புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ரெ.கார்த்திகேசு-


ஜால் விமானத்தின் வசதியான வணிக வகுப்பு ஜன்னலோர இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கையில் அதிகாலைத் தோக்கியோ மஞ்சள் வைரத்தில் வரிசை வரிசையாக மாலைகள் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் நரித்தாவில் இறங்கிவிடலாம்.

வணிக வகுப்பில் அவன் இதற்கு முன் பிரயாணம் செய்ததில்லை. சிக்கன வகுப்பில் பிரயாணம் செய்த நேரங்களில், அதன் நெரிசலான சூழ்நிலையில் ஆசுவாசப் படுத்திகொள்ள எழுந்து நடக்கின்ற வேளைகளில் வணிக வகுப்பை எட்டிப் பார்த்து அதன் வசதியான இருக்கைகளில் கொடுத்துவைத்த பிரயாணிகள் கால் நீட்டித் தூங்கும் சொகுசைப் பார்த்துப் பெருமூச்சு விட்டதோடு சரி.

இதமாகத் தாங்கிக்கொள்ளும் பக்கவாட்டுப் பகுதிகளில் கையை அழுத்தி எட்டிப்பார்த்து பின்னர் முதுகை வசதியாகச் சாய்த்துக் கொண்டு காலை நீட்டி நெட்டி முறித்தான். இதெல்லாம் வாய்த்திருப்பது ஒரு தற்செயலான சூழ்நிலையில்தான். தற்செயலா ? ஒருவேளை இதற்கெல்லாம் ஒரு கணக்கு இருக்குமோ ? தான் ஒரு விஞ்ஞானியாக இருந்து பார்க்கும்போது இதனைத் தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் சமயமும் படித்திருக்கிறான். ‘அவனன்றி ஓரணுவும் ‘ என்று அவர்கள் சொல்வது பிழை என்று எந்த விஞ்ஞானமும் இன்னும் நிருபிக்கவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அலுவலகம் போன போது கணினியில் அவனுக்குக் காத்திருந்த செய்தியையும் யாரா அப்படி அசைத்துத்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

*** *** ***

பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறைக் கட்டிடத்தில் உள்ள தன் அறைக்குள் நுழைந்த போது இன்று நல்ல செய்தி வந்திருக்கலாம் என்று டாக்டர் அரவிந்தனுக்குத் தோன்றியது. ஏன் அப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. இளம் ஆராய்ச்சியாளனான அவனுக்கு இந்த எதிர்பார்ப்பு என்றும் உண்டு. நாலைந்து அறநிறுவனங்களுக்கு ஆராய்ச்சி உதவி நிதி கேட்டு மனுச் செய்திருந்தான். மேலும் மேலும் விவரம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்; ஆமாம் இல்லை என்று சொல்லவில்லை. மூன்று கட்டுரைகள் ஏற்கப்பட்டு அறிவியல்/கணித இதழ்களில் பதிப்புக்காகக் காத்திருந்தன. ஓராண்டாகியும் இன்னும் விமோசனம் பிறக்கவில்லை. இன்னுமொரு கட்டுரை நிபுணர்கள் பார்வைக்கு அனுப்பப் பட்டிருப்பதாக ஓர் இதழாசிரியர் அறிவித்திருக்கிறார். ஏதாகிலும் ஓர் இடத்திலிருந்து இன்று மின்னஞ்சலில் பதில் வந்திருக்கலாம்.

தூக்கி வந்த பிரிஃப் கேசை மேசையில் வைத்துவிட்டு கணினி விசைப் பலகையைத் தொட்டதும் திரை துலங்கியது. ‘உங்களுக்கு மின்னஞ்சல் இருக்கிறது ‘ என்ற செய்தியுடன் உரையாடல் தளத்திலிருந்து ‘அக்கிக்கோ உங்களை உரையாட அழைக்கிறார் ‘ என்ற செய்தியும் இருந்தது. யார் அக்கிக்கோ ? இந்த உரையாடல் அறைகளில் இப்போது சில்லறை உரையாடல்காரர்கள் அதிகம் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் இது தனது ஆராய்ச்சிகளுக்காக மட்டும் பயன் படுத்தும் உரையாடல் அறையாக இருப்பதால் அழைப்பவர் கல்வியாளராகத்தான் இருக்கும். அங்கும் இப்போது பல மேற்பட்டதாரி மாணவர்கள் நுழைந்து நான்கைந்து வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய கட்டுரைகளிருந்தெல்லாம் சந்தேகம் கேட்கிறார்கள். எரிச்சலாக இருக்கும்.

ஆனால் அக்கிக்கோ ? பேரைப் பார்த்தால் யாரோ பொழுது போகாத ஜப்பானியக் குட்டி மாதிரி இருந்தது. எதற்கும் பார்க்கலாம் என நுழைந்தான். சில்லறை விஷயமாக இருந்தால் சட்டென்று மூடிவிட்டுத் திரும்பி விடலாம்.

‘ஹெல்லோ, காலை வணக்கம் ‘ என எழுதினான்.

ஒரு விநாடிக்குப் பிறகு பதில் வந்தது. ‘காலை வணக்கம். என் கோரிக்கையை ஏற்றுப் பேசுவதற்கு நன்றி! ‘

‘யார் நீங்கள் ? ‘

‘அக்கிகோ. தோக்கியோவிலிருந்து! ‘

‘இது எனக்கு அறிமுகமான பெயராக இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. உங்களுக்கு என்ன வேண்டும் எனச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ‘

‘ஓ. மன்னிக்க வேண்டும். அக்கிக்கோ என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டது என் பிழைதான். மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும். ‘

‘மன்னித்து விட்டேன். சீக்கிரம் சொல்லுங்கள்! ‘

‘நான் பேராசிரியர் ஏ. யஷிமோத்தோ! ‘

அதிர்ந்தான். நிமிர்ந்து உட்கார்ந்தான். ‘பேராசிரியர் யஷிமோத்தோவா ? வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையத்தின் இயக்குநர் ? ‘

‘நானேதான். ‘

வெட்கப் பட்டான். இவரையா யார் எனக் கேட்டேன் ? இவர் வாய் திறந்தால் அறிவியல் உலகில் அலைகள் எழும். வான்வெளிக் கணிதத்தில் மேதை. இவரையா ?

‘பேராசிரியர் அவர்களே! நான் வெட்கத்தால் குறுகிப் போனேன். உங்களைத் தெரியாமலா ? என்னுடைய லட்சியக் கதாநாயகர் நீங்கள். ஆனால் அக்கிகோ என்றதனால் தெரியாமல் ஏமாந்து விட்டேன் ‘

‘பரவாயில்லை. விஷயம் இதுதான். நீங்கள் ‘கணிதமும் அறிவியலும் ‘ என்னும் இதழுக்கு அனுப்பிய ஆராய்ச்சிக் கட்டுரையை என்னுடைய முன்வாசிப்புக்கு அனுப்பினார்கள். அந்தக் கட்டுரை நினைவு இருக்கிறதா ? ‘

ஆறு மாதங்களாயிற்று அனுப்பி. ஆனால் ஒவ்வொரு சொல்லும் நினைவில் இருந்தது. அதுவும் யாஷிமோத்தோ பற்றியதுதான். ‘புழுத் துளை பற்றிய யாஷிமோத்தோ சூத்திரத்தின் நீட்சி ‘ என்பது தலைப்பு.

‘நினைவிருக்கிறது. உங்களின் சூத்திரத்தில் கைவைத்த என்னுடைய அகங்காரத்தை மன்னிக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நீட்சி செய்ய முடியும் என நம்பினேன்! எதும் தவறாகிவிட்டதா ? ‘

‘இல்லை. இல்லை. தவறே இல்லை. என்னுடைய கணிப்புகளை இப்படி இலேசாக விரிவு படுத்தியதன் வழியாக ஒரு புதிய பரிணாமம் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! ‘

‘அப்படியானால் அதைப் பிரசுரிக்கப் பரிந்துரைப்பீர்களா ? ‘

‘நிச்சயமாக. ஆனால் அது சின்ன விஷயம். இன்னும் முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்கள் இங்கு தோக்கியோவில் எங்கள் மையத்திற்கு வந்து அது பற்றி மேலும் ஆய்ந்து எழுத வேண்டும் என நினைக்கிறேன். ஒரு ஆறு மாத ஆராய்ச்சிக்கு நீங்கள் இங்கு வர முடியுமா ? ‘

சொர்க்கத்துக்கு வா என்று அழைப்பதற்குச் சமம். அழைப்பவரும் கணித உலகில் சொர்க்கபுரிக்குத் தலைவர் மாதிரிதான்.

‘எனக்கு இது பெரும் கெளரவம் பேராசிரியர் அவர்களே. ஆனால் இங்கு எனக்கு அதற்கான விடுமுறை கொடுப்பார்களா என்று பார்க்க வேண்டும் ‘

‘கவலை வேண்டாம். உங்கள் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்குப் பொறுப்பான உதவித் துணைவேந்தர் ராம்லி முகமட் எனது நண்பர். அவரிடம் பேசுகிறேன். உடனே உங்களுக்கும் ஓர் அழைப்பு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். இங்கே வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்காக ஃபெலோஷிப் இருக்கிறது. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். உங்கள் செலவுகள் அனைத்தும் அந்த ஃபெலொஷிப் ஏற்கும். தேதிகளைப் பற்றிப் பிறகு பேசுவோம். நான் செல்ல வேண்டும். நாள் பூராவும் தீராத கூட்டங்கள் இருக்கின்றன. அடிக்கடி தொடர்பு வைத்திருங்கள். வணக்கம் ‘

‘வணக்கம் ‘ என்று பதில் எழுதி முடித்தபோது மகிழ்ச்சியில் தலைக்குள் நறுமணப் புகை அடர்ந்து மிதந்ததுபோல் இருந்தது.

***

( தொடரும் )

kgesu@pd.jaring.my

Series Navigation

author

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

Similar Posts