அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

இரா.முருகன்.


அரசூர் பற்றி எழுதிவிட்டேன்.

முன்னோர்களிடம் சொன்னேன்.

என்னத்தை எழுதினே போ. இப்பத்தானே ஆரம்பிச்சே.

அவர்கள் உட்கார்ந்த இடங்களிலிருந்து எழுந்து வந்து மறுபடியும் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் இன்னொரு முறை பனியாகப் படர்ந்து மறைத்ததோடு இல்லாமல் அதன் இயக்கத்தை நிறுத்தினார்கள். காலியான காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது என்ன வாடை என்று இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. கொஞ்சம் அது மூக்குத்தூள் வாடை. வைகைக்கரை மணல் வாடை. வெளவால் வாடை. வெள்ளைக்காரியின் கட்கத்தின் நெடி. பாழுங்கிணற்றில் பாசி வாடை. புறா எச்சத்தின் வாடை. வெடிக்குழலின் புகை வாடை. அத்தர் வாடை.

அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. சும்மாத் தோணறது உனக்கு அப்படியெல்லாம்.

பனியன் சகோதரர்கள். எழுந்ததபடி சொன்னார்கள்.

என்ன அவசரம் ? அதுக்குள்ளே போய் எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க ?

இவர் ராஜாவாக இருக்கலாம். குரலில் அதிகார நெடியடித்தது.

பூத்திருவிழா வருதில்லே ? வசூல் பண்ணிட்டு இருக்கோம். புதுத் தாசில்தார் வந்திருக்காராம். போய்க் கும்பிட்டு.

பழுக்காத்தட்டு விக்கப் போறீங்களா ?

பெரிய மீசை வைத்தவர் கேட்டார்.

ராஜாவின் மாமனாரா என்றேன்.

ராஜாவே இல்லை. மாமனார் எங்கே இருந்து வரப்போறாரு ?

அவர் கேட்டார். விடிகாலையில் ஏன் கையில் மல்லிகைப் பூவைச் சுற்றிக்கொண்டு வந்து நிற்கிறார் என்று தெரியவில்லை.

ராஜா என்ன வெறுங் கோமாளியா இருந்தாரா என்ன ?

முன்னால் பேசியவர் திரும்பவும் மேஜைமேல் ஏறினார். என்னை வம்புக்கிழுக்கிறார்.

புள்ளை தப்பா ஒண்ணும் எழுதலேப்பா. நல்லாத்தானே எல்லாரையும் பத்திச் சொன்னது ?

ராணி ஒண்ணும் கொளுத்திப் போடலை. நினைவு வச்சுக்கோ தம்பி.

அந்தப் பெண் அரச குடும்பத்து அடையாளங்களோடு இருந்தாள். வேண்டாம். விசாரித்தால் ராணி இல்லை என்று சொல்லப் போகிறாள் அவளும்.

ராஜாவுக்கு அப்புறம் அவர் வம்சம் என்னாச்சு ?

நான் விசாரித்தேன்.

எப்போதிலிருந்து அரசூர் அரண்மனை புழுதியடைந்து சிதிலமானது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னப்பா அவரோட வம்சம், உன்னோடதுன்னு தனியா ? எல்லாம் ஒண்ணாத்தானே இருக்கு ?

அப்படியா ?

முன்குடுமி வைத்த ஒருத்தர் என்னை விடக் கூடுதலாக ஆச்சரியப்பட்டார். அவர் என் கம்ப்யூட்டர் திரை மேல் படிய அது திரும்ப உயிர் பெற்று வடிவங்கள். சதுரங்கள். முக்கோணங்கள்.

பதினேழு தேவதைகளை இங்கே நிறுத்தியிருக்கேன். இனிமே இந்த யந்திரம் பழுதில்லாமல் இயங்கும்.

இல்லை. நான் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் இல்லை. அவர் அப்புறம் நாலு பிறப்பு எடுத்து முடித்து இப்போது வளைகுடாவில் நெருப்புக்கோழிகளை வைத்து ஓட்டப்பந்தயம் நடத்தும் அராபியாக இருக்கிறார்.

தான் எம்பிராந்திரியின் நேர் வம்சத்து, நாலாந் தலைமுறை என்றார் அவர்.

சுப்பம்மாள் என்ன ஆனாள் ?

நான் அவரைக் கேட்டேன்.

மகாபாவி நீயா பேரு வச்சே. சுவாதீனமாக் கூப்பிடறதைப் பாரு.

அவர் என்னமோ செய்ய திரையில் சதுரங்கள் சிவந்து வழிந்தன. இயக்கம் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது.

கோபிச்சுக்க வேணாம். தெரிந்துக்கத்தான் கேட்டேன். அந்தப் பெரிய பாட்டித் தள்ளை, மூத்த சுமங்கலிப் பெண்டு போன இடம்தான் என்ன ?

அந்தம்மா காசிக்குப் போய் ராத்திரி நேரங்களில் சுடலை எரியும்போது ஸ்நான கட்டங்களில் உட்கார்ந்து இந்துஸ்தானி சங்கீதம் பாடுகிறேன் என்று மனம் போனபடி இரைச்சல் போட, அவள்மேல் பரிதாபப்பட்டு ஒரு முகமதியப் பெரியவர் கூட்டிப்போய் வீட்டுக்கு வெளியே குடில் அமைத்துத் தங்க வைத்ததாகக் கேள்வி. அவர் ஓடிப்போன தன் வீட்டுக்காரர் என்று சாகும்போது கூவி மூத்த குடிப் பெண்களை அழைக்க அவர்கள் கேட்காமல் யார் வீட்டிலோ சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ஓடினார்கள்.

இதைச் சொன்னவர் முடிக்கும் முன்பே இன்னொருத்தர் அவசரமாக மறுத்தார். அத்தர் வாசமும், தோளில் புறாவுமாக இருந்த அவர் இந்த வீடு என்ன விலைக்குப் போகும் என்றார் சுற்றுமுற்றும் பார்த்தபடி. வீடு விற்பதற்கு இல்லை என்றேன்.

உனக்கு சுப்பம்மாள் யார்னே தெரியாது. ஜான் கிட்டாவய்யரின் மூத்த குமாரத்தி தெரிசா இருந்தாளே ? அவள் அந்த மூத்த குடியாள் சுப்பம்மாளை பட்டணத்தில் வைத்துச் சந்திக்க நேர்ந்தது. உடம்பு தளர்ந்து ரிடையர்ட் செஞ்ஜார்ஜ் கோட்டை நாவிகேஷன் கிளார்க் வைத்தியநாதய்யர் வீட்டைத் தேடிக் கொண்டிருந்தாளாம் சுப்பம்மாள். அவளைத் தன் பொறுப்பில் வைத்திருந்த அப்பெண்மணி கலாசாலையில் பிள்ளைகளுக்கு சாஸ்திரக் கல்வி போதித்து வந்தவள். அவள் குரிசு வரைந்து பிரார்த்திக்கவும் நல்ல நல்ல சுவிசேஷ கானங்களைப் பாடவும் எல்லாம் சுப்பம்மாளுக்குக் கற்பித்தாள்.

அவர் முடிக்கும் முன்பே அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் தான் தெரசாம்மாளின் பெண் வயிற்றுப் பேத்தியாக ஜனித்திருக்க வேண்டியிருந்து கர்ப்பம் கலைந்து போய் மரித்ததால் பூர்வகதை முழுக்கத் தெரியும் என்றும் சோகையாக மெலிந்திருந்த இன்னொரு ஸ்திரி சொன்னாள். சங்கரய்யரின் மகன் சுவாமிநாதய்யர், ஜான் கிட்டாவய்யரின் இரண்டாவது பெண் அமலோற்பவம்மாளை வயது வித்தியாசம் பார்க்காமல் கல்யாணம் செய்து கொண்டதாகவும், அவரும் வேதத்தில் ஏறியதாகவும் சொன்னாள் அந்தப் பெண்.

கல்யாணம் ஆனது வாஸ்தவம் தான். அது வடக்கநாத க்ஷேத்ரத்துலே வச்சு நடந்தது. கமலா பத்து நெல்லை முழுங்கி வயசைக் குறைச்சுண்டுதான் கல்யாணம் பண்ணிண்டா. கல்யாணத்துகு முந்தின விருச்சிக மாசம் ஒண்ணாந்தேதி சாவக்காட்டான் முகத்துலே காசை வீசியெறிஞ்சுட்டு எல்லோரும் திரும்பி வந்தாச்சு.

கீசுகீசென்று இரைந்த பெண் என் திரையில் தட்டுப்பட்டுக் கலைந்து மறுபடி எழ, முண்டு மடக்கிக் குத்திய வழுக்கைத் தலையனாகி இருந்தான்.

குரிகள். குரிகள். கேரளா கவர்மெண்ட் பாக்ய குரிகள். வேணுமோ சாரே ? அவன் விசாரித்தபோது இந்தக் கஷண்டித்தலையனை நம்பாதே. அதொண்ணும் காசு கிட்டாது என்றவர் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டபடி, காலை நேரத்துக்குப் பொருந்தாமல் ஏப்பம் விட்டார்.

புகையிலைக் கடை என்ன ஆச்சு ?

சங்கரய்யர் மகன் சுவாமிநாதன் புகையிலை விற்பதற்குப் பிடிக்காமல் கலாசாலைக்குப் போய்விட, அவன் சகோதரி கல்யாணியும் அவளைக் கட்டிய மதுரை நாராயணய்யரும் அந்த வியாபாரத்தைத் தொடர்ந்ததாக பனியன் சகோதரர்கள் நினைவு வந்தது போல் குறிப்பிட்டார்கள்.

அடுத்து ரெண்டு தலைமுறை கடை நடந்தது. அப்புறம் வக்கீல் குமாஸ்தாக்களும், வங்கி குமஸ்தாக்களும் தலையெடுத்து அதை முடக்கிப் போட்டார்கள்.

கட்டையாய்க் குட்டையாய்க் கருப்புக் கோட்டோடு ஒருத்தர் சொல்ல பனியன் சகோதரர்களில் நெடியவர் அதுவும் அப்படியோ என்று ஆச்சரியமாக விசாரித்தார்.

உங்களுக்குத் தெரியாம ஊர்லே எதுதான் நடக்கும் என்றேன்.

நாங்க என்னத்தைக் கண்டோம். திருவிழா, வசூல், பெரிய மனுஷங்க தரிசனம், சில்லுண்டி வியாபாரம்னு போய்ட்டு இருக்கோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் காருக்கு பெட்ரோலுக்கும் கிடைக்குமான்னே நித்தியக் கவலையாயிடுச்சு.

படம் பிடிக்கும் பெட்டியோடு கப்பலில் ஏறினால் ஏகத்துக்குக் கிடைக்குமே என்றாள் ஒரு பெண். அவளுக்குக் கையிலும் காலிலும் ஆறாறு விரல்கள்.

கரு.பெரி.சொக்கலிங்கம் செட்டியார் கிட்டேப் பெட்டியை அடகு வைச்சோம். மூழ்கிடுச்சு அது என்றார்கள் பனியன் சகோதரர்கள் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு.

சாமிநாத அய்யர் என்னதான் ஆனார் என்று விசாரித்தேன் அவர்களிடம்.

மருதையன் சேர்வை கலாசாலையின் உயர் ஆசிரியனாக திருவனந்தபுரம் போனபோது அவனுக்கு அடுத்த தரத்தில் சாமிநாத அய்யரும் உத்தியோகம் எடுத்துக் கூடவே போனதாகவும் இரண்டு பேரும் கணிதத்திலும் ஆங்கில மொழியறிவிலும் புலிகள் என்றும் அந்த ஆறுவிரல் பெண் தெரிவித்தாள். சாமிநாதய்யர் வேதத்தில் ஏறினாலும் வயது மூத்த பெண்ணைக் கல்யாணம் கழிக்கவில்லை என்றாள் அவள்.

ராணியம்மாள் அரண்மனையை விட்டுவிட்டு வரமாட்டேன் என்றதால் பேராசிரியர் மருதையன் தன் குடும்பத்தோடு திருவனந்தபுரம் போகும்போது அவளை சங்கரய்யர் மனைவி பகவதி அம்மாளின் பொறுப்பில் விட்டுப் போனதாகவும், சொந்தத் தாயைப் போல அந்தக் கிழவியை அவளும் மகள் கல்யாணியம்மாளும் அவள் வீட்டுக்காரர் புகையிலகை¢கடை நாராயணய்யரும் கவனித்து வந்ததாகவும், அவள் ஆயுசு முடிந்த அப்புறமும் அரண்மனை புகையிலைக் கிட்டங்கியாக நீடித்ததாகவும் இன்னொரு குரல்.

பனியன் சகோதரர்கள் என் பக்கத்தில் வந்து குனிந்து இவர்கள் யாருமே அரசூர் வம்சத்தில் பட்டவர்கள் இல்லை. சும்மா வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க இறங்கி வந்தவர்கள். நீ நேரத்தை வீணாக்காமல் ஆக வேண்டிய காரியத்தைப் பார் என்றார்கள்.

ஆனாலும், எங்க பெரிய தாத்தா அம்பலப்புழையில் புகையிலைக்கடை வைத்திருந்தாரே, அவர் உண்டல்லவா இந்தக் கூட்டத்தில் என்றேன்.

நான் தான் அது என்றாள் ஒரு சிறுமி. அரசூர் வம்சத்தின் மீதிக் கதையை நான் உனக்குச் சொல்கிறேன் என்று துருதுருவென்று என்னைச் சுற்றி ஓடினாள் அவள்.

பெரியம்மா, நீங்க இந்தப் பையன் எழுதினதுக்கு எழுபது எண்பது வருஷம் கழித்துல்லே பிறந்திருப்பீங்க ? நடுவிலே என்ன ஆச்சுன்னு தெரியுமா என்ன உங்களுக்கு ?

அது தெரிந்து என்ன ஆகப் போகிறது ? எல்லாத்தையும் சங்கிலி போல ஆதியிலிருந்து அந்தம் வரை பதிந்து வைக்கணுமா என்ன ?

அந்தப் பெண் காற்றில் கலந்து போனாள். கூடவே மற்றவர்களும்.

நேரமாறது. பூத்திருவிழாவுக்கு நீ ஒண்ணும் காசு எழுதலியே ?

பனியன் சகோதரர்கள் நோட்டுப் புத்தகத்தை நீட்டினார்கள்.

நாளைக்குத் தரேன் என்றேன் வழக்கம்போல்.

கம்ப்யூட்டரை நிறுத்திக் குளிக்கப் போனபோது சுலைமான் பற்றி விசாரிக்காமல் போனேனே என்று நினைவு வந்தது.

அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.

அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?

பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.

கேட்டு விட்டு எழுதுகிறேன்.

(நிறைவடைந்தது)

குறிப்பு : இப் புதினத் தொடரின் அடுத்த கதையான ‘அரசூர்க் காரர்கள்’ விரைவில் துவங்கும். அதுவரை வணக்கத்தோடும் நன்றியோடும் இரா.முருகன்.

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts