அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

இரா முருகன்


குத்துவிளக்கும் இன்னொரு கையில் நார்ப்பெட்டியில் ஜோசியர் கொடுத்த யந்திரமுமாகச் சுப்பம்மாள் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்தபோது நட்சத்திரங்கள் இல்லாமல் வானம் இருண்டிருந்தது. சீக்கிரம் மழை வந்துவிடும் என்று சந்தோஷச் சேதி சொல்லிக்கொண்டு ஒரு காற்று செடிகொடிகளின் மேல் குதித்துக் கொண்டு நடந்தது.

விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் சிந்தாமல் சிதறாமல், அதில் முக்கி வைத்த வாழைப்பூத்திரி கீழே விழுந்துவிடாமல் சுப்பம்மாள் ஜாக்கிரதையாக அடிமேல் அடி எடுத்து வந்து கொண்டிருந்தாள்.

எண்ணெய்க் கிண்டியைத் தனியாக எடுத்துப் போய் அப்புறம் வார்த்திருக்கலாம் தான். கையில் தேவதைகளையும் தூக்கிக் கொண்டு போக வேண்டி இருந்ததால் அதைச் செய்யமுடியாமல் போனது.

மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பிரமணிய அய்யர் குரலில் வந்து சொன்னபடிக்கு இப்படித் தேவதைகளை இங்கே மகாயந்திரத்துக்கு முன்னால் விட்டுவிட்டுப் போவது சரியா என்று அவள் மனதில் குழப்பம்.

அவள் தான் என்ன செய்வாள் ? சோழியன் அண்ணாசாமி அய்யங்கான் இந்தோ அந்தோ என்று சுப்பம்மாளிடம் கொடுத்த யந்திரத்து தேவதைகளைக் கரையேற்ற நாளைக் கடத்திக்கொண்டே போய், இப்போ சங்கரன் கல்யாணம் என்று வேஷ்டிக்குப் பின்னால் மண்ணைத் தட்டிக்கொண்டு ஓடியே போய்விட்டான். அங்கே பொண்ணுவீட்டில் நிர்மிக்க இன்னொரு யந்திரம். அதிலே உதிரியான இன்னும் சில தேவதைகள். அதற்காகத் தட்சிணை.

முப்பது முக்கோடி தேவதைகள் இருக்கிற வரைக்கும் ஒவ்வொரு யந்திரத்துக்கும் சிலதைக் கூப்பிட்டுவந்து நிறுத்தி அண்ணாசாமி அய்யங்கார் யந்திரப் பிரதிஷ்டையில் இன்னும் நிறையக் காணி நஞ்சையும் புஞ்சையும் வாங்கிப் போட்டுவிட முடியும். ஆனாலும் அவர் யந்திரம் செய்கிற வேகத்துக்கு, அந்த முப்பது முக்கோடியும் தீர்ந்துபோய் புதிதாகத் தேவதைகளை உற்பத்தி செய்ய நேரிடலாம் என்று பட்டது சுப்பம்மாளுக்கு.

இந்த மாதிரி யோசனை தரிகெட்டு ஓடும் நேரங்களில் பேச்சுக் கொடுக்க வரும் மூத்தகுடிப் பெண்டுகள் இல்லாமல் மனம் வெறிச்சென்று இருந்தது. அது பயத்தையும் ஏற்படுத்தியது அவளுக்கு.

என்னதான் அவளைச் சங்கரனின் புகையிலைக்கடைப் பொம்மை போல் ஆட்டிவைத்து அவர்களின் சந்தோஷத்துக்காகக் களியாக்கி, தூரத்துணியை இடுப்பில் கட்டி வைத்து, வாயில் துடுக்கான பாட்டை, வார்த்தையை எல்லாம் ஏற வைத்துக் கொட்டம் அடித்தாலும் ஒரு பெரிய சிநேகிதக் கூட்டமே இல்லாமல் போனதுபோல் இருந்தது அவர்கள் சுப்பிரமணிய அய்யரோடு புறப்பட்டுப் போனபிறகு.

இப்போது இந்த நார்ப்பெட்டி தேவதைகளும் போய்ட்டு வரேன் என்று கிளம்பி விடுவார்கள். போகிறபோது அவர்களுக்குக் கொடுக்க மஞ்சளும், குங்குமமும் நாலு பூவன் பழமும் நார்ப்பெட்டியிலேயே வைத்துச் சுப்பம்மாள் கொண்டு வந்திருந்தாள். தேவதைகள் ஆனால் என்ன ? அவளை அண்டி வந்த பெண்டுகள் அவர்கள் எல்லோரும்.

நாளை முதல்கொண்டு சுப்பம்மாள் விடிகாலையில் எழுந்து கிணற்றடிக்கு ஓடவேண்டாம். இறைத்து இறைத்துத் தண்ணீர் சேந்தி குளிரில் விறைத்துப்போய் ஸ்நானம் செய்து விட்டுப் பால் வாங்கப் போகவேண்டாம். கிழக்கு நோக்கி யந்திரத்தை நிறுத்தி, வாசல் கதவைப் புருஷர்கள் வந்து நிற்காமல் அடைத்துத் தேவதைகளைக் குளிப்பாட்டி, வஸ்திரம் உடுத்தக் காத்துக்கொண்டு இருந்துவிட்டு அவர்கள் வயிற்றுக்குப் படைக்க வேண்டாம்.

ஜோசியன் சொல்லாமலே நான் இப்படி உங்களை விட்டுட்டுப் போறேனே. சரிதானா ?

சுப்பம்மாள் கேட்டபோது பெட்டிக்குள் தேவதைகள் மெளனமாக இருந்தார்கள். அவர்கள் தூங்கியிருக்கலாம்.

சுப்பம்மாள் நார்ப்பெட்டியை நந்தியாவட்டைச் செடிக்கு அடியில் வைத்தாள். குத்துவிளக்கை மெல்ல மகாயந்திரத்துக்கு முன்னால் வைத்துவிட்டு நார்ப்பெட்டிப் பக்கம் போனாள். எங்கேயோ குழந்தை அழும் சத்தம் மொணமொணவென்று கேட்டது.

நார்ப்பெட்டியில் இருந்து ஓலைக் கொட்டானை எடுத்தபோது அழுகைச் சத்தம் இன்னும் பலமாகக் கேட்டது. பூனைக் குட்டி சத்தமோ என்று தோன்றியது சுப்பம்மாளுக்கு. பிறந்த பூனைக்குட்டி குரலுக்கும் கைக்குழந்தை குரலுக்கும் அதிக வித்தியாசம் இல்லைதான்.

ஓலைக் கொட்டானில் கொஞ்சூண்டு இருந்த அரிசிமாவு காற்றில் சிந்திச் சிதற யந்திரத்துக்கு முன் நாலு இழை கோலம் இழுத்தாள் சுப்பம்மாள். தீபத்தை ஏற்றுகிறபோது வெறுந்தரையில் அதை வைக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

சுப்பம்மா. எப்படி இருக்கேடி பொண்ணே ?

கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிற மாதிரிச் சத்தம். அது முடியும் முன்னால் திரும்பப் பூனனக்குட்டியோ, சிசுவோ அழுகிறது.

பெட்டிக்குள் தேவதைகள் தூங்கியிருக்கவில்லை போலிருக்கிறது. சுப்பம்மாளுக்குக் கண்ணாமூச்சி காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவளை விட்டுவிட்டுத் திரும்ப மனமில்லையோ ?

காற்றில் தீபம் அணைந்துவிடாமல் ஜாக்கிரதையாக நாலு முகமும் ஏற்றி வைத்தாள் சுப்பம்மாள். குத்து விளக்கு வெளிச்சத்தில் சுற்றுப்புறம் ஒரு வினாடி மெளனமாகப் பிரகாசிக்க, அவள் குனிந்து நிலத்தில் நெற்றிபட நமஸ்கரித்தபோது இன்னொரு அலையாக வந்த காற்று விளக்கை அணைத்துப் போனது.

பாழாப் போன காத்து. என்ன கொள்ளையிலே போற அவசரமோ.

சுப்பம்மாள் வைதபடிக்கு நார்ப்பெட்டியில் இருந்து அண்ணாசாமி அய்யங்கார் கொடுத்த செப்புத்தகட்டை வெளியே எடுத்தாள்.

காத்தை ஏன் பழிக்கறே சுப்பம்மா ? அதது அததுக்கு விதிச்ச காரியத்தைத் தானே பாத்துண்டு இருக்கு ?

பெண் குரல் ஸ்பஷ்டமாகக் கேட்டது இப்போது. சுப்பம்மாள் அதை நொடியில் அடையாளம் கண்டு கொண்டாள்.

சாமிநாதன் கட்டிலுக்குக் கூப்பிட்டுப் போகம் கொண்டாடிய துர்மரணப் பெண்டு.

அவளுக்கு வெடவெடவென்று தேகம் நடுங்கியது. அய்யங்கார் சொன்னபடிக்குக் கேட்காமல் தேவதைகளை இப்படிக் கழித்துக்கட்ட வந்தது தப்புத்தான். இந்தப் பழிகாரி திரும்பவும் ஆட்டிவைக்க இறங்கி விட்டாள்.

ஏண்டி என் வதையை வாங்கறே ? எல்லார் வயத்தெரிச்சலையும் கொட்டிண்டது போறாதா ? என் கொழந்தை சாமாவையும் கூட்டிண்டுட்டே உன்னோடேயே வச்சுண்டு கூத்தடிக்கறதுக்கு. இப்போ என்ன எழவுக்கு வந்து நிக்கறே திரும்பவும், சொல்லுடி நாறப் பொணமே.

சுப்பம்மா, கோபப்படாதே. நான் உன்னைப் படுத்த வரலே. அந்தத் தேவிடியாள் புத்ரன் ஜோசியன் யந்திரத்துலே ஏத்தி அனுப்பிச்சுட்டான் என்னை. இனிமேல்கொண்டு உன்கிட்டேயும் வரமுடியாது. சாமா கிட்டேயும் போகமுடியாது. நான் கர்ப்பத்துலே இருக்கேன்.

சுப்பம்மா, அவளோட அப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம். எங்களை வெளியே விடு. மகாயந்திரத்துலே எங்க சிநேகிதிகள் எல்லாம் நிறையப்பேர் இருக்கா. இந்தக் கட்டேலே போற அய்யங்கான் எங்களை மட்டும் இங்கே அடைச்சுத் தொலச்சிருக்கானே. அவன் நாசமாப் போக. எடுத்து விடுடி கிழடி. நாங்களும் எங்க ஜனத்தோடேயே போய்க்கறோம்.

நார்ப்பெட்டியிலிருந்து தேவதைகள் சத்தம் போட்டுச் சுப்பம்மாளைக் கூப்பிட்டார்கள்.

அவாளை எடுத்து அனுப்பிட்டு வா சுப்பம்மா. சாவகாசமாப் பேசணும். கர்ப்பத்துலே மூச்சு முட்டறது. சிநேகாம்பா கர்ப்ப ஸ்திரீன்னு கூடப் பாக்காம இந்தப் பொசை கெட்ட கிட்டாவய்யன் சமயம் கிடச்சபோதெல்லாம் கிரீடை பண்ண வந்துடறான்.

சுப்பம்மாளுக்கு ஒரே கிறக்கமாக இருந்தது. நார்ப்பெட்டியில் இருந்த யந்திரத்தை எடுத்து குத்துவிளக்கில் சாய்த்து வைத்தாள். திரும்ப விளக்கை ஏற்றினாள். இப்போது காற்று மட்டுப்பட்டு அது நிதானமாக எரிந்தது.

தேவதைகள் ஏகக் கோலாகலமாகக் கிளம்ப, சுப்பம்மா, அவாளுக்குக் கொடுக்க மஞ்சள், குங்குமம் கொண்டு வந்தியேடி, கொடுத்து அனுப்பி வை என்றாள் துர்மரணப் பெண்டு.

சுப்பம்மாள் நார்ப்பெட்டியில் இருந்து எடுத்த குங்குமத்தையும் மஞ்சளையும் அவள் முகத்திலேயே தீற்றி விட்டு, வாழைப்பழத்தைக் கூழாகப் பிசைந்து அவள் தலைமுடியில் தேய்த்து விட்டுத் தேவதைகள் சிரித்துக்கொண்டு மகாயந்திரத்தில் ஏறிக்கொள்ள ஓடினார்கள்.

சுப்பம்மா இதுவும் நன்னாத்தான் இருக்கு பார்க்க.

சாமாவோடு கிடந்தவள் சொல்லி முடிக்குமுன்னால் திரும்பக் குழந்தைச் சத்தம்.

தலையில் அப்பிய பழக்கூழைப் புடவை முந்தானையில் துடைத்துக்கொண்ட சுப்பம்மாள் யந்திரத்தில் இருந்த தேவதைகளையும், அங்கே ஏற்கனவே இருந்த தேவதைகளையும் சேர்த்துக் கும்பிட்டாள்.

எல்லாரையும் நன்னா இருக்கப் பண்ணுங்கோடியம்மா.

நீ ஏன் கவலைப்படறே சுப்பம்மா ? எல்லோரும் நன்னாத்தான் இருப்பா. நீயும் நானும் எப்படி இருந்தாலும்.

திரும்ப அந்தப் பெண்தான்.

அவள் குரல் இப்போது சுப்பம்மாளுக்கு எந்தப் பயத்தையும் உண்டுபண்ணவில்லை. அவள் உபத்திரவம் கொடுக்க வரவில்லை. சும்மா வார்த்தை சொல்லிப்போக வந்திருக்கிறாள். அதுவும் யாரோ சிநேகாம்பாள் கர்ப்பத்திலிருந்து. அது யார் கிட்டாவய்யன் ? கேட்ட பெயர் மாதிரி இருக்கே ?

அதாண்டி, சங்கரன் பாணிக்ரஹணம் பண்ணிக்கப்போற பகவதிக்குட்டியோட தமையன்.

கொஞ்சம் போல் பல்வரிசை நீண்ட, கீசுகீசென்று பேசும் சிநேகாம்பாளையும், அவள் பர்த்தா கிட்டாவய்யனையும் சுப்பம்மாளுக்கு நினைவு வந்தது.

ஆக, துர்மரணப் பெண்டு அலைந்து திரிந்ததெல்லாம் முடிந்து இருக்கிறது. சோழியன் அண்ணாசாமி அய்யங்கார் உத்தேசித்தோ அல்லாமலோ நடந்துபோனதெல்லாம் நல்லதுக்குத்தான்.

இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் இதெல்லாம் விட்டுப் போயிடும். ஆம்பளைக் குழந்தையாப் பொறக்கப் போறேன். கையிலேயும் கால்லேயும் ஒவ்வொரு விரல் அதிகம். அதுவும்தான் வித்யாசம். ஆலப்பாட்டுக் கிழவன் வெடிவழிபாட்டுக்காரன் மேலே சாடி விழாம இருந்தா எனக்கும் அதிகமா விரல் இருந்திருக்காது. என்ன பண்ண ? நானா எல்லாத்தையும் தீர்மானிக்கறேன் ? இல்லே நீயா ?

சுப்பம்மாளுக்கு இதெல்லாம் புரியாத சமாச்சாரம். யாரோ எங்கேயோ எத்தனை விரலோடோ, கையோடோ, காலோடோ பிறந்துவிட்டுப் போகட்டும். அவள் திரும்பப் போய்த் தூங்க வேண்டும். அயர்ச்சியும் தளர்ச்சியுமாக அடித்துப் போடுகிறதுபோல் உறக்கம் வருகிறது.

வேதத்துலே ஏறிடுவோம் எல்லோருமா எங்காத்துலே. அது அடுத்த விசேஷம்.

அந்தப் பெண் சொன்னபோது என்ன விசேஷம் அதில் என்று ஏதும் தெரியாமல் சும்மாக் கேட்டுவைத்துக் கொண்டாள் சுப்பம்மாள்.

சுப்பம்மா, உங்காத்துக்காரன்கூட வரப்போறான் தெரியுமோ ?

அதுக்கென்ன ?

சுப்பம்மா சுவாரசியமில்லாமல் கேட்டாள். அவன் வந்தாலும் வராவிட்டாலும் இனிமேற்கொண்டு ஏதும் ஆகப்போவதில்லை அவளுக்கு.

எல்லாரும் சன்னியாசம் வாங்கிண்டு ஹிமாலயம் போனா, இந்தப் பிரம்மஹத்தி குண்டூர்ப்பக்கம் மிளகாய்த் தோட்டத்துக்கு நேர்க்கக் குதம் எரிய ஓலைக்குடிசை போட்டு கொஞ்ச நாள் நியம நிஷ்டை, அப்புறம் தெலுங்கச்சியோட குடித்தனம், கும்மாளம்னு இருந்து திரும்ப சந்நியாசியாகி இங்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணிண்டு இருக்கான்.

செருப்பாலே அடி படவா. இனிமே இங்கே என்ன இருக்குன்னு வரானாம் ?

சுப்பம்மாள் இரைந்தாள்.

அவன் வந்து இங்கே உசிரை விட்டா நீ நித்ய சுமங்கலியா இல்லாமப் போயிடுவேடா சுப்பம்மா. அதான் மூத்தகுடிப் பெண்டுகள் எல்லாம் பம்மிப் பம்மி உங்கிட்டேச் சொல்லினது. அப்புறம் அவா யார்மேலே ஏறிக் கூத்தடிக்கறது ? புகையிலைக்கடை அய்யன் எல்லாம் அவாளுக்கு எத்தனை நாள் சரிப்பட்டு வரும் சொல்லு ? ஏற்கனவே அவனுக்குப் பொண்ணு குரல்லே பேசியும் பாடியும் தொண்டை கட்டிப் போச்சு.

யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும். நீ கர்ப்பத்திலே குழந்தையா லட்சணமாப் படு. எதெது எப்போ நடக்கணுமோ அதது அப்பப்போ நடக்கட்டும்.

சுப்பம்மாள் காலி நார்க்கூடையோடு எழுந்தாள். அவளுக்கு யார்மேல் என்றில்லாமல் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

இந்த மூத்தகுடிப் பெண்டுகள் லேசுப்பட்டவா இல்லேடி கொழந்தே சுப்பம்மா. அந்தத் தெலுங்கச்சியைக் கிளப்பிவிட்டு அவனை அங்கேயே இழுத்துப் பிடிச்சு வச்சுக்கப் பாக்கிறா எல்லாரும். அப்படியே அவன் போனா, உனக்கு விஷயம் வந்து சேராம எப்பவும் நித்ய சுமங்கலியாவே இருக்கலாம் பாரு.

எதுக்கு இவாளுக்காகத் தூரத்துணியை இடுக்கிக்கவா ? இல்லே மாரைக் குலுக்கி பிருஷ்டத்தை ஆட்டி நடந்து இவா சிரிச்சுச் சீலம் கொழிக்கவா ?

சுப்பம்மா நடக்க ஆரம்பித்தபோது, மகா யந்திரத்தில் தேவதைகள் காது கூச வார்த்தை சொல்லிச் சண்டை பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த யந்திரம் தடாலென்று ஒருபக்கம் சரிந்து விழுந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts