முகம்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

ஏலங்குழலி


தி.நகரின் எத்தனையோ குறுக்குத் தெருக்களில் ஒன்றின் முனையில் வந்து, இரு பெண்கள் நின்றனர். அவர்களின் தலைக்கு மேல், வண்ணக் கலவையாக அந்த போர்டு தொங்கியது.

“என்ன சொல்ற, அர்ச்சனா ? போய் பாத்துருவமா ?” சுப்ரியா, குட்டையாக வெட்டப்பட்டிருந்த தலைமுடியை ஒரு சிலுப்பு சிலுப்பினாள்.

“ம்ம்ம்…பார்ப்போம். ‘வித்தியாசமான முறைல உங்கள் முக-வசீகரத்தை வெளிப்படுத்துவோம் ‘ னு பந்தாவா சொல்லியிருக்காங்களே… ? டி.வீலே நெறைய ஆட் பாத்திருக்கேன். ஒரு முறை ட்ரை பண்ணுறதுலே என தப்பு ? எனக்கும் புதுசா ஏதாவது செய்துக்கணும்னு தோணுது.”

அவர்கள் அந்த போர்டு தொங்கவிடப்பட்டிருந்த கேட்டைத் திறந்துகொண்டு, உள்ளே நுழைந்தனர். ஜீன்ஸ் அணிந்த இரு நவயுகப் பெண்கள் ஒயிலாக நடந்து வருவதைக் கண்ட வாட்ச்மேன் ‘சடே ‘ரென்று ஸ்டூலிலிருந்து விரைந்து எழுந்தான். அவசரமாக சலாம் வைத்தான். பத்து தப்படி தள்ளியிருந்த பங்களாவின் மேற்புறமிருந்த அழகு நிலையத்திற்குள் செல்ல வழியும் காட்டிக்கொடுத்தான்.

பார்லருக்குள், பாண்டும் சட்டையும் அணிந்த சில பெண்கள் பம்பரமாக ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். சுவர்களில் அழகுப் பொருட்களின் விளம்பரங்கள் பளபளப்புடன் தொங்கின. இரண்டு மூன்று நாற்காலிகளில் சில உயர்குடும்பத்துப் பெண்கள் உட்கார்ந்து, தத்தம் தலையை அழகு நிலையத்துப் பெண்களிடம் ‘தேமே ‘யென்று கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தனர். வேறொரு மூலையில், ஒரு பெண் ப்ளாஸ்டிக் வாஷ்பேசினில் தலை கவிழ்ந்திருக்க, ‘புசுபுசு ‘வென்று நுரை பொங்க ஷாம்பூ தேய்த்துக்கொண்டிருந்தாள் இன்னொரு பார்லர் பெண்.

அங்கங்கு ஆளுயரக் கண்ணாடிகள், அறையின் வெளிச்சத்தை மிகைப்படுத்தின. ‘லோரியால் ‘, ‘லக்மே ‘ என்று அழகுச் சாதனங்கள் மேஜைகளில் நிரம்பி வழிந்தன.

புதுவரவுகளைப் பார்த்ததும், சல்வார் அணிந்திருந்த பெண்ணொருத்தி சாவதானமாக நடந்து வந்தாள். வாயில் சூயிங் கம். கையில் ஒரு பேனா.

“வாங்க, வாங்க. உக்காருங்க. என்ன பண்ணிக்கிறீங்க ?”

அர்ச்சனாவும் சுப்ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“பேஷியல்.” சூயிங்-கம் பெண் வாயைத் திறக்குமுன், அர்ச்சனா இடைமறித்தாள். “ஹெர்பல், ஃப்ரூட் இதெல்லாம் வேணாம். சாதா பேஷியல் போதும். அப்புறம் எனக்கொரு பெடிக்யூர், இவங்களுக்கு ஒரு மேனிக்யூர்.”

“அவ்ளவ்தானா ? புருவம் ப்ளக் பண்ணிக்குங்களேன். நாங்க நல்லா செய்துவிடுவோம்.”

இன்னொரு அறைக்குள் அவர்களைப் படுக்க வைத்து, ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு விதவிதமான வாசனைகளுடன் மஞ்சள், கரும்பச்சை, பிங்க் என்று பல திரவங்களை முகத்தில் அழுந்தி தேய்த்து, கண்களில் பஞ்சை வைத்து ஒற்றி, முகத்தின் சிறிய கரும்புள்ளிகளை முற்றிலுமாகச் சுரண்டியெடுத்த பின், ‘ஜிவுஜிவு ‘த்த முகங்களுடன் அர்ச்சனாவும் சுப்ரியாவும் வெளியே வந்தார்கள். உடனேயே இரு பார்லர் பெண்கள் கைகளில் தத்தம் உபகரணங்களுடன் அவர்களெதிரில் அமர்ந்தனர்.

அர்ச்சனாவின் பாதங்களை ஒரு பெண் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, சுப்ரியாவின் நீண்ட விரல்களை இன்னொரு பெண் லோஷனால் தடவ ஆரம்பித்தாள். அழகு நிலையத்தின் நிர்வாகி போல் தோன்றிய இரட்டை நாடிப் பெண்மணி ஒருத்தர், இன்னொரு அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்தார். ‘இந்தம்மாவுக்கெல்லாம் எதுக்கு ஸ்லீவ்லெஸ் ? ‘ என்று சுப்ரியா அர்ச்சனாவிடம் முணுமுணுத்தது நல்ல வேளையாக அவர் காதில் விழவில்லை(பார்லர் பெண்ணின் காதில் விழுந்து தொலைத்திருக்க வேண்டும். அவள் முகத்தில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது.). இரு பெண்களையும் பார்த்துப் பொதுவாக ஒரு செயற்கைப் புன்னகை பூத்தாள்.

“பெடிக்யூர் மட்டும்தான் பண்ணிக்கிறீங்களா ? புருவத்தையும் ஷேப் பண்ணிக்குங்களேன். உங்க முகத்தையே மாத்தி அமைச்சிடும். ரொம்ப ஸூட் ஆகும் உங்களுக்கு. நாங்க நல்லா செய்துவிடுவோம்.” என்றாள்.

“எல்லாரும் அதைத்தான் சொல்றாங்க… ‘வித்தியாசமா செய்துவிடுவோம் ‘னு சொல்லியிருக்கீங்களே ? நல்லா பண்ணிவிடுவீங்களா ?”

“கண்டிப்பா. எங்ககிட்ட விட்றுங்க. கலாஆஆஆஆ…” ஒரு நெடிய கூப்பாட்டுக்குப் பின், சூயிங்-கம் பெண் கதவைப் ‘பட் ‘டென்று திறந்துகொண்டு, தலையை மட்டும் உள்ளேவிட்டுப் பார்த்தாள்.

“கூப்டாங்களா, மேடம் ?”

“Eye-brows. நல்லா பண்ணிவிடணும், என்ன ?”

“சரிங்க மேடம்.”

அர்ச்சனாவின் கால்நகங்களை ஒரு பெண், சிறிய கத்தி போன்ற உபகரணம் ஒன்றினால் சுரண்ட, அவள் வலியில் ‘ஸ்ஸ்ஸ்ஸ்” என்றாள்.

சுப்ரியா புன்னகைத்தாள். “இதுக்குத்தான் நான் பார்லர்லே பெடிக்யூர் பண்ணிக்கிறதே இல்லை. வலி உயிர் போகும்.”

“அதுக்காக ? அப்புடியே விட்றலாம் ‘னு சொல்றியா ? அதெல்லாம் நம்மால முடியாதுப்பா.”

சுப்ரியா உதட்டைப் பிதுக்கிவிட்டு, ‘பளபளவென் ‘று ஒளிர்ந்த தன் கைவிரல் நகங்களைச் சரி பார்த்துக்கொண்டாள். பார்லர் பெண் ஒரு ப்ளாஸ்டிக் டப்பா நிறைய நகச்சாயங்களை நீட்ட, கருஞ்சிவப்பில் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துப் பூசச் சொன்னாள்.

பதினைந்து நிமிடங்களுக்குள், இரு பெண்களும் அழகு நிலையத்தின் முன்னறையின் இருந்தனர். வசதியான இரு சுழலும் நாற்காலிகளில் இருவரும் சாய்ந்து கொள்ள, இரு பார்லர் பெண்கள் அவர்களது புருவங்களைச் சீர்ப்படுத்தத் தொடங்கினர்.

அர்ச்சனாவை அழகு படுத்திக்கொண்டிருந்த பெண் கண்ணாடியைப் பார்த்துப் தன் புருவத்தைச் சுருக்கினாள். “மேடம், புருவத்தை மொத்தமா ஷேவ் பண்ணிக்கிட்டாங்கன்னா கூட நல்லா இருக்கும். உங்க ஃபேஸ் கட்டுக்கு அதுதான் ஸூட் ஆகும்.”

அர்ச்சனா கொஞ்சம் குழப்பத்துடன் சுப்ரியாவைப் பார்த்தாள். “என்ன சொல்ற ? பண்ணிக்கலாமா ?”

“எதுக்கு அதெல்லாம் ? ஷேப் பண்ணாலே போதும்.”

“இல்லீங்க மேடம். நாங்க நல்லா பண்ணிவிடுவோம். புருவம் நல்ல ஷேப்போட ‘பளிச் ‘சுன்னு இருக்கும். ரொம்ப வித்தியாசமான லுக் கிடைக்கும்.”

“சரி…பண்ணிவிடுங்க.”

அரை மணி நேரமும், ஆளுக்கு அறுநூறு ரூபாயும் தீர்ந்தான பிறகு, இருவரும் அழகு நிலையத்தின் வெளிவாயில் படிக்கட்டுகளைத் தாண்டி வெளியே வந்தனர்.

“நல்லாத்தான் பண்ணியிருக்காங்க இல்ல ?”

“நாட் பேட்.”

வாயில் கேட் பூட்டப்பட்டிருந்தது. சுப்ரியா சுற்றும் முற்றும் பார்த்தாள். “எங்கே வாட்ச்மேனைக் காணம் ?”

“இரு…இங்கதான் எங்கியாவது இருப்பாரு…லஞ்சுக்குப் போயிருக்காரோ, என்னமோ ?”

அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தவன்போல், கட்டிடத்தின் மறு பக்கம் யாருடனோ அரட்டையடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேன், ஆடியசைந்துகொண்டு வந்தான். சுவாரஸ்யமில்லாமல் கேட்டைத் திறந்துவிட்டான்.

“மன்னிச்சுக்குங்கம்மா. உங்களை கவனிக்கலை. ஆரோ எங்க பார்லர் பொண்ணுங்க, இல்ல பக்கத்து ஆஃபீஸ் பொண்ணுங்கதான் கேட்டாண்ட நிக்குதுன்னு நெனைச்சிப்பிட்டேன். எல்லாரும் ஒரே மாதிரி வேற இருக்கீங்களா…”

அர்ச்சனாவும் சுப்ரியாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மெதுவாகத் தெருவில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தனர்.

“சுப்ரியா, நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு பார்லர் பக்கம் வர வேணாம்னு பாக்கறேன்,” என்றாள் அர்ச்சனா.

“நானும்தான்.”

——————–

elankhuzhali@yahoo.com

Series Navigation

author

ஏலங்குழலி

ஏலங்குழலி

Similar Posts