திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/3/

‘காலை மிதிச்சிட்டுப் போறயேய்யா… ‘ எனத் திட்டியபடி தனுவைச் சண்டைக்கு அழைத்தவனை சட்டை செய்ய நேரமில்லை. அவன் திடாரென நின்று, தன்னைக் காலைமிதித்த தனுவைக் கண்டு பிடிக்குமுன் பின்னாடி ஓட்டநடையில் வந்த இன்னொருவன் அவன் காலை மிதித்து விட்டான்.

‘கூமுட்டை நடுரோட்டுல திடார்னு நின்னுட்டா எப்டி ? லுாஸா நீ ? ‘ என்று இப்போது… திட்டியவன் திட்டு வாங்கிக் கொள்கிறான்.

மகா ஜனங்களின் நடைமுறைகள் வேடிக்கையாய் இருக்கின்றன. சிறு விஷயத்துக்கும் ஆவேசப் படுகிறார்கள். பெரிய விஷயம் என்றால்… ஜாக்கிரதையாய்ப் பக்கம் பார்த்துக் கொண்டு குரல் எடுக்கிறார்கள்… உள்ப்பயத்துடன். எதிராளி ஏப்ப சாப்பையா இருந்தாதான் அதுவும். அவனும் ஒருமாதிரி மீசை கீசை வைத்து நக்கீரன் கோபால் அளவு எடுப்பா இருந்தா பார்ட்டி கப் சிப். கவட்டைக்குள் வால்கொடுத்து பெட்டைநாய் ரேன்ஜில் பம்மிரும்.

ரயில் நிலையப் பரபரப்பைத் தாண்டி சாலைப் பரபரப்பு. பிறகு நிற்காத பஸ். புதுக்காதலி போலத் தள்ளி நின்ற பஸ்.

பாதையோர வியாபாரிகள்… திடாரென அடிபட்டாற் போல கூக்குரலிட்டு வியாபாரப் பொருளைக் கூவி விற்கிறார்கள். பிச்சைக்காரர்களே மும்முரப்படும் வேளை. இதில் கண் தெரியாத இசைக்கலைஞன் இருந்த நிழலை ஆக்கிரமித்து பாட்டெடுக்கிறான் அவன் ஒரு பக்கம்… கூடவே ஆர்மோனியம் அவன் குரலோடு உடன்கட்டை ஏறுகிறது. நர்ஸ் வேலைக்குப் பொம்பளையாள் என்பது போல, கண்தெரியாத பிளாட்பார இசைக்கலைஞர்களுக்கு ஆர்மோனியத்தோடு கல்யாணஜோடி சேர பழைய பாடல்களே உதவுகின்றன. அறுபதாங் கல்யாணம்…

பின்னென்ன, கண் தெரியாத பாடகன் ஆர்மோனியத்தை வைத்துக் கொண்டு /காதல் ப்ஸ்…சாஸே சாப்பிடு ‘பிஸ்சா ‘வே/ என்றா பாட முடியும் ?

மனிதரே திகைக்கும் இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் தெருநாயொன்று – என்னாடி அவசரம் உனக்கு ? – சர்ர்ரென ஒரே வேகத்தில்… அத்தனை போக்குவரத்தும் கீச்சிட்டு ஸ்தம்பிக்க கம்பீரமாய், முதல்-அந்தஸ்து அரசியல்வாதி எனக் கடந்து ஓடுகிறது. இப்படி போக்குவரத்தை நிறுத்தணும்னா… ஒண்ணு- அரசியல்வாதியா இருக்கணும். இல்லை தெருநாயா இருக்கணும். அல்லது செத்துப்போன ஏழையா பாடை-ஊர்வலம் வரணும்.

அன்னிக்கு ஒரு வேடிக்கை- ஒரே நேரத்தில் ஓட்டுகேட்டு அரசியல் பிரமுகர்- அவன் பின்னாடி பிளாட்பாரத்தில் செத்த ஒருத்தன்- அந்த ஊர்வலத்துடன், செத்தவனின் வளர்ப்புநாய் மூணுமாய் வந்ததே பார்க்கணும்.

முன்குனிந்து வணங்கிய அரசியல்வாதியைப் பார்த்து… காத்திருந்த ஸ்கூட்டர்காரர் ‘அட ஓட்டு கிடக்குது. நீ சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணு. நாங்க ஆபிஸ் போகணும் ‘ என்கிறார். ஆனால் பிணஊர்வலப் பார்ட்டியைப் பார்த்து இவரே கும்பிட்டு, ‘சீக்கிரம் போங்க… ‘ என்கிறார் பவ்யமாய். இதுல மாட்னது தெருநாய்தான்னு வை. கூட்ட ஆத்திரத்தில் எவனோ அதை நச்சென்று கல்லால் அடிக்கிறான். வாள்வாளென்று ஓடுகிறது அது. நல்லவேளை ரகளையாகவில்லை.

போக்குவரத்தை ஊடறுத்து ஓடும் தெருநாயாய் தனு தன்னை உணர்ந்தான்.

வீட்டோடு அச்சகம் போட்டிருந்தார் முதலாளி. தொலைபேசிகூட மாடிக்கும் கீழுக்குமான இணைப்புதான். நேரப்படி அல்லது அவசரப்படி திறக்க அவருக்கு முடியும்… மாடிக்கும் கீழுக்குமான ஒரே கதவு. அச்சகம் எப்பவுமே திறந்திருக்கிற பாவனை தந்தது. மாடிப்படிக்குக் கீழே முக்கோணக் காலியிடத்தில், அச்சிட வந்த, அச்சிட்ட காகிதங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கும்.

உள் சிறு அறைகளில் காற்றே திணறும். மனுசன் மூச்சு விடுவதில் சிரமம் அதிகம். எப்போதும் விளக்கு இல்லாமல் முடியாது. தலைக்குமேல் ரயில்பெட்டியில் போல கருத்த ஒரு முச்சிறகு மின்விசிறி. ராட்சஸச் சிலந்தி. சிறகு முளைத்த சிலந்தி அது.

கடகடவென்று அதன் ஓயாத இரைச்சல். காதுக் குடைச்சல். இந்தச் சத்தம் போதாது என உள்ளே அச்சுயந்திர ஒலி. தடக் தடக் வேகமெடுப்பு.

அந்த முச்சிறகுக் கரும் சிலந்தியும் அச்சியந்திர தண்டவாள அதிர்வொலியும் ரயில் பெட்டிக்குள் இருப்பதான மயக்கம் தருகின்றன.

இதன் நடுவே ஒரு நாற்காலி-மேஜைக்குள் திணிக்கப் பட்ட அவன். விபத்தான காருக்குள் போல அவன்… சிக்கிக் கொண்ட பாவனையில் உட்கார்ந்திருப்பான். கூப்பிட்ட அழைப்புக்கு சட்டென்று எழுந்துகொள்ள முடியாது. மேஜை நாற்காலி இடுக்கு முடுக்கு. தொலைபேசி வயர். காகிதத்தைப் பரப்பி விரித்து வாசிக்கத் தோதாய் மடிக்கு உயரமாய் அட்டை. அதை எடுத்து ஓரத்தில் சாய்த்து வைத்து விட்டு ஏறத்தாழ மரத்துப்போன காலை நகர்த்தி வெளிவர வேண்டும். அதற்குள் கூப்பிட்டவரே பொறுமை யிழந்துவிடக் கூடும்.

பெயர் பிழைதிருத்துபவன். அச்சகத்தின் நிர்வாகம் அவன் கையில் இருக்கிறது… துட்டு நிர்வாகம் தவிர. தொலைபேசி அவசரங்கள், அச்சக நித்தியப்படி நியதிகள், நீத்தார் அறிவிப்பு என அவசர கேஸ்கள் – ஆங்கிலத்தில் late ஆனவரை தமிழில் அவசரமாய் அறிவிக்கிறார்கள்!… ஆட்டோ காணவில்லை… அவசரப் பரபரப்புகள் எல்லாம் மேற்பார்வை பார்க்க வேண்டியிருக்கிறது. புது பார்ட்டி வந்தால் மாடி வீட்டில் இருந்து முதலாளியை அவன் வரவழைப்பான். நாற்காலிக்குப் பின்னே அழைப்புமணி… மாடியில் ஒலிக்கிறாப் போல அமைத்திருக்கிறது.

ஒரு சந்தோஷம். அலுவலகங்களில் அதிகாரிகள் அழைப்பு மணியை அடித்து கீழ்ப்பணியாளரைக் கூப்பிடுவார்கள். இங்கே உல்ட்டா- அவன் அழைக்க, வருகிறார் முதலாளி.

‘டாய் முதலாளி சார்வாளுக்கு ஒரு ஸ்பெசல் சாதா பார்சேல்… ‘ எனக் கத்துவதாய் மனசுக்குள் வேடிக்கை…

அச்சகத்தில் உட்கார முடியாத அளவு அனல். மாடியில் சட்டையைக் கழற்றி விட்டு ஈசிசேரில் சாய்ந்தபடி காற்றுத் தேவைக்கு அக்குள் வியர்வை ஆற மின்விசிறிக்குக் கையைத் துாக்கிக் காட்டியபடி அவர்பாடு அமர்க்களம்தான். யானை தும்பிக்கை துாக்கி சோற்றுக் கவளத்துக்கு வாய் காட்டும் இப்படி!… கீழே இறங்கி வந்து உட்கார்ந்தால் வந்திருக்கிற பார்ட்டியோடு பேசுமுன்பே அவருக்கு இருப்பு கொள்ளாமல் தவிப்பாய் இருக்கும். பின்மண்டையில் ஃபேன் காற்று சிக்கெடுக்கும். சலுானில் போல பின் மண்டையில் குறுகுறுக்கும் காற்று- ஆனால் முன்நெற்றியில் வியர்வை வழியும். அவர்கள் பேசி முடிக்கும்வரை வியாபாரம் படியும் வரை அவன் வெளியே நின்றிருக்க வேண்டும். போய் மிஷினில் அச்சு-மை சீராய்ப் பதிவு காண்கிறதா எனச் சரிபார்ப்பான். வெளிபைன்டர் வந்து அச்சிட்ட காகிதங்களை எடுத்துப் போக உதவுவது போன்ற உபரி வேலைகள் செய்வான்.

‘என்னய்யா இப்டி லேட்டா வந்தா எப்பிடி ? ‘ என்று வழக்கமான சீற்றத்துடன் சபித்துக் கொண்டார் முதலாளி. இந்த நேரத்துக்கு வரவே அவன்பட்ட பாடுகளை அவனே அறிவான். முதலாளிகள் தொழிலாளிகள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாதது ஒருபுறம். அவர்களது திறமையையே சட்டைசெய்யாத பாவனையில் நடந்து கொள்வது அவனால் தாளவொண்ணாதிருந்தது. இவர் தரும் சொற்ப சம்பளத்துக்கு எவன் நிலைப்பான் இங்கே. பைன்டர்களும் மிஷின்மேன்களும் கையச்சு கோர்ப்பவர்களும்… யாருமே எந்த அச்சகத்திலுமே நிலைக்காமல் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். முதலாளிகளின் வாய்க்கொழுப்பு, தகாத நடத்தை, தொழிலாளிகளின் அவசரப் பொருளாதார நெருக்கடிகளில் முதலாளியின் ஒத்துழையாமை எனப் பல காரணங்கள்…

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts