நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பேரமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ்சேண் ஆரிடை யதுவே; நெஞ்சே

ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து

ஓர் ஏர் உழவன் போலப்

பெருவிதுப்பு உற்றன்றால்; நோகோ யானே.

– (குறுந்தொகை -131). ஓரேருழவனார்

புதுச்சேரிப் பட்டணம் முழுக்க காலமே ஒன்பது மணியிலிருந்தே கூச்சலும் குழப்பமுமாகக் கிடக்கிறது

சூரியன் உதிச்சதிலிருந்துதே கும்பெனி சொல்தாக்கள் பண்ண வேண்டிய முஸ்தீபுகளைப் பண்ணுவித்து, கோட்டைவாசல்களச் சாத்திவிட்டார்கள். கோட்டைக்கு வெளியே பட்டணத்தை சுற்றியிருந்த முத்தாலுப் பேட்டை, வழுதாவூர் வாசலுக்கு எதிரே இருக்கப்பட்ட பேட்டை, வில்லியனூர் வாசலுக்கு எதிரே இருக்கப்பட்ட பேட்டைகளிலிருந்து குடிகள் தங்கள்தங்கள் வளவுகளில் காணாமற்போயிருந்த மக்களைத் தேடிப் புலம்பியபடியும், அங்கலாய்த்தும் அந்தந்தக் கோட்டைவாசல்களிற் காத்துக் கிடக்கின்றார்கள். கோட்டைக் காவலர்கள் பறங்கியர்களென்றால் அனுமதிக்கிறதும், தமிழரென்றால் துரத்துவதுமாக இருக்கிறார்கள்.

தமிழர் குடியிருப்புப் பகுதியிலிருந்த நடுத்தெருவிலிருந்த, அவ்வீட்டின் கதவினை உடைத்துக்கொண்டு சொல்தாக்களும், சிப்பாய்களும் நுழையக் காலமே பத்துமணி ஆகியிருந்தது. வீட்டிலிருந்த சனங்களில் துபாஷ், மாறன் வகையறாக்களைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள், பேச்சு மூச்சில்லாமல் பிராண அவஸ்தை கண்டிருந்தார்கள். சிப்பாய்களை விட்டு, எழுப்பிப் பார்த்தார்கள். இவர்கள் எழுப்பி நிறுத்தியவுடன், மீண்டும் சுரணையற்று விழுகின்றார்கள். அவர்களை ஆட்கள் தூக்கிவந்து வெளியில் போட்டார்கள். சுக்கினைச் சுட்டு புகையுடன் மூக்கில் பிடித்தார்கள். உள்கட்டிலும் சிலர் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாக விழித்திருந்தவன் ஒருவன் சொல்ல, அங்கேயும்போய்க் கதவை உடைத்து ஆண்களும் பெண்களுமாக முப்பதுபேரை மீட்டிருந்தார்கள்.

நடக்கின்ற காரியங்களைத் துபாஷ் கனகராயமுதலி, ஆனந்தரங்கப்பிள்ளை, சேஷாசலச்செட்டி மேற்பார்வையிட்டபடி, உத்தரவுகள் பிறபித்துக் கொண்டிருந்தனர். மீட்கப்பட்ட மனிதர்களுக்கிடையே, துபாஷ் பலராம் பிள்ளையை அவர்கள் மூவரும் எதிர்பார்க்கவில்லை. சோர்ந்து மெல்ல நடந்துவரும் துபாஷ் பலராம் பிள்ளை, அவர்களுக்கு அதிசயமாகத் தெரிந்தார்.

‘நீர் எப்படி இங்கே வந்தீர் ? மஸ்கரேஜ்ன்னுக்கு களவாய்ப் போனால் பணம் செலவிருக்காது, என்பதால் இம்மாதிரியான முடிவினை எடுத்தீரோ ? ‘, சுங்கு சேஷாசலச் செட்டி, கேலிபேசிவிட்டு சிரிக்கிறார்.

‘பகடி பண்ணுகிறீரா ?.சுங்குச் செட்டிதான் என்னை இங்கே அனுப்பிவைத்தவன், என்பதாகக் குவர்னரிடம் பிராது கொடுக்க வேணும். அதற்காகக் குவர்னரைப் பேட்டிகாண்பது இன்றைக்கு முடியுமாவெனப் பெரிய துபாஷைக் கேட்கப்போகிறேன் ‘ என எரிச்சலுடன் வந்து விழுந்த பலராம்பிள்ளையின் பதிலைக்கேட்டு, செட்டிக்கு வெலவெலத்துவிட்டது.

‘பல்ராம் பிள்ளை!.. மோசம்பண்ணி ஆட்களைக் கடத்துவதற்கு ஏற்பாடு செய்த பரமானந்தன் என்பவனையும், இவ்விடத்துக்குக் காவலாய் நின்ற அவனது ஆட்கள் இருவரையும் கோட்டைக் கச்சோத்திலே போட்டிருக்கிறோம். இவர்களோடு சம்பந்தப்பட்டிருந்த ‘சூதே ‘ எனப் பேர்கொண்ட பறங்கியனையும் பிடித்து வைத்திருக்கிறோம். அவனைக் குவர்னர் கபினேக்கு அழைத்துப் போயுள்ளார்கள். நீர் குவர்னர் கபினேவுக்கு மதியத்துக்கு மேலே சுமார் நான்கு மணிக்கு வருவீரென்றால் பிராது கொடுக்கலாம். இது குறித்த மேல் விபரங்களின் தேவையிருப்பதால், உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் எங்களுக்கு உதவியாயிருக்கும்.. ‘

‘இன்றே வரவேணுமா ? இப்போதைய சூழ்நிலையில் என் சரீரம் ஒத்தாசை செய்யுமாவெனத் தெரியாது ? ‘- பலராம் பிள்ளை.

‘பலராம் பிள்ளை, நீர் வீட்டுக்குச் சென்று மனைவி மக்களைப் பார்ப்பது அவசியம். கொஞ்சம் ஓய்வெடுக்கவும் வேணும். நீர் வேளையாய்ப் போய்ச்சேரும். உமக்காகக் குவர்னரிடம் நான் பேசுவேன் ‘- என்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் வார்த்தை பலராம்பிள்ளைக்கு இதமாக இருந்தது.

பிள்ளை இதுபோன்ற நேரங்களில், எவ்விதம் நடந்துகொள்ளவேணுமென்ற சூட்சுமம் அறிந்தவர். அவர் வார்த்தைக்களை, அளவாய் நிதானித்து உபயோகிப்பார். இராமர் பாணம்போல, வளைந்தோ நெளிந்தோ பயணித்து, குறி தப்பாது நினைப்பதைக் கொண்டுவந்து சேர்த்திடும். அவரது வெற்றி இம்மாதியான அணுகுமுறைகளினால் மாத்திரமே சித்தியாகியிருப்பதென்பது ஊரறிந்த ரகசியம்.

‘ ‘ரங்கப்பன், பலராம்பிள்ளை அவனது சாதிக்காரன் என்பதாற்றானே வக்காலத்து வாங்குகிறான்..எல்லாம் இந்தத் துரைத்தனத்தார் கொடுக்கிற இடம். என்ன வசியமருந்து வைத்திருப்பானோ, குவர்னர்மார்களைச் சுலபமாய் வளைத்துப் போடுகிறான். இது விபரம், துரைசானி அம்மாள் – மதாம் ழானிடம் பேசவேண்டும். அவளுக்குள்ள இந்து சனங்கள் மீதான துவேஷத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேணும். மதியத்திற்குமேலே அவளைப் பார்க்கப் போகும்போது, தட்டானிடம் அவளுக்காகச் செய்யச் சொல்லியிருந்த ஒரு ஜோடி தங்கத்தினாலான மாட்டலை அவசியம் கொண்டுபோகவேணும் ‘ – என்பதான சிந்தனையிலிருந்த கனகராயமுதலியின் கவனத்தை, இந்திய சிப்பாய் ஒருவன் கலைத்தான்.

‘ஐயா! மீட்கப்பட்ட சனங்களை என்ன செய்வது ? ‘

‘முடிந்தவர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பிப்போடு. முடியாதவர்களை சாவடி மணியக்காரனிடம் சேர்ப்பித்துப்போடு. நடந்த வயணங்களைக் கூறிச் சுத்துபட்டிலிருக்கிற பேட்டைகள், கிராமங்களில் தண்டோராப் போடச் சொல்லு. ‘

‘உத்தரவு ஐயா ‘ என்ற இந்திய சிப்பாய் வேகமாய் ஓடினான். சில நாழிகைகளில், அவ்விடத்திலிருந்து, ரங்கப் பிள்ளை, கனகராயமுதலி, சுங்கு செட்டி முதலானோர் பல்லக்குகளில் புறப்பட்டுச் சென்றார்கள்.

‘மிஸியே துபாஷ்..! எங்களுக்கு உத்தரவுக் கொடுக்கவேணும் வளவிற்குத் திரும்பிப் போஜனம் முடித்துவிட்டு, வாணியண்டை போகணும். இப்போது கிளம்பினாலே போய்ச்சேர எனக்கு ஒருமணி நேரத்திற்கு மேலே பிடிக்கும். வில்லியனூர் சாவடியண்டை கட்டியிருந்த எனது குதிரைக்கு என்னகதி ஆச்சுதோ, என்கின்ற கிலேசம் வேறு. சாவடிக் காவலனைக் கேட்கவேணும்.. உத்தரவுவாங்கிக்கிறேன் ‘- கடகடவென்று மாறன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் புறப்படத் தயாராகவிருந்தான்.

‘மாறன், உம் மனதுபோற் செய்யும். நான் மதியத்துக்கு மேலே பெர்னார் குளோதனைச் சந்தித்து, நடந்த வர்த்தமானங்களைத் தெரிவிக்கிறேன். வாணியைச் சந்தித்து விட்டு வந்து சேரு. சன்னாசியிடமும் நமக்குத் தெரிந்துகொள்ளவேண்டிய சங்கதிகளிருக்கும். இதுவயணம், விபரமாக உட்கார்ந்து பேசுவோம். சன்னாசியை அழைத்துக்கொண்டு நான் புறப்படுகிறேன். ‘ – துபாஷ் பலராம்பிள்ளை.

பலராம்பிள்ளையும், சன்னாசியும் தெற்கே புறப்பட்டுச் சென்றார்கள். மாறனும், நொண்டிக் கிராமணியும் மேற்குதிசைக்காய்ப் புறப்பட்டுச் சென்றார்கள்

பின்னேரம். மாலை நான்குமணி. பெர்னார் குளோதன் சுரத்துடன் படுத்திருந்தான். விளையாட்டைப்போல நான்கு கிழமைகளுக்குமேல் ஆகிவிட்டன. பிரெஞ்சுத் தீவீன் குவர்னர் லாபூர்தொனே கேட்டிருந்தவண்ணம் ஆட்களை அனுப்ப, புதுச்சேரி கும்பெனி நிருவாகம் கோன்செல் கூடி முடிவெடித்திருந்தார்கள். புதுச்சேரி குவர்னர் துய்ப்ளெக்ஸ், தம்மகள்களுக்கு அடுத்தமாதம் கல்யாணம் நடக்க இருப்பதாகவும், அதுபரியந்தம் இருந்துபோகவேணுமென்றும் கேட்டுக்கொண்டார். கிடைத்த கால அவகாசம், தெய்வானை குறித்த புதிர்களுக்கு விடைகாண உதவுமென்று பெர்னார்குளோதன் நம்பினான். துபாஷ் பலராம்பிள்ளையையும், மாறனும் இப்படி எந்தத் சேதியுமில்லாமல், காணாமற் போயிருந்ததை நினைக்க மனதிற் கலவரம் சேர்ந்துகொண்டது.

பணிப்பெண்ணிடம், பலராம்பிள்ளை வீட்டிலிருந்து, ஏதேனும் தகவல் வந்தால் உடனே தெரிவிக்கவேணும், என்று சொல்லியிருந்தான்.

இவனைச் சுற்றிலும் ஏதோ அசாதாரண காரியங்கள், சில கிழமைகளாக நடந்துவருகின்றன. இவற்றுக்கெல்லாம் தெய்வானையை தொடர்புப்படுத்திக் குழம்ப வேண்டியிருக்கிறது. மர்மமாய் ஒலிக்கின்ற குரல் சொல்வதுபோல, தெய்வானைதான் தேவயானியா. அப்படியானால் தேவயானிக்கும் தெய்வானைக்கும் உள்ள உறவென்ன. தெய்வானையிடமிருந்து எம்மக்கள்தான் என்னைப் பிரிக்கமுயல்கின்றார்கள் என்று நினைத்ததுபோக, வேறுசிலரும் இப்படி மந்திர தந்திர உபாயங்களால் என்னை அச்சுறுத்துவதன் காரணமென்ன. உண்மையில் தெய்வானை யார் ? துபாஷ் வந்தாரென்றால் விடை கிடைக்கும். இவனறிந்த வகையில், சில நேரங்களில் தென்றலாகவும், சில நேரங்களில் புயலாகவும் இருந்திருக்கின்றாள். புதுச்சேரிக்குப் புறப்படுவதற்கு முந்தைய தினம், அவளைச் சந்திக்கச் சென்றதும், ந்டந்த சம்பாஷனையும், கண்முன்னே விரிந்தது:

எலுமிச்சை நதியொட்டிய சிறு சிறு குன்றுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் நெருக்கமாக உள்ள இடம், மத்தியில் சுணை, குன்றுகளின் இடைவெளியிற் கிடந்த நிலத்தில் விசிறி வாழைகள் அடர்த்தியாய் மண்டிக்கிடக்கும். இங்கேதான் பெர்னார் குளோதனும், தெய்வானையும் தங்கள் மனத்திலுள்ள பிரியங்களைப் பங்கிட்டுக் கொள்ள வழக்கமாகச் சந்திக்கும் இடம்.

பெர்னார் குளோதன் குதிரையை, குன்றுகளுக்கிடையில் மறைவாக நிறுத்தி இறங்கிக்கொண்டான். அது பசும்புற்களை ஆர்வத்தோடு மேயத்தொடங்கியது. இவன் சுணையிருக்கின்ற திசைக்காய் நடந்து சென்றான். தெய்வானையும் நீலவேணியும் கலகலவென்று சிரித்துக்கொண்டிருந்தார்கள். பின்புறம் நின்று தொண்டையைச் செருமினான். பெண்களிருவரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள். தெய்வானை, பெர்னார் குளோதனைப் பார்க்க விருப்பமற்றவள் என்பதுபோலத் தலையைக் திருப்பிக் கொண்டாள்.

‘காதலித்தவன் கண்காணாதத் தேசத்துக்குப் புறப்பட இருக்கின்றான் என்கின்ற வருத்தமேதும் இருப்பதாகக் தெரியவில்லையே ? ‘ -பெர்னார்குளோதன்

‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? என்பதுபோல இருப்பதைப் பாருங்கள். சற்றுமுன்னால் போல்பிரபுவின் மகனை விரட்டி அடித்ததைப் பார்க்க நேர்ந்தால் நீங்களே கூட இவளிடம் தள்ளி நின்றே காதல் செய்யவேணுமாயிருக்கும். ‘ – நீலவேணி.

‘என்ன நட,ந்தது ? அந்தத் தடியன் உங்களிடம் மறுபடியும் வாலாட்டினானா ? ‘ -பெர்னார்குளோதன்

‘இந்த முறை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்கமாட்டான். எப்படியோ, வேட்டை நாய் மோப்பம் பிடித்து இவ்விடம் குதிரைபோட்டுக்கொண்டு வந்துவிட்டது. எங்களிடம் பல்லை இளித்துக்கொண்டு, பெர்னார் குளோதன் புதுச்சேரிப் பட்டணம் புறப்படுகின்றானாமே, அவன் வருகின்றவரை உங்களுக்குத் தீனிபோடுவது யார் ? பொன்னப்ப ஆசாரியா ? உங்களுக்கு ஆட்ஷேபனையேதுமில்லையென்றால், எங்கள் கொட்டடியில் இடமிருக்கிறது. நீங்கள் பார்த்திராத கட்டில்களெள்லாம் உண்டு, சுகமாகப் படுக்க வைப்பேன். இதுபோன்ற இடங்களுக்கு அவசியமிருக்காது, என்றல்லவோ உளறினான் ‘ – நீலவேணி.

‘பிறகு ? ‘

‘தெய்வானையின் கோபத்தை முகத்திலிருந்து சுலபமாக அறியமுடியாது. அவள் அமைதியாகப் போல்பிரபுவின் மகனிடம், ‘கொஞ்சம் குதிரையிலிருந்து இறங்க முடியுமா ? ‘, என்றாள். எனக்கென்னவோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கோமாளி உண்மையை விளங்கிக்கொள்ளாமல், குதிரையிலிருந்து கீழே குதித்து, ‘அப்போ சம்மதமா ‘ என்கிறான். இவள் அவனிடம் அமைதியாக, ‘அதற்கு முன் நீ ஆணா பெண்ணா என்பதை நாங்கள் அறியவேண்டும் ‘, என்கிறாள். அவனுக்குக் கொஞ்சம் புத்தியில் உறைத்திருக்கவேண்டும். அச்சத்தோடு, ‘என்ன சொல்லுகிறாய் ‘, என்கிறான். இவள், ‘பயப்படாதே இன்றைக்கு, நாங்கள் எதுவும் செய்வதாக இல்லை, ஆனால் அதற்கு முன் உம்முடைய பண்ணையில் குதிரைக்குக் கொடுக்கின்ற புல்லையும், கொள்ளையும் ஒரு மண்டலம் தின்றுவிட்டு வரவேணும். அதுவரை எங்களைத் திரும்பிப் பார்க்காமல் ஓடு என்றாள். அவன் பயந்துபோய் தனது குதிரையில் ஏறமுயற்சித்தான். இவளோ, ‘கூடாது. நாங்கள் நீ ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கும்வரை இதுபோன்ற ஆசைகளை மூட்டைக் கட்டிவைக்கவேணும். குதிரைபோகட்டும் விடு, என்றவள் குதிரையின் அடிவயிற்றில் காலால் எத்த, அது ஓட்டம் பிடித்தது. குதிரை ஓடி மறையட்டுமெனக் காத்திருந்து, பின்னர் அவனையும் ‘ஓடு ‘, என்றாள். அவனும் ஜன்னி கண்டவன் போல விழுந்து அடித்துக்கொண்டு ஓடிப்போனான். இவ்வளவையும் நடத்திவிட்டு, உங்கள் முன் பேசினால் முத்து உதிர்ந்துவிடுமென்பதுபோல நிற்கிறாள் பாருங்கள். சரி சரி.. உங்கள் இருவருக்கும் இடையில் நானெதற்கு ? புறப்படுகிறேன். ‘, என்றவள் வெட்கப்பட்டு நிற்கும் தெய்வானையிடம், ‘அடியே வெட்கத்தை கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள். அவர் புதுச்சேரியிலிருந்து திரும்புகின்ற அன்றைக்கும் தேவைப்படும். வரட்டுமா ?. என்றாள். மீண்டும் பெர்னார் குளோதனிடம், ‘துரை!..,என் தோழி அல்லும் பகலும் உங்களைத்தான் மனதிற் கொண்டிருக்கிருக்கிறாள், மறந்திடவேணாம். ‘ என்றவள் குரல் உடைந்து தழுதழுத்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, காதலர் இருவரையும் தனிமையில் இருக்கவிட்டு, வேகமாய்ச் சென்று மறைந்தாள்.

பெர்னார் குளோதன் மனம் நெகிழ்ந்து போனது. கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை கலகலவெனச் சிரித்திருந்த தெய்வானையின் கண்களில் நீர்கோர்த்திருக்கக் கண்டான்.

‘அன்பே, தெய்வானை. அருகில் வா. நாளை புதுச்சேரிக்குக் பயணப்படவிருப்பதை உன்னிடம் சொல்லிக் கொண்டுபோகவே வந்தேன். ‘ மெல்ல அவளை நெருங்கி, இரு கைகளாலும் தோளைத் தொட்டு, அவளது தலையை இழுத்து, இவனது மார்பில் வாங்கிகொண்டான். இச்செயலுக்கெனவே காத்திருந்தவள்போல இவன் மார்பில் விழுந்த மறுகணம், விம்மி விம்மி தொடர்ச்சியாக அழுகிறாள். பெர்னார் குளோதனும் அழுதான், ஆண்மகன் என்பதால் அளவோடு, ஊமையாக, அவைளை அதைரியப்படுத்தகூடாது என்று எண்ணியவனாய் தன் துயரத்தைக் மறைக்க முயற்சித்தான்..

‘பெண்ணே.. ஆகவேண்டிய காரியங்களை விரைவாக முடித்துக்கொண்டு ஓடோடி வருவேன். உன் அண்ணன் என்னிடம் ஒப்புவித்துள்ள கள்ளிப்பெட்டியில் ஒளிந்துள்ள ரகசியத்தை அறியவேணுமில்லையா ? அதுவரை நீ பொறுமை காக்கவேணும். ‘

‘பிரபு.. நான் உங்களிடம் ஏற்கனவே பலமுறைச் சொன்னதுதான். எனக்கு என் பிறப்பு எப்படிப்பட்டதென்பது முக்கியமல்ல. நம்மிருவர் குறித்த பிரக்ஞை முக்கியம். ஜென்மஜென்மாய் நாம் வாழ்ந்திருக்கிறோம், வாழப்போகிறோம். நமது காதல் இவ்வுலகத்திற்கானதல்ல, அண்டசராசரத்திற்கும் பொருந்தக்கூடியது. பிறவிகள் தோறும் தொடர்ந்துவருவது. நம்மை சுற்றியுள்ள கிரகங்கள் இடம் மாறலாம், யுகங்கள் மாறலாம், நீரும் நிலமும் இடம் பெயரலாம். காலங்களின் அளவீடு மாறலாம். நாம் மாறாதவர்கள், சிரஞ்சீவிகள். நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பிலும், உமது ஜீவனும், எனது ஜீவனும் ஒன்றையொன்று கவ்விக் கிடக்க வேண்டுமென்பது விதி. நேற்று நம்மிருவருக்கும் வெவ்வேறு சரீரம், வெவ்வேறு நாமங்கள். இன்றைக்கு உம்முடைய பெயர் பெர்னார் குளோதன், அடியேன் தெய்வானை. இப்பிறவியின் பயனைப் புரிந்தே இருக்கிறேன். எனினும் கடற்செலவென்றால் கவலை கொள்ளாமலிருக்க முடியுமா ? ‘

‘தெய்வானை. கவலை வேண்டாம்.. இனம், மதம் மொழி, தேசமென்று பிரிந்திருக்கும் நம்மை ஒன்றிணைத்த சக்தி எதுவென்று நினைக்கிறாய். நம் இருவருக்கும் உகந்த நீலகடலன்றோ. நீலக்கடலே நினத்தாற்கூட நம் சரீரத்தை அழிக்கலாம், ஆத்மாவை அழித்துவிடமுடியாது. நம்மிடமிருப்பது உடல்களின் இச்சையல்ல. உயிர்களின் இச்சை அதற்கு அழிவேது. நான் புதுச்சேரி சென்று விரைவிற் திரும்புவேன். மனத்தில் சஞ்சலமின்றி இரு. ‘

‘பிரபு, பிரெஞ்சு தேசத்திலிருந்த உம்மையும், இந்து தேசத்திலிருந்த என்னையும் இணைக்கக் காரணமாயிருந்த நீலக்கடல் ஒருபோதும் நம் பிரிவுக்குக் காரணமாக இருக்க முடியாது. தாங்கள் தீவிற்குத் திரும்பும்வரை, நீலக்கடலருகே காத்திருப்பேன். மேற்கு திசையில் முழங்கும் கடலோசை உங்களுக்கும் கேட்குமென்று நினைக்கிறேன். நீங்கள் திரும்பும்வரை என் இதயத்தில் இடைவிடாது முழங்கும், அவ்வோசையே என்னுயிரின் அமுது. நீலக்கடல் மூலம் நானனுப்பும் காதல்மடல்களுக்கு மறுகரையில் காத்திருந்து பதிலெழுதவேணும். செய்வீர்களா. ? ‘

‘மிஸியே.! ‘ பெர்னார் குளோதனின் நினைவுகளைப் பணிப்பெண் துண்டித்தாள்.

‘உய்…(ம்..) ‘

‘துபாஷ் வருகிறார் என்று நினைக்கிறேன். ‘

‘அப்படியா.!. மேலே அனுப்பிவை. ‘

மாலை, சூரியன் அஸ்தமிக்க ஒரு சாமம் இருக்கிறச்சே, கோட்டைக்குள் கூடலூர் வாசலுக்கருகிலிருந்த பெர்னார் குளோதன் ஜாகைக்கு துபாஷ் பலராம்பிள்ளை திரும்பியிருந்தார். கதவிற் பதித்திருந்த கைப்பிடி வளையத்தினை இருமுறை தட்டினார். வழக்கத்தினை விட அதிக நேரம் எடுத்தது. மீண்டும் இரண்டுமுறை தட்ட, பணிப்பெண் ஓடிவருவது கேட்டது. சிலநொடிகளில் கதவு திறக்கப்பட்டது. ஓடிவந்ததன் காரணமாக அவளுக்கு வியர்த்திருந்தது.

‘ஏன் என்ன நடக்கிறது ? எதற்காக இவ்வளவு நேரம் எடுத்துகொண்டாய் ? ‘

‘காலையில் வழக்கம்போல அவருக்குக் கஃபே கொண்டுபோனேன். பல முறை எழுப்பியும் மூச்சுப் பேச்சிலாமல் இருக்கவே, நான் ரொம்பவும் பயந்துதான் போனேன் உடல்வேறு அனலாகக் கொதிக்கிறது. என்ன செய்வது என யோசித்து வைத்தியருக்கு ஆளனுப்பினேன். ‘

‘வைத்தியர் வந்தாரா ?

‘வந்தார். நாடிபிடித்துபார்த்தார். அஞ்சும்படியாக ஏதுமில்லை. கபத்துடன் சுரமிருக்கின்றது என்றும் நன்னாரி வேர்ச் சூரணம் திரிகடியளவு கொடுத்துவரச் சுரம் மட்டுப்படும் என்றும் சொன்னார். ‘

‘இப்போது பரவாயில்லையா ? ‘

‘தேவலாம். சுரத்தின் உக்கிரம் தணிந்திருக்கிறது. ‘

‘எங்கே ? இன்னும் படுக்கையிற்றான் இருக்கிறாரா ‘

‘ஆமாம். ஆனால் விழித்திருக்கிறார். உங்களைப் பலமுறை கேட்டார். ஐயா வந்தவுடன் கெதியாய் மேலே வரச் சொல்லியிருந்தார் ‘

‘அப்படியா ? ‘ என்றவர் அப்பெண்ணை, ஒதுக்கிவிட்டு, விடுவிடுவெனப் படிகளிலேறி, பெர்னார் குளோதன் அறையில் நின்றார். அவன் இவரை எதிர்பார்த்துக்காத்திருந்ததுபோல தலையை உயர்த்தினான்: ‘வந்துவிட்டார்களா ? ‘

‘சில எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டியிருந்தது; ‘

‘உங்களுக்குமா ? ‘

‘கேள்வியின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை ‘

பெர்னார் குளியலறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், கேட்ட அமானுஷ்யமான குரலையும் ஆதியோடந்தாமாகக் கூறினான்.

‘குட்டிச் சாத்தான்களின் இம்மாதிரியான விளையாட்டுகளை தடுப்பதற்கான உபாயங்களை, மந்திரவாதிகளிடந்தான் கேழ்க்கவேணும். விசாரித்துப்பார்க்கிறேன். எங்களுக்கு நேர்ந்ததும், உங்களிடம் நடத்தப்பட்ட அசாதரண விளையாட்டுகளுக்கும் தெய்வானை மட்டுமே காரணமாயிருக்கவேணும். அது உண்மையென்றால் தெய்வானையின் விஷயத்தில் நாம் அவிழ்க்கவேண்டிய மர்ம முடிச்சுகள் .ஏராளமாக உள்ளன. அதுவரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேணும். வைத்தியர் இல்லம்வரை சென்றுவருவதாக, மாறன் புறப்பட்டு வில்லியனூர்வரை போயிருக்கிறான். அவன் வரட்டுமென்று யோசிப்போம். கூடிய சீக்கிரம் எல்லாம் சுபமாய் முடியும்.. ‘

‘தெலுங்கில் எழுதியிருந்த ஓலை நறுக்கு என்ன ஆயிற்று ? ஏதேனும் மேலதிகத் தகவல்கள் கிடைத்ததா ? ‘

‘அதற்காகவென்று முருங்கப்பாக்கம் போனவன் ஆட்கடத்தற்காரர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். என்னைக் கொண்டுபோய்ச் சண்டாளர்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த வீட்டில்தான் மாறனும், நமக்காக வேலாயுதமுதலியாரை வேவுபார்க்க அமர்த்தப்பட்ட சன்னாசியும் அடைக்கப்பட்டுக் கிடந்தார்கள். கெட்ட நேரத்திலும் ஓரளவிற்கு நல்ல நேரம் போலிருக்கிறது. கும்பெனி அரசாங்கம் அந்தக்கூட்டத்தைப் பிடிச்சுப்போட்டுது. ‘

‘ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நடந்தது ? விபரமாய்ச் சொல்லும் ‘.

‘கடந்த சிலவருடங்களாகவே ஆடுகோழி களவுபோவதுபோல மனிதர்களும் களவுபோனார்கள். தங்கள் சொந்தபந்தத்தைத் தொலைத்துவிட்டு, கஷ்ட சீவனஞ்செய்யும் மக்கள் கடவுளை நிந்தித்துக்கொண்டு பொழுது சாய்ந்தால் அழுவதும், விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்றுப் பாட்டுக்கு நாயாய் ஓடிப் பிழைப்பதுமாக இருந்தவர்கள் வயிற்றில் பால் வார்த்ததுபோல அந்த சேதிவந்தது. வெகுநாட்களாய் ஆட்களைக் கடத்தும் கூட்டத்தை, நேற்று கும்பெனி கூண்டோடு பிடித்துப்போட்டது. இந்தக்கூட்டத்தைச் சேர்ந்த பரமானந்தன் என்பவனுக்கு கை கால்களில், விலங்கிட்டு கோட்டையிலே போட்டு விசாரிக்க, சண்டாளன் எல்லாவற்றையும் ஆதியோடந்தமாகச் சொல்லிப் போட்டான். அவன் வார்த்தையின்படி சூதே என்கின்ற பறங்கியன் இவன் மூலமாக ஆட்களை நியமித்து, அவர்களைப் புதுச்சேரி தெருக்களில் சுற்றிவரச்செய்து, கை விலைக்குச் சிலரையும், மற்றவர்களை மோசம் பண்ணியும் அழைத்துபோயிருக்கிறார்கள். மோசம் பண்ணுவதென்றால் சிலருக்கு சுண்ணாம்பிலே மருந்து கலந்துகொடுத்தும், சிலருக்கு மைச்சிமிழ் வைத்தும் கூட்டிப்போவது. இப்படிக் கூட்டிச் சென்றவர்களை ஆங்காங்கே கிராமங்களில் இருக்கின்ற இவர்களுடைய வீடுகளில் வைத்திருப்பார்கள்.பிறகு அவர்கள் ஒர் இராத்திரியிலே படகின் பேரிலே ஏற்றி அரியாங்குப்பத்திலிருக்கிற வளவு ஒன்றில் இறக்கிவிடுவார்கள். அவ்விடத்திலே மொட்டை அடித்துக் கறுப்புப் புடவைகளைக் கொடுத்து, ஒரு காலிலே விலங்கு வளையம்போட்டு, சூதன் வீட்டிலே அடைத்துவைப்பார்கள். கப்பல் போகச்சே கப்பலில் ஏற்றி அனுப்பிவிடுவார்களாம் ‘

‘பிடிபட்டகைதிகள் என்னவானார்கள் ? ‘

‘உங்களுக்குச் சூதே என்பவன் பிரான்சுவாரெமியின் ஆளென்று தெரியும். என்ன நடந்ததோ ? ரெமியின்பேரில் எந்தக் குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. எதிர்பார்த்ததுபோலவே, சூதேவை மாத்திரம், உத்தியோகத்தை வாங்கிப்போட்டு, அவனுக்கு எஜமானனாயிருக்கிற குவர்னர் துரை அவர்களை அழைத்து, அவனுடைய கணக்குவழக்கெல்லாம் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதற்கு வேறொருத்தனை நியமித்துள்ளார்களாம். பரமானந்தனை மாத்திரம் தண்டித்திருக்கிறார்கள். தேவராசன் தப்பித்துவிட்டானென்று பேச்சு. எய்தவர்களைவிட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

‘ஓலை நறுக்கு விஷயம் என்ன ஆயிற்று ? அதைக் கவந்த்திற் கொள்வீர் ? ‘

‘மறக்கவில்ல. முருங்கப்பாக்கம் வீரா நாய்க்கன் என்பவன், நாளைக்காலை என் வீட்டிற்கு வருவதற்கு சம்மதித்திருக்கிறான்.ரவன் வந்து போனபின், ஓலைநறுக்கின் முழுவிபரத்துடன் வருகிறேன்.. இதற்குள் மாறனும் வில்லியனூரிலிருந்து வந்துவிடுவான். அதுவரை நீங்கள் மனக்கிலேசமின்றி நன்கு ஓய்வெடுக்கலாம். ‘

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts