நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடுங்

கோலொன்று பற்றினாற் கூடாப் பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

(திருமந்திரம்) -திருமூலர்

ஆரவாரமாய்க் கதம்பக் குரல்கள் எழுப்பிய சந்தடியில் பெர்னார்குளோதன் விழித்துக்கொண்டான். கண்மடல்களுக்குள் மணலைவாரி வீசியதுபோன்று ஒரே எரிச்சல். உடலில் களைப்புத் தெரிகிறது. நேற்று பின்னிரவுவரை தமது தேசத்து நண்பர்களோடு, இரவைக் கழித்திருந்தான். இன்னும் சிறிது நேரமாகிலும் நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்தான். கண்கள் மூட மறுத்தன.

‘மிஸியே (ஐயா)!. ‘..

‘உய்.(ம்..). ‘

‘கபே… ‘

கறுத்து மெலிந்திருந்த உடல். பிஞ்சு மார்பை முடிந்த மட்டும் சீலையால் மறைக்க முயற்சித்து, வெண்ணிறத்தில் சிவப்புச் சித்திரங்கள் தீட்டியிருந்த சீனப்பீங்கான் தட்டு. அதற்குப் பொருத்தமாக பீங்கான் குவளை, சிறிய பீங்கான் கிண்ணி – மொக்கா கபே- பாற்குவளை- சீனி, கூடவே கோட்டையிலிருந்து பறங்கியர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொன்னிறக் கோதுமை ரொட்டி. பணிவாக, அவற்றை நீட்டிய பெண்ணின் கைகள் மெல்ல நடுங்கின. அவற்றை வாங்கி பக்கத்திலிருந்த மேசையில் வைத்துவிட்டு சப்பாத்தை அணிந்து, கபேக் குவளையைக் கையில் பிடித்துக்கொண்டு, உப்பரிகையின் மேற்குத் திசைக்காய்ச் சென்று எட்டிப்பார்த்தான்.

கோட்டையின், கூடலூர் வாசற் திசையிலிருந்து ஊர்வலம் வருகிறது. இவன் ஜாகை வழியாகத்தான் அவர்கள் போகவேண்டும். இவனுக்குத் தெரிந்த மிஸியே துய்லொரானும் துபாஷ் கனகராய முதலியாரும் அருகருகே சம்பாஷித்துக்கொண்டு முன்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். அறுபது பல்லக்குகள், இருபது முப்பது குதிரைகள். சொல்தாக்கள், கொம்பு, தமுக்கு மேளதாளமென்று சகல சம்பிரமத்துடன் போகிறார்கள். திருச்சிராப்பள்ளி அருகில் பாளையம் இறங்கியுள்ள நிசாமிடமிருந்து வெகுமானம் வருவதாக நேற்றுக் கோட்டையில் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

ஓர் அரபிக்குதிரையில் வெகுமானம் போய்க்கொண்டிருந்தது. குதிரையில் ஆரோகணித்து துய்ப்ளெக்ஸ் அதிகாலை வெக்கையில், இரத்தம் சுண்டியிருந்தார். முகத்தில் சொல்லவொண்ணா சந்தோஷம். நேற்றைக்கு அவர் இந்த மன நிலையில் இல்லை. நேற்று, சிவப்பு ஒயினைக் குடித்த வேகத்தில், ‘ழான் எல்லாம் உன்னுடைய கருணை, நீ மட்டும் இல்லையென்றால் நானொரு பூஜ்யம் ‘ என மதுபோதையில் பல்லை இளித்துக்கொண்டு தனது மதாமிடம் அவர் பேசியதை நினைவுபடுத்திக்கொண்டான். குவர்னர், ‘எல்லாம் மதாம் ழான் தனது சீமாட்டியாய் வந்த நேரம் ‘, என அடிக்கடி சொல்லிக்கொள்வதன் அர்த்தம் ஊர்வலத்தைப் பார்க்கையில் விளங்குகிறது. ஆற்காட்டுத் துலுக்கர், அப்பாவி மக்களிடம் கொள்ளயடித்தப் பணத்தில் தங்கம், வைரம், முத்து, புஷ்பராகமென தங்கள் தங்கள் பேகம்களை அந்தப்புரத்தில் வரிசையில் நிறுத்தி, அலங்கரித்ததுபோக, மிச்சமிருப்பதை அவ்வப்போது ஆனை, குதிரையில் ஏற்றிக்கொண்டு குவர்னருக்கு வெகுமானம் என்ற பேரிலே தானம் கொடுப்பதும், முதுகு சொறிந்துவிட்டுப் போவதுமாக இருப்பது, துய்மா குவர்னர் உத்தியோகத்தில் இருந்த காலத்திலேயே ஆரம்பிச்ச சடங்கு. பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே, அடிக்கடி சொல்லுவதுபோல வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் செய்யும் மாயம்.

கடந்த சில நாட்களாக தனக்கு வேண்டியவர்களைச் சந்திக்க முடியாமல் பெர்னார்குளோதன் சோர்ந்திருந்தான். கள்ளிப்பெட்டியிலிருந்த ஓலை நறுக்கினை எடுத்துக் கொண்டு சென்ற துபாஷ், தொண்டைமாநத்தம்வரை போய்வருகிறேன் என்று சென்ற மாறன், இரண்டுபேர் குறித்தும் தகவல்கள் இல்லை. சுகவீனமென்றால் இவனுக்குச் செய்தி வந்திருக்கும். குவர்னரிடமோ, கும்பெனி அதிகாரிகளிடமோ இதுபற்றி பிரஸ்தாபிப்பதில்லை என்கின்ற முடிவுக்கு வந்திருந்தான். தனிமை, தெய்வானை நினைவுகளில் தள்ளிவிடுகின்றது. தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக்கொண்டு, கிலேசப்படுகின்றது.

நேற்றுக் காலை வெள்ளையர்கள் குடியிருப்புக்கு அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தான். கோவிற் குருக்கள், ‘காண்டாமணியொன்றினை கோவிலுக்கு உபயம் செய்யுங்கள், விக்கினங்கள் நீங்கும், ஷேமமாய் இருப்பீர்கள். ‘ என்று கூறிய வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. துபாஷ் பலராம்பிள்ளையிடம் இது விபரம் பேசவேண்டும், அவர்தான் புதுச்சேரி கம்மாளர்களோடு பரிச்சயம் உடையவர் என்பதாகத் தீர்மானம் செய்தான்.

பிறகு காலையில் பத்துமணிக்குமேலே, கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான். ‘லெ பொந்திஷேரி ‘ கப்பலுடைய கப்பித்தேன் (Capitain -Captain) தெலாமரை பார்த்து கணகாலம் ஆகியிருந்தது. முடியுமானால் குவர்னரையும் சந்திக்கவேணும். பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே கொடுத்துவிட்ட கடிதத்திற்கு கோன்சேல் (Conseil -Counsil -ஆலோசனைக்குழு) கூடியெடுத்த முடிவு என்னவென்று தெரிந்து கொள்ளவேணும். கடிதத்தில், கூடுதலாக புதுச்சேரியிலிருந்து கைவினைஞர்கள் வேணுமெனக்கேட்டு லாபூர்தொனே எழுதியிருந்தார். இபோதிருக்கின்ற அரசியற் சூழ்நிலையில், குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு, மஸ்கரேஜ்ன் கும்பெனி அரசாங்கத்தின் உதவி எந்த நேரமும் தேவைப்படும். ஆகவே பிரெஞ்சுத் தீவின் குவர்னருக்கு வேண்டிய மனிதர்களை அனுப்பித்தான் ஆகவேணும் என்கின்ற பலவாறான எண்ணங்களுடனே சென்றான்.

தெலாமருடைய ஜாகையின் வெளியிலிருந்த மணியின் கயிற்றினை இழுத்து அசைத்தான். அதனுடைய நாக்கு இரண்டுமுறை அடித்துவிட்டு ஓய்ந்தது. கதவைத் திறந்தவள் ஒரு இந்தியப்பெண்மணி. அகலமான முகம், திரிந்த பாலின் நிறம், தட்டையான முகம். படியவாரிய தலை. முன்வகிட்டில் அடர்ந்த வண்ணத்தில் குங்குமம். மெல்லிய உதடுகள். காவிக்கறையுடனான வெண்ணிற பருத்திச் சேலை. இடையில் ஒரு பருத்தித்துணியைக் கட்டிருந்தாள். தென்னிந்தியப் பெண்மணியாக இருக்கமுடியாது. குழப்பதுடன் வனங்கினான். அவளும் பதிலுக்கு வணங்கினாள்.

‘தெலாமரை பார்க்கவேணும். ‘

‘வாங்கோ வாங்கோ.. உள்ளே வாங்கோ! நாற்காலியில் உட்காருங்கோ. துவாலத்தில் (Toilet) இருக்கிறார். வந்துவிடுவார். ‘ எதிரிலிருந்த அறைக்குப் போனவள் மீண்டும் வெளிப்பட்டு, ஒரு பெரிய மீனுடன் வலதுபுறமிருந்த குசினிக்குள்(Cuisine- Kitchen -சமையலறை) மறைந்துகொண்டாள்.

பெர்னார் குளோதன், அங்கிருந்த நாற்காலியொன்றைத் தேர்வு செய்து உட்கார்ந்தான். சுவர் முழுக்க கடல் சம்பந்தபட்டப் பொருட்கள் மற்றும் ஓவியங்கள்.

‘கோடைகாலத்திற்கு இந்துக்கள் தேசம் சரிப்படாது. என்னவோ வந்துவிட்டோம். காலையிலிருந்து இரண்டாவது முறையாகத் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, கிடந்துவிட்டு வருகிறேன். நேற்று கும்பெனியின் குதிரையொன்று காலொடிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை, துப்பாக்கியால் சுட்டுப்போட்டார்கள். மாமிசத்தை, விருப்பமான கும்பெனி அதிகாரிகள் பங்குபோட்டுக்கொண்டார்கள். நானொரு பங்கினை எடுத்து வைத்திருந்தேன். இந்திய மசாலாவைத் தடவிச் சாப்பிடலாம் என்று தீர்மானித்திருந்தேன். இவள் வழக்கம்போல, பரதவர் பகுதிக்கு ஆட்களை அனுப்பி மீன் வாங்கிவந்திருக்கிறாள். சரி சரி என்ன குடிக்கிறாய் ? ‘

‘ குடிப்பது இருக்கட்டும். இந்தபெண்மணி யார் ? ‘

‘இவளா.. சந்திரநாகூர். பார்வதிண்ணு பேரு, இறந்த கணவனை எரிச்சபோது, இவளது சொந்தக்காரகள், அவனுடனே இவளும் செத்தாகணும்னு வற்புறுத்தினார்கள். இங்கிலீஷ் கிழக்கிந்திய கும்பெனிக்காரன் ஒருத்தன் ரெத்ரெத் (Retraite -Retirement) நேரத்துல காப்பாற்றிருக்கிறான். இளவயசுல பெண்மணியை என்ன செய்யணும்னு தெரியாம கிளப்புக்கும் விருந்துக்குமா அலைஞ்சிட்டு பிரிட்டனுக்குக் கப்பலேறியபோது, இவளுக்கென இருபது ஆயிரம் பவுணும், ஒரு பங்களாவையும், நான்கைந்து அடிமைகளையும் கொடுத்துப்போட்டுப் போயிருந்தான். சந்திர நாகூருக்குக் போகும்போதெல்லாம் சந்திச்சிருக்கேன். கிழவன் நகக்குறிகளில்லாமல் காதல் பண்ணியிருக்கிறான்னு புரிஞ்சுது. அழைச்சு வந்துபோட்டேன். ‘

பெர்னார்குளோதனை, அவனது பேச்சு எரிச்சலூட்டியது. அதனை விழுங்கிக்கொண்டு வலிய சிரிப்பொன்றினை உதிர்த்தான்.

‘குவர்னரை பார்க்கணும்னு கிளம்பியிருந்தேன். ‘

‘என்ன சேதி ? ‘

‘நீ அறிந்ததுதானே ? அங்கே லாபூர்தொனே தனது கடிதத்திற்கு என்ன நேர்ந்திருக்குமோவெனக் காத்திருக்கிறார். இங்கே கோன்செல் மனிதர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘

‘பெர்னார்! ஒன்றை நீ தெளிவாப் புரிந்துகொள்ளவேணும். உன்னுடைய வேலை லாபூர்தொனேவின் கடிதத்தை இவர்களிடம் சேர்ப்பிப்பது. அதற்கு என்னப் பதில் கிடைக்கின்றதோ அதை வாங்கிக்கொண்டு போய்ச்சேரு. நீ மஸ்கரேஞ் கும்பெனிக்கு ஊழியம் செய்கின்றவகையில், ஓரளவிற்கு விசுவாசங்காட்டு. வீணாய் உன்னுடைய பிரச்சினைகளாக நினைத்துக்கொண்டு அக்கறை காட்டாதே. கும்பெனியின் குவர்னர்கள் எல்லோருமே தங்கள் கோந்த்தில் (Compte – account – பேரேட்டில்) எவ்வளவு சேர்ந்திருக்கின்றது என்று பார்த்து, காய் நகர்த்துபவர்கள். அவர்களுக்கிடையில் நீ சிக்கிக்கொள்ளாதே. ‘

‘உண்மைதான்.. ‘

‘தீவிலிருந்து வந்த நாள் முதல் உன்னைச் சந்திக்கவேணுமென்று நினைத்து முடியாமற் போய்விட்டது. பிரெஞ்சுத் தீவு குவர்னருக்கும், துய்ப்ளெக்சுக்கும்

இடையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. போதாக்குறைக்கு, மதாம் துய்ப்ளெக்ஸ் வேறு தூபம் போட்டுக்கொண்டு திரிகிறாள். இவர்களுக்கு நீ ஒற்று வேலைகள் பார்க்க வந்தவனோ என்கின்ற சந்தேகங்கள் உண்டு. அதாவது இங்கிருந்து கொண்டு, துய்ப்ளெக்சின் ஏனைய விவகாரங்களை சேகரித்துக் கொண்டு போகவந்தாயோ என்பதான சமுசயங்கள் உண்டு. எதற்கும் எச்ச்ரிக்கையாக இருக்கவேணும். அநாவசியமாக அவர்கள் விடயங்களில் மூக்கை நுழைக்காதே. ‘

‘வாஸ்தவம். நீ சொல்கின்ற எதையும் அலட்சியப் படுத்திவிட முடியாது. புறப்படுவோமா ? ‘

‘எங்கே ? ‘

‘குவர்னர் அலுவலகத்துக்கு. ‘

‘இந்த நேரத்திலா ? வங்காளி பீவிகள் மீன்சமைப்பதில் தேர்ந்தவர்கள். இன்றைக்குக் குடிக்கவேண்டிய சாராயப் போத்தல் வேறு திறக்கப்படாமலிருக்கின்றது. ‘

‘எழுந்திரு, குவர்னர் மாளிகையில் உனக்கு வேண்டியது கிடைக்கும். ‘

‘முன்றாவதாக ஒன்று இருக்கின்றது. அதனைக் குவர்னரிடம் கேட்கமுடியாது. ‘

‘எது ? ‘

‘இந்திய பீவியை, பகல்நேர ஆலிங்கனம் செய்வதற்கான அனுமதி. ‘

‘எழுந்திரு! எதையாவது உளறிக்கொண்டிறாதே. ஆடையை மாற்றிக்கொண்டு கிளம்பிவா. ‘

அடுத்து அரைமணி தியானத்தில், இருவரும் குவர்னர் கபினெ(Cabinet)க்குள் இருந்தார்கள். அருகில் துபாஷ் கனகராய முதலியாரும், ஆனந்தரங்கப் பிள்ளையும் நின்றுகொண்டிருக்க மிஸியே துய்லொரான் எதிரே அமர்ந்திருந்தார்.

பெர்னார் குளோதனும், கப்பித்தேன் தெலாமரும் உள்ளே நுழைந்ததும், கும்பெனி தொப்பாஸ் (Topas)* ஒருவன், இரு நாற்காலிகளைப் போட்டுவிட்டு அகன்றான்.

கப்பித்தேன் தெலாமர் முகக்குறையை விளங்கிக் கொண்டவர்போல, ஆனந்தரங்கப்பிள்ளை வாய் திறந்தார்.

‘என்னவெல்லாமோ நடக்குது. அவ்ரில் (Avril -April) மாசத்துல நெப்த்யூன் (Neptune) கப்பல் மாஹே(Mahe)யிலிருந்து மொக்கா போறச்சே, கள்ள கப்பல்காரர்கள்(கடற்கொள்ளைகாரர்கள்) தாக்கினதையும், அந்த வழியாக வந்த போர்ச்சுகீசியர்கள் அவர்களிடமிருந்து கப்பலை மீட்டு மங்களூருக்கு கொண்டுபோனதையும் கும்பெனிக்கு எழுதியிருந்தார்கள். இப்போது அந்தக் கப்பலில், புதுச்சேரியிலிருந்து பிரெஞ்சுத் தீவுக்குக் கும்பெனிக்குத் தெரியாமல் கடத்தப்படுகின்ற மனிதர்களும் இருப்பதாகக் காகிதம் வந்தது. ‘

‘கூடிய சீக்கிரம் அந்தக் கூட்டத்தைப் பிடித்து கெவுனிக்கு வெளியே தூக்கில் போடுவோம். தூபாஷ் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். குடியானவர்களையும் மற்றவர்களையும் எச்சரிக்கைபண்ணி கறுப்பர் குடியிருப்புப் பகுதிகளில் தண்டோரா போட ஏற்பாடு செய்யுங்கள் ‘

சாராயங் குடித்து சிவந்திருந்த குவர்னரின் கண்கள் மேலும் சிவப்பாயின. அப்போது இந்திய சிப்பாய் ஒருவன் சலாம் அடித்து நின்றான்.

துபாஷ் கனகராயமுதலியார், அவனிடம், ‘கோபால நாராயணய்யர் கிடைத்தாரா ? ‘ என்றார்.

‘மரிகிஷ்ணாபுரத்திலே தந்தையும் மகனும் பதுங்கியிருந்தார்கள். கிராணஸ்நானம் பண்ன வெளியே வந்தவர்களை மடக்கி பிடித்தோம். மல்லுகட்டின சிரேஷ்டபுத்திரனைக் காயபடுத்திப்போட்டோம். தகப்பன் கோபால நாராயணய்யரைப் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்தோம். ‘ -சிப்பாய்

‘அவரைக் கொண்டுபோய் முத்தையாப்பிள்ளை வளவில் காவல் பண்ணி வைத்திருங்கள் ‘ என்பதாகக் குவர்னர் ஆணை பிறப்பித்துவிட்டு, எதிரே நின்ற கவனான்களைப் பார்த்தார்.

அவர்கள் இதற்குச் சம்மதம் என்பதுபோல தலையை ஆட்டுவித்தார்கள். பெர்னார் குளோதனுக்கும், தெலாமருக்கும் விளக்கம் அளிப்பதுபோல குவர்னர் தொடர்ந்து பேசினார்.

‘இந்த கோபால நாராயணய்யன் என்பவன் சுங்கு ஷேசாசல செட்டிக்குக் கடன் கொடுக்கவேண்டும். பலதாவாக்கள் கூறிவிட்டு களவாய்வாழ ஓடித்திரிகிறான் என்பதாக இவ்விடம் பிராது வந்தது. ரங்கப்பன் யோசனையின்பேரில் மாஹே துலுக்கர் மூலம் தந்தையையும் மகனையும் பிடித்துவர ஏற்பாடு செய்தோம். ‘

மீண்டும் அங்கே அமைதி நிலவியது. ஆனந்தரங்கப் பிள்ளையும், கனகராயரும் ஒருவர்பின் ஒருவராகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிரெஞ்சுத் தீவு குவர்னரின் கடிதத்திற்குக் கோன்சேல் கூடி என்ன முடிவெடுத்தது என்று கேட்க நினைத்து, இருந்த நிலவரத்தைக் கருதி இப்போது வேண்டாமென பெர்னார்குளோதன் முடிவுக்கு வந்தான்.

குவர்னர் துப்ளெக்ஸ், மிசியே துய்லொரான், கப்பித்தேன் தெலாமர், பெர்னார் குளோதன் நால்வரும் குவர்னர் கபினேக்கு அருகிலிருந்த தீனி மேசைக்குத் திரும்பினார்கள். அங்கே சீமைச்சாராயமும், மதுக் குப்பிகளும், துணைக்கு பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட .சொஸ்ஸிஸோன் செக் (பன்றி இறைச்சி வத்தல்), குவர்னர் மாளிகை குசினியர் தயாரித்த பெத்திஃபூர், கனப்பே (Petit Fours, Canapes -இறைச்சி, மீன் துண்டு அலங்கரித்த சிறிய ரொட்டிகள்) ஆகியவை இருந்தன. வயிறுமுட்டக் குடித்தார்கள் உரையாடிமுடித்தபோது கப்புசென் தேவாலய மணி பன்னிரண்டுமுறை அடித்து ஓய்ந்தது.

‘மிஸியே… ‘

திடுக்கிட்டவனாய் பெர்னார் குளோதன் நேற்றைய நினைவுகளிருந்து மீண்டிருந்தான். எதிரே பணிப்பெண்.

‘நீங்கள் இன்னும் ‘பெத்தி தெழனே ‘ (Petit dejeuner -காலை உணவு)வை முடிக்கவில்லை போலிருக்கிறது. ‘

‘ஆமாம். எனக்குப் பசியில்லை. உனக்கு ஏதேனும் வேலையிருந்தால் புறப்பட்டுப் போயேன். இன்றைக்கு சமையல் எதுவும் செய்யாதே. நான் தனியே இருக்கவேணும். ‘

அவனது வார்த்தைகளில் இருந்த கடுமையைப் புரிந்துகொண்டு அவள் அவ்விடமிருந்து அகன்றாள்.

உடம்பு அனலாய்க் கொதித்தது. நேற்று தெலாமர் குறிப்பிட்டதுபோல தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு அமிழ்ந்துக் கிடக்கலாமென நினைத்தான். திரும்பினான். எங்கிருந்தோ கல்லொன்று, திடுமென்று இவனுக்கருகில் தளத்தில் விழுந்தது. ஆச்சரியாகவிருந்தது. எங்கிருந்துவந்து விழுந்திருக்கவேனும் என யோசித்தவனாய், நான்கு திசைகளிலும் எட்டிப் பார்த்தான். மேற்குப் புறத்திலிருந்த சாலை, ஊர்வலம் முடிந்து வெறிச்சோடிக் கிடந்தது. மற்ற திசைகளில் மரங்கள் செடி கொடிகள், ஆள் அரவமேதுமில்லை.

உள்ளே நுழைந்து கீழறங்கித் தென்புறமிருந்த தண்ணீர்த் தொட்டியை நிரப்பினான். .நீரைத் தொட்டுப்பார்த்தான், உடலுக்கு இதமாக தண்ணென்று இருந்தது. வெளியிற் சென்று கதவை அடைத்துவிட்டு உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்தான். நிர்வாணமாக நின்றான்.

திடாரென்று சித்திரை வெயிலுக்குச் சம்பந்தமில்லாத உடலை நடுங்கவைக்கின்ற வகையிற் குளிர்ந்தகாற்று வீசியது.

முக்காலி ஒன்றைத் தொட்டியின் அருகேயிட்டு, தொட்டியினுள் முதலில் வலதுகாலையும் அடுத்து இடதுகாலையும் ஒவ்வொன்றாக இறக்கித் தண்ணீரில் மெல்லப் பின்புறம் சரிந்தான். அடுத்தக் கணம் அலறி அடித்துகொண்டு எழுந்தோடிவந்தான். உடல் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. சற்று முன்புவரை குளிர்ந்திருந்த தண்ணீர் சளசளவென்று தொட்டியில் கொதித்துக்கொண்டிருக்கிறது.

அவசரமாய், தேங்காய்ப்பூத் துவாலையை உடலிற் சுற்றினான். இவனது கையில் உஷ்ணம் பரவ கையை உதறினான். துண்டின் முனை எரிந்து கொண்டிருக்கிறது. துண்டை உதறித் தண்ணீரில் எறிந்துவிட்டு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஆடையேதும் அணியாமலேயே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். இவன் பார்வைக்காகவே காத்திருந்ததுபோல மேசைமீதிருந்த கள்ளிப் பெட்டி மெல்ல எழுந்து, இவனது தலைக்குமேலே, மெல்ல மெல்ல அசைந்துகொண்டு, நீட்டுகின்ற இவனது கைகளுக்குப் பிடிபடாமல் காற்றில் மிதக்கிறது.

ஆவேசத்துடன் எட்டிப் பிடிக்கிறான். கைக்குக் கிடைத்ததை மார்பில் அணைத்துக் கொள்கிறான். இதற்கெனவே காத்திருந்ததுபோல, இவனது பீஜங்களை ஒருகை பலங்கொண்டு நசித்தது. வலி பொறுக்கமாட்டாமல், முகதெரியாத எதிரியை எட்டி உதைத்தான். உதறிக்கொண்டு எழுந்தான்.

ஹஹ்ஹஹ்ஹாவென்று ஓர் அமானுஷ்ய ஆண்குரல். அக்குரல் தேய்ந்து, சில நாழிகைகளில் மணியோசைபோல அடங்கிப்போகிறது. மறுபடியும், அக்குரலே தேம்பித் தேம்பி அழுகிறது – திடாரென்று நிசப்தம்.

‘பார்த்திபேந்திரா வேணாண்டா. என்னைச் சங்கடபடுத்துவதில் உன்னக்கென்னடா சந்தோஷம். சொன்னால் கேழ்க்கவேணும். எனக்கும் தேவயானிக்கும் நடந்த திருமணம் தேவாலயத்தின் சட்டத் திட்டங்களுக்கமைய வார்த்தைப்பாடு கூறி, மோதிரம் மாற்றி, வேதபுத்தகம் சாட்சியாக நடந்ததல்ல. குருகுலவாசம் முடித்து, என் குரு கச்சியப்பர் அனுமதி பெற்று, பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு, சங்கற்பம், புண்யாகம், பஞ்சகவ்வியம், ரட்ஷாபந்தனம், அங்குரார்ப்பணம், கும்பபூஜை அக்கினிகாரியம், மூர்த்தி பூஜை, தானம் முதலியன முறையுடன் கண்ட திருமணம். முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழ்த்த தேவயானியைக் கைப்பிடிச்சிருக்கேன். சண்டாளா, அவளை மீண்டும் என்னிடமிருந்து அபகரிச்சிடாதேடா. ‘

‘ நீ..யார் ? ‘

‘நான் ஆர் என்பது முக்கியமல்ல. இனியாகிலும் நீ புத்தியோடு நடந்துகொள்ளவேணும். நடப்பாயா ? ‘

ஜன்னல்கள் தாமாகவே திறந்து மூடுகின்றன. திரைத்துணிகள் காற்றில் படபடக்கின்றன.

/தொடரும்/

*ஐரோப்பியரைபோல நடை உடைகளில் இருக்கும் இந்திய கத்தோலிக்கர்

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts