பிறந்த மண்ணுக்கு – 3

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

அ முகம்மது இஸ்மாயில்


3.

அப்படி இப்படின்னு ஒரு 20, 22 வருஷம் ஓடிப் போயிடுச்சு.. இந்த இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ நடந்து போச்சு.. ரவிக்குமாரின் திருமணம், தாமோதரணின் மரணம் இப்படி எவ்வளவோ நடந்து விட்டது. ஆமாம், தமிழ்வாணன் வட மாநிலத்தில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தாமோதரன் இறந்துவிட்டார் ஆனால் அவனுக்கு அன்று தான் பரிட்சை. தாமோதரன் சாகும் தருவாயில் தமிழ்வாணனுக்கு ‘தெரியப்படுத்த வேண்டாம்’ என்றும் அவன் பரிட்சை முடித்து வரும் போது ‘இந்த கடிதத்தை நான் கொடுத்ததா சொல்லி அவனிடம் கொடுத்துடுங்க’ என்றும் கொடுத்திருந்தார். தமிழ்வாணனுக்கு பரிட்சை முடிந்ததும் விஷயம் தெரிவிக்கப் பட்டது. உடனே புறப்பட்டு வந்தான். முகத்தில் இனம் தெரியாத கவலை எப்போதுமே ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் பெரியப்பாவிடமோ பெரியம்மாவிடமோ அதிகமாக தொடர்பு கொள்ளவில்லை. ஒரு முறையோ என்னவோ தான் அவர்களை அவன் சந்தித்தது ஆனால் சரியாக பேசவில்லை.. எப்போதும் படிப்பு.. படிப்பு என்றே காலத்தை கடத்தி விட்டான். அன்பு, பாசம், குடும்பம் என்று எதுவுமே தெரியவில்லை அவனுக்கு. இந்த சூழ்நிலையில் தான் அவனுக்கு அவன் அப்பாவின் கடிதம் கையில் கிடைத்தது.

கடிதத்தை பிரித்தான். படித்தான்.

அன்பு பிரியமுள்ள மகன் தமிழ்வாணனுக்கு தந்தை என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் தாமோதரன் எழுதிக் கொள்வது.

உன் தந்தை ஒரு சுயநலவாதி. நீ பிறந்த போது தாயை இழந்தாய். உன்னை பற்றி எண்ணாமல் முட்டாள் தனமாக உன் தாயை கொன்று விட்டுத் தான் நீ பிறந்தாய் என்று எண்ணி வந்தேன். என் அப்பா நொடிந்து போனதும் என் அம்மா இறந்ததும் நான் பிறந்த பிறகு தான். நான் தான் நொடிந்து போனதற்கு காரணம் என்று என்னை ஒதுக்கித் தள்ளாமல் நான் ஆசைப் பட்டப்படி என்னை ஆளாக்கியது என் அண்ணன் தான். கண்ணாடி முன்னால் நின்று முக அழகை மட்டுமே பார்த்து வந்த நான், திடாரென நானே கண்ணாடியாகி என்னையே கவனித்த போது என் குறைகளை பார்க்க ஆரம்பித்தேன். இது காலம் கடந்த ஞானோதயம் தான். என்ன செய்வது ? வாழும் போது வாழ்க்கை புரிய வில்லை வாழ்க்கை புரிந்த போது வாழ வயதில்லை.

எனக்கு தெரிந்த நல்ல குணங்களை நான் உனக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், காசு சேர்க்கும் ஆசையில் கவனத்தை திருப்பி விடாதே ஏனெனில் சில்லறை ஆசை கல்லறை செல்லும் வரை விடாது. நீ படித்த மருத்துவ படிப்பு ஏழைகளுக்கும் முக்கியமாக நீ வளர்ந்த கிராமத்து மக்களுக்கு உன் அப்பா பிறந்த மண்ணுக்கு பயனளிக்க வேண்டும். உன் பெரியப்பாவின் ஆசையும் அது தான்.

நீ என் கடிதத்தை படிக்கும் இந்த நேரத்தில் நான் உயிரோடு இருக்க மாட்டேன். உனக்கு எல்லாம் உன் பெரியப்பா பெரியம்மா தான். நீ உன் பெரியப்பா, பெரியம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாய் என்பது எனக்கு தெரியும் ஆனால் அவர்கள் உன்னை விரும்பவில்லை அதனால் தான் உன்னை ஊரை விட்டு அனுப்பி விட்டார்கள் என்ற தவறான நினைப்பு உன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எங்கே என்னை போல் நீயாக சொந்தமாக கற்பனை பண்ணிக் கொண்டு விலைமதிப்பற்ற அன்பு, பாசம் போன்ற செல்வங்களை இழந்து விடுவாயோ என்று பயமாக உள்ளது.

நன்றாக படி. எனக்காக நான் பிறந்த மண்ணுக்கு செல். உன்னை ஆசையுடன் வளர்த்தவர்களின் கண்கள் இதயம் இரண்டையும் குளிர வை. வசதியற்றவர்களுக்கும் மருத்துவச் சேவை செய். வாழ்வின் பயன் பெறுவாய். வாழ்த்துக்கள்.

மரணத்தின் வாசலில் இருந்து

உன் தந்தை.

என்று கையெழுத்து போடப்பட்டு முடிந்த அந்த கடிதத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 முறை படித்திருப்பான். மருத்துவ படிப்பு முடிந்தது. உடன் மருத்துவ பயிற்சியும் முடிந்தது.

ஊருக்கு வந்தான். அண்ணன் ரவிக்குமார் தான் பெரிய அளவில் வளர்ந்திருந்த நிறுவனத்தை கவனித்து கொள்வது. வட நாட்டிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய தமிழ்வாணனை ரவிக்குமார், ரவிக்குமார் மனைவி சாருலதா இருவரும் விமான நிலையத்திலிருந்து காரில் அழைத்து வந்தார்கள். ரவிக்குமார் சாருலதா திருமணம் தாமோதரனின் வியாபார நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் நடந்தது.

சாருலதா கேட்டாள், “தமிழ்.. அடையார்ல எனக்கு ஒரு இடம் இருக்கு அங்கே ஒரு ஹாஸ்பிடல் திறக்கிறீயா ? நீ வேணும்னா இப்பவே சொல்லு ஏற்பாடு செய்றேன் டோண்ட் ஒர்ரி அபவுட் மணி.. ஐ டேக் கேர்..” என்றாள்.

தமிழ்வாணன் மறுத்தான் “இல்லண்ணி எனக்கு இப்ப அந்த யோசனை இல்லை” என்றான்.

சாருலதா விடாமல் கேட்டாள் “எனக்கு டாக்டர் அனில் ஷர்மான்னு ஒருத்தரை நல்லா தெரியும் அவர்ட்ட பிராக்டாஸ் போறீயா” என்றாள். தமிழ்வாணன் “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி இப்ப வேணாம்” என்றான். சாருலதா பிடிவாதமாக “லுக்..” என்று ஆங்கிலத்தில் ஏதோ சொல்ல நினைத்த போது ரவிக்குமார் சாருலதாவை கைமறித்தான் “இப்ப தான் வந்திருக்கான் ட்ரிப் எப்படி இருந்துச்சு நீ எப்படி இருக்கேன்னு கேக்கல.. அதவிட்டுட்டு..” என்றான்.

சாருலதா “என்ன ரவி.. நீயே இப்படி பேசுறே.. அவன் பியூச்சரை பத்தி நான் கவலைப் படக் கூடாதா ?” என்றாள்.

ரவிக்குமார் காரின் வேகத்தை கூட்டிக் கொண்டே “அதுக்கு நீ என்ன பிளேன் வைச்சிருக்கேன்னு கேக்காம இத செய் அத செய்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா எப்படி ?” என்றான்.

சாருலதா அதற்கும் விடாமல் ஏதோ சொல்ல வாயெடுத்த போது தமிழ்வாணன் இடைமறித்து “அண்ணன் நான் பெரியப்பா பெரியம்மா கிட்டே போய் தங்கலாம்னு ஆசைப்படறேன்” என்றான்.

ரவிக்குமார் மலர்ந்தான்.

சாருலதா அலட்சியமாக கேட்டாள் “அந்த கிராமத்துல என்ன இருக்குன்னு போறேங்குறே ?” என்றாள்.

ரவிக்குமார் சாருலதாவிடம் “நீ சும்மா இரு.. அவன் இஷ்டம் தான்.. நீ சின்ன வயசில அங்க வந்ததிலிருந்து ஒரு தடவை கூட போகலை.. கூப்டா கூட வரமாட்டே இப்ப நீயா வந்து போறேங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் எப்ப போனாலும் உன்னை தான் ரொம்ப விசாரிப்பாங்க.. உன் போட்டோ கூட அவங்க பார்த்ததில்லை.. என் கல்யாணத்துக்கும் நீ வரலை அப்பா சாவுக்கும் நீ வரலை.. இப்ப நீயே போய் நான் தான் தமிழ்வாணன்னு சொன்னாலும் அடையாளமே தெரியாது போ.. சரி.. சரி.. எப்ப போறே காரெடுத்துக்க.. பணம் எவ்வளவு வேணாலும் எடுத்துக்க” என்றான்.

தமிழ்வாணன் “ரொம்ப தேங்க்ஸ்ண்ணே.. காரெல்லாம் வேணாம் பஸ்ல போறேன் காசு தேவைப்படும்.. இங்கே ஒரு வேலையும் இல்லை நான் நாளைக்கு காலைலேயே கிளம்பிடறேன்.. நீங்க அங்க யாருக்கும் தகவல் ஒண்ணும் சொல்ல வேணாம்.. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றான்.

சாருலதா கேட்டாள் “எப்ப திரும்புவே ?” என்று-

தமிழ்வாணன் பதில் சொல்ல வாயெடுத்தான் அதற்குள் அவளே “ஒரே வாரத்துல வந்து இறங்குறீயா இல்லையான்னு பாரு.. யெஸ் ஐயம் ஷ்யூர்” என்று அடித்து சொன்னாள்.

பேருந்து வந்து நின்றது.

பேருந்து நடத்துனர் சொன்னார் “இது தான் தம்பி நீங்க இறங்க வேண்டிய எடம்” என்று..

தமிழ்வாணன், “ரொம்ப நன்றிங்க” என்று கூறி விட்டு இறங்கினான்.

சக்கரம் உள்ள பெரிய பெட்டியை இழுக்க முடியாமல் இழுத்துக் கொண்டே நடந்தான் இது பற்றாது என்று தோலிலும் கழுத்திலும் பைகள் வேறு. ஊரே மாறியிருந்தது. ‘இங்கே ஒரு கடை இருக்குமே’ என்று தேடி பார்த்தான், கடை மூடியிருந்தது ஆச்சர்யத்துடன் ‘அதிகாலையிலேயே திறந்து விடுவார்களே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். போகிற ஒரு சைக்கிள் ஆசாமியிடம் கொஞ்சமாக ஞாபகம் வைத்திருந்த தெருவை விசாரித்து உறுதி படுத்திக் கொண்டே வீட்டை கண்டுபிடித்தான்.

வீட்டு வாசல் படியேறினான். வீடு திறந்து தான் இருந்தது. வீட்டில் வானொலி பெட்டியில் பழைய பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ்வாணன் “வீட்ல யாரும் இல்லையா ?” என்று கேட்டான்.

வீட்டின் உள்ளிருந்து ஒரு இளம் பெண்ணின் குரல் “யாருங்க.. அங்கேயே இருங்க இந்த வர்ரேன்..” என்றது.

தமிழ்வாணன் ‘யாரா இருக்கும் ?’ என்று யோசித்த வினாடி அந்த அழகிய இளம் மங்கை சேலை தலைப்பை சரி செய்துக் கொண்டு வானொலியை நிறுத்தி விட்டு “யாருங்க வேணும்.. நடேசன் அப்பாவும் மல்லிகாம்மாவும் வெளியே போயிருக்காங்க நீங்க பட்டணத்துலேருந்து வந்திருக்கீங்களா ?” என்றாள்.

தமிழ்வாணன், “ஆமாங்க.. ரவிக்குமார் தெரியுங்களா ?” என்றான்.

அவள் “ஓ.. தெரியுமே அவங்க தான் அனுப்சாங்களா ?” என்றாள். தமிழ்வாணன் “நீங்க யாருன்னு தெரியலையே” என்றான்.

அவள் சொன்னாள் “என் பேரு தேவிகா பக்கத்து வீடு தான்.. இந்த வீட்டுல எல்லா வேலையும் நான் தான் பார்ப்பேன்.. அவ்வளவு தான்.. நீங்க உக்காருங்க என்ன குடிக்கிறீங்க ?” என்று கேட்டாள்.

தேவிகா.. இந்த பெயரை அவள் சொன்னதும் உள்ளுக்குள் ஒரு உணர்ச்சி அவனை உலுக்கியது அந்த உணர்ச்சியின் பெயர் என்ன ? அதை அறியுமுன் அவனே பேச தொடங்கி விட்டான்.. “தேவிகாவா நீ ?..” கேட்டான்.

தேவிகா ஆச்சர்யமாக “நீங்க..” என்று இழுத்து அவனையே உற்று பார்த்தாள்.

தமிழ்வாணன், “என்ன தெரியல ?..” என்று கேட்க..

தேவிகா ‘தமிழ்வாணன்..’ என்று சொல்ல வாயெடுத்து வெட்கம் தடுத்து தலையை கீழே போட்டு விட்டு “நல்லா.. இருக்கீங்களா ?.. என்ன மன்னிச்சுடுங்க.. நீங்க யாருன்னு தெரியாம..” என்றாள்.

தமிழ்வாணன், “அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்று கூறி தன் பைக்குள் கையை விட்டு “உனக்கு சாக்லெட் பிடிக்கும்ல இந்தா இதெல்லாம் உனக்கு தான் வாங்கிட்டு வந்தேன் வாசல்ல பெட்டி இருக்கு அதுல இன்னும் நிறைய இருக்கு, அப்புறமா எடுத்து தர்ரேன்” என்று கொடுத்தான்.

தேவிகா சிரிப்பை அடக்க முயன்று தோற்றாள். தமிழ்வாணன் அதிசயமாக அவளை பார்த்த வினாடி வாசலிலிருந்து நடேசனும் மல்லிகாவும் உள்ளே வந்தார்கள் ‘என்ன பெட்டியெல்லாம் வந்திருக்கு’ என்று ஒருவொருக்கொருவர் பேசிக் கொண்டு. உள்ளே வந்ததும் நடேசனுக்கு கண் மறைத்தது “யாரு.. யாரது.. தனிழ்வாணன்..” தடுமாறினார்..

மல்லிகாவும் விளங்கிக் கொண்டு விட்டார், “தமிழ்வாணா..” என்று மகிழ்ந்தார்.

தமிழ்வாணன் இருவரது காலை தொட்டும் கண்களில் ஒத்திக் கொண்டான். நடேசன் வந்த அழுகையை அடக்க விரும்பவில்லை அழுதுக் கொண்டே “நல்லா இருக்கீயா டாக்டருக்கு படிச்சிருக்கே.. ரொம்ப சந்தோஷம்..” என்று கட்டி அணைத்து மகிழ்ந்தார்.

மல்லிகா “எப்ப வந்தே ? அப்பா.. எத்தனை வருஷமாச்சு.. என்ன சாப்பிடறே ?” என்றார்.

தமிழ்வாணன் “உங்களை எல்லாம் பார்த்தது எனக்கு பெரிய விருந்தே சாப்டது போலிருக்கு பெரியம்மா” என்றான். தேவிகாவை பார்த்தான். தேவிகா கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

தமிழ்வாணன் தான் சுமந்து வந்த பெட்டியை பிரித்தான். நிறைய சாமான்கள். அதில் ரவிக்குமார் நடேசனுக்கு கொடுத்து அனுப்பியது, மல்லிகாவுக்கு கொடுத்தது என்று எல்லாவற்றையும் பிரித்து எடுத்து கொடுத்தான்.

தமிழ்வாணன், “நான் தனியா சம்பாதிக்கும் போது இன்னும் நிறைய வாங்கலாம்” என்றான்.

தமிழ்வாணன் தேவிகாவுக்கும் மறக்காமல் பட்டுப் புடவைகள் எல்லாம் வாங்கி வந்திருந்தான்.

மல்லிகாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

“அவ கல்யாணத்துக்கு கட்டுவா.. பட்டுப் புடவை கட்டுனா எவ்வளவு அழகா இருப்பா தெரியுமா ?” என்று மல்லிகா கேட்ட போது-

தமிழ்வாணன் கேட்டான், “எவ்வளவு அழகா இருப்பா ?” என்று.

மல்லிகா, “ம்.. அவ கல்யாணத்துக்கு கட்டுவா அப்ப நீயே பாரு..” என்றாள்.

தமிழ்வாணனுக்கு அப்பொழுதுள்ள பிரச்சினை தேவிகா கல்யாணத்தில் பட்டுப் புடவை கட்டுகிறாளா என்பதல்ல கல்யாணம் யாரை கட்டுகிறாள் என்பதாகவே இருந்திருக்கக் கூடும் என்று என் மனதிற்கு படுகிறது.

4.

கந்தசாமி தமிழ்வாணனை எழுந்து நின்று வரவேற்றார் “வாங்க தம்பி.. உள்ளே வாங்க..” என்று.

தமிழ்வாணன் “நீங்க உக்காருங்க சார்” என்று அவரருகில் தரையில் அமர்ந்தான்.

கந்தசாமி “மேலே உக்காருங்க தம்பி.. என்ன இது.. நீங்க போய் கீழே..”என்றார்.

தமிழ்வாணன், “என்ன சார்.. என்ன போய் வாங்க.. போங்கன்னு கூப்டுகிட்டு நீ.. வா.. போன்னு சொல்லுங்க சார்.. உங்களுக்கு எப்பவும் நான் மாணவன் தான்” என்றான்.

தேவிகா எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தாள். வெட்கத்துடன் தேத்தணி போட்டு எடுத்து வந்தாள்.

தேவகி தமிழ்வாணனை “மேலே உக்காருங்க” என்று சொன்னது தான் தாமதம் தமிழ்வாணன் மறுபேச்சு பேசாமல் எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தான். சொன்னவுடன் உடனே மேலே உட்கார்ந்து விடுவான் என்று தேவிகா எதிர்பார்க்கவில்லை தேவிகாவுக்கு ஒரு மாதிரி சந்தோஷம் கலந்த பெருமை ஒரு பெருமை கலந்த வெட்கம் எல்லாம் ஏற்பட்டது.

தமிழ்வாணன், “தேவிகா.. உனக்கு தான் இதெல்லாம்” என்று ஒரு பையை கொடுத்தான்.

தேவிகா, “என்ன இது ?” என்றாள்.

தமிழ்வாணன், “பெரிசா ஒண்ணுமில்லை புடவை.. சாக்லெட், மிட்டாய் தான் இருக்கு அப்புறமா பாரேன்.. உனக்கு பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டு சொல்லு” என்றான்.

கந்தசாமி, “எங்களையெல்லாம் மறக்கலைன்னு சொல்லுங்க..” என்றார்.

தமிழ்வாணன், “மறக்குறதாவது.. சின்ன வயசுல இங்கிருந்து போவும் போது திரும்ப வரவே மாட்டேன்னு சொன்னேனாம்.. இப்ப இங்கேந்து திரும்ப போவே மாட்டேன்” என்றான்.

தேவிகா சந்தோஷ களிப்பில் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

கந்தசாமியின் கை விரலை தமிழ்வாணன் கவனித்தான். விரல்கள் இரண்டு அசையவில்லை அதை கந்தசாமி கவனித்து விட்டு “இந்த விரல் தானே.. நீங்க ஒருமுறை கதவிடுக்கில் நசுக்கி விட்டு.. நினைவிருக்கா ?” என்றார்.

தமிழ்வாணன் “நானா..” என்று துடித்து விட்டான்.

கந்தசாமி “அதெல்லாம் சின்ன வயசுல எல்லோரும் அப்படித்தான்” என்றார்.

தமிழ்வாணன், “என்னை எல்லோரும் ரொம்ப தான் பொறுத்துக்கிட்டாங்க போலிருக்கு” என்று வருத்தமாக கூறினான்.

தேத்தணி குடித்து விட்டு “அருமையா இருக்கு” என்று எழுந்து கொண்டு பையிலிருந்து ஒரு தொகை எடுத்து “சார்.. நான் மரியாதை நிமித்தமா கொடுக்கறத மறுக்காம வாங்கிட்டாங்கண்ணா ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றான் கந்தசாமி, “காசா தம்பி முக்கியம்.. நீங்க வந்து பார்த்தீங்களே.. அது தான் முக்கியம்” என்று வாங்க மறூத்தார், தமிழ்வாணன் வற்புறுத்தி தேவிகா “வாங்கிக்குங்கப்பா” என்றதும் வாங்கிக் கொண்டார்.

தமிழ்வாணன், “நான் வர்ரேன்” என்று கூறி விட்டு தேவிகாவை பார்த்தான், இருவருக்கும் நிறைய பேசிக் கொள்ள வேண்டும் போலிருந்தது என்பது அவர்களின் பார்வையில் தெரிந்தது.

தேநீர் கடை முதலாளி முத்து வீட்டிற்கு சென்றான். முத்து படுத்து கிடந்தார். தமிழ்வாணன் உள்ளே வந்ததும் எழுந்து வரவேற்றார். தமிழ்வாணன் படுத்துக் கொள்ளும்படி கூறினான்.

முத்து “நீங்க வந்ததா கேள்விப்பட்டேன்.. உடம்பு முடுயல..அதான் படுத்துட்டேன் வர முடியல” என்றார்.

தமிழ்வாணன், “என்ன உடம்புக்கு..” என்று நாடி புடித்து பார்த்தவன் “பல்ஸ் சரியா தான் இருக்கு.. நான் வந்து இறங்கின ஒடனே உங்க கடைய தான் பார்த்தேன் கடய வித்துட்டதா சொன்னாங்க..” என்றான்.

முத்து எழுந்து உட்கார்ந்து “ஆமா தம்பி.. எம்மவன வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டி பணம் தேவைப்பட்டது.. அதான் வித்துட்டேன்..” என்றவர் கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்து விட்டு “பையன் மாசா மாசம் காசு அனுப்பிடறான். நல்லா தான் இருக்கேன்” என்றார்.

தமிழ்வாணன் பையிலிருந்து பணமெடுத்து “இத மறுக்காம வாங்கிக்கணும்..” என்றான். முத்து மறுக்க முயன்று கடைசியாக பெற்றுக் கொண்டார். தமிழ்வாணன் “ரொம்ப நன்றிங்க.. நான் புறப்படறேன்” என்றான்.

முத்து “ஏதாவது குடிச்சிட்டு போங்க தம்பி” என்றார்.

தமிழ்வாணன் “இல்லங்க.. நான் மறுபடி வர்ரேன்” என்றான்.

முத்து “நான் வந்து பார்க்கறேன்” என்றார்.

இப்படியாக அந்த ஊரில் வசித்த நிறைய ஏழை எளியவர்களது உதாரணமாக வாத்தியார் சுடலை முத்து போன்றோர் வீட்டிற்கு எல்லாம் சென்று நலம் விசாரித்து பழக்கத்திற்கு ஏற்ப நடேசன் மற்றும் மல்லிகா இருவரிடம் கலந்து விட்டு ஒரு தொகையை கொடுத்து விட்டு வந்தான். எல்லோரும் இருந்த கஷ்டத்திற்கு யாரும் ‘வேண்டாம்’ என்று மறுக்கவில்லை எல்லோரும் அன்புடன் பெற்றுக் கொண்டார்கள். தமிழ்வாணனுக்கு பெரிதும் மகிழ்ச்சியாகவும் மனநிம்மதியாகவும் இருந்தது.

நடேசனுக்கும் மல்லிகாவுக்கும் பாதி வயது குறைந்திருந்தது தன் பிள்ளையை பார்த்த சந்தோஷத்தில். மல்லிகா வீட்டை எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். தேவிகா சமையல் வேலையாக இருந்தாள்.

தமிழ்வாணன் அப்பொழுது தான் வந்தான், “என்ன பெரியம்மா வீட்ட சுத்தம் செய்றாப்ல இருக்கு..” என்றான்.

மல்லிகா சிரித்துவிட்டு “ஆமாமா.. ஒரே தூசி எங்க பார்த்தாலும்.. சரி.. எல்லாரும் என்ன சொன்னாங்க.. எல்லாம் சரியா பார்த்து கொடுத்துட்டாயா” என்றார்.

தமிழ்வாணன், “எல்லாம் சொன்ன மாதிரி கொடுத்துட்டேன்.. இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பெரியம்மா” என்றான்.

மல்லிகா, “அது தானே எனக்கு வேணும்” என்றவர் அவர் கையில் இருந்த போட்டோவை பார்த்தார்.. “இது யார்ட போட்டோ” என்று பார்த்தவர்.. அது தமிழ்வாணன் பள்ளி பயிலும் போது மாணவமாணவிகள் அவைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் என்பதை விளங்கிக் கொண்டவுடன்.. “தமிழ்வாணா” என்றழைத்து “தேவிகாவும் நீயும் படிக்கும் போது எடுத்த போட்டோ பாரு” என்றார்.

இருவரும் படபடப்புடன் ஒன்றாக ஓடி வந்தார்கள். தேவிகா அடுப்பை அப்படியே போட்டு விட்டு வந்தாள். தமிழ்வாணன் சட்டையை கழட்டியது பாதி கழட்டாதது பாதி என்று ஓடி வந்தான். இருவரும் ஒன்றாக ஓடி வந்து புகைப்படத்தை வாங்கினார்கள்.

மல்லிகா, “ஏன்.. ஏன்.. இப்படி அவசரஅவசரமா ஓடி வர்ரீங்க ரெண்டு பேரும்.. போட்டோ இங்கே தான் இருக்கும்.. எங்கேயும் போவாது..” என்றார்.

புகைப்படம் இப்போது இருவரது கையிலும்.. தமிழ்வாணன் புகைப்படத்தில் தேவிகாவை தேடினான். தேவிகா புகைப்படத்தில் தமிழ்வாணனை தேடினாள்.

தேவிகா, “நீங்க ஏன் கண்ணை மூடிட்டு இருக்கீங்க” என்றும் தமிழ்வாணன், “நீ ஏன் என்னை திரும்பி பார்த்தே” என்றும் இருவரும் ஒரே நேரத்தில் தங்களை மறந்து கூறினார்கள்.

மல்லிகா ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தார்..

இருவரும் மல்லிகாவை கவனிக்காமல் தொடர்ந்து பேசினர்..

தமிழ்வாணன், “நீ அப்படியே தான் இருக்கே.. மாறவே இல்ல.. என்னா.. கொஞ்சம் சதை போட்டிருக்கே.. அவ்வளவு தான்..” என்றான்.

தேவிகா, “நான் மாறலை சரி.. ஆனா..நீங்க ரொம்ப மாறித்தான் போயிட்டாங்க.. அப்ப உங்களுக்கு மீசை கிடையாதுல்ல..” என்று சொல்லி சிரித்ததும்-

மல்லிகா, “என்ன அதிசயமா இருக்கு” என்றார்.

இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

தமிழ்வாணன் தயங்கியவாறு “என்ன.. என்ன அதிசயம்.. ?” என்று கேட்டான்.

மல்லிகா நக்கலாக “இல்ல.. நாம எல்லாரோடும் சேர்ந்து எடுத்த போட்டாவ நாம பார்க்கும் போது மொதல்ல நம்ம கண்ணுக்கு நம்மள தான் தெரியும்பாங்க.. ஆனா நீ வாங்கினவொடனே அவள பார்க்குற.. அவ என்னடான்னா உன்ன பார்க்குறா” என்றவுடன் இருவரும் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு புது வித உணர்ச்சியால் தவித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்து பார்க்க கஷ்டப்பட்டனர். தேவிகா, சமையலறைக்கு ஓடினாள். தமிழ்வாணன் அங்கேயே நின்று தடுமாறி என்ன சொல்வது என்று தெரியாமல் “அது வந்து.. அது.. வந்து..” என்று கூறி முழித்தான்.

தமிழ்வாணன் தன் மனதில் ஏற்பட்ட புது உணர்ச்சியை அறிய முற்பட்டான். அந்த உணர்ச்சியின் பெயர் என்ன.. காதலா ? அவளுடன் நிறைய பேச வேண்டும் போலிருக்கிறதே ஒரு வேளை பேசிவிட்டால் அந்த உணர்ச்சி போய்விடுமா ? அடக்கி வைப்பதால் தான் அந்த உணர்ச்சி மேலோங்குகிறதா ? ஆனால் சுகமான வலியாக உள்ளதே ? சின்ன வயதில் எனக்கு கையில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது அப்போது கூட வலியால் நான் அழவில்லையாம்.. எனக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை.. பெரியம்மா தான் சொல்லி காண்பித்தார்கள். இந்த வலிக்கு நான் என்ன செய்ய வேண்டும் ? தேவிகாவை நான் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.. என் வாழ்வில் சில பேர்கள் சில பொருள்கள் எனக்கு மன நிம்மதியை அளித்துள்ளன. சில பேர்கள்ன்னா பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் இவர்களை அடுத்து தேவிகா.. சில பொருள்கள்ன்னா அப்பாட லட்டரை அடுத்து படிக்கும் போது எடுத்த இந்த போட்டோ.. சரி.. நான் இப்ப என்ன செய்வது ? அந்த உணர்ச்சி காதல் தான் எனும் பட்சத்தில் அடுத்து என்ன செய்வது ? என்று கையில் போட்டோவை வைத்துக் கொண்டு தவித்து புலம்பினான்.

தேவிகாவும் தன் மனதில் ஏற்பட்ட அந்த உணர்ச்சி அலைகள் பற்றி அவளுக்குள் கேள்வி எழுப்பினாள்.. சின்ன வயதில் பழகினோம்.. அப்புறம் பெரிய ஆளாகிற வரைக்கும் பார்க்கவே இல்லை.. திடார்ன்னு பார்த்தவுடன் ஒரு ஆர்வம்.. அவ்வளவு தான்.. இது காதலா இருக்காது.. ஏனெனில் நான் ஏழை பெண் அவர் பணக்காரர்.. நான் படிக்காதவள்.. அவர் டாக்டர்.. காதலுக்கு தகுதிகளை உலகம் ஏற்படுத்தி வைத்துள்ளதே.. அது என் மனதுக்கு தெரியாதா என்ன ? ஒரு வேளை நானும் படித்து பணக்காரியாக இருந்திருந்தால் இந்த உணர்ச்சிக்கு ஆர்வம் என்று தான் பெயரிட்டு இருப்பேனா ? பணக்காரியாக இருந்திருந்தால் காதல் வரலாம், ஏழையாக இருந்தால் ஆர்வம் மட்டும் தான் வரலாம். அப்படி இருக்காதே ? எல்லோரும் ஒன்று தானே. இப்போ ஒருத்தருக்கு சைக்கிள் வாங்க கூட வசதியில்லை.. இன்னொருத்தருக்கு நாலு கப்பல் ஓடுது.. இருவருக்கும் உணர்ச்சி என்பது ஒன்று தானே.. அப்போ எல்லோரும் ஒன்று தான்.. நான் கூட காதலிக்கலாம்.. சரி நான் இப்ப என்ன செய்வது ? அந்த உணர்ச்சி காதல் தான் எனும் பட்சத்தில் அடுத்து என்ன செய்வது ? என்று கையில் தமிழ்வாணன் வீட்டுக்கு வந்து கொடுத்த பட்டுப் புடவையை வைத்துக் கொண்டு தவித்து புலம்பினாள்.

உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா ? கல்யாணம் ஆனவரா நீங்கள் ? வேற ஒண்ணுமில்லை.. தவறாக எண்ண வேண்டாம்.. அதாகப்பட்டது முதன்முதலா உங்க கணவர்/காதலர் உங்களை பேர் சொல்லி அழைத்த போது எப்படி இருந்தது ? சந்தோஷம் பொங்கி வந்தது அல்லவா ? அதே சந்தோஷம் நம்ம தேவிகாவுக்கும் “தேவிகா”ன்னு தமிழ்வாணன் கூப்பிட்ட போது பொங்கி வந்தது.. நடேசன் வீட்டில் இல்லை.. மல்லிகா கொள்ளையில் காலை வேலையாக இருந்தாள். பிரியமானவளுடன் பேச நல்ல சந்தர்ப்பம் அல்லவா ? அதான் ‘தேவிகா’ன்னு கூப்பிட்டான்.. தேவிகாவோ தமிழ்வாணன் ஏதோ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி விட்டது போல நெளிந்தாள். அந்த புகைப்படம் சம்பவத்துக்கு பிறகு இப்பொழுது தான் பேசுகிறார்கள்.

தேவிகா, “என்ன ?” என்று தமிழ்வாணனை நேராக பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு கேட்டாள்..

தமிழ்வாணன், “என்ன.. பிடிச்சிருக்கா ?” என்றான்.

தேவிகா புரியாதது போல், “எது ?” என்றாள்.

தமிழ்வாணன், “அதான்.. நான் கொடுத்தேனே.. அது..” என்றான்.

தேவிகா சரியான ஆள் தான், “எது ?” என்று அழுத்தமாக கேட்டாள்.

தமிழ்வாணன் அலுத்துக் கொள்வது போல், “ம்.. நான் கொடுத்தேன்ல அந்த பட்டுப் புடவை.. அது தான்..” என்றான்.

தேவிகா மெலிதாக சிரித்துக் கொண்டே, “ரொம்ப நல்லா இருந்துச்சு” என்றாள்.

சிறிது மெளனம்..

தேவிகா, “யார் எடுத்தது ?.. நீங்களா ?” என்று கேட்டாள்.

தமிழ்வாணன், “நான் தான் வேற யாரு ?” என்றான்.

தேவிகா, “ அப்ப நிறைய பேருக்கு எடுத்து கொடுத்த அனுபவம் போலிருக்கு.. அதான் நல்லாருக்கு” என்றாள்.

தமிழ்வாணன், “சே.. சே.. உண்மைய சொல்லட்டுமா.. உனக்கு புடவை வாங்கும் போது தான் மொதமொதலா புடவை கடைக்கே போனேன்” என்றான்.

தேவிகா நம்பாதது போல் பார்த்தாள்.

தமிழ்வாணன், “என்ன.. நம்பலையா ?.. நான் அங்கே படிக்கும் போது எனக்கு நண்பர்களே கிடையாது.. எப்ப பார்த்தாலும் உம்முன்னு தான் இருப்பேன்..” என்றான்.

தேவிகா, “இங்கே.. எப்படி இருக்கறீங்க..” என்றாள்.

தமிழ்வாணன், “இங்கே.. அதை நீ தான் சொல்லணும்.. அது சரி.. நீ சின்ன வயசுல என்னை நீங்க.. வாங்க.. போங்கன்னு தான் கூப்புடுவியா ?” என்றான்.

தேவிகா “இல்ல..” என்று அவசரமாக சொன்னாள்.

தமிழ்வாணன், “பின்னே எப்படி கூப்பிட்டே..” என்றான்.

தேவிகா, “அது..” என்று தயங்கினாள்.

தமிழ்வாணன் தவித்தான் “சீக்கிரம் சொல்லேன்.. பெரியம்மா வந்துட போறாங்க..” என்றான்.

தேவிகா அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு புது கேள்வியை கேட்டாள், “அப்பா சொல்லி நீங்க நாற்காலியில உட்காராம நான் சொன்னதும் ஏன் உடனே மேலே ஏறி உக்கார்ந்தீங்க” என்று.

தமிழ்வாணன் யோசிக்காமல் “நீ சொன்ன பிறகு மறுக்க முடியுமா ?..” என்றான்.

தேவிகா சிரித்துக் கொண்டே “ஏன் ?.. ஏன்.. நான் சொன்னா மறுக்க முடியாதா ?” என்றாள்.

தமிழ்வாணன், “ம்ஹீம்.. முடியாது..”

தேவிகா, “ஓஹோ.. அப்டான்னா..நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பிங்க.. இல்லையா ?” என்று குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

தமிழ்வாணன், “ம்.. கண்டிப்பா.. இப்ப என்ன கேக்கப் போறே ?.. கேளேன்..” என்றான் ஆர்வமாக.

தேவிகா, “நீங்க மறுபடி இந்த ஊரை விட்டுட்டு, உங்க பெரியம்மா, உங்க பெரியப்பா எல்லாத்தையும் விட்டுட்டு போக கூடாதுன்பேன்.. கேப்பீங்களா ?” என்றாள்.

தமிழ்வாணன், “நிச்சயமா போ மாட்டேன்.. இந்த ஊர்.. பெரியம்மா பெரியப்பா அப்புறம் உன்னை..” என்று நிறுத்தினான்.

தேவிகா தமிழ்வாணனையே உற்று பார்த்தாள்.

தமிழ்வாணன் தலையை ஆட்டிக் கொண்டே.. “ ஆமா.. தேவிகா.. உன்னையும் விட்டுட்டு நிச்சயமா நான் போ மாட்டேன்” என்று முடித்தான்.

மல்லிகா வரும் காலடிச் சத்தம் கேட்டது.

தேவிகா “மல்லிகா அம்மா வந்துட்டாங்க.. நான் போறேன்” என்றாள்.

தமிழ்வாணன், “ ஏதாவது சொல்லிட்டு போ” என்றான்.

தேவிகா, “அப்புறமா சொல்றேன்” என்று ஓடிக் கொண்டே சொன்னாள்.

தமிழ்வாணன் தேவிகா ஓடிய திசையை பார்த்து “எப்போ ?” என்று கூறி பெருமூச்சு விட்டான்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்று நேரிடையாக சொல்ல வில்லையே தவிர இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை இருவருமே அவர்களது செய்கைகளால் உணர்த்திக் கொண்டிருந்தனர். காதலின் பிடியில் வசமாக மாட்டிக் கொண்ட இருவரும் அதன் பிறகு கண்களால் பேசிக் கொண்டனர். மெளனங்களால் கவிமாலை நடத்தினர்.

இவர்களது காதல் கை கூடுமா ? தேவிகா கேட்டுக் கொண்டது போல தமிழ்வாணனால் சொந்த ஊரில் தங்க முடிந்ததா ?

இந்த கேள்வி ஒரு புறம் இருக்க ஊரில் திடாரென்று அந்த பிரச்சினை ஏற்பட்டது. ஊர்வாசிகளில் ஒரு சாரார் ஒன்று கூடி குழப்பத்தை ஏற்படுத்தினர். என்ன பிரச்சினை ? என்ன குழப்பம் ?

Series Navigation

author

அ முகம்மது இஸ்மாயில்

அ முகம்மது இஸ்மாயில்

Similar Posts