நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘வரமளித்த யாமழிப்பது முறையன்று வரத்தால்

பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்

அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்

ஒரு மகற்கொடு முடித்தும் என்றுன்னினான் உளத்தில் ‘

-கச்சியப்ப சிவாச்சாரியார் (கந்த புராணம்)

பகல் முழுவதும் கந்தகபூமியாகப் பூமி கொதித்துக்கிடந்தாலும் இரவில் விடாது பெய்திருந்த மழையால் பூமி குளிர்ந்திருந்தது.

வெண்மையான மேகங்கள் ஈரப்பதத்துடன் அலைந்தன. அவை தொட்ட வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மலைத்தொடர்கள் நனைந்திருந்தன, அவற்றின் சிகரங்களான பூஸ், போத், கறுப்பாற்றுக் குன்று, மூங்கிற் குன்று, மூன்று முலைகள், மெய்க்காப்பாளன் குன்று, நனைந்திருந்தன.

காடு நனைந்திருந்தது; காட்டிலுள்ள கருவேலன், தேவதாரு, புன்னை, மா, வேம்பு, வாதுமை, கொய்யா, பலா, பேரிச்சை புளியமரங்கள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்த கூடுகள் நனைந்திருந்தன; கூட்டிலுள்ள கழுகுகள், வெண்நாரைகள், காகங்கள், குயில்கள், மைனாக்கள், புறாக்கள் நனைந்திருந்தன.

தென்கிழக்கு மலைத்தொடர் திசைக்காய் வெளிப்பட்டிருந்த சூரியன் கூட நனைந்திருந்தான். உலர்ந்து வெளிர் நீலத்திற்குத் திரும்பியிருந்த வானங்கூட நனைந்திருக்க வேண்டும். புனல் கண்ட குதூகலந்தில், சாரலுடன் விழுந்து நுரைத்தெழும் பாலாய், வெண்பனியைத் தூவியெழுகின்ற அருவிகள், ஓடைகள், சிற்றாறுகள் நெளிந்தும் நனைத்தும் ஓடுகின்றன.

தோப்பும், புதரும், மரஞ் செடி கொடிகளும் மழையில் நனைந்து நனைந்து பச்சையோ பச்சை. ஈர பூமியெங்கும் வண்ணம் தெளித்து, இறைந்தும் நனைந்தும் கிடக்கும் மலர்கள், அவற்றின் ஈர நறுமணம். ஆடவர்களின் மெல்லிய தீண்டலுக்கு, உடற்சிலிர்க்கும் இளம் பெண்களைப்போல காற்றுத் தீண்டலில், மரங்கள் மெல்ல தலைசாய்த்து, சலசலவென்று நீரினை இறைத்து நாணும் அழகோ அழகு. தீவெங்கும் ஈரவாடை.

பிரெஞ்சுத் தீவில், இன்றைக்குத் தைப்பூசக் காவடி.விழா.* அருவி நீரில் குளித்துவிட்டு ஈரவேட்டியுடன் உலாவரும் ஆண்கள், சொட்டச் சொட்ட ஈரச் சேலையில் கதைக்கும் பெண்கள். குங்மம் மஞ்சளும் ஊர்வலமாக புறப்பட்டிருக்கின்றது. ஊர்வலத்தின் முன்வரிசையில் நாமறிந்த பிரெஞ்சுத் தீவு தமிழர்கள். காமாட்சி அம்மாள், சீனுவாச நாயக்கர், அருணாசலத் தம்பிரான், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்துச் செட்டியார். ஆண்கள் மேலாடையின்றி, ஈர ஜரிகை வேட்டியை இடையில் நிறுத்தி, மஞ்சளில் நனைத்தத் துண்டை இறுக அதன்மீது முடிபோட்டிருந்தார்கள். இவர்களுக்கிடையில் தலையிற் பாற்குடங்களும், தோள்களில் காவடிகளுமாக மஞ்சள் ஆடையில் ஆண்களும் பெண்களுமாக பக்தர்கள். கடந்த சில கிழமைகளாகவே, காவடிகள் மும்முரமாகத் தயாரிக்கபட்டிருந்தன. மூங்கிலை வளைத்து, தென்னைக் குருத்தோலையில் அலங்கரித்து, மயிலிறகு, எலுமிச்சைப் பழங்கள் செருகி, குஞ்சம் சேர்த்து, ஓசையெழுப்பும் மணிகள் கட்டிய பால், பன்னீர், மலர்கள், இளநீர், வண்ணத்துணிகளென வகைவகையாய்க் காவடிகள். ஈரபூமி, காய்கின்ற சூரியனால் கடுமையாகியிருந்தது. காவடி சுமப்பவர்களும், பாற்குடம் சுமப்பவர்களும் கால்களை நிலத்திற் பதிக்கச் சிரமப்படுவதை அறிந்த உறவுகள், பாதங்களில் குளிர்ந்த நீரை குடங்களிற் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். மேளங்களின் முழக்கத்திற்கேற்ப காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் தொடருகிறது.

சீனுவாச நாய்க்கரும், தம்பிரானும், வேலுப்பிள்ளையும், ஏற்கனவே கொண்டாடி வருகின்ற தீமிதி விழாவோடு, இனித் தீவில் காவடி விழாவையும் கொண்டாடுவதென தீர்மானம் செய்திருந்தார்கள். வந்த நாட்டில், சொந்த நாட்டு விமர்சிகை இல்லயென்றாலும், அவர்கள் உள்ளத்திற்குப் பண்டிகை நாட்களில் அளவிட முடியா மகிழ்ச்சி கிடைத்து விடுகின்றது. அடையாளத் தழும்பை வருடிப் பார்த்து ஆறுதல் சொல்லிக்கொள்ள முடிகிறது. சந்தோஷமாய் அழமுடிகிறது.

பண்டிகை நாட்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை மகிழ்விக்கின்ற நாட்கள். பத்து நாட்களுக்கு முன்னால் மெய்காப்பாளன் குன்றத்தில்** திருவிழாவுக்கான ‘வேல் ‘ பொறித்த கொடி தேவதாரு மரத்தில் ஏற்றப்பட்டிருந்தது. பண்டிகை நாட்களில் தமிழர்கள், உடலையும் உள்ளத்தையும், தூய்மையாக வைத்திருப்பார்கள். வேலவன் பக்தியில் சிரத்தையுடன் இருக்கவேண்டி, கொடியேற்ற நாள் முதல் தங்கள் கைகளில் மஞ்சள்நூலினை காப்பாக அணிந்து கொள்வதும், காலையில் நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகட்டி, இரவினில் கும்பங்களில் முருகனை வழிபட்டு, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து, உபவாசமிருந்து எடுக்கும் விழா.

சிறியதேரைச் சுற்றி ஒரு கும்பல். நடு நாயகனாக, கன்னத்திலும் முதுகிலும் அலகுகள் குத்திக்கொண்டு அத்தேரை இழுத்து வருபவன் பொன்னப்ப ஆசாரி. ஒரு கைத்தறித் துண்டை அவன் இடையில் கொடுத்து, அவன் நடையைத் தாமதப்படுத்தும் வகையில் இறுகப் பிடித்துக் கொண்டு கைலாசம், அருகே சில்வி, தெய்வானை, நீலவேணி. பிறகு உங்களுக்கு ஞாபகமிருக்குமானால் எட்டியான், அஞ்சலை, பிச்சையும் கூட கூட்டத்தில் நடந்து வந்தார்கள். இவர்கைளைத் தவிர நாம் அறியாத மொக்கா, பாம்ப்ளுமூஸ், ரிவியர் தபோரென எங்கெல்லாம் தீவில் தமிழர்களின் குடியிருப்புகள் உண்டோ அங்கிருந்தெல்லாம் தமிழ்ச் சனங்கள் வந்திருந்தார்கள். ஊர்வலம் தென்கிழக்காகச் சென்று சிறிதுநேரத்தில் மெய்க்காப்பாளன் மலை அடிவாரத்தை அடைந்துவிடும். அடிவாரத்தில் குவர்னர் மேன்மை பொருந்திய லாபூர்தொனே, கும்பெனியின் முக்கிய காரியஸ்தர்கள், பண்னை முதலாளிகள் காத்திருப்பார்கள். அவர்களை முக்கிஸ்தர்கள் வரவேற்று மலைமேலே அழைத்துச் செல்வார்கள். தம்பிரான் காவடிச் சிந்துகளைக் உரத்துப் பாட காவடிகளும் பாற் குடங்களும், தமிழ்ச் சனங்களும், கிறேயோல் மக்களும் தொடர்ந்து குன்றில் ஏறுவார்கள்.

‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! ‘ ‘கந்தனுக்கு அரோகரா! ‘ ‘வேலனுக்கு அரோகரா! ‘ தீவெங்கும் ஒலிக்கிறது. ஊர்வலத்தில் வருகின்ற தமிழர்களின் உணர்ச்சிக் குரல்கள் மலைகளில் விழுந்து திரும்புகின்றன..

தெய்வானையும், நீலவேணியும் ஊர்வலத்தின் மையப்புள்ளியில் இருந்தார்கள். இருவரது கூந்தலுமே அதிகாலைக் குளியலைக் கண்டதற்கு அடையாளமாக முதுகிற் பரத்தி நுனியில் கொட்டைப்பாக்கொத்த முடிச்சினைக் கண்டிருந்தது. நெற்றிச் சுட்டியும், ஒட்டியாணமும், தோடும், முத்துவளையும், புல்லாக்கும், சீனத்துப் பட்டுச் சிவப்பு சீலையில், அளவாய் மஞ்சள் பூசிய முகத்துடன் அடக்கமாய்த் தெய்வானை. அதற்கு நேர்மாறாக, கொட்டும் சிரிப்பும், குறுகுறுபார்வையும், எளிய ஆடை அலங்காரத்துடன், கன்றுக் குட்டியின் குணத்துடன் நீலவேணி.

தோழியின் கண்கள் தேரிழுக்கும் காதலன் பொன்னப்ப ஆசாரியின் முதுகை மேய்கின்றன. தெய்வானையோ தன் காதலன் பெர்னார் குளோதன் நினைவுகளிற் புதுச்சேரிவரை பயணித்து பெருமூச்சு விடுகிறாள். தோழியர் இருவருமே இப்படியான விழா ஒன்றில் வைத்தே, தங்கள் தங்கள் மனதில் உள்ள காதற் புதையலைக் கண்டெடுத்திருந்தார்கள். தங்களுக்கு ஏற்பட்ட கடற்கரை அனுபவங்களை நினைத்தமாத்திரத்தில் உள்ளம் இனிக்கவும், உடலைப் பரவசப்படுத்தவும் செய்கின்ற மாயத்திற்கு என்ன பேர் சூட்டுவதென்று தோழியர் இருவரும் மயங்கித் தவிக்க, இப்படியான தைப்பூசக் காவடி விழா நாளொன்று, கட்டடழகுக் காைளையர் இருவரை அவர்கள் முன்னால் நிறுத்திக் காதல் என்றது.

ஊர்வலம் குன்றின் அடிவாரத்தில் இருந்த போ பஸ்ஸேன் குளத்தை அடைந்திருந்தது..

சில ஆண்டுகளுக்கு முன்பு, இக்குளத்தருகே குதிரையில் ஆரோகணித்திருந்த வாலிபன் பெர்னாரைக் கண்டு மெய்மறந்து நின்றதும், தோழி நீலவேணியின் கேள்விகளை உதாசீனம் செய்து, மெல்ல ஊர்வலத்திலிருந்து ஒதுங்கி நின்றதும், நினைவில் இனித்தன. கப்பற் கட்டுமிடத்தில் பெர்னார் குளோதனால் காப்பாற்றப்பட்ட நாள்முதல், அவனது உடற் தீண்டலால் இவளுற்ற காய்ச்சலுக்கான மருந்து அவனிடம் இருக்கவேணுமென்ற எண்ணத்தில், பெண்ணுக்குரிய நாணமின்றி தேடிச் சென்றிருக்கிறாள்.

அன்றைக்கும் இப்படித்தான் ஊர்வலம் முடித்துக் கூட்டம் காவடிகளோடு மலையேறத் தொடங்கிவிட்டது. குளத்தருகே, இவள் சற்று முன்பு கண்ட சிவத்த வாலிபனைக் காணாமல் மனம் தவிக்கிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறாள். தெரிந்தவர் எவரும் கண்ணிற்படவில்ல என்கிற தைரியத்தில், குளத்தருகேயிருந்த மூங்கிற் புதர்களைக் கடந்து, அடர்த்தியாகவிருந்த விசிறிவாழைகளிடத்தில் வந்துநின்றாள். வலப்புறமிருந்த செண்பக மரத்தடியில் பெர்னார் குளோதன் குதிரை. அவனும் அருகில் நிற்பதாக நினத்தமாத்திரத்தில், சுரம் கண்டவள்போலானாள். வாய் உலர்ந்து போகிறது. வாழைஇலைகளை கிழிப்பதும், கிழித்தத் துண்டுகளை தூக்கி எறிவதுமானக் காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறாள். பெர்னார்குளோதன் குதிரை, செண்பக மரத்தில் தலையை உரசப்போக, பூக்கள் உதிருகின்றன. அருகில் இரு கால்கள். சந்தணக் கால்கள். தொடர்ந்து பார்வையை மேலே கொண்டு…இல்லை விலக்கிக்கொள்கிறாள். என்ன நேர்ந்ததோ பேதைப்பெண்னுக்கு, இரு கரங்கங்களிலும் முகத்தைப் புதைக்கிறாள். விரல்களினூடே பார்வை வழிந்து, அவன் முகத்தைக் காணவெனச் சிறுக்கி கள்ளத்தனம் செய்கிறாள். ம்.. ஏதோவொன்று தடுக்கிறது. வெட்கம் மேலிட்டவளாய் திரும்பி நிற்கிறாள்.

தோளினை ஒட்டி மென்மையாய் ஓர் உஷ்ணமூச்சுப் பரவி, இவள் உடலைத் தொட்டு விளையாடுகிறது. இல்லை இனிமையாய் மீட்டுகிறது. அப்படி இல்லை, இவளது பவள வாயைத் திறக்கச் செய்து, அமிர்தத்தை ஆசை ஆசையாக ஊட்டுகின்றது. உடல் முழுக்க குலுங்கின மாதிரி பிரமை. குழப்பம். கங்கைக்காகத் தவமிருந்த பகீரதனா ? அசட்டுக் குந்தியின் மந்திர உச்சாடனத்திற்கு மதிப்பளித்துத் தன்னை ஆட்கொள்ளவந்த சூரியனா ? ஏன் எதற்கென கேள்விகள் வேண்டாக் கங்கையின் காதற் சக்கரவர்த்தி சந்தணுவா ? யார் இந்த மாயவன் ?

திரும்புகிறாள். தலையை நிமிர்த்த அச்சமும் நாணமும் கூட்டணிவைத்துக்கொண்டு இவளைத் தடுக்கின்றது. மெள்ள அவனை நோக்கி நடக்கிறாள். இவளது மெல்லிய பாதத்தின் வலி தாங்கமுடியாது ஈரபுற்கள் அழுவதைப்போலப் போல தண்ணீர் தெறிக்கின்றது. இவளை எதிர்பார்த்து காத்துநிற்கும் உடல் – தீண்டல்- வாசம், அதனைத் தொடர்ந்து மென்மையானதொரு அனுபவம்,. ஏற்கனவே அறிந்த பரவசம். அன்னை காமாட்சி அம்மாளிடமோ, சகோதரன் கைலாசத்திடமோ, தோழி நீலவேணியின் அண்மையிலோ காணாதது. குளிர் நீரில் முங்கியெழும் சுகம். காத்திருக்கும் மீன் குஞ்சுகள் உடலெங்கும் விளையாடி கிளர்ச்சியூட்டுகின்றன.

‘பெண்ணே..! ‘ கள்ளன். அவனுடய குரல்தான்.

‘ம்… ‘

‘எங்கே உன் விழிகளை உயர்த்தி, என்னை ஒரு முறை பார் ‘

‘எதற்காம் ? ‘

‘என்னிடம் என்ன கேள்வி ? உன் இதயத்தைக் கேள். விடைகிடைக்கும். ‘

வெட்கத்தால் முகம் சிவக்கிறாள் பெர்னார் குளோதன் அவளது முகவாய் தொட்டு மெல்ல உயர்த்துகிறான். தன் விரல்பட்டுக் கன்றியிருக்கும் முகவாயில் முத்தமிட்டவாறே, மெல்ல அவளது பவள இதழ்கள் நோக்கிப் பயணிக்கிறான். அவளது வலக்கரம் நந்தியாகப் பிரவேசிக்கிறது. அவனது செய்கையைத் தவிர்க்கிறாள். இருகலாச்சாரத்திற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் இந்தமுறை வென்றதென்னவோ தமிழச்சி.

முதன் முைறையாக நெருக்கத்திற் பார்க்கிறாள். அவன் நீல விழிகளும், கூரிய மூக்கும், உதட்டில் அரும்பாய் நின்ற மீசையும், மோகன முறுவலும், காதுவரை இறங்கியிருந்த கன்னமீசையும் அலை அலையாய் அவள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கின்றன. உள் மனத்தில் கற்பனையாய் ஆவணப் படுத்தியிருந்த ஆடவன் இவனேயென்று உறுதியாகிறது. உரிமையாய்த் தாமரை சூரியனைப் பார்க்கிறது.

‘உன் பெயரைச் சொல்லமாட்டாயா ? ‘

‘நீர் யார் ? எதற்காகச் சொல்லவேணும் ? ‘

‘நானா ? உனது ஏழு பிறப்பிற்கும் ஏஜமான். உனக்கான அடிமை ஓலை என்னிடம் இருக்கிறது ‘

‘அப்படியானால், எனது பேர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேணுமே. அடிமை ஓலையை முறையாக வாசித்துவிட்டல்லவா வந்திருக்க வேணும். ‘

‘உத்தமமான பேச்சு. நான் புறப்படுகிறேன் ‘

‘எங்கே ? ‘

‘உங்கள் முருகனுக்கு அபிஷேக ஆராதனைக்கும் அன்னதானத்திற்கும் ஆள் குறைகிறதாம். ஒத்தாசை செய்வதாய் உத்தேசம். ‘

‘உண்மையிலேயே போகிறதாக உத்தேசமா ? ‘

‘பின்னே ? யாருக்கு எனது சேவை வேணுமாயிருக்கிறதோ, அங்கே போவதுதானே முறை. ? ‘

‘நல்லது பிரபு. புறப்படுங்கள். ‘ நிர்த்தாட்சண்யமாகக் கூறிவிட்டு, அவனுக்கு முன்பாகப் புறப்பட நினைத்தவளின் முன்னால் போய் நிற்கிறான்.

அவளது கைகளை மெல்லப் பற்றி, முகத்தை நிமிர்த்தினான். மூடிக்கிடக்கும் இமைகள், மொழுமொழுவென்று கன்னங்கள், ஈரமான உதடுகள். நெளி நெளியாய் மணக்குங் கூந்தல். தாபத்துடன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டு நிமிர்கிறான். முத்தமிடுகின்றவரை, காத்திருந்தவள்போல அவனிடமிருந்து விடுபட்டாள். முகம் சிவந்துவிட்டது. கண்கள் குளமாகின. உடலெங்கும் ஊமைப் பரவசம்.

‘பெண்ணே! மனத்திலிருப்பதை ஒளிக்காமல் சொல். என் மீது பிரேமை கொண்டிருப்பது நிஜம்தானே ? ‘

இவள் தலையை மெல்ல உயர்த்திக் கீழிறக்குகிறாள். அவளது சம்மதம் இவனைச் சந்தோஷப்படுத்தியிருக்கவேண்டும். முன்னிலும் ஆவலாய், அவளது கைகளைப் பற்றி தனது மார்போடு அணைக்க முற்படுகிறான்.தெய்வானை விடுபட்டு ஓடுகிறாள். கலவென்று சிரிக்கிறாள்.

‘தெய்வானை..! என்னடி விஷயம் ? இப்படிக் கலகலவென்று சிரிப்பதன் அர்த்தமென்ன ? பெர்னார் நினைவா ? கூடியிருக்கும் சனங்கள் உன்னைக் கவனிப்பதை அறிவாயா ? ‘

‘தோழியின் குரல், தெய்வானையின் நினைவுகளைத் துரத்திவிட்டது. தன் மனதை தோழி படித்துவிட்டாளென்றபடியால் வெட்கம். ‘போடி உனக்கு என்னிடம் எப்போதும் கேலிப்பேச்சுதான் ‘ ‘ பொய்க்கோபம் காட்டினாள்…

காவடிகளும், பக்தர்களும், மெய்க்காப்பாளன் குன்றினை அடைய, ‘அரோகரா ‘ கோஷம் உயர்ந்து ஒலிக்கின்றது. கோவில் அடிவாரத்தில் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த குவர்னர் வந்திருந்தார், கூடவே அவரது ஆலோசகர்கள், கும்பெனி முக்கிய காரியஸ்தர்கள், சில பண்ணை முதலாளிகள், துரைசாணிமார்கள் என வந்திருந்தார்கள். சிலர் பல்லக்குகளிலும், சிலர் குதிரைகளிலும் வந்ததற்கு அடையாளமாக, பல்லக்குகளும், பல்லக்குத் தூக்கிகளும், அவர்களுக்கான பறங்கிய வீரர்களும், கறுப்பின வேலையாட்களுடன் காத்திருந்தனர். கறுப்பர்களின் தோளில் ஏறிவந்திருந்த ஒரு சில பறங்கியர் இன்னுங்கூட தோளைவிட்டு இறங்காமல், ஊர்வலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளிக் கூட்டங் கூட்டமாக பிரெஞ்சு கிறேயோல் பேசுகின்ற மல்காஷ் மக்கள், மொஸாம்பிக் மக்கள்.

சீனுவாச நாயக்கரும், அருணாசலத் தம்பிரானும் பூரண கும்ப மரியாதையுடன் குவர்னருக்கு வரவேற்பு அளித்தார்கள்..மற்ற துரைமார்களுக்கு வந்தனம் சொன்னார்கள்.

சுமார் ஐம்பதுபேர் நிற்கக்கூடிய தட்டை பந்தல் போட்டிருந்தது. தமிழ்ச் சனங்களும், முக்கியஸ்தர்களும் கூடுகிறார்கள். காவடிகள் இறக்கபட்டன. பாற்குடங்கள் இறக்கப்பட்டு, சுயம்புவாய் நின்ற முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மீண்டும் மீண்டும் ‘அரோகரா! அரோகரா! ‘ என்ற குரல்கள்.

பார்த்திருந்த பறங்கியர் கூட்டம் சிரிக்கிறது.

குவர்னர் துரையின் அருகிலிருந்த பாதிரியார் தமிழர்களின் செய்கையை கண்டு முகம் சுளிக்கிறார். பக்கத்திலிருந்த குவர்னரிடம்,

‘நமது தேசத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்திருப்பது எதற்காகவென்று கும்பெனி அறியவேணும். உங்களுக்கு வியாபாரம் நோக்கமெனில், எமக்கு இந்த ஆத்துமாக்களைக் கர்த்தரிடம் சேர்ப்பிக்க வேண்டியது கடமையாகிறது. இந்த காப்பிலிகளை இப்படியே விட்டால், மொத்தத் தீவையும் மூடர்களாய் மாற்றிப்போடுவார்கள். ‘

குவர்னர் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

அவரருகே நின்றிருந்த வீல்பாகு துரை, ‘சிலையை ஊர்கோலமாக எடுத்துவருவதும், அதன் முன்னால். கூச்சலிட்டு ஆடுவதும் காட்டுமிராண்டித்தனம். உடனடியாகக் கும்பெனி இந்த விடயத்தில் தலையிட்டு ஏதாகிலும் செய்தாகவேணும். ‘ வழக்கம்போல வீல்பாகுதுரை விழாவுக்கு வந்திருப்பவர்களை அலட்சியம் செய்தவனாய்ச் சொல்கிறான்..

கும்பலில் திடாரென்று அலறல். ஒரு குரல் வீறிட்டு ஒலித்தது.

‘ஆ.. ஆய்…. ‘

எட்டியான் மனைவி அஞ்சலைக்கு ஆவேசம் வந்திருந்தது. துடிக்கிறாள், எம்பிக் குதிக்கிறாள். முழிகளிரண்டும் வேகமாய்ச் சுழல்கின்றன. நாக்குத் துருத்திக்கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த சனங்கள் ‘அரோகரா ‘ கோஷத்தை இம்முறை மிகவும் உரத்து எழுப்புகிறார்கள். வீல்பாகுதுரை மூச்சுபேச்சில்லாமல் நின்றான். பாதியாரும், குவர்னரும் ஆவலாய் என்ன நடக்கிறதெனப் பார்த்தார்கள்; தெய்வானையும், நீலவேணியும் அச்சத்துடன் ஒதுங்கி நின்றார்கள்.

சற்று துணிச்சலான ஆசாமி ஒரு துண்டைச் இரு முனைகளையும் பிடித்துக்கொண்டு சில வினாடிகள் சில நொடிகள் சுழற்றி அது இறுக்க நிலையை அடைந்ததும் வில்லாய் வளைத்து எறிந்து, அப்பெண்மணியை தனது பிடிக்குள் கொண்டுவருகிறார். கூட்டம் மொத்தமும் வாயடைத்து நிற்கிறது.

தம்பிரான் விபூதித் தட்டும் குங்குமத்துடனும் முன்னால் வந்து நிற்கிறார். அஞ்சலையின் பார்வை நிலைகுத்தி நிற்பது எதிரே நிற்கும் அருணாசலத் தம்பிரானையா அல்லது அவரது முதுகுக்காய் நிக்கும் வீல்பாகு துரையையா என்பதைக் கூட்டம் விளங்கிக் கொள்ளவில்லை.

‘அடேய் சொக்கேசா என்னைத் தெரியுதா! பஞ்சம் பிழைக்கவந்த இடத்துல உனக்கேனடா இந்த நீச புத்தி ? ‘

‘முருகா..! என்னப்பா சொல்ற ? ஒன்றும் விளங்கலியே ‘ ‘- தம்பிரான் பக்கத்தில் நின்ற சுப்பு முதலியார், துண்டை இடுப்பிற் கட்டிக்கொண்டு பணிவாய்க் கேட்கிறார்.

‘நான் முருகனில்லை, தேவயானி. சொக்கேசனைச் சம்ஹாரம் செய்ய வந்திருக்கேன். ‘ தம்பிரானைக் குறிவைத்து வார்த்தைகள் வந்து விழுகின்றன. விபூதியை தலையில் வீசியடித்து, நெற்றியிலிட்ட தம்பிரான், ‘தேவயானி ‘ பெயரைக் கேட்டுக் அதிர்ந்ததைக் கைலாசம் அவதானிக்க முடிந்தது. தம்பிரானைத்தவிர கூட்டத்திலிருந்த நம்மால் அறியப்பட்டக் குவர்னர், காமாட்சி அம்மாள், சீனுவாசநாயக்கருங்கூட அதிர்ச்சியுற்றிருந்தார்கள்.

/ தொடரும்/

*காளியம்மனுக்கும், மாரியம்மனுக்கும், திரெளபதை அம்மனுக்கும் தீ மிதிக்கின்ற விழா 1772ம் ஆண்டிலும், காவடி விழாவினை 1852ம் ஆண்டிலிருந்தும் தொடங்கப்பட்டதாககச் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. .(Page 157-158 Les Tamouls a Ile Maurice – Ramoo Sooriamoorthy). ஆயினும் பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கும்பெனி நிர்வாகம், குடியேற்றவாசிகளின் மதவிடயங்களில் தலையிடாததும், தமிழர்கள் தங்கள் வழிபாட்டுமுறைகளில் காட்டிய ஆர்வமும் ஆரம்ப முதலே தீமிதி, மற்றும் காவடி விழாக்களை நடத்தியிருக்கலாம் என்கின்ற யூகத்தில் எழுதபட்டது.

** La montagne de Corps de Garde

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts