நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


L ‘homme n ‘a point de port, le temps n ‘a point de rive:

Il coule, et nous passons

– Alphonse de Lamartine

நேற்றுராத்திரி போல்பிரபுவின் பண்ணையிலிருந்து வந்திருந்த ஆள் அருணாசலத்தம்பிரானை, காலங்காத்தாலே பண்ணைக்கு வரவேண்டுமென்று சேதி தெரிவித்திருந்தான். தம்பிரானுக்கு, போல்அஞ்ஞெலிடம் உள்ள நெருக்கத்தினை தீவிலுள்ள மற்றவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருவரும் தங்கள் முறையற்ற நடவடிக்கைகளுக்காகக் கள்ளத்தனமாகக் காட்டில் சந்திக்கும் வழக்கமேயன்றி, ஒருவர் மற்றவர் ஜாகைக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். மோரீஸ் குவர்னர் லாபூர்தொனே, போல்அஞ்ஞெலுக்கு உறவினன் என்பதும், குவர்னரின் சொந்த ஊரான பிரான்சு நாட்டின் சென்மாலோப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதும், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனியின் சட்டத்திட்டங்களிலிருந்துக் தன்னைக் காப்பாற்றிவிடாது என்பதனைப் போல்பிரபு அறிந்தே இருந்தான். உண்மை தெரியவரின் குவர்னர் உட்பட எல்லோருக்குமே பாதகமாக முடியும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

காலை ஆகாரமாக நீராகாரம் எடுத்துக்கொண்டு, கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் அருணாசலத் தம்பிரான் பாம்ப்ள்மூஸ் புறப்பட்டிருந்தார். அவர் நடந்துசெல்ல, அவரது நடைக்கு ஈடுசெய்ய முடியாமல் கறுப்பன் அனாக்கோவும், காத்தமுத்துவும் நடப்பதும், ஓடுவதுமாக இருக்கிறார்கள். முடிந்த இடங்களில் தம்பிரானுக்கு வலம் இடமாகவும், முடியாதவிடங்களில் அவருக்குப் பின்னாலேயும் போய்க்கொண்டிருந்தார்கள். தீவீல் பாம்ப்ள்மூஸுக்கு வண்டிகள் செல்வதற்காக சாலையொன்று வடிவமைக்கபட்டு, உபயோகத்திலிருக்கிறது. தம்பிரான் அந்தச் சாலையினை எச்சரிக்கையாகத் தவிர்த்துவிட்டு, தீவிலிருக்கும் பூர்வீகக்குடிகளின் உபயோகத்திலிருந்த காட்டுவழியைத் தேர்வு செய்திருந்தார். சூரியனுதித்த சில நாழிகைகளுக்குப் பிறகும் இவர்கள் தேர்ந்தெடுத்த வழியானது இருள்மண்டிக் கிடக்கின்றது. மேற்கு திசைக்காய், இந்து மகாசமுத்திரத்தின் இரைச்சல். உடலிற் போர்த்தியிருந்த துண்டையும் மீறி, நடுங்க வைக்கும் குளிர். காடுவாழ் உயிரினங்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன என்பதற்கு அடையாளமாக இவர்களோடு பயணிக்கின்ற நானாவித ஓசைகள். செடிகொடிகளை ஒதுக்கிக்கொண்டும், சிலவேளைகளில் தாழ்ந்த மரங்களின் கிளைகளில் இடித்துக்கொண்டும் முன்னேற வேண்டியிருக்கின்றது. எலுமிச்சைகள் நதித் (River Citrons) திசைக்காய் நடந்து கொண்டிருந்தார்கள்.

காத்தமுத்துவை அழைத்துப்போவது, புள்ளைப்பூச்சியை மடியிற் மடியில் கட்டிக்கொண்டு போவதுபோல. மிஸியே தெலாகுருவாவின் பண்ணையிலேயிருந்து சில கிழமைகளுக்கு முன்னாலே தப்பியிருக்கிறான். பொதுவாகப் பண்ணைகளிற் தப்புகின்ற கறுப்பின மனிதர்கள், மற்ற அடிமைகளை வெட்டிப்போட்டும், பண்ணையிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை அழும்பு செய்தும் ஓடிப்போவார்கள். அவ்வாறான காரியமேதும் காத்தமுத்து செய்தவனில்லை, எனினும், அவனுக்கு மரூன் முத்திரை குத்தப்பட்டிருப்பதாகக் கும்பெனி தண்டோரா மூலம் அறிவிக்கலாச்சுது. பிடிபட்டால் அவன் மாத்திரமின்றி அவனுக்கு உதவியவர்களையும் கைகள் கால்களைப் பிணைத்து இருண்ட கிட்டங்கியில் போடுமாறு உத்தரவாகியிருக்கின்றது. முதன் முதாலாகக் குற்றம் செய்தவன் என்கிற வகையில் காத்தமுத்துக்கு உயிர்ச் சேதமெதுவும் ஏற்படப்போவதில்லை. பிடிபட்டானெனில் இருகாதுகளையும் அறுத்துப்போட்டுக் கிட்டங்கியில் போடுவார்கள். மிஸியே தெலக்குருவா பண்ணையில் அவனது அடிமை ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்படும். காத்தமுத்துக்குத் துணைபோனவர்கள் என்கின்றவகையில் தம்பிரானையும் கிட்டங்கியில் போட்டுவிடுவார்கள். சூரியஒளி புகாத கிட்டங்கிக் கைதிகளைக் குறித்து தீவில் உலவும் கதைகளுக்குக் குறைவில்லை. அதற்குப் பிறகு சீவன், சிறையிலேயேகூடப் போய்ச் சேரலாம். போல்அஞ்ஞெல் சுலபமாய்த் தப்பித்துவிடுவான். இதுவரை பறங்கியர்களைக் கைது செய்ததாகவோ தண்டனை வழங்கியதாகவோ தீவில் எவரும் பேசக்கேட்டதில்லை. இந்தமாதிரியான நேரத்திலே, காத்தமுத்துவை உடன் அழைத்துப் போவது, வேலியில் கிடக்கும் ஓணானைக் கோவணத்தில் முடிந்து செல்கின்ற கதையன்றி வேறென்ன ?.. ஆகக் காட்டில் ஆபத்து, விலங்குகளால் மாத்திரமின்றி மனிதர்களாலும் நேர்வதற்கு சாத்தியங்கள் இருந்தன. குளிர்ந்த காற்றிற்கு நடுங்காத உடல், இந்த எண்ணம் மனதிலுதித்த மாத்திரத்தில் நடுங்குகிறது.

கறுப்பன் அனாக்கோ பலவாறாக யோசித்துக்கொண்டுவந்தான். முன்னே நடந்துகொண்டிருக்கிற தம்பிரானைப் பாம்பென்றும் கொள்ள முடியவில்லை, பழுதையென்றும் நெருங்கமுடியவில்லை. அவனுக்குப் போல் அஞ்ஞெலிடம், தனது தகப்பனுக்காக நேர் செய்து கொள்ளவேண்டிய கணக்கொன்று உள்ளது. அந்தக் கணக்கின் பொருட்டு, போல் அஞ்ஞெலை மாத்திரம் கொன்றால் போதாது. அவனது குடும்பம் முச்சூடையும் பழிதீர்த்துக்கொள்ளவேணும். அவர்களின் மார்பைக்கிழித்து உள்ளிருப்பதைப் புசிக்கவேணும், இரத்தம் குடிக்கவேணும். வெறி, வெறி, பொறுமையாகக் காத்திருக்கிறான். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் தம்பிரான் மூலம் நிறைவேறப்போகிறது. அதுவரை பொறுக்கவேண்டும். பதட்டங்கூடாது. பதினோரு வருஷங்களாக, இவனது தகப்பனின் சினேகிதன் சொன்ன வர்த்தமானத்தை அடைகாத்து வைத்திருக்கிறான். போல் அஞ்ஞெலை நெருங்குவதற்குச் சமயம் பார்த்திருந்தான். ஒரு லஸ்கர்மூலம் தம்பிரானுக்கும், போல் அஞ்ஞெலுக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்து முன்னவரிடம் தந்திரமாக ஒட்டிக்கொண்டான்.

தம்பிரான் விந்தையான மனிதராக இருக்கிறார். ஒருபுறம் மலபாரிகளிடத்தில் மரியாதைக்குரியவராக இருந்துகொண்டு அம்மக்களின் பூசை புனஸ்காரங்களை முன்னின்று நடத்துகிறார். மற்றொருபுறம் அயோக்கியன் போல்அஞ்ஞெலின் கூட்டாளியாக இருந்துகொண்டு, புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறார். கடந்த சிலமாதங்களாக இவரது நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பதால், அதிசயமான ஆளென்று சத்தியம்பண்ண முடியும். விரைவாக நடப்பதும், பாதையில் ஓடுவதும் ஆச்சரியமான விஷயம். அவ்வாறான சமயங்களில் சொப்பனம் கண்ட மனிதர்களைப்போலப் பிதற்றுகிறார். பிதற்றலில் தேவயானி என்கின்ற சொல்லை அதிகமாக உதிர்க்கிறார். மாரணம், தம்பனம், வூடு போன்ற கறுப்பினமக்களின் அச்சமூட்டும் கலைகள் தெரிந்திருக்குமோவென சந்தேகம் இவனுக்கு உண்டு. சில நாட்களில் இரவு வெகுநேரம் தனிமையில் உட்கார்ந்து பூசைகள் செய்வதைப் பார்த்திருக்கிறான். பூசை செய்யும் தம்பிரானிடம் நரம்புகளும் எலும்புகளும் புடைத்து நிற்கின்றன. உடல் நீலம் பாரிக்கின்றது. மார்பின் ஏற்ற இறக்கமும், ஒட்டிய விலாவும், இறுகிய முகமும், மின்னுகின்ற கண்களும் பசியோடு அலையும் காட்டுவிலங்கினை நினைப்பூட்டுகிறது. பூசைமுடித்துப் பிரசாதமென்று, மார்பில் அடித்துததும் மாயமாக வரும், விபூதியையும் கற்கண்டினையும் எடுத்துக் கொடுக்கிறார். விழித்தெழும்போது, இதுகளைக்குறித்த பிரக்ஞையற்ற மனிதராக, வழக்கம்போல சாதுவான தம்பிரானாக மாறிப்போகிறார்.

காத்தமுத்து மனதில் பெரிதாக எண்ணமேதுமில்லை. அவன் என்றைக்கு தீவுக்கு கப்பலில் வந்து இறங்கினானோ, அன்றைக்கே தனது சீவனைத் தொலைத்திருந்தான். புதிதாகத் தொலைப்பதற்கு ஒன்றுமில்லை. கப்பலில் வந்ததும், தீவில் இறக்கப் பட்டதும், ஒரு வண்டியில் அடைத்து ராவோடு ராவாக ஒரு பண்ணையில் இவனைக் கொண்டுபோய் விட்டதும், அங்கே புதுச்சேரியில் இவனது கிராமமான உடையார்பண்ணை உழவுமாடுகளைக் காட்டிலும் கேவலமாய்க் கண்ட வாழ்க்கையும், அங்கிருந்து தப்பி ஓடியதும் இவன் தீர்மானம் பண்ணியதல்ல. கொஞ்சகாலமாய் சுதந்திரமாகச் சுவாசிக்கிறான், பசிவந்தால் சாப்பிடுகிறான், அசதியாகவிருந்தால் நித்திரை கொள்கிறான். இந்தச் சுதந்திரத்தினை புதுச்சேயில் உடையார் பண்ணையிற் கண்டதில்லை. தம்பிரான் தயவால் எல்லாம் சுபம்.

தம்பிரான், கறுப்பன் அனாக்கோ, காத்தமுத்து மூவருமாக பாம்ப்ளுமூஸ் போய்ச் சேர்ந்தபோது காலமே மணி எட்டாகியிருந்தது. மிஸியே போல்அஞ்ஞெல், அவரது பெண்ஜாதி மதாம்அஞ்ஞெல், மகன் பிரான்ஸிஸ்அஞ்ஞெல், மகள் மத்மசல் பிரிஜித்அஞ்ஞெல், அவர்கள் செல்லப்பிராணி நாய் சகிதம், காலை உணவை முடிக்கின்ற நேரத்திலே, பண்ணைக் காவலன் ஒருவன் அஞ்ஞெல் குடும்பத்தினர்முன் தம்பிரானையும் மற்றவர்களையும் கொண்டுபோய் நிறுத்தினான்.

‘வாருங்கோ தம்பிபிரான்! சொன்னபடி வந்துள்ளீர்கள், சந்தோஷம். ‘ என்ற போல்பிரபு காவலனிடம், ‘இவர்களை அழைத்துக் கொண்டு கபினேக்குப் போங்கள், சில நாழிகைகளில் வருகிறேன். ‘ -என்பதாக உத்தரவு பிறப்பித்தான்.

அழைத்துவந்த காவலன் மூவரையும் கபினேக்கு அழைத்துச் சென்றான். தம்பிரானுக்கு மாத்திரம் ஒரு நாற்காலி போடப்பட்டது. மற்ற இருவரும் நின்றுகொண்டார்கள்.

சிறிது நேரத்தில், போல் அஞ்ஞெல் அங்கே வந்து சேர்ந்தான். வந்தவனுக்கு, தம்பிரான் இரண்டாவது முறையாக எழுந்து கைக்கூப்பினார். போல்பிரபு உட்காருமாறு கையசைத்தான். சிறிது நேரம் அங்கே மெளனம் நிலவியது. தம்பிரான் தொண்டையைச் செருமிக்கொண்டு சம்பாஷனையை ஆரம்பித்தார்.

‘துரை என்னை அவசரமாய் வரசொன்னதின் முகாந்திரமென்ன ? அவ்விடத்தில் ஏதாவது துர்ப்பாக்கியமான சம்பவங்கள் நடந்திருக்குமோ ? ‘

‘மிஸியே தம்பிரான்! அப்படித்தான் சொல்லவேணும். மொக்காவுக்கு வந்துகொண்டிருந்த நெப்த்யூன் (Neptune)கப்பலை, சில அவசர தேவைகள் நிமித்தம், கடலிலேயே தடுத்து நிறுத்தி, நமக்காக கடத்திவரப்பட்ட ஆட்களை மீட்குமாறு எமது ஆட்களிடம் சொல்லியிருந்தேன். அவர்களும் ஐந்தாறு கப்பல்களுடனே அதனைச் சுற்றியிருக்கின்றார்கள். கப்பலில் கப்பித்தேன் மிஸியே தெ பொக்காழ்(M. de Bocage). இவனோடு கப்பலில் இருந்த, மிசியேக்கள் கூர்பெசார்த்ரூ (M.Courbezartre), தெஃபிரெஸ்ன் (M. Desfresnes) ஆகியோர் நமது அனுகூல சத்ருக்கள் என்பதாலே, எண்ணப்படி யாவும் நடக்குமென்று திட்டம் செய்திருந்தேன். ஆனால் நடந்தது வேறுவிதம். கப்பலில் வந்தவர்கள், பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் நமது ஆட்கள் மீது பிரயோகம் செய்திருக்கிறார்கள். அதிஷ்டவசமாக இவர்கள் அதனைச் சமாளித்திருக்கிறார்கள். கப்பித்தேன் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கிறான். அவனை வெட்டி இருக்கிறார்கள். நடந்ததைக் கண்ட மிஸியே கூர்பெஸாத்ரு தண்ணியிலே குதிக்க முயற்சிபண்ணியிருக்கிறான். நமது ஆட்களில் சிலர் விபரந்தெரியாமல், அவனை விட்டால் ஆபத்தென்று, கண்டந்துண்டமாய் வெட்டிப்போட்டார்கள். கப்பலிலிருந்த வேறு சில மத்தலோக்களையும் நமது ஆட்கள் காயபடுத்திப்போட்டு, கப்பலில் கடத்தப்பட்ட ஆட்களை மீட்கறச்சே, நமது போறாதகாலம் அவ்வழியாக வந்த போர்ச்சுகீசியர்களின் கண்ணில் படலாச்சுது. அவர்கள் அதிகப்படியானப் பீரங்கிகளுடன் நமது ஆட்கள்மீது தாக்குதல் நடந்த, இவர்கள் தப்பித்து ஓடவேண்டியதாகிவிட்டது. அதற்கு பிறகு நெப்த்யூன்* கப்பலை, போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுபோயுள்ளதாகச் சொல்கின்றார்கள். ‘

‘ஈஸ்வரா.. இதென்ன இப்படி ஆச்சுது. நெப்த்யூன் கப்பலில் கடத்தப்பட்டிருந்த, மனிதர்கள் என்னவானார்கள் ‘

‘ஆவது என்ன ? அவர்கள் தற்சமயம் போர்ச்சுக்கீசியர்வசம் உள்ளார்கள். பிரெஞ்சு தேசத்து கப்பல் என்று தெரியவந்தவுடன் புதுச்சேரி கும்பெனியிடம் அவர்கள் முறையாக ஒப்புவிக்கக் கடிதம் எழுதக்கூடும். சரக்குகளுக்குச் சேதமில்லை என்பதால், கும்பெனிக்கு நடந்து முடிந்த விவகாரத்தால் பெரிதாக நட்டமேதுமில்லை. ஆனால் கப்பலில் இருக்கும் கடத்தல் மனிதர்கள் விவகாரத்தை கும்பெனி அறியவந்தால் நமக்கு ஆபத்து. ‘

‘ஏன் ? ‘

‘இப்போது நெப்த்யூன் கப்பலில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டிருக்கும் மனிதர்கள் மாத்திரம் நமக்கு நட்டமல்ல. இனி புதுச்சேரியிலிருந்து சிலவருடங்களுக்கு இம்மாதிரியான விவகாரங்களை நம்மால் செய்யமுடியாது என்பதும் ஒரு வகையில் நட்டம்ந்தானே ?. ‘

‘…. ‘

‘தவிர, இந்த ஆட்கடத்தல் ரகசியத்தைப் புதுச்சேரிக் கும்பெனி நிருவாகம் அறியும் பட்ஷத்தில், எல்லோருக்குமே ஆபத்து. இனி இந்த விவகாரத்தினை புதுச்சேரியிலிருக்கும் என் உறவினன் பிரான்சுவாரெமி எப்படிக் கையாளுகிறான் என்பதைப் பொறுத்தே எனது எதிர்காலம் இருக்கிறது. குவர்னருக்கும் இதுவிபரமாகக் கடிதாசி அனுப்பியிருக்கிறேன். ‘

‘பிரபு.. உம்மனதிலுள்ள வியாகூலங்கள் தெரியாமல் இல்லை. இதுபோன்ற காலத்திற்றான், மனத்தைத் திடமுடன் வைத்திருக்கவேண்டும். தலைக்குமேலே வெள்ளம் வந்திருக்கிறது. அது சாண் போனாலென்ன ? முழம் போனாலென்ன ? முடிந்தமட்டும் மூச்சைப் பிடித்து சீவிதமாயிருப்போம். தேவரீருக்கு கர்த்தர் அனுக்கிரகம் எப்போதும் உண்டு என்பது அறிந்ததுதானே. ‘

‘என்னவோ நீர்ச் சுலபமாய் சமாதானம் சொல்லுகிறீர். லூர்து மாதாவிடம் திரு யாத்திரை வருகிறேன் என்பதாய் நேர்ந்துகொண்டேன். இந்த இக்கட்டிலிருந்து மாதாதான் என்னைக் காபந்துசெய்யவேணும். மனிதர்கள் பிரயாசையால் ஏதும் நடப்பதில்லை. ‘

‘பிரபு..நன்றாய்ச் சொன்னீர்கள். தைரியமாக இருவுங்கள். வேறு சேதிகள் கிடைக்குமென்றால் தவறாமல் தெரிவியுங்கள். ‘

‘எங்கே புறப்பட்டு விட்டார்கள். மதியம் போஜனம் பண்ணிவிட்டுப் போகலாம். எங்கள் வில்லாவில் மலபாரி ஒருத்தி இருக்கிறாள். உங்கள் ஊர், உணவினைச் சுவையாகச் சமைக்கிறாள். எம்மனைவி மக்கள் அவளுடைய கைப்பக்குவத்திற்கு அடிமை என்றுதான் சொல்லவேணும். பிரெஞ்சு உணவுப்பதார்த்தங்களில், உங்கள் ஊர் மசாலாக்களைக் கலந்து அவள் சமைப்பதை சாப்பிடுவதற்கென்றே, அடிக்கடி விருந்தினர்கள் வந்து விடுகின்றார்கள். ‘

‘பிரபு.. தங்கள் உபசாரத்திற்கு மிக்க வந்தனம். ஆனால் விருந்து சாப்பிடுவதற்கு இது நேரமல்லவே ? ‘

‘தம்பிரான். நாங்கள் துன்பம் நேருங்கால் சோர்ந்துபோகும் மனிதர்களல்ல. அதை அப்போதே மறந்துபோனேன். ‘

‘ம் .. எங்கள் ஊர் பூங்குன்றனார்:

….

வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

இன்னாது என்றலும் இலமே,

….

என்று பாடியிருக்கிறார். ‘வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்ததும் இல்லை. வெறுப்பால், வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. ‘ என்பதாகப் பொருள். ‘

‘கேட்க நன்றாக இருக்கிறது. இன்னும் இரண்டுமணிநேரத்திலே மதிய போஜனம் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சைவம்தானே ? ‘

‘ஆமாம்..! ‘

போல்அஞ்ஞெல் தனது மேசையிலிருந்த சிறிய மணியை ஆட்ட, கறுப்பன் ஒறுவன் சல்யூட் அடித்துவிட்டு நின்றான்.

‘மிஸியே. ‘.

‘ஃபேத் ஆந்த்ரே மதாம் கமலா (திருமதி கமலாவை அனுப்பிவை) ‘

‘உய் மிஸியே.. மீண்டும் சல்யூட் அடித்துவிட்டு அகன்றான்.

சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்குவந்து நின்றாள்.

‘மதாம் கமலா, தம்பிரானுக்கு, அரிசிச் சோறு, வெந்தயக்குழம்பு, மிளகுதண்ணிர், பிரண்டைத் துகையல் தயார் செய்துவிடு. எல்லோரும் சாப்பிடலாம். என்மகன் பிரான்சிஸ்சுக்கு மட்டும் தனியாகச் சமைத்துவிடு. உங்கள் மசாலாக்களைக் கண்டால் காததூரம் ஓடுகிறான். மகள் பிரிஜித் அப்படியல்ல. காரத்தை எங்களுக்கு குறைத்துப் போட மறந்திடாதே ?என்ன புரிந்ததா ? ‘

அப்பெண்மணி தலையாட்டினாள். அமைதியாக அவ்விடம்விட்டு நீங்கிச் சென்றாள்.

‘என்ன பேசமாட்டாளா ?, ஊமையா ? ‘

‘அவள் நமது தீவுக்கு தனது இளவயது மகளோடு வந்திருக்கிறாள். கிடங்கில் தாயும் மகளும் பிரிந்திருக்கிறார்கள். ஒப்பந்தக் கூலிகளை அழைத்துப்போகவந்தவர்கள் அன்றைய ராத்திரி இவளை மாத்திரம் பண்ணைக்கு அழைத்துவந்திருக்கிறார்கள். வழியில் தன் மகளைக் காணாது இவள் போட்டக்கூச்சலை, வண்டியோட்டிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இங்கே வந்த புதிதில், கொஞ்ச காலம் பித்துப்பிடித்தாற்போல இருந்தாள். பிறகு ஏதோ தீர்மானம் செய்ததுபோல பேசாமல் இருக்கிறாள். இடுகின்ற வேலைகளை மறுப்பின்றி ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறாள். எங்களுக்கு வேறென்ன வேண்டும் ? அடிமைகள் வாய் திறந்தாற்றான் ஆபத்து. ‘

போல்பிரபு, ஏதோ பகடியைக் கூறியதுபோல கடகடவென்று சிரித்தான். கேட்டுக்கொண்டிருந்த காத்தமுத்து தலை நிமிர்ந்து அந்தப் பெண்மணியைப் பார்த்தான். இவனுடன் புதுச்சேரியிலிருந்து தீவுவரைப் பயணப்பட்டப் பெண்மணி. ஆச்சரியமாகவிருந்தது, அவளை தான் மறுபடியும் சந்திக்க நேருமென நினைத்ததில்லை.

மதியத்துக்குமேலே தம்பிரான், போல்பிரபுவிடம் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டார்.

‘தம்பிரான் அந்த மரூனை இங்கேயே விட்டுவிட்டுப் போங்கள். நான் பார்த்துக்கொள்கிரேன் இங்கே வில்லாவில் போதிய ஆட்கள் இல்லாமல் தவித்துக்கொண்ருக்கிறோம். ‘

காத்தமுத்துக்கு அதைக்கேட்க இரண்டுவிதத்தில் சந்தோஷமாக இருந்தது. முதலாவதாக தனது தேகத்திற்குஞ் சரி, ஆயுளுக்குஞ் சரி இப்போதைக்குச் சேதமில்லை என்பது. தான் மரூன் என்கின்ற படியாலே போல்பிரபு, தன்னுடைய வில்லாவுக்குள்ளேயே கட்டாயமாக இவனை வைத்திருக்கவேணும். போல் பிரவுடைய வில்லாவில் பணிபுரிகின்ற பெண்மணியை இரண்டாவது முறையாகச் சந்திக்கவிருப்பது அடுத்த சந்தோஷம். விதி வேறாகத் தீர்மானித்திருக்கிறது என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை.

பின்னேரம் நான்குமணி அளவில் பாம்ள்மூஸ் – போர் லூயி சாலையில் தம்பிரானும், கறுப்பன் அனாக்கோவும், மொக்காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சாலையில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை. எப்போதாவது ஒரு சில குதிரைகளும், கட்டைவண்டிகளும் எதிரே வந்தன. ஒரு சில கறுப்பர்கள் தங்கள் எசமானர்களை தோளிற் சுமந்துகொண்டு ஓடுகிறார்கள். என்ன செய்வது ? எல்லா இடங்களையுமா சாலைகள் இணைக்கின்றன. காட்டு வழிக்கும், சிதறிக்கிடக்கும் மலைகளில் ஏறி இறங்கவும் மனிதவாகனங்களைத்தான் சில பிரபுக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.காத்தமுத்துவை, போல் பிரபு வில்லாவிலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தது, தம்பிரானுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவனால் உடனடி ஆபத்துகள் ஏதுமில்லை.

போல் வில்லாவில் கண்ட பெண்மணியை இதற்குமுன் எங்கோ பார்த்ததாக ஞாபகம். தம்பிரானும், அனோக்காவும் எலுமிச்சை நதியை கடந்து போர்லூயிக்கு இரண்டு கல் இருக்கும்போது, அங்கிருந்த மலை அடிவாரத்தில் சுனைக்கருகில், பாறையின்மீது ஆணும் பெண்ணுமாக இருவர். பார்த்தமாத்திரத்தில் அவர்கள் இளம் வயதுத் தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. ஆச்சரியமாக இருந்தது. தீவில் பூர்விகக் குடிகளின் இளம்பிராயத்தினரை, ஆணும் பெண்ணுமாகச் சேர்த்து கண்டிருக்கிறார். தமிழர்களை இப்படியானச் சூழ் நிலையில் சந்தித்ததில்லை. கைலாசமும், தெய்வானையும் அண்ணன் தங்கைகள் என்ற வகையில் ஆட்ஷேபம் எதுவும் சொல்ல முடியாது. கைலாசம், கிறேயோல் இனத்துப்பெண் சில்வியுடன் சேர்ந்து சுற்றுவதினாலும் தமிழருக்கு இழுக்கேதும் வந்துவிடாதென நினைத்தார். நெருங்கிச் சென்று பார்த்துவிடுவதெனத் தீர்மானித்தார். காதலர்கள் இருவரும் அமர்ந்திருந்த பாறையின் பின்புறம் நின்றார்.

‘யாரங்கே ? ‘ தம்பிரான் குரல் கேட்டு, இருவரும், அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்கள்.

‘நீ பொன்னப்பஆசாரிதானே. உனக்குத் துறை முகத்தில்தானே வேலை. இங்கே என்ன செய்கிறாய் ? அட.. இந்தப் பெண் நீலவேணி அல்லவோ. நமது சீனுவாச நாயக்கரின் வளர்ப்புமகள் ஆயிற்றே ? ‘

காதலர் இருவரும், தம்பிரான்மேலுள்ள மரியாதை நிமித்தம் அமைதியாக இருந்தார்கள்.

‘இப்படியெல்லாம் நடப்பது முறையா ? நான் நாய்க்கரிடம் பேசுகிறேன். அவளுக்கு கழுத்தில் ஒரு தாலியைக்கட்டிவிட்டு காடு மேடென்று இழுத்துக்கொண்டு அலை. யார் வேண்டாமென்கிறது. பெண்ணே! நீ உடனே புறபட்டாகணும். ‘

தம்பிரான் வார்த்தையில் இருந்த நியாயத்தை ஏற்று லஸ்கர் பொன்னப்பஆசாரி துறைமுகத் திசைக்காய் நடந்தான். நீலவேணி குனிந்ததலை நிமிராமல் போர் லூயியில் மலபாரிகளின் குடியிருப்பு பகுதிக்காய்ச் சென்றாள். தம்பிரான், காத்திருந்த அனாக்கோவை அழைத்துக்கொண்டு மொக்கா (Moka) திசைநோக்கி தென் கிழக்காக நடந்தார். நீலவேணி கொஞ்சம் துடுக்கானபெண். ஆனால் அவள் பொன்னப்ப ஆசாரியிடம் மையல் கொண்டிருப்பது ஆச்சரியம். அவள் முகம்.. அடடா புதிருக்கு விடை கிடைத்துவிட்டது.. போல்பிரபு வீட்டிற் கண்ட பெண்மணியின் மகளா இவள். கடவுள்தான் எம்மாதிரியான லீலைகளை நடத்துகிறான். நாளைக்காலமே போர்லூயிக்குச் சென்று இந்தச்சேதியை நீலவேணியின் வளர்ப்புத் தந்தையான நாயக்கர் காதில்போடவேண்டும், அவர் மெத்தவே சந்தோஷப் படுவார், என்று நினைத்தார்.

நீலவேணி போர்லூயி திசையில் தனித்துப் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. அப்போது அவர் பின்பக்கத்திலிருந்து ஒரு குதிரை அவள் போகும் திசைக்காய் பாய்ந்தோடுவதைக் கவனித்தார். குதிரையிலிருப்பவன் போல்பிரபு மகனாக இருக்கவேண்டும்.. இவன் இதுவரை, பொன்னப்ப ஆசாரியும் நீலவேணியும் இருந்த பாறையருகேதான் ஒளிந்து இருந்திருக்கவேண்டும். எதற்காக அந்தப் பெண்போகும் திசையில் குதிரையை விரட்டிக்கொண்டு போகிறான். குவர்னரிடம் ஏதவது அலுவல் இருக்கலாமென்று தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டார். மொக்காவின் திசைக்காய் நடந்தார். அவருக்குப் பின்னே அனோக்கா ஓடினான்.

தம்பிரான்; -அன்றைக்குமாத்திரம் – போல்பிரபுவுடைய மகன் குதிரையின் பின்னே, அனாக்கோவை அழைத்துக்கொண்டு ஓடிப்போய்ப் பார்த்திருந்தால், அடுத்த நாள் தீவீல் நடக்கவிருந்த மிகப்பெரிய விபரீதத்தைத் தடுத்திருக்கமுடியும்.

/தொடரும்/

* ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு – தொகுதி -1

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts