நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Je sais quel appas son enfance etait pleine

et n ‘ai pas entrepris,

Injurieux ami, de soulager ta peine

Avecque son mepris.

– Francois de MALHERBE

பிரெஞ்சுத் தீவு, ‘ஹோட்டல் தெ வீல் ‘ எனப்படும் கிழக்கிந்திய கும்பெனியின் பிரதான அலுவலகம். கட்டிடத்தின் முகப்பில் பிரெஞ்சு அரசின் வெள்ளைக் கொடி வெளியே கும்பெனிக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பல்களின் மாலுமிகள் அவர்களது பிரத்தியேக உடையில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை வேடிக்கைபார்த்துகொண்டும், கண்களைச் சூரியனின் வெப்பக் கடுமையிலிருந்து காப்பாற்றும் பொருட்டுப் புறங்கைகளால் மறைப்பதும், பின்னர் தம் பொறுப்புணர்ந்து விறைத்து நிற்கும் கும்பெனி வீரர்கள். மேற்கிலிருந்து கடல்நீரில் படிந்தெழுந்துவீசும் குளிர்காற்று, ஓரளவு சோர்ந்திருந்த நிலத்திற்கு சுறுசுறுப்பினைப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது.

கைலாசம் காமாட்சி அம்மாளிடம் காலையிலே தான் குவர்னர் அலுவலகம்வரை சென்றுவரவேண்டியிருப்பதைத் தெரிவித்திருந்தான்.

‘குவர்னர் உன்னைக் காணவேண்டும் என்பதற்கு ஏதேனும் பிரத்தியேகக் காரணங்கள் உண்டா ? ‘ என்றவள் கேட்டபோது இவனால் அவளுக்கு பதில் கூற இயலவில்லை

காரணங்கள் இருப்பதுபோலவும், இல்லையென்பது போலவும் மனத்தில் தோன்றித் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. இவன் அந்நியன், ஒப்பந்த அடிமை. எஜமானர்களுக்குக் குற்றம் சாட்ட வேண்டுமென்றில் எதையாவதொன்றைச் சுமத்தி தண்டிக்கலாம். இவனைச் சுட்டுக் காட்டில் கழுகுகளுக்கும், நரிகளுக்கும், உடலை எறிந்தால்கூட கேட்பதற்குத் தைரியம் போதாதக் கூட்டம்.. தனது தாய்க்குப் பதிலுரைக்கக் குழம்பினான்.

‘நீங்கள் பயப்படும்படி நானேதும் தவறுகள் செய்யவில்லை. அஞ்சவேண்டாம் ‘, என்று கூறிவிட்டுப் புறப்பட இருந்தவன், தெய்வானை வீட்டில் இல்லாததை அப்போதுதான் கவனித்தவனாய்,.

‘அம்மா.. தெய்வானை எங்கே ‘ ? என்றான்.

‘சீனுவாச நாயக்கர் இல்லம்வரை சென்றிருக்கிறாள். தைப்பூசக் காவடி வருகிறதில்லையா ? நாயக்கரும், அருணாசலத் தம்பிரானும் இரண்டு மூன்று தமிழ் இளைஞர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு காவடிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். உன்னைக் கூட அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். நீ என்னடாவென்றால் குவர்னரைப் பார்க்கவேண்டுமென்று புறப்பட்டுவிட்டாய் ‘

‘ அதற்கென்ன குவர்னரைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றபோது நேரே நான் சீனுவாச நாயக்கர் இல்லம் சென்று வருகிறேன் ‘

இந்தியர்களின் குடியிருப்புப் பகுதியைக் கடந்து அபாந்தொன்னே ஆற்றங்கரையை வலதுபுறத்தில் நிறுத்திக்கொண்டு மேற்குநோக்கி நடந்தான். அடர்ந்த மரங்களின் பின்னணியில் மைனாக்களும், குயில்களும் பாடிக்கொண்டிருந்தன. அவைகள், இவனிடம் ஏதோ விண்ணப்பமிடுவதாகக் கற்பனைச் செய்துக் கொண்டான். போதாதற்கு இவனது நினைவில் சில்வியும் சேர்ந்துகொண்டாள். மனதில் உற்சாகம் பிறந்தது

தானானன்னன்ன தானனன்னன்ன

தானனன்னன்ன தானனன்னா

தானனன்னா தானனன்னா

தானனன்னா தானனனா

வீணாயொளிந்து கானமெழுப்பியே

வித்தைகள் செய்து பறப்பதுமேன்

தேனாள்காதலி தந்த சுகத்தினை

திரும்பத் திரும்பச் சொல்வதுமேன்

வாடாமல்லியில் வாசமில்லைன்னு

வாசமல்லிய வாங்கிவெச்சேன்

வாங்கிவெச்ச வாசமல்லி

வாடியிங்கு போனதென்ன.

தானானன்னன்ன தானனன்னன்ன

தானனன்னன்ன தானனன்னா

தானனன்னா தானனன்னா

தானனன்னா தானனனா

மூணாம்பிறையில் வெளிச்சமில்லைன்னு

முழுநிலவுக்குக் காத்திருந்தேன்

முழுநிலவு காயுமுன்னே

மேகம்வந்து மூடியதே.

ஏனோ குரலில் வருத்தமுற்று

என்னிடம்நெருங்கிப் புலம்புவதேன்

தானாய்ச் சுமைகளை இறக்கிவைக்கத்

தணிகை வேலன் கைகொடுப்பான்

தானானன்னன்ன தானனன்னன்ன

தானனன்னன்ன தானனன்னா

உற்சாகமாகப் பாடலைமுடித்தபோது, வெள்ளையர் குடியிருப்புப் பகுதியை அடைந்திருந்தான். நேற்று நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வர மனதைப் பிசைந்தது. மசேரிக்கு ‘மரூன் ‘ என்ற முத்திரை குத்தி இருட்டுக் கிடங்கில் அடைத்துவைத்திருப்பார்கள். இரண்டொரு நாட்களில் காட்டில் அவன் பிணத்தைப் பார்த்ததாக அறிவிக்கக்கூடும். அவனும் அவன் கூட்டாளியும் மடகாஸ்கருக்குத் தப்பவிருந்தத் தகவல்களை முப்பது பவுணுக்காக(Livre) எவனோவொரு இந்தியத் தமிழன் காட்டிக்கொடுத்ததாக இதற்குள் தீவிற்குள் வதந்தி. ஏற்கனவே இந்தியத் தமிழர்கள்மீது, நீக்ரோவின மக்களான கிறேயோல் மக்களுக்குப் பலவகைகளிற் கோபமிருக்கிறது. இவ்வதந்தி அக்கோபத்தினை மேலும் கூட்டிவிடும்.. இரண்டுதரப்பு மக்களையும் ஒன்றுசேர்ப்பதென்பது மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது பசியுள்ள மக்கள் சூட்சிகளுக்குச் சுலபமாய் பலியாகிவிடுகிறார்கள். இரண்டு வெள்ளரிக் கிடாக்களையும் முட்ட விடுவதில் பறங்கி ஓநாய்களுக்கு மகிழ்ச்ச்சி. இரு தரப்பு மக்களையும் சமாதானப்படுத்த சில்வியும் அம்மாவும்தான் ஏதேனும் முயற்சி செய்தாகவேண்டும். இப்படியே பகைமூட்டத்தை வளர்ப்பது இருதரப்புக்கும் நல்லதல்ல.. சில்வியிடம் கலந்தாலோசிக்கவேண்டும். மனதிற் சஞ்சலம் அடைத்துக்கொள்ள சோர்ந்து நடந்தான்.

பம்ப்ளுமூஸ் மற்றும் மொக்கா நெடுஞ்சாலைகளின் வழியாகக் குதிரைவண்டிகளிலும், பல்லக்குகளிலும் பிரெஞ்சு கனவான்களும் அவர்களின் மனைவிமார்களும் குவர்னர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் நுழைந்து, அங்கிருந்த நீக்ரோ காவலாளியொருவன் வழிக்காட்டுதலில் கிழக்குக் கூடத்தைக் கடந்து பின்புறமிருந்த தோட்டத்தை அடைந்திருந்தனர். போடப்பட்டிருந்த மீசைமீது பிரான்சின் பர்சாக் பகுதி கிராவ் ரூழ், மற்றும் கிராவ் பிளாங் மது போத்தல்கள். மேசையைச் சுற்றிலுமிருந்த நாற்காலிகளில் ஏற்கனவே அமர்ந்திருந்த பண்ணை துரைமார்களும், துரைசாணிகளும் தங்கள் மதுக் கிண்ணங்களை உதடுகளிருந்து எடுக்கமனமில்லாமல் உரையாடுகின்றார்கள். புதிதாகவந்தவர்கள்தாங்கள் தாமதிக்க நேர்ந்ததற்கு வருந்திக்கொண்டு, முன்னதாக வந்தவர்களிடம் கைகொடுத்துத் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தபிறகு மதுக்கிண்ணங்களை ஆர்வத்துடன் கையிலெடுத்தனர். அருகிலேயே அவர்களது நாவிற்கு மேலும் சுவையூட்ட ரொட்டித் துண்டுகளில் பாற்கட்டி, சுட்ட சொமோன் மீன் துண்டு, பன்றி இறைச்சி என்று வரிசையாக தட்டங்களில் வைக்கப்பட்டிருக்க, மதுக்கிண்ணங்களின் ஓசைகள் அதிகமாகவே அங்கே சிணுங்கின, உடையவும் செய்தன. நிதானம் தவறாமல் அவர்களால் குடிக்க முடிந்தது. தன் நண்பர்களின் மனைவிமார்களை வைத்துக்கொண்டு ஆபாசமாய்ப் பேசமுடிந்தது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலான பண்ணை கணவான்கள், அடுத்தவர் மனைவியைப் பெண்டாளத் தேதி குறித்துக்கொண்டுவந்திருந்தார்கள்.

குவர்னர் லாபூர்தொனே இப்படி அடிக்கடி தீவிலிருக்கும் பண்ணை முதலாளிகளையும் முக்கிய அதிகாரிகளையும் முடிந்தபோதெல்லாம்

அழைத்துப் பேசுவதுவழக்கம்.

தீவில் புதிய குவர்னராகப் பொறுப்பேற்று லாபுர்தொனே அமர்ந்தபிறகு, தீவு பலதுறைகளில் வளர்ந்ததுபோலவே பண்ணைத் தொழிலிலும் வளர்ந்தது. ‘கும்பெனியைச் சாக்கிட்டு, தம்மூலதனத்தைப் பெருக்கிக்கொள்பவர் ‘, ‘தீவிலுள்ள பெரும்பாலான கனாவான்கள், அவரது உறவினர்களும், வேண்டியவர்களுமான ‘சேன்-மாலோ ‘ பகுதியைச் சார்ந்தவர்கள் ‘ என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாகக் புகைந்துகொண்டிருந்தது. கும்பெனியின் போர்வையில் லாபூர்தொனே தனது சொத்துகளைப் பெருக்கிக் கொள்கிறார் என்ற குற்றசாட்டுவேறு.. ஆனால், எடுத்துக்கொண்ட ஒருசில குற்றச்சாட்டுக்களைப் பிரான்சு அரசாங்கத்தால் நிரூபிக்க முடியாமல் போனது. பிரெஞ்சு முடியாட்சி, தீவின் வளர்ச்சியைப் பார்த்து வாய்மூடிக் கிடக்கவேண்டியதாயிற்று. தீவின் பண்ணைமுதலாளிகள் கும்பெனியிடமிருந்து சலுகைகளை எதிர்பார்த்தனர். கும்பெனியின் நடவடிக்கைககள், பண்ணைகளின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை என்று பொரும ஆரம்பித்தனர். தேவையான அளவிற்கு அடிமைகளும், நிலங்களும் கொண்ட பண்ணை முதலாளிகள் போதிய அளவு லாபமீட்டினர் என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாகத் தீவில் தொற்றுநோயோ, புயலோ இல்லாதக் காலத்தில் வருடத்திற்குப் பத்து சதவீதம் உபரியாகப் பண்ணைத் தொழிலில் லாபம் கண்டனர்.

பண்னை முதலாளிகளுக்கும், கும்பெனிக்கும் இடைக்கிடை உரசலகளும் இல்லாமலில்லை. அவரவருக்கு அவரவர் இலாபம் முக்கியம். தாய்நாட்டைவிட்டுக் கும்பெனியின் அழைப்பின்பேரில் வந்திருக்கும் பண்ணை கனவான்களுக்கு முதலீட்டின்பேரில் லாபம் பார்க்க வேண்டும். கப்பல் வைத்துக்கொண்டு கிழக்கு ஆசிய நாடுகளில் வியாபாரம் செய்யும் பரங்கியர் 200 சதவீதம் 300 சதவீதமென லாபம் பார்க்க பண்ணை முதலாளிகள் பத்து சதவீத லாபத்திற்கு தீவின் தேவைகளுக்கான விவசாயம் செய்துகொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் ? எனக் கேள்விகளை எழுப்பினர்.

காலை மணி 10. குவர்னர் தோட்டத்தில் இடப்பட்டிருந்த நாற்காலிகளில் தீவின் முக்கிய பண்ணை முதலாளிகளான அதானாஸ் ரிப்ரெத்தியேர், ழாக் செசார் மாஹே, ழான் லூயி லெ விகுபெர், பிரான்சுவா லெ செர்ப் லாபியர், போல் அஞ்ஞெல், தெலாகுருவா என அவரவர் மனைவிமார்களுடன் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு எதிராக குவர்னர் லாபூர்தொனே தனது இரண்டாவது மனைவி சீமாட்டி ஷர்லோக்குடன், அமர்ந்திருந்தார். வலது புறத்தில் பூர்போன் தீவின் நிர்வாக ஆலோசகர் லெமெரி துய்மோன், கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இடது புறத்தில் பிரெஞ்சுத் தீவின் நிருவாக ஆலோசகர் திதியே சேன் மர்த்தேன். திட்டமிட்டபடி கூட்டம் தொடங்கியது.

திதியே, ‘ மதாம் மெசியே போன்ழூர்! மேன்மைமிகு குவர்னரின் அழைப்பின் பேரில் இக்கூட்டத்தில் கலந்துகொள்வது நமது மாட்சிமைபொருந்திய மன்னர் பெருமானுக்குப் பெருமை சேர்க்கிறது ‘ என்று கூறிவிட்டு, குவர்னரின் அனுமதியுடன் அன்றையக் கூட்டத்தில் பரிசீலனைக்குள்ள விடயங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தார்.

‘இன்றைக்கு முதலாவதாக நாம் எடுத்துக்கொண்டிருப்பது தீவின் தீராத பிரச்சினையான மரூன்கள் சம்பந்தப்பட்டது பண்ணைகளிலிருந்து தப்பியோடும் அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேறு வழிகளில் முயலவேண்டுமெனக் குவர்னர் தீர்மானித்திருக்கிறார்.. ‘

‘நாங்களும் பலமுறை குவர்னரிடம் முறையிட்டிருக்கிறோம். அவர்களுக்குக் கொடுக்கபடும் தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்படவேண்டும். தப்பியோடுபவர்களை தேடிப்பிடிக்க இப்போது தீவிலுள்ள காவலர்கள் எண்ணிக்கைப் போதாது. ‘ – போல் அஞ்ஞெல்.

‘சில சமயம் அவர்களைத் துரத்திச் செல்லும் கறுப்பர்களும் அவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை ‘- ழான் லூயி

‘நீங்கள் அமைதியாக இருக்க முடியுமானால், கும்பெனி ஏற்பாடு செய்துள்ள திட்டங்களைத் தெரிவிக்க முடியும். ‘ – குவர்னர் குறுக்கிட்டுப் பேசினார்.

பிரெஞ்சுத் தீவின் முதன்மை ஆலோசகரான திதியே மீண்டும் எழுந்து நின்று தன்னிடமிருந்த கையேட்டினைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினார்.

‘பண்ணைப் பிரபுக்களே மரூன்களால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கக் கும்பெனி ஒரு புதிய படைத் திட்டத்தை அறிவிக்கின்றது. இப்படை அமைப்பின் நோக்கம், பண்ணைப்பிரச்சினைகளை கும்பெனியின் உதவிக்குக் காத்திராமல்நீங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமென்று கும்பெனி எதிர்பார்க்கிறது. இனி கும்பெனியின் காவல் அதிகாரிகளுக்குத் தெரிவித்துவிட்டு மரூன்களை வேட்டையாடவேண்டுமென்பதில்லை. நீங்களே வேட்டையில் இறங்கலாம்.

‘…. ‘

‘ மரூன்களை வேட்டையாடித் தண்டிக்கும் இப்புதிய பிரிவில் நான்கு பிரிவுகள் அடங்கும். முதல்நிலைப்படைக்கு குதிரையேற்றமும், ஓரளவு களப்பயிற்சியுமுடைய முக்கிய பிரமுகர்களான நீங்களே தலைமை ஏற்கலாம். உங்களுக்குத் துணையாக நான்கு நீக்ரோக்களை ஈட்டி, கோடரி, கத்தி முதலான ஆயுதங்களுடன் துணைக்கு வைத்துக் கொள்ளலாம். இரண்டாம் பிரிவினர் ஒவ்வொருவரும் துணையாக இரண்டு நீக்ரோக்களை ஆயுதங்களுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். மூன்றாவது பிரிவினர் ஒரு நீக்ரோவை ஆயுதத்துடன் துணைக்கு வைத்துக்கொள்ளலாம். நான்காவது பிரிவினர் என்பவர்கள் இங்குள்ள ஏழைகுடிமக்கள். அவர்கள் முடிந்தால் ஒருகறுப்பரை வைத்துக்கொள்ளலாம். இது குறித்தக் கூடுதல் தகவல்களை நாளை காலையிலிருந்து குவர்னர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். ‘

‘அடிமைகளைக்கூடுதலாக நாங்கள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தோமே ‘ ழாக் சார் மஹே என்ற பண்ணை முதலாளி குவர்னரிடம் முறையிட்டார். குவர்னரின் உறவினர் என்ற உரிமையில் கேட்டுவிட்டு உட்கார்ந்தார்.

‘உண்மை இன்றைய நமது கூட்டத்தின் இரண்டாவது விவாதப் பொருளாக இதனை எடுத்துக்கொண்டுள்ளோம்., 1735ல் நான் இங்கு குவர்னராகப் பொறுபேற்றபோது, இங்கிருந்த 835 குடியிருப்புகளில், 648 அடிமைகள் மட்டுமே இருந்தனர். பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2981 குடியிருப்புகளில்,ம் 2612 அடிமைகலை பெற்றிருந்தோம். இவ்வடிமைகளில் கும்பெனிக்குச் சொந்தமானவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. மற்றவர்கள் உங்களிடத்தில்தான் இருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவைக்கேற்ப அடிமைகள் எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறோம். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதிக எண்ணிக்கையில் தீவில் அடிமைகளைக் கொண்டுவருவதில் லாபமேதுமில்லை. அவர்கள் நன்கு உழைக்கின்றவர்களாக இருக்கவேண்டும்.. கும்பெனிக்கு அவர்களால் இலாபமென்றால், பிற இடங்களிலிருந்து நாம் ஆட்களைக் கொண்டுவருவோம் ‘

‘எங்களுக்கு வேண்டிய அடிமைகளைக் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள். ஆனால் இலவசமாக கொடுத்த நிலத்தை மூண்றாண்டுகளுக்குள் பண்படுத்தவியலாதென்றால், திரும்பவும் கும்பெனி எடுத்துக் கொள்ளும் என மிரட்டுவது சரியா ? என்பதை மேன்மை மிகு குவர்னர் யோசிக்க வேண்டும். ‘

‘ஏற்கனவே நான் முதன்மைச் செயலர் மிஸியே திதியே என்னிடம் பேசியிருக்கிறார். உங்களுடைய கோரிக்கையை அவசியம் கும்பெனி பரிசீலிக்கும். அடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசலாம். நீங்கள் பூர்போன் தீவைப்போல இங்கும் காப்பிப் பயிரிடவேண்டுமென்று தெரிவித்திருந்தீர்கள். பூர்போனில் காப்பியை பலகாலமாகப் பயிரிட்டுவருகிறோம். ஆசியச் சந்தைகள் ஓரளவு சாதகமாகவே இதுவரை இருந்துவந்தன. ஆனால் இந்தியாவில் புதுச்சேரி, சந்திரநாகூர் சந்தைகளில் நமது காப்பிக்கு வறவேற்பில்லை. அதேசமயம் மலபார், கோவா பகுதிகளில் ஓரளவிற்கு விலைபோகின்றது. ஆஸ்த்திரியா வாரிசு உரிமைப்போரும், துருக்கியர்களின் நடவடிக்கைகளும் பஸ்ஸோரா விற்பனையை பாதிப்பதாக நமது பூர்போன்தீவு நிருவாக ஆலோசகர் மிஸியே லெமெரி துய்மோன் தெரிவிக்கிறார். எனவே அதுவரை நமது காப்பி உற்பத்தியைப் இங்கே மொக்கா பகுதியில் மட்டுமே நாம் செய்ய முடியும். இந்த நிலையில் கும்பெனியிடமிருந்து உங்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடிய செய்தியொன்றை அறிவிக்கப்போகிறேன்.. ‘

‘…. ‘

கூடிய விரைவில் பாம்ளுமூஸ்பகுதியில் ஐந்துலட்சம் பவுண்(Livre) பெறுமான உற்பத்திச் செய்யக்கூடிய சர்க்கரை ஆலையொன்றை கட்டிமுடிக்க கும்பெனி தீர்மானித்துள்ளது ‘ என்று அறிவிக்க, அடுத்தகணம் பண்ணை முதலாளிகள் பலத்தக் கைத்தட்டலுடன் எழுந்து நின்றார்கள்.

‘இதற்கு நீங்கள் குவர்னருக்கு நன்றியைக் காட்ட வேறுவகைகள் உள்ளன. அதிலொன்று தீவிலுள்ள முக்கியசாலைகைளைப் பராமரிக்கின்ற செலவினை பண்ணை கனவான்கள் ஏற்கவேண்டுமென்பது குவர்னரின் விருப்பம் ‘, திதியே நாசூக்காக சொல்லிவிட்டு குவர்னரின் முகத்தைப் பார்த்தான். அவரும் வழக்கம்போல திதியேவின் சாதூர்யத்தை மனதிற் பாராட்டிக்கொண்டு, திருப்தி என்ற வகையில் புன்னகைத்தார்.

கனவான்களும் அவர்தம் திருமதிகளும் தொடர்ந்து கைத்தட்டிக்கொண்டிருந்தார்கள். குவர்னருக்கு, சாலைப்பராமரிப்புச் செலவினை பண்ணை முதலாளிகள் தலையில் சுமக்கச் செய்தவகையிற் மிகவும் சந்தோஷப்பட்டார். கனவான்களுக்கு இரண்டு பொர்தோ சிவப்பு ஒயின் பாட்டில்களை கொடுத்துவிட்டால் வேண்டிய இடத்தில் கையொப்பமிடுவார்கள் என்பதை அவர் அறிவார்.

ஒரு நீக்ரோ வந்து நின்றான். ‘ஐயா, கைலாசம் என்கின்ற இந்தியன் ஒருவன் தங்களைப் பார்க்க வேண்டுமென்று காத்திருக்கிறான் ‘. என்றான்.

‘சரி வரச் சொல் ‘ என்று குவர்னர் ஆணையிட அடுத்த சில நாழிகைகளில் கைலாசம் உள்ளே வந்து ஒதுங்கி நின்றான் ‘

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts