். எங்கள் ப்ளோக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள் அவரவர் வீட்டு வாயில் கதவு மற்றும் இரும்பு கதவு பூட்டியே இருக்கும். வெளியே செல்லும் போது மட்டுமே திறக்கப்படும். யாருக்கும் பழகக் கூடாது என்பதில்லை; சோஷியலைஸ் பண்ண நேரமோ சந்தர்ப்பமோ இல்லை. அப்படியே எதிரில் அவர்கள் வந்தாலும் நானும் சரி அவரும் சரி விறுவிறு என்று நடந்து போய் விடுவோம்.

இப்படியே வாழ்க்கை கழிந்து விடும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு திருப்புமுனையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேச்சு எல்லாம் நடந்து சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கும்.

இந்த முறை சவுதி, துபாய் பகுதிகளுக்கு எங்கள் அலுவலக கிளைக்கு மேற்பார்வையிட நான் செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் என்றாலும் அங்கு வெள்ளி விடுமுறை நாள், ஞாயிறு வேலை நாள் என்பதால் இரண்டு ஞாயிறு தொடர்ச்சியாக இருந்துவிட்டு, புதன் இரவு, கிளம்பி, வியாழன் இரவு வந்து சேர்ந்தேன். இரவானபடியால், குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். வந்து சில நிமிடங்கள் மனைவியிடம் பேசும் போது எப்பேர்பட்ட விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். விஷயம் இதுதான்.

எங்கள் வீட்டு வாயில் கதவுக்கு ஒரு மாற்றுச் சாவி எப்போதும் உண்டு. ஒன்று மனைவியிடம் இருக்கும். மற்றொன்று என்னிடம் இருக்கும். நான் ஊருக்குச் செல்லும் போது என் சாவியை என் அலுவலக மேசை இழுப்பறையில் வைத்திருப்பேன். அப்படி என் மனைவி சாவியை தொலைத்துவிட்டால், ரகுவை தொலைபேசியில் அழைக்குமாறு கூறியிருந்தேன்.

இன்று, அதாவது வியாழன் முற்பகல், என் மனைவி சுமார் பதினொன்றரைக்கு என் மகனையும், தள்ளுவண்டியில் மகளையும் அழைத்துக்கொண்டு வாயில் கதவைப் பூட்டியிருக்கிறாள். தள்ளுவண்டியில் என் மகளை- சுமார் ஒன்றரை வயது, உட்கார வைத்துவிட்டு, என் மகனுக்கு வாசலில் போட்டிருந்த காலணி பலகைகளில், பள்ளிக்குச் செல்லும் ஷூக்களை அணிவித்து, இருவரையும் அழைத்துக்கொண்டு, கீழ் தளத்தில் பாலர் பள்ளி வேனில் அவனை ஏற்றிவிட்டு, அப்படியே அவள் தோழி வீட்டிற்கு நவராத்திரியை முன்னிட்டு, அவர்கள் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்ள அழைத்திருந்ததால் பிடோக் சென்றிருக்கிறாள். அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, குழந்தை தூங்கிவிட்டதால், அங்கேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு, மூன்றரைக்குக் கிளம்பியிருக்கிறாள். நாலரைக்கு மகனது பள்ளி வேன் வரும் போது அப்படியே எங்கள் ப்ளோக் கீழ் தளத்தில் அவனையும் கூட்டிக்கொண்டு வாயில் கதவுக்கு எதிரில் வந்தால், எதிரி வீட்டு மலாய் பெண்மணி அவர்கள் வீட்டு மரக்கதவு திறந்திருக்க, இரும்பு கம்பிகள் கொண்ட கதவை மட்டும் பூட்டியவாறு வீட்டினுள் ஆனால் வாசலை பார்த்தவாறு ஒரு நாற்காலியுடன் உட்கார்ந்திருந்தவர், என் மனைவி வீட்டு வாயிலில் வந்ததைப் பார்த்த அடுத்த வினாடி, க்ரில் கதவைத் திறந்து வெளியே வந்திருந்தவர் என் மனைவியின் கரத்தில் எங்கள் வீட்டு கொத்துச் சாவியைத் திணித்திருக்கிறார்.

என் மனைவி அவரமாக கைப்பையில் தேட அதில் சாவி இல்லை. எதிர் வீட்டு மலாய் பெண்மணி ஆங்கிலம் அறியாதவர், தட்டுத் தடுமாறி, சைகை மூலமாக, ஓரிரு ஆங்கிலசொற்கள் மூலமாக தெரிவித்த விஷயம் இதுதான். வீட்டைப்பூட்டி சாவியை கைப்பையில் மனைவி போட்டிருக்கிறாள். அதற்குள் மகன் ஷூ போட அவசரப்படுத்தவே, குழந்தையை தள்ளுவண்டியில் அமர்த்தி , அதற்கு பெல்ட் போட்டுவிட்டு, மகனுக்கு காலணி அணிவித்திருக்கிறாள். பிறகு கைப்பையின் ஜிப்பை இழுத்து மூடியிருக்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் எங்கள் ஒன்றரை வயது மகள், கைப்பையிலிருந்து சாவியை எடுத்து எங்கள் வீட்டு வாயில் கதவில் காலணி பலகை அருகில் அடுக்கியிருந்த செய்தித்தாள் குவியல் மேலே போட்டிருக்கிறாள். அதனால் சாவி விழுந்த ஓசை கேட்கவில்லை. இவர்கள் வெளியே கிளம்பிய சிறிது நேரத்தில் எதிர்வீட்டு அம்மாள் அதிர்ஷடவசமாக தம் வீட்டு வாயில் கதவைத் திறந்து , தங்கள் காலணிப் பலகையை சுத்தம் செய்திருக்கிறார்.

அப்போதே எங்கள் வீட்டுச் சாவியை பார்த்திருக்கிறார். உடனே பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார். என் அலுவலகத் தொலைபேசி எண் அவருக்குத் தெரியாது. மேலும் என் மனைவியிடம் கைத்தொலைபேசியும் கிடையாது. எனவே எதிர் வீட்டில் பூட்டிவிட்டு வெளியே சென்றவர் (அதாவது நாங்கள்) வந்தவுடன் கொடுக்கலாம் என்று சாவியை பத்திரமாக வைத்திருக்கிறார். ஆனால், நாங்கள் வந்துவிட்டோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது, அதற்காக, தம் வீட்டுமரக்கதவைப் பூட்டாது, இரும்பு க்ரில் போட்ட கம்பிக் கதவை மட்டும் பூட்டிவிட்டு, வழி மேல் விழி வைத்து காத்திருந்திருக்கிறார்.

முற்பகல் பதினொன்றரையிலிருந்து மாலை நாலேமுக்கால் வரை, சுமார் ஐந்தேகால் மணி நேரம் காத்திருந்திருக்கிறார். இத்தனைக்கும், நாங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. எல்லாம் ஒரு மனிதாபிமானம்தான்.

அவர்கள் நமக்கென்ன என்று எடுக்காமல் விட்டிருந்தால் வீடே களவு போயிருக்கலாம், அல்லது திருடன் உள்ளே ஒளிந்து கொண்டும் இருக்கலாம். எங்கள் வீட்டு வாயிலில் கிடப்பதால், அது எங்கள் வீட்டுச் சாவி என்பதை குழந்தை கூட சொல்லிவிடுமே.

‘வாங்க, எதிர்வீட்டு மலாய் ஆண்ட்டிக்கு இரண்டு பேருமாகச் சேர்ந்து நன்றி சொல்லிவிட்டு வருவோம் என்றாள், ‘ என் மனைவி.

நானோ அதிசயித்து போய் உட்கார்ந்திருந்தேன். கல்லூரி செல்லும் இரு பிள்ளைகளின் தாய் அவர், அவருக்கு எத்தனை அவசர வேலைகள் இருந்திருக்கும். அதையெல்லாம் தாண்டி ஐந்து மணி நேரம் வாசலில் கம்பிக் கதவுக்கிடையில் காத்திருந்திருக்கிறார் என்றால், என் மனதை என்னவோ செய்தது. இருவரும் சேர்ந்து நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.

இப்போதெல்லாம் நான் எங்கள் ப்ளோக் மின்தூக்கியில் பயணிக்கும் போது, எங்கள் கீழ்தளத்தில் உள்ள

சீனர், (ஆமாம் ஒரு நாள் அவர் வீட்டுதுணிகள் உலர்த்தும் கம்புகளில் எங்கள் வீட்டுத் துணி விழுந்தபோது, சட்டென்று போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன்), எதிர் வீட்டு அங்கிள், இவர்களை மட்டுமன்றி நான் அலுவலகம் செல்லுகையில் சரியாக நடைபயிற்சிக்கு வரும் சீனப்பாட்டி, யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் மலர்ந்த முகத்துடன் முகமன் கூறுகிறேன். சந்தித்து சில நாட்களாகிவிட்டால் நலமாக இருக்கிறீர்களா என்று கூட கேட்கிறேன். நேருக்கு நேர் சந்திக்கும் போது ஒரு வார்தை பேச பணம் தேவையா ? இல்லையே மனம்தானே தேவை; அண்டை வீட்டுக்காரர்கள் யாராக இருந்தால்தான் என்ன, வழியில் பார்க்கையில் வெற்றுப்பார்வையுடன் போவதைவிட, நாமே முன்வந்து முகமன் கூறுவது, பணிவன்புடன் நடந்துகொள்வது மனதை மலரச் செய்கிறது என்று அறிந்தேன்.

—-

madhunaga@yahoo.com.sg

Series Navigation

author

மாதங்கி

மாதங்கி

Similar Posts