நாகரத்தினம் கிருஷ்ணா
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்… … … ..
செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
-சிவபுராணம் 26 -31
இருபதாம் நூற்றாண்டு….
புதுடில்லி ‘, ஏப்ரல் 17 1999 -வாஜ்பாய் தலைமையிலான அரசு மக்களவையில் நடத்தபட்ட
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வாஜ்பாய்
அரசு மீது நம்பிக்கை தெரிவித்து 269 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து 270 எம்.பிக்களும்
ஓட்டளித்தனர். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பரதிய ஜனதா அரசு கவிழ்ந்தது.
13வது மக்களவை தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான
கூட்டணி அரசு கடந்த ஆண்டு (1998) மார்ச் மாதம் பதவி ஏற்றது. 13 மாதங்கள்
ஆன நிலையில் பிரதமர் வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 18 எம்.பி.க்களைக்
கொண்ட அ.தி.மு.க. விலக்கிக் கொண்டது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒர் அரசு
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது இதுவே முதல்
முறையாகும். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் மக்களவையில் நடந்த 7வது நம்பிக்கை
வாக்கெடுப்பு ஆகும். ‘
‘மணி! என்ன இந்த நேரத்துல இப்படி சத்தம்போட்டுப் பேப்பர் படிக்கிற ? ஏதாவது முக்கியமான செய்தியா ? வேலுவந்தா எங்கிட்ட உடனே சொல்லணும். மறந்திடாதே. உள்ளே, பெரியவர் சம்பந்தத்தோட பேசிக்கொண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துலே முடிஞ்சிடும். ‘
‘சரி மிஸியே. அப்படியே இண்ணைக்கு என்னையும் கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிடுங்க ‘.
‘என்ன ? இன்றைக்கும் சினிமாவா ? உருப்படமாட்டே ‘ செல்லமாக அவனை கண்டித்துவிட்டு, பெர்னார் ஃபோந்தேன், இந்தியவியல் மையமிருக்கும், பகுதிக்கு மீண்டும் திரும்பினான்.
கடந்த இருவாரங்களாக பிரெஞ்சு இந்தியவியல் (Indology) கூடத்திலேயே இரவு பகலாக அவன் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். நித்திரையும் இல்லை. அதனைத் தொடர்ந்த கனவுகளும் இல்லை. பிரெஞ்சு இன்ஸ்டிட்ட்யூட்டின் இயக்குனரும் பேராசிரியருமான கிரிமால் எழுதியுள்ள பவபூதியின் மாலதிமாதவம் வியாக்கியானம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதுசம்பந்தமாகத்தான், பெர்னார் இந்தியவியல் மையத்தின் முக்கிய ஆய்வாளர்களோடு விவாதித்துக் கொண்டிருக்கிறான்.
பெர்னார்ருடைய ஆர்வம், சமகாலத் தமிழ்ப் படைப்புலகைப் பற்றியது. தமிழிலுள்ள சிறந்த புதுக்கவிதைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்துக் கொண்டுபோகணும் என்கிற ஆர்வம். பிறகு சில கிழமைகளாக வட்டார வழக்குகளையும், இந்திய ஆய்வாளர்கள் உதவியோடு பார்க்கணும் என்பதில் குறியாகவிருந்தான்.
கடந்த சில வாரங்களாக சைவ சித்தாந்தத்திலும் ஆர்வம் காட்டுகிறான்.
பனையோலைச் சுவடிகளில், தமிழ்நாட்டில் பலநூற்றாண்டுகளாகத் தழைத்திருந்த சைவசித்தாந்தத்தின் சிந்தனைக் கருவூலங்கள் வேறு எங்காவது இவ்வளவு எண்ணிக்கையில் பார்க்க முடிந்தால் ஆச்சரியம். 8600 ஓலைச் சுவடிகளும், அவற்றுள் 120000 உரைநடைகுறிப்புகளும் இருந்தன. இருந்தவற்றுள் அறுபதுசதவீதம் திராவிட லிபியான கிரந்தத்தில் உள்ளதாகச் சொல்லப்பட்டது. மற்றவை பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும், தமிழிலும், குறைந்த எண்ணிக்கையில் துளு, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் இருப்பதாக அறிய நேர்ந்தது.
செல்லரித்து, முனைகள் நைந்து, உடைந்து, தொடர்பற்று, பல சமயங்களில் முடிவையும் ஆரம்பத்தையும் தொலைத்து, கட்டினை அவிழ்க்கும்போதே காற்றில் பறக்கும் தன்மைகொண்ட ஓல நறுக்குப் பொக்கிஷங்கள் இங்கே இலக்கப் பதிவாக்கபட்டுக் கணிணிகளிற் சேர்ப்பிக்கப்படுகின்றன.
பிரெஞ்சு அரசாங்கத்துடைய கல்வித் துறையின் அக்கறையும், நுண்புலமும், நிதிவளமும், இந்திய வளங்களை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் சென்றதற்குப் பிராயச்சித்தமாக நமது மூதாதயர்களின் சிந்தனைகளை மீட்க முயலுகின்றது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டிருந்தவர்கள் பரம்பரையில் வந்த பிரான்சுவாகுரோ, கிரிமால், பெர்னார், நிக்கோலாஸ் போன்ற மேற்கத்தியர்களின் அறிவு, அவர்களிடம் அடிமைப் பட்டிருந்த இனத்தின் வாரிசுகளான கோபாலய்யர், சம்பந்தம், சுப்பிரமணியன், மரியதாஸ் போன்ற கிழக்கத்தியர்களின் அறிவோடு ஓர் இயல்புப் புணர்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறது
அவ்வோலைகளில் சைவ ஆகமங்களோடு, வானசாஸ்திரம், சித்தவைத்தியம்,புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள், சமஸ்கிருத இலக்கியம், தமிழிலக்கியமென எல்லாத் துறைகளைப்பற்றியும் பேசப்பட்டது.
பிரெஞ்சு அரசின் கீழைக்கலாச்சார மையத்தின் இந்தியவியல் துறை, 1955ம் ஆண்டிலிருந்து சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களை தென் இந்தியாவின் பல மூலைகளிலிருந்து சேகரித்து இந்தியர்களின் பூர்வீகச் சிந்தனைச் சொத்தைக் காப்பாற்றி வருகின்றது. அவற்றுள் சிலவற்றை பெர்னார் ஃபோந்தேன் ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்திருக்கிறான்.
யோகபாதத்தில் பேசப்படும் ஆன்மசுத்தி, அந்தர் யாகம் முதலியனவும், ஞானபாதத்தின் பசு-பதி பாச லட்சணங்களும், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆத்மரூபம், ஆத்ம தெரிசனம், ஆத்ம சுத்தி, சிவ ரூபம், சிவதெரிசனம், சிவபோகம் என்கின்ற தசாகாரியங்களின் இலக்கணங்களூம், இவனது புத்தியைக் காடு மேடென்று அழைத்துச் சென்று; கடைசியில் நீர் சுழித்து ஓடும் ஆற்றங்கரையில் நிறுத்தியிருந்தது.
மறுகரையில் வண்ண வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பட்டாம் பூச்சிகளும், வண்டுகளும் ஒவ்வொரு மலராய் உட்காருவதும் எழுவதுமான காட்சிகள். குயில்கள் பாடுகின்றன, மயில்கள் ஆடுகின்றன. ஆற்றினையொட்டி, மல்லிகையும் முல்லையும் படர்ந்திருக்கும், முடிவற்ற சாம்பல்வண்ண மலைத்தொடர். படிகம்போன்றொரு சுணை. சிங்கம், புலி, மான்கள், முயல்கள், அணில்கள், புறாக்கள், கழுகுகளென ராஜஸ, ராட்சஸ உயிர்கள். அவைகள் இனங்களாற் பல, வண்ணங்களாற் பல, பிறப்பாற் பல, உடல்களாற் பல, இயக்கங்களாற் பல. அனைத்தும், வேனிற்காலத்து கானல்கள், மாயையின் அவதாரங்கள். அந்தக்கூட்டத்தில் பெர்னார்குளோதன் இருக்கலாம். வேம்புலிநாய்க்கர் இருக்கலாம். இவன்கூட ஏதோவொன்றாய், உண்டு, உறங்கி உயிர்வாழலாம். துள்ளி ஓடலாம். சோர்ந்திருக்கலாம். எங்கே இருக்கின்றான் ? அதுதான் கேள்வி. தேடித்தேடி கண்கள் பூத்ததுதான் மிச்சம். இன்று பொய்யாகவும், நாளை உண்மையாகவும் அங்கே உலாவரலாம். மறுகரையின் அனுபவங்கள் உண்டென ஞானம் சொல்கிறது. மறுபடியும் இவனை எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. ஆற்றில் விழுந்து நீந்திச் செல்ல தைரியம் வேணும். அல்லது இரு கரையையும் இணைத்திருக்கும் கயிற்றைப் பிடித்து ஆற்றில் விழுந்துவிடாமல் முதலைகளின் வாயிற் சிக்காமற் கடந்தாக வேண்டும். ஏதேனும் படகொன்று கிடைத்தாற் கூட அக்கரைக்குப் போக முடியும். துடுப்பின்றிக் காத்திருக்கிறான். சுமைகளோடு காத்திருக்கிறான். தலையிலும், தோளிலும், கைகளிலும் சுமைகள். இறக்கிவைப்பதற்கு மாறாகத் தினந்தோறும் சிப்பம் சிப்பமாய் இவனிடம் சேர்ந்துகொள்ளும் சுமைகள். வேண்டியவர்கள் கொடுத்துவிட்ட கட்டுச்சோறு மூட்டையும் அதிலடக்கம். தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் என்று அவரவர் பிரியத்திற்கேற்ப கொடுத்திருக்கிறார்கள். காலம் காத்திருக்க முடியாதென்று சொல்லிவிட்டது. உரியகாலத்திலே உண்டு முடித்திருக்கவேண்டுமாம். நேற்றுவரை, கமகமவென்று வாசம் தந்தைவை, இன்றைக்கு துர் நாற்றமெடுக்கின்றது. புழுக்களை உற்பத்தி செய்திருக்கிறது. தலையெங்கும் புழுக்கள் வழிகின்றன. பிறகவை மானுடப் பிறப்பை எய்தலாம். மறுபிறப்பைத் தொடரலாம்.
மரணமிலாப் பெருவாழ்வை என்பது மறுபிறப்புக் குறித்துச் சொல்லப்படுவதா ? அணுக்கள் கூட உயிர்களென விஞ்ஞானம் சொல்வது இதைத்தானா ? முட்டையை அலகாற் குத்தி குஞ்சு வெளியே வரவும், பிறந்த குழந்தை முலைதேடவும், கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாகவும், புலியைkகூட முறத்தாலடித்து விரட்டிய பெண், கரப்பான் பூச்சிக்கு அஞ்சி ஓடி ஒளிவதும் எதனால் ? எப்படி ? இவையெல்லாம் எங்கே கற்பிக்கபட்டது. இவை அைனைத்துமே ஆன்மாவின் பல முகப் பயணத்திற்கான ஆதாரங்களா ? இதனாற்தான் சைவ சித்தாந்தம் இறப்பைக்கண்டு அஞ்சுவதில்லையா ? எனது பிறவிப்பயனத்தில் இளைப்பாறுதல் என்பது எப்போது ? ஆற்றின் கரையை கடந்தபிறகா ?
‘யானேதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன் ‘ என்று மணிவாசகர் பாடுவதென்பது இறப்பினை வரவேற்கும் மனநிலையா ?
—-
எனது உலகத்தில் உறக்கமில்லை. உறக்கமில்லாததால் விழிப்புமில்லை., உடலென்று ஒன்று இல்லாததால் அதற்குப் போஜனம் வேண்டியதில்லை. போஜனம் வேண்டப்படாததால் கழிவுகளில்லை. என் பயணமும் எளிதானது, பிறவிகள் தோறும் உன்னைத் தொடர முடிந்தது. தொடக்கமென்றிருந்தால் முடிவு வேண்டாமா ?
சிந்தனைகளைத் துண்டித்துக் கொள்ளாதே!… தொடர்ந்து சிந்தனைகளில் பயணித்தால் நான் யாரென்பதை அறிய முடியும். நீ அதிகமாகச் சிந்திப்பதாக அறிகிறேன். சிந்திக்கச் சிந்திக்க எனக்கான விடுதலை காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உண்மை யென்பது சிந்னையின் மையத்தில் இருக்கிறது.
பிறவிகள் அறுக்கும் உபாயமென்பது வேறொன்றுமில்லை. ஏற்கனவே நான் பலமுறை சொன்னதைப்போல ஆணவம் களையப்படவேண்டும்.. ஆணவத்திற்கு அதற்கான தேவைகளை முதலில் நிறைவேற்றப்படவேண்டுமென்கிற சுயநலங்கள் உண்டு. அது எதனைப் புரிந்துகொள்ள இயலுமோ, எங்கே அதற்குச் செளகரியம் செய்துக் கொடுக்கப்படுகிறதோ அதனை, அங்கே மட்டுமே போற்றும்.
நண்பனே! செக்குமாடுகள் ஊர்போய்ச் சேர ஒரு போதும் உதவாது.
—-
‘மிசியே பெர்னார்… வேலு வந்திருக்கிறார். ‘ . பணியாள் மணி எதிரே நின்றிருந்தான். பெர்னர் சிந்தனையிலிருந்து விடுபட்டிருந்தான். இந்தியவியல் நண்பர்கள் புறபட்டுச் சென்றிருந்தார்கள்.
‘Bien, tu vas. Je viens dans quelques minutes ‘ மணி தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பெர்னாருக்குத் தன் தவறு புரிந்தது. அவசியமிருந்தாலொழிய பிரெஞ்சு மொழியை இந்தியர்களிடத்தில் உபயோகிப்பவன் அல்ல.
‘மன்னிச்சுக்கதம்பி.. வேலுவை இருக்கச் சொல்லு. ஒரு சில நிமிடங்களில் வந்திடறேன்.
முகத்தை அலம்பி, தேங்காய்ப் பூ துவாலையால் துடைத்துக்கொண்டு புறப்பட்டான்.
வழக்கம்போல வேலு சைக்கிளில் காத்திருந்தான்.
‘வணக்கம் வேலு. வந்து வெகு நேரமாகிறதா ? ‘
‘இல்லை, கொஞ்ச முன்னாலதான் வந்தேன். ‘
‘என்ன நிறைய வேலைகளா ? ‘
‘ம்.. அப்படி சொல்லமுடியாது. எப்போதும் போலத்தான். ‘
‘எங்கே போகலாம். களைத்திருக்கிறேன். எனக்கு ஒரு பியர் குடிக்கவேண்டும். லிபர்டிக்குப் போகலாமா ? ‘
‘ம்.. ‘
மணி பெர்னாருடைய சைக்கிளை, பிரெஞ்சு மையத்தின் உள்ளேயிருந்து இதற்குள் எடுத்துவந்திருந்தான்.
‘என்ன நடந்தது ? வேம்புலி நாயக்கர் மருமகளைப் பார்த்தாயா ? பெர்னார் குளோதன் பற்றிய தகவல்கள் அவளுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா ? ‘
‘இல்லைப் பார்க்கலை. ஒருவன் இறந்தபிறகு, இந்துக்கள் வழக்கத்திபடி சில சடங்குகள் உள்ளன. அதற்குப் பிறகுதான் பார்க்கமுடியும். ‘
‘நமக்கேற்பட்ட அனுபவங்கள்குறித்து உன்னோட அபிப்ராயமென்ன ? ‘
‘எதைச் சொல்ற ? ‘
‘இறந்திருந்த வேலு நாயக்கர், நம்மோடு பேசினாரே ? ‘
‘அவர் இறந்திருந்தார்னு எப்படிச் சொல்ற ? ‘
‘அவரோட மருமகள் சொன்னாளே ? ‘
‘அவர் இறக்காமலிருந்து, அவள் அவசரபட்டு அப்படியான முடிவுக்குவந்திருக்கலாமில்லையா ? ‘
‘நாம்தானே சுவாசத்தைச் சோதித்தோம். இறந்திருந்தது உண்மைதானே ?. ‘
‘சிக்கல் இறப்பைப் பற்றியதல்ல. இறந்த நேரம் குறித்து. எனக்கென்னவோ நம்ம்பிடம் பேசியபிறகே அவர் இறந்திருக்க வேண்டும். இறந்த பிறகு பேசியிருந்தால் கூட, அதற்கும் விஞ்ஞான பூர்வமா ஏதேனும் காரணமிருக்கலாம். இதுமாதிரியான அனுபவங்களுக்கெல்லாம், வறட்டுக் கற்பிதங்களைக் கொள்ள நான் தாயாரில்லை. ‘
ஐந்து நிமிட சைக்கிள் பயணத்தில் லிபர்டி ஓட்டல் வந்திருந்தது. சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு. உள்ளே சென்று ஓர் ஓரமாக இருக்கைப் பிடித்து அமர்ந்தனர்.
மது, சிகரெட், மசாலாகளின் மணம், இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தது மாதிரி சுவாசத்தை அடைத்துக்கொண்டது. சந்தைப் பேச்சு, மதுபுட்டிகள், உடையும் சோடா,. தீனியை அவசர அவசரமாக வாயிற் போட்டு, எலும்பைத் துப்பி, மூக்கைச் சிந்தி கைக்குட்டையிலோ, வேட்டியிலோ அக்கறையாய் துடைத்துக்கொண்டு இந்தியச் சகோதரர்கள், மேசைகள் முழுதும் வருடக்கனக்கில் சாப்பிடாததுபோல இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
‘வேறு எங்கேனும் போகலாமா ? ‘ வேலு.
‘பரவாயில்லை, வந்துட்டோம். ‘
விசாரித்த பையனிடம் வேலு, ‘ஒரு கல்யாணி, பிரிஜ்ஜில வச்சதா இருக்கட்டும். கொண்டு வா. ‘, என்றான்.
‘வேற என்ன சார் கொண்டு வரட்டும் ? ‘
‘முந்திரிப் பருப்பு இருக்கா ? இருந்தா கொண்டுவா. இப்பொதைக்கு இது போதும். ‘
கல்யாணி பீர் பாட்டிலையும், முந்திரிபருப்பையும் கொண்டுவந்தவன், ஊசிப்போன கொத்து கடலையையும் கொண்டுவந்தான்.
போத்தலைத் திறந்து இரண்டு கண்டாடி கிளாசில், நுரையோடு பியரை நிரப்பினார்கள். பெர்னார் ஒரு தம்ளரை எடுத்தான்
‘ஆ வோத்ர் சாந்த்தே ‘ (A votre sante – உன் உடல் நலனுக்காக), என்றான்.
பதிலுக்கு வேலு தன்னுடைய கிளாஸை எடுத்து அவனுடையதில் மெல்லத் தொட்டு ‘ ஆ வோத்ர் ‘ (உனக்காக) வென்றான்.
‘விஸ்கிக்கு ஆர்டர் பண்ணலாமா ? ‘ வேலு.
‘பியருக்கு மேலேயா ? என்ன ரசனை இது ? ‘ என்னோட ஜாகைக்கு வா. நேற்றுதான் பிரெஞ்சு கான்சுலேட்ல வேலை செய்யுற என் நண்பன்
இரண்டு பிளாக் லேபில் கொடுத்து விட்டிருக்கான். ‘ தனியா எப்படி குடிக்கிறதுண்ணு யோசனைச் செய்துக் கொண்டிருந்தேன்.
தீடாரென்று வேலு அழத்தொடங்கினான்.
‘ஏய்.. என்ன ஆச்சு ? இந்த பியருக்கா இத்தனை ரியாக்ஷன் ‘
‘ஈ.எம்.எஸ் ஞாபகத்தில இருக்கேன் ‘.
‘யார் அவரு ? ‘
‘என்ன மாதிரி உழைக்கும் வர்க்கம். எண்ணமெல்லாம் மக்கள்னு வாழ்ந்தவர். இறந்து ஒருவருடம் ஆகுது. அவரது நினைவா ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். அந்த நினைப்புல… ‘
‘நான் ஒண்ணு சொல்வேன் வருத்தப் படக்கூடாது ‘.
‘என்னது ? ‘
‘ஈ.எம்.எஸ்ஸோ அல்லது நீ அடிக்கடி பேசுகின்ற புதுச்சேரி சுப்பையாவோ, பொதுவாக கம்யூனிஸ்டுகளைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயங்கள் உண்டு. அரசியல்வாதிகளிலேயே அதிக பட்ச யோக்கியர்கள் எங்க இருக்கிறாங்கண்ணு கேட்டா, அங்கதாண்ணு கைகாட்டுவேன். இப்படி யோக்கியர்களாக இருப்பாதாலேயே என்னவோ அவர்களும் உருப்படமாட்டாங்க அடுத்தவங்கைளையும் உருப்படுத்த மாட்டாங்க ‘.
/தொடரும்/
- மந்திர உலகின் தந்திரங்கள்
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- ஆயுத எழுத்து பற்றி
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- இருதுளி கண்ணீர்
- தண்டவாளங்கள்
- மெய்மையின் மயக்கம் – 1
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- இல்லம்…
- அறை
- கவிதைகள்
- பூமகன்
- தீவு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- பலியர்களுடன் உரையாடல்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- Dahi pasanday
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- பூமித்தின்னிகள்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்
- வள்ளி வோட்டு போட போறா!
- காத்திருப்பு
- வலை
- இலவசம்
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- பிறந்த மண்ணுக்கு – 3
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- தேனீ – மொழியும் பணியும்
- ரேடியோவின் கதை
- … உலக போலீஸ் …
- கவிதைகள்
- தாய் மனம்
- உள் நோக்கு
- கவிதைகள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- நாய்கள்
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- வதை
- சீதைகளைக் காதலியுங்கள் !