திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/7/

உடல் அலுத்துத் துாங்கவும், காலை வெளிச்சம் கண்ணைக் குத்த எழுந்து கொள்வதும் வாடிக்கை என ஆகிவிட்டது. அம்பிகா இருந்த காலங்கள் விடியல்-சுகம் கண்ட காலங்கள். அதிகாலைப் பனிக்குளிர் அழகு. தனுஷ்கோடிக்கு அவை கிராமத்தை உள்ளத்தில் அமர்த்தி விடுகின்றன. மரவட்டையாய் ரயில்ப்பூச்சியாய்ச் சுருண்டு கிடக்கிற நியதிகள் முதல்மணி அடித்து ரெண்டாம் மணி அடித்தாற்போல… சற்று சோம்பல் முறித்து விட்டு எழுந்து கொள்கின்றன… ஆலங்குச்சியோ வேலங்குச்சியோ சாறு இறங்க இறங்க பல்தேய்ப்பது ஓர் அனுபவம்… நீரே அற்றுப் போனது நகர வாழ்க்கை.

முதல் மணி ரெண்டாம் மணி என்றெல்லாமில்லை. எடுத்த ஜோரில் ஓட்டம். நீராவி ரயில் அல்ல… மின்சார ரயில். நுால்-பாவுக்குள் பாவுக்கட்டை கொடுத்து நெசவுசெய்கிறாப் போல அதன் தடக் தடக் தடதடப்பு. ரயில் ஊரை இந்தக் கோடிமுதல் அந்தக் கோடிவரை பிணைப்பது நெசவு இயந்திரம் அடிப்பதுபோலவே அவனுக்குப் படுகிறது. மனசில் கவிதைகளைச் சிந்திக்கொண்டே அலுவலகம் வரை செல்வது அவனுக்கு வழக்கமாகி விட்டது. அறுவடைக்குப் பின் நெல்மணிகளைச் சிந்திக்கொண்டே வீடுதிரும்பும் மாட்டுவண்டி அவன்… அந்த நெல்மணிகளுக்கு எங்கிருந்தெல்லாமோ குருவிகள் சேரும். தவிட்டுக்குருவி. கரிக்குருவி. மைனா. புறாக்கள் பக் பக் என்கிற வித்தியாசாமான ஒலியுடன் உத்திர அரங்கில் குடியிருக்கும். வீடே இயற்கையின் சப்த ஆளுமையில் மற்றபடியான மெளனத்தில் இருந்தது. நகரத்தில் மனிதர்கள் பேசுவதும் இயற்கை ஸ்தம்பித்துக் கிடப்பதுமாகி விட்டது… சொன்னானே உதயகண்ணன்-

பறவை

அலைகிறது

மரத்தைத் தேடி

நம்மூர்க் குயில் போலவே, ராபின் பறவைகள்… புழுக்களை நம்பி வாழ்கிற ராபின் பறவைகள்… தாவரங்களைப் பாதுகாக்கிற நடவடிக்கையில் உரங்கள் பூச்சிமருந்துகள் அடித்து அடித்து… புழுக்களை அழித்ததில் ராபின் பறவைகளை ஒட்டுமொத்தமாக இழந்தோம்… தனுஷ்கோடி கேள்விப் பட்டிருக்கிறான்.

தான் மாத்திரமே வாழ்கிற ஆவேசம் கொண்ட மனிதன்.

பறவை உயர்திணை. மனிதன் அஃறிணை.

சுயநல ஆவேசம். அடடா… அதன் வழிப்பட்ட தலைகுப்புற விழும் ஏமாற்றங்கள். அதை சகிக்க முடியாத மனிதர்கள்…

இவள்… அம்பிகா தற்கொலை செய்து கொண்டாள். அவளிடம் சில கனவுகள் இருந்தன. கனவுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி விடுகின்றன என்பது நிஜம். அடுத்த அடி வைப்பதற்கு முன் அதற்கும் அதற்கும் அடுத்த அடி… மேற்படிகளுக்கு ஏற தாவியேற ஆசைப்பட்ட போது பட்டது அடி. காயம்.

காயங்கள்.

கனவுகள், இலட்சியமாய் வேர்ப்பூண்டாய்த் திரளவேணாமோ ? அவளது ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை தனுஷ்கோடியால்.

கைக்கு அடக்கமான அளவில் கைப்பணத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்தி திட்டமிட அவளுக்கு வரவேயில்லை. அப்படி வாழ வேண்டியிருக்கிறதில் ஏனோ அவள் ஆயாசப் பட்டாள்… அவளை எப்படி பூமிக்குக் கொணர என்று தனு திகைத்தான். சற்று அசைத்தாலும் காற்று அவளது காகிதப் பட்டத்தைக் கிழித்துவிடும் போலிருந்தது. அவனது ஜாக்கிரதை உத்திகள் பலனளிக்கவில்லை. அவன் இன்னும் சற்று அதிகம் சம்பாதித்திருக்கலாம். இன்னும் சற்று சந்தோஷமாய் அவளை வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அவளை இன்னும் விசாலமாய் ஆராதித்து, கொண்டாடி… அவள் அழகைப் புகழ்ந்து… அவள் காலடியில் கிடந்திருக்கலாம்.

கணந்தோறும் கவிதைகளை உள்ளே நிரப்பிக் கொள்கிற அவன். ஏமாற்றங்களை நிரப்பிக் கொள்கிற அவள். உலகம் அவளுக்கு சோக கோளமாய் கோரமாய்க் காணக் கிட்டியது. சந்தோஷம் என்பது துள்ளியும் எட்டாப் பழம் அங்கே…

சாயந்தரம் நான் சினிமாப் போகணும்- என்பாள் அம்பிகா.

துட்டு ? – என்கிறான் அவன் மெலிதான புன்னகையுடன்.

வேணும் – என்கிறாள் ஒற்றை வார்த்தையில். இல்லையே… எனச் சொல்ல வருத்தமாய் இருக்கிறது அவனுக்கு.

வேணும். படம் இன்று கடைசி. வியாழக் கிழமை. நாளை வெள்ளிக்குப் படம் மாத்திருவான்.

காசில்லையே – எனும்போது அழுகை வந்தது அவனுக்கு. அறிவான குழந்தை அவன். அறிவு-எளிமை கொண்ட உக்கிரகாளி அவள்!

எப்ப பாரு… காசில்லையே – அவள் அந்தக் கடைசி வார்த்தையை இகழ்ச்சிக் குறிப்புடன், அதே அவன் குரலில் கையை சற்று பாவனைகள் செய்து எரிச்சலை வெளிப்படுத்தினாள். ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.

நான் வரேன்னு சிநேகிதிகளுக்கு வாக்கு கொடுத்திட்டேன். பாக்கியராஜ் படம். ஒரே தமாசா இருக்கும்…

அவனுக்கு அழுகை வந்தது. அதை அவள் சட்டை செய்யவில்லை. அவனை ஈரமற்றுப் பார்த்தாள். சாப்பிடாமல் கூட இருக்கலாம். அவளுக்கு ஆசைப்பட்ட பொருள் வேண்டும். உடனே… தக்கணமே கையில் அகப்பட வேண்டும்.

சண்டை. சண்டைகள்.

பக்கத்து வீட்டுக்காரியை விட நான் பணக்காரி என்ற அம்சம் வேண்டும் அவளுக்கு. சற்று உசரமானவள் நான்… என்னருகே குட்டையானவள் வேண்டும்.. குட்ட அவளுக்கு பக்கத்தில் ஆள் வேண்டும். குட்ட அல்ல- தேளாய்க் கொட்ட!

Just too much is enough, என்பார்கள்.

ஒரு நேர்கோட்டை அழிக்காமல் அதைச் சின்னதாக்குவது எப்படி ?… பக்கத்தில் பெரிய கோடு போடு என்பார் பாலசந்தர்… இரு கோடுகள் படத்தில். அவளோ பக்கத்தில் சின்னக் கோடு இருக்க விரும்பினாள்.

போர். கோபம் வந்தால் நீங்கள் என அவனை விளித்தல் நீயாகி விடும். அவனுக்கு வாழ்வே நரகமாகிப் போகும். திகைப்பாய் இருக்கும்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts