அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

இரா முருகன்


நடுராத்திரிக்கு ஒரு காற்று புறப்பட்டது. ஆழப் பாய்ச்சி இருந்த கப்பலின் நங்கூரத்தைக் கெல்லி அது சளைக்காமல் அலைக்கழித்துப் பார்த்தது. நீலக் கருப்பில் கடல் அலைகள் வேறு உக்கிரமான காற்றுக்கு ஒத்தாசை செய்தபடி இருந்தன. எனக்கென்ன போச்சு என்று பவுர்ணமிக்குப் பக்கத்து மூளி நிலா சிரித்தபோது கப்பலின் மேல்தட்டில் நக்னமாக நடந்துகொண்டிருந்த சங்கரன் எனக்கும் தான் என்ன போச்சு என்றான்.

அவனுக்கு நேரம் மட்டுப்படவில்லை. பட்டு என்ன ஆகப் போகிறது ? சமுத்திரம் போடும் இரைச்சலுக்கு மேலே தலைக்குள்ளே தேவதை, பிசாசு, பூதம், யட்சி, பசுமாடு, நாகநாதப் புள் என்று எல்லாம் கலந்து ஏதோ சத்தம். போதாக் குறைக்கு பிச்சை ராவுத்தன், சுந்தர கனபாடிகள், பகவதிக்குட்டியின் தமையன் கிட்டாவய்யன், காரியஸ்தன் தாணுப்பிள்ளை, தெலுங்கு பிராமணன் என்று புருஷர்கள் வேறே அவன் இடுப்புக்குக் கீழே கையைக் காட்டிக் காட்டி ஆவேசமாகக் கத்துகிறார்கள்.

உடுப்பை விழுத்துப் போட்டுட்டு அலையாதேடா அரசூர்ச் சங்கரா.

சங்கரனுக்கு உடுத்துக் கொள்ள ஆசைதான். இன்னொரு தடவை படுத்துக் கொள்ளவும் கூடத்தான். சீமைச் சாராயத்தை எவளோ தன் வாயில் அதக்கிக் கொப்பளித்து அவன் வாயைத் திறந்து தாம்பூல எச்சலாகத் துப்பி லகரி ஏற்றுவாள். போதும்டா விடு என்று அவன் மன்றாடுவான். சாமிநாதன் போதாதுடா கபோதி, ஊஞ்சல் இருக்கான்னு பாரு. அதுலே கிடந்தாலும் கிடத்தினாலும் அம்சமாத்தான் இருக்கும் என்று அத்தியாயனம் பண்ணுகிறதுபோல் கணீரென்று சொல்வான். கப்பலுக்குக் கீழே சமுத்திர உப்புத் தண்ணீரில் குளித்தபடி மார்க்குவட்டில் தேமலோடு அந்த ராணிப் பெண்பிள்ளை அசூசையோடு பார்ப்பாள். அண்ணாசாமி ஐயங்காரின் யந்திரம் பழுக்காத்தட்டு போல் சுழன்று வைத்தி சார் குரலில் போகம் போகம் என்று உருவேற்றும். அதைக் காதில் வாங்கிக் கொண்டு கிடக்க வேணும் இன்னும் கொஞ்ச நேரம்.

எங்கே அப்படிக் கிடந்தது ? கொஞ்ச தூரம் நடந்து இடது பக்கமோ வலது பக்கமோ இறங்கி அப்புறம் நீண்ட ஒழுங்கையில் ஈரவாடையை முகர்ந்தபடி கடந்தது எப்போது ? மெழுகுதிரிகள் எரிகிற, அணைந்து புகைகிற வாடையும், சாராய வாடையும், மாமிச வாடையும் வெள்ளைத் தோல் வாடையுமாக அந்தக் குட்டிகளோடு சல்லாபித்தபடி கிடந்ததெல்லாம் சொப்பனமா என்ன ?

கனவு என்றால் இடுப்பு வேட்டி எங்கே போனது ? சுவாசத்தில் ஏறி அடித்துக் குடலைப் பிரட்டிக் கொண்டு மேலெழும்பி வருகிற நெடியெல்லாம் அவன் வயிற்றில் ஒரு சேரக் கனம் கொண்டு இறங்கினது எப்போது ? தேகம் ஒரு நிமிடம் சோர்ந்தும் அடுத்த நிமிடம் பெளருஷத்தோடு விதிர்த்தும் மனதை, புத்தியைச் செலுத்திப் போவது எப்போதிலிருந்து ?

அரசூரில் புகையிலை விற்கிற சங்கரன் இல்லை இந்த கப்பல் தளத்தில் அம்மணமாக நிற்கிறவன். இவன் சித்த புருஷன் இல்லை. சாமிநாதன் போல் வேதவித்தாகப் பரிமளிக்கப் பிறந்தவன் இல்லை இவன். மூக்குத்தூள் விற்க வந்தவன். காப்பி குடிக்கப் பழகிக் கொண்டவன். இந்துஸ்தானியில் நாலு வார்த்தை வசவும்.

காப்பியும் இந்துஸ்தானியும் மூக்குத் தூளும் அவனைக் கொண்டு செலுத்தவில்லை. சொன்னது கேட்காமல் அடங்காது ஆடிய தேகம் தான் அதைச் செய்கிறது. இப்போது உடுத்துக் கொள்ளவேண்டும் என்ற சுரணை கூடப் போய்விட்டது அதற்கு.

கப்பல் இன்னும் கல்பகோடி காலம் இப்படியும் அப்படியும் அசைந்தபடி இருட்டில் நிற்கும். அது நிற்கும் மட்டும் சங்கரன் இந்தத் தளத்தில் காற்றுக்கும், சமுத்திர அலைக்கும் பதில் சொல்லிக் கொண்டு நிற்பான். தரிசன உண்டியல், புகையிலைக் கடை, பகவதிக்குட்டி, வீட்டில் செருப்பு விடும் இடத்தில் அழுக்குப் பழுப்புச் சிலந்தி, கூடத்து ஊஞ்சல், வரலட்சுமி முகம் வரைந்த சுவர் எல்லாம் அவனுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம்.

சங்கரன் காலில் இருட்டில் ஏதோ இடறியது. அவனை மாதிரி யாரோ முட்டக் குடித்து சீலம் கொழித்துப் போதும் என்று தோன்றாமல் புணர்ந்து இடுப்புத் துணியும் இல்லாமல் அங்கே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறவனாக இருக்கும்.

சங்கரனும் கொஞ்ச நேரம் மெய்மறந்துதான் கிடந்தான். தூக்கத்தில் இருக்கும்போதே அந்தப் பரதேவதைகள் அவனை கப்பல் மேல்தளம் ஏறும் படிகளுக்குப் பக்கமாக மீன் கழுவிய ஜலம் தேங்கிக் கொண்டிருந்த இடத்தில் கிடத்திப் போயிருந்தார்கள். இல்லை, அவனாகத்தான் எப்போது அரைகுரையாக விழிப்பு வந்து, உடம்பு வாசனை மூச்சு முட்ட அப்பிய அந்தக் கட்டிலை விட்டு இறங்கிக் காற்றோட்டமாகப் படுத்து நித்திரை போனானோ தெரியவில்லை.

கீழே காலில் தட்டுப்பட்டது அவன் போல் கருப்பு மனுஷ்யன் என்றால் எழுப்பி விடாமல் புரட்டித் தள்ளினால் போதும். தூக்கத்தில் அவனுக்காவது ஆசுவாசம் கிட்டட்டும்.

ஆனால் இது மனுஷன் இல்லை. பொதி. பிரிமணை போல் சுற்றி உள்ளே எதையோ திணித்த பொதி. சங்கரன் குனிந்து கையில் எடுத்தபோது அத்தர் வாடை அடித்தது.

சுலைமானின் சஞ்சியில்லையா இது ? அவன் விழுத்துப் போட்ட உடுப்பு. விழுத்துப் போட்டுத் துவைத்து எடுத்து உடுத்தி மறுபடி விழுத்துத் துவைத்து. துவைக்காவிட்டால்தான் என்ன குறைந்தது ? உடுப்பு உடுக்கத்தான். அவிழ்க்கத்தான்.

இருட்டில் எங்கோ யாரோ கட்டைப் பாதரட்சை சப்திக்க நடந்து வருகிறது போல் சத்தம். பாதிரியா ? பட்டணப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைக் கண்ணாடிச் சில்லைக் கருப்பாக்கிக் கிரகணச் சூரியனை தரிசிக்கச் செய்த பிற்பாடு, சமுத்திரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிற கப்பலைத் தேடி வருகிறார்களா ? மாரிடம் பெருத்த துரைசானிகளும் மற்றவர்களும் கெட்டுச் சீரழிந்து போகாதபடிக்குக் கன்னம் இடுங்கிய மகரிஷிகளைக் காண்பித்துக் கொடுத்து கரையேற்றச் சுற்றி வருகிறார்களா ?

பாதிரிக்கு முன்னால் வெற்றுடம்போடு நிற்க முடியாது. மாரில் துணி இல்லாவிட்டால் பாதகம் இல்லை. பூணூல் போதும். ஆனால் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, நீதி பரிபாலனம் செய்ய, பாவத்தை மன்னிக்க வந்தவன் பாவாடைக்காரப் பாதிரியாக இருந்தாலும் தோளில் புறாவும் மடியும் காசும் கனக்க தஸ்தகீர் ராவுத்தராக இருந்தாலும் இடுப்பில் துணி இல்லாமல் முன்னால் போய் நிற்பது மரியாதை இல்லை.

பூணூல் ?அது எங்கே போச்சு ? அந்த வெள்ளைக் குட்டிகளில் எவள் ஸ்தனத்தைச் சுற்றி மாலையாகப் புரண்டு கிடக்கிறதோ ? பிழைத்துக் கிடந்து, அடுத்த ஆவணி அவிட்டத்துக்கு பாடசாலை சிரவுதிகள் பூணூல் மாற்றும்போது எங்கே போச்சுதடா என்பார். வெள்ளைக்காரி முலையைப் பற்றி அவரிடம் அவசியம் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் சங்கரனுக்கு இடுப்பில் வஸ்திரம் ஏற வேண்டியிருக்கிறது.

அவன் இருட்டில் துணி சஞ்சியைத் திறந்து உத்தேசமாகத் துழாவி எடுத்து இடுப்பில் வைத்துப் பார்த்தான். இது இடுப்புக்குக் கீழே தழைய விடுகிற விஷயமாகத் தெரியவில்லை. தோளில் வழிய வழியத் தொங்கும் துருக்கக் குப்பாயம். குப்பாயத்துக்குக் கீழே சுருட்டி வைத்திருக்கிற துணி தான் இடுப்பில் கட்டுகிறது போல் இருக்கிறது.

பத்தாறு வேட்டிக்கு நடுவே கருப்புப் பட்டணத் தையல்காரன் வேலை மெனக்கெட்டு ஊசியில் நூலை ஓட்டி ஓட்டி மூட்டித் தைத்த சமாச்சாரம் அது.அப்படியே தட்டுச் சுத்தாகக் கட்டிக் கொள்ள முடியாது. காலுக்கு ஒன்றாக நுழைத்து உயர்த்தினால் இடுப்புக்கு எழும்பி வரும்.

அதை மாட்டிக் கொண்ட போது இடுப்பில் நிற்காது நிலத்தில் விழுந்து தொலைத்தது. அப்புறம் அதில் ஒட்டித் தைத்திருந்த நாடா கைக்குக் கிடைத்தது. இடுப்பைச் சுற்றி அதை முடி போட, துருக்கன் இடுப்பு வியர்வையும் மற்றதும் படிந்து பழகிய துணி சங்கரய்யன் அரையோடு ஒடுங்கிப் போனது. நானும் வரேன் என்று அந்தக் குப்பாயமும் மணக்க மணக்கத் தோள் வழியே இறங்கிக் குளிர அடித்த காற்றைப் போய்ட்டு அப்புறம் வா என்றது பிரியமாக.

சஞ்சிக்குள் வேறே என்னமோ கூட இருந்தது. எடுத்துப் பார்க்கப் பொறுமை இல்லை சங்கரனுக்கு. அவனுக்குத் தூக்கம் மறுபடி கண்ணைச் சுழற்றியது.

பாதிரி வந்த தடமே காணோம். இனிமேல் வந்தாலும் கவலை இல்லை. அவன் முழுக்க உடுத்த மனுஷன். சங்கரய்யர் இல்லை. பூணூல் இல்லை.. அவன் சுலைமான் ராவுத்தன். குடுமி அவிழ்ந்து தோளைத் தொட்டுத் தொங்க அத்தரும் அரகஜாவுமாக நிற்கிறான். அய்யனும் ராவுத்தனும் எல்லாம் ஒரு அடையாளத்துக்குத்தான். நாலு பேருக்குச் சொல்லி ஆசுவாசம் தரவும் தனக்கே கொடுத்துக் கொள்ளவும் தான். வெள்ளைக்காரிகளுக்கு அந்த அடையாளம் வேண்டியதில்லை. சங்கரனுக்கும் அதெல்லாம் இல்லாமலேயே ஏகத்துக்கு ஆசுவாசம் கிட்டியாகிவிட்டது. இப்போது கொஞ்சம் தூங்கினால் மிச்சமும் கிட்டும். தூங்கும்போதே பாதிரி அவனுக்கும் பாவாடை கட்டிவிட்டுப் போனாலும் பாவத்தை மன்னிக்காமல் போனாலும் பாதகமில்லை.

சுள்ளென்று கண்ணில் சூரியன் குத்த சங்கரன் விழித்துக் கொண்டபோது கப்பல் தளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். தய்யரத் தய்யர என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த சத்தம் கீழே இருந்து சீராக வந்து கொண்டிருந்தது. கட்டுமரக்காரர்களின் பாட்டு அது.

சங்கரன் எக்கிப் பார்க்க, பத்துப் பதினைந்து கட்டுமரங்கள், விரட்ட விரட்ட நெருங்கி வயிற்றைத் தொட்டுக் காட்டிப் பிச்சை கேட்கும் தரித்திரவாசிக் குழந்தைகள் போல் கப்பல் பக்கம் சுற்றிச் சுற்றி வந்தபடிக்கு இருந்தன.

முதல் கட்டுமரத்தில் தொப்பியும், வயிறும், வாயில் சிவந்து வழிகிற தாம்பூலமும், மிடுக்குமாகத் தஸ்தகீர் ராவுத்தர். அவருக்குத் துணிக்குடை பிடித்தபடி பின்னாலேயே ஒருத்தன். காகிதத்தை அடுக்கி ஒரு பிரப்பம்பெட்டியில் வைத்துக் கையில் பிடித்தபடி ஒல்லியான இன்னொருத்தன் அடுத்த கட்டுமரத்தில் நின்றிருந்ததும் கண்ணில் பட்டது.

சுலைமான் எங்கே ? அவனும் நேற்று இங்கே களேபரமாகி விழுந்து கிடக்கிறானா ? துணிக்கு என்ன செய்தான் ? சங்கரன் வேஷ்டி அவனிடம் சிக்கியிருக்குமா ? பூணூல் ?

தஸ்தகீர் ராவுத்தர் குளித்து விட்டு வருகிறார். வெள்ளை வஸ்திரம் தரித்துத் தோல் செருப்புச் சப்திக்க நடக்கிற கப்பல் காரர்களும் குளித்திருக்கலாம். கீழே ஏதோ அறைகளுக்குள் இருக்கப்பட்ட வெள்ளைக் குட்டிகளும் சிரமம் பாராமல் குளித்து முடித்து தலையை வேடு கட்டிக்கொண்டு இஷ்ட தேவதைகளுக்கு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும். குளியலும் காலைப் பொழுதில் சுறுசுறுப்பான இயக்கமும், நல்ல சிந்தனைகளும், கடந்து போன ராத்திரி எத்தனை அசுத்தமானதாக இருந்தாலும் எல்லாவற்றையும் அலம்பித் துடைத்துத் துப்புரவாக்கி விடும்.

சங்கரனும் குளிக்க வேண்டும். கீழே இருப்பவர்கள் மேலே வந்து சேர்வதற்குள். கோமதி மன்னி கையால் ஒரு சிராங்காய் காப்பி கிடைத்தால் சிரேஷ்டமாக இருக்கும். காப்பிக்குத் தீட்டு இல்லை. குளிக்காமலேயே, பாவம் எல்லாம் தொலையப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்க, அதைப் பானம் பண்ணலாம். தந்த சுத்தி செய்யக்கூட வேண்டாம்.

சங்கரன் எழுந்த இடத்துக்குக் கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. சுலைமானின் சஞ்சியைக் கழுத்தில் மாலை போல் மாட்டிக் கொண்டு சங்கரன் படியிறங்கிப் போனான்.

மூத்திரப் புரையும் சுத்த ஜலம் நிறைத்த தொட்டியும், சுவரில் பெரிய கண்ணாடியுமாக இருந்த இடத்தில் முகத்தையும், கைகாலையும் சுத்தப்படுத்திக் கொண்டான். தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் சேந்தி விரல் தேய பல்லைத் தேய்த்து நாக்கை வழித்துத் துப்பிக் கொப்பளித்தான். குப்பாயத்து நுனியை மேலே உயர்த்தி முகத்தைத் துடைத்துக் கொண்டபோது சஞ்சியில் கருப்பாக ஏதோ எட்டிப் பார்த்தது. துருக்கத் தொப்பி.

குடுமியை இறுக்க முடிந்து கொண்டான். கருத்த தாடிச் சிகையும் கனத்த புருவமுமாகக் கண்ணாடியில் அவன் ரிஷி குமாரன் போல் தெரிந்தான். காதில் கடுக்கனும், குடுமியும் குப்பாயத்துக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. கடுக்கனைக் கழற்றிச் சஞ்சியில் வைத்தான். ஒரு வினாடி யோசித்து விட்டுக் குல்லாயை எடுத்து மாட்டிக் கொண்டான். இப்போதைக்கு ஆசுவாசம் அளிக்கிற அடையாளம் இது.

குளித்துத் தலையாற்றிக் கொண்டிருக்கும் பெண்டுகளே எங்கேயடி போனீர்கள் எல்லோரும் ?

சங்கரன் திரும்பப் படியேறி மேல்தளத்துக்கு வந்தபோது தஸ்தகீர் ராவுத்தர் குரிச்சி போட்டு கப்பல் துரைக்குச் சமமாக உட்கார்ந்து ஏதோ காகிதத்தில் அவனுடைய ஒப்பு வாங்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் கையில் காகிதக் கட்டோடு அந்த மெலிந்த மனிதன் நின்றிருந்தான்.

ராவுத்தரோடு வர்த்தமானம் சொல்லிக்கொண்டு கடுதாசிகளைப் படித்தும் மசிப்புட்டியில் கட்டைப் பேனாவை நனைத்துக் கையொப்பம் இட்டுக் கொண்டும் இருந்த துரைமேல் சங்கரனின் நிழல்பட நிமிர்ந்து பார்த்தார்.

யுவர் ப்ராமின் க்ளார்க் இஸ் நெள இன் ப்ராப்பர் யூனிபார்ம். குட் ஹி ஈஸ் நாட் நேக்கட் அப் த வெய்ஸ்ட் ஆஸ் ஹி கேம் ஹியர் லாஸ்ட் ஈவினிங்.

துரையோடு கூட தஸ்தகீர் ராவுத்தரும் உரக்கச் சிரித்தார். வாடா இங்கே என்பது போல் சங்கரனைக் கையைக் காட்டி ஆக்ஞை பிறப்பித்துப் பக்கத்தில் கூப்பிட்டார். அடக்கமான சேவகனாக சங்கரன் அவர் அருகில் போகும்போது தெலுங்குப் பிராமணனையும் கோட்டையில் சேவகம் பண்ணும் கிளார்க் வைத்தி சாரையும் நினைத்துக் கொண்டான்.

நீர் ராத்திரி இங்கேயே தங்கி இருந்தீரா ?

ராவுத்தர் சங்கரனைக் கண்ணில் பார்த்தபடி விசாரித்தார். அது பதில் தேவைப்படாத வினாவாகப் பட்டது சங்கரனுக்கு. அவன் தஸ்தகீர் ராவுத்தரின் கிளார்க். அவர் சொல்கிறபடி கேட்கக் கடமைப்பட்டவன். தூரத்தில் தெரிந்த சமுத்திரக் கரையையும், அவனையும் அந்த மணல் பரப்பையும் பிரித்து எல்லையின்றி நீண்ட கடலையும் பார்த்தபடி தலையை அசைத்தான். ஆமா எசமான். ராத்திரி இங்கே தான் வுளுந்து கெடந்தேன்.

செனை எருமை கணக்கா அசையாதேயும். அந்தக் கடுதாசை எல்லாம் எடுத்துட்டு வந்து இப்படி நில்லும்.

ராவுத்தர் உத்தரவு போட்டபடி சங்கரன் ஒல்லி மனுஷன் கையிலிருந்து காகிதக் கட்டை வாங்கி இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி நின்றான்.

துரை சங்கரனை மசிக்கூட்டை முன்னால் நகர்த்தி வைக்கச் சொன்னான். கட்டைப் பேனா தரையில் விழுந்தபோது அதை எடுத்துத் துரை பக்கம் வைக்கும்படி தஸ்தகீர் ராவுத்தர் சொன்னார். அவன் அதை எடுத்து அப்படியே வைத்தபோது, அறிவில்லையா உமக்கு, சட்டையில் துடைத்துக் கொடும். உம்மோட அழுக்குக் கால் மண்ணு பட்டிருக்குதே என்றார். சங்கரன் குப்பாயத்தில் கட்டைப் பேனாவைத் துடைத்து அது ஈரமும் கருப்புமாக மசி பரத்திய இடத்தைப் பார்த்தபடி பேனாவைத் துரை கையில் கொடுக்க நீட்டும்போது திரும்பவும் ராவுத்தர் வைதார்.

முண்டம். கையிலே தர்றியே. துரை உனக்கு என்ன தோஸ்த்தா ? மேசையிலே வய்யி.

சங்கரனுக்கு எல்லாம் வேண்டியிருந்தது. அவர் இன்னும் கொஞ்சம் திட்ட வேணும். துரை ஏதோ சாக்குச் சொல்லி அவன் முகத்தில் உமிழ்ந்தாலும் அவன் துடைத்துக் கொண்டு கட்டைப் பேனாவை எடுத்து வைப்பான்.

வேர் இஸ் யுவர் சன் ?

கப்பல்காரர் ராவுத்தரைக் கேட்டார்.

யூஸ்லெஸ் ஃபெல்லோ. ஹி கேம் ஹியர் லாஸ்ட் ஈவினிங் வித்தவுட் மை பெர்மிஷன் ஆர் யுவர்ஸ். ஆல்ஸோ ப்ராட் திஸ் ஸ்கெளண்ட்ரல் ஃஓப் அ க்ளார்க் வித் ஹிம். மை யப்பாலஜீஸ் சார்.

ராவுத்தர் ஓரமாக வெய்யிலில் முகத்தில் வியர்வையோடு நின்ற சங்கரனைப் பீ உருட்டிப் போகும் புழுவைப் போல் பார்த்துச் சொன்னார்.

நோ. நோ ப்ராப்ளம். தே இன் பாக்ட் வேர் ரியலி ஹெல்ப்ஃபுல்.

ஐயாம் கிளாட் டு நோ தட் மை லார்ட். கேன் வீ ப்ளீஸ் ஹேவ் தி பாசஞ்சர்ஸ் சைன் த இமிக்ரேஷன் பேப்பர்ஸ் நெள ? மை ஹெட் கிளார்க் ஈஸ் ஆல்ஸோ ப்ரசெண்ட் ஓவர் தேர் டு ஹெல்ப் தெம்.

ராவுத்தர் ஒல்லீசுவரனைக் கைகாட்ட, அவன் ஜன்ம சாபல்யம் அடைந்ததுபோல் துரைக்கு வணக்கம் செலுத்தினான்.

ஷ்யூர். ஷ்யூர்.

துரை பார்த்தும் பார்க்காமலும் தலையை அசைக்க, ராவுத்தர் சங்கரனைச் சொடக்குப் போட்டுக் கூப்பிட்டார்.

அந்த ஓரமாகப் போய் நில்லும். ஒவ்வொருத்தரா கப்பல்லே வந்தவங்க டாக்குமெண்டு கையொப்பம் போட வருவாங்க. ஒண்ணு விடாம வாங்கணும். காதுலே விழுந்ததா ?

அவர் சாதாரணமான குரலுக்கு மேலே ஏகத்துக்குச் சத்தம் கூட்டி இரைய சங்கரன் பவ்யமாகத் தலையாட்டினான்.

பசித்த வயிறு. ஒரு வாய்க் காப்பிக்கு, ஒரு இட்டலிக்கு ஏங்கும் வயிறு. நாக்கு வரண்டு போய்க் கிடக்கிறது. யாராவது சுத்த ஜலம் ஒரு உத்தரிணி கொடுத்தாலும் சங்கரன் அவர்களுக்காக உசிரையே பதிலுக்குத் தருவான். வரிசையாக வருகிறவர்கள் யாருக்கும் அவன் உயிர் வேண்டாம். அவன் கொடுத்த கடுதாசில் கையெழுத்துப் போட்டால் போதும்.

மசிப் புட்டியில் மசி நிரப்பி, கட்டைப் பேனாவில் தோய்த்து ஒவ்வொருத்தருக்கும் கொடுத்து, அது கீழே விழுந்தால் மரியாதையோடு எடுத்துக் குப்பாயத்தில் துடைத்துக் கையில் கொடுக்காமல் பக்கத்தில் பவ்யமாக வைத்து.

கையொப்பம் போட்டவள் தலையையும் முகத்தையும் பாதி மறைக்கும் தொப்பி வைத்திருந்தாள். நேற்று ராத்திரி சங்கரன் மடியில் உட்கார்ந்தவள் இவள்தானா ?

சைத்தான் கே பச்சா. ஜல்தி ஆகட்டும். இன்னிக்குப் பூரா வாங்கிட்டு இருப்பியா ?

ராவுத்தர் இரைந்தார்.

எல்லோரும் கையொப்பம் இட்டு முடித்ததும் ஹெட் கிளார்க் ஒல்லீஸ்வரன் முன்னால் வந்து சங்கரனின் கையில் இருந்த காகிதத்தை எல்லாம் சேர்த்து ஒரு சணல் கயிற்றால் கட்டி அவன் தலையில் வைத்தான்.

விழுந்துடாமப் பிடிச்சுக்கோ முதலி.

அவன் சொன்னபோது தான் முதலியாகியிருந்த சமாச்சாரம் சங்கரனுக்குப் புலப்பட்டது.

வெல்கம் டு தி ஏன்ஷியண்ட் சிட்டி ஓஃப் மதராஸ்.

ராவுத்தர் கப்பல் மேல்தளத்தில் வெள்ளைக்காரக் கும்பல் சூழ நின்று கைகளை விரித்து ஐந்து நிமிஷம் பிரசங்கம் செய்தார். தலையில் காகிதக் கட்டோடு சங்கரன் பக்கத்திலேயே நின்றிருந்தான்.

எல்லோரும் பாய்மரப் படகுகளில் இறங்கிக் கரைக்குப் போனார்கள்.

தளத்தில் சங்கரனும், தஸ்தகீர் ராவுத்தரும் ஒல்லீஸ்வரனும் மட்டும்.

முதலி, காகிதத்தைப் பிரம்புப் பெட்டியிலே போடு.

ஒல்லீஸ்வரன் அதட்டினான்.

யோவ். இந்தாள் எளவெடுத்த முதலியோ நம்ம உத்தியோகஸ்தனோ இல்லே. சுலைமானோட வியாவாரக் கூட்டாளி. அய்யரே, மிரளாதே. நீ கிளார்க்குன்னு துரை நினைச்சதாலே அப்படியே விட்டுட்டேன். வேலைக்காரனை மிரட்டற கருப்பனைத்தான் இந்தத் தாயோளிகளுக்குப் பிடிக்கும். சொம்மா நாலு வார்த்தை இரஞ்சேன். மனசுலே வச்சுக்காதே. அதென்ன, கப்பல்லே ஏறினதும் நீயும் பைஜாமா மாட்டிக்கினியா ? ராத்திரிப் பூரா ரகளையாக் கூத்தடிச்சியாமே ? சுலைமான் சொன்னான். ஏதோ சாக்கிரதையா இரு. காணாதது கண்ட மாதிரி விளுந்து மேஞ்சா அப்புறம் இடுப்புக்குக் கீளே அளுகிச் சொட்டும். பாத்துக்க.

ராவுத்தர் சிரித்தபடி கட்டுமரத்துக்கு இறங்க, ஒல்லீஸ்வரன் சங்கரனைப் புது மரியாதையோடு பார்த்தான். அவன் கரையில் இருந்தே வெள்ளைக்காரிகளை நினைத்து ஏங்கினவனாக இருக்க வேண்டும்.

முன்னால் நகர்ந்து கொண்டிருந்த கட்டுமரங்களில் சங்கரன் தன் மீது முந்திய ராத்திரி கவிந்த வெள்ளைக்காரியைத் தேடினான்.

என் சேலம் குண்டஞ்சு வேஷ்டி எங்கேடி ?

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts