அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

இரா முருகன்


எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ?

பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள்.

ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ?

கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து அப்புறம் நிர்மால்யதாரியான பக்க தேவதைக்கும் படைத்தது போக உண்டான மிச்சத்தை யாசித்துக் கொண்டு அங்கே பலிக்கல் பக்கம் பூதங்கள் வந்து நிற்கும். வழியிலே நடக்கும்போது பிரேத உபாதைகள் கன்னியகை என்றால் எங்கே எங்கே என்று ஓடி வந்து ஒண்ட இடம் பார்க்கும். கல்யாணம் திகைந்த பொண்ணு என்றால் இன்னும் இஷ்டம்.

நாணிக்கு முறைச் செக்கன் எட்டுமானூரிலிருந்து வரப் போகிறான். வேளி கழித்து அவளுக்கு இடம் மாற்றம் வருவதற்கு முன் பகவதிக்குட்டி புகையிலைக் கடைக்காரனைக் கல்யாணம் செய்து கொண்டு பாண்டிக்குக் குடிபோய்விடுவாள்.

புகையிலைக் கடைக்காரனோடு படுத்துப் பிள்ளை பெத்துக்கப் போறே. நாளைக்கு அதுகளுக்குத் தலையிலே வெளிச்செண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டினாலும் எட்டு ஊருக்கு புகையிலை வாடை தான் அடிக்கும் பாரு.

நாணி அம்பலத்துக்கு வரும்வழியில் அவளைக் களியாக்கிக்கொண்டு வந்தாள்.

ஆமா, உன்னோட நம்பூத்ரிக்கு ஹோமப் புகை நெய்வாடையும் சமித்து வாடையுமா மணக்கப் பிள்ளை பெத்துப் போடப்போறே. நான் புகையிலை வாடையோட பெத்தா என்ன குறஞ்சுது சொல்லு.

பகவதி அவளை அடிக்கக் கையை ஓங்க நாணி வரப்புகளுக்கு நடுவிலே குதித்துக் கொண்டு ஓடினாள்.

ஆக, அரசூர்ச் சங்கரய்யன் பகவதியைக் கூடிய சீக்கிரம் கைபிடிக்கப் போகிறான். அது நடக்குமோ இல்லை அவ்வளவுதானோ என்று இழுபறியாகி இப்போது தான் லிகிதம் வந்து சேர்ந்திருக்கிறது. நிச்சயித்த தேதியில் நிச்சயித்தபடிக்குக் கல்யாணம் வைத்துக் கொள்ளப் பூரண சம்மதம் என்று சுப்பிரமணிய அய்யர் கையொப்பிட்டு அனுப்பிய கடிதத்தை நேற்றைக்கு தமையன் துரைசாமி அய்யன் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து உரக்கப் படித்தபிறகு பகவதிக்கு நிலைகொள்ளவில்லை.

வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி பகவதி அங்கே படி ஏறி வரும்போது போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம். வீடே துர்ச்சொப்பனம் போல பற்றி எரிந்து இல்லாமல் போயிருக்கவும் வேண்டாம். ஆனால் அதற்கு பகவதிக்குட்டி என்ன செய்ய முடியும் ? அவள் பார்க்காத அந்த மூத்தானையும், அரண்மனைக்குப் பக்கத்து மச்சு வீட்டையும் நினைத்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் வடிக்க முடியும். அவளை நிச்சயம் செய்த அப்புறம் நடந்ததாக இருக்கட்டுமே. அவளால் இல்லை அந்த அசம்பாவிதம். பகவதி ஜாதகம் எல்லா விதத்திலும் தோஷமில்லாதது என்று அரசூரில் இருந்து வந்த அய்யங்கார் ஒருத்தர் ஏகப்பட்ட சோழிகளை உருட்டி சிக்கலான கணக்கெல்லாம் போட்டுச் சொன்னதாக தமையன் பிரஸ்தாபித்தது உண்மைதானே ?

அந்த ஜோசியர் துரைசாமி அய்யன் வீடு கூட பிரேதபாதைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை நிவர்த்திக்க யந்திரம் நிர்மாணித்துத் தருகிறதாகவும் சொன்னார். உடனடியாக முடியாது. கல்யாணத்துக்கு வரும்போது கொண்டு வருகிறேன் என்று கொஞ்சம் முன்பணமும் வாங்கிப் போயிருக்கிறார் அவர். கையோடு செய்து கொடுத்திருந்தால் சிநேகா மன்னியின் தகப்பனார் இப்படிக் கோழி றக்கை மாதிரிப் பறந்து வெடிவழிபாட்டு இடத்தில் விழுந்து இல்லாத கூத்தெல்லாம் பண்ணியிருக்க மாட்டார்.

நாணி அந்த வயசன் பறந்ததைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களில் ஒருத்தி.

பாவமாக்கும் அந்தக் கிளவன். தன்னேர்ச்சயா எவ்விப் பறந்தது மாத்ரம் இல்லே. எங்களோட மனை நம்பூத்ரிகள் மூத்ரம் ஒழிச்சுட்டு வர்ற போது சகலருக்கும் கிடைக்கிற மாதிரி சர்வ தர்சனம் வேறே. இது ஆகாசத்துலேருந்துங்கிறது அதிவிசேஷம். பாரு, நீ சரியாச் சாதம் போடலேன்னா அந்தப் புகையிலைக் காரனும் பறந்துடுவான். இடுப்புலே கயறைக் கட்டி வச்சுக்கோ அவனை.

எடா நாணி நீ உன் தம்ப்ரானை இடுப்புக்குக் கீழே பிடிச்சு வச்சுக்கோ. வேதம் படிச்சவன், ஓத்துச் சொல்றவன். சாமாத்திரி ஓய்க்கன். சாடிப் பறந்தா விழறது வலிய தரவாடுலேயாயிருக்கும் கேட்டியோ ?

சிரிப்பும் கும்மாளமுமாக துவஜஸ்தம்பம் தொழுது நாளம்பலத்தில் நுழைய மேல் சாந்தி வலிய பலிக்கல் பக்கம் நின்றபடிக்குத் திரும்பிப் பார்த்தார்.

பகவதியம்மே, இதென்ன சென்னமங்கலம் தேவி க்ஷேத்ரமா, கொட்டும்சிரி வழிபாடு நடத்த ? என்னத்துக்காம் இந்தக் கொம்மாளி ? உன் கல்யாணம் குறிச்சா, அதோ கூட்டுக்காரிக்கும் வரன் திகஞ்சது கொண்டா ?

பகவதிக்குட்டி வீட்டில் மேல்சாந்தி எம்பிராந்திரியை நல்ல வண்ணம் பழக்கம் உண்டு. வீட்டு வாசலில் உட்கார்ந்தபடிக்கு அடக்காயை மென்றபடி அவள் தமயனார் யாருடனோ அல்லது அத்திம்பேர்மாரோடோ வர்த்தமானம் சொல்லிக் கொண்டிருந்து விட்டு சாயங்கால பூஜைக்கு நேரமாச்சு என்று இடுப்பில் தாக்கோலைத் தடவிப் பார்த்தபடி நடக்கிறவர். பகவதிக்குட்டி குழந்தையாக இடுப்பில் அரசிலையும், பட்டுத் துணியுமாகத் தகப்பன் மடியில் உட்கார்ந்தபடிக்கு அன்னப் பிரச்னம் அவர் ஆசியோடு தான் நடந்தது. அம்பல மேல்சாந்தியாக அவர் உத்யோகம் ஏற்றெடுத்த தருணம் அது.

அம்மாவா, இங்கே ஸ்ரீகோவிலிலே நீங்க ஆவானப் பலகையிலே பத்மாசனமிட்டு மூலமந்திரம் பிரயோகம் பண்ற முன்னாடி தலத்ரேயம் பண்ணுவேளே கையைத் தட்டித் தட்டி. அது கொட்டும் சிரியிலே பாதிதானே ?

பகவதிக்குட்டி சிரிப்பை அடக்க முடியாமல் கொஞ்சம் வெடித்துச் சிதறி முகத்தை இன்னும் பிரகாசிக்க வைக்க விசாரித்தாள்.

குட்டிக்கு இதெல்லாம் யாரு படிப்பிச்சது ? பள்ளிக்கூடத்துலே இதும்கூடிக் கல்பிதமோ ?

எம்பிராந்திரி அதிசயப்பட்டுப் போய் நிற்க, நாணி சொன்னாள்.

சும்மாதானா ? பாண்டிக்குட்டியாச்சே. நாலெழுத்துப் படிக்க அவ வீட்டுப் பெரியவா அனுசரனையா இருக்கா. படிச்சிருக்கா.

நீயும் படிக்க வேண்டியதுதானே ?

எம்பிராந்திரி துண்டால் தோளைத் துடைத்தபடி கேட்டார். தளி வாசலில் பரிசாரகன் எங்கே போனான் ?

அம்மாவா நீங்க உங்க பிள்ளையோட இப்பப் பேச்சு வார்த்தை உண்டோ இல்லியோ ? ராஜி ஆயாச்சா ?

பகவதிக்குட்டி விசாரித்தாள்.

ஏன், எனக்கென்ன அவனோடு பிணக்கு ? உங்க மனையிலே அந்த ஆலப்பாட்டு வயசன் எக்கிப் பறந்து இங்கே துவஜஸ்தம்பத்தை அசுத்தப்படுத்தின சல்யம் பத்தி அவன் பிஷாரடி வைத்யன் கட்சி. நான் பிராசீனம் பேசற வைதீகன். போறது. வயசன் தான் இப்போ பறக்கறதை நிறுத்தி நிலத்துலே நடக்கறானாமே. பிஷாரடி கட்சி கட்டினது ஜெயிச்சதோ, என்னோட பழய பஞ்சாங்கம் ஜெயிச்சு வந்ததோ, உபாதையோ பாதையோ நீங்கினதுலே நிம்மதி எல்லோருக்கும்.

ஆனாலும் இன்னும் தகப்பனும் பிள்ளையும் அனுசரித்துப் போவது முழுக்க நேரவில்லை என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்ததை பகவதிக்குட்டி கேட்டிருக்கிறாள்.

அம்மாவா, செறிய எம்ப்ராந்திரிக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சுடுங்கோ. எல்லாம் சரியாயிடும்.

நாணி கலகலவென்று சிரித்தாள்.

உன் முறைச்செக்கன் இல்லாட்ட நீயே என் மனைக்கு வரலாமேடி பொண்ணே. இப்பவும் ஒண்ணும் குறையலே. அவனை வேறே மனையிலே போய் வேளிகழிக்கச் சொல்லு. என் பிள்ளைக்கு உன்னை முடிச்சுடலாம். ஊரோட மாப்பிள்ளை. நாணிக்குட்டி வெளியே போகவே வேண்டாம்.

தம்ப்ராட்டி எங்கே இருந்தாலும் அந்தர்ஜனம்தானெ எம்பிராந்திரி அம்மாவா. உலகம் தெரியாம மரக்குடைக்குள்ளே ஒடுங்கி உக்காரணும்னு தான் விதிச்சிருக்கு ?

நாணி கேட்டாள் முகத்தில் சிரிப்பு இல்லாமல்.

ஏய் அதெல்லாம் சீக்கிரம் நேராயிடும். நம்பூத்ரிப் பெண்குட்டிகளும் படிச்சு மேன்மையோடு வர காலம் வரப்போறதுன்னு என் புத்ரன் சொல்றான். நெஜமா இருக்குமோ என்னமோ.

தளிவாசலில் நின்று பரிசாரகன் எட்டிப் பார்த்தான். நைவேத்ய அன்னத்துக்கு எம்பிராந்திரி பூத சுத்தி செய்து மூலமந்திரம் ஜெபித்தாலே உலையில் ஏற்ற முடியும்.

அம்மே நாராயணா தேவி நாராயணா என்கிறபடிக்கு நாமம் ஜெபித்துக் கொண்டு சிரியைக் குறைத்துப் பிரகாரம் சுற்றி வாருங்கள் குழந்தைகளா. சாயங்கால பூஜையை நான் ஆரம்பிக்கறேன்.

அவர் கிளம்பும்போது வெடிவழிபாடுகாரன் நொண்டிக்கொண்டே வந்தான். கையில் இருந்த சம்புடத்தை அவரிடம் நீட்டினபடி ஆச்சரியமாயிருக்கு திருமேனி என்றான்.

என்ன ஆச்சர்யத்தைக் கண்டாய் நீ அந்த சம்புடத்துக்குள்ளே ? அசுத்த வஸ்து ஒண்ணும் எனக்குப் பார்க்க வேண்டாம்.

எம்பிராந்திரி பிடிவாதமாக மறுத்தார்.

அது உள்ளே என்னதான் இருக்கும் ? பிரகாரம் சுற்றியபடியே பகவதிக்குட்டி யோசித்தாள். வடக்கே பலிக்கல் பக்கம் வரும்போது வெடிவழிபாடுகாரன் குரல் சத்தமாகக் கேட்டது.

திருமேனி. ஒரு விரல் தானே அதுலே அடச்சுருந்தது. இப்போ அது அஞ்சு வெரலாயி வளர்ந்திருக்கு.

சிநேகா மன்னியின் தகப்பன் அந்த ஆலப்பாட்டு வயசன் மூத்ர நெடியோடு வெடிக்காரன் மேலே விழுந்ததில் அவன் சுண்டுவிரல் தெறித்துப் போய் விழுந்தது நினைவு வந்தது அவளுக்கு. அப்புறம் நாலு காதம் கடந்து ஏதோ செளியில் கிடந்த அதை அம்பலத்துக்கு வந்த யாரோ இலைத் தொன்னையில் வைத்து எடுத்து வந்து கொடுத்தார்களாம்.

பாதிக்கு சதை பிய்ந்து போயிருந்த அதை அப்படியே ஒட்ட வைக்க முடியாது. கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் அது பழைய நிலைக்கு வரும். அப்புறம் நுண்ணிய ஊசியையும், பறவை இறக்கையில் எடுத்த இழையையும் வைத்துத் தைத்தால் தன்பாட்டில் அது சேர்ந்து விடும் என்றார் பிஷாரடி வைத்தியர். அதற்கான செலவாக துரைத்தனப் பணமாகத்தான் வேண்டும் என்றும் அது ஏழரை ரூபாய் என்றும் அவர் சொன்னதை கிட்டாவய்யன் ஏற்றுக் கொண்டான். ஆலப்பாட்டு மைத்துனர்கள் அதில் பாதியையாவது அடைப்பார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு.

பிஷாரடி வைத்தியர் சொன்னபடிக்கு அந்த விரலை வெடிக்காரன் வெளிச்செண்ணெய் புரட்டி மூலிகைத் தண்ணீரில் முழுக வைத்துச் சம்புடத்தில் எடுத்துப் பத்திரப்படுத்தி இருந்தான். கோவில் துவஜஸ்தம்பத்திற்குப் பத்து அடி தள்ளி கிழக்கு நோக்கி அதை வைத்து வெடி வழிபாடு நடத்தினால் அதில் சதை இன்னும் கொஞ்சம் வளரலாம் என்றும் அப்புறம் பிஷாரடி வைத்தியர் சொன்னபடிக்கு அதை சஸ்த்ர சிகிச்சை செய்து அவன் காலில் திரும்பவும் பொருத்தி விடலாம் என்றும் எம்ப்ராந்திரி யோசனை சொன்னபோது பிஷாரடி வைத்தியர் அரைமனதோடு சம்மதித்தாலும் வெடிக்காரன் முழுக்க சம்மதம் என்றான்.

ராத்திரியில் திரி அணைத்து, அம்பலம் அடைத்துப் பூட்டி மேல்சாந்தி நடக்கிறபோது துவஜஸ்தம்பத்திற்கு வெகுதூரம் அப்பால் மண் மேட்டில் பிரதிஷ்டை செய்ததுபோல் நட்டு வைத்திருந்த அந்தச் சம்புடம் கண்ணில் படும். அதின் மேல் சூட்டிய கொன்றைப் பூ மாலையும். நிர்மால்யப் பிரசாதத்தில் ஒரு பருக்கை எடுத்து அந்தப் பக்கம் எறிந்தபடி போவார் அவர்.

தினசரி பிரசாதம் கொடுத்தது அதிக போஷாக்காகி ஒரு விரல் இருந்த இடத்தி ஐந்து விரல் முளைத்து விட்டதாக வெடிக்காரன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது பகவதி காதில் விழுந்தது. அதிலே எல்லாம் வாச்சி வாச்சியாகப் பேய் பிசாசுக்கு வாய்த்தது போல் நகமும் வேறேயாம்.

குருப்பே நீ யாதொண்ணுக்கும் கவலைப்படாதே. பிஷாரடி வைத்தியன் சஸ்த்ரக்கிரியையிலே ஒரு விரலை மட்டும் கால்லே எடுத்து வச்சுடுவான்.

மத்ததை என்ன செய்ய ?

வெடிக்காரன் விடாமல் கேட்டான்.

பூஜை முடிந்து வந்து யோசிக்கலாம் அதை.

எம்பிராந்திரி கிளம்பிப் போனார். வெடிக்காரன் விந்தி விந்தி நடந்தபடி நாளம்பலத்தை விட்டு இறங்கி வெடிவழிபாடு ஸ்தலத்துக்குப் போனதைப் பார்த்தபடி நமஸ்கார மண்டபத்தில் நுழைந்தாள் பகவதி. தரையில் தேகம் படக் காலை மடித்து நமஸ்காரம் செய்தாள்.

நாணிக்குட்டி இன்னும் பிரதிக்ஷணம் முடிக்கவில்லை. அவள் இருபத்தோரு சுற்று வைப்பது வழக்கம். அது முடிய இன்னும் கொஞ்சம் நாழிகையாகலாம். அதுவரை கூத்தம்பலத்தின் ஓரத்தில் உட்கார்ந்து சாக்கியார் கூத்துக்கான முஸ்தீபுகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவள் வலிய பலிக்கல் பக்கம் வந்தபோது உடம்பில் பாசி வாடை வீச ஒரு தமிழ் பிராமண ஸ்திரி நின்று கொண்டிருந்தாள்.

பகவதிக்குட்டி, புண்ணியமாப் போறது. எனக்குக் கொஞ்சம் அன்னம் கொடுக்கச் சொல்லு. பசிக்கறது.

இவளுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது ?

பகவதிக்குட்டி ஆச்சரியப்பட்டுப் பார்க்க அந்தப் பெண் விளக்குமாட வெங்கல விளக்கு வெளிச்சத்தில் உருவம் மங்கிப் போய் ஒரே தட்டையாகத் தெரிந்தாள்.

பிரேத ரூபமோ ?

ஆமா, நான் போய்ச் சேர்ந்து வருஷம் முன்னூறாச்சு. உங்க ஆத்துக்காரர் அரசூர்ச் சங்கரய்யர் மன்னி. அவரோட தமையன் சாமிநாத ஸ்ரெளதிகளோட, சாமாவோட, சாமாத் தடியனோட வப்பாட்டி. விரிச்சுண்டு படுத்தவ.

அவள் சிரிக்க ஆரம்பிக்க, பகவதிக்குட்டி தலையைக் கையில் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்தாள்.

விளக்குமாடத்திற்குக் கீழே இருந்து ஒரு செப்புச் சம்புடம் அவள் இருந்த திசைக்கு நகர்ந்து வந்தபடி இருந்தது.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts