திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/1/

அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன் எதைநோக்கிப் போகிறான் ? கால்கள் தாமாக இயங்குவதாய் சிறு பிரமை. அல்லது மொத்தக் காட்சியுமே பிரமையோ ?

குளிரான இருள் இதமாய்த்தான் இருக்கிறது. வண்டிகட்டிக்கொண்டு ஊரோடு ஊர்கடந்து போகிறாப்போல. தடக் புடக் தள்ளாட்டம். தளர்ந்த நடைதான். வீட்டைவிட்ட நடையா வீட்டைப் பார்க்க நடையா ?… எதற்கு யோசிக்கணும். போடா மாப்ள என்கிற மனசு. உற்சாகப் பாட்டெடுப்பு உள்ளே மெளனமோதல் மோதுகிறது. ஒலியில்லாத… வார்த்தையுமே யில்லாத மோதல். என்ன உலகம் இது ? அவன் கண்டிராத புது உலகமா இருக்கேய்யா ? வானமும் இல்லாத பூமியும் இல்லாத இப்பிடியோர் இடம் உண்டா என்ன ?

இருட்டு. இருட்டுக்குள் அவன். கொழுக்கட்டை போலவா ? கருப்பு கொழுக்கட்டை.. மண்புழுபோல அவன் இருட்டைக் குடைந்துகொண்டு போகிறான். என்னென்னமோ புது வாசனை. புதுப்புது உருவத்தை விருப்பப்படி வரைஞ்சிக்கோன்னு… முதுகில் ஏற்றிக் கொள்ள இருட்டுயானை குனிஞ்சி நிற்கிறது அவன் முன்னாடி. மகனே உன் சாமர்த்தியம். வரைஞ்சிக்கோ… என வகுப்பறைக் கரும்பலகையாய் இராத்திரி.

திடாரென அந்த அந்தகாரத்தில் ஒருவெளிச்சம். டார்ச் அடிச்சாப்ல. சட்டுனு வெலவெலத்து அப்டியே நின்னுட்டான். கூடவே ஒரு சிறு சிரிப்பு. அசரீரிச் சிரிப்பு. என்ன வெளிச்சம் அது. கண்ணை ஒரு வெளீர் வெட்டு வெட்டிச்சே. எங்கேர்ந்து சிரிப்பு. மீண்டும் மெளனம் தண்ணில கட்டின பாசியாய் மூடிட்டது. திரும்ப இருட்டு. அந்தச் சிரிப்பை நினைச்சித்தான் பாக்க முடிஞ்சது. நினைவினைக் கூட்டிக் குவிச்சிக்கிட்டான். அந்த சத்தத்தை மோட்டார்போட்டு பம்புல தண்ணியேத்தினாப்ல மூளைல ஏத்திப் பாத்தான். ஆமடா அது ஒரு பொம்பளையாள் சிரிப்புடா. என்ன வசீகரமான சிரிப்பு. என்னமோ வெளிச்சந் தட்டிச்சே. அதோட ஒரு சிரிப்பு. அப்றம் பாத்தா… ரெண்டையுமே காணல.

லெசான உதறல். வெளிய குளிர் சாஸ்தியாயிட்டதா பயம் சாஸ்தியா ? அட ரெண்டுஞ் சேந்துதான். நடை நின்னு போச்சில்ல தன்னால. இப்டி மேல மேல போகப்டாது. டேஞ்சர்.

அவன் நிற்க முடிவெடுத்த கணம் திரும்ப அந்த மின்னல் வெட்டு. வெளிச்சப் பொட்டு. ஒற்றை நரைமுடியாட்டம் கதிர்வீச்சு. கண்ணே கூசுது. அவன் எதிர்பார்த்தான். அப்டியே கேட்டது- அந்தச் சிரிப்பு. பொம்பளையாள்த்தான். யாரோ சிரிக்கறங்கடோய். சிரிப்பே அத்தனை அழகுன்னா ஆள் எப்பிடியோ ? குரல் கேட்குது. ஆள்த் தெரியல்ல. மனசில் ஒரு திடுக். இந்த ராத்திரில இந்த நடுவாந்தரத்தில பொம்பளையாளுக்கு என்ன வேலை ?

எவளாச்சும் கிறுக்குச் சனியனா யிருக்குமா ? அட முள்ளுக்காட்டுப் பக்கம் ஒதுங்க கிதுங்க வந்தாளா வயத்துவலிக்காரி ? சரி அப்டின்னா முனகல் சத்தம் கேட்டா அது சரி. சிரிப்பு ? அப்பறம் அவன் கண்ணுல வெட்டிச்சே அந்த மினுமினுப்பு ?

ஹா இது… இது மோகினிப் பிசாசுல்லா… என நினைக்கத் துாக்கிவாரிப் போட்டுது. கால் வெடவெடங்குது. குப்புனு அந்தாக்ல முள்ளுச்செடியில் விழுந்தாப்ல அப்பிச்சிப் பார் வியர்வை. சரி ஓடிறலாம்னா… பெரிய சண்டியராட்டம் மனசு மறிச்சது. எலேய் ம்பளையாடா நீ ? நெஞ்சுக்கூட்டுல மயிர்கெடக்கிற ஆம்பிளையா ?

மிரளாதே எதைக் கண்டாலும். சிரிப்புமில்லை சுண்ணாம்புமில்லை அது உன் கற்பனை. பொம்பளை வாசனை கேட்குதப்போவ் உனக்கு. அதான் விசயம். பொம்பளை சிரிச்சா, கிட்டவந்து அப்டி நெஞ்சோட சாச்சிக்கிட்டே மேலயும் கீழயும் அவ தடவிக்குடுத்தா வேணான்னா கெடக்கு ? எந்த ஆம்பளை வேணான்னுவான். அவனவன் தவிக்கிறான்யா அதுக்காக. பொம்பளைருசி தெரியாத மனுசாள் உண்டா ? அட கெடைக்காதவன்தான் ஏங்குறான்னு பாத்தா கெடைச்சவன் அதைவிடத் துடிக்கிறானப்பா…

இரு. இரு. மின்னல் போல் ஒரு அடி. கண்ல தட்டிச்சில்ல அது என்ன ? பயப்படாம யோசி. தரையில் என்னவோ கெடந்திருக்கணும். எதோ ஒரு திசையில் இருந்து ஒரு ஒற்றைக் கோணத்தில் வந்த வெளிச்சம் தரையில் கிடந்த ஜாமானில் பட்டு பெரும் பிரதிபலிப்பா கண்ணை அடிச்சிட்டதப்பா. கண்ணாடிச் சில்லு காலைக் குத்தினாப்ல வெளிச்சக் கிரணம் கண்ணையேல்ல முள்ளாக் குத்திட்டது. சில சமயம் புருவக்காட்டில் தனிமயிர் ஒற்றைமயிர் மாத்திரம் கரப்பான்பூச்சிக்குப் போல வளந்து நெளியும்ல அதைப்போல. வெளிச்சமுள். குபீர்னு வளர்ந்திட்டது. கண்குத்திப் பாம்பு மாதிரி… எதிலிருந்தோ வெளிச்சம் முட்டித் திரும்பி… போலிஸ்காரன் மறிச்சி போக்குவரத்தைத் திருப்பி விட்டாப்ல வழி திரும்பிட்டது ஒளி. அதான் விசயம். அதுக்குப்போயி மக்கா மிரண்டுட்டியே ஒரு நிமிசம். சிரிப்பு வந்தது. அந்த முகூர்த்தத்தில் அந்தக் கோட்டுப்பாதையில் கண்ணில் அறைந்த கதிர்… கால் தாண்டுகையில் நுால் பிசகி பார்வையை விட்டு விலகிட்டது. சமாச்சாரம் அவ்ளதான். சூப்பர்!

அந்தப் பொருள் ஒரு துட்டு-நாணயமாய் இருக்கலாம். எவனோ பாக்கெட் கிழிஞ்சபய போட்டுட்டுப் போயிருக்கலாம். எத்தனை தரம் துட்டெடுத்திருக்கிறான் தரைலேர்ந்து… தனுஷ்கோடிக்கு உற்சாகம் மீண்டது. அட கோட்டிக்கார கேணயா, மொதல்ல உன் சட்டைப்பை கிழிஞ்சிருக்கா பார்… தொட்டுப் பார்த்தா பையே கிடையாது சட்டையில்.

தனுஷ்கோடி சற்று திரும்பி வந்து பார்க்கிறான். தரையில் தேடிய சிற்றுலா. தானியம் காயப்போட்டுப் பரசி விட்டாப்ல ஒரு நடை இங்கிட்டும் அங்கிட்டுமா. அட திரும்பவும் க்ளுக்கென்ற சிரிப்பு. ஒரே துள்ளலில் உள்நரம்பு சிலிர்த்தது. எவளோ பார்க்கிறாள். வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறாள். ‘ ‘யாரது ? ‘ ‘ என்று கத்த நினைத்தான் தனுஷ்கோடி. சத்தம் வரவேயில்லை. கீச்சென்று கார் பிரேக்கடிச்சாப்ல வேறென்னவோ சத்தம் வாய்லேர்ந்து. பயமில்லைன்னு சொன்னாப்ல ஆச்சா ? உயிர்க்குலை வேம்பு-உச்சிபோல காத்துக்கு நடுங்குதேய்யா. உள் உறுப்புங்கல்லாம் அந்தாக்ல கீழயும் மேலயுமா கழண்டு கலகலத்துப் போச்சு. மூத்திரம் வேற ஒரு சொட்டு கொட்டிட்டது. அடிவயித்துக் குளிர். நுரையீரல் வலிக்கிறது. உள்ளே குளிர். வெளியே வியர்வை… என்ன விநோதக் கலவை. ஓடிர்லாமா ?… என நினைத்த கணம்

ஆகா அந்த கண்ணைக் குத்தும் வெளிச்சம். அந்தத் தரை பின்னே இல்லை. அவன் முன்னே அதோ அங்கே. சட்டுனு ஒரு கண்குத்து. அப்றம் இருள். தனுஷ்கோடிக்கு அந்த விளையாட்டின் சுவாரஸ்யம் தாளவில்லை. அப்டியே நின்னு சரியான கோணத்தில் அந்த வெளிச்ச வெட்டை திரும்ப கண்வரை கொணர முயற்சி செய்தான். கழுத்தை இப்படி அப்படி ஆட்டி வளைச்சி இருட்டில் துழாவ… க்ளுக்கென மறுபடி அசரீரி சிரித்தது.

‘ ‘எவடி அவ ? ‘ ‘ என்றான் சற்று அதட்டலாய். குரல் கொஞ்சம் தேறி பதப்பட்டு வந்தது. ஏட்டி எளவெடுத்த சிறுக்கி… என்கிட்ட மாட்டினே இடுப்பக் கழட்டிருவேன். நான் ஆம்பிள்ளைச் சிங்கம்.

சிங்கமாவது சிங்கிணியாவது போடாங்… நடுராத்திரில கண்ட சத்தத்துக்கு ஆரு மோரு-ன்னு கத்தி வெலவெலத்துக்கிட்டுக் கெடக்க. உனக்கு வீரப் பிரதாபம் வேற. தரைல கெடக்க வஸ்து என்னன்னு தெரியல. அதைக் கண்டுபிடிக்க முடியல்ல. தொடைதட்டி வீரத்துள்ளல். தொடைதட்டியாடா நீ… முட்டிதட்டிக் கழுதை. எலேய் வீர மஹாப் புருஷா, ஒரு தெருநாய் வந்தா உன்னால எதித்து நிக்கத் திராணி உண்டா ?

சற்று தள்ளி தரையில் அதே அந்த வெளிச்சம். அது நாணயம் அல்ல. பளிங்கு. ஒரு மைக்கா போல…. காக்காப்பொன் போல… கண்ணாடிச்சில்லு போல… விசயம் துப்புரவா விளங்கிட்டது. அது மோகினிப் பிசாசின் வேலைதான். தரையில் பளிங்கைக் காட்டிக் காட்டி சைகாட்டி மெதுவா அதை நகர்த்தி நகர்த்தி அவனைக் கூட அழைத்துப் போகிறது மோகினிப் பிசாசு. என்ன வசீகரச் சிரிப்பு.

அந்தாக்ல எபவ்ட்-டர்ன்… ஒற்றை ஓட்டத்தில் வீட்டைப் பார்க்கப் பர்றந்தன கால்கள்… என்ற அளவில் கனவு கலைந்து முழிப்பு வந்து விட்டது. வெளியே வெளிச்சம். கண்ணைக் குத்திக் கிழிக்கும் வெளிச்சம். கண்கள் சிவந்து எரிந்தன.

– தானறியாத உடலசதி. மன இரைச்சல். ஆளை அயர்த்திக் குழப்பியிருக்கலாம். வேலைக்கு நேரமாகி விட்டது. இனி குளிக்கவும் நேரங் கிடையாது. நகரத்தில் நேரம் இருந்தாலும் பாதிநாள் குளிக்கத் தண்ணி கிடையாதுன்னு விட்டுர்றதுதான்னு வெய்யி… தனுஷ்கோடி அவசரமாய்ப் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.

/தொ ட ரு ம்/

—-

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts