அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

இரா முருகன்


பிறந்த நாள் முதல் கொண்டு இந்த வெள்ளைக்காரக் கூட்டத்திலேயே புகுந்து புறப்பட்டு பங்காளி தாயாதியாக இழைகிறது போல் சுலைமான் சுபாவமாக அவர்களோடு கலந்து விட்டான்.

அவனுக்கு பாஷை ஒரு தடையாக இல்லை. இந்துஸ்தானியும், தமிழும், பரங்கிப் பேச்சுமாக ஒரு கலவை. முக ஜாடை. கை ஜாடை.

சங்கரனைச் சூழ்ந்து நின்ற இளவயசுப் பெண்பிள்ளைகளை அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அவன் வெள்ளைக்காரர்களை ஒருத்தர் ஒருத்தராகத் தேடிப் போனதை சங்கரன் ஓரக் கண்ணால் பார்த்தபடி இருந்தான்.

இந்த லங்கிணிகள் விட்டால் கொஞ்சம் மூச்சு வாங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு அப்புறம் ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாம். அவர்கள் ஊரில் ஆண்பிள்ளை குடுமி வைத்திருக்க மாட்டான்கள் தான். ஆனால் தாடியும் மீசையும் அது பாட்டுக்கு செழித்து வளர்ந்து கிடக்குமே மழித்துக் கொள்ளாவிட்டால். என்னத்துக்கு சங்கரன் கன்னத்தைத் தடவி, முதுகில் தட்டி, இடுப்பு வேட்டியை அவிழ்த்து விடப் போகிறது போல் போக்குக் காட்டி, காது கடுக்கனை இழுத்துப் பார்த்து இந்தக் கூத்தடிக்கிறதுகள் என்று அவனுக்குப் புரியவில்லை.

சுலைமான் பவ்யமாகப் பின் தொடர ஒரு கிழட்டு வெள்ளைக்காரன் மெல்ல நடந்து வந்தான். வெள்ளை உடுப்பும் தொப்பியுமாக இருந்த அவன் தொப்பியைக் கழற்றிப் போலியாக வணங்கியபடி அந்தப் பெண்களைப் பார்த்து ஏதோ சொன்னான். அவர்கள் முன்னைக்கு இப்போது அதிகமாகச் சிரித்து கப்பலின் உள்ளறைகளுக்குள் செருப்பு மரத் தளத்தில் சப்திக்க ஓடினார்கள்.

கேப்டன். திஸ் இஸ் பிராமின். மை பாதர் ஆபீஸ் கிளார்க். ஸீ டப்ட். ஸீ த்ரெட். பிராமின் க்ளார்க்.

அவன் ஏதோ வினோத மிருகம் போல் சங்கரனைக் காட்டி வர்ணித்துச் சொன்னான்.

வைத்தி சார்தானே கிளார்க் ? அதென்ன, நேவிகேஷன் டிபார்ட்மெண்ட். மறந்து போச்சு எல்லாம். ஆனால் என்ன ? துருக்கன் சங்கரனைப் பெரிய மனுஷன் என்று துரையிடம் அறிமுகப் படுத்தியிருக்கிறான். சங்கரனுக்குத் தானும் நாலு வார்த்தை இங்கிலீஷ் படித்திருந்தால் இன்னேரம் சுலைமான் போல் துரை கூட, இடுப்புச் சிறுத்த துரைசானிகள் கூட கால தேச வர்த்தமானம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.

துரை தலையைச் சாய்த்து அவனைப் பார்த்து ஏதோ கேட்டான்.

பாதர் கம்மிங் டுமாரோ. கிளார்க் கமிங்க நெள.

சங்கரனுக்கு ஒரு எழவும் புரியவில்லை. துரை சிரித்துக் கொண்டான்.

தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி புட்டியை எடுத்துத் துரை கையில் வைத்தான் சுலைமான்.

தாங்க் யூ. தாங்க் யூ சோ மச்.

துரை என்னத்துக்காக இப்படி உணர்ச்சிவசப்பட்டான் என்று சங்கரனுக்கு அர்த்தமாகவில்லை. இவன்கள் எல்லாம் சாராயத்துக்கு அடிமை போல் இருக்கிறது. கருப்பன் கொடுத்தாலும் சிவப்பன் கொடுத்தாலும் அதைப் ப்ரீதியோடு ஏற்றுக் கொண்டு கடாட்சம் பொழியச் சித்தமானவர்கள்.

வைத்திசாரும் நித்யப்படிக்கோ, அமாவாசை பெளர்ணமிக்கோ இப்படிக் குப்பியைச் சுமந்து போய்க் கோட்டையில் துரைகள் முன்னே தெண்டனிட்டுத் தான் சம்பளம் வாங்கி ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானமும், வெங்காய சாம்பாரும், பகல் தூக்கமுமாக பெரிய வீடு கட்டிக் கொண்டு அனுபவிக்கிறானோ ?

துரை போத்தலைக் கோழியைத் தூக்கிப் போகிறவன் போல் கழுத்தைப் பிடித்துத் தூக்கிப் போக சுலைமான் சங்கரனிடம் சொன்னான் –

இவர் தான் காப்டன் துரை. கப்பலை ஓட்டற மாலுமிக்கெல்லாம் எஜமான். நாளைக்கு வாப்பா வந்ததும் இவர் கையெளுத்து தான் மொதல்லே வாங்கணும். கப்பல் இங்கே இருக்கற மட்டும், மாமிசம், கறிகாய், பழம், முட்டை, சீமைச்சாராயம் எல்லாம் காசுக்கு வாங்க இவருதான் உத்தரவு தரணும்.

அந்தப் பெண்பிள்ளைகளும் சுக்கான் பிடித்துக் கப்பல் ஓட்டுவார்களோ ?

சங்கரன் சந்தேகத்தோடு கேட்டான்.

அய்யரே, வெள்ளைத் தோலை மோந்து பார்த்து மயங்கிட்டே போ. அவங்க, ஊரு சுத்திப் பாக்க வந்தவங்க. இந்தக் கப்பல்லே இருக்கப்பட்ட முன்னூறு பேர்லே இருபது முப்பது பேர்தான் இதுலே வேலை பார்க்கறவங்க. மத்தபடிக்கு எல்லாரும் குஷியா ஊர் உலகம் எல்லாம் பாத்துக்கிட்டுப் போகத்தான் காசு கொடுத்து சீட்டு வாங்கி கப்பல்லே ஏறியிருக்காங்க.

அது சரிதாண்டா சுலைமான். ஆனா இப்படிக் கன்னிப் பொண்ணுங்க எல்லாம் பெத்தவா துணையில்லாம தனியா வருவாளா என்ன ?

அவங்க வந்தது சுத்திப் பாத்துட்டுப் போறதுக்கு மட்டுமில்லே. இங்கே பட்டணத்துலே துரைமார் இருக்கற வேலை ஸ்தலத்துலே, ஆஸ்பத்திரியிலே எல்லாம் ஏதாவது வேலை இருந்தா அதிலே சேர்ந்துப்பாங்க. இல்லே இவங்களைக் கட்டிக்கணும்னு எவனாவது தொரை நினச்சா உடனே விரலை நீட்டுவாங்க. மோந்தரம் போட்டா அப்புறம் பொஞ்சாதிதான். இங்கேயிருந்து கல்கத்தா, ரங்கூன், கொழும்புன்னு போறதுக்கும் தயாரா வந்திருப்பாங்க.

கூட்டமாக வந்த வெள்ளைக்காரர்கள் சுலைமானிடம் ஏதோ கேட்பதற்குள் மற்ற கட்டுமரம் எல்லாம் வந்து சேர்ந்து, அதிலிருந்தவர்கள் ஓணான் போல் ஏணியைப் பிடித்துக் கொண்டு கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். எல்லார் முதுகிலும் பெரிய கோணிப்பை. சீமைச் சாராயம் என்று அது குலுங்கிய தினுசிலிருந்து சங்கரனுக்குத் தெரிந்தது.

பாதர் கம்மிங் டுமாரோ. டாக்குமெண்ட் சைனிங் மார்னிங். டேக் ரெஸ்ட். டேக் பிராண்டி.

சுலைமான் ஒவ்வொருத்தரிடம் சொல்லி, பாட்டிலை நீட்டி, மறக்காமல் காசையும் வசூலித்துக் கொண்டான். அவன் நீளமான குப்பாயத்தில் திணித்துக் கொண்டிருந்த காகிதப் பணத்தில் ஒன்றை வாங்கி கப்பல் மேல்தட்டு வெளிச்சத்தில் பார்த்தான் சங்கரன். தாடியும் மீசையும் ஒட்டின கன்னமுமாக ஒரு மனுஷன் ரிஷி மாதிரி அதில் இருந்தான்.

லிங்கன். பிரசிடெண்ட்.

ஒரு வெள்ளைக்காரன் சங்கரனிடம் சொன்னபடி அந்தக் காகிதத்துக்கு என்னத்துக்கோ முத்தம் கொடுத்தான்.

சங்கரனுக்கு நொங்கம்பாக்கத்து முச்சந்தியில் பிரஜாபதி பற்றிப் பேசிக்கொண்டிருந்த மனுஷன் நினைவு வந்தான். அவன் பிரஜாபதியின் சித்திரப் படத்தை, தாயார் படத்தை எல்லாம் காட்டப் போவதாகச் சொன்னபோது தான் நித்திரை கொள்ளப் போனதற்காக இப்போது லிங்கப் படத்தை இந்த வெள்ளைக்காரன் காட்டுகிறதாக நினைத்தான். சத் விஷயம். வெள்ளைக்காரனாக இருந்தால் என்ன, சுந்தர கனபாடியாக இருந்தால் என்ன ? அந்த மரத்தடி மனுஷ்யன், என்னமோ ஆண்டியாக இருந்தால் என்ன ? எல்லாம் ஒண்ணுதான் போலிருக்கிறது.

சங்கரன் பயபக்தியோடு அந்தக் காகிதத்தைப் பார்த்து விட்டு சுலைமானிடம் கொடுக்க, அவன் அதை இடது கையால் வாங்கிக் குப்பாயத்தில் திணித்துக் கொண்டான்.

சரியான பிரம்மஹத்தி இவன் . சங்கரனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

இன்னும் ஏழெட்டுக் கட்டுமரம். அதிலிருந்தும் ஒன்றும் இரண்டுமாக மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு ஆட்கள்.

அய்யரே, நீயும் கொஞ்சம் ஒத்தாசை பண்ணேன்.

என்ன பண்ண வேண்டும் என்று தீர்மானமாகச் சங்கரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இது பாரு. ஒரு டாலர். ரெண்டு டாலர் ஒரு துரைத்தனத்து ரூபாய்க்கு சமம். இந்த புட்டி மூணு கொடுத்தா அவன் ஒரு டாலர் கொடுப்பான். அம்புட்டுத்தான். சரக்கை எடுத்துக் கொடுத்துட்டு காசை வாங்கி மடியிலே முடிஞ்சுக்க. அப்புறம் நான் வாங்கிக்கறேன்.

அரசூர் சுப்பிரமணிய அய்யர் புத்திரன் சாராயம் விற்கிறான். சுப்பம்மா நாவில் இருக்கிற பரதேவதைகளே, நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள். திவசத்துக்கு இறங்கி வரும் பித்ருக்களே. ஒரு ரசத்துக்குத்தான் இதெல்லாம். நீங்கள் பாட்டுக்கு எள்ளும் தண்ணீரும் இரைக்க திருப்தியாகத் திரும்பிப் போங்கள். சாமிநாதன் உங்களோடு இருந்தால் சொல்லுங்கள். அவனுக்கு இது ரொம்பவே பிடிக்கும். எத்தனை நாளைக்குத்தான் சும்மா புகையிலை விற்கிறது ?

சங்கரன் இயந்திர கதியில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது, வருடக் கணக்காக இந்தத் தொழில் செய்கிற லாவகம் வந்து விட்டிருந்தது.

பின்னால் சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது காலடியில் காலிச் சாக்கு. சுலைமான் இருக்கும் இடம் தெரியவில்லை. அவன் காலடியில் சுலைமானின் சஞ்சி இருந்தது. திறந்து பார்த்தான். உடுதுணி மட்டும் மிச்சம் இருக்க, அதிலும் குப்பி எதுவும் இல்லாமல் தீர்ந்திருந்தது.

கப்பலுக்குள் உத்தேசமாக இங்கே இருப்பான் என்று அவன் பாதி இருட்டில் சுலைமானைத் தேடியபோது, ஓவென்று கூச்சலோடு அந்தக் குட்டிகள் அவனைப் பாதி இருட்டான ஒரு அறைக்குள் ஓடிவந்து இழுத்துப் போனார்கள்.

இதென்ன, இந்த வெள்ளைக்காரிகளும் சோமபானம் பண்ணிக் கொண்டு ? கலி முத்திப் போச்சு என்பது இதுதானோ ?

சங்கரன் அவசரமாகத் திரும்ப முற்பட, ஒருத்தி எழுந்து போய் அறையின் கதவை அடைத்து விட்டு வந்தாள்.

அங்கே போய் உட்கார்.

இப்படித்தான் இங்கிலீஷில் சொல்லியிருப்பாள் என்று புரிய, கை விரலை நீள நீட்டியபடி அவள் அதட்ட, சங்கரன் அங்கே இருந்த குரிச்சியில் பட்டும் படாமல் உட்கார்ந்தான்.

குப்பியில் இருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் நிறைத்து இன்னொருத்தி அவனிடம் நீட்டினாள்.

வேண்டாம்டாயம்மா. உனக்குப் புண்ணியமாப் போறது. பகவதிக்குட்டிக்குத் தெரிஞ்சா அருவாமணையிலே வச்சு நறுக்கிடுவா.

சங்கரன் குடுமியைப் பின்னாலிருந்து பிடித்து இழுத்தார்கள். அவன் வாயை உலோகக் கரண்டி கொண்டு வலுக்கட்டாயமாகத் திறந்தார்கள். ஒருத்தி அவன் மடியில் கால் வைத்து உட்கார்ந்து, குழந்தைக்குச் சங்கில் விளக்கெண்ணெய் புகட்டுகிறமாதிரி அந்தத் திராவகத்தைப் புகட்டினாள். அக்னி இறங்கித் தொண்டைக் குழி வழியே மாரில் புகுந்து போய்க் கொண்டிருக்கிறது. சங்கரன் மாரைப் பிடித்தபடி தவித்தான். என்னமோ சுகமாக இருந்தது. ரொம்பவே பயமும் கூட எட்டிப் பார்த்தது.

அந்தப் பெண்பிள்ளை அவன் மடியில் உட்கார்ந்தபடிக்கு அவன் நெஞ்சைத் தடவி விட்டது இதமாக இருந்தது. இப்படிப் புகட்டினால் அவன் கட்டுமரத்தில் கொண்டு வந்த சாராயம் எல்லாவற்றையும் ராத்திரி விடிகிறதுக்குள்ளே குடித்துத் தீர்க்கத் தயார். அப்புறம் இவளுடைய மாரில் தலை சாய்த்து உறங்கிப் போவான்.

அதற்கு முன் இந்த நாற்காலி சுகப்படவில்லை. தரையில் உட்கார வேணும். இந்தப் பெண்கள் வேண்டுமானால் நாற்காலியில் உட்காரட்டும். அவன் மாரிலும் முதுகிலும் மெத்துமெத்தென்று காலால் மிதிக்கட்டும். அப்சரஸ்கள் எல்லாரும். பகவதிக்குட்டி. அவள் கிடக்கிறாள். இப்போ என்னத்துக்கு அவள் நினைப்பு. பிழைச்சுக் கிடந்தால் பார்த்துக்கலாம். அந்த நூதன வண்டிக் களவாணிகள் சொன்னார்களே. சாமா கூட கிரகணச் சூரியனில் இருந்து, புகைபிடித்த கண்ணாடிச் சில்லுக்குள் எட்டிப் பார்த்துச் சொன்னானே. போகம். இதுதான் போலிருக்கிறது. மாடியில் அந்தக் கண்ணாடிச் சில்லை அப்படியே போட்டது சாயந்திரம் உலர்ந்த வஸ்திரம் எடுக்கப் போகிற கோமதி மன்னி காலில் குத்துமோ. அதைப் பற்றி இப்போ என்ன ? தரையில் சரிந்து உட்கார்ந்தா சுகமாத்தான் இருக்கு. கப்பல் வேறே கூடவே கள்ளுக் குடிச்ச மாதிரி ஆடறது. இப்படி உக்காந்தாப் போதாது, படுன்னு இவள் என்னத்துக்கு இழுக்கறா ? கோமதி மன்னி தங்கை இவ மாதிரித்தான் பெரிய மாரோட இருப்பாளோ ? இருடி கழுதே. மாரைத் தொட்டாக் கத்திக் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுவியா ? கூளப்ப நாயக்கன் காதல் தெரியுமோ ? அபிநயம் இப்படித்தான் பிடிக்கணும். சிரிக்காதேடா லண்டி முண்டே. இன்னும் கொஞ்சம் குப்பியிலே ஊத்திக் கொடுடா. இன்னிக்கு கிரகணம். உன் நட்சத்திரத்துலே வந்தா ஓலையிலே பட்டம் கட்டிக்கணும். பட்டணத்து வைதீகனுக்குத் தட்சணை கொடுக்கணும். நான் வைதீகனும் இல்லே. பாம்பாட்டியும் இல்லே. புகையிலையும் மூக்குப் பொடியும் விக்கற பிராமணன். பிராமணன் இதெல்லாம் பானம் பண்ணப்படாது. ஆனா, காப்பி சாப்பிடலாம். அதுக்குத் தீட்டுக் கெடயாது. நீ காப்பி கலப்பியோ ? எச்சலை ஏண்டி என் உதட்டுலே தடவறே கடங்காரி ? அசுத்தம். போறது கோவிச்சுக்காதே. நன்னாத்தான் இருக்கு. இது என்ன வாழக்காயா ? ஏன் குடலைப் பிடுங்கறாமாதிரி நாறித் தொலயறது ? நீ ஊட்டினா எல்லாம் நன்னாத்தான் இருக்கும். கோமதி மன்னி முட்டக்கோசுப் பொரியல் பண்றமாதிரி. இது அதைவிட ருஜிதான். சுலைமான். எங்கே போய்த் தொலஞ்சான் ? போலாண்டா கட்டேலே போறவனே. நொங்கம்பாக்கம் போகணும். செட்டியார் தரிசன உண்டியலை மாத்தணும். தெலுங்கன் கிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு கருத்தானை. வேஷ்டியை உருவாதேடி. நீ குளிக்கறச்சே மேலே இருந்து பாத்திருக்கானா யாராவது ? கிரகணத்துக்குக் குளிச்சியோ ? அத்தரோ அரகஜாவோ சீமை திரவியமோ, ஒண்ணும் வேணாம். இந்த உடம்பு வாடைதான் ஆகர்ஷணம். குப்பியை எடுடி மூதேவி. படுத்துண்டே குடிக்கறேன். இப்படி மேலே ஈஷினா எப்படிப் பானம் பண்ணுவான் மனுஷன் ? என்னத்துக்கு சிரிக்கறேள் எல்லாரும் ? கொட்டகுடித் தாசிக்குத் தெரிஞ்ச மாதிரி கொக்கோகம் யாருக்குத் தெரியும் ? நீ அவளுக்கே சொல்லிக் கொடுப்பேடி ராஜாத்தி. அது கட்டில். எனக்குத் தெரியும். நீ சொல்ல வேணாம்.

பழுக்காத்தட்டு சங்கீதம் இருந்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts