திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/2/

அப்பா நல்லடக்கம் செய்யப்பட்ட போது சுடரின் படிப்பில் மண் விழுந்தது.

படிக்கிறதில்தான் சின்ன வயசில் இருந்தே எத்தனை ஆசை அவளுக்கு. அதைவிட அவள் படிக்கிறதில் அவள் அப்பா காட்டிய ஆர்வம்… அவருக்கு ஒரே குழந்தை. பெண் குழந்தை. சுடர்க்கொடி.

குழந்தை… அதும் ஒரே குழந்தை… பெண் குழந்தை என்ற அளவில் அம்மாவுக்கு சிறு வருத்தம் உண்டுதான். அவள் காலம் வேறு. அப்பா அதைப் பாராட்டவில்லை என்பது பெருமையான விசயம். ‘ ‘ஆணானா என்ன பெண்ணானா என்ன காமாட்சி ? ‘ ‘ என்று அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி இவளைத் தலையைத் தடவித் தருகிறார் அப்பா. இப்பவும் பதிவாய் அந்தக் காட்சி இதோ உள்ளே கிடக்கிறது.

அவரது குள்ள உடம்பு. உத்திராட்சம் கட்டிய கண்டம். நரை ஊடாடிக் கிடக்கிற ஒட்டக் கத்தரித்த தலைக் கிராப்பு. கருப்பு பிரேம் வட்டக் கண்ணாடி. விபூதி பூசி மணத்துக் கிடக்கிற உடம்பு. பழுப்பு வேஷ்டி. ஜிப்பாபாணிச் சட்டை. அதன் இருபக்க முட்டுக்கள் கண்ட சட்டையோடு தைக்காத தனிப் பித்தான்கள். மூக்குப்பொடி டப்பி. பளபளத்த பொலிவுடன் வெற்றிலைப் பெட்டி. தோளில் எவ்வெப்போதுமாய்க் கிடக்கிற சளி-அவசரத்துக்கான ஈரிழை குத்தாலத்துண்டு. இடுப்பு முடியில் சுருக்குப் போட்ட விபூதிப் பை. அதனுள்ளிருந்து எடுத்துத் தரும் சில்லறை நாணயங்கள். அப்பாவை மறக்க முடியுமா ?

மல்லாக்கப் படுத்து, பெருங் குறட்டையுடன்… மார்புமேல் கைகிடக்கத் துாங்கும் அப்பா.

அப்பா மாலைகளில் ஊர்க்கோவில் சிவன் சன்னிதியில் தேவார திருப்பதிகங்கள் ஓதுவார். சந்திகால பூஜைநேரம் காண்டாமணி அடிப்பதையும், பதிகம் ஒதுவதையும் அவர் தம் பெருமையாய்க் கண்டவர். கணீரென்ற காண்டாமணி நாக்கு உள்ளறைக்குழியை மோதிய விண்ண்ணென்ற வெங்கல அதிர்வு. அதே சுருதிபோல் அப்பா மனசெல்லாம் புல்லரிக்கப் பதிக எடுப்பு எடுப்பார். என்ன கூட்டம் கூடியிருக்கும் சந்திகால பூஜைக்கு. திரை விழுந்தாலும் அலங்காரபூஷிதனாய் லிங்கமூர்த்தியை தரிசிக்கக் காத்திருக்கும் ஜனங்கள். குளத்துசாமி தீவட்டி துாக்கித் தயாராய் நிற்கிறதும், சட்டென்று திரையொதுக்குகிறதும் பரவசம். எதோ அபூர்வமான விசயம் போல உள்ளே திகட்டுவது நித்தியப்படி வாடிக்கை. சட்டென விழித்த மணியொலி. அதன் அதிர்வான சிறிய மெளனம். சிறிய அவரது மனங்குவிப்பு. கண்மூடிய பிரார்த்தனை. சட்டென பறவைபோல் சாரீர அலையெடுப்பு… பாடல் முடிய மீண்டும் காண்டாமணிவிழிப்போடு விதவிதமான தீபாராதனைகள். ஒளியடுக்குகள். ஒளியை அடுக்கிப் பார்க்க நினைத்த மனிதர்கள் ஆச்சரியம் அல்லவா ?… கொடியில் பூத்த பூ போல… தட்டடுக்குகளில் பூத்துச் சிரிக்கிறது வெளிச்சம். நிறைவுக் கட்டத்தில் பெருந்தட்டு. நுாற்றெட்டு ஜோதியாராதனை… நிமிர்த்திப் பிடித்த நவீன சாண்டிலியர் வெளிச்சம் போல… காலத்துக்கே பிரகாசம் பாய்ச்சிய கவிதைக் கணங்கள். ஒவ்வொரு தீபாராதனை மாறும்போதும் அப்பாவின் கையியக்கம் மேலும் வேகம் பெறும். ஒலி உக்கிரப்படும்.

குளத்துசாமி ஏற்றித் தரத்தர பட்டர் கையில் ஏந்தி மூர்த்திக்கும் பிராகாரச் சுற்றடுக்கு சந்நிதிகளிலும் காட்டுவார். பார்க்க சாதாரண விசயம்போல் தெரியும். ஒரு கை மணியசைக்க ஒருகை அசங்காமல் கற்பூரங் காட்டணும்வே. நாம செஞ்சா… மணியடிச்ச வாகில் கற்பூரத்தட்டும் ஆடும். இல்லாட்டி அசைக்காமக் கற்பூரங் காட்டலாம். மணியசைக்க வராது…

கற்பூர ஆரத்தி மாத்திரம் சந்நிதிப் பிரசாதமென பட்டர் வெளியே எடுத்து வர அதைக் கண்ணொற்றிக் கொள்ள மோதும் திரள். குங்கும விபூதி பகிர்ந்து வழங்கும் பட்டரின் விரல்-வேகஇயக்கம். கற்பூரத்தட்டில் விழும் நாணயங்களை ஒதுக்கி ஒதுக்கி விபூதி வழங்குவார் பட்டர்.

உலகம் அழகாய் இருந்தது அப்போது. அந்தக் காலங்கள்… கிராமத்து மாலைகள் அழிந்துபட்டன. கிராமமே மாறிவிட்டது. மேளகாரனே சந்திபூஜைக்கு வாசிக்க குடித்துவிட்டு வருகிற தலைகீழ் மாற்றம். சிவதாணு இறந்து போனார். அவரது அந்திம கிரியையே பொதுக்காரியமாகி விட்டதே… ஊர்க்காரர்களே உறவுக்காரர்கள் என்ற நிலை.

அம்மா வாதஉடம்புக்காரி. முட்டிவீக்கம். சட்டென எழுந்து கொள்ளக்கூட முடியாது. தாட்டிக உடம்பு. சிவதாணு நாலுகடை பஜார்க் கடைகளில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டார். கோவில் நெல்லளப்பு கண்ட வம்சம். ஆண் வாரிசு இல்லாமல் போனதே… என்ன செய்ய ?

அப்பாவை நல்லடக்கம் செய்தபோது அந்தக் குளத்துசாமி மாத்திரம் அழுதான். பட்டர் வரவில்லை. யாருக்கும் அவர்கள் காத்திருக்க வேண்டி யிருக்கவில்லை. ஒரு தம்பி அவருக்கு. வேலுமணி என்று பேர். அப்பா சொல்லக் கேள்விப் பட்டிருந்தாள். எங்கிருக்கிறாரோ இப்போது… ரொம்பக் காலமாகவே அவர்கள் பற்றித் தகவல் தெரியாது.

துட்டு புரளாத உறவுகளை யாரும் பெரிதாய்ப் பாராட்ட மாட்டார்கள்… என்று புரிந்தது அவளுக்கு. வீட்டிலும் மயானத்திலும் காற்றுங் கூட சிணுங்காத நிதானப் போக்கில் இருந்தது. வேறு யாரும் அழவில்லை. சுடருக்கும் அம்மாவுக்கும் அழுகையை விட திகைப்பு அதிகமாய் இருந்தது.

அம்மாவுக்கு ஆஸ்த்துமா கண்டது. அது வேறு-

ஆனால் மத்த குமருகளோடு மல்லிகைப் பாத்திகளில் முன்குனிந்து கோது பறித்து பின்துாளியில் சேகரிக்க சுடருக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. முன் குனிய கும்மென்று செடி மணத்தது. சமையலறையில் ஆவி பறக்க மணக்கும் சாம்பார் போல… அது வெப்ப வாசனை. இது வெயில் தெரியாத குளுமைவியூகம் அல்லவா.

சிறுசிறு பாம்புமுக அரும்புகள். வெளிச்சம் வெளிர்வாங்க உள்சிலிர்த்து அவை விரிந்தன. மொட்டுகளை முட்டித் தள்ளி இயற்கை திறந்து சிரித்தாப் போல. மொட்டின் வாய் திறந்த இயற்கையின் சிரிப்பு வெடிப்பு…

மொட்டுத் திறந்த இயற்கையின் சிரிப்பு. இறகு விரிப்பு போல… பாவாடை குடைவிரிய வட்டச் சுற்று சுற்றியமரும் பெண்குட்டி. பூச்சிகள் என்ன மனுஷாளையே ஈர்க்கும் வாசனைச் சிதறல்…

பாத்திகளுக்குள் நுழைகையில் கனமற்றிருக்கும் துாளி வெளியேறுகையில் பூபாரத்துக்குத் தள்ளாடும். நடை மாறிப் போகும். அவளுக்கே தன் புதுநடையில் சிரிப்பு வரும்…

அப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் சிரிப்பு வரும். உற்சாகமாய் இருக்கும். மனம் மிதந்து காற்றில் வெளியே பட்டம் என திரிந்த காலங்கள் எங்கே ? எப்போது அந்தப் பட்டங்கள் வாலறுந்து கண்ணில் விலகி காணாமல் போயின…

திரிந்த பால்…

இழப்புகள் நிர்ப்பந்திக்கப் படும் அன்றாடத்தின் கொடுங்கோலாட்சி.

/தொ ட ரு ம்/

——–

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts