திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஐந்தாம் பகுதி – தொடரச்சி

—-

பார்க்க வயோதிகர் என்றாலும் பெரியவரிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. வெயிலின் கடுமைக்கு குடை விரித்து வந்தவர் இத்தனை அமைதியும் உற்சாகமும் பட, மனம் விரியப் பேசியது அழகாய், அவனுக்கு வேண்டியதாய் இருந்தது.

அங்கே பலவித வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்… அச்சு இயந்திரம் வெள்ளையைக் கருப்பாக்கி அச்சு-எச்சமிட்ட முத்தமிட்ட காகிதங்களை வெளியே எறியும். தங்கள் குழந்தைகளை யானையில் ஏற்றி அழகு பார்க்கிறதைப் போன்றதே அது.

எழுத்து என்பதே மானுடத்தின் தினவு… அல்லது கனவு… என நினைத்துக் கொண்டான் தனு.

‘சார் என்ன சாப்பிடறீங்க காபியா டாயா ? ‘ என்கிறான். புதிதாய் வரும் வாடிக்கையாளர் தரம் பார்த்து சிறு உபசரிப்புகளுக்கு முதலாளியின் முன்-அனுமதி பெற்றிருந்தான். அப்படியே தானும் ஒரு பானம் அருந்திக் கொள்ளலாம்!

‘நான் சாப்பிட அல்ல- சாப்பிடக் கொடுக்க வந்தவன் அப்பா ‘ என்கிறார் அவர்.

‘புரியவில்லை… ‘

‘நான் எழுத்தாளன்… ‘

‘நல்லது. வாழ்த்துக்கள் சார் ‘ என்றான் தனு. சட்டென்று முன்நோக்கிச் சரிந்து கைநீட்டி அவரோடு கைகுலுக்கினான். அவரைச் சந்திக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எப்போதாவது இப்படி எழுத்தாளர்களும் அச்சகத்துக்கு வருகிறார்கள். வெறும் பிழைதிருத்தும் பிழைப்பாளிகளையும், பதிப்பாள ஓநாய்களையும் பார்ப்பதைவிட எழுத்தாளர்களோடு உரையாடுவது உற்சாகமான அனுபவம்தான்.

காகிதக்குப்பை நடுவே… கரிக்காட்டில் வைரம் கிடைத்தாற்போல!

‘எழுத்தாளர்கள்… அறிவுப்பசி தீர்க்கும் அமுதசுரபிகள் ‘ என்கிறான் சற்று அலட்டலாய். பகிரப் பகிர உள்நிறையும் அட்சய பாத்திரங்கள் அவர்கள்.

‘சரி ‘ என அவர் புன்னகைத்தார். ‘தம்பி நீயும் எழுத்தாளனா ? ‘

‘அத்தனை தைரியமாய் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள மாட்டேன். நான் முயற்சித்தேன். அவற்றை வெளியிடத் தருமுன்… சில நல்ல நுால்களைப் படித்துத்தொலைத்து விட்டேன்! ‘

‘படித்து… தொலைத்துவிட்டாய் அல்லவா… பின் என்ன ? ‘ என்று பெரியவர் புன்னகைக்கிறார்.

‘மேலும் உன்னைச் சீராக வடிவமைத்துக் கொள்ள அவை கட்டாயம் உதவும் அல்லவா ? எழுதவும் வெளியிடவும் நீ அவசரப் படாததை நான் வரவேற்கிறேன்… ‘

‘சக எழுத்தாளராக… உங்களுக்குப் போட்டியாக வராததில் நிம்மதியாகப் பேசுகிறாற் போலிருக்கிறது உங்கள் பேச்சு… ‘ எனக் கேலி பேசினான் தனு.

‘ஆ… அப்படியல்ல. எழுத்தின் அற்புதமான பகுதி அதுதான்… இங்கே யாரும்… எந்த எழுத்தாளனும் அடுத்த எழுத்தாளனுக்குப் போட்டி அல்ல. அவரவர் அனுபவம்… அவரவர் எழுத்துக்கள்.. என பரந்து விரிந்த தளம் அது. உலகம் கட்டுப்பாடற்ற காட்டு மரம். அதன் வேறு பகுதிகளில் கிளைகளில் நீங்கள் கனி பறிக்கிறவர்களாக அமைகிறீர்கள்… ‘

‘தேநீர் ஆறுகிறது. எடுத்துக் கொள்ளுங்கள்… ஆறிய தேநீர் கழுநீர் போலிருக்கும். சூடே அதன் சுவை… ‘ என்கிறான் புன்னகையுடன். எழுத்தாளர்களிடம் சகஜமாக உரையாடுகையில் வயது வித்தியாசம் தெரிகிறதேயில்லை.

இள வயது முதலே தானே தன்னை வளர்த்துக் கொண்ட அளவில்… சுற்றிலும் கவனவாட்டத்தில் அவதானிப்பது இயல்பான விஷயமாய் அவன் அறிவுப்பதிவு இருந்தது. எக்காலத்திலும் துயர் உதறித் துள்ளியெழ அவனுக்கு முடிந்தது. வாழ்க்கை அபத்தங்கள் அல்ல. சில ஆயத்தங்கள். தன்னைச் சுமந்து ஒவ்வொருவனும் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதன் பிரத்யேக அர்த்தங்களை அவரவர் வழிப்படி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது…

வாழ்க்கை தன்னளவில் சற்று அகலவாக்கில்… பரந்துபட்ட அளவில் புரிந்துகொள்ளப் பட வேண்டிய விஷயம். தன் சுற்றுச் சூழல் அளவில் அதைச் சிமிழுக்குள் உள்வாங்கிக் கொண்டு கலவரப்பட அவன் தயாராய் இல்லை.

மனம் என்பதே இயற்கையின் விதை. உள்ளுறங்கிக் கொண்டே இருப்பதாய்த் தோற்றம் காட்டினாலும் பெரும் விருட்சங்களை அது ஒளித்து வைத்திருக்கிறது. அதில் ஏறிக் கனிபறிக்க வேண்டியது நம் வேலை. விதைகளை வளர விட வேண்டும். நம் வேலை அதுதான்!

நீ வாழ விரும்புகிற வாழ்க்கை நோக்கி நகர்வது நம் பொறுப்பாகிறது. நதிவளைந்து… நில எல்லைகளை அனுசரித்து… ஆனால் தன் பயணத்தைத் தொடர்கிறது அல்லவா ? நான் மானுடத்து நதி.

தனு எழுத ஆசை கண்டவன். எப்படியோ அது அவனில் சிறு குறுகுறுப்பாய் தன் முதல் விதையிலையை வெளியே நீட்டித் தளிர் அசைத்தது. ஆ… ஒய்வு கிடைத்த போதெல்லாம் அவன் உற்ற துணையெனச் சரணடைந்த சிறு நுாலகம். விதவிதமான சுவாரஸ்யமான ஆழமான சிந்தனைகளைக் கொண்ட வாசிப்புத் தலம். வாசனைத் தைலம்…

பல்வேறு ருசிகொண்ட நுால்களை அடக்கிக் கிடந்தது நுாலகம். அறிவுப் பொருட்காட்சி போல. அறிவுமகா சமுத்திரம்.

புத்தகங்கள்… அறிவின் எக்ஸ்-ரே படங்கள் அல்லவா ?

‘தேநீர் எனக்குத் தேனியின் சுறுசுறுப்பைத் தருகிறது… ‘ என்றார் பெரியவர் அலங்காரமாய். ‘நன்றி ‘ என்கிறார் சிறிது தாமதித்து.

‘சார் சொல்-அலங்காரப் பிரியரோ ? ‘ என்றான் தனு.

‘அப்படியல்ல… சில சமயம் அதுவும் வேண்டித்தான் இருக்கிறது… வாசகனை சிந்தனை இறுக்கத்தில் இருந்து இறக்க, சற்று கட்டுத் தளர்த்த… ‘ என்றவர் புன்னகைத்தார். ‘விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் பெல்ட் அணிகிறோம்… பிறகு நெகிழ விட்டுக் கொள்ளலாம்! ‘ அவர் குரலில் குறும்பு கொப்பளிக்கிறது.

இந்த எழுத்தாளர்கள் பேச ஆள் கிடைத்தால்… அதுகூட அல்ல- கேட்க… புரிந்துகொள்கிற அளவில் சரியான நபர் கிடைத்தால் எத்தனை உற்சாகம் பெற்று விடுகிறார்கள்.

‘இத்தனை நம்பிக்கைப் படவும், சுவைபடவும் பேசுகிற நீங்கள் பக்திப் புத்தகம் எழுதுகிறவர் என அறிமுகம் ஆகிறீர்கள்… ஆச்சரியம் ‘ என்றவன், சற்றே தயங்கிய துணிச்சலுடன் ‘சார் துட்டுக்கு மண் சுமக்கிறவரோ ? ‘ எனக் கேலி செய்கிறான்.

‘உனக்கு அரவிந்தர் பற்றியும் அன்னை பற்றியும் தெரியவில்லையே… வருத்தமாய் இருக்கிறது ‘ என்றார் பெரியவர்.

அவர் முகத்தைப் பார்த்தான் அவன். சட்டென அவரது முகத்தின் குழந்தைத்தனமான வருத்தம்… இருள்சூழல் அவனைத் தொட்டது. அவன் அவரைக் கையழுத்தினான்.

‘நல்லது- நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ‘ என்றான்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts