மறுபக்கம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ஏலங்குழலி


‘குமரப்பா ‘ அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது.

வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து, ஒயிலாக குடை பிடித்து நிற்கும் பெண்கள். துணையாக வந்த கணவன்மார்கள், குடும்பத்தினர். மொபெட்டும், ஸான்ட்ரோவும் ‘சர்சர் ‘ ரென்று நீரைப் பாய்ச்சியவாறு பறந்தன. சிற்சில சைக்கிள்கள் கிணுகிணுத்துக்கொண்டு இருளில் மறைந்து வெளியேறின.

இராமநாதன் ஆட்டோவை காக்கச் சொல்லிவிட்டு, கும்பலில் அனுபமாவைத் தேடினான். காணவில்லை. வாயிலில் இருக்கமாட்டாள் என்பது தெரியும். இருந்தாலும்…அரங்கத்திற்குள் நுழைந்தான்.

உள்ளே, ஏசியின் மிச்சக் குளிர் ‘ஜிலீ ‘ரென்று தாக்கியது. ‘இந்தக் மழைக்காலத்தில் என்னத்திற்கு ஏசி ? ‘ என்ற நினைப்பை ஓரமாகத் தள்ளிவிட்டு, மேடையைப் பார்த்தான். பிங்க் நிற பட்டுப்புடவையில், அனுபமா ஜொலித்துக்கொண்டிருந்தாள். சாயங்காலம் நடந்த விழாவை நிர்வகிக்கும் பொறுப்பும், இறுதியாகக் கொடுத்த உரையின் அலுப்பும் தெரியாமல், முகத்தில் பளீர் புன்னகையுடன் மேடையில் இருந்த கூட்டத்திடம் பேசிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து அவளது அழகை ஒரு கணம் ரசித்துவிட்டு, இராமநாதன் குஷன் நாற்காலிகளைத் தாண்டிக் கொண்டு அவளை நெருங்கினான்.

“அனு ?”

அவள் புன்னகை மாறாமல் திரும்பினாள். “ ஹாய், ராம்! இதோ வந்திட்டேன்.”

பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளிவந்த இருவரும், மழைத்தூறலிலிருந்து தப்பிக்க, அரை ஓட்டத்தில் ஆட்டோவில் ஏறினார்கள்.

“நிகழ்ச்சி எப்படி இருந்துச்சுன்னு கேக்கவேயில்லியே, ராம் ?”

“இப்பத்தான் சொல்லேன்.”

“Superb. வத்சலா தணிகாசலத்தோட லொள்ளுதான் தாங்கமுடியலை. மனசுல என்ன நெனைச்சுட்டிருக்கான்னு புரியலை. சரிக்கட்டிட்டோம்னு வெச்சுக்குங்க…வழக்கம் போல என்னைப் பேசச் சொன்னாங்க…”

“என்னன்னு ? ‘இந்தியாவில் பெண்கள் சம உரிமை ‘யா ? இல்லை, ‘பெண்கள் கல்வி” யா ?”

“கிண்டலாப் போச்சில்ல உங்களுக்கு ?” அவளும் புன்னகைத்தாள். “நான் பாட்டுக்கு நிகழ்ச்சியமைப்போட சரின்னு நின்னுகிட்டிருந்தேன். கடைசீல ‘பேசியே ஆகணும் ‘னு – நம்ம ரமணியும் கலாவும் இருக்காங்க இல்ல ? இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க-“

“சும்மாவா ? உன் ரெப்புட்டேஷன் அப்படி. நீ கலந்துக்கிற நிகழ்ச்சிலே, உன் ஸ்பீச் இல்லாமலா ?”

“அவங்களும் அதைத்தான் சொன்னாங்க.” அனுபமாவின் குரலில் பெருமிதம் எட்டிப் பார்த்தது. “இன்னிக்குக் கொஞ்சம் மென்மையான டாபிக் எடுத்துக்கிட்டேன். ‘பெண்களுக்கேற்படும் மன உளைச்சலைத் தடுப்பது எப்படி ? ‘ அப்படான்னு. இன்னியத் தேதிக்கு, ஸ்ட்ரெஸ்தானே உலகத்துலே மிகப்பெரிய வியாதி ? காலைலே எழுந்துக்கிறதுலேர்ந்து, இராத்திரி தூங்கப்போகிற வரைக்கும், எத்தனை கவலை ? எத்தனை டென்ஷன் ?

“உண்மைதான்.”

“குடும்பத்துலே இருக்கிறவங்க ஒத்தாசையா இருந்தா, டென்ஷன் கொஞ்சமாவது குறையும். எங்கே ? நம்மூருலேதான் அதுக்குக் கொடுப்பினையே இல்லையே ?”

இராமநாதன் அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

“உங்களைச் சொல்லலை,” என்றாள் சிரித்துக்கொண்டே. “அதை விடுங்க. அப்புறம் என்ன பேசினேன் ‘னு கேக்க மாட்டாங்களா ?”

“சொல்லு, கேட்டுகிட்டுதான் இருக்கேன்.”

“டென்ஷன் எதனாலேயெல்லாம் அதிகமாகுதுன்னு பேசினேன். அதைக் குறைக்க சில வழிகளையும் சொன்னேன். நம்ம பெண்களுக்கு எதையும் பிச்சு பிச்சு சொல்லியாகணும். இல்லேன்னா படிச்சவங்களேகூட சரியாப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க…”

இராமநாதன் கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். ஆடிட் காரணமாக, காலை ஏழு மணிக்கே ஆஃபீஸ் சென்றதன் விளைவு. இன்றிரவாவது சீக்கிரம் தூங்கப் போகவேண்டும்.

“…ஒரு சுலபமான வழி இருக்கு. மனசுவிட்டு யார்கிட்டயாவது பேசிக்கிட்டா, சரியாக வாய்ப்பிருக்கில்லையா ?”

“கரெக்டுதான்.” ஸேல்ஸ் லெட்ஜரில் எண்ட்ரி விட்டுப்போனால், இவனுடைய தவறா என்ன ? வெங்கட்தானே எண்ட்ரி போட்டவன் ? அவனையல்லவா கேட்க வேண்டும் ? ஆடிட்டர்தான் சொல்லிக் காண்பித்தார் என்றால், சுதர்சனும்…மனிதர்களுக்கு அறிவு என்று ஏதாவது இருக்கிறதா ?

“…ஒரு மூச்சு சொல்லி அழுதிட்டா கூட, மனசு லேசாகிடும்…”

அடையாறு வந்திருந்தது. மழையில் சொட்டிக்கொண்டிருந்த வேப்பமரத்தின் ஓரமாக ஆட்டோ நிற்க, அனுபமா கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே விறுவிறுவென்று நுழைந்தாள். இராமநாதன் பணம் கொடுத்துவிட்டு, நிதானமாக உள்ளே வந்த பொழுது, தூக்கக் கலக்கத்துடன் அம்மா ஹாலில் நிற்பது தெரிந்தது.

“என்னம்மா, தூங்கலையா ? ‘லேட்டாகும் ‘னு நாந்தான் சொன்னேனே ?”

“தூக்கம் வரலை. மழை வேற…” அம்மாவின் தூக்கமின்மைக்குக் காரணம் அவனுக்கு நன்கு தெரியும்.

‘சாப்பாடு வேண்டாம் ‘ என்று அனு சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் சென்றுவிட, அவன் மட்டும் டேபிளில் உட்கார்ந்தான். அம்மா கண்களை அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டு சாதம் பரிமாறினாள். அவளது பார்வையைத் தவிர்த்துவிட்டு, அவன் தட்டில் கவனம் செலுத்தினான்.

“இந்த வாரத்துலே இது எத்தனாவது தடவை, தெரியுமா ?”

இராமநாதன் பதில் சொல்லவில்லை.

“எல்லாத்துக்கும் நீ வாயை மூடிக்கிட்டு ஒப்புக்கிறதுனாலேதான் இத்தனையும். “

“………………………………”

“நீ வாயை மூடிக்கிறது மட்டுமில்லாம, அவளைக் கூட்டிக்கிட்டு, கொண்டுவந்தும் விடுறே. அதான், ஏறிப்போய்க் கிடக்கு.”

“என்னம்மா-“

“என்ன நொள்ளம்மா ? எத்தனை தடவைடா சொல்லுறது, இந்த பேச்சு, புளியங்காயெல்லாம் நமக்கு வேணாம்னிட்டு ? தெருவுலே நின்னுகிட்டு அவ கதையளப்பா, நீ ராத்திரி ஒம்பதுக்கும் பத்துக்கும் அவளைக் கூட்டிக்கிட்டு வருவியா ? அப்புடி என்ன பெரிய பேசிக் கிளிக்கிறா அவ ? இவ்வளவு படிச்ச பொண்ணு வேணாம்னு முட்டிக்கிட்டேன். ஆரு கேட்டாங்க ? எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க, தெரியுமா ?”

அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இராமநாதன் பெருமூச்சு விட்டான்.

“இந்த சண்டை நாம் நெறைய போட்டாச்சும்மா.”

“எத்தனை போட்டாலும் உனக்கு அறிவு வரலியே ? நா எங்க போயி முட்டிக்க ?”

“எங்கியும் முட்டிக்க வேணாம். போய்ப் படு. காலைலே பாத்துக்கலாம்.”

“மண்ணாங்கட்டி. விடிகாலைலே நீ பரக்கப்பரக்க ஆஃபீசுக்குக் கெளம்பிருவே. அப்புறம் இங்கே என்னத்தை…”

அவன் கவனமில்லாமல் தட்டைக் கழுவிவிட்டு, ஹாலைத் தாண்டிக்கொண்டு சென்றான். இன்னொரு பெட்ரூமில் அப்பா ஓரமாகச் சுருட்டிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.

“…எக்கேடோ கெட்டுத் தொலைங்க. எனக்கென்ன ?” அம்மா சமையலறையில் முனகுவது மெல்ல மெல்லத் தேய்ந்தது. பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் மொத்தமாக மறைந்தது.

அனுபமா படுக்கையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். “ஹால்ல என்ன ஒரே சத்தம் ?”

“வழக்கமானதுதான்.”

“ப்ச். இதுவே பொழப்பாப் போச்சு. இவங்களுக்கு என்ன வந்துச்சுங்கறேன் ?”

“விட்று அனு. பழையகால டைப். அவங்களுக்குப் புரியாது.”

“யாரு, இவங்களா ? ஹ! உங்க தங்கச்சி தனியா ஃபாரின் போனப்பமட்டும் ஊர் முழுக்க சொல்லிக்கிட்டாங்க ? நான் அரங்கத்துலே பேசினதுதான் தப்பாப் போச்சாமா ?”

அவன் கண்களை நீவிவிட்டுக்கொண்டான். “அனு… ப்ளீஸ். நாளைக்குக் காலைலே சீக்கிரம் போகணும்.”

“என்னத்தை சீக்கிரம் போகணும் ? இதெல்லாம் கேக்க பொறுமை இருக்காதே ? அப்ப மட்டும் அந்தப் பக்கம் அன்பு பொங்கி வழிஞ்சிறும். ‘பெண்கள் முன்னேற்றம் ‘னு எல்லாம் வெறும் பேச்சுதான். நிஜ வாழ்க்கைலே ஒரு புண்ணாக்கும் கெடையாது. ஒரு ஸ்பீச் கொடுத்ததுலேதான் குடி முழுகிப் போச்சாமா ? “

‘சிகப்பு ஃபைலை ட்ராயரில் வைத்தோமா ? ஷெல்ஃபில் வைத்தோமா ? அதில் சில வவுச்சர்கள் இருக்கின்றன. ஜெயந்தியைக் கேட்க வேண்டும். நல்ல நாளிலேயே யாருக்கும் விரலசைக்க மாட்டாள். நைச்சியமாகப் பேசி, காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று செய்வார் யாருமில்லை. நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நம்மைத்தான் எல்லொரும் கை காட்டுவார்கள்… ‘

“…இப்படி எல்லார் வாய்க்கும் பயந்து பயந்து, ஒருத்தர் கிட்ட கூட மனசைப் பகிர்ந்துக்காம இருக்கிறதுனாலதான் பொம்பளைங்களுக்கு இத்தனை பிரச்சனை…”

அவன் பெருமூச்சுடன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

—————————————————————————————–

elankhuzhali@yahoo.com

Series Navigation

author

ஏலங்குழலி

ஏலங்குழலி

Similar Posts