திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


முதல் பகுதி – தொடர்ச்சி

—-

முற்றிலும் புதிய நாளொன்றின் துவக்கம். விளையாட்டுப்போல இருந்த வெளிச்சம் சட்டென்று வாத்தியார் கோபப்பட்டாப் போல கடுமையாகி விட்டது. வெளிச்சம் பாதி எட்டிப் பார்க்கு முன்னமேயே ஜனங்களில் பாதிப்பேர் அந்த நாளுக்கான உழைப்புக்குத் தயாராகி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரும் தொலைதுாரப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ரயில்ல விபத்தான உடல்போல அவர்களது அலுவலகம் ஒரு மூலைன்னா வீடு இன்னொரு மூலை. நெடும்பயண பஸ். அல்லது ரயில். பொங்கி வழிகிற கூட்டம். முடிச்சாய் வெளிப்பிதுங்கும் கூட்டம். பாதி பஸ் அநேக நிறுத்தங்களில் நிற்பதேயில்லை. தோள்ல அடிபட்ட ஜவான்போல ஏற்கனவே பஸ் சாச்சபோக்கில் போகுது. இன்னும் ஆள் ஏறினாத் தாளாதுன்னு டிரைவருக்கு பயம். இறங்க வேண்டிய ஆளுகளையெல்லாம் பஸ் நிறுத்தம்னு இல்லாமல் முன்ன பின்ன இறக்கி விட்டாவுது… அடிறா விசிலை கண்டக்டர். டபுள் விசில் அடி. ஒருபக்கம் றெக்கை முளைத்த பறவையாய் பஸ்… திரும்பக் கிளம்புகிறது.

தனுஷ்கோடிக்கு நகரம் பழகி யிருந்தது இந்நாட்களில். சாக்கடைக்கு ஏது போக்கிடம்னாப்ல… வேற வழியில்லையப்பா. நல்லவனையும் அட்டூழியங்கள் பண்ண, நிம்மதியைக் குலையடிக்கிற கதறச் செய்கிற கெடுபிடி செய்கிற அன்றாடம். இங்கே நல்லவனாக யாரும் வாழவே முடியாது. பார்க்க ஷோக்கா இருப்பான். கூட பஸ்ல வந்தபடியே தன்மையாப் பேசுவான். இறங்கும்போது நம்ம பர்சடிச்சிருப்பான் திருட்டு நாய். ஆளும் உடையும் ஜம்னு இருக்கும். வாயைத் திறந்தால் அத்தனை கெட்ட வார்த்தையும் வரிசை போட்டுக்கிட்டு வந்து விழும். அன்னிக்கு பஸ்ல ஒருத்தன் தத்துவ எடுப்பு எடுத்தான். கூட்டத்ல பெரியாள்னு காட்டிக்கறதுல மனுச மக்களுக்குத்தான் எத்தனை ஆசை- வள்ளுவர் என்ன சொல்லீர்க்காரு தெரிமா ?…ன்னாம்பாரு. தனுஷ்கோடியே அசந்திட்டான். அடேய் இவனுக்கு வள்ளுவர் தெரியுமான்னு பாத்தான். என்ன சொல்றான் அதையும் கேப்பமே- ‘ ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே… ஙொம்மாள நாவினால் சுட்ட வடு ‘ ‘ன்னிருக்கார் வள்ளுவர் அப்டின்னான். வள்ளுவர் எப்ப ஙொம்மாளன்னு எழுதினார். அவரும் மயிலாப்பூர்ல பொறந்ததா ஒரு ஐதிகம் உண்டு. ஒருவேளை எழுதீர்ப்பாரோன்னு இவனுக்கே சந்தேகம் யிட்டது…

ரயில்க் கூட்டம். பைத்துட்டு பறிபோயிருமோன்னு அவனவனுக்கு உள்ப்பரபரப்பு. உள்ளே தடக்தடக்னு இன்னொரு ரயில் இதயரயில் படபடக்குது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உள்க்கூட்டம் நெகிழ்ந்து மழைத் தண்ணிக்குத் தெருவில் வகிடெடுத்து விட்டாப்ல கலையுது. சிலாளுகள் வெளிய போற கூட்டத்தை கவனிக்காமல் எந்த சீட் காலியாவுது பாஞ்சி அடுத்தாளை மிதிச்சிநவட்டிட்டாவது போயி உக்காறலாம்னு நோட்டம் பாத்திட்டிருக்கான். அறிவிக்கப் படாத மியூசிகல் சேர் போட்டி. அப்ப பாட்டு ? அதான் வர்றானுகளே பார்வையத்த கபோதிங்க. அவன் ஐடியாவைப் பார் – தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்-னு நேரத்துக்கேத்தாப்ல எடுத்து விடறான். தருமமும் ஹெல்மெட்டும் ஒண்ணா ?

எத்தனை சீக்கிரம் கிளம்பினாலும் நினைத்த நேரம் அச்சகம் வந்து சேர்றது நம்ம கைல இல்ல. திடுதிப்னு யாராவது குடிமகனுக்கு வாழ்க்கைய முடிச்சிக்கிர்ற ஆவேசம் வந்துருது. நேரா உடனே ரயில் முன்னாடி விழுந்துர்றான். ரயில் கடவுள்- இவன் ஆசிர்வாதம் வாங்க வந்தவன்… நான் செத்துப்போறேன் ஷாமியோவ். ஆசிர்வாதம் பண்ணுங்க…

அட முந்திய ரயில்லியோ அடுத்த ரயில்லியோ விழப்டாதான்னுதான் அவனவனுக்கு உடன்-தோணும் எரிச்சல். செத்தவனைப் பத்தி இரக்கமோ ஆர்வமோ காட்டாத மானுடம். கிழவி நெஞ்சுக்கூடாட்டம் உலர்ந்த… வத்திப்போன மானுடம். அரசியல்ல ஒரு வசனம்- நுாறாள் செத்தா துக்கம். யிரம் பேர் செத்தா செய்தி- அவ்ளதான். துாக்கிப் போட்டு எரி. அடுத்த ஜோலியப் பார்.

சில நாட்கள் முகூர்த்த நாட்கள். கல்யாணம் கல்யாணம்னு நிறைய கல்யாணம் நாட்ல விழுந்தடிச்சிப் பண்றா மாதிரி… ஒரேநாளில் அநேகம்பேர் ரயிலில் விழுந்து சாக முடிவெடுத்திர்றாங்க… வாழ்க்கை அத்தனை வெறுமையால்ல ஆயிப் போச்சு. பாவம் ஜனங்கள்.

அம்பிகா. பாதகத்தி அவளும் இப்பிடித்தான் ஒருநாள் தற்கொலை செய்து கொண்டாள். அவன் மனைவி. வழக்கமான சண்டை என்றுதான் நினைத்தான். சண்டைநேரத்தில் அவள் காட்டும் உக்கிரம் பொறுமையின்மை வேசம் அவனுக்கு எப்போதுமே திகைப்பாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அந்த நெஞ்சுக்கூட்டின் விரிசலை அவள் மூச்சிறைப்பைப் பார்க்க… பதில் சொல்லவே யோசனையாகிப் போகும். உணர்வு கட்டுமீறிப் போச்சா, அட பாதகத்தி தவறி விழுந்திட்டாளா தெரியவில்லை. தடக்கென்று ரயில் மேலே ஏறிய அந்தக் கணம் அவளுக்கு எப்படி யிருந்திருக்கும் ?

சிலபேர் காத்திருந்து, ரயில்வர சட்டுனுப் பாஞ்சிர்றாங்க. அட பாவிமக்கா ரயிலுக்குக் காத்திருக்கத் தெரிஞ்ச நாய்க்கு வெற்றிக்குக் காத்திருக்கப் பொறுமை இல்லை!… உயிர் பட்டணத்தில் அத்தனை மலிவாகி விட்டது. அவனுக்கு அத்தனை அலுப்பாய் இருந்தது. வீட்டில் அவள் இல்லாத வெறுமை இந்நாட்களில் பழகி விட்டது. நகரத்தில் இழப்புகள் சகஜம். இது நகரம். தற்கொலைகள்… அட கொலைகளே சகஜம். கால் சவரன் நகைக்காக காதையே அறுக்கிறான்யா பாவிகள். குழந்தைக் காதை.

தனியா வந்த ஆளை பைக்கில் வருகிறவன் கத்திகாட்டி மடக்கி பைத்துட்டைப் பறிச்சிக்கிட்டு பறந்து விடுகிறார்கள். எல்லாம் விநாடி நேரத்தில் மாயாஜாலம்போல் நிகழ்ந்து விடுகிறது. ‘ ‘ஐய… என்ன சார் ஆச்சி ? ‘ ‘ என்று ஓடிவந்தான் தனுஷ்கோடி. கத்தியைக் காட்டி கழுத்தில் கிடந்த மைனர்செயினை அவரிடம் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். இன்னமும் பயம் விலகாத பதட்டத்துடன் அவர் விவரிக்கிறார். இவன் கூட நின்ன ஆள் கதையை சுவாரஸ்யமாக் கேட்டுட்டு… ‘ ‘உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு சார். அதும் இந்த ஏரியா ரொம்ப மோசம். அடிக்கடி வழிப்பறி நடக்குது. எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்து வைங்க ‘ ‘ன்றான். பறி கொடுத்த ஆள் பதில் சொன்னானே பாக்கணும். ‘ ‘அட நானே ஏட்டுதாய்யா ‘ ‘.

நாட்ல வேற எவன் மைனர் செய்ன் போடறான் ?

வழக்கம்போல நேரமாகி விட்டது. ஜனங்கள் ரயிலில் இருந்து குதித்தாப்போல இறங்கி அடுத்த பஸ் பிடிக்க ஓடுகிறார்கள். தனுஷ்கோடியும் இதுக்குமேல் இன்னொரு பஸ்ஸெடுத்து அச்சகம் போக வேண்டும்.

பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு இலக்கிய வஸ்தாதின் நாவல் ஒன்று அச்சாகிக் கொண்டிருந்தது. என்னவோ மேஜிகல்-ரியலிசம்ன்றான். தமிழ் காணாத வெளிநாட்டு உத்தின்னு வாலிபவட்டத்தில் சிலிர்த்திட்டு அலையறான்கள். ராமாயணம் சொல்லாத மேஜிகல்ரியலிசமாய்யா ? பாட்டான் பூட்டன் இருட்டையும் காட்டையும் பத்திச் சொல்லாத கதையா ? சீசன் திரும்ப வந்தாப்ல அதையே… அதும் வெளிநாட்டைப் பார்த்துக் கையில் எடுத்துக்கிட்டு… நவீன உத்தின்னு மிரட்ட முயற்சி.

நம்ப ஐட்டங்களையே விலைக்கு வாங்கி வெளிநாட்டு மோஸ்தரில் உறைபோட்டு விக்கிற நவீன பொருளாதார மேலைநாட்டு உத்தி. வியாபார உத்தி போல இருக்குடா இதுவும். சிலது அப்பா அம்மா சொன்னாக் கேக்காது. ஒத்துக்காது… அதையே எதிர்வீட்டு அங்க்கிள் ஆன்ட்டி சொன்னா அதான் ரைட்டுன்னு மயக்கம். கண் சொருகல்.

அவனுக்குக் காலையில் கண்ட அந்த மோகினிப்பிசாசுக் கனவு ஞாபகம் வந்தது. பொம்பளையாள்த் தவிப்பும் துட்டாசையும் மனுசாளை எப்பிடியெல்லாம் பாடாப் படுத்தது. எத்தனை உள்க் கற்பனைகளை சிலிர்ப்புகளை ஆலாபனையெடுப்பு எடுக்க வைக்குது… என்றிருந்தது.

அவனுக்கான பஸ் வந்தது. சற்று தள்ளி தோள்சாய நின்றது. கூட்டத்தில் மண்டையால் முட்டி ஏறிக்கொண்டான்.

/தொ ட ரு ம்/

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts