நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்

– (மூதுரை) – ஒளவையார்

மாறன் நம்பிக்கை வீண்போகவில்லை. சற்றுமுன்னாலே தொண்டைமாநத்தத்தில் வைத்துப் பார்த்த குதிரையே இவனது திசைக்காய் வந்துகொண்டிருக்கிறது. தொண்டைமாநத்தம் போகும்வழியில் ஏற்றமிறைத்தவர்கள் கூற்றை நினவுபடுத்திப் பார்த்தான். அவர்கள் இவன் தேடிப்போன காமாட்சி அம்மாளைத் தேவராசனுடைய அத்தைக்காரி என்றார்கள். ஆகக் குதிரையில் வருபவன் யாராக இருக்குமென பலவாறாக யோசித்தமாத்திரத்தில் உண்டான மறுமொழி தேவராசன் என்பதாகும்.

பெர்னார் குளோதன் நம்புவதைப்போலே, வாணியானவள் பிரெஞ்சுத்தீவிலுள்ள தெய்வானை வடிவில் இருப்பதும், வாணியைப் பார்க்கவரும் பெண்மணி தெய்வானையின் தாயார் காமாட்சி அம்மாள் பேரிலே பொய்யாய் வலம் வருவதும், ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை

என்பதில் மாறனுக்குச் சந்தேகமில்லை. தொண்டைமாநத்தத்தில் தேவராசன்வீட்டில் நடந்த சம்பாஷனைகளை கேட்டவரையில், காமாட்சி அம்மாள் என்ற இப்பெண்மணியும் ஓரளவு நல்லவளாகவே இருக்கவேணுமெனத் தீர்மானித்தான். அவளை அச்சுறுத்தி கபடவேடம் போடவைத்திருக்கும் உபாயத்தின் காரணமென்ன ? இந்தச் சதியில் தேவராசனுக்குப் பங்குண்டு என்பதும் புரிகிறது. இந்தக் கூட்டுச் சதியில் இயங்கும் மற்றவர்கள் யார் ? எதற்காக ? அதன் முழு விபரந்தான் என்ன ?

மாறன் இதுநாள்வரை தேவராசனைக் காணநேர்ந்ததில்லை. துபாஷி பலராம் பிள்ளை அவைனைக் குறித்துச் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதன்படி, கும்பெனிப் பீரங்கிப் படையின் லியோத்தனான்*பிரான்சுவா ரெமிக்கு அவன் வேண்டப்பட்டவனென்று தெரிகிறது. பிரான்சுவா ரெமியன்றி, ஜாதி இந்துக்களில் தேவராசனுக்கு வேண்டிய மனுஷர்கள் யார் ? வேலாயுத முதலியாரும் இந்தச் சதிக் கூட்டத்தில் ஒருவரோ ?

தேவராசனது குதிரை தான் பதுங்கியிருந்த இடத்தைக் கடந்துபோகட்டுமென்று காத்திருந்தான். புதுச்சேரிக்குச் அல்லாமல், வலமெடுத்துத் தென்திசைக்கு, தேவராசன் குதிரைப் பாய்ந்தோடுவதைக் கண்டு, தனது குதிரையையும் அத்திசைக்காய் விரட்டினான்.

சூரியன் மேற்காலே மறையத் தொடங்க, காத்திருந்த இருட்டு தன் புத்தியைக் காட்டியிருந்தது.

இருட்டுக்கெனவே காத்திருந்த காரியங்கள் நடந்தன: தாசிகள் சுகத்திற்கு ஆசைப்படும் தனவந்தர்கள், கள்ளர் பயத்தை ஒதுக்கிவிட்டுப் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வில்வண்டியில் முக்காடுபோட்டுக்கொண்டு புறப்பட்டிருந்தார்கள். மேய்ச்சலுக்குப் போன சினைமாடு தொழுவத்திற்குத் திரும்பாததால் லாந்தரை எடுத்துகொண்டு குடியானவர் இருவர் தேடிக்கொண்டிருந்தார்கள். சம்பாதிச்சப் பணத்தில் சாராயத்தை இருட்டும்வரை குடித்துக்கிடந்து, போதையும் புத்தியும் தெளிந்தபின் வளவுக்கு சிலர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அந்தி சாயும்வரை வேலை செய்து, வருகின்ற வழியில் செட்டிக் கடையில், ‘புளிமிளகா ‘ வாங்கிவந்து குழம்பு கூட்டிவிட்டு, ஏழைப்பெண்டுகள் உலைவைத்திருந்தார்கள். அவர்களது பிள்ளைகள் அருகில் சிறுதட்டுகளோடு காத்திருந்தார்கள். வழக்கம்போல உள்ளூர் சிப்பாய்கள் சாயந்திரமே விரால்மீன்குழம்பும் வரகரிசிச் சோறும் சாப்பிட்டதில் கொட்டாவி விட்டுக்கொண்டு பாரா போனார்கள்.

அரியாங்குப்பம் ஆற்றினையொட்டிய வடகரையில் சிற்றோடுவேய்ந்த வடக்கேபார்த்த வளவு. எதிரே இருந்த தென்னந்தோப்பும், மாமரங்களும், மூங்கிற்புதரும் இருட்டைப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கிடக்க, அவ்வளவில்மாத்திரம் ஆள் நடமாட்டம். ஏற்றப்பட்டிருந்த ஆமணக்கு எண்ணெய் விளக்குகள், இருட்டினின்று அவ்வீட்டை காப்பாற்றியிருந்தது

தென்னைமரங்களும் செடிகொடிகளுமாய் அடர்ந்திருந்த பகுதியிலிருந்து சாராயம் காய்ச்சும் நெடி காற்றில் அடர்த்தியாய் இருந்தது. கும்பெனி தமுக்கடித்து அறிவித்திருந்த சுதந்திரத்தால் இருட்டிய பின்னரும் அடுப்பைப்பற்ற வைத்திருந்தார்கள்.

வளவுக்கெதிரே ஆற்றங்கரையை ஒட்டியிருந்த ஆழமான துறையில் படகொன்று வந்து நின்றது. படகினை ஓட்டியவன் நீண்ட கயிறொன்றை எறிய, அங்கே தென்னை மரத்தின் அருகே நின்றிருந்தவன் இலாவகமாகப் பிடித்து மரத்தில் இறுகக்கட்டினான். ஒருவர் பின் ஒருவராக அந்த வீட்டில் சந்தடியின்றிப் பின்கட்டுவழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலர் பல்லக்கில் வந்திருந்ததன் அடையாளமாக வளவெதிரே பல்லக்குகள் நின்றிருந்தன. தங்கள் எசமானர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் திரும்பமாட்டார்கள் என்று எண்ணியோ என்னவோ பல்லக்குத் தூக்கிகள் தென்னைமரத்தின் கீழேயே துண்டைவிரித்துப் படுக்கத் தொடங்கிவிட்டார்கள்

பின்வாசற் கதவருகில் நின்றிருந்தவன், வருகின்றவர்களின் தரத்திற்கேற்ப குனிந்தும் நிமிர்ந்தும், வணங்கி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான்.

பஞ்சமுகக் குத்துவிளக்குகள் சுடரெடுத்துப் பிரகாசிக்கின்றன. நெற்பொரியும் எள்ளும் கலந்து நொறுக்குத்தீனிமுஸ்தீபாக வறுத்துவைத்திருந்தார்கள். எல்லோருக்கும் தம்ளரில் சுக்குநீர் விநியோகம் நடந்தது. போதாதற்கு வில்வநல்லூர் பச்சைவெற்றிலை, சீவல் பாக்கு, பன்னீர்புகையிலை, வாசனைச் சுண்ணாம்புடன் பெரிய தட்டுகள். வந்தவர்கள் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தார்கள். இராச்சிய பரிபாலனத்தில் நடக்கின்ற குளறுபடிகள், சேரிச்சனங்கைளை வேதத்தில் சேர்க்க மதகுருமார்கள் செய்யும் காரியங்கள், மழையில்லாமல் பயிர்பச்சைக் காய்ந்து கிடப்பது, ஊரில் நடக்கும், களவு கொள்ளையென எல்லாவற்றையும் பேசி தீர்த்தார்கள்.

‘அடியேன் முருகப்பிள்ளை. துறவிச்சாமி சார்பாக, மகாஜனங்களுக்கு வந்தனம். சொன்னபடிக்கு எல்லோரும் தட்டாமல் வந்து சேர்ந்ததில் சந்தோஷம். வார்த்தையாடிக் கொண்டிருங்கள். துறவிச்சாமி தியானத்தினை முடிக்கும்நேரம், வந்து விடுவார். ‘

‘திருச்சிற்றம்பலம்.. ‘ திரையை விலக்கிக்கொண்டு கரகரத்தவொருகுரல்.

‘திருச்சிற்றம்பலம் ‘. ஒருமித்த குரலில் வழிமொழிந்தவர்கள், எழுந்து நின்றார்கள். முதன்முறையாக அவரைப் பார்த்தார்கள். சிரைக்கபட்ட தலை. வயிற்றின்பாதிவரைக் கட்டியிருந்த காவிவேட்டி, கழுத்தில் உருத்திராட்சம், கையில் தண்டம் தோளில் அதற்கிணையாக ஒர் உருமாலை, உடலை அலங்கரிக்கும் திருநீர்க் கீற்றுகள், கனத்த சரீரம், கழுத்தில் புதைந்திருந்த தலை.

அவர் கையசைக்க, வந்திருந்தவர்கள் தங்கள் தங்கள் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். அனைவரும் ஊமையாகவிருக்க முருகப்பிள்ளையே மறுபடியும் வாய் திறந்தார்.

‘மகாஜனங்களுக்கு மீண்டும் கோடிவந்தனம். நாம் இங்கே எதற்காகக் கூடியிருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லவேணும்.

விஜயநகர சாம்ராச்சிய வீழ்ச்சிக்குப் பிறகு கர்நாடகம் யுத்தகளமாச்சுது. தில்லி மொகலாயர்களுக்கு இங்குள்ள துலுக்கர்களை அடக்கிவைக்கும் திராணிபோய்விட்டது. தில்லியையே காத்துக்கொள்வதென்பது பிரச்சினையாகிப்போனது. மொகலாய மன்னராகவிருக்கும் முகம்மதுஷா (Muhammad Sha)பிரக்யாதியை இந்தத் தேசம் அறியும். மராட்டியர்களைக்கேட்டால் கதைகதையாகச் சொல்கிறார்கள். பாரசீகத்திலிருந்து வந்த நாதிர் ஷா (Nadir Shah) மயிலாசனத்தையும், கோஹினூர் வைரம்பதித்த கிரீடத்தையும், அரண்மனைப் பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துப்போக, இவர் விரலைச் சூப்பிக்கொண்டிருந்தார். அவுரங்கசீப்பின் பேர்த்தியைக் கவர்ந்து நாதிர்ஷா தன்மகனுக்கு மணமுடித்ததும், இவரை முன்வைத்துக்கொண்டு, தில்லி தர்பாரிலேயே அவன் இந்திய தேசத்தின் சக்கரவ்ர்த்தியென முடிசூடிக்கொண்டதும் ஊரறிந்த சேதி. ‘

‘…. ‘

இந்த லட்சணத்தில் இங்கே துரைத்தனம் பண்ணவந்த முன்னாள் குவர்னர் துய்மாவும் (Dumas) சரி இப்போதைக்குத் துரைத்தனம் பண்ணவந்திருக்கும் துய்ப்ளே( Duplex)வும் சரி, இவர்களை புதுச்சேரிமண்ணில் அனுமதித்தற்கும், அற்பமாய்க் கிடைத்த நவாப் பட்டத்திற்கும், இவர்களது பாரியாள்களுக்குக் கிடைத்த பேகம் அந்தஸ்திற்கும் துலுக்கர்களுக்கு விசுவாசமாக இருந்துவருகின்றார்கள். தில்லி மொகலாயர்களிடம் அஞ்சிக் கிடந்த கர்நாடகத் துலுக்கர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். மொகலாயர்களின் ஆதிக்கத்தை உதறிவிட்டு, கருநாடக துலுக்க இராச்சியங்களான ஆற்காடு, வேலூர், ஹைதராபாத்தில் நடக்கும் அரியாசனப் போட்டிகளில் தொடர்ந்து சண்டைகள். சண்டைகள் முடிந்த நேரம்போக ஊதியமற்றுக்கிடக்கும் அவர்களின் படைவீரர்கள் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். விஜயநகர சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, மராத்தியர்கள் வடநாட்டில் மாத்திரமின்றி இங்கே தென்னாட்டிலும் சமீபகாலமாக ஆற்காட்டு நவாப்புகளுக்கும், ஹைதராபாத் நிஜாம்களுக்கும் சிம்மசொப்பனமாகத்தானே இருந்துவருகின்றார்கள். அங்கே நம்முடைய மராத்தியர்கள் அவர்களைத் தாக்கும்வேளை, இந்தப் பறங்கியர்களிடம் வெகுமான மூட்டைகளுடன், துலுக்கர்ககளது பெண்டுபிள்ளைகளும் குஞ்சுகுளுவான்களும் தஞ்சம் கேட்டுவருவதும், புதுச்சேரி துரைமார்கள் தங்கள் துபாஷிகளோடு, பத்துபன்னிரண்டு குதிரைகளுடனே, மேளதாளம், கொம்பு, தமுக்கு, தாசிகளாட்டமென சகலசம்பிரமத்துடனே புறப்பட்டு, எதிர்கொண்டுபோய் வெகுமானத்தைப் பல்லக்கில் வைத்துக்கொண்டு, கெவுணியில் பீரங்கிபோட்டு அழைத்துவருவதுமான காட்சிகளைப் புதுச்சேரியில் அன்றாடம் பார்க்கிறோம். அதுவுமன்றி சேசுசபையினர் சமீப காலமாக புதிதாக வந்திருக்கும் துரைசாணியுடன் சேர்ந்து நம்முடைய மக்களுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக அறிகிறோம். இதற்கு ஏதேனும் பரிகாரம் நாம் தேடியாக வேண்டும். ‘

‘உள்ளது, உள்ளது. ஏதேனும் உடனடியாகச்செய்தாகவேணும் ‘

‘அதன்நிமித்தமாகவே சொக்கேசன் சுவாமி உங்களைச் சந்திக்க ரகசியமாக இந்த ஏற்பாட்டினைத் திட்டம் செய்தார். இன்றைக்குப் புதுச்சேரியைச் சுற்றிலுமுள்ள முருங்கப்பாக்கம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, உழவர்கரையிலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கள் கூட்டத்தை அறிமுகப் படுத்தவேணும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர் மராட்டிய இராஜா போன்ஸ்லேயின் காரியஸ்தர், அடுத்து நீங்கள் அறிந்திருக்கக் கூடிய வைத்தியர் சபாபதிப் படையாட்சி, தரகர் வேலாயுத முதலியார், கும்பெனி படையில் உத்தியோகம் பார்க்கும் நம்முடைய தேவராசன். ‘

முருகப்பிள்ைளை விபரமாகச் சொல்லிக்கொண்டுபோக, வந்திருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் புன்முறுவல் மூலம், அங்கீகரித்துக் கொண்டார்கள். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த வேலாயுத முதலியார் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டுவந்தபோது கடைசியாக உட்கார்ந்திருந்வனை, நேற்றுத் தனது வீட்டில் வைத்தும், பெருமாள் கோவிலில் வைத்தும், குவர்னர் மாளிகையண்டை கிட்டங்கியில் வைத்தும் கண்டுவிட்டு, மீண்டும் இங்கே காண்பது அவரது மனத்தை அரிக்கத் தொடங்கியது. தேவராசனை இதுகுறித்து விசாரிக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தார்.

சொக்கேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

‘புதுச்சேரி குவர்னர் புதிய திட்டம் செய்திருக்கிறார். அதன்படி பட்டணத்திலே இருக்கப்பட்ட வெள்ளைக்காரர், சட்டைக்காரர், சேவகமில்லாமல் இருக்கப்பட்டவர்கலெல்லாரையும் உத்தியோகத்துத்துக்குவரச்செய்து வெள்ளைக்காரத் தெருவிலே தெருவுக்குத் தெருவுக்கு தம்பூரடித்துக்கொண்டு கடுதாசி படித்திருக்கிறார்கள். பின்னர் நேற்று மத்தியானம் மூன்று மணிக்கு கோட்டையிலே சொல்தாக்களாக சேவகம் எழுதிக் கொண்டு துப்பாக்கி கொடுத்திருக்கிறார்கள். கோட்டை கொத்தளங்கள் சகலமும் முஸ்தீபு பண்ணி அங்கங்கே பீரங்கியின் குண்டுகள், மருந்துகள் எல்லாம் கொண்டுபோய்சேர்க்கிறார்கள். இதனால், கூடிய சீக்கிரம் இங்கிலீஷ்காரர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலே யுத்தத்திற்கான முஸ்தீபுகள் தெரிகின்றன. நாம் இந்த நேரத்திலே மராத்தியர்களுக்கும், அவர்களுக்குக் கீழே இராச்சிய பரிபாலணம் பண்ணவிழையும் நமது கனவான்களுக்கும் உதவ வேண்டும். திருச்சிராப்பள்ளியில் மீண்டும் நாயக்கர் நிருவாகத்தினைக் கொண்டுவர திட்டம் செய்திருக்கிறோம். தெற்கே படிப்படியாக நாம் வளர்ந்து வடக்கே ஆற்காடும், ஹைதராபாத்தும் மராத்தியர்களின் ஆளுகைக்குக் கீழ் வரவேண்டும். நம் மக்களை கும்பெனி நிருவாகத்திற்கு எதிராக திரட்ட வேண்டும். ‘

‘வாஸ்தவம். இது குறித்து நாம் யோசிக்கத்தான் வேணும். தற்சமயம் பறங்கியர்களுக்கும், துலுக்கருக்கும் நடுவே நமக்குத் திரிசங்கு நிலைமதான். ‘ உழவர்கரை தனக்கோடி செட்டியார்.

‘சாமி..! தங்கள் உத்தாரபடிக்கு நடப்போம். தாங்கள் நமது தேசத்தின்மீது கொண்டுள்ள விசுவாசத்தாலன்றோ தேவரீர் இவ்விஷயத்தில் இவ்வளவு கவலைப் படுகிறீர். ‘ வேலாயுதமுதலியார்.

‘நாம் நமது பலத்தை உணர்ந்து முயற்சிபண்ன வேணும். சரியான சமயத்தில் பிரயோக்கிக்கவேணும். ‘ தேவராசன்.

சொக்கேசன் சாமி சற்று நேரம் அமைதியாகயிருந்து கேட்டுக்கொண்டார்.

‘ஆகா !.நமக்கு மனம் வெகு சந்தோஷமாச்சுது. உங்கள் வார்த்தைகளில் பழுது இருக்காது. தேசத்தின் மீதும் நமது சனங்கள் மீதும் உங்களுக்குள்ள பக்தியும் அன்பும் வெளிப்படையாக அறியலாச்சுது. உங்கள் மனதை அறிவதற்காகத்தான், திடாரென்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.. உங்கள் விருப்பமும் எமது விருப்பமும் ஒன்றாய் இருக்கிறது. உங்களது ஒத்துழைப்பு வேணுமென்கிறபோது தகவல்வந்துசேரும். அதுவரை பொறுமைக் காக்கவேணும். திருச்சிற்றம்பலம்..! ‘

‘திருச்சிற்றம்பலம் ‘

ஒவ்வொருவராகத் துறவி சொக்கேசைனைச் சேவித்துக்கொண்டுப் புறப்பபட்டார்கள்.

வேலாயுத முதலியார் மீண்டும் அவனைப் பார்த்தார். இம்முறை அவனது காதுகளில் கடுக்கனில்லை. சந்தேகமில்லை. இவர் சந்தேகப்படும் நபர்தான். இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறானெனில், தேவராசனுக்கோ அல்லது சொக்கேசன் சுவாமிக்கோ வேண்டப்பட்டவனாக இருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டார்.

எல்லோரும் கிளம்பிபோனபின் எஞ்சியிருந்தவர்கள் இராஜா போன்ஸ்லேயின் காரியஸ்தர், வைத்தியர் சபாபதிப் படையாட்சி, தரகர் வேலாயுத முதலியார், கும்பெனி படையில் உத்தியோகம் பார்க்கும் தேவராசன், அவனருகில் வேலாயுதமுதலியாரின் சந்தேகிக்கும் ஆசாமி.

துறவி சொக்கேசன் தேவராசனை அருகில் அழைத்தார்.

‘பிரெஞ்சுத் தீவிலிருந்து ஏதேனும் சேதி வந்ததா ? ‘

‘சுவாமி மஸ்கரேஜ்னிலிருந்து** துறைபிடித்துள்ள ‘லெ போந்திஷெரி என்கின்ற கப்பல்மூலம் பிரெஞ்சுதீவிலிருந்து நமக்கொரு கடுதாசி வந்துள்ளது. ‘

துறவி சொக்கேசன் தேவராசன் கொடுத்த உறையைக் கையில்வாங்கிப் பாதுகாப்பிற்காக வைத்திருந்த முத்திரையை அகற்றிவிட்டுப் பிரித்து வாசிக்கலானார்.:

‘தேவரீர் சொக்கேசன் சாமிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். இந்தக் கடுதாசி எழுதும் வயணமென்னவென்றால், இவ்விடம் நீங்கள் சொல்லியிருந்தபடிக்கு அப்பெண்ணையும், அவளது தாயார் காமாட்சி அம்மாள், சகோதரன் கைலாசம் ஆகியோரை நெருக்கமாக அவதானித்து வருகிறோம். அவர்களது ராஜவம்சத்தை அடையாளப்படுத்தக்கூடிய சான்றுகளான முத்திரை மோதிரமும் ஓலை நறுக்குமிருந்த பெட்டியுடனே தற்சமயம் பெர்னார்குளோதன் என்கிற பறங்கியன் புதுச்சேரிவந்துள்ளான் என்பதாக யூகிக்கிறோம். அதைத்தொட்டு தங்கள் சமூகம் தெரிவிக்கவேணுமென்றே, இக்கடுதாசியை எழுதினோம். உண்மையானத் தங்கள் ஊழியன் அருணாசலத் தம்பிரான். ‘

கடிதத்தைப் படித்து முடித்த துறவி சொக்கேசன் சுவாமி முகத்தில் ஒருவித திருப்தி நிலவியது.

‘தேவராசன் கிடைத்திருக்கும் சேதி நல்ல சேதியே. நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கின்றது. ‘

வைத்தியர் சபாபதிப் படையாட்சி துறவியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து வனங்கினார்.

‘சுவாமி எனது மகன்குறித்து ஏதேனும் தகவல்கள் கடிதாசியிலுள்ளதா. அவனது ஷேமத்திற்கு எந்தக் குறைவுமில்லையென தங்களது திருவாயால் கேழ்க்கவேண்டும். ‘

‘வைத்தியரே! நான் ஆரம்பத்தில் சொன்னதுதான். உம் வாையை நீர் அடைத்துவந்திருந்தால் உன் புத்ரனுக்கு எந்த விக்கினமும் நேராது. ‘

‘…. ‘

‘தேவராசன் நான் உன்னோடு சிறிது வார்த்தையாடவேண்டும். நீ கொஞ்சம் தங்கி போ.. அது சரி இவர் யார். இதற்கு முன்னர் சந்தித்ததாக நினைவில்லையே ‘

‘எனக்கு வேண்டியவரில்லை. ஒருவேளை இங்கிருக்கும் மற்றவர்களில் எவருக்கேனும் வேண்டியவராக இருக்கலாம் ‘

வேலாயுத முதலியாருக்கு விளங்கிவிட்டது. இந்த நபர் நம்மை நேற்றுமுதல் பின்தொடர்ந்துவந்திருக்கிறான் என்பதனை அறிந்த மாத்திரத்தில், வியர்த்துக் கொட்டியது. தன் அனுபவங்களைச் சொல்ல நினைத்தார். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. நடக்கவிருப்பதை அக்கூட்டத்திலிருந்த வேண்டாத நபரும் ஷணத்தில் உணர்ந்துகொண்டான். தேவராசன் கத்தியை உருவிய நேரம் வளவின் வாசலில் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தான். எதிர்பட்ட நோஞ்சான் மனுஷர்கள் வலப்புறமும் இடப்புறமுமாக வீழ, இருட்டில் நின்றிருந்த மாமரத்தினை நோக்கி ஓடினான். இவனுக்கெனவே காத்திருந்ததுபோல தனது குதிரையில் ஆரோகனித்து மாறன் தயாராகவிருந்தான். அடுத்த சில நாழிகைகளில் மாறனது குதிரை இருவரையும் சுமந்துகொண்டு இருட்டிற் பாய்ந்தது.

/தொடரும்/

* மாற்றுப் படைத்தளபதி

**Ile Mascareignes ( Ile de France (மொரீஷியஸ்),Ile Bourbon (ரெயூனியோன்), Ile Rodrigues.

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts