நாகரத்தினம் கிருஷ்ணா
ஆசைக்கோர் அளவில்லை! அகிலமெல் லாங்கட்டி
யாளினுங் கடல் மீதினிலே
ஆணை செல வேநினைவர்…. – தாயுமான சுவாமிகள்
அவனது கவனம் சற்றே பிசகும்படி நேர்ந்துவிட்டது.
கடந்த அரைமணித் தியானமாக, எதிரே நிற்கும் வேப்பமரத்து அணிலொன்று அங்கு நிற்கும் மனிதர்களை அசட்டை செய்து, அநேகம்விசை இறங்கிவருவதையும், சாலையை ஒட்டி விரித்திருந்த கோரைப்பாயில் காயவைத்திருந்த வாதுமைக்கொட்டைகளில் ஒன்றைத் தன் முன்னிரு கால்களால் எடுத்துப் பிடித்தவண்ணம், பருப்பினைக் கொறிக்க அது சிரமப்படும் அழகையும்; அவன் ரசிக்க வேண்டியதாகிவிட்டது.
அதிகாலமேயிலிருந்தே, நின்று கொண்டிருக்கிறான். நடுத்தர வயது, இடையில் தார்பாய்ச்சிக்கட்டிய வேட்டியிருக்க, மேலுக்குத் திறந்திருந்த மார்புமுழுக்கச் சுழிசுழியாக முடி. சவரம் செய்யாத முகம். காதுகள் இரண்டிலும் கடுக்கன், தலையில் கொஞ்சமாகவிருந்த சிகையைப் பின்புறம் ஒதுக்கியதில் கிடைத்த குழந்தை கைப்பிடி அளவு குடுமி; அதன் மீது செம்மண் நிறத்திலொரு முண்டாசு.
அவனுக்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேர இடைவெளியில் வெற்றிலை போட்டாகவேணும். மடியை அவிழ்த்துப் பார்க்கிறான். வில்லியனூர் துருக்கர் கொடுத்துவிட்ட வெற்றிலை பழுத்துப் போய்க்கிடக்கிறது. பாக்கும், சுண்ணாம்பும் இரண்டு மூன்று வாய்க்கு வரும். புகையிலை
மாத்திரம் குறைகிறது. எதிர்வீட்டில் நிற்கின்ற பல்லக்குத் தூக்கிகளைக் கேட்டுப்பார்க்கலாம் என்கின்ற எண்ணம் மனதிலுதிக்க, இறங்கி நடக்கிறான்.
பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி: மத்தியதரைக்கடலின் மீதான துருக்கியர் ஆதிக்கம் வலிமையாகவிருக்க, தந்திரத்தோடான ஆளுமையும், முயற்சிகளில் நம்பிக்கையும் கொண்ட ஐரோப்பியர்கள் கீழைநாடுகளுக்கு, புதிய கடல்வழியைக்காண தொடைதட்டி நின்றார்கள்..
அதிர்ஷ்டக் காற்றென்னவோ, போர்ச்சுகீசியர் கப்பலுக்குச் சாதமாக வீசுகிறது. வாஸ்கோடகாமா என்ற மாலுமி கோழிக்கோட்டில் துறை பிடிக்கிறான்*. வந்தவன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, தாராளமாக வாணிகம் நடத்திக்கொள்ள அனுமதித்த முதல் பெருமை, கோழிக்கோடு துக்கடா அரசாங்கத்தைச் சேரும். அதற்குப்பிறகு கொச்சி, கண்ணனூர் துக்கடாக்களும் ‘மேள தாள சம்பிரத்துடன் ‘ தோளினைக்காட்ட போர்ச்சுகீசியர்கள் சுலபமாய் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.
இவர்களின் அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு 1600ல் ஆங்கிலேயர்களும், 1602ல் டச்சுக்காரர்களும் இந்தியாவிற்குள் நுழைய, ஆங்கிலேயர்களின் பங்காளிகளான பிரெஞ்சுக்காரர்கள் 64ஆண்டுகாலம் தூங்கிவிட்டு, 1666ல் சூரத்தில் தங்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு காரியாலயத்தைத் திறந்துகொண்டு வந்து சேர்ந்தார்கள்.
வழக்கம்போல, அந்நியர்கள் செளகரியமாய் இங்கே நுழைந்து மடத்தைப் பிடுங்கிக்கொள்ள ஆயிரத்தெட்டுக் காரணங்களிருந்தன.
முதலாவதாக, வலிமை குன்றியிருந்த மொகலாயப் பேரசு. இரண்டாவதாக ஏக்கர்பரப்புகளில் ராச்சியங்களை வைத்திருந்த சில்லறை ராசாக்கள். இருதரப்பாருமே இரவுக்குப் பெண்கள் சம்போகமும், பகலுக்கு ஹுக்காப் புகையையும் பிரதானகாரியங்களாகக் கொண்டிருந்தவர்கள். உண்ட களைப்பிற்குத் தூங்கியநேரம் போக மற்ற நேரங்களில், சேடிப்பெண்கள் விசிற, புதிதாய் அந்தப்புரத்திற்கு வந்திருக்கும் பெண்கள், தொப்பையில் பாதியும் தொடையில் பாதியுமாய்ச் சரிந்து வெற்றிலைமடித்து கொடுக்க, பரத கண்டத்தின் தேசிய விளையாட்டுக்களான ஆடுபுலி, பரமபதம், தாயகட்டை, சதுரங்கம் ஆட்டங்களில் நாட்கணக்கில் பிரேமித்திருப்பார்கள். ஓய்ந்தநேரங்களில் எல்லாவகையான குத்துவெட்டுகளையும் அவர்களுக்குள் நடத்துவார்கள். வருமானத்திற்காகக் கருவாட்டு பிரஜைகளை முடிந்த மட்டும் கொத்தித் தின்றார்கள். போதாதென்றால் பக்கத்து நாட்டு சுகவாசி ராசாமீது படையெடுப்பு. தோற்கின்றவனின் நிலபுலங்களை அழிப்பது – கொள்ளை அடிப்பதென, இன்றைய இந்திய தாதாக்களின் முன்னோடிகள். சுகமான வாழ்க்கைக்கு உத்தரவாதமென்றால், அந்நியர்களை தலையிற்தூக்கிவைத்துக் கொண்டாடக் காத்திருந்தார்கள். ஆகமொத்தத்தில் இந்தியாவின் ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்த நேரம்.
ஐரோப்பியர்களுக்கு மொகலாய அரசு, ‘தங்கள் தேசத்தின் சரக்குகளைக் கப்பல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து சூரத்தில் ஒருமுறை சுங்கத் தீர்வையைச் செலுத்தி, மற்றவிடங்களில் விற்பனையைத் தங்கு தடையின்றிச் செய்யலாமென்றும். அவ்வாறே இந்தியச் சரக்குகளைத் தங்கள் தேசத்துக்கு எடுத்துச் செல்லவும் ‘ அனுமதி அளித்தது. பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் முதல் காரியதரிசியாக ‘பெபேர் ‘ (Bebber) என்பவர் பொறுப்பேற்கிறார். இவருக்குப் பின் அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர், புதுச்சேரி வாசிகள் நினைவிற்கொள்ளவேண்டிய பிரான்சுவா மர்த்தேன். ஆசிய தூரகிழக்கு நாடுகளுக்கான வர்த்தகம், பொன்முட்டையிடும் வாத்து என்பதைப் புரிந்துகொள்ள, இவருக்குச் சில காலம் பிடிக்கிறது.
வங்காளக்குடாக் கடற்கரையோரம், பிரெஞ்சுக் கும்பெனிக்கு, ஒரு துறைமுகம் ஏற்படுத்தத் தீர்மானித்து பிரான்சுவா மர்த்தேன் தெற்கே பயணிக்கிறார். சென்னையில், அவரோடு பறங்கிப் பாதிரியாரொருவரும், அவரது யோசனைக்கேற்ப தானப்ப முதலியார் என்கிற தமிழரும் சேர்ந்துகொள்கிறார்கள், கடற்பயணம் தொடருகிறது. சோழமண்டலக் கடற்கரையில் பறங்கிப்பேட்டைக்கு முன்னதாகக் கிடந்த வெற்று நிலம் பிடித்துப்போக, இறங்கிக்கொள்கிறார்கள். புதுச்சேரி பிறக்கிறது.
இதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான்**, பிரெஞ்சுக் கேப்டன் ஒருவன் மயிலாப்பூரில் கோல்கொண்டா சுல்தானைத் தோற்கடித்திருந்தான். இந்தக்கீர்த்தியோடு, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி நிலத்தை வியாபாரத்திற்கு உபயோகித்துக்கொள்ள அனுமதிக் கேட்க, அதனைஅதிகாரத்தில் வைத்திருந்த திருச்சிராபள்ளி ஷெர்க்கான் லோடி, சுலபமாய்த் தூக்கிக் கொடுக்கிறான்***
பிறகென்ன ? இந்தப்பக்கம் பிரான்சுவா மர்த்தேன் கும்பெனிச் சரக்குகளுக்காகக் கிடங்குகளைக் கட்ட, அந்தப்பக்கம் தானப்ப முதலியார் உள்நாட்டு வியாபாரிகளையும், நெசவாளர்களையும், மற்றவர்களையும் அழைப்பித்து அவரவர் வசதிக்கேற்ப வீடுகள்கட்டிக்கொள்ள ஏற்பாடுசெய்ய, புதுச்சேரி சிரத்தையுடன் உருவாகிறது.
பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே புதுச்சேரி, மேற்கத்தியர்களின் அவசரத்தையும், கிழக்கத்தியர்களின் நிதானத்தையும், பாலமிட்டுப் பிரித்துவைத்திருந்த நகரம்.
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கும்பெனியின் வளர்ச்சிக்கு உழைப்பதாகச் சந்திரநாகூரிலும், மஸ்கரேஞ்ஞிலும், புதுச்சேரியிலும் உள்ள குவர்னர்கள் சொல்லிக்கொண்டாலும், இன்னொரு பக்கம் வணிகக் கப்பல்களைவைத்துக் கொண்டு தங்கள் சொத்தினைப் பெருக்கிக்கொண்டனர். இது தவிர, நிர்வாகத்திடம் குவர்னர்களுக்கிடையே நல்ல உறவுடன் இருப்பதுபோல வெளியிற் காட்டிக்கொண்டாலும், ஒருவர் மற்றவர் மீது, தங்கள் தலைமை நிர்வாகத்திடம், கோள்சொல்ல ஆரம்பித்திருந்தனர். குவர்னர்களுக்கிடையே இருந்த போட்டியும், பொறாமையும், சூழ்ச்சியும் நிர்வாக அமைப்பிலும் எதிரொலித்தது.
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதாவது நமது கதை நடக்கின்ற காலத்தில்; புதுச்சேரியின் மக்கட் தொகை ஒருலட்சத்து இருபதாயிரத்தைத் தொட்டிருந்தது. இவர்களில் மூவாயிரம் பறங்கியர்கள் அடங்குவர். இதர குடிகளில் கிறித்துவர்கள், முகமதியர்கள், இந்துக்களெனப் புதுச்சேரிவாசிகள் பிரிந்திருந்தனர்.. மக்களின் வளர்ச்சிக்கேற்ப பிரச்சினைகளும் குறைவில்லாமலிருந்தன.
புதுச்சேரி குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு வேண்டியவர்கள் பிரெஞ்சுத் தீவு நிர்வாகத்திலும், பிரெஞ்சுத் தீவு குவர்னரான லாபூர்தொனேக்கு வேண்டியவர்கள் புதுச்சேரியிலும், எதிரெதிரணிகளில் இருந்தார்கள். இப்பகைமை புதுச்சேரிவாசிகளிடமும் எதிரொலித்தது….
வேலாயுத முதலியார் வீடு, முத்தியால்பேட்டையில் சென்னைக்குச் செல்லும் சாலையில் ஒதுங்கியிருந்தது. தெற்குப் பார்த்த மெத்தைவைத்த வீடு. புதுச்சேரியில் பெரும்பாலான ஓரளவு வசதிவாய்ந்த ஜாதி இந்துக்களின் வீடுகளை ஒத்திருந்தது.
வெளியே பல்லக்கொன்று காத்திருக்கிறது. பல்லக்குத் தூக்கிகளுக்கிடையே சீரான உயரம். அவர்கள் வீட்டை ஒட்டியிருந்த, வேப்பமர நிழலில் நடத்தும் உரையாடலில், நேற்றுக் கோட்டைமேட்டில் நடந்த தெருக்கூத்தைப் பற்றிய பேச்சு.
‘ ‘நான், நேத்து நாடகம் வைக்கும் போதே, நம்ம செங்கேணிக் கிழவனிடம் சொன்னேன். ‘காத்தவராயன் ஆரியமாலா ‘ நடக்கட்டும். காத்தவராயனா பரங்கிணி நடேசனும், ‘ஆர்யமாலா ‘ வேடத்தை கேணிப்பட்டு கோவிந்தனும், செய்வாங்கண்ணும் படிச்சுபடிச்சுச் சொன்னேன். காதுல வாங்கிக்கலை ‘
‘ஏன் மாமா.. அதான் போகட்டும், பாரதத்தத்திலேயாவது ஏதாவது ‘கர்ணமோட்ஷம், ‘ ‘பதினெட்டாம் போர் ‘. ‘அரவான்பலி ‘ அப்படாண்ணு ஆடியிருக்கலாம். அதைவிட்டுட்டு, தசாவதாரத்துக்குப் போனதென்ன ? அதிலும் ‘பக்த பிரகலாதா ‘ கதைகேட்க நல்லதாயிருக்கும், கூத்துக்குச் சரிவருமா ? ‘
‘நல்லாச் சொன்ன.. இந்தவருடம் பங்கு நெல்லு, அப்படி இப்படிண்ணு மிராசுகள் வந்து நிண்ணா, நாலுவார்த்தை கேட்காமக் கொடுக்கறதில்லை ‘
பல்லக்குத் தூக்கிக்களின் உரையாடலைக் காதில் வாங்கியவாறு, நமது கடுக்கனணிந்த ஆள் நெருங்கியிருந்தான்.
‘என்ன உங்க பேச்சுல கூத்து கீத்துன்னு அடிபடுது.. எங்கேக் கூத்து ? யாரு சமா ? ‘
‘நாங்களிங்கே.. பக்கத்துல கோட்டைமேடு கிராமமுங்க. நேத்துராத்திரி நம்ம ஊர்ல கூத்து நடந்தது. பரங்கிணி நடேசன்வாத்தியார் சமா. அதுகுறித்துதான் வார்த்தையாடினோம். நீர் ரொம்ப நாழிகையாய் அங்கே நிற்கிறீர் போலத் தெரியுதே. என்ன சங்கதி ?. முதலியார் ஐயாவிடம் ஏதாச்சும் உத்தியோகம் பண்ண வந்தீீரா ? ‘
‘அப்படித்தான் சொல்லவேணும். ஒருவாய் பொகையிலை கிடைக்குமா ? வெற்றிலை போடவேணும் ‘. கேட்டவன், வேலாயுதமுதலியார் வீட்டை முதன் முறையாகப் பார்ப்பதுபோல மீண்டும் பார்த்தான்.
வாசற்படியில் பர்மாத் தேக்கிலான பெரிய ஒற்றைக்கதவு. இருபுறமும் பெரிய திண்ணைகள். பிறகு தாழ்ந்த மரத்தூண்கள் நிறுத்தி,
கீற்றுவேய்ந்து இறக்கியிருந்த பெரிய தாழ்வாரம்.
வெற்றிலைப் போட்டுமுடித்தவன், பல்லக்குத் தூக்கிகளிடம் உரையாட ஆரம்பித்திருந்தபோதிலும், கவனம் வேலாயுத முதலியார் வீட்டின் மீதிருந்தது.
கட்டை வண்டியிலிருந்து விறகுகள் இறக்கப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படுகின்றன. சாலையில்வைத்து, பாடிக்கொண்டு சின்னக்கோட்டக்குப்பத்துப் பெண்கள், உலக்கைகளால் சுண்ணாம்பு இடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கூடத்தில் வேலாயுத முதலியார், வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்தார். பாவிலிட்டு முடித்த நூல்கள் பல்வேறு வண்ணங்களில் தறிகளுக்குக் காத்துக் குவிந்துள்ளன.
வீட்டிற் சில்லறை வேலைகள் நடக்கின்றன. பொம்மையார்பாளையத்திலிருந்து வந்திருந்த கொத்தனார்கள் இருவர் உள்வாசலைக் கொத்திவிட்டு, கூழாங்கற்கள், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை ஓடு கலந்து பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
‘ஏனுங்க..புறப்படுவதற்கு முன்பாக உள்ளே வந்து சிரமப்பரிகாரம் செய்துவிட்டுப் போங்கள் ‘ அழைத்தது, அவரது பெண்சாதி அலமேலு அம்மாள்.
‘ஞாபகமிருக்கிறது எடுத்துவை!.. ‘ நீண்ட மேலங்கியை அணிந்து நாடாக்களை முடிந்து கொண்டார். திருநீறைக் கொஞ்சமாக நீர்விட்டுக் குழைத்து, மூன்று விரல்களில் தொட்டு நெற்றியில் குறுக்காக இழுத்தார்.
அவருக்காக, மனைபோட்டு, தட்டில் பழையசோறு தயிர்வழியக் காத்திருக்கிறது. அருகே எண்ணெயில் பொரித்த மோர் மிளகாய். உட்கார்ந்து நிதானமாக உண்டுமுடித்தார். அலமேலம்மாள் தண்ணீர்விட தட்டிலே கையைக் கழுவிக்கொண்டு, ஏப்பமிட்டவாறு எழுந்தார்.
‘ரங்கா… ‘ எனக் குரல் கொடுத்தார். ரங்கன் உறவுக்காரப் பையன்.
‘இதோ வருகிறேன் மாமா ‘ பதிலை முடிக்குமுன் வேலாயுதமுதலியார் முன்பாக நின்றிருந்தான்.
‘கிளம்பு.. சடுதியில் கோட்டைக்குப் போயாகணும், பல்லக்குத் தூக்கிகள் வந்துவிட்டார்களா ?.. வாசலில் நிழலாடுகிறது.. என்னவென்று பார் ?.
‘ஐயா..கம்மாளன் முருகேசனுங்க.. அம்மி பொளியணும்ணு அம்மா சொல்லிவிட்டார்கள் ‘..
வந்தவன் குரல்கேட்டு, அலமேலம்மாள் எட்டிப் பார்த்தாள்
‘ஆர் முருகேசனா.. உனக்கு எத்தனைமுறை ஆட்கள் அனுப்புவது. ? ‘
அலமேலம்மாள் கேள்வியையே அனுமதியாகப் பாவித்து உள்ளேவந்தவன், முழங்கால்களுக்குமேல் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டியிருந்தான். தலையில் உருமால்.. நெற்றி நிறைய விபூதி. நுழைந்த வேகத்தில், வேலாயுத முதலியார் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தெழுந்தான்.
காலில் விழுந்தெழுந்தவனைக் கண்களால் அங்கீகரித்துவிட்டு, பெண்சாதி பக்கம் திரும்பினார்.
‘நான் புறப்படுகிறேன் அலமேலு.. ரங்கா நீ முன்னாலபோயி ஆகவேண்டிய வேலைகளைப் பாரு. நான் சடுதியில் வந்து சேருகிறேன். ‘ முன்வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ரங்கன் இவரை முந்திக்கொண்டு தெருவில் இறங்கியவன், வேகமாய் நடக்கவாரம்பித்தான்..
ரங்கசாமி என்கின்ற முழுமையான பெயர் அவனுக்கிருகிறச்சே, ரங்கனென்றே அழைக்கப்பழகியிருந்தார். ரங்கன் உறவுக்காரப் பையன். முத்திரையர்பாளையத்திலிருந்து இவரண்டை வந்து சேவகம் பார்க்கிறான். ரங்கன் என்று அவனை விளிப்பதில், வேலாயுத முதலியாருக்கு ஒரு வகையில் அற்பசந்தோஷம். அவனைச் சாக்கிட்டு ஆனந்தரங்கப் பிள்ளையைச் சாட முடிந்தது. குறுகியகாலத்தில் புதுச்சேரியில் துரைமார்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, ரங்கப்பிள்ளை பொருள் குவிப்பது குறித்து ஊர் முழுக்கப்பேச்சாகவிருப்பது, இவருக்குள்ளும் அசூயையை உண்டாக்கியிருந்தது. வேலாயுத முதலியாருக்கு, ஆனந்தரங்கப் பிள்ள மாதிரிச் சாதுர்யம் இருந்தது ஆனாலும் அதிஷ்டம் குறைவாக இருந்தது. பெத்ரோ கனகராயமுதலியைவிட இந்த ரங்கப்பிள்ளையைக் குவர்னர் அதிகமாகவே நம்புகிறார், என்பது புதுச்சேரிவாசிகளுக்கிடையே பரவலான பேச்சு.
முதலியார் இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த பல்லக்குத் தூக்கிகள், தலையிற் கட்டியிருந்த முண்டாசை, நால்வர் வலது தோள்களிலும், நால்வர் இடது தோள்களிலுமாக நான்காக மடித்துப்போட்டுக்கொண்டு, பல்லக்கைப் பயபக்தியுடன் நெருங்கிநின்றார்கள்.
முதலியார் பல்லக்கை நெருங்கி உட்காரப்போகின்ற நேரத்தில் அவனைக் கவனித்தார். அவனை, இதற்குமுன்பு, ஒரு முறை பார்த்ததாக நினைவு. எங்கேயென்று யோசித்துப் பார்த்ததில் உடனடியாக ஏதும் ஞாபகத்திற்கு வரவில்லை. தனது பல்லக்குத் தூக்கிகளில் ஒருவனைக் கூப்பிட்டார்.
‘காளி இங்கே வா.. உங்களண்டை வார்த்தையாடிப் போகின்றவன் ஆர் ? ‘
காளி என்று அழைக்கபட்ட பல்லக்குத் தூக்கிகளில் வயது கூடியவன், தோளிலிருந்த துண்டை, கக்கத்தில் அடக்கி, முதலியாரிடம் பணிந்து நின்றான்.
‘ஐயா.. நாங்கள் அவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால், காலமேயிருந்து இங்குதான் நிற்கிறான். தங்களிடம் சேவகம் கேட்டு வந்தவனெறு நினைத்தோம். நீங்கள் வெளியில்வருவதைக் கண்டமாத்திரத்தில் புறப்பட்டுவிட்டான். ‘
‘அப்படியா!..ம்.. சரிசரி.., நாம் புறப்படுவோம் ‘ ‘.
காளி வலப்புறம் இருந்த பல்லக்குத் தூக்கிகளுடன் சேர்ந்துகொண்டான். ‘வலம் தாங்கு! ‘ ‘இடம் தாங்கு! ‘ என்ற கோஷத்துடன் பல்லக்குப் புறப்பட வேலாயுத முதலியார், யோசனையில் ஆழ்ந்தார்.
வேலாயுதமுதலியாருக்கும் குவர்னரது துபாஷாகும் எண்ணமிருக்கிறது. புதுச்சேரிவாசிகளுக்கு, கும்பெனி நிர்வாகத்தினர் வழங்கும் முக்கிய பதவி. குவர்னர் துய்ப்ளெக்ஸின் முதன்மை உதவியாளர், நிர்வாக காரியாலயத்திலுள்ள ஏழு பறங்கியர்களுக்குப் பிறகு உள்ள முக்கியமான உத்தியோகம்.
இப்போதைக்கு வேலாயுத முதலியார் கும்பெனிக்கு வேண்டிய வியாபாரிகளில் (Dadni) ஒருவர். புதுச்சேரித் துறைமுகத்தில் இறக்குமதியாகும் சரக்குகளில் உள்ளூர் வியாபாரிகளின் பங்கினைச் சிலாக்கியமாகச் சொல்வதற்கில்லை. புதுச்சேரி கடற்கரையில் துறைபிடிக்கும் கப்பல்களுக்கு தட்னிகளை எவரும் பெரிதாக நம்புவதில்லை. துறைமுகத்தில் பாயெடுக்கும் கப்பல்களுக்கே இவரைப் போன்றவர்களின் சேவைகள் தேவைப் படுகின்றன.
ஆனால் கும்பெனிக்குத் துபாஷ்கள் முக்கியமானவர்கள். தட்னிகள் எனப்படும் உள்ளூர் வியாபாரிகளுக்கும், கும்பெனி வியாபாரிகளுக்குமிடையே இருந்து செயல்படுபவர்கள். சரக்குகளைத் தேர்வு செய்வது, ஒப்பந்தங்களை எழுதுவது, பறங்கியர்களுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்குமிடையே மொழி பெயர்ப்பாளர்களாக இருப்பது, அவர்களுக்கான முன்பணத்துக்கு குவர்னரிடம் ஏற்பாடு செய்வது என எல்லாமே இவர்களால் நடந்தது.
துபாஷே தட்னிகளை அழைத்து, குவர்னருக்கு அறிமுகபடுத்திய பிறகு, அந்த வருடத்திற்கு கும்பெனிக்குத் தேவையான நெசவுத் துணிகளின் அளவும், அவற்றிற்கு கும்பெனியினால் கொடுக்கமுடிந்த விலையையும் அறிவிக்கிறார். பிறகு தட்னிகள் தங்கள் காரியஸ்தர்களுக்கு(Paquers), நெசவுத் துணிகளின் தேவையைத் தெரிவிக்க அவர்கள் புதுச்சேரியைச் சுற்றியுள்ள நெசவாளிகளிடம் அதனைப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள்.****
பல்லக்கிலிருந்த வேலாயுத முதலியாருக்கு, மனதிற் கிலேசம் மிகுதியாகவிருந்தது.
‘கையிருப்புத் துணிக்கட்டுகள், ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்திற்குக் காணாது. இன்னும் ஐம்பது கட்டுகளுக்குமேல் வரவேணும். நெசவாளிகள் மேல் குற்றம் சொல்வதற்கில்லை. எல்லாம் வண்ணான் துறையிலே சலவை அரைகுறையாக இருக்கிற படியினாலே சடுதியாய் கட்டுப் போடுகிறதற்கு இல்லாமல் தவக்கப்பட்டது. எல்லாவற்ைறையும் ஆயத்தம் பண்ணுகிறதற்கு, ஒருமாசம் செல்லும் என்றபடியினாலே, கப்பல் போகாமல் நிற்கின்றது. ‘ மற்ற வியாபாரிகளுக்கும் இதுவே நிலமை என்பதாலே கும்பெனிக்குச் பெத்ரோ கனகராயமுதலி சமாதானம் சொல்லியிருந்தார். ஆனால் நிலமை சீராகாமல் அப்படியே உள்ளது. இந்தமுறை என்னகாரணம் சொல்வது என்கின்ற யோசனையில் ஆழ்ந்தார்.
புதுச்சேரியின் கோட்டைக்குள்ளிருந்த குவர்னர் அலுவலகமும், அலுவலகத்தைச் சார்ந்த ஒஃபிசியேமாரும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் அலுவலகத்தின் கவனம் முழுக்கக் கிட்டங்கிகளில் கிடந்தது. தரகர்கள், துபாஷிகள், முக்கிய வியாபரிகளென ஒருசிலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மொக்காவிலிருந்துவந்திருந்த காப்பித் தூள் பொதிகளும், சீனத்திலிருந்து வந்திருந்த வெள்ளைக் சர்க்கரை, வெள்ளைக் கற்கண்டு, துத்தநாகம், ஆரத்திக் கற்பூரம், ரசம், பட்டு, சுருட்டு, பீங்கான், தேப்பெட்டிகள். எனச் சிப்பங்கள் தனித் தனியாகப் பிரித்து வைக்கபட்டிருந்தன. ஏற்கனவே கும்பெனியின் அதிகாரிகள் பறங்கியர்களுக்குத் தேவையானவற்றைத் தனியாகப் பிரித்து ஒதுக்கியிருந்ததை கும்பெனி ஆட்கள் குதிரைவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கிட்டங்கியில் ஏகத்திற்குக் கூச்சல். கும்பெனியின் இயக்குனர்கள் இருவர் முன்னதாகச் சரக்கு விற்பனைக் கிட்டங்கிற்கு வந்து சேர, அவ்ர்களை கும்பெனி சிப்பாய்கள் மரியாதைக் கொடுத்து அழைத்துபோய் ஆசனமிட்டனர்.
வேலாயுதமுதலியாரின் பல்லக்கு, வரதராஜப் பெருமாள் கோவிலைக் கடக்க, பல்லக்கிலிருந்தவாறே, வேலாயுத முதலியார் கும்பிடுபோட்டார். ஆனந்தரங்கப் பிள்ளைக்குப் பெருமாள் வேண்டப்பட்டவர் என்பது முதலியாரின் அபிப்ராயம்.
கோபுரத்தின் கீழே, நுழைவாசல் அருகே, தன் வீட்டில்கண்ட ஆளை மறுபடியும் அவதானிக்க முடிந்தது.
பல்லக்குக் கோட்டைத் திசையில் பயணித்தபோது, வழுதாவூர்ச்சாலைத் திசையிலிருந்து கிராமத்துச் சனங்கள், குஞ்சு குளுவான்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். பல்லக்கை நிறுத்தச் சொல்லி என்னவென்று விசாரித்தார்.
பல்லக்குத் தூக்கிகளுக்கும் தோள்மாற்ற அவகாசம் தேவைப்பட்டது. நின்றார்கள். ஒரு கிராமத்தானை விசாரிக்க,
‘வேலூர்க் கோட்டையிலே இருந்து மீர்சத், ஆயிரங் குதிரைகளுடன் சேத்துபட்டுக் கோட்டையிலே
இடங்கேட்க, அந்தக் கோட்டைக்காரன் இடங்கொடுக்கிறதில்லை என்று சொன்னதின் பேரிலே,
அவ்விடத்திலே இருந்து புறப்பட்டு வழுதாவூர்க் கோட்டையிலே இறங்கினார். பிற்பாடு நூறு குதிரையும்
இருநூறு குதிரையுமாய் கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டாயிரங் குதிரைமட்டும் வந்து சேர்ந்தது.
ஆகவே மூவாயிரங் குதிரையுடனே வழுதாவூர் கோட்டையிலே இருந்தான். இருக்கச்சத்தானே
அந்தக் குதிரைக்காரர் புறப்பட்டு சுத்துபட்டிலிருக்கிற கிராமங்களெல்லாம் தோரணம் வைக்கிறதும்,
சுலுமு பண்ணுகிறதுமாக இருக்க, ஆற்காட்டிலேயிருந்த நாவாபு உசேன் சாயபும், சரத்கான்
குமாரனும் வந்தவாசியில் சஃப்தர் ஹுசேனுடன் சேர்ந்து அய்யாயிரங் குதிரையை சேகரம்
பண்ணிக்கொண்டு அவ்விடத்திலேயிருந்து புறப்பட்டு வழுதாவூருக்கு மேற்கே திருவக்கரை
ஆற்றங்கரையிலே இறங்கி சண்டை போட்டார்கள். அப்படி இருக்கச்சே அவர் பிறகே வந்த
குதிரைக்காரர் ஓரண்டையிலே கிராமங்களெல்லாம் கொள்ளையிட்டு அடித்துப்பறித்து தானியதவசம்
உடமை உப்பந்தி தட்டு முட்டுகள் சகலமும் கொள்ளையிட்டது மல்லாமல் ஊருக்குள்
நெருப்பைப்போட்டு வீடுவாசல்களெல்லாம் கொளுத்தி நிர்தூளி பண்ணி சுத்த சூனியமாக்கிப்
போட்டார்கள்….**** ‘ நடந்தவற்றை ஆதியோடந்தமாகக் கூறினான்.
‘வரவர புதுச்சேரி பாதுகாப்பில்லாமற் போச்சுது. சரி பல்லக்கைத் தூக்குங்கள். நாம் நேரத்திற்குப் சரக்குக் கிடங்கண்டை போய்ச் சேரவேணும் ‘ என்று முதலியார் கூற, பல்லக்குப் புறப்பட்டது.
வேலாயுத முதலியார் விற்பனைக்கிடங்கை அடைந்தபோது காலை பத்துமணி. முத்திரையர்பாளையத்திலிருந்து, அவரது சட்டகர் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். வழுதாவூர், முதலியார்பேட்டை, வில்லியனூர், பறங்கிப்பேட்டையென புதுச்சேரியைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்து தட்ணிகள் வந்திருந்தார்கள். கும்பெனியிடம் கடந்த முறை செய்திருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக, கூடுதலாக தங்கள் நெசவுத் துணிகளுக்கு விலைகேட்டுப் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். துபாஷ் கனகராய முதலியார் இன்னும் வந்திருக்கவில்லை.
முதலியார் கிடங்கில் அதிக நேரம் எடுத்துக்கொள்வில்லை. வந்திருந்த சகவியாபாரிகளிடம் சிறிது நேரம் வார்த்தையாட முடிந்தது. ரங்கனிடம் மொக்காக் காப்பித் தூள் கட்டொன்றும், சீனப் பட்டும் வாங்குமாறு பணித்துவிட்டு, .உள்ளூர் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டப் பொருட்களில் ஒருசிலவற்றைத் தனக்காக பார்வையிட்டு முடித்தார். பிறகு, அவர் எவரையோ எதிர்பார்த்து நின்றிருந்தார்.
அவர் எதிர்பார்த்தவண்ணம் கும்பெனியின் இரண்டாம் மட்ட அதிகாரியான பிரான்சுவா ரெமி, கிட்டங்கியின் தெற்குவாசல்வழியாக உள்ளே நுழைந்திருந்தான். முதலியாரிடம் நெருங்கி, அண்டை அழைத்துபோய் ரகசியக்குரலில் சிறிது நேரம் வார்த்தையாடினான். பிற்பாடு இருவருமாகப் புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியேறுகின்ற நேரத்தில், காலமே பார்த்த கடுக்கன் அணிந்த ஆளை,
மீண்டும் வாசலில் வைத்து, முதலியார் காண்கிறார்..
/தொடரும்/
*1498ம் ஆண்டு, மேமாதம் 20ம் நாள்.
** 1672ம் ஆண்டு, ஜூலை 25ம் நாள்
*** 1673ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம்நாள்
**** La Compagnie des Indes, Philippe Haudrere
**** ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு
- விமானப் பயணங்கள்.
- தாய்க்கு ஒரு நாள்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- கவிதை உருவான கதை – 5
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்
- கடிதங்கள் – மே 6,2004
- மே நாள்
- முணுமுணுப்பு
- கவிதை
- வீழ்த்துவதேன் ?
- பகை
- கதவாக நான்..
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- பின் நாற்றம்
- பாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு
- கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்
- எழிற்கொள்ளை
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- குற்றவாளிகள் யார் ?
- இயற்கையே நீயுமா…. ?
- கதவு திறந்தது
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- பிறந்த மண்ணுக்கு..- 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- பனிநிலா
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- விதைத்தது
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- சத்தியின் கவிக்கட்டு 5
- அட்சய பாத்திரங்கள்…!!!
- புள்ளிக்கோலம்.
- கண்ணாடியும் விலங்கும்
- நிலவோடு நீ வருவாய்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- இடக்கரடக்கல்