பதவி உயர்வு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

ரம்யா நாகேஸ்வரன்


குழந்தை தீபிகாவின் உடல் அனலாக கொதித்தது. இருமல், சளியோடு ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஜுரத்தில் முடிந்திருக்கிறது. குமரனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள் கீதா.

“குழந்தைக்கு ரொம்ப ஜுரம் அடிக்கிறதுங்க. பக்கத்து வீட்டு ஆண்டி வேற ஊருலே இல்லை. கொஞ்சம் உடனே வர்றீங்களா ?” என்றாள்.

“என்ன கீதா ? இந்த மூணு நாள் நான் பயிற்சி வகுப்பு எடுக்கறேன்னு உனக்கு தெரியுமே. ஒரு டாக்சி பிடிச்சு வழக்கமா போகிற குழந்தை நல மருத்துவர் கிட்டே போய்ட்டு வந்துடு,” பதில் சொல்வதற்கு முன் போனை வைத்து விட்டான் குமரன்.

கீதாவிற்கு கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. டாக்ஸியில் செல்லும் பொழுது யோசித்தபடி சென்றாள். கீதாவிற்கும் குமரனுக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தஞ்சாவூரில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண்களில் கீதா மூத்தவள். குமரன் தூரத்து சொந்தம் தான். குமரனின் தாய் தந்தையர் அவனின் சிறு வயதிலேயே ஒருவரின் பின் ஒருவராக மறைந்து விட்டனர். தன் ஒரே அண்ணனின் உதவியோடு கஷ்டபட்டு படித்து முன்னுக்கு வந்தவன் குமரன். சிங்கப்பூரில் ஒரு நல்ல நிறுவனத்தில் ஊழியர் நல மேலாளர் மற்றும் பயிற்சியாளராக பணியாற்றி வந்தான். அதாவது ஊழியர்களுக்கு வேண்டிய, அவர்களின் வேலையை மேலும் சிறப்பாக செய்ய தேவையான வகுப்புக்கள் நடத்துவது மற்றும் அவர்கள் தங்கள் பதவிகளில் உயர தேவையான பயிற்சிகள் அளிப்பது தான் குமரனின் வேலை. கீதாவின் தந்தை செல்லமாக வளர்ந்த மகள் வெளிநாட்டில் செளகரியமாக வாழ்வாள், சின்ன குடும்பம், சொந்தமாக முன்னுக்கு வந்த மருமகனுக்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும் என்ற காரணங்களுக்காக குமரனை தேர்ந்தேடுத்தார். கீதாவிற்கும் பூரண சம்மதம் தான். ஆனால் சிங்கப்பூர் வந்த பிறகு அவளுக்கு கணவனின் போக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒன்றா, இரண்டா, பல காரணங்கள்!

கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் இனிமையாக கழிந்தது. சிங்கப்பூரில் பல இடங்கள் சுற்றுவது, சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடுவது, ஈஷுனில் தமிழ் சினிமா பார்ப்பது என்று வாழ்க்கை சுகமாக இருந்தது. பிறகு மெதுவாக குமரனின் போக்கு மாறியது. ஊரிலிருந்து தனக்கு வீட்டு வேலை செய்ய ஒரு நடுத்தர வயது பெண்மணியை அழைத்து வந்திருந்தாள் கீதா. ஆறே மாதங்களில் அவளிடம் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டான் குமரன். தானே எல்லா வேலைகளையும் செய்ய மெதுவாக பழகிக் கொண்டாள் கீதா. பக்கத்து வீட்டு ஆண்டியின் உதவியோடு எம். ஆர். டி யில் பல இடங்களுக்கு சென்று வந்தாள். வங்கி விவகாரங்கள், வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வது, கடைக்கு செல்வது என்று எல்லாம் பழகி விட்டது கீதாவிற்கு.

குழந்தை பிறப்பு பற்றி பேச்சேடுக்கும் பொழுதேல்லாம் “ஒரு வருடம் போகட்டும்” என்றான் குமரன். குழந்தைகள் என்றால் பிடிக்காதோ என்று பேசிப் பார்க்கும் பொழுது “சேச்சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று மழுப்பினான். அவன் விருப்பப்படியே இரண்டு வருடங்கள் கழித்து தான் கீதா கருவுற்றாள். இப்பொழுது தீபிகாவிற்கு ஒரு வயது முடிய போகிறது. மற்றபடி கீதாவிடம் அன்பாக இருந்ததால் அவள் இந்த விஷயங்களை பெரிது படுத்தவில்லை. இன்றைய சம்பவம் அவளுக்கு எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி கோபத்தை கிளறியது. “இன்னிக்கு இரண்டுலே ஒண்ணு பார்த்துடறேன்,” என்று முடிவேடுத்தாள் கீதா. நல்லவேளை, தீபிகாவிற்கு சாதாரண ஜுரம் தான், பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் குழந்தை நல மருத்துவர்.

ஏழு மணிக்கு குமரன் வீட்டிற்குள் நுழைந்த உடன் ஆரம்பித்து விட்டாள் கீதா. “நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க. கல்யாணமான இந்த நாலு வருஷத்திலே வீட்டைப் பற்றிதான் அக்கறை காட்டலை. எப்ப பார்த்தாலும் வேலை, வேலை! சரி, இரண்டு பேரும் ஆசைபட்டுத்தானே குழந்தை பெத்துக்கிட்டோம்னு பார்த்தா குழந்தை மேலேயும் அக்கறை இல்லை. தினம் சாயந்திரம் ஒரு மணி நேரம் குழந்தையோட விளையாட மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கா ? கஷ்டத்துலே பங்கேடுக்க கடமை இல்லையா ? உங்க போக்கு எனக்கு பிடிக்கவே இல்லை. இப்பவே என்னை ஊருக்கு அனுப்பிடுங்க” என்று அழுகையோடு முடித்தாள் கீதா.

பதறிய குமரன், “என்ன கீதா ? என்னை நீ நல்ல புரிஞ்சு வெச்சுறுப்பேன்னு நினைச்சேன். நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே! நம்ம திருமண வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாரு. கல்யாணம் ஆகும் பொழுது நான் இருந்த பதவியை விட இப்போ எனக்கு பொறுப்புகளும் இரண்டு மடங்கு, சம்பளமும் இரண்டு மடங்கு. கடுமையான உழைப்புனாலேயும், திறமையினாலேயும் தானே இந்தப் பதவி உயர்வு கிடைச்சுது. அதே மாதிரி உனக்கும் பதவி உயர்வுகள் கிடைக்கத்தான் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன்”, என்று நிறுத்தினான் குமரன்.

கீதாவின் முகத்தின் குழப்ப ரேகைகள். “நீங்க என்ன சொல்லறீங்க ?” என்றாள் கண்களை துடைத்தபடி.

“உனக்கு தான் தெரியுமே கீதா. நான் கஷ்டபட்டு வாழ்க்கையிலே முன்னுக்கு வந்தவன். ஆனா, நீ பெரிய பணக்கார வீட்டு பெண். உனக்கு சிங்கப்பூர் புதுசு. எந்த வேலையும் தானே செய்யற பழக்கமும் கிடையாது. முதல் மூணு மாசம் கொஞ்சம் விட்டு பிடிச்சேன். சரி, நீயாவே எல்லா விஷயமும் கத்துப்பேன்னு நினைச்சேன். ஆனால், நீ நல்லா சாப்பிட்டு விட்டு, மெகா சீரியலோ, வி.சி.டி லே சினிமாவோ பார்த்துகிட்டு பொழுதை கழிக்க ஆரம்பிச்சே. உன் கூட உதவி செய்ய வந்த அம்மாவின் கையை எல்லாவற்றுக்கும் எதிர்பார்க்க ஆரம்பிச்சே. அவங்க ‘நாம இல்லைன்னா இந்த வீட்டிலே ஒண்ணும் நடக்காதுன்னு ‘ நல்லா தெரிஞ்சு வைச்சு கிட்டு பாதி வேலை கூட செய்யாமல் பொழுதை வீணடிக்க தொடங்கினாங்க. அதனால் தான் அவங்களை ஊருக்கு அனுப்பி உன்னை உன் கால்கள்லே நிற்க பழக்கினேன். உனக்கு புத்திசாலித்தனம் இருந்தது ஆனால் தன்னம்பிக்கையும், தன்னார்வமும் இல்லை. அந்த காரணத்துக்காக தான் நான் எதிலேயும் பெரிசா ஆர்வம் காட்டலே. நீயே வேற வழியில்லாம ஒண்ணு ஒண்ணா செய்ய கத்துகிட்டே. நான் உதவி செய்திருந்தா நீ எல்லா விஷயத்துக்கும் என்னை சார்ந்து வாழ ஆரம்பிச்சிருப்பே. உனக்கு சிங்கப்பூரும் பழகியிருக்காது, வீட்டு நிர்வாகமும் வந்திருக்காது. இப்ப நீ சிங்கப்பூருக்கு புதுசா கல்யாணமாகி வந்த என் இரண்டு நண்பர்களின் மனைவிகளுக்கு எவ்வளவு விஷயம் கத்து கொடுத்திருக்கே. அவங்க என்கிட்டே “கீதா தான் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி”ன்னு சொல்லும் பொழுது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா ? எங்க அண்ணனும் அண்ணியும் இங்கே வரும் பொழுது என்கிட்டே “உனக்கு நல்ல திறமையான மனைவி அமைஞ்சிருக்கா தம்பி”,ன்னு சொன்னாங்களே நீ கேட்டுக்கு கிட்டு தானே இருந்தே ? இப்ப புரிஞ்சுதா ? உனக்கு கிடைத்த முதல் பதவி உயர்வு ஒரு நல்ல நிர்வாகி!

யோசித்து பார்த்த பொழுது கீதா ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. நான் கொஞ்சம் சோம்பேறியாத்தான்

இருந்தேன். உங்களோட நடவடிக்கை எனக்கு கோபத்தை வர வழிச்சுது உண்மைதான். ஆனா இப்பத்தான் நீங்க மறைமுகமா எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சு என்னை சுறுசுறுப்பானவளா, தன்னம்பிக்கையுள்ள ஒரு இல்லதரசியா ஆக்கியிருக்கீங்கன்னு புரியுது. இப்ப குழந்தை விஷயத்துக்கு வாங்க,” என்று மடக்கினாள்.

“கீதா! நான் கொஞ்ச நாள் காத்திருக்க சொன்னதிற்கு காரணம் நாம உடல் ரீதியா மட்டும் தயாரா இருந்தா போதுமா ? மன ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் தயாராக இருக்க வேண்டாமா ? குழந்தை பெத்துகிறதுன்னா சும்மாவா ? எவ்வளவு கூடுதல் பொறுப்புக்கள் ? இயற்கையாகவே, குழந்தை பிறப்புனா பெண்களுக்கு தான் பங்கு அதிகம். எவ்வளவு தான் நான் உதவ நினைச்சாலும் பல வேலைகளை ஒரு தாய் தான் செய்ய வேண்டியிருக்கு. எனக்கு வேலையிலே சம்பள உயர்வு கிடைக்கவும், உனக்கு பல வேலைகளை சமாளிக்கிற திறமை வரவும் காத்துகிட்டு இருந்தேன். அதானாலே தான் இரண்டு வருடம் கழிச்சு தான் உனக்கு அம்மா என்ற பதவி உயர்வு. ஒரு நல்ல தந்தையா என் பங்குக்கு தீபிகாவோட படிப்புக்காக இப்பவே சேமிக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கத்துலே இல்லாததுனாலே எனக்கு தீபிகா மேலே அக்கறை இல்லைன்னு நினைக்காதே. வேலைக்கு நடுவே டாக்டருக்கு போன் பண்ணி பேசிட்டு தான் வேலையை தொடர்ந்தேன்.”

“நீங்க ஒரு சிறந்த பயிற்சியாளர்னு வீட்டிலேயும் நிரூபிச்சுடாங்களே. எனக்கு எப்பங்க அடுத்த பதவி உயர்வு ?” என்று சிரித்தபடி கேட்டாள் கீதா.

“ம்… உன் அடுத்த பதவி, பாட்டி பதவி தான்!” என்றான் குமரன்.

வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.

(தமிழ் முரசு, 10/5/2003)

ramyanags@hotmail.com

Series Navigation

author

ரம்யா நாகேஸ்வரன்

ரம்யா நாகேஸ்வரன்

Similar Posts