கதவு திறந்தது

0 minutes, 34 seconds Read
This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

இதயா


மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது கண்கள் வீங்கிக் கிடக்கிறாள். இந்த மூன்று நாட்களும் ராகவன் விடுப்பிலிருக்கிறான். மஞ்சுவை அணுஅணுவாய் பாதுகாத்து வருகிறான். பாவிமகள் ஏதேனும் செய்துகொண்டுவிடுவாள். இங்கேயங்கே என அவளை எங்கும் தணியே செல்ல விடுவதில்லையவன். கூடவே செல்கிறான். ஆனால் அவள்தான் தேறியபடில்லை.

பாவம் அவளும் பெண்தானே. தாய்மையை உணரத்துடிக்கிறாள். முடியாது தவிக்கிறாள். அவளின் இந்த நிலை காணும்போது, ராகவனுக்கும் தானாய் கண்களில் கண்ணீர் திரளுகிறது. ஆனால் அதை அவள் அறியாவண்ணம் சிரமப்பட்டு மறைக்கிறான். அவன் அழுதாள் அவளின் நிலை மேலும் பரிதாபமாகிப்போகும். பூவைப் போன்றவள் அவன் மஞ்சு. அவளை அவன் அதிகம் நேசித்தான்.

மெலியதாய் போன் மணி அடிக்கிறது. அதை அதிகம் ஒலிக்க விடாது, ராகவன் எடுக்கிறான்.

‘ ஹலோ… ‘

‘ ராகவா…. நான் சிவா பேசறேண்டா… ‘

‘ ம்.. சொல்லு… ‘

‘ சிஸ்டர் இன்னமும் அழுதுகிட்டுதான் இருக்காங்களா… ? ‘

‘ ஆமாம் . சிவா ரொம்பவும் ஒடிஞ்சி போயிட்டா… தேத்தறது கஷ்டமாயிருக்கு… ‘

‘ oh!… come on டா…. நீதான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லனும்.. அது உன்னாலே மட்டும்தான் முடியும்… ‘

‘ I know… அதான் சின்சியரா try பன்னிட்டிருக்கேன்.. ‘

‘ ஆண்டவன் இருக்கான். நமக்குன்னு ஒருவழி காட்டாமலா போய்டுவான்… anyway… take care ..டா ‘

‘ நானும் அந்த நம்பிக்கையிலேதான் இருக்கேன். சரி வச்சுடட்டுமா… அவ எந்திருச்சுட்டா…இன்னும் மூனு நாள் லீவ் சொல்லிடு…பை ‘

மெல்லமாய் ரெசிவரை சாத்திவிட்டு ராகவன் படுக்கையறைக்குள் நுழைந்தான். அதற்க்குள் தூக்கம் கலந்து எழுந்திருந்த மஞ்சு சுவற்றில் மட்டிவைத்திருந்த குழந்தை படங்களையே வெறித்தவாறு இருந்தாள். ராகவன் மெல்லமாய் அவள் அருகில் சென்று அமர்ந்தபடி,

‘ மஞ்சும்மா…. வா.. சாப்பிடலாம்… காலையிலிருந்தே நீ ஒன்னும் சாப்பிடவேயில்லை…. ‘

‘ ஆமா… எனக்கு சாப்பாடு ஒன்னுதான் இப்போ குறைச்சல்… ‘ விரக்தியாய் மஞ்சுவிடமிருந்து குரல் வருகிறது.

ராகவன் இன்னமும் அவளை நெருங்கியமர்ந்து, ‘ ஏம்மா .. இப்படியெல்லாம் பேசறே… ‘

‘ அப்படித்தான் பேசுவேன்…ஒரு புள்ளை பெத்துத்தர வக்கில்லை எனக்கு. இதுல சோரு ஒன்னுதான் குறைச்சல். என்னை இப்படியே விட்டிங்கன்னா.. நான் சீக்கிரமாவே செத்துபோயிடுவேன்… ‘ ஆவேசமாய் மஞ்சுவிடமிருந்து பதில் வருகிறது….

ராகவன் தன் கைகளால் அவள் முகத்தை ஏந்தியபடி,

‘ மஞ்சு, நமக்கு குழந்தை பிறக்காட்டா இப்போ என்ன ?. உனக்கு நான், எனக்கு நீன்னு இருந்துட்டு போவோம். ஒன்னுமட்டும் நல்லா தெறிஞ்சிக்கோ, எனக்கு நீ முக்கியம். உன் சிரிப்பு முக்கியம். நீ இப்படியே இருந்தியானா நானும் சீக்கிறமே செத்துபோயிடுவேன்.. ‘

மஞ்சுவின் கண்களில் கரகரவென நீர் திரளுகிறது. உதடு துடிக்கிறது. ஏதோ

சொல்ல வருகிறாள். ராகவன் மெல்லமாய் அவள் வாய்பொத்தி,

‘ செல்லம்… புருஷன் பொண்டாட்டி புள்ளை பெத்துக்கிறதுதான் வாழ்க்கையின்னு உனக்கு யார் சொல்லி கொடுத்தது. மனசு ஒத்து வாழறதுதான் தாம்பத்தியம். பிள்ளைகள் ஒரு அங்கம். நான் மறுக்கலை. ஆனா எனக்கு என் பிள்ளைகளை விட, என் பொண்டாட்டி நிம்மதி முக்கியம். … ‘

மஞ்சு ராகவனின் தோள்களில் சாய்ந்து கொள்கிறாள். இருக்கமாய் அவனை கட்டிக்கொள்கிறாள். காற்று புக முடியாத இறுக்கம். அப்படி அவனை வெறிவந்தார்போல கட்டிக்கோள்வது பிடிக்கும் அவளுக்கு. மெல்ல விசும்பலின் ஊடே அவளிடமிருந்து வார்த்தை வெளிப்படுகிறது,

‘ நிறைய ஆசை வச்சிருந்தேன் ராகவா… குறைஞ்சது மூணு பிள்ளையாவது பெத்துக்கணும். முதலாவது பெண் பிறக்கனும். அவளுக்கு நந்தினின்னு பெயர் வைக்கனும். மூனும் உன்ன மாதிரியே இருக்கனும். அடிக்கடி நீ என்னை பார்த்து, எல்லாமே என் ஜாடையின்னு என்னை கேலி பன்னனும், ஒருநாள் நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி உன் மடியிலேயே உயிர் விட்டிடனும், அப்போ நீயும், நம்ம மூனு பிள்ளைகளும் சேர்ந்து என்னை மயானத்துக்கு எடுத்துப்போகனும்… இப்ப…. எல்லாம் கனவாய் போயிடுத்து.. ராகவா…இந்த பாவி வயிறு அதுக்கு குடுத்து வைக்கலே…. ‘ மெல்ல விசும்பலாய் பேச ஆரம்பித்தவள் பின் ஓங்காரமாய் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். வயிற்றில் பலம் கொண்ட மட்டும் தன் கைகளால் அறைந்துகொண்டாள்.

ராகவன் மஞ்சுவை கலியாணம் பன்னி இதோடு ஐந்து ஆண்டுகள் ஓடிப்போய் விட்டன.முதல் பார்வையிலேயே அவனை ஆட்கொண்டாள் மஞ்சு. நெஞ்சுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்து அடம்பிடித்தாள். அவனும் அவளை சீக்கிறமே கலியாணம் செய்துகொண்டுவிட்டான். இதோ இன்றுவரை வாழ்க்கை இனித்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால் ஆண்டவன் மட்டும் ஏனோ அவர்களுக்கு புத்திர பாக்கியத்தை தரவில்லை. அவளும் மிகுந்த நம்மிக்கையுடனேயிருந்தாள். ஆயிரமாயிரம் கோயில்கள் ஏறியிறங்கினாள். அறையெங்கும் குழந்தைகளின் படங்களை மாட்டி வைத்தாள். எல்லாம் போன வாரம் வரைதான். டாக்டர் முடிவாய் சொல்லிவிட்டார். இனியவள் கர்ப்பம் தரிக்க முடியாதென. பாவம் மிகவும் நொந்துபோய்விட்டாள். அந்த வளமான உடம்புக்குள் ஏனோ ஒரு குழந்தைக்கு இடமில்லாமல் அவளின் கர்ப்பப்பை மட்டும் சுருங்கிக்கிடக்கிறது.

ராகவன் அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக்கொள்கிறான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி அவள் கைகளை நனைக்கிறது. உடன் அவள் பதறி எழுகிறாள். பாய்ந்து அவன் கண்களை துடைக்கிறாள். ராகவன் அழுது அவள் இதுவரையில் பார்த்ததில்லை. சடாரென தன் அழுகையை நிறுத்தி, அவனை பார்த்து,

‘ வா… சாப்பிடலாம்… ‘ என அவன் கைகளை பிடித்து தரதரவென இழுத்தபடி சென்று டைனிங் டேபிளில் உட்காரவைத்து அவனுக்கு பவ்யமாய் பரிமாறுகிறாள்.

ராகவன் மெல்லமாய் உணவை மென்றபடி ஆழ்ந்த சிந்தனையிலாழ்கிறான்.

ஏதாவது செய்ய வேண்டும்….

நாட்கள் மெல்லமாய் நகர்கிறது. மறுபடியும் போன்மணி அடிக்கிறது. இப்போதும் ராகவன் தான் எடுக்கிறான்.

‘ ஹலோ ‘

ராகவனின் குரலை கேட்டதும் படு உற்ச்சாகமாய் சிவா பேச ஆரம்மிக்கிறான்.

‘ மச்சான்… ஒரு சந்தோஷமான விஷயம்டா….உனக்கு நல்ல காலம் பிறந்தாச்சு…ஆண்டவன் கண்களை திறந்துட்டான்… ‘

எதிர்முனையில் சிவா பேசிக்கோண்டே போக ராகவன் சந்தோஷத்தின் உச்சிக்கே போகிறான்.

‘ சிவா… தாங்ஸ்டா… இதோ இப்பவே வர்ரேன்… உடனே காரியம் முடிஞ்சுடுமா…. ? ‘

‘ yes – டா… நான் எல்லாத்தையும் பேசிட்டேன்…நீ வந்து ஒரு கையெழுத்து போட்டா போதும், காரியம் முடிஞ்சிடும்… ‘

‘ நீ போனை முதல்லே வை.. இதோ நான் ஒரு மணிநேரத்துலே அங்கேயிருப்பேன். அதுக்கு முன்னே நர்மதாவை வீட்டுக்கு அனுப்பிவை. அவளுக்கு துணையா விட்டுட்டு வர்ரேன்….சரியா…. ‘

‘ done ‘

போனை வைத்துவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு வெகு ஆனந்தமாய் குளியலறை சென்று குளித்தான் ராகவன். அவன் குளித்து முடிப்பதற்க்கும், நர்மதா வருவதற்க்கும் சரியாய் இருந்தது, மெல்ல அவள் அருகே சென்று, மஞ்சு அறியாவண்ணம் ,

‘ நர்மதா.. அவளுக்கு ஒன்னும் தெறியவேணாம். ஒருமணி நேரத்துலே நாங்கள் வந்துவிடுகிறோம்… ‘ என்றவன் மெல்ல மஞ்சுவிடம் சென்று,

‘ மஞ்சு எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு, ஒரு ஒருமணிநேரத்துலே திரும்பிடுவேன். அதுவரைக்கும் உனக்கு நம்ம நர்மதா துணையயிருப்பா…. ‘

சரேலென வெளியேறுகிறான் ராகவன்.

அன்னை மேரி மாதா அனாதைகள் இல்லம்.

வாசலில் புன்னைகையோடு சிவா. ராகவனை பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து கட்டிக்கொள்கிிறான். ராகவனின் கண்களில் கண்ணீரை கண்டதும்,

‘ டேய் ராகவா.. அழாதே… இனி உன் வாழ்க்கையிலே அழுகைக்கே இடமில்லே… ‘

‘ தேங்ஸ்டா….இந்த நன்றியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்…. ‘

‘ உனக்கு ஒன்னுன்னா அது என்னக்கும்தான். ஏன்னா நம்ம நட்புக்கு ஆழம் அதிகம்.. சரிசரி வா உள்ளே போகலாம்… ‘

‘ குழந்தை இப்போ எங்கிருக்கிறா…நான் அவளை பார்க்கனுமே…. ‘

‘ கவலைப்படாதே… குழந்தை சும்மா தேவதையாட்டமா இருக்கா… பார்க்கத்தானே போறே… இப்போ பாதரை பார்த்து பேசிவிட்டு வந்திடலாம்… வா… ‘

உள்ளே சென்று பாதிரியாரின் எதிரில் அமர்கின்ரரை¢. காத்திருந்ததுபோல பாதிரியார் பேச ஆரம்பிக்கிறார்.

‘ சாதாரனமா இவ்வளவு சின்ன வயசிலே நாங்க யாருக்கும் தத்து கொடுக்கறதில்லே. ஆனா Mr. சிவா உங்களைப்பற்றியும், உங்கள் மனைவியைப்பற்றியும் சொன்னதும் எனக்கு மறுக்க தோணலே. ஆண்டவன் சித்தம் அதுவானால் அதை தடுக்க நான் யார். இந்த குழந்தை என்னிடம் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்க்குள் தன் அழகு கொஞ்சும் சிரிப்பால் எல்லோரையும் தன் வசம் வைத்துக்கொண்டாள். கர்த்தரோட கிருபை அவளுக்கு நிறைய இருக்கு. அவளுக்கு உங்களால் ஒரு வளமான வாழ்க்கை அமையும் என்ற

நம்மிக்கையுடன் நான் உங்களுக்கு இந்த ஆண்டவனுடைய புத்திரியை மனப்பூர்வமாய் தத்து கொடுக்கிறேன். இந்த பாரமில் ஒரு கையெழுத்து போடுங்கள். கூடவே குழந்தைக்கு ஒரு பெயர் வைத்துவிடுங்கள்.

‘ நந்தினி… ‘

சட்டென சொல்கிறான் ராகவன்.

‘ குட்நேம்… ‘

‘ நல்லது.. ஒரு மாதத்திற்க்குள் சட்டப்படி சுவீகாரம் செய்துகொள்ளுங்கள். ‘

‘ சரி பாதர்.. அப்புறம் இந்த 50,000 / – க்கான செக்கை தாங்கள் அவசியம் ஏற்றுக்கொள் ள வேண்டும்…. ‘

‘ ஆண்டவனின் சித்தம் அதுவானால் அதை தடுக்க நான் யார்.. நன்றி.. ‘

‘ பாதர் குழந்தையை நான் பார்க்கலாமா…அவளை இப்பவே என்கூட அழைச்சிகிட்டு போகலாமா.. ? ‘ ராகவன் ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டிருந்தான்.

‘ oh !… my jesus… இந்த குழந்தை மிகவும் குடுத்து வைத்திருக்கிறது… ஆண்டவன் இந்த குடும்பத்தை காப்பாராக… ‘ என்றவர் உள்நோக்கி குரல் கொடுக்க, அடுத்த இந்தாவது நிமிடம் ஒரு பொன்னிற தேவதை ராகவன் கைகளில் தவழ்கிறது….

அந்த நிமிடம் ராகவனின் வாழ்நாளிள் மறக்க முடியாத தருணம். அந்த 1 1/2 வயது தேவதை ராகவனின் கைகளில் தவழ்கிறது. குண்டு குண்டாய் கன்னத்தோடு தன் முல்லைப்பல் தெறிய ராகவனை பார்த்த்து அனியாயத்திற்க்கு சிரிக்கிறது. ராகவனும் சிரிக்கிறான். தன் கண்களில் கண்ணீர் வர சிரிக்கிறான். அவளை நெஞ்சோடு நெஞ்சாய் அணைத்து முத்தமழை பொழிகிறான். பின் அவளை பாதிரியாரின் கால்களில் போட்டு சாஷ்டாங்கமாய் தானும் விழுகிறான்.

‘ எங்களை ஆசீர்வதியுங்கள் பாதர்….இவள் நீண்ட காலம் வாழ வேண்டும்…. ‘

பாதர் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

சிவாவும், ராகவனுமாய் சேர்ந்து நேரே கோயிலுக்கு சென்று நந்தினியின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள். பின் கடைவீதிக்கு சென்று நந்தினிக்கு புதுதுணிமனிகள் வாங்கி அவளுக்கு அணிவிக்கிறார்கள். கூடவே கனமான கொலுசும்…பின் வீடு வந்து தன் நிலைப்படியில் நந்தினியை நிறுத்தி, தன்னைப்பார்த்து புன்னகைக்கும் அவளின் தாடையை தன் கைகளில் ஏந்தியபடி,

‘ நந்தினி…. உள்ளே அம்மா இருக்காங்க பாரு…. ‘

நந்தினி ராகவனை பார்த்து தன் பொக்கைப்பல் காட்டி சிரிக்கிறாள். பின் உரிமையாய் தன் பிஞ்சுக்கால் பதிய தத்தக்கா, பித்தக்கா என நடந்து, விழுந்து பின் சுதாரித்து மெல்ல எழுந்து ஒரு தேவதையைபோல நடக்கிறாள். அவளின் நடை ஒரே நேர்க்கோடாய் மஞ்சுவின் அறையை நோக்கி இருக்கிறது. ராகவன் ஒருமுறை ஆழமாய் மூச்சையிழுத்து விடுகிறான். பின் வீட்டின் கதவுகள் அனைத்தையும் திறந்து, விளக்குகள் அனைத்தினையும் போட்டு விடுகிறான். வீடே ஒளிவெள்ளமாய் மாறிப்போகிறது.

ஆம்… இனியவன் வாழ்க்கையில் இருட்டுக்கு அங்கே இடமில்லை.

***

By :

Idhayaa @ Ramesh.T

No 6 – A , Jerome building

Fort Station Road,

Trichy – 620002

Call : 0431 / 2700032

idhayaa@hotmail.com

Series Navigation

author

இதயா

இதயா

Similar Posts