நாகரத்தினம் கிருஷ்ணா
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை……. குயில்பாட்டு – பாரதியார்.
கிழக்கே வங்காள விரிகுடாவிற்கு மேலே அக்கினிக்கோளமாய்ச் சிவந்திருந்த சூரியன். அதனைச்சுற்றி கும்மட்டியிலிட்ட வெள்ளியாய் மேகம். அடிவயிற்றில் சூரியனைச் சுமக்கின்ற சுகத்தில் வெளுத்திருக்கும் வானம். அவ்வழகில் ஈர்க்கப்பட்டுத் தலை உயர்த்திப் பின்னர் நீலத்திரையில் முகம் மறைக்கும் அலைகள். அவற்றினூடே கிழக்குத் திசையில் தலையை உயர்த்தி நீந்திச் செல்லும் படகுகள். அதிகாலைக்கு ஆரத்தி எடுக்கும் கடலோர நுரையலைகள். கடலையொட்டி வரிசையாக நிறுத்தபட்டிருந்த பீப்பாய்களை நிரப்ப, செம்படவப் பெண்கள் தள்ளியிருந்த கிணறுகளிலிருந்து சும்மாடுகளில் பருத்த மார்புகள் அசைய குடங்களில் நீர்சுமந்து ஊற்றிக்கொண்டிருக்க, அவற்றில் தலையை நனைத்து, பின் சிலிர்த்து எழுந்தோடும் நீர்க்காகங்கள். தைமாத சாம்பல்வண்ணமேகங்கள், வெண்பனிச்சாரல். கோட்டைக்குள்ளிருந்து ஒலிக்கும் தேவாலயமணி, வேதபுரீஸ்வராலயத்தில் ஓதுவார் பாடும் தேவாரம், வரதராசபெருமாள் ஆலயத்திலொலிக்கும் ஆழ்வார் திருமொழி, வழுதாவூர்ச்சாலையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளில் இடையிடையேயிருக்கின்ற ஆலமரங்களிலிருந்தும், இலவமரங்களிலிருந்தும் வைகறைக் குரலெழுப்பும் காக்கைகள், குயில்கள், வெளவால்கள், தூக்கணாங்குருவிகள் – அடடா..புதுச்சேரி விழித்துக் கொண்டது.
புதுச்சேரித் துறைமுகத்தில் வந்து சேர்ந்திருந்த ‘லெ பொந்திஷேரி ‘ என்கின்ற வணிகக் கப்பலும், பாதுகாப்பாக வந்திருந்த போர்க்கப்பல்களான ‘கொர்சேர் ‘ கப்பல்களும் கரையிலிருந்து பாதுகாப்பாக மிகவும் விலகி நங்கூரமிட்டிருந்தன. அப்படி நிற்கக் காரணமிருந்தது. அக்டோபரிலிருந்து ஜனவவரிவரை சில நேரங்களில் பிப்ரவரியிற்கூட வீசுகின்ற புயற்காற்றுக்குப் பயந்தாகவேண்டும். ‘லெ பொந்திஷேரி ‘யிலிருந்து பொதிகள் இறக்கபட்டுச் சுற்றிலும் சூழ்ந்துநின்ற ஷெலேங்கு(Chelingue)படகுகளில் சுறுசுறுப்பாக ஏற்றப்பட்டன. படகுகள் செலுத்தும் செம்படவர்களின் குரலும், பொருட்களை இறக்குந் தினக் கூலிகளின் குரல்களும் கோட்டைக்குள்ளிருந்த கிடங்குகள்வரை தொடர்ந்தன.
கடற்கரைக்கு நேர் எதிரே, ஆபத்தைத் தவிர்க்கின்றதோ இல்லையோ அழகாகப் பிரான்சிலுள்ள ‘வொபான் ‘ கோட்டைகளின் சாயலில் வடிவமைக்கபட்டிருந்த சென் – லூயி(Saint-Louis)க் கோட்டை. ஐந்து கொத்தளங்களும் இரண்டு பெரிய கதவுகளுடன்கூடிய வாயில்களும் இருந்தன. முதல்வாயில் பிரதானவாயில். குவர்னர், அவரது குடும்பத்தினர், பிரஞ்சு இந்திய குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள், துபாஷ், மதகுருமார், அரசின் முக்கிய விருந்தினர்களென அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களின் உபயோகத்திலிருந்த வாயில். இதரதரப்பினருக்கும், அடிக்கடி சண்டைபிடித்துக்கொண்டு பிரெஞ்சு நிர்வாகத்திடம் தஞ்சம் புகும் துக்கடா இராசாக்களுக்கும், நிலவில்லாப்பின்னிரவுகளில் மூடிய பல்லக்குகளில் தாசிகள் வந்துபோகவும் உபயோகத்திலிருந்தது, இரண்டம்ாவாயில் எனவழைக்கபட்ட டெல்பின் வாயில். கோட்டைக்குள்ளே குவர்னர் மாளிகை. அதனையடுத்து சொல்தாக்களின் (படை வீரர்களின்) ‘கசெர்ன் ‘ எனவழைக்கப்படும் குடியிருப்புகள். ‘கப்புசென் ‘ தேவாலயம், வணிகவளாகமென வெள்ளையர்களுக்கான இதயப்பகுதி. இப்பகுதிகளையொட்டி வடக்குத் தெற்காகப் பரவியிருந்த பறங்கியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘வெள்ளையர் குடியிருப்பு ‘ (La Ville blanche) அதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கான ‘கறுப்பர் குடியிருப்பு ‘(La Ville noire). இவ்விரு பகுதிகளையும் பாதுகாக்கின்றவகையில் சுமார் ஏழு மீட்டர் உயரத்திற்குப் பலமான சுவர்கள். இச்சுவர்களுக்கிடையில் சிப்பாய்களின் பாதுகாப்புடன் கூடிய மூன்று சிறிய வாயில்கள். அவை முறையே வில்லியனூர், வழுதாவூர், மதராஸ் வாயில்கள் எனப்பட்டன. கோட்டையை ஒட்டி குவர்னர் துய்மா ஏற்படுத்தியிருந்த அகழியை, அவருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த குவர்னர் துய்ப்ளெக்ஸ் முடித்திருந்தார்.
பெர்னார் தங்கியிருந்த குடியிருப்பு, பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் புதுச்சேரிப் பிரிவின் துணை நிர்வாகி வேன்சான் குடியிருப்புக்கருகே, ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பறங்கியர்க்கான குடியிருப்பைப்போலவே முகப்புடனும், உயர்ந்த தூண்களில் நிறுத்தப்பட்டு, கீழைநாடுகளுக்கேயுரிய செடிகள், கொடிகள், மரங்களின் அடர்த்தியில் – சூழலில், சற்றே ஒளிந்து, கடலைப்பார்த்த வராண்டாவுடன் அமைந்த குடியிருப்பு.. உயர்ந்த தளம். எப்போதாவது, குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பாராதவிதமாக வீசுகின்ற மண்காற்றினைத் தடுப்பதற்காக தொங்கவிடப்பட்ட மிகவும் தடித்த வெட்டிவேராலான திரைகள். குளிர்காலமென்பதால் அவை மேலேசுருட்டப்பட்டு உத்தரத்தில் கட்டபட்டிருந்தன. நடுக்கூடத்தில் இருக்கைகளுக்குமத்தியில் ஒரு பங்கா. அதன் நீண்டகயிறு கிழக்கேயிருந்த சன்னலையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. கீழை நாடுகளின் பட்டுவிரிப்புகள், புதுச்சேரியில் தீட்டபட்ட வண்ணத் துவாலைகள், சீன, பாரசீக ஓவியங்களென என நம்மை ஆச்சரியமூட்டும் அலங்காரம். இதுபோதாதென்று, பித்தளைப் பூண்களும் – முகப்புகளும் கொண்ட தேக்கு, மஹோகனி, கருவாலி மரங்களாலான, தந்தங்கள் அல்லது முத்துச் சிப்பிகள் பதிக்கப்பட்ட, மேசை நாற்காலிகள், அலமாரிகள், நிலைபெட்டிகள். தேவையான இடங்களில் காகித்தாலான சீனப் பரவான்கள். மொத்தத்தில் நேர்த்தியும் வசதியும் நெருங்கியிருந்த குடியிருப்பு.
இவனது குடியிருப்பைக் கவனித்துக் கொள்வதற்காக இரண்டு சிறுவர்களை குப்பன்- சுப்பன் பெயர்களில் பக்கத்துக் குடியிருப்பிலிருக்கும் நிர்வாகி அனுப்பியிருந்தார். அவர்களிருவரும் புதுச்சேரிக்குத் தென்மேற்கேயிருந்த பாகூரிலிருந்து பஞ்சகாலங்களில் விலைக்கு வாங்கப் பட்டிருந்த அடிமைககள். இது தவிர அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த கீழ்சாதித் தமிழர்கள் இருவரும் பணியிலிருந்தனர். பறங்கியர்களுக்கு இஇப்படியான தமிழர்களை வைத்துக் கொள்வதிலொரு செளகரியமிருந்தது. மற்றவர்களென்றால் அடிக்கடி தலையைச் சொறிகின்ற ரகம்.. தோட்ட வேலை செய்பவன், தோட்டி வேலையை மறுப்பான், துணிதுவைப்பன் முடி வெட்டினால் தன் சாதிக்கு அவமானமென்பான். இவர்கள் முகம்ஞ்சுளிக்காமல் எல்லா வேலைகளையும் செய்தார்கள். இவர்களைத் தவிர, இதர வெள்ளையர்களின் குடியிருப்புக்களையொப்ப தமிழர்களுக்கும், பறங்கியருகுமிடையில் இருந்துகொண்டு ஊழியர்கைளை வேலைவாங்கவும், எஜமான் பறங்கியனின் இந்தியச் சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கவும், மொழி பெயர்க்கவும் இங்கேயும்மொரு ‘துபாஷ் ‘ (Dubash or Doubachi பெயர் -பலராம் பிள்ளை.
துபாஷ் பலராம்பிள்ளை வெளியே அதட்டிக் கொண்டிருந்தார்.. அவர் குரல்கேட்டு பெர்னார் விழித்துக் கொண்டான். கப்பற் பயணக் களைப்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. இஇலவம் பஞ்சினாலான மெத்தை, பருத்தி விரிப்புகள் அவனைக் கூடுதலாகக் கண்ணயருமாறு வற்புறுத்தின. பின்னிரவுக் கனவில் தெய்வானை. அவள் நிலவு முகமும், நிலம் நோக்கிய பார்வையும், இருளொத்த கூந்தலும் இரண்டாய்ப் பிளந்த மாதுளை அதரங்களும், உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் அவனைத் தேடிவருபவை. அவன் உயிரிற் கலந்த மூச்சுஅவை. அம்மூச்சுக்காக, இவனது உயிர், ஆற்றவேண்டிய காரியங்கள் வரிசையாகவுள்ளன. கட்டிலிருந்து எழுந்து சப்பாத்தணிந்து, கிழக்கேவிருந்த பெரிய சன்னலையொட்டி நின்றான். திரையினை நீக்கியதும் கண்கள் முழுக்க நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலைகளால் விடுக்கும் அழைப்பு. அதில் இறங்கி வா! எங்கள் தேவதை தெய்வானையிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்கின்ற உறுதிப்பாடு. ‘நிலம் கடந்து, நீரிறங்கி தெய்வானையைக் கைபிடித்து வானமேறி யுகங்கள்தோறும் ஜீவிக்கவேண்டும் ‘ இயலுமா ? ‘இயேசுவே ‘ முணுமுணுத்தான்.
‘ஐயா.. கபே….. ‘
சீனப் பீங்கான் குவளையில் பால் கலவாத கறுப்பு காப்பியும், கிண்ணத்தில் சர்க்கரையுடனுமான தட்டத்தினைப் பணிப்பெண் தாழ்த்திப் பிடித்தாள். பெர்னார் காப்பியுடனான குவளையையும், ஒரு கரண்டியும் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு அவளை அனுப்பிவைத்தான். வணங்கியவாறு பின்சென்றவளிடம்
‘ பலராம்பிள்ளையை உள்ளே வரச்சொல் ‘ என்றான்.
இவன் குரலுக்காகவே காத்திருந்ததுபோலப் பலராம்பிள்ளை உள்ளே ஒடிவந்தார். குனிந்து வணங்கினார். குனிந்ததால் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்தது. அதனை எடுத்து இருகைகளிலும் பிடித்துக்கொண்டு மீண்டும் பணிவாகக் குரலைத் தாழ்த்திப் பிரஞ்சில் கேட்டார்.
‘ ஏதாவது காரியம் ஆகவேண்டுங்களா ‘
‘மிஸியே பல்ராம் புள்ளே. உடனடியாக நான்செய்யவேண்டியது, புதுச்சேரி குவர்னரைச் சந்தித்து, பிரஞ்சுத்தீவின் குவர்னரிடமிருந்து கொண்டுவந்துள்ள கடிதத்தைச் சேர்ப்பிக்கவேண்டும். பிறகு மேன்மைமிகு புதுச்சேரி குவர்னர் வற்புறுத்தினால் அவருடன் மதிய உணவு. பயணக் களைப்பிலிருந்து நான் முழுவதுமாக விடுபடவில்லையென்பதால்.அதன்பிறகு கொஞ்சம் ஓய்வு.. பிற்பகல், புதுச்சேரியைச் சுற்றிப்பார்த்துவரலாமென்கிற எண்ணம்.. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்தது. இது தவிர உடனடியாக எனக்கு இரண்டு காரியங்கள் ஆகவேண்டும். முதலாவதாக, புதுச்சேரியிலிருக்குவரை நம்பகமான இளைஞன் ஒருவன் துணைக்கு வேண்டும். இரண்டாவதாக ஒரு நல்ல அராபியக் குதிரையொன்று எனது உபயோகத்திற்காக புதுச்சேரி நிருவாகத்திடம் கேட்கப்படவேண்டும்.. ‘
‘பிரான்சுவா துரை அனுப்பியதாகக் கூறிக்கொண்டு காலையிலிருந்து உங்களுக்காக தேவராசன் என்கின்ற சிப்பாய் ஒருவன் காத்திருக்கின்றான் பிரபு!.. ‘
‘மிஸியே பலராம் புள்ளே.. நாமிருவரும் தனித்திருக்கும்போது நீங்கள் என்னை பெர்னார் என்றே அழைக்கலாம். நான் வயதில் சிறியவன் ‘
‘ இல்லை துரை.. என்னவிருந்தாலும் நாங்கள் உங்களை அண்டிப் பிழைக்கின்றவர்கள். ‘
‘வேண்டாம் புள்ளே எனக்கந்தச் செயற்கை மரியாதைகளில் விருப்பமில்லை. வேண்டாமென்றால் வேண்டாம். அப்படி அழைப்பதுதான் விருப்பமென்றால், நீங்கள் வேறுயாரிடமாவது துபாஷாகவிருக்கலாம் ‘
‘ஐயா..! ‘
‘ சரி.. சரி இனி அப்படியென்னை அழைக்கமாட்டார்களென்றே நம்புகிறேன். நான் சொன்னவற்றை செய்யுங்கள் ‘
‘பிரான்சுவா துரை அனுப்பிய தேவராசன்பற்றித் தங்களிடம் விண்ணப்பித்தேனே ‘
‘மன்னிக்கவும். அவனை நேற்றே வரவேண்டாமென்று சொல்லியிருந்தேனே. ஏதேனும் காரணங்கள் எடுத்துரைத்து அவனைப் பக்குவமாக அனுப்பிவிடுங்கள். எனக்கு வேறொரு நம்பகமான ஆள் வேண்டும். ‘
‘அப்படியே! தங்கள் மனசுபோல நடக்கிறேன். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குவர்னர் சமூகம் செல்லலாம். நான் வெளியே காத்திருக்கிறேன். ‘ மீண்டும் துபாஷ் பல்ராம்பிள்ளை பணிவாகத் தனதுப் பதிலினைத் தெரிவித்தார்.
‘பல்லக்கு வேண்டாம்.! இங்கிருந்து குவர்னர் மாளிகைக்குச் செல்வதற்குப் பல்லக்கு எதற்கு ? நடந்தே போகலாம்.. நீங்கள் இங்கேயே இருந்து நான் சொன்ன மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள். முத்தியால்பேட்டைவரை சென்று வேலாயுதமுதலியார் என்பவர் பற்றிய முழுத் தகவல்களை அறிந்துவாருங்கள். இது ரகசியமாக இருக்கட்டும். மாலை நாம் இருவரும், இரவு உணவிற்குப் பிறகு முழுவதுமாக பேசுவோம். ‘
‘ அவ்வாறே ஆகட்டும் மிஸியே ‘
‘இல்லை, அப்படி இல்லை பெர்னார் எனவழையுங்கள் ‘
‘ அவ்வாறே ஆகட்டும் பெர்னார் ‘ தயங்கியவாறே கூறிவிட்டுச் சென்ற பலராாம் பிள்ளையை நினைத்துப் பெர்னாருக்குச் சிரிப்புவந்தது.
காலை பதினோருமணிக்கு, பெர்னார் குவர்னர் மாளிகையை அடைந்தபோது, குவர்னர் துய்ப்ளெக்ஸ், மதாம் ழான் அல்பெர்த் துய்ப்ளெக்ஸ் பொறியியல் வல்லுனர் பராதீ, குவர்னருக்கு வேண்டப்பட்டவனும் சீனா, பிலிப்பைன்ஸ் வணிகக்கப்பல்களோடு பயணிப்பவனுமான பிரான்சுவா கார்வாலே, பெத்ரோ கனகராயமுதலியார், மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகிகள் வட்டமாகக் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்து மதுவருந்திகொண்டிருந்தனர். முதலியாரைத்தவிர அனைவரது கைகளிலும் மதுக் கோப்பைகளிருந்தன. துணைக்குப் பொரித்த மீன்கள், முதலியார் தனது இல்லத்திலிருந்து கொண்டுவந்திருந்த இறைச்சி உருண்டைகள், பிரான்சிலிருந்து வந்திருந்த ‘சொஸ்ஸிஸ்ஸோன். ‘
‘மேன்மைமிகு கவர்னருக்கும் மற்றவர்களுக்கும் வணக்கம் ‘ கூறியவன், அருகிலிருந்த மதாம் ழான் துய்ப்ளெக்ஸ் வலது கரத்தை மெல்லப்பற்றிக் குனிந்து முத்தமிட்டுத் தன் வணக்கத்தை அவளுக்கும் தெரிவித்துவிட்டு, எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
‘உட்கார்! பிரெஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயத்தைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் பருகு ‘ குவர்னர் துய்ப்ளெக்ஸ்
‘நன்றி. இப்போது எனக்கு வேண்டாம். ‘
‘அப்பெரித்திஃப் ‘ ஆக கொஞ்சமேனும் பருகு. எங்களுக்கும் உற்சாகமாகவிருக்கும். நன்கு ஓய்வெடுத்தாயா ? ‘
‘நன்கு தூங்கினேன். உங்களைக் காணவேண்டுமென்ற கடமையுள்ளதல்லவா ? அதனால் வந்திருக்கிறேன்.
‘ இச்சாராயம் மிகவும் அருமை. பிரஞ்சுத் தீவுத் தயாரிப்பா ?. ‘ பராதி.
‘ உண்மை!. மிஸியே பராதி! இது பிரஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயம். கரும்பிலிருந்து தயாரித்திருக்கின்றார்கள் குவர்னர் லாபொர்தெனே எனக்காகவென்று ஐம்பது போத்தல்களைக் கொடுத்துவிட்டிருக்கிறார். ‘
‘மிகவும் அருமை. இதுவரை இப்படியொன்றை அருந்தியதில்லை. கூடுதலாகச் ‘சொஸ்ஸிஸ்ஸோன் ‘ வேறு. ‘ கார்வாலே ஆமோதித்தான்.
‘பிரஞ்சுத் தீவில் குறிப்பாக போர் லூயி (Port Louis) யின் கட்டுமானப் பணிகள் எவ்வாறு உள்ளன. ? ‘
‘ இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற தமிழர்களின் திறனால் வேலைகள் மிகத் துரிதமாக, மேன்மை மிகு குவர்னர் எண்ணத்தைப் போல நடந்து வருகின்றன. நமது தாய்நாட்டிலிருந்தும் பொருளீட்டுவதற்கெனத் தீவுக்கு அவ்வப்போது இரண்டொரு குடும்பங்கள் ஆர்வத்துடன் வந்த வண்ணமிருக்கின்றனர். திவீல் எங்கே கால்டி எடுத்து வைத்தாலுல் கட்டுமானப் பணிகள். எல்லாவற்றையும் செம்மைப்படுத்தவேண்டியுள்ளதால், சற்று கடுமையான வாழ்க்கை. ‘
‘ மிஸியே பராதி.. புதுச்சேரி நாணயச்சாலை வேலைகள் எவ்வாறுள்ளன ? முன்னேற்றம் கண்டுள்ளதா ? ‘ – பெர்னார்
‘குறிப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் உள்ளது.. ஓரளவு உபயோகத்திலும் இருக்கிறது. எனினும் முழுவதுமாகக் கட்டி முடிக்கக் கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். ‘ – பராதி
‘ பெர்னார் அங்கே பெண்கள் கிடைக்கின்றார்களா ? ‘ மதாம் ழான் சிரித்தவாறு கேட்டுக் கண்ணைச் சிமிட்டினாள் ‘
‘ இல்லை ஷெரீ. நமது பெர்னார் நல்ல பிள்ளை. அவ்வாறான தப்பெல்லாம் செய்யமாட்டான் என்று கேள்வி ‘
‘தங்கள் அபிப்ராயம் முற்றிலும் உண்மை பிரபு. என்னை மணக்கவிருப்பவளுக்கு நான் உண்மையானவனாக இருக்கவேண்டுமல்லவா ?. ‘
‘ அப்படியா சந்தோஷம். நமது பிரபுவிற்கு குடித்து முடித்தால் வெத்திலைமெல்லும் தாசிகளும், கவிச்சியடிக்கும் செம்படவப் பெண்களும் தேவையாகின்றது. ‘ என்று சொல்லிவிட்டு மதாம் துப்ளெக்ஸ் குவர்னரைப் பார்த்தாள். ‘
பராதி உரையாடலை வேறுதிசைக்குத் திருப்ப விரும்பினான். ‘ஐரோப்பாவில் நடக்கும் ஆஸ்திரியா வாரிசு உரிமைப் போர், கவலை கொள்ள வைத்திருக்கிறது. இங்கே நாம் ஆங்கிலேயர்களிடம் கவனமாயிருத்தல் அவசியம். ‘
‘உண்மை மறுப்பதற்கில்லை. இது விஷயமாகக் குவர்னர் லாபொர்தெனேவிற்குத் தகவல் போயிருக்கிறது. நமக்கேனும் பிரச்சினையெனில் அவரது உதவியை எதிர்பார்க்கலாம். ‘ என்ற குவர்னர் துய்ப்ளெக்ஸ் எதிரே அமர்ந்திருந்த பெர்னாரைப் பார்த்தார்.
‘பிற்பகலுக்கு ஏதேனும் பிரத்தியேகப் பணிகள் இருக்கின்றதா ?. குதிரைகள் கேட்டிருந்தாக அறிந்தேன் ‘
‘ புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவரலாம் என்கின்ற விருப்பமின்றி வேறல்ல ‘
‘ அப்படியா நல்லது. அதிகதூரம் போவது உசிதமல்ல. சரி சரி நேரமாகின்றது. பெத்ரோ..! பரிசாரகனை உணவினைக் கொண்டுவரச் சொல்லுங்கள். ‘
நீண்ட வேலைப்பாடுமிகுந்த அம்மேசையிலிருந்த போத்தல்களும், குப்பிகளும் அகற்றப்பட்டு புதிய விரிப்பு இடப்பட்டது, சீனப் பீங்கான் தட்டுகளும் கொண்டுவரப்பட்டன. முட்கரண்டிகளும், கத்திகளும் அவற்றின் இருபுறமும் வைக்கப்பட்டன. முட்டை சலாட், நெருப்பில் வாட்டப்பட்டிருந்த இரண்டு பெரிய வான் கோழி, ஆலிவ்வுடன் கூடிய பன்றி இறைச்சி, ஒரு தட்டில் இத்தாலியன் பாஸ்த்தா, பாதாமில் செய்யப்பட்டக் கேக், சிவப்பு ஒயின் வரிசையாகக் கொண்டுவரப்பபட மேசை நிரம்பியது..
பெர்னார் அவைகளை வியப்போடு பார்த்துகொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. தட்டங்களில் பறிமாறப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பாம்புகளும் தேள்களுமாக உயிர்பெற்று மெள்ள அவனை நோக்கி ஊர்ந்துவந்தன. அதிர்ச்சியில் உறைந்துபோனான்.
/தொடரும்/
*
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- மா ‘வடு ‘
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- எம காதகா.. காதலா!
- கவிதைகள்
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?