தனிமை

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

கவிநயா


வழக்கம் போல் அன்று காலையும் ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. ஆனால் இன்று அவசரமாக எழுந்திருக்க வேண்டாம். நினப்பே சுகமாக இருக்க, போர்வையை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டாள், லலிதா. இல்லையென்றால், அவளுக்கென்று இருக்கும் நேரம், காலை ஐந்தரை முதல் ஆறரை வரைதான். எழுந்து, பல் துலக்கி, வாசல் தெளித்து, கோலம் இட்டு, சின்னதாக ஒரு வாக்கிங் போய் விட்டு வந்து, குளித்து முடிப்பதற்கும், காலை நேரப் பரபரப்பு தொற்றிக் கொள்வதற்கும் சரியாக இருக்கும். இன்றைக்கு அவள் இஷ்டம்தான். அவள் இந்த இரண்டு நாட்களை எதிர் பார்த்து ஏற்கனவே போட்டு வைத்திருந்த ப்ளானை மனசுக்குள் ஒரு தரம் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். இருந்தாலும், தினமும் எழுந்து சுறுசுறுப்பாய் இருக்கப் பழகிய உடம்பு படுக்கையில் கிடக்க மறுத்தது. பாதி படித்திருந்த ‘பொன்னியின் செல்வன் ‘ அழைத்தது. இனி எழுந்திருக்க வேண்டியதுதான்.

நிதானமாக காலை வேலைகளை முடித்து விட்டு, ஒரு கையில் ஏலம் மணக்கும் டாயுடனும், மறு கையில் பொன்னியின் செல்வனுடனும் சாய்வு நாற்காலியில் சாய்ந்த போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருமைக் கணவனை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். எல்லோரும் சொல்வது போல நான் அதிர்ஷ்டக்காரிதான் என்று எண்ணம் ஓடியது. அன்பே உருவான கணவன் விவேக்; தங்க விக்கிரகங்கள் போல் வகைக்கு ஒன்றாக இரண்டு குழந்தைகள்; மீனு 5 வயது; கண்ணன் 2 வயது. அவர்கள் மூவரும் நேற்றுத்தான் பாண்டிக்குப் போனார்கள்.

காரில் ஏறும் முன், ‘அம்மாவுக்கு டாடா சொல்லுடா, கண்ணா ‘, என்றான் விவேக். காரில் போவதிலேயே குறியாக இருந்த கண்ணன், ‘ம்மா, தாத்தா ‘, என்றான், மழலையில். ‘கண்ணா, அப்பாகிட்ட சமத்தா இருக்கணும், சரியா ? ‘, என்று அவனை இறுக அணைத்து முத்தம் பதித்தாள். அவள் கண்கள் இலேசாகக் கலங்கியிருப்பதைப் பார்த்த விவேக், ‘ஏய், என்னடா இது, கடைசி நிமிஷத்துல மனச மாத்திக்கப் போறியா ? ‘ என்று கிண்டலடித்தான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்காக அவள் எப்படிக் காத்திருந்தாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். பேசினால் அழுது விடுவோமோ என்று, இல்லை என்பதாகத் தலையை மட்டும் அசைத்தாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘ஈஸ்ட் கோஸ்ட் ரோடு ஜாலியா இருக்குன்னு நீங்க பாட்டுக்கு தூங்கிடாம, பாத்து டிரைவ் பண்ணுங்க ‘, என்றாள் புன்முறுவலுடன். ‘அம்மா, அப்பா தூங்காம இருக்கிறதுக்காக, நான் அப்பாவோட பேசிக்கிட்டே போவேன் ‘, என்று அவளுக்கு தைரியம் சொன்னது, மீனுக்குட்டி. ‘எம் பொண்ணு இப்பவே எவ்வளவு பொறுப்பா இருக்கா பாரு ‘, பெருமிதத்துடன் மீனுகுட்டியை அணைத்துக் கொண்டான், விவேக். அந்த விநாடியில் தானும் அவர்களுடனே போய்விட்டால் என்ன என்று தோன்றி விட்டது, லலிதாவிற்கு. அதைப் புரிந்து கொண்டவன் போல், ‘சரி, நாங்க கிளம்பறோம், லல்லி. அப்பதான் நேரத்தோட போய்ச் சேர முடியும் ‘, என்ற விவேக், குழந்தைகள் காரில் ஏற உதவினான். ‘நீ பத்திரமா இருந்துக்கோ. நாங்க ஞாயிற்றுக் கிழமை வந்துடுவோம் ‘, என்றபடி கிளம்பி விட்டார்கள். சென்னையிலிருந்து பாண்டி போக நான்கு மணி நேரமாவது ஆகும்.

லலிதா, பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு வரை ஒரு பாங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனு பிறந்தவுடன் வேலையை விட்டு விட்டாள். அடுத்த மூன்று வருடங்களிலேயே கண்ணனும் பிறந்த பின், அவளுக்கு மூச்சு விடவே நேரமில்லாமல் போய் விட்டது. எப்போதும் குழந்தைகளுடன் சரியாக இருந்தது. புத்தகங்கள் படிப்பது, கை வேலைகள் செய்வது, கவிதைகள் எழுதுவது, என்று அவளுக்குப் பிடித்த எதையுமே செய்ய நேரம் கிடைக்கவில்லை. இடைவெளியே இல்லாமல் இருக்கவும் எரிச்சலும், கோபமும், இயலாமையும் அதிகமாயின. நல்ல வேளை, விவேக் புரிந்து கொள்ளும் கணவனாக இருந்ததினால், கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டாமல் கணவனிடம் பேசினாள். இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள். ஒரு வாரக் கடைசியில் விவேக் குழந்தைகளைக் கூட்டி கொண்டு பாண்டியில் இருக்கும் தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்வது, அந்த இரண்டு நாட்களும் லலிதா எந்தத் தொந்திரவும் இன்றி அவளுக்கு விருப்பமானபடி பொழுதைக் கழிப்பது என்று. அதைத்தான் இப்போது செயலாக்கி இருக்கிறார்கள். மாமியார் மாமனார் கூட எனக்கு அருமையானவர்களாய்க் கிடைத்திருக்கிறார்கள்; அவர்களும் புரிந்து கொண்டு இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தார்களே என்று இப்போது நினைத்துக் கொண்டாள், லலிதா.

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகமும் முடிந்து விட்டது. நான்காம் பாகம் மாடியில் இருந்தது. இந்தக் கல்கிதான் என்ன அழகாக எழுதுகிறார்! அந்தக் கால தஞ்சையையும் பழையாறையையும் அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அவர் காவிரியைப் பற்றி எழுதியிருக்கும் அழகைப் படிக்கையில், நாமும் அந்தக் காலத்திலேயே பிறந்திருக்கலாமே என்ற ஏக்கம் வரும். அத்துடன் அவர் கதைகளில் இழையோடும் இயல்பான நகைச்சுவை! கல்கியை மிகவும் சிலாகித்தவாறே நான்காம் பாகத்தைப் புரட்டிக் கொண்டே படிகளில் இறங்கியவள் ஒரு படியைத் தவற விட்டு விட்டு விட்டாள். அவ்வளவுதான், தடதடவென்று தலை குப்புற படிகளில் உருண்டாள்.

கண் விழித்துப் பார்க்கையில் இருள் கவிந்து விட்டிருந்தது. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகுதான் தான் வெகு நேரமாக அப்படிக் கிடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். சற்றே கையை ஊன்றி எழுந்திருக்க முயல்கையில் எங்கெங்கோ வலித்தது. எழுந்து நடப்பது நடக்காத காரியம் என்பது புரிந்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது, லலிதாவிற்கு. இந்த நாள்தான் எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்தது ? கடைசியில் இப்படியா ஆக வேண்டும், அதுவும் தனியாக இருக்கும் சமயம் பார்த்து ? நல்ல வேளையாக அவள் தோழி சாந்தி இரண்டு வீடுகள்தான் தள்ளி இருக்கிறாள். அவளைத் தான் கூப்பிட வேண்டும். நானே வரவழைத்துக் கொண்டதுதானே இந்த நிலைமை, எந்த நேரத்தில் தனிமையில் இனிமை காணத் திட்டமிட்டேனோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு தன்னிரக்கத்தால் மீண்டும் கண்ணீர் பெருகியது. ஒருவாறாகச் சமாளித்தபடி, ஹாலில் இருக்கும் ஃபோனை நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்தாள்…

meenavr@hotmail.com

Series Navigation

author

கவிநயா

கவிநயா

Similar Posts