கதை 07 : இசைக்கலைஞனின் கதை

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்தபோது ஒரு இசைக்கலைஞன் இருந்தான். பாடுவதிலும் யாழ் மீட்டுவதிலும் இணையற்று விளங்கினான் அவன். அவனுடைய குரலின் இனிமை குயிலை மயக்கமடைய வைப்பதாக இருந்தது. எந்த சபைக்கும் அவனது குரல் ஒரு ஆபரணமாக விளங்கியது. அவன் குரலைக் கேட்டால் யானைக்கும் சிறகு முளைக்கும். இறந்தவர் உயிர் பெறுவர். (மறுமை நாளில் உயிரெழுப்பும் வானவரான) இஸ்ராஃபீலின் குரலைக் கேட்டதுபோல.

இறைத்தூதர்கள் அனைவருக்குள்ளும் ஒரு (ஆன்மீக) இசையிருந்தது. இறைவனைத் தேடியவர்களுக்கு அது உயிர் கொடுத்தது. நம் புறச்செவிகளுக்கு அது கேட்பதில்லை. பரியின் இசை மனிதர்களுக்குக் கேட்கிறதா என்ன ? அவர்களின் ரகசியங்கள் மனிதர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் பரியின் இசைகூட இந்த உலகத்திற்காகத்தான்.

இதயங்களின் இசையே எல்லா இசையையும்விட சிறந்ததாகும். ஏனெனில், வானவரும் சரி மனிதரும் சரி, இருவருமே தங்கள் அறியாமையின் சிறையில் அகப்பட்டுக்கொண்டவர்கள்தான்.

இறைநேசர்களின் அந்தரங்க இசை என்ன சொல்கிறது ? ‘ஓ! ‘லா ‘வின் துகள்களே! முதல் ‘லா ‘ — இல்லையெனும் மறுப்பு — விலிருந்து உங்கள் தலையைத் தூக்குங்கள். கற்பனையிலிருந்து எழுங்கள் ‘ என்கிறது.

இறைநேசர்களின் அந்தரங்க இசையிலிருந்து நான் கொஞ்சம் எடுத்துக் காட்டினால்கூடப் போதும். கல்லறையிலிருந்து ஆத்மாக்கள் தலைதூக்கும். கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அந்த இசை வெகுதொலைவில் உள்ளதல்ல. எனினும் அதைப்பற்றி எடுத்தியம்ப எனக்கு அனுமதியில்லை.

கேளுங்கள். இறைநேசர்கள் என்பவர்கள் யார் ? நிகழ்காலத்தின் இஸ்ராஃபீல்கள் அவர்கள். அவர்களின் பொருட்டுத்தான் இறந்தவர்கள் உயிர் பெறுகிறார்கள். அவர்களின் குரல் கேட்டதும் இறந்தவர்களின் ஆத்மாக்கள் கஃபன் துணிகளுக்குள்ளிருந்து தலைகள உயர்த்துகின்றன.

இந்தக்குரல் மற்ற குரல்களைப் போன்றதல்ல. மரித்தவரை உயிர்ப்பிக்கும் இறைவனின் குரலல்லவா அது ? இந்த உண்மையை அவைகள் புரிந்து கொள்ளும்.

அன்னை மரியமுக்கு தனது இதயத்திலிருந்து இறைவன் எதைக்கொடுத்தானோ அதைத்தான் அவனது குரல் அழைப்பு நமக்குக் கொடுக்கிறது. மறைமுகமாகவோ நேரடியாகவோ.

தோலுக்குக்கீழே மக்கி மண்ணாகிப் போனவர்களே! நண்பனாகிய இறை நேசர்களின் குரல் கேட்டு உயிர் பெறுங்கள். இருப்புக்கு வாருங்கள். ஏனெனில் அந்தக்குரல் இறைநேசரின் தொண்டையிலிருந்து புறப்பட்டாலும், அது அரசனிடமிருந்து (இறைவனிடமிருந்து) வருவதுதான்.

இறைநேசர்களை நோக்கி இறைவன் சொன்னான் : ‘நானே உனது நாக்கு, கண், புலன்கள், இன்பம், கோபம் (எல்லாமே). நீ என்னாலேயே பார்க்கிறாய், கேட்கிறாய். சமயங்களில் நான், அது நீ என்றும், (வேறுசில) சமயங்களில் அது நான் என்றும் சொல்வேன். எது சொன்னாலும் அனைத்தையும் ஒளிர்விக்கும் சூரியன் நானே. ‘

மதுவை நீ ஜாடியிலிருந்து குடித்தால் என்ன, கோப்பையிலிருந்து குடித்தால் என்ன ? என்னைப் பார்த்தவர்களுக்கும், என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும் சுபசோபனம் என்று பெருமானார்(ஸல்) ஏன் சொன்னார்கள் ?

ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஆயிரம் விளக்குகளை ஏற்றினாலும் சரி, கடைசி விளக்கைப் பார்க்கும்போது, ஒவ்வொருவனும் முதல் விளக்கையே பார்க்கின்றான். ஏனெனில் ஒளி ஒன்றுதான். கடைசி விளக்கிலிருந்து பார்த்தாலும் சரி, முந்தியவற்றிலிருந்து பார்த்தாலும் சரி. புரிந்து கொள்ளுங்கள்.

முள்ளைச் சுவைக்கும் ஒட்டகங்களே! உங்கள் முதுகின்மீது அமர்ந்திருப்பது முஸ்தஃபாவாகும். ஒரு ரோஜா மூட்டையை முதுகிலேயே வைத்துக்கொண்டு முட்புதர்களை நாடி நீங்கள் ஏன் விரைகின்றீர்கள் ?

இறைநேசர்களின் உடல்களும் அவர்களுடைய உயிரைப் போலவே தூய்மையானது. அவர்களுடைய பேச்சும் மூச்சும் அப்படியே. மற்றவர்களுடையதைப்போல அவர்களின் புனித உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதில்லை.

தோழர்களே ஜாக்கிரதை ! வசந்தகாலக் குளிரிலிருந்து உங்கள் உடலைப் போர்த்தாதீர்கள். வசந்தகாலம் மரங்களுக்கு என்ன தருகிறதோ, அதையொத்ததை இந்தக்குளிர் உங்கள் ஆன்மாக்களுக்குத் தரும். ஆனால் இலையுதிர்காலக் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றார்கள் பெருமானார்.

இந்த ஹதீதின் ஜீவனை, விளக்கம் தரும் பலர் புரிந்துகொள்ளவில்லை. மலையைக் கண்டவர் அதன் உள்ளே இருக்கும் தங்கச் சுரங்கத்தைக் காணவில்லை.

இறைவனுடைய பார்வையில் இலையுதிர்காலம் என்பது கீழான ஆசையான நஃப்ஸைக் குறிக்கும். ஞானமும் உயிரும் நிரந்தரமான வாழ்வின் ஆதாரங்களான வசந்தகாலமாகும். எனவே இறைநேசர்கள் எதைச் சொன்னார்களோ அது குளிராக (மென்மையாக) இருந்தாலும் சரி, சூடாக (கடுமையாக) இருந்தாலும் சரி, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே உங்கள் மார்க்கத்தின் உறுதுணையாகும். உங்கள் உடம்பை அவற்றிலிருந்து மறைக்கவேண்டாம் என்பதே அந்த ஹதீதின் சரியான விளக்கமாகும்.

சரி, கதைக்கு வருவோம். அந்த இசைக்கலைஞனின் பாடலைக்கேட்டு ஆன்மா எனும் பறைவை சிறகடிக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல அவன் வயோதிகனானன். பலகீனத்தால் அவனுடைய ஆன்மா எனும் கழுகு, பூச்சிகளைப் பிடித்துத் தின்ன ஆரம்பித்தது. ஆத்மாவை உயிர்ப்பிக்கும் அவனது குரல் அவல நிலையடைந்தது. கழுதையின் கத்தலைவிட மோசமாகியது. அசிங்கமாகாத அழகு எது ? கடைசியில் தரையாகாத கூரை எது ? ஒரு சின்ன ரொட்டித் துண்டுக்குக்கூட கடனாளியாகும் நிலைக்கு வந்தான் அந்தக் கலைஞன்.

‘இைறைவா எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தாய். எவ்வளவோ உதவிகள் செய்தாய். உனது கருணை அளப்பரியது. எழுபது வருடங்களாக நான் (உனை மறந்த) பாபத்தைச் செய்துவிட்டேன். எனினும் உனது கருணையை நீ குறைக்கவில்லை. இப்போது நான் சம்பாதிப்பது ஒன்றுமில்லை. இன்று நான் உன் விருந்தாளி. எனது யாழை இன்று நான் உனக்காக மீட்டுவேன் ‘ என்று சொல்லி தனது யாழை எடுத்துக்கொண்டு இறைவனை நாடி மதினா நகரின் அடக்க ஸ்தலமொன்றிற்குச் சென்றான் அந்தக் கலைஞன்.

அழுதுகொண்டே அங்கே வெகு நேரம் வாசித்தான். பின் தனது யாழை தலையணையாக வைத்து கல்லறை ஒன்றின்மீது தலை சாய்த்தான். உறக்கம் வந்தது.

அவனுடைய ஆன்மா எனும் பறவை உடல் கூட்டைவிட்டுப் பறந்தது.

தலையும் காலும் இன்றி நான் பயணம் செய்வேன்.

வாயும் பல்லும் இன்றி நான் புசிப்பேன்.

நினைவாற்றலும் எண்ணமும் இன்றி நான் சொர்க்கத்தில் உள்ளவர்களோடு அளவளாவுவேன்.

மூடிய கண்களுடன் இந்த உலகம் முழுவதையும் பார்ப்பேன்.

கைகளின்றி நான் ரோஜா மலர்களைப் பறிப்பேன்.

எந்த ஓடை நீரின் பொருட்டால் அய்யூப் அவர்கள் தூய்மை அடைந்தார்களோ, அந்த ஓடையில், அந்தத் தேனாற்றில் குளிப்பேன், குடிப்பேன்

என்று பாடிக்கொண்டே பறந்தது.

விண்ணளவு பெரியதாக இந்த மஸ்னவி இருந்தாலும், ஆன்மீக உலகின் பெருமைகளை பாதிகூட என்னால் சொல்லமுடியாது. சரி, இப்படியாக அந்த இசைக்கலைஞனின் ஆன்மா சஞ்சரித்திருக்க, கலீஃபா உமர் அவர்களுக்கு இறைவன் உறக்கத்தை அனுப்பினான். நேரங்கெட்ட நேரத்தில் வந்த அந்த உறக்கம் இறைவன் அனுப்பியதுதான் என்று உமரும் புரிந்து கொண்டார்கள்.

0 0 0

உறக்கத்தில் வந்த கனவில் இறைவனிடமிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டார்கள். எல்லாக் குரல்களும் எந்தக் குரலில் இருந்து வருகிறதோ அந்தக்குரலை. உண்மையில் அது ஒன்றுதான் குரலாகும். மற்ற யாவும் எதிரொலிகள்தான்.

செவிகளும் இதழ்களும் இன்றி, துருக்கியரும், குர்தும், ஃபார்சிகளும், அரபிகளும் அந்தக் குரலைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் என்ன ? மரங்களும் கற்களும்கூட அந்தக் குரலைப் புரிந்துகொண்டன. ‘நான் உங்கள் நாயன் அல்லவா ?! ‘ என்ற அந்தக்குரல் ஒவ்வொரு கணமும் கேட்டுக்கொண்டுதான் உள்ளது.

ஒருமுறை பெருமானாரிடம் ஒரு மரத்தூண் முறையிட்டது. ‘யா ரஸூலுல்லாஹ்! எப்போதும் என் மீது சாய்ந்திருப்பீர்களே, இப்போதெல்லாம் மிம்பர் (மேடை) நோக்கிப் போய்விடுகிறீர்கள். உங்களை விட்டுப் பிரிந்ததால் என் ஆன்மா ரத்தம் சிந்துகிறது ‘ என்றது.

‘ஓ தூணே! உனக்கு என்ன வேண்டும் ? நீ என்னவாக விரும்புகிறாய் ? ஈச்ச மரமாக விருப்பமா ? அல்லது அந்த உலகில் சைப்ரஸ் மரமாக விருப்பமா ? ‘ என்று கேட்டார்கள்.

‘நிரந்தரமான ஒரு வாழ்வையே பெற விரும்புகிறேன் ‘ என்றது அது.

கவனியுங்கள். தற்காலிமானதை நாடும் மரமண்டைகளே! அந்த மரத்தூண் நிரந்தரமானதைக் கேட்கிறது!

பெருமானார் அந்த தூணை பூமியுனுள் புதைத்தார்கள். உயிர்த்தெழும் நாளில் மனிதர்களைப்போல அதுவும் உயிர்த்தெழட்டும் என்று.

ஆன்மீக ரகசியங்களை அறியாதவர்களால் ஜடப்பொருள்களின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியுமா ? அறிவை நம்பியிருக்கும் தர்க்கவாதிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சந்தேகத்தின் நிழல் பட்டதால் எத்தனையோ தர்க்கவாதிகள் அதளபாதாளத்தில் விழுந்துள்ளார்கள். அவர்கள் நிற்கும் கால்கள் மரத்தால் ஆனது. மரக்கால் உறுதியானதல்ல.

நிற்பதற்கும் நடப்பதற்கும் குருடனுக்குத்தான் கழி தேவை. தர்க்கம், அறிவு போன்ற கழிகளைக் கொடுத்ததே இறைவன் தானே! நீங்கள் அதைக்கொண்டு, இறைவனைச் சேருகின்ற வழியைத் தேடாமல், அந்தக் கழிகளை சண்டைபோடும் கருவிகளாக மாற்றிவிட்டார்கள். குருடர்களே! கம்பைத் தூக்கி எறிந்துவிட்டு, கம்பைக் கொடுத்தவனின் சட்டையைப் (பற்றிப்) பிடித்துக் கொள்ளுங்கள்.

மூஸாவின் கம்பு பாம்பான அற்புதத்தையும், பெருமானாரின் தூண் பேசிய அற்புதத்தையும் சிந்தியுங்கள்.

ஒரு தடவை அபூஜஹ்ல் சில கூழாங்கற்களை எடுத்து தன் கைகளுக்குள் மறைத்துக்கொண்டான். பெருமானாரைப் பார்த்து, ‘அஹ்மதே! நீர் உண்மையிலேயே இறைவனின் தூதர் என்றால், என் கைகளுக்குள் உள்ளது என்ன என்று சொல்லும் ‘ என்றான்.

‘உம் கைகளுக்குள்ளே உள்ளது என்ன என்று சொல்லவா அல்லது அவைகளை நான் யாரென்று சொல்ல வைக்கவா ? ‘ என்றார்கள் இறுதிநபி.

‘இரண்டாவது ‘ என்றான் அபூஜஹ்ல்.

‘சரி, அல்லாஹ் அதைவிட சக்தி மிக்கவன் ‘ என்றார்கள் எம்பெருமானார்.

அவ்வளவுதான். உடனே அபூஜஹ்லின் கைகளுக்குள்ளிருந்த கற்கள் எல்லாம் ‘லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ‘ என்று முழங்க ஆரம்பித்தன. சினத்தில் கற்களைத் தரையில் வீசினான் அபூஜஹ்ல். கல்லும், மண்ணும், மரமும் எப்படிப் பேசும் என்று புரிந்ததா ? சரி கதைக்கு வருவோம்.

‘உமரே! எனது அடியானின் தேவையை நிறைவேற்றும். எமது மரியாதைக்குரிய அடிமை அவர். அவரைத்தேடி இடுகாட்டுக்கு நடந்து செல்லும். கஜானாவில் இருந்து எழு நூறு தீனார்கள் எடுத்துச் செல்லும் ‘

‘இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவரே! இந்தக் குறைவான பணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதைக்கொண்டு பட்டு நூல் வாங்கிக்கொள்ளுங்கள். தீர்ந்தவுடன் மறுபடியும் வாருங்கள் என்று கூறும் ‘.

குரலைக் கேட்டு உமர் அதிர்ச்சியுற்று எழுந்தார்கள். சொன்னபடி சென்ற உமர், இறைவன் குறிப்பிட்ட அந்த உயர்ந்த அடியானை அங்கு தேடினார்கள். அங்கே அந்த வயசான இசைக்கலைஞனைத் தவிர வேறுயாரும் இல்லை.

இவரா என்று சந்தேகமுற்று, மறுபடியும் தேட ஆரம்பித்தார்கள். பாலவனத்தில் வேட்டைக்குச் சென்ற சிங்கத்தைப்போல அலைந்துவிட்டு, வேறு யாரும் இல்லாததைக் கண்ட உமர், ‘எத்தனையோ ஒளியூட்டப்பட்ட இதயங்கள் இருட்டில் அகப்படுகின்றன ‘ என்றார்கள்.

அந்த இசைக்கலைஞனின் அருகில் வந்து, மரியாதையாக அமர்ந்தார்கள். தும்மல் வந்தது. தும்மலில் விழிப்படைந்த இசைக்கலைஞன் உமரைக் கண்டு வியப்பும் பயமும் அடைந்தான். அங்கிருந்து போகத்தலைப்பட்டான்.

‘பயப்படாதீர்கள். என்னைக்கண்டு ஓட வேண்டாம். இறைவனிடமிருந்து தங்களுக்கு நல்ல செய்தி கொண்டுவந்துள்ளேன். இறைவனே உங்களைப் புகழ்ந்தான். உங்கள் முகத்தை நாடி வரும்படிச் செய்தான் ‘ என்று ஆறுதல் சொல்லி பணத்தைக் கொடுத்தார்கள்.

அவமானத்தால் அந்த இசைக்கலைஞன் உருகினான். ‘ஈடு இணையற்ற இறைவா! ‘ என்று புலம்பினான். வெகுநேரம் அழுது அரற்றினான். பின் தனது யாழைத் தரையில் மோதி சுக்கு நூறாக உடைத்தான்.

‘ஓ யாழே ! எனக்கும் இறைவனுக்கு இடையில் நீ திரையாக இருந்தாய். எழுபது ஆண்டுகளாய் என் ரத்தத்தைக் குடித்தாய். இறைவனின் முன்னே உன்னால் என் முகம் கருப்பாகிவிட்டது. ‘

‘இறைவன் எனக்கு உயிரையும் இந்த வாழ்வையும் கொடுத்தான். ஒவ்வொரு நாளின் மதிப்பையும் அருமையையும் அறிவார் எவர் ? என் வாழ்வை நான் மூச்சுவிட்டே செலவழித்துவிட்டேன் இசையாக. இசையில் கவனம் வைத்த நான் இந்த உலகை விட்டுப் பிரியும் நாளை மறந்து போனேன். என்னைவிட எனக்கு நெருக்கமாக உள்ள இறைவா! உன்னைத் தவிர எனக்கு நீதி வழங்குபவர் எவருமில்லை ‘ என்று புலம்பினான்.

‘கடந்துபோனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கடந்த காலமும் எதிர்காலமும்தான் இறைவனிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற திரையாகும். இரண்டையும் நெருப்பிலிடுங்கள். ‘

‘உங்களுடைய அறிவு இறைவனிடமிருந்து வரவில்லையெனில், நீங்கள் தேடும் பாப மன்னிப்புக்கூட பாபமாகிவிடும். கடந்துபோனதற்காக வருந்துபவர்களே! இப்படி வருந்துவதற்காக எப்போது வருந்தப்போகிறீர்கள் ? ‘ என்றார்கள் கலீஃபா உமர்.

ரகசியங்களை கலீஃபா எடுத்தியம்பியதும் வயோதிகனின் உள்ளம் விழித்துக்கொண்டது. (அழுகையும் சிரிப்புமற்ற) ஆன்மாவைப் போலானான் அவன். பின் இறைவனின் பேரொளியில் மூழ்கிப்போனான் அவன்.

அருஞ்சொற்பொருள்

இஸ்ராஃபீல் — தீர்ப்பு நாளில் சூர் எனும் கருவியை ஊதி மறு உயிர் தரும் வானவர்

மரியம் — இறைத்தூதர் ஈஸா அவர்களின் அன்னை. புனித பைபிள் இவரை மேரி என்கிறது

கஃபன் — இறந்த உடலை போர்த்தியிருக்கும் தையலில்லாத வெள்ளைத் துணி

நஃப்ஸ் — கீழான ஆசைகள்

பெருமானார், முஸ்தஃபா, அஹ்மது — முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

மூஸா — ஒரு நபி. அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்த அற்புதம் ஒரு கழி. அது இரவில் விளக்காகும். எதிரிகளுக்குப் பாம்பாகும். அதைக்கொண்டுதான் அவர்கள் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்கள். மூஸா புனித பைபிளில் மோசஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

அபூஜஹ்ல் — பெருமானாரின் தலையாய எதிரிகளில் ஒருவன்

Series Navigation

author

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

Similar Posts