நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


யாயும் ஞாயும் யார்ஆ கியரோ ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ?

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

– (குறுந்தொகை -40) – செம்புலப் பெயனீரார்

‘பிறகென்ன நடந்தது ? ‘

‘அவளை அணைத்துக்கொண்டு கரையில் விழுந்த சில நொடிகளில் எல்லாம் நடந்தது. உயிரைக் கண்ட உடலைப்போலச் சிலிர்த்துபோனேன். ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. நரம்புகளில் எறும்புகளின் பரபரப்பு. அவளது இதயத்திற்கு இணையாக எனது இதயமும் வேகமாய்த் துடிக்கின்றது. என் இரத்தம் அவளது சிரைக் குழலிலும், அவளது இரத்தம் எனதுத் தமனிக்குழலிலும் பாய்வதாக உணர்ந்தேன். எழுந்தால் இதய இயக்கம் இருவருக்கும் நின்று போய்விடக்கூடுமென்கின்ற அச்சம். அவள் மார்பின் விம்மல்கள் எனது கைகளைத் தயக்கத்துடன் விலக்க முற்சித்தன. எனது உள்ளங்கைகளின் தினவுக்கு அவற்றின் இயக்கம் சுகமாயிருக்க, கைகளைச் சற்றே தளர்த்தி அனுமதிக்கிறேன். அவள் உடலின் வாசனையை நான் ஏற்கனவே, ஏதோவொரு யுகத்தில் சுவாசித்த அனுபவம். நாங்கள் வேறுவேறானவர்கள் அல்ல என்பதை மெய்ப்பித்த கணங்கள் அவை. ‘

மாறனுக்கும் பெர்னாருக்கும் இடையில் நடந்த உரையாடலை எதிரே உட்கார்ந்து அவதானித்துக்கொண்டிருந்த துபாஷ் பலராம்பிள்ளை தொண்டையைச் செருமித் தானும் அங்கே இருப்பதை நண்பர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.

கப்பூசென் தேவாலயத்திலிருந்து இரவுநேர பூசைப்பலி முடித்து ஒரு சில சொல்தாக்களும், கும்பெனி ஊழியர்களும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வானத்தில், மேகத்தை சீய்த்துக்கொண்டு பிறைநிலா தலைகாட்டியிருந்தது. கிழக்கே வங்காள விரிகுடாவின் கடலலைகள் நிலாவொளியில் இழைப்பு உளியிலிருந்து புறப்பட்ட வெள்ளிச் செதிள்களாக கரையிற் தெறித்து விழுந்தன. கட்டுமரங்களில், பனையோலைக் குடலைகளுடனும், சிறுரக வலைகளுடனும் மீனவர்கள்.

பெர்னார், கிழக்கு திசைநோக்கி சாய்வு நாற்காலியை இருத்தி உட்கார்ந்திருந்தான். எதிரே துபாஷி பலராம் பிள்ளையும், மாறனும் அருகருகே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

‘நீங்கள் எப்படி அங்கே ? ‘ -மாறன்

‘அன்றைக்குக் காலையில் ? பிரெஞ்சுத்தீவு குவர்னரான லாபூர்தொனேவுடன் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொருநாளும் காலையில் எட்டுமணிக்கெல்லாம் குவர்னர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். நோயாளிகளை அணுகி அவர்களது உடல் நலம், வழங்கப்படும் உணவுகள் குறித்ததான விசாரணைகள் முடித்துக்கொண்டு புறப்படவிருந்த சமயம் என்னை அருகில் அழைத்தார்.

‘பெர்னார் இன்றையப்பொழுது துறைமுகத்திலேயே நீ இருக்கவேண்டுமென்பது குவர்னர் அலுவலகத்தின் விருப்பம். இயலுமா ? ‘ எனக்கூறிவிட்டு என் பதிலுக்காகக் காத்திருக்கிறார்..

நான், மறுப்புச் சொல்ல முடியுமா என்ன ?, ஆனால் அதற்கான காரணத்தினைக் குவர்னரிடம் கேட்டேன்.

அதற்கவர், ‘கப்பல் கட்டுவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டிருக்கும் லஸ்கர்களிடம், நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதனைத் தெளிவாய்ச் சொல்லவேண்டும். நமது சேன்- மாலோ ஆட்களுக்கு, அவர்களுடைய போதிய ஒத்துழைப்புவேண்டும். வேலையிற் சுணக்கம் கூடாது. இரு தரப்பையும் தட்டி வேலை வாங்கவேண்டும். கப்பல் கட்டும் பொறியாளரோடு நீ இருப்பது பலனளிக்கலாம் என்று ‘திதியே ‘ சொல்கிறார். எனக்கும் உன் உதவியில்லாமல் காரியங்களை நிறைவேற்றுவது கடினம். இன்றையபொழுது இங்கிருந்து கவனி. பிறகு இது குறித்து எனது முதன்மை அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கிறேன். ‘ என்ற குவர்னரை வழியனுப்பிவிட்டு, பொறியாளருடன் கப்பற்கட்டுமானப் பணிக்கான அலுவலகத்திற்குத் திரும்பினேன்.

லஸ்கர்களையும், எங்கள் சேன்-மாலோ ஆட்களையும் அழைத்து அவரவர் பணியைத் தெளிவாகப் புரியவைத்தோம். லஸ்கர்கர்கள் தரப்பில் பொன்னப்ப ஆசாரி என்ற தச்சனும், சேன்-மாலோ ஆட்கள் தரப்பில் திரினித்தே என்கின்ற மத்தலோவும், பிரச்சினைகளின் போது எங்களிடம் முறையிடலாமெனத் திட்டம் செய்துவிட்டு, அலுவலகத்திலேயே இருந்தோம்.

மாலை நாலுமணியிருக்கும், கிழக்கிலிருந்து சரிவில் இறங்கி, இரண்டு பெண்கள் எங்கள் அலுவலகத்தைக் கடந்து கப்பற்கட்டும் உப்பங்கழித் திசைக்காய் நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடையும், உருவமும் தமிழ்ப் பெண்கள் என்பதைச் சொல்லிற்று. எனக்கு ஆச்சரியம். பொதுவாக இதுபோன்ற இடங்களுக்குத் தீவின் பூர்வீகமக்கள்கூட வருவதில்லை. இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஓய்விற் கூட கும்பெனிக்கும், தீவிலுள்ள எங்கள் மக்களுக்கும் உபயோகமிருக்கின்ற வகையில் குவர்னர் அலுவலகம் பார்த்துகொண்டது. தீவுக்கு வந்தவர்களுக்கு பருத்திக்கொட்டையும் பிண்ணாக்கும் கொடுத்து, இரத்தம் வரும்வரை கறக்கும் கைகள் எங்கள் குவர்னருக்கு. எனவே இரு பெண்கள், தமிழ்ப் பெண்கள் என்னைக் கடந்துபோக அதிர்ச்சியாகத்தானிருந்தது. லஸ்கர் பொன்னப்ப ஆசாரியோடு அப்பெண்கள் உரையாடுவதையும் பின்னர் அவர்களிலொருத்தி மற்றவளை இழுத்துக்கொண்டு முன்னேறிச் செல்வதையும் கண்டு, பொன்னப்ப ஆசாரியை அழைத்து விசாரித்தேன். அப்பெண்களிருவரும், கப்பற்கட்டுவதை வேடிக்கை பார்க்கவந்த பெண்கள் என்றான். அவர்களை, இதற்கு முன்னர் பார்த்தது இல்லையென்றும் அபாந்தொன்னே ஆற்றங்கரைப்பகுதிகளில் உள்ள இந்திய குடியிருப்புகளில் வசிப்பவர்களாக இருக்கக்கூடும் என்றான்.

அவன் சொல்வதை வாங்கிக்கொண்டு நிமிர்ந்துபார்த்தபோது, அவ்விரு பெண்களில் ஒருவள் பதட்டத்துடன், ‘ஆபத்து ஆபத்து, யாரேனும் உதவி செய்யக்கூடாதா ‘ என்று கூச்சலிடுகிறாள். அவளோடு வந்திருந்த மற்றபெண்ணைக் குறித்து நாங்கள் இருந்தவிடத்திலிருந்து பார்க்க

ஒன்றும் தெரியவில்லை. எங்கள் ஆட்கள் சிரிக்கிறார்கள். இந்திய லஸ்கர்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிரார்கள். அப்பெண்ணின் திசை நோக்கி ஓடிய நீக்ரோ ஒருவர் கால்வாய் கரையையொட்டி குனியவும், கப்பற்கட்டும் பணிகளை அங்கிருந்து மேற்மாற்வையிடும் மத்தலோ அவன் முதுகில் சாட்டையைச் சொடுக்குவதைக் கண்டு அவன் சுருண்டு விழுகிறான். இனிக் காத்திருப்பதில் பிரயோசனமில்லையென பொன்னப்ப ஆசாரியும் நானும் அங்கு ஓடியதையும், அவளைக் காப்பாற்றிய விதத்தையும் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேனே ? ‘

‘ம்.. காதலுக்குச் சரியான அஸ்திவாரம்ந்தான் இட்டிருக்கிறீர்கள். உங்கள் மனதை எப்போது அப்பெண்ணிடம் தெரிவித்தீர்கள் அன்றைக்கேவா ? ‘

‘இல்லை.. இல்லை.. அன்றைக்குத் தெய்வானையை அணைத்துக்கொண்டு நான் விழுந்துகிடக்க, அவளது தோழிப் பெண் நீலவேணி என்பவள் ஏகத்திற்கும் ரகளைபண்ணிவிட்டாள். தெய்வாைனைக்கு என்ன நேர்ந்ததோ, பதறி எழுந்தவள் தன் தோழியை இழுத்துக்கொண்டு ‘நன்றி ‘ என்ற வார்த்தையைக் கூடச் சொல்லமுடியாமல் மணலிற் தடுமாறி ஓடுகிறாள். நான் திகைத்து நிற்கிறேன். எங்கள் ஆட்களோடு சேர்ந்துகொண்டு லஸ்கர்களும் சிரிக்கிறார்கள். தூரத்தில் தெய்வானை சிறிது நேரம் நின்று என்னைப் பார்க்க, அவளது தோழி அவளைக் கடிந்துகொண்டு இழுத்துபோகிறாள். அவளை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள் என்பதுமட்டும் புரிந்தது. ‘

‘பிறகு எப்போது ? மீண்டும் தெய்வானையைச் சந்தித்தீர்கள் ? ‘

‘தீவில் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த காவடித் திருவிழாவின் போது ‘

துபாஷ் பலராம்பிள்ளை இம்முறை தொண்டையைச் சற்றுப் பலமாகவேச் செருமியவர், ‘நண்பர்கள் இருவரும் நேரம் கிடைக்கும்போது சாவகாசமாக உரையாடவேண்டிய விஷயம். ‘ என நாசூக்காகக் கூறினார்.

‘மன்னிக்கவேண்டும் மிஸியே பல்ராம் புள்ளே. உங்களை வைத்துக்கொண்டு நாங்களிருவரும் இப்படி உரையாடுவது கூடாது. நான்

உங்களிருவரையும் அழைத்திருப்பதற்கான காரணத்திற்கு நேரிடையாக வருகிறேன். தெய்வானையின் பிறப்புக் குறித்த சந்தேகங்கள் தீவில் நடமாடுகின்றன. இச்சந்தேகம் அவள் மேல் வைத்துள்ள என் காதலை குறைத்திடாது என்றாலும், அவளுக்கு அப்பிறப்பால் இன்னல்கள் ஏற்பட்டிருக்குமானால் நான் நிவர்த்தி செய்யவேணும். தெய்வானைக்கும், அவளது சகோதரன் கைலாசத்துக்கும் அன்னையாகவுள்ள காமாட்சி அம்மாள், தெய்வானைமீது அதிகபட்சமாக அக்கறை காட்டுகிறாள். அவர்களின் நடை, உடுத்தும்விதம், அவர்களது பேச்சு அனைத்தும் ராஜ குடும்பத்துக்கு உரியதென தீவிலுள்ள மற்றத் தமிழர்கள் சந்தேகிக்கிறார்கள். காமாட்சி அம்மாள் என்னதான் தீவுக்குப் புலம்பெயர்ந்து வந்துள்ள மற்ற தமிழ்க்குடும்பங்களோடு கலந்துவாழ முயற்சித்தாலும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானத் தமிழர்கள் அவர்களிடம் ஒருவித மரியாதையோடு விலகியே நிற்கிறார்கள்.

வெள்ளையர்களைத் தவிர தீவிலிருக்கின்ற நீக்ரோக்களோ, தமிழர்களோ, மலபார் மக்களோ கும்பெனிக்கு உழைக்காமல் நாட்களைத் தள்ளுவதென்பது இயலாது. இருந்தபோதிலும் காமாட்சிஅம்மாள் தெய்வானைக்கு குவர்னரிடம் முறையிட்டுச் சில சலுகைகளைப் பெற்றிருக்கிறாள். அவளால் வேலையின்றித் தனது தோழியோடு சுதந்திரமாக நடமாடமுடிவதை தீவிலுள்ள எங்கள் மக்களும் மனதில் கசப்போடு பார்க்கிறார்கள்.

எனக்கும் தெய்வானைக்கும் இடையே மூண்டுள்ள காதலினைத் தீவிலுள்ள எல்லாவின மக்களும் அறிவார்கள். வெள்ளையன் ஒருவன் கறுப்பினப் பெண்ணைக் காதலிப்பதைத் தீவில் உள்ள எங்கள் மக்கள் ஏற்பதாக இல்லை. நேரம்வரும்போது அவ்வெதிர்ப்ப்பு எப்படிப்பட்டதென அறியத்தருகிறேன். தீவிலிருக்கும் கிறிஸ்த்துவ மத குருமாரோடு சேர்ந்துகொண்டு குவர்னரும் எதிர்க்கிறார். தெய்வானைத் தரப்பில் காமாட்சி அம்மாளே அவளைக் கண்டிப்பதும், பின்னர் வருந்தி அழுவதானக் காட்சிகளைப் பலமுறை பார்த்ததாக கைலாசம் என்னிடம் தெரிவித்திருக்கிறான். ‘

‘…. ‘

‘இந்த நிலையில் தீவில் சமீபத்தில் பெரும்புலடித்து ஓய்ந்திருந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு கைலாசம் ஓரிரவு எனது குடியிருப்புக் கதவைத் தட்டினான் ‘

‘…. ‘

‘கதவினைத் திறந்து அவனை அனுமதித்தேன். இந்த அகால நேரத்தில் என்னைத் தேடிவந்த காரணமென்னவென்று கேட்டேன். ‘

‘புயலடித்து ஓய்ந்ததிலிருந்து என் அன்னை இரவில் ஒழுங்காகத் தூங்குவதில்லை. இரவுநேரங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய சத்தத்திற்கும் விழித்துக்கொள்கிறாள். தெய்வானையை மடியில் இருத்திக் கொண்டு கண்கலங்குகிறாள். நான் விடிந்தபிறகு காரணத்தினைக் கேட்டால், ஏதாவது பதில்களைக் கூறி மழுப்புகிறாள். உண்மையில் என்ன நடந்ததுவென்றால், புயலுக்கு முந்தையநாள் இிரவு, சீனுவாச நாயக்கருடன் சேர்ந்து கொண்டு பாம்ப்ளுமூஸ் வரை சென்று எதையோ புதைத்துவிட்டு வந்ததை, பின் தொடர்ந்து சென்று எனது இரு கண்களால் பார்த்துவிட்டு வந்தேன். ‘ என்றான்.

‘எதைப் பார்த்தாய் ‘ ?

‘ அதுவொரு சிறியபெட்டி. சீனுவாச நாயக்கர்தான் கொண்டுவந்திருந்தார். அப்பெட்டிக்குளிருப்பது எதுவாயினும், என் குடும்பத்தோடு தொடர்புடைய சங்கதிகள் என்பது மட்டும் சத்தியம். ‘.

‘உண்மை. உங்கள் குடும்பத்தைக் குறித்து மர்மங்கள் உலவுவதாக தீவு முழுக்கப் பேச்சுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. உன் அன்னைதானே ? தயங்காமல் நாளைக் காலை கேள் ‘

‘ நானா ? என்ன கேட்பது ? எங்களிடம் சொல்லக்கூடியதென்றால் அவள் தெய்வானையிடமாவது, என்னிடமாவது அந்த மர்மத்தைச் சொல்லியிருப்பாளே ? தயக்கம் ஏன் ? இப்படி எவருக்குமே தெரியக்கூடாது என்பதாற்தான் பாம்ப்ளூமூஸ்வரை சென்றிருக்கிறார்கள் ‘

‘ இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய் ? ‘

‘எங்களிருவருக்கும் நீதான் உதவமுடியும் ‘.

‘எங்களிருவரென்றால் யார் யாருக்கு ? ‘

‘எனக்கும் தெய்வானைக்கும். ‘

‘நானா ? ‘

‘நீயேதான் ‘

‘எப்படி ? ‘

‘ அப்பெட்டியை நான் கொண்டு வருகிறேன். அப்படி எதை எங்கள் அன்னை தம் பிள்ளைகளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கிறாள் என்பதனை அறிய வேண்டும். பிறகு அதனை எடுத்துக்கொண்டு உனக்கிருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரிக்கு நீ செல்லவேண்டும். எங்கள் பூர்வீகத்தை அறியவேண்டும். ஆனால் நீ எதற்காக இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறாய், என்பதை குவர்னரிடம்கூட வெளிப்படுத்தக்கூடாது. நமது நோக்கம் நிறைவேறும்வரை வேறொருவர் அறியக்கூடாது. ‘

‘அதெப்படி ? ‘

‘ பெர்னார் நான் சந்தேகிப்பது உண்மையானால், குவர்னர் லாபூர்தொனேக்குக் கூட இந்த மர்மம் தெரிந்திருக்கவேண்டும் ‘.

‘நீ சந்தேகிப்பதில் நியாயமிருக்கிறது. லாபூர்தொனே ஒரு பணக்கழுகு. எதனையோ குறிவைத்தே, உங்கட் குடும்பத்துடன் நல்லவிதமாக நடந்துகொளிகிறார். தவிர இப்பெட்டியைக் குவர்னர் ஆதரவிருந்தபோதும், நட்ட நடுநிசியில் காட்டில் மறைத்துவிட்டுத் தூக்கமின்றி இரவைக் கழிக்கிறார்களெனில், இந்த மர்மம் தீவிலிருக்கும் எதிரிகளால் அறியபடக்கூடாது என்கின்ற அச்சமாகக் கூட இருக்கலாமில்லையா ? ‘

‘உண்மை.. உண்மை.. ‘

‘ஆனால் என்னால் முடியுமென நம்புகின்றாயா ? ‘

‘சத்தியமாக நம்புகிறேன். என் தங்கைகாக அல்லவென்றாலும் உனது காதலிக்காக இதனைச் செய்கிறாய் என்கின்றபோது உன்னால் முடியும். ‘

‘ இதனால் உனது அன்னைக்கு நாம் விரோதிகளாக மாட்டோமா ? ‘

‘மாட்டோம்… அவள் இப்படி மனது நிறையச் சஞ்சலத்துடன் வாழ்வதை என்னால் சகிக்கமுடியாது. அவளது சஞ்சலத்தைப் போக்குவதைத்தவிர ஒரு மகனுக்கு வேறென்ன கடமை வேண்டும் ? ‘.

‘புரிகிறது ஆனால் குவர்னர் லாபூர்தொனேவிடம் நான் அனுமதிப்பெற்று புதுச்சேரி செல்வது சாத்தியமென்று நம்புகின்றாயா ?

‘சாத்தியம். ‘

‘எப்படி ? ‘

‘உங்கள் மக்களுக்கு தெய்வானையிடம் நீ கொண்டிருக்கின்ற காதல்மீது துளியும் பிடிப்பில்லை. மதகுருமாரும் பண்ணை முதலாளிகளும் காட்டுகின்ற எதிர்ப்பிற்கு குவர்னர் ஏதாகிலும் செய்தாகவேண்டும் இந்தச் சமயத்தில் உன்னைப் புதுச்சேரிக்கு அனுப்ப முடியுமென்றால் லாபூர்தொனே உங்கள் ஆட்களை திருப்தி செய்யமுடியும்தானே ? என்றென்னிடம் விவாதித்துவிட்டுப்போன மறுநாள் இரவே, கைலாசம் ஒரு பெட்டியைக் கொண்டுவந்தான். ‘

‘அந்தப் பெட்டியைப் புதுச்சேரிக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அப்படித்தானே ?. பெட்டியில் என்ன இருந்தது ? ஏற்கனவே திறந்து பார்த்துவிட்டாீர்களா ? ‘

‘பார்க்காமலா ? நீங்களிருவரும் கூட அறியவேண்டுமென்றுதானே, இன்றிரவு இங்கே உங்களை அழைத்தது. ‘

மாறனும், துபாஷியும் பார்த்துக்கொண்டிருக்க, தன்னருகில் பத்திரப்படுத்திவைத்திருந்த அச்சிறு மலபார் தேக்குப் பெட்டியை மூவருக்கும் இடையிலிருந்த மேசைமேல் வைத்து, அதன் பின்புறமுள்ளதன் சூட்ஷுமக் குமிழைத் திருகக் கிளிக்கிட்டுத் திறக்கிறது.

உள்ளே வெண்பட்டுதுணியின் பின்னணியில் ஒரு பைனையோலை நறுக்கும், மோதிரமும் இருக்கின்றன. துபாஷ் மோதிரத்தைக் கையிலெடுத்துப் பார்வையிடுகிறார். இருபக்கமும் வைரக்கற்கள் இழைக்கப்பட்டு மத்தியில் அக்கினிநாக்கு வடிவத்தில் மாணிக்கக்கல் பதிப்பிக்கப்பட்ட பாதம் வைத்த நாம முகப்பினைக் கொண்ட மோதிரம். அருகிலிருந்த பெரிய மெழுகுவர்த்தியின் ஒளியில் கூடுதலாகப் பிரகாசிக்கிறது. இவ்வளவு விலையுயர்ந்த பொருளை இத்தனை நெருக்கத்தில் மாறன் பார்த்ததில்லை. ஆசரியத்துடன் பார்க்கிறான். பெர்னார் ஓலை நறுக்கிணையெடுத்துத் துபாஷிடம் நீட்டுகிறான்.

வாங்கிப்பார்த்தவர், ‘அட இவ்வோலை தெலுங்கில் எழுதப்பட்டுள்ளதுபோலத் தெரிகிறதே! ‘ என வியக்கிறார்.

‘உண்மை, தெலுங்கு மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது ‘. பெர்னார் ஆமோதிக்கிறான்.

/தொடரும்/

.

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts