நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கண்டதனைக் கண்டு கலக்கம் தவிரெனவே

விண்ட பெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே

– தாயுமானவர்

பெர்னார் குளோதனுக்கு ஒன்றுக்குப்பின்னொன்றாய் இந்திய தேசத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்தன.

துபாஷ் பலராம்பிள்ளை கள்ளிப் பெட்டியிலிருந்த மோதிரம், ஓலை நறுக்குக் குறித்ததான விபரங்களை அறிவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததோடு, பெர்னார் குளோதன் ஆக்ஞைப்படி, சன்னாசி என்பவனை, வேலாயுத முதலியாரைக் கண்காணிக்கவும், ஒற்றறிந்து செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் ஒழுங்கு செய்திருந்தார்.

அடுத்துக் கவனிக்கவேண்டியிருந்த அலுவல், வாணியைப் பார்க்கவென்று வைத்தியரில்லம் தேடிவரும் தொண்டைமான்நத்தம் பெண்மணி காமாட்சி அம்மாளின் பின்புலத்தை அறிவது.

வைத்தியர் இல்லத்தில் வைத்து சந்தித்த வாணியானவள் தெய்வானையின் தோற்றத்திலிருப்பதென்பது வீணானக் கற்பனையெனக் கொண்டாலும், இப்பெண் வாணியைச் சந்திக்க, தொண்டைமான் நத்தத்திலிருந்து காமாட்சிஅம்மாள் என்றொரு பெண்மணி வந்துபோவதாகச் சொல்லப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது. சந்தேகமில்லாமல் தெய்வானையின் தாயாரான காமாட்சி அம்மாளின் பெயரிலே இங்கே உலாவருபவள் பொய்யான நபராகவே இருக்கவேண்டும். தெய்வானையின் தாயாரை பெர்னார்குளோதன் நன்கு அறிந்தவன் என்ற வகையில் எளிதாக இம் முடிவுக்கு வந்தான். அப்படியானால், அப்பெண்மணி யார் ? அவளது உண்மையான பேரென்ன ? பொய்யான பேரில் வைத்தியரில்லம் வந்துபோகவேண்டிய நிர்ப்பந்தமென்ன ? இவையெல்லாம் வைத்தியருக்குத் தெரிந்திருக்குமா ? தெரியுமெனில் வாணியண்டை மறைக்கும் இரகசியமென்ன ?

பிரெஞ்சுத் தீவிலுள்ள காமாட்சி அம்மாள் – கைலாசம் – தெய்வானைக் குடும்பத்திற்கும்; புதுச்சேரியை சேர்ந்த வாணிக்கும் எதோவொரு வகையிற் சம்பந்தமிருக்குமென்பதில் பெர்னார் குளோதன் உறுதியாகவிருந்தான். மாறனின் யூகங்களை அவனது மனம் உதாசீனபடுத்தியது. தொண்டைமான் நத்தம்வரை மாறன் சென்றுவருவது அவசியமென்று திட்டம் செய்திருந்தான்..

பெர்னார் குளோதனண்டை சேவகம் செய்யவந்த சில நாட்களிலேயே, அவன் தன்னிடம் எஜமான் என்கின்ற நினைப்பின்றி, சிநேகிதன் ஸ்தானத்தில் பழகுவதை சிந்தையில் நிறுத்தி மாறன் சந்தோஷப்பட்டிருக்கிறான். ஆகவே பெர்னார் குளோதனின் உத்தரவை மறுக்கும் வகையறியாது சம்மதித்து, தொண்டைமான் நத்தத்திற்கு பிற்பகல் இரண்டு மணியளவில் குதிரை போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டான்.

‘பெர்னார் குளோதன் எண்ணப்பாட்டை ருசுப்பிக்கும் வகையில் வாணியண்டை உறவாடிப்போகும் பெண்மணி தன்னைக் காமாட்சியென்று அழைத்துக்கொள்வதன் முகாந்திரமென்ன ? ‘ என்றிவனும் பலவாறாக யோசித்துப் பார்க்கிறான்.

இது சம்பந்தமாக, மாறன் வாணியை விசாரித்ததில், அவளுடைய மனவிசாரத்தையும் அறியமுடிந்தது. பெர்னார்குளோதன், தெய்வானைக்கும் வாணிக்குமுள்ள உருவ ஒற்றுமையையை கண்டு வியந்த நாள்முதல், அவளுக்கும் தூக்கமில்லாமல் போய்விட்டதாம்.

கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றிருந்த வைத்தியர் சபாபதி படையாட்சி, காமாட்சி அம்மாள் என்கின்ற சந்தேகப் பெண்மணியை முதன் முறையாக தனது இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.. அதுமுதற்கொண்டு, வாரத்திற்கு ஒருமுறையேனும் வைத்தியர் இல்லத்திற்கு, அப்பெண்மணி வருகிறாளென வாணி தெரிவித்திருந்தாள்.. அதுவன்றி, வைத்தியர் இல்லத்திற்கு அப்பெண்மணி வருகின்றபொழுது, பலகார பட்சணங்கள் கொண்டுவருவதும், இவளை உட்காரவைத்து வெகுபிரியமாய் நெய்பூசி, அழுந்தவாரி சைடையிற் தாழம்பூத் தைத்து, குஞ்சம்வைத்துச் செவ்வந்தியும், மரிக்கொழுந்துஞ் சூடி, முத்தும், வைரமும், மரகதமும், புஷ்பராகமுமாக, வளை, புல்லாக்கு, கொலுசு, மாட்டல், கம்மல், சுட்டி, திருகுப்பூவெனச், சிங்காரித்து, சர்வ அலங்கார பூஷிதையாகக் கண்டுச் சந்தோஷப்படுவதென்பது வாடிக்கையாய் நடப்பபதென்றும் சொல்கிறாள். சிலவிசை அவளது சீராட்டு அதிகபட்ஷமென்று இவள் கருதவேண்டியிருந்திருக்கிறது..

கடந்த சில மாதங்களாக, மாறனிடம் வாணி பிரேமைக் கொண்டிருப்பதை யூகித்த நாள்முதல் அவள் போக்கில் மாறுதலைக் காண்முடிகின்றது. ‘அற்ப மானுடர்க்கு வாழ்க்கைப் பட ‘ அவள் பிறந்தவளல்லவென்று என்று அடிக்கடி புலம்பி வருகிறாள். வாணியும் அப்பெண்மணியிடம் அவளது நடவடிக்கைகளில் கோபமுற்று ‘இவ்வாறெல்லாம் புலம்புவதென்றால் இங்கே வரக்கூடாது ‘ என்பதாகவும் ஏசிப்போட்டாள். கூட்டிக் கழித்துப்பார்த்ததில் பெர்னாருடைய சந்தேகத்திலே, வாணிக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தாள்.

மாறன், தொடைமான் நத்தம் புறப்பட்ட மாத்திரத்தில், எப்போதும்போல தகப்பன் வழிக் கிழவி புலம்பித் தீர்த்தாள்: ‘ஊரு கெட்டுப்போச்சுது. நாலாதிசைகளிலும் துலுக்கமார் தொந்தரை கூடிப்போச்சுதென ஊர்பேசுது. எவ்விடம் சென்றாலும், போனோம் வந்தோமெனச் சடுதியில் வரவேணும், என்பதனை மறக்காதேயும் ‘ என்று எச்சரித்துப் போட்டாள்.

அவள் புலம்பலில் நியாயமிருந்தது. மாராத்தியர்கள் செய்த அட்டூழியங்கள்போக, இப்போதெல்லாம் நவாப்பினுடைய குதிரை ஆட்கள் அங்காங்கே சனங்களுக்குக்குக் கொடுக்கின்ற இம்சைகள் குறித்து, கும்பெனிக்குத் தினப்படிக்குப் பிராதுகள் வருகின்றன.

துலுக்கர்கள் தயவாலே பிரெஞ்சு கும்பெனி, புதுச்சேரியில் காலூன்ற முடிந்ததென்கின்ற பிரதான காரணத்தால், கும்பெனி நிருவாகம் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

வடக்கே மொகலாயப் பேரரசுக்குச் சிம்மசொப்பனமாகவிருந்த மராத்தியர்கள், தக்காணத்திலும் அவ்வப்போது படையெடுத்துத் தங்கள் வன்மையை நிலைநாட்ட முயற்சித்ததும், குறிப்பாக 1740ல் ராகோஜி போன்ஸ்லே என்கின்ற மராத்திய தளபதி வருடத்திற்கு 5000 ரூபாய் கேட்டுக் கும்பெனியை அச்சுறுத்திய சம்பவம் பிரெஞ்சுக்காரர்கள் எளிதாக மறக்கக் கூடியதல்ல. ஆகவே அவர்களுக்கு எதிரிகளாகவிருந்த துலுக்கரை இவர்கள் ஆதரித்தார்கள். அதுவன்றி ஆங்கிலேயருக்கெதிராக கும்பெனியை இந்திய மண்ணில் வளர்த்தாகவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பிரெஞ்சுக்காரர்கள், கர்நாடக ராச்சியங்களுடன் பகைவேணாமென்று தீர்மானித்திருந்தார்கள்.

மாறனிடம், கும்பெனியின் பறங்கியர் பிரிவுச் சிப்பாய் ஒருவன் சொல்லியிருந்த நியாயங்களும் ஓரளவு யோசிக்கவேண்டிய விஷயம். அதாவது தங்கள் சொந்தச் செளவுகரியத்துக்காக, கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருந்த மேற்சாதி இந்துக்கள், ஏழை சனங்கள் கஷ்டங்களை அலட்சிய செய்வதும், மாடு தின்னும் புலையர்களென குடியானவர்களில் ஒரு சாராரையும், அக்காரணத்தினாலேயே பறங்கியர்களையும், தீண்டத் தகாதவர்களாக நடத்துவதும்கூட, கும்பெனியைத் துலுக்கர்களிடம் நெருங்கியிருக்க உதவியதாகச் சொல்லப்டுகின்றது.

ஒரு விஷயம்மாத்திரம் மாறனது புத்திக்கு விளங்கவில்லை. சாதியின் பெயரால், தமது சனங்களாச்சுதே என்கின்ற எண்ணமின்றி கீழேயுள்ள சனங்களை அதிகாரம் பண்ணுவதும், ஒரு சிலரை மேலானவர்களாகக் கருதி தலையில் வைத்துக் கொண்டாடுவதையும் பார்க்கையில், இங்குள்ள சனங்களின் துர்ப்பாக்கிய வாழ்வுக்குப் பறஙியர்களைவிட நமது சனங்களே மூலமென்று நினைத்தான். சொந்த சனங்களை சண்டாளர்கள் என்றும், புலையர்கள் என்றும் தூஷணமாய் நடத்தும் இவர்கள் பறங்கியர்களுக்கு அடங்கி, தண்டனிட்டுக்கிடப்பதை எண்ணிப்பார்க்கச் சிரிப்புவருகின்றது. துபாஷ் கனகராய முதலியாரும், ஆனந்த ரங்கபிள்ளையும், சுங்கு சேஷாசலச் செட்டியும், திருக்காமய்யரும் மற்றுமுள்ள மேற்சாதிக் கனவான்களும் துரைமார்களிடமும் கைகட்டி வாய்புதைத்து தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருவர் மீது ஒருவர் நிந்தனைசொல்லிக்கொண்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்துகிடப்பதைப் பலமுறை கண்டிருக்கிறான். பறங்கியர் பெண்டுகள் கேட்டுக்கொண்டால், அட்டியின்றிக் கால்பிடிக்கவும், விரல்களை நீவிவிடவும் இந்த மனுஷர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் இவன் அறிவான்.

மேற்கே சூரியன் நேரெதிரே காய்ந்து, உடலைத் தீய்த்துக் கொண்டிருந்தான். வெப்பம் பொறுக்காத பறவைகளும், விலங்குகளும் அடங்கிக் கிடந்தன. காற்றுகூட வீசுவதற்குத் திராணியற்றுச் சோர்ந்து கிடக்கிறது. புண்ணியவசமாக காற்றடித்தாலும், மண்ணை வாரிவந்து கண்களில் நிரப்பியச் சந்தோஷத்துடன் காணாமற் போய்விடுகின்றது.

ஏற்றபாட்டொன்று காதில்விழ, மாறன் கவனத்தைக் கலைத்திருந்தது. தொண்டைமாநத்தம் கிராமத்தை நெருங்கியிருந்தான். காலையிலேயே புறப்பட்டுவந்திருந்தால் சடுதியில் புதுச்சேரிக்குத் திரும்பியிருக்கலாம்.

வெக்கையில் குதிரையும் களைத்திருக்க, அதனுடைய கடைவாயில் ஒழுகும் எச்சிலுடன் இவனைத் திரும்பிப் பார்க்கின்றது. தான் மட்டுமல்ல, குதிரையும் தாகவிடாயில் தவிப்பதை மாறன் நொடியில் புரிந்துகொண்டான். குதிரையை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன், குதித்திறங்கினான். இவன் முன்னே செல்ல குதிரை பின் தொடர்ந்தது.

மழைக்காலத்தில் சிற்றாறுகளால் நிரம்பி பிற்பாடு சாகுபடிக்கு உதவும் உசுடு ஏரி இந்த வருடம் முன்னதாகவே வற்றிவிட்டது. வழக்கம்போலக் குடியானவர்கள் பாசனத்திற்கு ஏற்றம் மற்றும் ஏறுகவலைகளைப் உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.

ஏற்றமிறைக்கும் இடத்தை மாறனும் குதிரையும் நெருங்கியிருந்தார்கள். என்ன மாயம் நிகழ்ந்ததோ, ‘சில் ‘லென்று காற்று, காமவயப்பட்டப் பெண்ணைபோல அவனை அணைத்துக்கொள்கிறது. குதிரை, வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் தலையை இறக்கி, குளிர்ந்தநீரைப் பருகிய வேகத்தில், பிடரியைச் சிலிர்த்துகொண்டது. துலாவில் இரண்டு மனிதர்கள். கிணற்றின் சால் பிடிக்க ஒருவன். துலா முனையில் பாரம்வைத்து கட்டியிருக்கிறது. மறுமுனையில் மூங்கிற கம்பு. கம்பின் அடிப்பாகத்தில் ஓரளவு கணிசமாகத் தண்ணீர் கொள்ளும் அரைக்கோள வடிவ சால். கிணற்றுப் பிடிமானத்தில் நிற்பவன் மூங்கிற்கம்பிலுள்ள சாலை, தனது இருகால்களுக்குகிடையில் கீழிறக்கித் தண்ணீரைச் சேந்த, அதேவேளை துலாவில் நிற்கும் ஆட்கள், அதிலுள்ள படிகளைப் பாவித்துக் கீழ் முனைக்கு வருகின்றார்கள். கிணற்றில் முங்கிய தண்ணீருடன் சால் மேலெழும்ப இவர்கள் மீண்டும் படிகளைப் பாவித்து துலாவின் பாரமுள்ள முனைக்காய் எதிர்த் திசையில் பயணிக்கிறார்கள்

….

தேரு வேணாமிண்ணு

தேடியுன்னை வாரான்

பட்டம் வேணாமிண்ணு

பரதன் தேடிவாரான்

பாவி பெத்தபுள்ளை

பதறியோடி வாறான்

இருபதோட வொண்ணு

இறங்கிவாடா ராமா..

சால் கிணற்றங்கரையில் நிறுத்தப்பட்டது. துலாவிருந்த மனிதர்களிருவரும் அதனையொட்டிப் பாதுகாப்புக்காக நடப்பட்டிருந்த படலைப் பிடித்துக்கொண்டு இறங்கியிருந்தார்கள். சால் பிடித்து நீரரிறைத்தவன் கிணற்றிலிருந்து மேலே வந்திருந்தான். மூவரும் முகத்தை அலம்பிக் கைகால் கழுவினார்கள். துண்டால் அழுந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவர்கள் குதிரையுடன் நெருங்கும் மாறனைப் பார்த்து ஒதுங்கி நின்றார்கள்.

‘என்னண்ணே கதிர் முற்றவில்லையே ? இன்னும் இரண்டு தண்ணியாவது இறைக்க வேண்டிவருமோ ? ‘

‘ஆமாம் தம்பி, இன்னும் ரெண்டு தண்ணியாவுது வேணும். தூத்தலில்லாமல், பூமி காய்ந்து கிடக்குது. வெள்ளி முளைக்க ஏத்தம் பிடித்தோம். கால்காணிதான் பாசனந்தான் முடிஞ்சுது. ‘

‘பிற்பாடு ஏன் நிறுத்திப்புட்டாங்க ? பொழுது சாயவில்லையே. அரைக்கிணறு தண்ணிவேறு அப்படியே கிடக்குதே ? ‘

‘ஊருல ஏதோ களேபரம் நடக்கிறது. துலாவிலிருந்து பார்த்தோம். கொஞ்ச நாட்களாக, அருகாமையிலே டேராபோட்டிருக்கும் சாயபு படைகள் பண்ணுகின்ற அநியாய அக்குறும்புகளில் சனங்கள் நொந்து கிடக்கிறோம். மராட்டியர்களைவிட இவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். ஒரு கிழமையா வீட்டிலே அடைந்துக் கிடந்தோம். தண்ணீரில்லாமல் பயிர் காய்கிறதேவென்று இன்றைக்கு ஏற்றம் பிடித்தோம். குடியானவங்க கஷ்டம் யாருக்குப் புரியப்போகுது. நீங்கள் எங்கே இந்தப்பக்கம் ? எங்க ஊருக்கு போகோணுமா ?

‘அங்கேதான் போகவேணும். காமாட்சி அம்மாள்னு ஒரு பெண்மணியைப் பார்க்கவேணும். ‘

‘அப்படி எவரும் எங்க ஊருலே இருப்பதாகத் தெரியவில்லையே ‘.

‘முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம். மாநிறம். நல்லா இலட்சணமா இருப்பாங்க. கும்பகோணமோ, அல்லது அதுபக்கத்திலே இருக்கிற வேறு ஏதேனும் சொந்த ஊராகவிருக்கலாம். கிட்டத்திலே தொண்டமாநத்தம் வந்திருக்கவேணும். ‘

‘நீங்கள் சொல்லுவது, புதுச்சேரியி கோன்சல்ல உத்தியோகம்பண்ணுகிற தேவராசன் அத்தைக்காரியாக இருக்கவேணும். அப்பெண்மணியுடையப் பேரு எங்களுக்குச் சரியாத் தெரியவில்லை. கீழண்டை வீதியில் கடேசியாக வேப்பமரமுள்ள வீடொன்று வரும், கல்வீடு. அங்கே போய் விசாரித்து பாருங்க தம்பீ. நீங்க போகின்றவேளை¢ ஊருல நெலமைத சரியில்லை. நாங்களும் எங்க பொண்டு புள்ளைகளுக்கும் என்ன ஆச்சோண்ணு கஸ்தியிலே இருக்கிறோம் ‘.

ஏற்றம் இறைத்தவர்களின் முகத்திலிருந்த வியாகூலம் புரிந்தது. அவர்களிடம் சொல்லிக்கொண்டு, வந்த பாதையைப் பிடித்து தொண்டமாநத்தம் திசை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான். அவர்கள் குறிப்பிட்டது, இவன் தேடிவந்த காமாட்சி அம்மாளாகவே

இருக்கவேண்டுமென்கின்ற முடிவுக்கு வந்தான். ஆனால் அப்பெண்மணி தேவராசனுக்கு உறவுக்காரியாகவிருப்பது, புதிதாய்ச் சேர்ந்துள்ள மர்மம். தாகவிடாய் நீங்கியிருந்த குதிரை இவனை புரிந்துகொண்டு நிதானமாய் ஓடியது.

கடவுள்மார்களின் கிருபையைப் புரிந்துகொள்வதென்பது சாதாரண சனங்களுக்கு சிரமம்.

தொண்டமாநத்தம் ஆதிகேசவலு ரெட்டியாருக்கு, நஞ்சை, புஞ்சைனு ஏராளமா சொத்திருக்கு. அது தவிர அவரோட தமக்கை, தான் வாழப்போன இடத்தில் புருஷனைப் பறிகொடுந்துப்போட்டு, அந்தக் குடும்பத்திற்கும் வாரிசில்லாமற்போகவே, ஏகப்பட்ட ஆஸ்திகளோடு வந்திருக்கிறாள். தீட்ஷதை வாங்கியவள் அவள். பொழுதுக்கும் போஜனங்கொள்ளாமல், துளசி தீர்த்தம் போதுமென சேர்த்துவைத்த சொத்தும் கடன் பத்திரங்களாவும், கிரையப் பத்திரங்களாகவும் இருக்கின்றன. ஆனால் ரெட்டியாரோட பெண்சாதிக்கு இதுநாள்வரை வயிற்றில் புழுவோ பூச்சியோ இல்லை. ரெட்டியாரும் அவரது பாரியாளும் பிள்ளைவரம் கேட்டு திருவந்திபுரம், திருப்பதியென ஷேத்ராடானம் செய்கின்றார்கள். வாழை இலையில் நெய்யொழுகச் சாப்பிட்டுவிட்டு வரப்பு வெளிகளில் குடைபிடித்து, வீட்டுத் திண்ணையில் வெற்றிலைச் செல்லத்துடன் ஒதுங்கும் ரெட்டியார், ஓய்ந்த நேரங்களில் உள்ளே தமது பாரியாளையும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கலாம்.

இப்படித்தான் வேணுக்கவுண்டருக்கும் ஏரி தலைமாட்டிலேயே அயன் நஞ்சை. கட்டைவிரலாற் கீறியே பாசனத்தை முடித்துப்போடலாம். போததற்கு தெற்கே தென்னதோப்பு, வடக்கே வாழத்தோப்புண்ணு லட்சுமி கடாட்ஷம் வேறே. ஆனாலும், அவருக்கு வேப்பிலைக் கொழுந்தா பிறந்திருந்த வாரிசுக்குப் பேச்சு வரலை. காரைக்கால்வரைக்குஞ் சென்று மாங்கணித் திருவிழாவிலே, ஒரு வண்டி மாம்பழத்தை கொள்ளைவிட்டுட்டு வந்திருக்கார். ஈஸ்வரன் கடாட்ஷம் வேணும்.

ஆதிகேசவலு ரெட்டியாருக்கும், வேணுக் கவுண்டருக்கும் இளப்பமில்லைண்ணு வரம் வாங்கியிருப்பவர், கேசவப் பிள்ளை. வெள்ளாடு, செம்மறி ஆடு, பசும்மாடுகள்னு கோமாதாவின் அருள் குறையின்றிருக்கிறது. நிலபுலங்களுக்கும் பஞ்சமில்லை. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை கைதூக்கிவிட, லேவாதேவியிலும் பணம்பார்க்கிறார். ஏடுள்ளத் தயிரும், புளிக் குழம்புமாய் பழைய சோற்றில் சிரமபரிஹாரம்முடித்து, வில்லியனூர் கொழுந்து வெற்றிலையை ஒரு முறைக்கு இருமுறையாய்த் துடைத்து நரம்பெடுத்து வாயில்மென்று, துணைக்குப் பன்னீர் புகையிலையைச் சேர்த்துக்கொள்வார். இருக்கின்றசொத்துக்கு, பாண்டுரங்கன் என்கின்ற பேரில் ஒரு மகன், தாயாரம்மாள் பேரில் ஒரு மகள். அவரைப் பெற்றவள், வாரிசுகள் எண்ணிக்கைப் போதாதென்று பிள்ளையிடம் நாள்தோறும் பாடம் படிக்கிறாள். பெருமாள் கிருபை வேணும்..

இவர்களிடத்திலே அண்டிப்பிழைக்கின்ற, சேரியிலே இருக்கின்ற சின்னான், இருசான் வகையறாக்களுக்கு, மற்ற செல்வங்களில் குறையிருந்தாலும், புத்ரபாக்கியம் தாரளமாக இருக்கத்தான் செய்யுது. இப்புத்திர பாக்கிய தயவில், ஏதோ கால்வயிறு, அரைவயிறு கஞ்சியை ஆண்டைகளிடம் குடிக்கவும் முடியுது.

இந்தச் சனங்களிடம் குறைவின்றி இருக்கின்ற புத்திரபாக்கியத்திற்கும் அவ்வப்போது விக்கினம் நேர்ந்துவிடும். வைசூரி, காலராவென்றுவர, வகைக்கொன்றாய் பிள்ளைகளை வாரிக்கொடுக்கவேணும். அதுவன்றி, அவ்வப்போது வழிப்பயணம் போகின்ற கர்நாடகப் படைகள், தயை தாட்சயண்ணியமின்றி ஏழைகுடியானவர்களின் கால்நடைகளையும் தானிய தவிசுகளையும் கொள்ளை அடித்து, நாசம் செய்யவும், விளையாட்டாய் அவர்கள் நடத்துகின்ற மனித வேட்டைக்கும் இவர்கள்தான் கிடைத்திருப்பார்கள். ‘சண்டாளப் பயல்களே! போன பொறப்பிலே நீங்க செஞ்சதுக்கான பாவத்தை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ‘ என ஊரிலுள்ள பெரியசாதி சனங்கள் சொல்ல, இவர்கள் ‘சாமி சொன்னா சரியாகத்தானிருக்கும் ‘ என பலிபீடத்தில் நின்று, பூசாரியின் மஞ்சட் தண்ணீர் தெளித்த ஆடுகளாய்த் தலையாட்டுவார்கள்.

மாறனின் குதிரை ஊரை நெருங்கியிருந்தபோது வடக்கில் கும்பலாய் கிடந்த சம்புவேய்ந்த வீடுகளும் பனையோலைக் குடிசைகளும் எரிந்துக் கொண்டிருக்க, சிலர் கிடைத்த பாண்டங்களில் குளம் குட்டைகளிலிருந்து தண்ணீர் சேந்தி நெருப்பினை அணைக்க முயற்சிக்கிறார்கள். தைமாதமென்பதால், குளம் குட்டைகளும் சேற்றுக் குழம்பாய் கிடந்தன. ‘எம்பிள்ளை ‘, ‘எம்பொண்ணு ‘ எங்குழந்தை ‘ என்கின்ற கூச்சல்கள் ஒரு பக்கம். தீயில் வெந்திருந்த மனித உயிர்களின் ‘அய்யோ அய்யோ ‘ வென்ற ஓலங்கள் மறுபக்கம், கருகிக் கடக்கும் கால் நடைகள், கொள்ளை அடித்து எடுத்துச் சென்றதுபோக இறைந்து கிடக்கும் தானியங்களென எப்போதும்போல இந்திய வரலாற்றில் ஏழைசனங்கள் மாத்திரமே பரிதவித்துக் கொண்டிருந்தனர்.

மாறனின் குதிரையைக்கண்டு, சற்று நேரத்திற்கு முன்னால் அட்டூழியம் செய்தத் குதிரை வீரர்களில் ஒருவனெனன தவறாக நினைத்த ஒருசிலர் ஓடி ஒளிந்து கொண்டனர். குதிரையைலிருந்து இறங்கிச் சென்று, ஏழைச்சனங்களுக்கு சிறிது நேரம் ஓடி ஓடி உதவி செய்தான்.

காமாட்சி அம்மாளைத் தேடிவந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. குதிரையைக் கீழண்டை வீதிக்குத் திருப்பினான். இதுமாதிரியான நேரங்களில், மனம் விபரீதங்களைக் கற்பனை செய்துகொள்ளும். அம்மாதிரியான கற்பனை ஏற்படுத்திய அச்சத்துடன் குதிரையை மெதுவாகச் செலுத்தினான். விழல் வேய்ந்திருந்த சில குடியானவர்களின் வீடுகள் சேதமடைந்திருந்திப்பினும், சன்று முன்னே வடக்கில் கண்ட சேதங்களில்லை. ஆதிகேசவலு ரெட்டியார்வீடு, வேணுக்கவுண்டர்வீடு, கேசவப் பிள்ளைவீடு வரிசயாகவிருந்த கல்வீடுகள் செங்கல்லுக்கு விக்கினமில்லாமல் அலட்சிமாய் நின்றிருந்தன. கடைசியாக அந்த வீடு. ஏற்றமிறைத்தவர்கள் அடையாளம் சொல்லியிருந்த வேப்ப மரம் தெரிந்தது.

குதிரையிலிருந்து இறங்கிக் கொண்டான். அங்கேயிருந்த வேப்பமரத்தினடியில் வேறொருக் குதிரை. இவனது குதிரையைக் கொண்டு சென்று அதனருகிலே வேப்பமரத்தில் பிணைத்துவிட்டு, வீட்டின் வாயிலை அடைந்தான். தெருக்கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் விவாதித்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாக மூடியக் கதவிலிருந்து கலவையாய்க் குரல்கள்:

‘என் மகளையும், மகனையும் என்னிடமே சேர்ப்பித்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும் ‘

‘அத்தை. இன்னும் கொஞ்சநாள் பொறுக்கவேணும். வலியவரும் சீதேவியை வேணாமென்று சொல்லாதீர்கள். வெண்னெய் திரண்டுவர நேரத்துலே தாழியை உடைச்சுப் போடாதே ‘

சிறிது நேரம் யோசித்துக் காத்திருந்தான். ஆணின் குரல் சிறிது சிறிதாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. உரையாடும் பெண்மணியின் குரலிலும் அதற்கீடான வேகம்.

‘இப்போது உங்கள் கூச்சலை நிறுத்தவேணும். கேட்கப்போகிறீர்களா இல்லையா ? ‘

மூன்றாவதாக ஒரு பெண்ணிண் குரல். மாறன் கேட்டுப்பழகிய குரல். தவில் வாசிப்பிற்கும், நாகஸ்வரத்திற்குமிடையில், பொற்தாளவோசை.

வாணிக்குச் சொந்தமான குரல். ஆச்சரியம். ஆர்வ மிகுதியாற் தெருக்கதவினைக் ‘தட தட ‘ வெனத் தட்டினான். உள்ளே கேட்டக் கூச்சல் இப்போது ஓய்ந்திருந்தது. மானொன்று இவன் திசைக்காய் ஓடி வருவதாகப் பிரமை. கதவுத் திறக்கப்பட, வாணி மாறனைக் கண்ட மாத்திரத்தில் திகைத்து போய் நிற்கிறாள். ஓடிவந்த வேகத்தினை ஒப்புதல் செய்கின்ற வகையில் மார்புகள் எழுந்தடங்கின்றன. இமைகள் படபடக்கின்றன. கழுத்தொட்டிய முகவாயிலும், இமையோரங்களிலும், கன்னக் கதுப்புகளில் ஒரு சிலவிடங்களிலும் புறப்பட்ட வேர்வை முத்துக்களை, அவள் சேலைத்தலைப்பால் ஒத்தியெடுக்க முனைந்தபோது, கச்சையணியா மார்புகள் முகங்காட்டி மறைய இவன் கண்கள்யாவசரகதியிற் தழுவி மீள்கிறது. அவள் இதழ்கள், மெளனமாய் எதையோ சொல்ல முயல்கின்றன. அவளைக் கண்ட மாத்திரத்தில் ஏற்பட்ட மயக்கத்தினால் விளங்கிக்கொள்ளத் தடுமாறுகிறான். எதையோ சொல்லவேண்டுமென்று நினைத்து இவன் உதடுகளும் பிரிகின்றன. அவனது உதுடுகளுக்குக் குறுக்காக அவளது கீரைத் தண்டு விரலொன்று உட்கார்ந்து கொள்கிறது.

‘உஸ்ஸ்.. அமைதி.. ‘ முதலில் முனுமுனுத்தவள் அவளே.

‘வாணி.. இங்கே எப்படி ? ‘ இவனும் மயக்கதிலிருந்து மீண்டிருந்தான்.

‘தயவு செய்து போய் விடுங்கள்.. எல்லாவறையும் பிறகு சொல்கிறேன் ‘

‘வாணி..! உனக்கேதும் நேர்ந்து விடக்கூடாது ‘

‘ எனக்கு எதுவும் நேர்ந்துவிடாது. ஆண்களைவிட இக்கட்டான நேரத்தில் எப்படி மீண்டுவருவதென்பது பெண்கள் மெத்தவே அறிந்திருக்கிறார்கள். உங்களதுத் தற்போதைய பிரவேசம் சிக்கலைக் கூட்ட உதவுமேயன்றி குறைக்க உதவாது. இப்போதைக்குத் தயவுசெய்து புறப்படவேணும். பிறகு விளக்கமாகச் சொல்வேன். ‘

அவள் நிதானித்துக் குரலைத் தாழ்த்தி சொன்னவார்த்தைகளில், புத்தி சாதுர்யம் நிறைய இருந்தது. அவளிடம் இவனுக்கு ஓர் இறுமாப்பு கலந்த சந்தோஷம்.

குதிரைக் கட்டியிருந்த இடத்துக்குத் தயக்கத்துடனே திரும்பினான். திரும்பவும் அவ்வீட்டைத் திரும்பிப்பார்த்தபொழுது, தெருக் கதவு மீண்டும் அடைத்திருந்தது.

குதிரையை அவிழ்த்து, அங்கபடியில் இடதுகால்வைத்து குதிரைமீது ஆரோகணித்தான். கிழக்குத் திசைக்காய் குதிரையைச் செலுத்தினான். புறப்பட்ட சில நாழிகைகளில் புச்சேரிக்குச் செல்லும் தடத்தைப் பிடித்திருந்தான். சிறிதுதூரம் பயணித்திருப்பான், ‘அடடா அவ்வீட்டிலிருந்த ஆண் யாரென கேட்கத் தவறிவிட்டோமே ‘ என்றெண்ணியவன், குதிரையை இழுத்துப் பிடித்தான். ஆலமரமொன்று விழுதுகளோடுப் பார்க்க பைராகித் தோற்றத்துடன் நின்றிருந்தது கண்டு இறங்கிக் கொண்டான். காத்திருந்தான்.

அவன் நம்பிக்கை வீண்போகவில்லை, இவனிருந்தத் திசைக்காய், குதிரையொன்று வேகமாய் வந்துகொண்டிருக்கிறது.

/தொடரும்/

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts