அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

இரா முருகன்


ப்ிஷாரடி வைத்தியரும், சின்ன எம்ப்ராந்திரியும் சிநேகிதர்களும் அடைத்து வைத்த கதவுக்கு அப்புறம் வியர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருக்க, தெருவில் சங்கரனின் ஜானுவாச ஊர்கோலம் கோலாகலமாக வந்து கொண்டிருக்கிறது.

இது விரமிச்சாத்தான் நமக்குத் தொடங்கலாம்.

படார் படார் என்று வானத்தில் சீறிப்பாயும் வாணங்கள் சில வினாடி அறைக்குள் பிரகாசத்தை விசிறியடித்துச் செல்ல, எம்பிராந்திரி சலித்துக் கொள்கிறான்.

வெடிவழிபாட்டுக்காரன் விந்தி விந்தி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தின் முன்னால் வெடிக்குழாயும் கையுமாக நடந்து போகிறான். துண்டித்துப் போன கால் விரலையும், அது கூடவே வளர்ந்த இன்னும் நாலு விரல்களையும் வைத்துப் போஷித்த சம்புடம் கோயில் துவஜஸ்தம்பம் தாண்டிய புதர்க்குழிக்குள்ளிருந்து காணாமல் போய்விட்ட விசனம் அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்க பிஷாரடி வைத்தியர் வீட்டு அடைத்த கதவைப் பார்த்தபடிக் கடந்து போகிறான் அவன்.

நாதசுவரக்காரன் ஆலாபனையாக ஏதோ சுவரத்தை எடுத்து வீட்டு வாசலில் நின்று விஸ்தாரமாக ஊத, இது வேறே இன்னொரு சல்யம் என்கிறமாதிரி பிஷாரடி சிரிக்கிறார்.

மாப்பிள்ளை அழைப்போட போய்ச் சாப்பிட்டு வந்து சாவகாசமா வச்சுக்கலாமே.

எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொல்ல, எம்பிராந்திரி எரிந்து விழுகிறான்.

சதா போஜனம் தான் நினைப்பெல்லாம் நமக்கு. ஒரு சாஸ்திரத்தை யுக்திபூர்வமா பரீட்சிச்சுப் பார்க்க நமக்கு சந்தர்ப்பம் கிட்டியிருக்கு. பிரயோஜனப்படுத்திக்க வேணாமா அதை ?

எடோ, பப்படமும் பிரதமனும் சோறும் கறியுமாச் சாப்பிட்டு வந்து சாஸ்திரப் பரிசீலனை செய்யக்கூடாதுன்னு யார் சொன்னது ?

சிநேகிதன் சிரிக்கிறான்.

எம்பிராந்திரிக்கும் விருந்துச் சாப்பாடுக்கு எழுந்து போக ஆசைதான். ஆனாலும், அவன் அப்படி எழுந்து போகும் பட்சத்தில் இந்தக் காரியம் இன்னும் தள்ளிப் போகுமே என்ற விசாரம் கட்டிப் போடுகிறது.

எல்லாம் அரசூர் ஜோசியர் வரவோடு ஆரம்பித்தது.

கல்யாண கோஷ்டியில் ஒருத்தராக வந்து இறங்கிய அவர் வெகுவான துன்பத்தோடு கூடி இருந்தார். அரசூர் அரண்மனையில் அவர் நிறுத்திய மகாயந்திரம் ஒருக்களித்துச் சாய்ந்ததில் ஏற்பட்டது அது.

மலையாள பூமிக்குள் அவர்கள் வந்த வாகனங்கள் நுழையும்போது அதிகாலை உறக்கத்திலிருந்து அவரை எழுப்பி உட்கார்த்தி வைத்து தேவதைகள் புகார் செய்ததில் தொடங்கிய கஷ்டம்.

ஏண்டா சோழியா, நீ பாட்டுக்கு பின்னம்புறத்து மண்ணைத் தட்டிண்டு விட்டுட்டே சவாரி. அங்கே எங்களை உக்கார வச்ச ஸ்தலம் என்னமாப் போயிருக்கு வந்து பாரு. போதாக்குறைக்கு ஏழெட்டு பிடாரிகள் அந்தச் சுப்பம்மாக்கிழவி கிட்டே நீ பணம் பிடுங்கிண்டு கொடுத்த தகட்டுலே இருந்து ஏறிண்டு அழிச்சாட்டியம் பண்றா. ஒரு நியாயம் வேணாம் ?

அவர்கள் ஏக காலத்தில் இரைய ஜோசியர் அரண்டு போய் அரையை நனைத்துக் கொள்ளாத குறையாகத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.

மேளதாளத்தோடு குப்புசாமி அய்யனும் தம்பிமார்களும் அரசூர் வரனையும் குடும்பத்தையும் வெற்றிலை பாக்கும், பருப்புத் தேங்காயும் பழமுமாய் எதிர்கொண்டு வரவேற்றுக் கொண்டிருக்க ஜோசியர் அய்யங்கார் பலர் கண்ணில் படுகிற கூச்சமே அற்றுப்போய் மரத்து நிழலில் மூத்திரம் போய்க் கொண்டிருந்தார்.

ஓய் ஓய் பிராமணரே, இங்கெல்லாம் அசுத்தம் பண்ணக்கூடாது. சுகாதாரத்துக்குக் கேடு வர்த்திக்கும் இப்படி எல்லாம் பண்ணினால்.

சின்ன எம்பிராந்திரி அவரைப் பார்த்து இரைந்தது மேளச் சத்தத்தில் அமுங்கித்தான் போய்விட்டது. அவனை நிமிர்ந்து பார்த்த ஜோசியர் கண்ணில் ஆழப் பாய்ந்திருந்த பயம் எம்பிராந்திரியை யோசிக்க வைத்தது.

ஆலப்பாட்டுக் கிழவனுக்கு தேக உபாதையால் உடம்பு லேசாகிப் பறந்து கோயில் கொடிமரத்தை நனைத்தமாதிரி இந்தப் பிராமணனுக்கு ஏதோ மனக் கிலேசம். இல்லாவிட்டால் இப்படிப் போதம் கெட்டுப் பொது இடத்தில் குத்த வைக்க மாட்டான்.

இவன் குப்புசாமி அய்யன் குடும்பத்தவர்கள் கண்ணில் பட்டால் மந்திரம், பரிகாரம் என்று இழுத்துக்கொண்டு போய் இவனும் நாளைக்குப் பறக்க ஆரம்பித்து விடலாம். மூட ஜனங்கள். இவர்களைப் புத்தி தீட்சண்யத்துக்கும் மெய்யான விக்ஞானத்துக்கும் கைபிடித்து அழைத்துப் போகாவிட்டால் இங்கே இன்னும் நாசம்தான் ஏற்படும்.

அவன் ஜோசியரைக் கையைப் பிடித்துக் கூட்டிப் போனது பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு.

பாஷையும் அரைகுறையாகப் புரிய, சொல்வதும் கோர்வையாக வராமல் அய்யங்கார் ஏதோ பரபரவென்று பேசியபடி இருந்தார். பிஷாரடி வைத்தியர் அவர் நாடியைப் பிடித்துப்பார்க்க, சுவாசமும் மற்றதுமெல்லாம் சாதாரண கதியிலே தான் இருந்தது.

இவர் ஏதோ மனக் குழப்பத்தில் இருக்கிறார். கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும் என்று சொல்லி வைத்தியர் அபின் கலந்த திரவத்தைக் கண்ணாடிக் குடுவையில் கலக்கினார்.

சின்ன எம்பிராந்திரி அதை ஆசை ஆசையாகப் பார்த்தான். அந்தக் கண்ணாடிக் குடுவைக்குள் இருந்து விக்ஞானம் அவனை அழைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு உலகம் முழுக்க நேர்படப்போவது இந்த அறிவால்தான். பிஷாரடி வைத்தியர் போல் மருத்துவம் படிக்க அவன் சீக்கிரம் கொல்லத்துக்குப் போகப் போகிறான். தகப்பனார் எம்பிராந்திரி சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும்.

ஜோசியர் அய்யங்கார் பிஷாரடி வைத்தியர் கிரஹத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, குப்புசாமி அய்யன் மனையில் பந்தக்கால் நாட்டி, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் கிரகத்தில் காலை போஜனத்துக்கான ஏற்பாடுகளைச் சித்தமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

துரைசாமி அய்யன் ஒரு பெரிய பாத்திரத்தோடு வந்து சேர்ந்தான்.

இது காப்பியாக்கும். இங்கெல்லாம் புதுசாப் பழக்கமாயிண்டு வரது. அதிகாலையிலே சாப்பிட்டா புத்தி தீட்சண்யமாகுமாம். உடம்பு வலுவேறுமாம். ஏதேதோ சொல்றா. பெரியவா இஷ்டப்பட்டா பானம் பண்ணலாம்.

சங்கரனுக்கு அப்பாடா என்று இருந்தது. வைத்தியும் கோமதி மன்னியும் அவனோடு சந்தோஷமாக ஆளுக்கு ஒரு குவளை வாங்கி அதை ருஜித்துச் சாப்பிட, பெரியவர்களும் என்னதான் இருக்கு இந்த அமிர்தத்துலே, குடித்துத்தான் பார்ப்போமே என்று குவளைக்காகக் கையை நீட்டினார்கள்.

சுந்தர கனபாடிகள் மாத்திரம் குளிக்காமல் பல்லில் பச்சைத் தண்ணீர் படாது என்று கண்டிப்பாகச் சொல்லிக் குளிக்கக் கிளம்பினார். அவருக்கும் குளித்து விட்டு வந்து இதைக் குடித்துப் பார்க்க ஆசைதான். ஆனால் அதுவரை பாத்திரத்தில் பானம் இருக்க வேண்டுமே ?

ஜோசியர் எங்கே திடும்னு காணாமப் போய்ட்டார் ? அவரையும் கூட்டிண்டு ஸ்நானத்துக்குக் கிளம்பலாம்னு பார்த்தேன்.

அவர் சொன்னதும்தான் அண்ணாசாமி அய்யங்காரைக் காணோம் என்று எல்லோருக்கும் உறைத்தது.

அவர் வழியிலேயே நல்ல தூக்கத்தில் வண்டியிலிருந்து கீழே எங்கேயாவது தவறி விழுந்து விட்டாரோ என்று சுகஜீவனம் கரம்பக்காடு கிருஷ்ணய்யர் சந்தேகத்தைக் கிளப்ப, அச்சானியமாப் பேசாதேடா கிருஷ்ணா என்றார் சுப்பிரமணிய அய்யர். ஏற்கனவே ஏகப்பட்ட கஷ்டம். விபத்து. நஷ்டம். அதுக்கும் மீறி நல்ல காரியம் எல்லாம் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

அதற்குள் சின்ன எம்பிராந்திரி வந்து ஜோசியர் உடம்பு சுகவீனமாகி வைத்தியர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்து ஒருவாய் காப்பி குடித்துப் போனான். இந்தப் பானம் மெய்யான அறிவு வளர்ச்சிக்கு உபயோகமானது என்று வைத்தியர் கருத்துச் சொல்வதாகவும் யாரும் கேட்காமலேயே தகவல் சொல்லிப் போனான் அவன்.

ஜோசியர் அப்போதிலிருந்து வைத்தியர் வீட்டில் தான் கம்பளியைப் போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவர் சொன்னதை எல்லாம் ஒருவாறு கிரகித்துக் கொண்டு பிஷாரடி வைத்தியர் தன் சிஷ்ய வர்க்கத்தைக் கூட்டி அறிவித்தது இப்படி இருந்தது –

இந்த மனுஷ்யன் அவனூரிலே ஏதோ செப்புத் தகட்டை முளையடித்துப் பொருத்தி ஒரு உத்யானவனத்திலே நிறுத்தியிருக்கிறானாம். க்ஷேத்ர கணிதத்தில் விற்பன்னனான இவன் அந்தத் திறமையை உலகம் விக்ஞான பூர்வமாக முன்னேறப் பிரயோஜனப்படுத்தாமல் தேவதையைப் பிடிப்பது, அதைத் தகட்டில் ஏற்றி நிறுத்துவது என்ற மூட நம்பிக்கைகளில் பிரயோகித்திருக்கிறான். இப்போது அந்தத் தகடு என்ன காரணத்தாலோ சரிந்து போனதாக அவனுக்குத் தெரிந்திருக்கிறது. யாரோ ஒருத்தரோ இல்லை ஒரு சிறிய கூட்டமோ யோசித்ததில் உண்டான கதிர்கள் இவனை அடைந்து இது விஷயம் தெரிய வந்தது யுக்தி பூர்வமான நிகழ்ச்சிதான். அந்தத் தகடு திரும்ப இவன் வைத்தபடிக்கே நிமிரும்வரை இவன் ஆரோக்யக் குறைவோடும் மனசில் பீதியும் அதன் மூலம் கூடுதல் அசெளகரியமுமாகவே இருப்பான்.

ஆனாலும் தேவதைகள் உண்டு. அவர்கள் தான் என்னிடம் வந்து முறையிட்டார்கள்.

ஜோசியன் பலமாக ஆட்சேபித்தபோது சின்ன எம்பிராந்திரி அவனுக்குத் தகுந்த தர்க்கபூர்வமான பதில் கொடுக்க வாதங்களை அடுக்க ஆரம்பிக்க, ஜோசியனுக்குப் பின்னால் இருந்து பிஷாரடி வைத்தியர் சைகை காட்டினார்.

அவன் புத்தி பேதலித்து இருப்பதாகவும் அவன் பேசுவதை லட்சியம் செய்யவேண்டாம் என்றும் அவனைப் பேச விடும்படியுமாகவும் அது இருந்தது.

நீங்கள் யாதொண்ணுக்கும் கவலைப்பட வேணாம். எல்லாம் தானே சரியாகப் போகும். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

பிஷாரடி வைத்தியன் இன்னொரு குடுவை திரவத்தைக் கலக்க, எம்பிராந்திரி பிரியத்தோடு அதைச் சிறிய சோதனைச்சாலை விளக்கின் மேல் தூக்கினாற்போல் இடுக்கி கொண்டு பிடித்துச் சூடு படுத்தினான். அவன் முகத்தில் பெருமையும் திருப்தியும் நிரம்பி வழிந்த தருணம் அது.

கல்யாண வீட்டில் நிச்சயதார்த்தப் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதாக, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். நல்ல இட்டலியும், இஞ்சியும், கொத்தமல்லியும் சேர்த்து விழுதாகச் சேர்ந்தரைத்த சம்மந்தியும் காலை விருந்துக்காகத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்தான் அவன் வந்தது.

அபின் கலந்த மருந்தை இன்னொரு குப்பி மாந்தி அய்யங்கார் திரும்ப உறக்கத்தில் வீழ, யுக்திவாதிகளின் குழு கல்யாண வீட்டுக்குப் போனது அடுத்து. விக்ஞான சிந்தனைகளுக்கும் இட்டிலி மற்றும் கொத்தமல்லிச் சம்மந்திக்கும் எந்தவிதமான தர்க்கபூர்வமான மோதலும் இல்லை என்று சொல்லி பிஷாரடி வைத்தியர் காலைச் சாப்பாட்டுக்கு நடந்தபோது மற்றவர்களுக்கும் அது சரியென்று பட்டது.

போகும் வழியிலேயே யோசித்து வைத்தபடி, ஜோசியர் திரும்ப எழுந்தபோது ஆகாரம் கொடுக்கவும், அப்புறம் அவரை அரசூரிலே யாரையாவது தன் நினைப்பு மூலம் செயல்பட வைத்து யந்திரப் பக்கம் கூட்டி வரச் செய்து அதைத் திரும்ப நிறுத்தி வைப்பது என்றும் முடிவானது.

இந்த யோசனை கொடுத்த தெம்பில் அந்தக் குழு உற்சாகமாகக் கல்யாண வீட்டாரோடு கலந்து பழகியதோடு சங்கரனுக்கும் ஊருக்கு வந்த மாப்பிள்ளைக்கான வரவேற்பு உபசாரப் பத்திரத்தைக் கல்யாணப் பந்தலில் வாசித்து அளிக்க வேண்டும் என்று தீர்மானமும் செய்து கொண்டு திரும்பி வந்தது.

ஆனால் அய்யங்கார் எழும்பி உட்கார்ந்தபோது விஷயம் அத்தனை சுலபமாக இல்லை.

இலைப்பொதியில் கல்யாண வீட்டில் இருந்து கட்டி எடுத்து வந்த இட்லி பதினாலையும் அவர் ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித்து வயிற்றைத் தடவிக் கொண்டு மலங்க மலங்க விழிக்க, பிஷாரடி நினைப்புக் கதிர்கள் தத்துவத்தை அவருக்கு விளக்க ஆரம்பித்தார்.

க்ஷேத்ர கணிதமாக இதைச் சொன்னால் புரிந்து கொள்ள எளுப்பமாக இருக்கும் என்றார் அய்யங்கார். அது முடியாத பட்சத்தில் தான் ஸ்நானம் செய்து வந்து மடியாக உட்கார்ந்து தியானம் செய்தபின்னால் காதில் ஓதினால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

அவர் அந்தப்படிக்கே குளித்து மடி வஸ்திரத்தோடு வர, யுக்திவாதிகள் குழு மறுபடியும் வைத்தியர் வீட்டில் கூடியது. நாலு வேளையும் ஊர்க் கல்யாணத்தில் சாப்பிட்டுக் கொண்டு இப்படி விக்ஞான ஆராய்ச்சி நடத்தத் துணைபோய் உலகம் செழிக்க முன்கை எடுப்பதில் அவர்கள் எல்லோருக்கும் பரம திருப்தி.

ஜோசியர் குளித்து வந்த சுறுசுறுப்பில் பிஷாரடி வைத்தியர் சொன்னதில் சரிபாதிக்குப் புரிந்தது என்று திருப்தியாகத் தலையசைத்தார்.

இந்த மனுஷர் இப்போது பருமனான, பெரிய மீசை வைத்த ஒரு நடு வயசுக்காரனை நினைக்கிறார்.

பிஷாரடி வைத்தியர் உற்சாகமாகச் சொன்னார். ஜோசியரின் மூச்சுக் காற்று படும் நெருக்கத்தில், விக்ஞானத் தேடல் மேன்மையுற அதைச் சகித்தபடி அவர் அமர்ந்திருந்ததால், ஜோசியரின் நினைப்புக் கதிர்களை அவரால் முழுக்க உள்வாங்கி அதை அதி வீர்யத்தோடு கடத்தி விட முடிகிறது என்றார் அவர்.

காலைக் கடன் கழிக்க வல்லாரை லேகியம் சாப்பிட்டுக் கொல்லைக்குப் போன ராஜா தன்னையறியாமலேயே நாலடி பின்னால் எடுத்து வைத்தார் அப்போது.

ஏனடா களவாணி, நான் அற்பசங்கைக்குப் போகும்போது என்ன எழவிற்குத் தடுத்து நிறுத்திக் கூப்பிடறே ? உன் அக்காளைக் காட்டெருமையும் அப்புறம் கழுதையும் கலக்கட்டும் என்று சமையற்காரனை வைதார் அவர். அவன் கூப்பிட்டுத்தான் பின்னால் திரும்பி வந்ததாக நினைத்த அவர் திரும்ப நடக்க, சமையற்காரன் நெத்திலிக் கருவாடை இன்னும் தீய்த்து அதில் எச்சில் உமிழ்ந்தான். ராஜாவுக்குக் காலை ஆகாரத்தோடு கொடுக்க அவன் சமைத்துக் கொண்டிருந்தது அது.

அந்த வர்த்தமானங்களை வைத்தியர் ஆதியோடந்தமாக யுக்திவாதக் குழுவுக்கு அறிவிக்க, அங்கே பலத்த சிரிப்பு நிலவியது. அப்புறம் ஒரு பிராமணக் கிழவி, புகையிலைக் கடைக்கு மூக்குத் தூள் வாங்க வந்தவன், எருமை மாட்டைக் கறக்க உட்கார்ந்த ஸ்திரி, கடைத் தெருவில் மாட்டைக் கிடத்தி லாடமடிக்கிறவன், மயிலிறகு எண்ணெய் விற்கிறவன் என்று ஜோசியர் யார் யாரையோ பகல் முழுதும், இப்போது ராத்திரியிலும் நினைத்து அவர்களை நாலடி நடக்க வைப்பதற்குள் அவருடைய கவனம் கலைந்து போகிறது.

ஜானுவாச ஊர்வலம் பிஷாரடி வைத்தியர் வீட்டைக் கடந்து போனபோது அவர் திரும்பவும் அந்தப் பிராமணக் கிழவியை முழுக் கவனத்தோடு நினைக்க, அவள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றாள். அரண்மனைப் பக்கம் நடக்க ஆரம்பித்தபோது வாணவேடிக்கைக் காரன் வேட்டுப் போட, அவள் மூத்தகுடிப் பெண்டுகளே, இப்படி என்னை வாசலுக்கும் உள்ளுக்கும் அலைக்கழிக்கிறது நியாயம்தானா என்று குறைச்சல் பட்டபடி வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்.

கல்யாண வீட்டில் சதுர்க்கச்சேரி நடக்க ஆரம்பித்த சத்தம். சுநாதமாக எழுந்த அந்தச் சலங்கைச் சத்தமும், மிருதங்கச் சத்தமும் யுக்திவாதிக் குழுவை வாவா என்று பிடித்து இழுத்தது.

யுக்தி வாதம் இருக்கட்டும். எங்கேயும் ஓடிவிடாது. நிரம்பின ஸ்தனபாரமும், உருண்ட தோளுமாகப் பெண்கள் நிருத்தமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் தூங்கறேன். நீங்க சாப்பிட்டு வாங்கோ என்றார் ஜோசியர் இன்னொரு குப்பி திரவத்தை பிஷாரடி வைத்தியரிடம் யாசித்தபடி.

அவருக்கு அபின் வாசனை பிடித்துப் போயிருந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts