நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மையடர்ந்த கண்ணினால் மயக்கிடும் மயக்கிலே

மையிறந்து கொண்டு நீங்க ளல்லற் றிருப்பீர்காள்

மெய்யடந்த சிந்தையால் விளங்கு ஞானமெய்தினால்

உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே

– சிவவாக்கியர்

காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. வழுதாவூர்ச் சாலையில் மேற்கு நோக்கிச் சீராக அந்தக் குதிரை ஓடிக்கொண்டிருந்தது. உயர் சாதிக் குதிரை – கொஷ்லனி (Kochlani) இனம். 150 செ.மீட்டர் உயரமும் 350கிலோ எடையும் கொண்ட உடல், நீண்டமார்பு, சரிந்ததோள். கறுத்த மெல்லிய பளபளக்கும் முடிகளுடன் கூடிய வால். வறுத்த காப்பிக்கொட்டையின் நிறங்கொண்ட ஆண்குதிரை. அரபுக் குதிரை.

அதன் முதுகில் அழகும் ஆண்மையும் இணைந்த ‘பெர்னார் ‘ சவாரி செய்து கொண்டிருந்தான். அவனது பொன்னிறக் கோதுமை உடலில் சிவப்பு வண்ணத்தில் அதிகம் உறுத்தாத வெல்வெட்டிலான நீண்ட அங்கி. கணுக்காலில் வெள்ளைக் காலுறை. முன் கை இரண்டிலும் கையுறைகள். அணிந்திருந்த வெண் சட்டையின் கழுத்துப்பட்டையில் மெல்லிய சதுர மஸ்லின் துணியைக் குறுக்காகச் சுருட்டிச் செருகியிருந்தான். சாம்பல் நிறத்தில் அடர்ந்து கழுத்துக்குப் பின்புறம் இறங்கியிருந்த சுருள்சுருளான கேசம் வியர்வையில் நனைந்து, ஒட்டியிருந்தது. சிவந்த அவன் முகம் மாலை வெய்யிலில் மேலும் சிவந்திருந்தது..

இவன் முன்னே நிற்க வெட்கப்பட்டுச் சூரியன் மேற்கே ஒரு பெண்ணைப்போல ஓளிய முற்பட்டான். அடர்ந்த மரக்கிளைகளினூடே தன் கதிர்களை அனுப்பி அவனைத் தொட்டு மகிழ்ந்தான். வேப்பமரத்தில் கூடுகட்டியிருந்த தூக்கணாங் குருவிகள், கூடுகளிலிருந்து வெளிப்பட்டுக் கூச்சலிட்டு மகிழ்ந்தன. இலவமரத்துக் கிளிகள், இவனை ஏதோ பழமென்று நினைத்து, சிவந்த இவன் முகத்தருகே நெருங்கி, பின்னர் அவனது இமைக்கும் கண்களைக் கண்டு பயந்து மீண்டும் கிளைக்குத் திரும்ப இவனுக்குச் சிரிப்பு வந்தது; மனம் முழுக்க மகிழ்ச்சிப் பிரவாகம். அந்தக் களிப்பில் குதிரையைத் தீண்ட, இவன் மனதைப் புரிந்துகொண்டதுபோலக் குளம்புகளை எட்டிப் போட்டது. அந்திவரை நிலங்களில் உழைத்தபிறகு திரும்பும் விவசாயக் குடிமக்கள் இவனைக் கண்டு ஒதுங்கி நின்று தலையிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டி ‘கும்பிடறோமுங்க தொரை ‘ என ஒதுங்கி வழிவிட்டனர். தலையிற் புற்கட்டுகளும், கையில் அரிவாளுமாகவிருந்த இளம்பெண்கள் அன்னிய ஆடவைனைக் கண்டமாத்திரத்தில் அச்சமும் நாணமும் அடைந்தவர்களாய் மரத்தடிகளில் ஒளிந்து இவனை எட்டிப் பார்ப்பதையும் இவன் ரசிக்கத் தவறவில்லை.

‘வாழ்க்கையின் நியதிகளுக்கு நாம் உட்படுதைவிட, நமது நியதிகளுக்கு வாழ்க்கை உட்படும்போது வாழ்க்கை இனிக்கவே செய்கின்றது. இந்த மண்ணும், காற்றும், வானமும் இவனோடு நெருங்க ஆரம்பித்து இன்றைக்கு இருபத்திமூன்றாண்டுகள் ஆகின்றன. இளமை முதற்கொண்டே கனவிலும் நனவிலும் பிறவிப் பெருங்கடலில் நீந்த ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்கிறது. ‘கிணற்றில் வலம் வரும் தவளைகளைவிட ஊர்ந்து உலகறிய முயலும் உயிர்களே வாழ்ந்துபார்க்கின்றன ‘. என்பது பெர்னார் பிறந்த ‘பிரெத்தாஜ்ன்(Bretagne) மண்ணில் அனேகரது வாழ்க்கை. பெர்னார் குளொதன் (Bernard Glaudan) என்கின்ற பெர்னார் பிறந்தது கடற்கரை. சுவாசித்தது கடற்காற்று. கடலலைகளோடு விளையாடி, மாலுமிகளின் பாடல்களைப் பாடி, கடல் மீன்களையுண்டு கடல் சம்பந்தபட்ட வரலாறுகளையும், கதைகளையும் கேட்டுக்கேட்டுத் தன்னை வளர்த்துக் கொண்டவன்..

பெர்னார் பிறந்த நகரம் கடற்சாரலும், கடற்காற்றும் கலந்தே வீசுகின்ற வளைகுடாப் பட்டினம். சற்றே உயர்ந்த கடற்கரை. பிரவாகமெடுத்துப் பரவியிருக்கும் மணல். பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைக் கீழ்த்திசை நாடுகளுக்கு அழைத்துச் சென்ற துறைமுகப்பட்டினம். பெயர் ‘லொரியான் ‘ (L ‘orient). தமிழில் ‘கீழ்த்திசை ‘. பொருத்தமான பெயர். கி.பி. 1664ல் ‘பதினான்காம் லூயி ‘யிடம் அமைச்சராகவிருந்த ‘கொல்பெர் ‘(Colbert) யோசனையின் பேரில் ஆசிய நாடுகளோடு வர்த்தகம் செய்ய ‘பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி( Compagnie des Indes Orientale) உருவாக்கப்படுகிறது. கி.பி. 1666ல் அதனுடைய அலுவலகம் பிரான்சின் இன்றைய போர் லூயி (Port Louis) அன்றைய போர் லவே (Port Lavet)யில் துவக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கப்பல்கட்டுந் தளங்கள் உருவாகின்றன. 1000 தொண்ணோ கொள்ளளவுடைய ‘கீழ்த்திசைக் கதிரவன் ‘ (Le soleil d ‘Orient) என்கின்ற பெயரில் முதலாவது பாய்மரக்கப்பல் வெள்ளோட்டத்திற்குத் தயாராகின்றது. கப்பல்கட்டும் பணிக்காகவும், கடற்பயணத்தில் ஆர்வங்கொண்டும் மக்கள் மெல்ல மெல்லக் குவியத்தொடங்க, முதற்கப்பலின் பெயரையே அந்நகரம் தத்தெடுத்துக் கொள்கின்றது. இக்கடற்கரைப் பட்டினத்திற் குவிந்த கீழ்த்திசை வாசனைத் திரவியங்களும், தேயிலையும், பட்டுத் துணிகளும், பீங்கான் சாமான்களும் மக்களைக் கடற் பயணத்திற் காதல் கொள்ளசெய்கிறது.

‘லொரியான் ‘ கடற்கரை இரவுவிடுதிகளில், கீழ்த்திசைப் பயணம் முடித்துத் திரும்பும் மத்தலோக்களின்( மாலுமிகளின்) பாட்டும் ஆட்டமும், அவர்களுடைய பயணத்தில் ஏற்படும் புயல்மழைப் போராட்டமும், கடற்கொள்ளையரிடமிருந்து காத்துக்கொள்ள நடக்கும் யுத்தமும், அந்த யுத்தத்தில் பலியானவ்ர்களின் வீரச்செயல்களும், அங்கவீனர்களானபிறகும் அவர்கள் கண்களிில் மின்னும் பெருமிதமும், இன்ன பிற கதைகளும் அச்சத்தையூட்டுவதற்கு மாறாகப் பெர்னார் மனத்தில் கற்பனைகளை வளர்த்தன. கூடுதலாகப் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளுக்காக லொரியான் நகரில் பிரான்சு தேசத்து இளைஞர்கள் குவியத் தொடங்க, இவனும் கடல் மீதானவாழ்க்கையிற் கற்பனைகளை வளர்த்துக் கொண்டான். மதுச்சாலைகளுக்கு வருகைதரும் மாலுமிகைளைச் சுற்றிவர ஆரம்பித்தான். கம்பெனி பணிகளிருந்துவிட்டு, பிரான்சு தேசத்துக்குத் திரும்பும் ஊழியர்களிடன் அனுபவங்களை, கூடுதலாக ‘இந்து ‘ தேசத்து பெருமைகளைக் கேட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிய தனக்குள்ள விருப்பத்தைப் பெற்றோர்களிடம் தெரிவித்தான். மகனைப் போலவே கடற்பயணங்களிற் காதல் கொண்டிருந்த தகப்பன் லூயி குளோதன், மறுப்பேதும் சொல்லாமல் அனுமதித்தான். பெர்னார் பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியில் தன்னை இணைத்துக்கொண்டபோது வயது பத்தொன்பது.

கி.பி. 1738ல் ‘லெ கோந்த் தெ துலூஸ் ‘(Le Compte de Toulouse) கப்பலில் புதுவைக்கு வந்தபோது அப்போதைய குவர்னர் ‘துய்மா ‘ (Duma) இளைஞன் பெர்னாரின் ஆற்றலையும் அறிவையும் மெச்சி இரண்டாண்டுகள் அவரருகிலேயே வைத்துக்கொண்டார். புதுச்சேரிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பெர்னார் தமிழிலும் தேர்ச்சிபெற்றுத் தமிழர்களுடன் நெருங்கிப் பழக, மேன்மைதங்கிய குவர்னருக்கு ‘இரண்டாவது துபாஸ் ‘ என்கின்ற கெளரவம் இவனைத் தேடிவந்தது. இந்தியத் தரகர்களை நம்பாமல் பெரும்பாலான கம்பெனி வியாபாரங்கைளை இவனைக் கொண்டே குவர்னர் முடித்தார். இவனது வளர்ச்சியைக்கண்டு கம்பெனிப் பணியிலிருந்த பறங்கியர்களும் இந்தியத் தரகர்களின் துணையுடன் செய்த இன்னல்கள் அநேகம். இந்த நேரத்திற்தான் பிரெஞ்சுத் தீவுக்குக் குவர்னர் பொறுப்பேற்கச் சென்ற லாபூர்தொனேக்கு (Labourdonais) இந்தியாவிலிருந்து பிரெஞ்சுத் தீவுக்கு அழைத்துவந்திருந்த தமிழர்களுடன் தொடர்பு கொள்ள பெர்னார் உதவி தேவைப்பட, பிரெஞ்சுத் தீவில் இரண்டாண்டுகாலம் இருந்துவிட்டு; பிரஞ்சுத் தீவின் கவர்னர் அனுமதியுடன் அவருடைய பிரதிநிதியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறான். அரசுப் பிரதிநிதியெனக் கொண்டாலும் அவனது காதலி தெய்வானைக்காக நிறைவேற்றவேண்டிய அந்தரங்க அலுவலொன்று இருக்கின்றது. தெய்வானையைப் பற்றியும் கைலாசம் பற்றியும் உண்மைகள் அறியப்படவேண்டும். பெற்ற பிள்ளைகளிடமே காமாட்சியம்மாள் காக்கின்ற ரகசியத்தின் மர்மமென்ன ?. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காமாட்சி அம்மாளும், கைலாசமும், தெய்வானையும் எவரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பிரஞ்சுத் தீவுக்கு தப்பி வந்திருக்கிறார்கள் ? இப்படி ஏராளமான கேள்விகளுக்குப் பதில் தேடவேண்டியிருக்கின்றது என்பதை நினைத்தவுடன், சற்று முன்புவரை அவனிடம் குடி கொண்டிருந்த சந்தோஷம் ஒளிந்து கொண்டது. தெய்வானையின் ‘நிலாமுகம் ‘ அவன் முன்னே தோன்றி ‘ அன்பரே துன்பக் கேணியிலிருந்து என்னைக் கரை சேர்ப்பீரா ? ‘ கண்களில் சோகத்தை நிரப்பிக்கொண்டு கைகூப்பி இறைஞ்சுகிறாள்.

ஓடிக்கொண்டிருந்த குதிரை மிரண்டு நின்றது. தெய்வானையின் நினைவிலிருந்த பெர்னார், எதிர்பாராதவிதமாகக் குதிரை நிறுத்தப்பட, நினைவிலிருந்து மீண்டான். புதுச்சேரி எல்லையில்தானே இருக்கிறோம் என்பதாகச் சந்தேகம் எழுந்தது. சுற்றிலும் குதிரைகளில் வீரர்கள். எங்கிருந்து வந்தார்கள் ? என்று யோசிக்க நேரமில்லை.மத்தியில் தாடியும் மீசையுமாய் இருந்தவன் உருது கலந்த தமிழில் ஏதோ முணுமுணுத்தான்..

‘ சாஹிப் இவன் கம்பெனிக்காரனாக இருக்கவேண்டும். இவனைப் பிடித்துவைத்தால் கம்பெனியார் அதிகப் பணங்கொடுத்து மீட்டுச் செல்வார்கள் ‘ வலது புறத்தில் நின்றிருந்தவன் தன் தலைவனைப் பார்த்துக் கூறினான்.

‘நீச்சே உத்தரோ ‘- இந்த முறை தாடிக்காரன் தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு இவனிடம் கட்டளையிட்டான்.

இவனைக் குதிரையிலிருந்து இறங்கச் சொல்கிறான் என்பதைப் பெர்னார் விளங்கிக் கொண்டான்

கொள்ளையர்களாக இருக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி புதுச்சேரி எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதென்பது பரவலாயிற்று ஆர்க்காட்டு அரியணைப் பதவிச் சண்டையில் ஆங்காங்கே வழிப்பறியும், ஊரில் புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டமும் துலுக்கர்களால் பெருகியிருந்தது. நவாப்பின் ஆட்களாகவே இருக்கவேண்டும். அவர்கள் செயற்படுவதற்குள் இவன் முந்திக் கொள்ளவேண்டும். நிலைமையைச் சீராகக் கையாளவேண்டும். முரடர்கள். ஆபத்தானவர்கள். வலதுகாலால் குதிரையின் வயிற்றுப்பாகத்தைச் சீண்டினான். கடந்த இரண்டுமணி நேரத்தில் அவனை நன்கு புரிந்து கொண்டிருந்த குதிரை, எகிறிப் பாய்ந்தது. பயந்து விலகிய கொள்ளையர்கள் சுதாரித்துக் கொண்டு பின்னே தொடர, அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில் கடிவாளத்தை இழுத்துக் குதிரையை அவர்கள் பக்கமே திருப்பிய வேகத்தில், இடையிற் செருகியிருந்த வாள் இப்போது அவனது வலது கரத்தில் சுழன்றது. வாளின் முனை முதலிற் பேசியவனின் விலாவில் இரத்தம் பீறிட கோடிழுத்து எழுந்து இடதுபக்கம் நெருங்கிய தலைவனின் தலையை உராய்ந்து கொண்டு தோளில் இறங்க அவன் துடித்துச் சாய்ந்தான். அடுத்தடுத்து அவனது வாள்வீச்சுக்கு கொள்ளையர்களில் இரண்டொருவர் வீழத்தான் செய்தனர். கொள்ளையர்களில் ஒருவன் தந்திரமாகப் பின்வாங்கி இவனது கவனத்திலிருந்து விலகியெறிந்த கட்டாரி அவன் வலது தோளைத் தைத்துக் கீழே விழுந்தது. தோளிலேற்பட்ட வலியின் காரணமாக தொடர்ந்து தனியொருவனாக அவர்களைச் சமாளிக்க இயலுமா என்கின்ற சந்தேகம்.

அப்போதுதான் அதனைக் கவனித்தான். கொள்ளையர்களை எதிர்த்துத் திடகாத்திரமான உடல்கொண்ட கறுத்த வாலிபனொருவன் இவன் தரப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஆச்சரியமாகவிருந்தது. கொள்ளையர்களுக்கு எதிரணியாகவிருக்குமோ ?என்று மனதிற் சந்தேகம்.. எதிரணியாகவிருப்பினும் தனிப்பட்ட ஒருவன் உயிரைப் பணயமாகவைத்து ஒரு பறங்கியனுக்கு உதவுவானா என்ற பதிலும் தோன்றாமலில்லை. காரணந்தேட இது நேரமில்லை. கொள்ளையர்களிடமிருந்து இப்போதைக்குத் தப்பியாகவேண்டும். உதவிக் கிடைத்த பலத்தில் தனக்கேற்பட்ட காயத்தினைப் பொருட்படுத்தாது வாளினை இலக்கின்றிச் சுழலவிட்டான். இடையிடையே புதியவனின் வாள் வீச்சினையும் கவனித்து அதிசயப்பட முடிந்தது. அடுத்து சில நிமிடங்களில் கொள்ளையர் கூட்டம் போனவழி தெரியவில்லை. தோளில் ஏற்பட்டிருந்த காயம் தன் விபரீதத்தைக் காட்ட ஆரம்பித்தது. பச்சைஇரத்தமும் தசைப்பிசிருமிருந்த வாளை உறையிலிடத் தயங்கி, அருகே மற்றொரு குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருந்த தமிழனை முழுவதுமாகப் பார்த்தான். .

கட்டான உடல், விரிந்த மார்பு, திமிருடன் தோள்கள், அடர்ந்து, கறுத்து தோள்வரை இறங்கி, வியர்வையில் ஒட்டியிருந்த தலைமுடி., பெரிய நெற்றி, இமைத்தலைத் தவிர்க்கும் நேரான பார்வை, புருவங்களின் சந்திப்பிலிருந்து எழுந்த நாசி. முறுக்கேற்றப்பட்ட மீசை, கீழே தடித்த பெரிய உதடுகள்- கரிய உடல்….

‘ உன்னுடைய உதவியை எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி நீ…. ? ‘

‘அடியேன் பெயர் மாறன். தங்கள் துணைக்கெனவும், பாதுகாப்புக்கெனவும் துபாஷ் பலராம்பிள்ளை என்னை நியமனம் செய்திருக்கிறார் நானும் துபாஷும் கடந்த ஒரு மணிநேரமாகத் தங்கள் இல்லத்தில் உங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். தாங்கள் உரிய நேரத்தில் வராதுபோகவே, துபாஷுக்கு மனதிற் கிலேசம். வழுதாவூர்ச் சாலையில் பயணித்து தங்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்து வருமாறு பணித்தார். தக்க சமயத்தில் வந்திருக்கிறேன்.

‘உண்மை. நான் தனியொருவனாக இக்கொள்ளையர்களின் எதிர்ப்பினைச் சந்திக்கவியலாது. தங்கள் வாள்வீச்சும் அபாரம். ‘

‘சிலம்பு, குஸ்தி, மலபார் ஆசாமிகளிடம் கற்ற களரிப் பயிற்சியென ஓரளவு யுத்த ஞானமுள்ளவன். பிரஞ்சு பாஷையும் ஓரளவு அறிந்தவன். ‘

‘ மிக்க மகிழ்ச்சி. பொருத்தமான நண்பரைத்தான் எனக்காக பலராம்பிள்ளை தேர்வு செய்திருக்கிறார். இந்தக் கொள்ளையர்கள் நவாப்பின் ஆட்கள்தானே ? ‘

‘தங்கள் யூகத்தில் தவறில்லை. அவர்கள் நவாப்பின் குதிரை வீரர்களே. இப்போதெல்லாம் புதுச்சேரிப் பகுதியில் கொள்ளையர் பயம் அதிகமாகவே இருக்கின்றது. கம்பெனி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘

‘உண்மை. இது பற்றிக் கவர்னரிடம் நாளை பேசுகிறேன். இப்போது உடனடியாக எனது தோளிலுள்ள காயத்திற்கு மருந்திட்டாக வேண்டும். இங்கே அருகில் ஏதேனும் வைத்தியர் இல்லம் உண்டா ? ‘

‘மன்னிக்கவும்.. வீண் பேச்சிலிருந்துவிட்டேன். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் எனக்குத் தெரிந்த ஓர் இல்லம் இருக்கிறது. அவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள். வாருங்கள்

இருவரும் குதிரையை மெதுவாகச் செலுத்தி அந்த வீட்டின் முன்னே வந்து நின்றார்கள். ஓரிளம்பெண் மேல்மாடியிலிருந்து இவர்களைப் பார்த்துவிட்டுக் கீழிறங்கிவந்து கதவினைத் திறந்தாள். கருங்கூந்தல் மெல்ல ஒதுங்க, பெளர்ணமிநிலவின் குளிர்ச்சியும், வடிவும் கலந்த முகம்.

‘.. தெய்வானை! நீயா ‘ பெர்னார் ஆச்சரியமுற்றுக் கேள்வியை எழுப்பினான் ‘

/தொடரும்/

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts