அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

இரா முருகன்


இன்னொரு பயணம். அலைச்சல். களைப்பு. போயே தீர வேண்டும். யாருக்கு இல்லாவிட்டாலும் பகவதிக்குட்டிக்காவது.

சங்கரனுக்கு அலுப்பை மீறித் தன்மேலேயே ஆத்திரம். யாரிடமும் கொட்டித் தீர்க்க முடியாதபடி அவமானம்.

புகையிலைத் தூள் வாங்கப் போய்ப் போகம் வாங்கி வந்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. கருத்தானைக் கண்ணில் பார்க்க முடியாமல், சுலைமானோடு மனது விட்டுப் பேச முடியாமல், வைத்தி சாரோடு அரட்டை அடிக்க முடியாமல், கோமதி மன்னியிடம் வாத்சல்யத்தோடு இன்னொடு குவளை காப்பி கேட்டுச் சமையல்கட்டுக்குப் போய்க் குடிக்க முடியாமல் கால் இழுத்துக் கொள்கிறது. கண் சதா தரையைப் பார்க்கச் சொல்லிக் குனிகிறது. முன்னைக்கிப்போது புத்தி தடுமாறுகிறது. சாமாவும் அவன் கூடிக் கலந்தவளும் நினைவில் தேய்ந்து சிறுபுள்ளியாக மறைய உருண்ட தனங்களையுடைய துரைசானிகளும், சீமைச் சாராய வாடையும், ஏதெல்லாமோ கலந்த சாப்பாட்டு வாடையும், கப்பல் வாடையுமாக நினைத்துக்கொண்டாற்போல் மேலெழும்பி வருகிறது. வயிறு வாய்க்குள் விழுந்த குமட்டலோடும் தலையில் நாலு கப்பலை நேரே நீட்டி நிமிர்த்தின பாரத்தோடும் ஓடிப்போய் கொல்லைப்பக்கம் உட்கார்ந்து வாந்தி பண்ணினால் உடம்பு சமனப்படுகிறது. படுத்து உடனே நித்திரை போகச்சொல்லித் தூண்டுகிறது. எழுந்தால் எல்லாம் சரியானது போல் ஒரு தோற்றம். அது அப்புறம் மாறிப் போகும்.

கருத்தான் சங்கரனைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் சுலைமான் அவன் கூடத் துணைக்கு அரசூருக்கு வந்தான். சுலைமானுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சங்கரனை என்ன ஏது என்று விசாரிக்கவில்லை.

அவன் இது பற்றி ஏதும் பேசாததே சங்கரனுக்குச் சங்கடமுண்டாக்கியது. இவனிடமாவது வாயைத் திறந்து எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும். எதை ? கப்பலில் நடந்தது என்ன என்றே குழப்பமாக இருக்கிறது இன்னும்.

தஸ்தகீர் ராவுத்தரின் விசுவாசமுள்ள ஊழியனாக ஒரு நாள் முழுக்க இருந்தது சங்கரனா இல்லை வேறு யாராவதா ? அந்தப் பெண்களில் எத்தனை பேரோடு அவன் போகம் கொண்டாடினான் ? எல்லோரும் கர்ப்பம் தரித்திருப்பார்களா ? துரைச்சானிகளோடு சுகம் அனுபவித்த கருப்பு நாயைச் சிறையில் இடுவார்களோ ?

அந்தப் பெண்கள் கப்பலில் இறங்கிய கையோடு பிராது கொடுத்திருந்தால் கொத்தவாலோ எவனோ வைத்தி சார் வீட்டு வாசலுக்கு விலங்கோடு வந்திருப்பானில்லையா ? அப்படி எதுவும் நடக்கவில்லையே. ஆக அவன் கப்பலில் இருந்ததெல்லாம் கனவுதானா ? அப்புறம் தஸ்தகீர் ராவுத்தர் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னது யாரை ? அரைக்குக் கீழே புழுத்துச் சொட்டுமா ? ஏன் ?

பட்டணத்திலிருந்து மூக்குத் தூள் ஜாடிகளோடு சுலைமானும் சங்கரனும் பயணம் புறப்பட்டபோது சுலைமான் கவனமாக வியாபாரத்தை விருத்தியாக்குவதைப் பற்றி மட்டுமே பேசினான்.

சங்கரா, ஆரம்பிக்கும்போதே தனிக்கடை ஏதும் போட வேணாம். இருக்கப்பட்ட இடத்துலேயே கொஞ்சம் இடம் ஒதுக்கி இதையும் வச்சுக்கோ. எப்படி இதைக் கலக்கறது, எப்படி வாழைமட்டையிலே அடைக்கிறதுன்னு உங்க கடை வேலையாள் ரெண்டு மூணு பேருக்கு நான் சொல்லித்தரேன். நீயும் கவனிச்சுக்கோ. வியாபாரம் விருத்தியாற வரைக்கும் நானோ கருத்தானோ மாசம் ஒருதடவை வந்து போறோம். நீயும் அப்பப்போ பட்டணம் வந்துட்டு இரு.

சங்கரன் வேண்டாம் என்று அவசரமாகத் தலையாட்டினான்.

அட, கப்பல்லே எல்லாம் ஏற வேண்டாம்பா. கரையிலேயே உங்க உறவுக்காரங்க வூட்டுலே நொங்கம்பாக்கத்துலேயே இருந்துக்க. கருப்புப் பட்டணத்துக்கு மட்டும் வந்து போனாப் போதும்.

சுலைமான் அந்த ஒரு சந்தர்ப்பம் தவிர, சங்கரனிடம் கப்பலில் ஏறினது பற்றி நினைவு படுத்தவே இல்லை.

சங்கரனும் சுலைமானும் அரசூருக்கு வந்து சேர்ந்தபோது, அரண்மனையில் இடம் கிடைத்துக் கிட்டங்கி உண்டாக்கவும், பக்கத்தில் வீட்டைப் பழையபடி கட்டி நிறுத்தவும் எல்லா முஸ்தீபும் தொடங்கிக் காரியங்கள் அதி வேகமாக நடந்து முடிந்திருந்தன.

கட்டி முடித்தாலும், குடி போக யோசித்துக் கொண்டிருந்த வீட்டில் சுலைமான் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கியிருந்தான். கல்யாணி அம்மாள் இன்னும் படுத்த படுக்கையாகக் கிடந்ததால் பாடசாலை ராமலட்சுமிப் பாட்டி சமையல் தான் எல்லோருக்கும்.

சங்கரா, இம்புட்டுச் சைவமா ஒரு வாரம் தின்னு தின்னு உச்சிக்குடும்பி எனக்கும் முளைச்சிடுச்சு பாரு.

சுலைமான் உச்சந்தலையில் கொத்தாக முடியை நிறுத்தியபடி சிரித்தான். அவன் சுறுசுறுப்பாக அலைந்து அரசூரில் மூக்குத்தூள் வியாபாரம் ஆரம்பமாக ஏற்பாடு செய்தான். ராஜா உட்பட ஊர்ப் பெரிய மனுஷர்களுக்கு நாசிகா சூரணத்தைப் பெரிய வாழைமட்டைச் சுருளில் சுற்றி அலங்காரமாகப் பட்டுக் கயிறிட்டு எடுத்துப் போய் காணிக்கை என்று சொல்லிக் கொடுத்தான்.

அவன் கூடவே எல்லா இடத்துக்கும் சங்கரன் போக வேண்டி இருந்தாலும் பக்கத்து அரண்மனையில் ராஜாவைப் பார்க்கப் போகும்போது மட்டும் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.

அந்த ஜமீந்தார் வீட்டைக் கொளுத்திட்டான்னு சங்கரனுக்கு எண்ணம். அது தப்புடா கொழந்தே. அவன் அப்பாவி. முரடனா இருந்தாலும் பரம சாது.

கச்சேரி ராமநாதய்யர் சொன்னபோது இவனா குழந்தை என்பதுபோல் சுலைமான் உரக்கச் சிரித்தான். அவனுக்கு ராணி தமக்கை முறையாகிப் போனது சங்கரனுக்குத் தெரியும். கூடப் பிறந்தவள் குளிக்கும்போது மாடியிலிருந்து எக்கிப் பார்த்தவன் இந்தப் பேர்வழி என்று தெரிந்தால் சுலைமான் அவன் தலையைத் துண்டித்து விடுவான்.

மூக்குத்தூள் விற்கிற கடையில் முன்னால் பார்வையாக வைக்க சுலைமான் தச்சனைக் கூப்பிட்டு ஒரு பெரிய பொம்மை செய்யச் சொன்னான். அது இருந்த இடத்திலேயே நட்டமாக நின்று தலையை மட்டும் அப்படி இப்படித் திருப்பும். கண்ணைச் சுழற்றும். பொம்மைக்குள்ளே அதற்கான விசையைப் பொருத்தக் கருமானோடும் தச்சனோடும் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்காரும் ஒத்துழைத்தார்.

அரண்மனைப் பக்கம் தலையைத் திருப்பும்போது அந்த பொம்மை அப்படியே உறைந்து போய் நின்றது கொஞ்ச நாள். யாராவது அதைத் தலையைத் திருப்பி விட வேண்டி இருந்தது அப்பொழுதெல்லாம்.

அண்ணாசாமி அய்யங்கார் அப்புறம் சில கணக்குகள் போட்டுப் பார்த்து, அரண்மனைத் தோட்டத்தில் நிறுத்திய யந்திரத்தின் ஆகர்ஷத்தில் இந்தப் பொம்மை இப்படி இயக்கம் தடைப்பட்டு நின்றுவிடுவதாகச் சொன்னார். யந்திரத்தை இனிமேல் மாற்ற முடியாது என்றும் அதற்கான சிக்கலான கணிதங்களைத் திரும்ப எடுத்தால் பிழை வந்து சேரும் என்றும் அவர் சொன்னதால், பொம்மைக்குள்ளே விசையை மாற்றியமைக்க வேண்டி வந்தது.

சுலைமான் ஊருக்குக் கிளம்பியதற்கு முந்திய ராத்திரி அவனோடு வியாபார நெளிவு சுளிவுகள் பற்றிப் பேசிக்கொண்டு சங்கரன் புதிதாகக் கட்டின வீட்டில் தங்கினான். ரா முழுக்கப் பேசிக் கொண்டிருந்தபோது அவனுக்கு மனம் லேசாகி இருந்தது.

இனிமேல் நடக்கப் போறதைப் பத்தி யோசிச்சு அதுக்கேத்த மாதிரி உழைக்கறது மட்டுமே போதும் என்று சுலைமான் வியாபாரத்தைப் பற்றிச் சொன்னதை சொந்த ஜீவிதத்துக்குமான வார்த்தையாக எடுத்துக்கொள்ள சுலபமாக இருந்தது சங்கரனுக்கு.

ஆனாலும் அவன் கிளம்பிப் போனதும் ஒரு வெறுமை. திரும்ப மனக் குமைச்சல். அவமானமும் குற்ற போதமுமாக நினைப்புத் தடுமாறியது. அன்று இரவும் வீட்டிலேயே தனித்துத் தங்கினான் அவன்.

என்னவோ தோன்றப் பட்டணத்தில் தைத்த குப்பாயத்தை அணிந்து கொண்டு சுலைமான் போல் கால்சட்டையோடு கொட்டகுடித் தாசி வீட்டுக்குப் போனான். நடுராத்திரி தாண்டி இருந்தது அப்போது.

அவள் அன்றைக்குத் தனியாகத் தான் இருந்தாள். இல்லை, வந்தவர்கள் போயிருக்கலாம். சங்கரனை யார் என்று அடையாளம் தெரியாமல் அவள் தடுமாறினாலும் உள்ளே வரச்சொன்னாள். மண் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து என்ன வேணும் என்று விசாரித்தாள்.

தான் புகையிலைக்கடைக்காரன் என்றும் கடைவீதியில் பெரிய கடை இருப்பதாகவும் வாசலில் பொம்மை நிறுத்தி மூக்குத்தூள் வியாபாரம் செய்வதாகவும், அதைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடுவதாகவும், பகவதிக்குட்டியைக் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவன் நினைத்து நினைத்துச் சொன்னதை எல்லாம் கொட்டகுடித்தாசி ஆதரவாகக் கேட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் வைத்துப் பார்க்க அவள் கொஞ்சம் வயது சென்றவளாகத் தெரிந்தாள் சங்கரனுக்கு. ஆனாலும் என்ன ? அவளிடம் ஆசையைச் சொன்னான். கப்பலில் கிடைத்த மாதிரி தேகம் சுகம் கேட்டுக் கொண்டிருந்தது.

உங்களுக்குக் கல்யாணம் ஆகப்போவதாகச் சொன்னீங்களே ?

கொட்டகுடித்தாசி அவன் தலையை வருடியபடி கேட்டாள்.

ஆமா. அதுக்கென்ன ? தப்போ சரியோ எனக்கு இப்போ உடம்பு தகிக்க ஆசை முன்னாலே வந்து நிக்கறதே. காசு நிறையக் கொண்டு வந்திருக்கேன் பாரு. இது பாத்தியா ? டாலர். அமெரிக்க தேசப் பணம். ஒரு டாலர் ரெண்டு துரைத்தனத்து ரூபாய்க்குச் சமம்.

அவள் வாங்கிப் பார்த்துவிட்டு அந்தக் காசைத் திரும்பக் கொடுத்தாள்.

வேண்டாமா ?

எதுக்கு ?

என்கூடப் படுத்துக்கறதுக்கு ?

யார் கூடவும் படுக்க இப்போ எல்லாம் பிடிக்க மாட்டேங்கிறது.

ஏன் என்று கேட்டான் சங்கரன்.

தெரியலை. அரண்மனையிலே நிறுத்த யந்திரம் செய்யறதுக்காக ஜோசியக்கார அய்யர் பாட்டு கேட்டு எழுதி வாங்கிட்டுப் போனார். அதை நிறுத்தின அப்புறம் இப்படி ஆகிப்போனது.

ஏன் ?

சங்கரன் அவளை இழுத்து அணைத்தபடி ஆர்வத்தோடு கேட்டான்.

யந்திரம் அரண்மனைத் தோட்டத்தில் இருந்து என் வீட்டை, அதுவும் நான் சயனிக்கும் இடத்தைப் பார்க்க நிற்கிறது. அது முதல்கொண்டு மனதில் நிம்மதியும் சஞ்சலமும் மாறிமாறி வருகிறது. இந்த விதமான இச்சை எதுவும் வருவதே இல்லை.

சங்கரன் பிடியில் இருந்து விலகியபடி அவள் சொன்னாள்.

இல்லே, நான் கப்பல்லே ஸ்திரிலோலனா குளிக்காத வெள்ளக்காரிகளோட கூத்தடிச்சேன். அது தெரிஞ்சு தான் வேணாம்கிறே என்னோடு படுக்க. சுலைமான் சொன்னானா ? நம்பாதே அதையெல்லாம். அழுகிச் சொட்டலை. வேணும்னா பாக்கறியா ?

அவன் கால்சராய் முடிச்சை அவிழ்க்க ஆரம்பிக்க, வேண்டாம் என்று தடுத்தாள் கொட்டகுடித் தாசி.

மானையும் மயிலையும் நான் என்னத்தைக் கண்டேன் ? இப்போ விருப்பம் இல்லே அவ்வளவுதான். அதுனாலே நீங்க உடனே எழுந்து போகவேண்டாம். பேசிட்டு இருங்க. கேட்டுக்கிட்டே இருக்கேன். ராத்திரி முழுக்க எனக்கும் உறக்கம் வரமாட்டேன்கிறது.

சங்கரன் அவள் தோளில் தலை சாய்த்து கிரகணத்திலிருந்து ஆரம்பித்தான். நடுநடுவே அவள் நிறுத்தி அதையெல்லாம் அழகான வெண்பாவாக்கிச் சொல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

இதெல்லாம் எப்படி உனக்கு முடியறது ?

சங்கரன் கேட்க அவள் சும்மா சிரித்தாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக சங்கரன் அவள் வீட்டிலிருந்து திரும்பினான். அவன் கொடுத்த தனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் கொட்டகுடித் தாசி.

சங்கரன் அப்புறம் வீட்டிலேயே ராத்திரி தங்க ஆரம்பித்தான். கட்டிலைத் திருப்பி அரண்மனைத் தோட்டத்து யந்திரம் இருந்த திசைக்கு நேராகப் போட்டுக் கொண்டான். சுகமான உறக்கத்தோடு ராத்திரியும், வேலையில் முழு மனமும் லயிக்கிற படிக்குப் பகல் பொழுதும் ஊர்ந்து போக, இப்படியே இருந்துவிடலாம் இனிமேல் என்று முடிவு செய்தபோது, சுப்பிரமணிய அய்யர் வந்து கல்யாணம் வைத்திருக்கிறது வா என்றார்.

எதுக்கு அப்பா அதெல்லாம் ? இப்படியே இருந்துட்டுப் போறேனே ?

அசடாட்டம் பேசாதே. அதது நடக்கற காலத்துலே நடக்கணும். கிளம்பு.

வீட்டை, கடையை விட்டுட்டா ? யாராவது திரும்ப வந்து கொளுத்திட்டா ?

யாரும் அப்படி எல்லாம் பண்ண மாட்டா. ஜமீந்தார் நாலு சேவகனைப் பாரா கொடுக்க நியமிக்கறதாச் சொல்லியிருக்கார். நானும் மதுரையிலேருந்து தாணுப்பிள்ளை வகையறாவிலே ஒருத்தரை வரவழைக்கிறேன். ஐயணையும் இருக்கான். எல்லாம் பத்திரமாப் பாத்துப்பா. நீ எதுக்கும் கவலைப்படாதே.

அவ்வளவு தூரம் திரும்பப் பிரயாணம் செய்ய கல்யாணி அம்மாளால் முடியாது என்பதால் அவளை விட்டுவிட்டுப் போக முடிவானது. சுப்பம்மாள் அவளுக்குத் துணையிருக்கச் சம்மதித்தாள்.

சாமாவோடு கலந்த பிரேத ரூபமான பெண் போய்ச் சேர்ந்தாலும் சுப்பம்மாளுக்கு இன்னும் சுதந்திரம் கிட்டவில்லை. இந்த ஜோசியன் கடங்காரன் படுத்தாமல் அவளுக்கு நிர்மாணித்துக் கொடுத்த யந்திரத்தையும் ஒரு வழி ஆக்கி அரண்மனை யந்திரத்தோடு இசைத்துச் சேர்த்தால், அவள் வெளியே கிளம்பி இஷ்டம் போல் பிரயாணம் செய்யலாம். தேவதைகளைக் கட்டித் தூக்கிப் போய், தினசரி குளிக்க வைத்து, ஆகாரம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்று அவள் வாயில் பாட்டாக மூத்த குடிப் பெண்டுகள் பாடினதால், சுப்பிரமணிய அய்யர் அவளைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்திருந்தார்.

சுப்பம்மா மாமி வராம நலுங்கு எல்லாம் யார் பாடறது ?

சுந்தர கனபாடிகள் கேட்டார்.

சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் நலுங்கு பாட ஆரம்பித்திருந்தார் அப்போது. மூத்தகுடிப் பெண்டுகள் அவரோடு கிளம்பி இருந்தார்கள்.

சங்கரா புறப்படு.

அதுவும் மூத்தகுடிப் பெண்டுகள் சொன்னதுதான். கல்யாண வேடிக்கையில் கலந்து கொள்ளப்போகிற சந்தோஷம் சுப்பிரமணிய அய்யரின் பெண் குரலில் இருந்தது.

கொட்டகுடித் தாசிக்கும் இதே குரல் தான் என்று சங்கரனுக்கு நினைவு வந்தது.

அவள் ஜாகை மாற ஏற்பாடு செய்தால் என்ன ?

(தொடரும்)

—————————————

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts