அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து நான்கு

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

இரா முருகன்


என்ன அய்யர்சாமி, காலையிலே வருவீஹன்னு பாத்தேன். தலையே தட்டுப்படலே.

கருத்தான் கேட்டான்.

நேரமாயிடுச்சு கருப்பா.

சங்கரன் கடைக்கு முன்னால் பொருத்தியிருந்த பலகையில் உட்கார்ந்தபடிக்குச் சொன்னான்.

எதிர்ப் பலகையில் அந்த தெலுங்குப் பிராமணன் உட்கார்ந்திருந்தான்.

இன்னிக்கு ஏதோ கிரகச்சாரமாமே. அய்யமாரு எல்லாம் சூரியனைப் பிடிச்ச ஷைத்தான் தொலஞ்சு போவட்டும்னு நூத்தொம்பது தடவை தொப்பக் குளத்துலே முளுக்குப் போடணுமாமே ?

எந்த வல்லாரவோளி சொன்னான் அப்படி ?

சங்கரன் கேட்டான்.

தமிழ் பிராமணாளுக்கு கிரஹணத்துக்கு அனுஷ்டானம் நிறையவோ ?

தெலுங்கன் கேட்டான்.

இவன் கிட்டே என்ன உபசார வார்த்தை வேண்டிக் கிடக்கு ? நில்லுன்னா நிக்கணும். உக்காருன்னா உக்காரணும். கருத்தானுக்குக் காரியஸ்தன். நாளைக்கே நாமளும் இங்கே பாகஸ்தன் ஆயிட்டா நமக்கு முன்னாடியும் இவன் மதுரைத் தாணுப்பிள்ளை மாதிரி கைகட்டி யாசிச்சு நிக்கணும்.

நீர் எப்ப வந்தீர் ஓய் ? உம்மை மதியத்துக்கு வரச் சொல்லியிருந்தோமே.

சங்கரன் அதட்டலாகக் கேட்க, தெலுங்கன் எழுந்து நின்று அவனை நமஸ்கரித்தான்.

பெரியவா மன்னிக்கணும். நான் கடை திறக்கறதுக்கு முன்னாலேயே வந்து காலையிலேருந்து இங்கே தான் காத்துண்டிருக்கேன்.

கிரகணத்துக்குக் குளிச்சீரா ஓய் ? இல்லே தெலுங்கு பேசறவா எழவுக்கு மட்டும்தான் குளிப்பாளா ?

எழவுக்கு மட்டுமென்ன ஸ்வாமி ? எல்லாத்துக்கும் தான் ஸ்நானம். ராத்திரி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் குளிச்சுட்டு அக்னி ஹோத்ரம் பண்ணிட்டுத்தான் ஆகாரம். நாலு தலைமுறையா அப்படித்தான்.

அய்யர் சாமி, இந்த மனுசர் நான் ரமலானுக்கு நோம்பு இருக்கறது போல, பல்லுல பச்சத்தண்ணி படாம உக்காந்திருக்கார் நாள்முச்சூடும். வண்டியிலே வச்சுத் தள்ளிட்டு வாளப்பளம் வித்துட்டுப் போனான். நாலு வாங்கித் துண்ணு அய்யரேன்னேன். வாணாம்னுட்டாரு.

சங்கரனுக்குத் தன் மேலேயே கோபமாக வந்தது. சாப்பிட்ட கையோடு கிளம்பியிருந்தால் இரண்டு மணியைப் போல் வந்திருக்கலாம். முச்சந்திக்கு வந்து நின்று சிரம பரிகாரம் செய்து கொண்டு கிளம்ப நினைத்தது தப்பாகி விட்டது.

போகட்டும். இப்ப வந்த வேலையைப் பார்த்து இந்தத் தெலுங்குப் பிராமணனை அனுப்பி வைக்க வேண்டும். இன்னிக்கு ராத்திரிக்குள் இவன் பட்டினியால் செத்துப் போனால் சங்கரனைத்தான் பிரம்மஹத்தி பிடிக்கும். சாமிநாதனைப் பிடித்தவள் போல் அது பெண்பிள்ளையாக இருந்தால் அவளோடும் கிரீடை பண்ணலாம்.

மனம் முழுக்க போகத்திலேயே முழுகிக் கிடக்கிறது. அந்த நூதன வண்டிக் களவாணிகள் புஸ்தகத்தை விரித்துக் கொக்கோகச் சித்திரமென்று விஸ்தாரமாகக் காட்டிப் போனது நிசமா சொப்பனமா என்று தெரியவில்லை. அந்தப் புஸ்தகம் வெகு சுத்தமாக ஞாபகம் இருந்தது. ஒவ்வொரு படமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கிரீடை செய்யும் வெள்ளைக்காரிகள். நடுவிலே அவன்.

பெரிய இரைச்சலோடு கருப்புப் பட்டிணம் போகிற நாலு வண்டிகள் வந்து களேபரமாக யாரோ வண்டிக் கூலி விஷயமாகச் சண்டை போட்டுச் சத்தம் கூட்டி எழுப்பி விட்டிருக்காவிட்டால் அவன் வேட்டியை நனைத்துக் கொண்டு திரும்பிப் போயிருப்பான்.

இதென்ன மனசு குறக்களி காட்டுகிறதா ? சதா சம்போகம் சம்போகம் என்று அடித்துக் கொண்டு. அந்தக் கொட்டகுடித் தாசி வேறே இறங்கிப் போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு வஜ்ரப்பசை போட்டு ஒட்டினதுபோல் மனசில் அப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். பகவதிக்குட்டியோடு பாய் போட்டுப் படுத்தால் தான் இதெல்லாம் சமனப்படும் போல.

உமக்குக் கல்யாணம் ஆச்சுதா ?

தெலுங்கனைப் பார்த்துக் கேட்டான் சங்கரன்.

இன்னும் இல்லை. அடுத்த வருஷம் செய்யணும் என்று என் தாயார் முரண்டு பிடிக்கிறாள்.

நாலு தம்பிடி பொடி கொடும் சாயபு.

வந்து நின்ற ஆள் வஸ்தாது போல இருந்தான். பீங்கான் ஜாடியில் இருந்து நேர்த்தியாகப் பொடியைக் கரண்டியால் எடுத்து அதை வாழைமட்டையில் அடைத்துக் கொண்டிருந்த கருத்தானைப் பார்த்தபடிக்கு, கல்யாணம் என்று சொல்லி ஒரு மாசம் ரெண்டு மாசம் வராமல் தெலுங்கு பிரதேசத்துக்குச் சவாரி விட்டுடுவீரா என்று தெலுங்கனைக் கேட்டான் சங்கரன்.

உத்தியோகம் இங்கே நிச்சயம் என்ற திருப்தி முகத்தில் தெரிய, அதெல்லாம் இல்லே சார், எல்லாம் இங்கேயே தான். என்ன ரெண்டு மூணு நாள் லீவு எடுக்க வேண்டி வரும் என்றான் தெலுங்கன்.

லீவு என்றால் என்ன என்று தெரியவில்லை சங்கரனுக்கு. தெலுங்கனுக்கு இங்கிலீஷ் அத்துப்படி ஆயிருந்ததில் அவனுக்குக் காரணமில்லாமல் அசூயை வந்தாலும் அவன் தன்னை சார் என்று விளித்ததில் ஏகப் பெருமை.

அஸ்ஸலாம் அலைகும்.

ஜவ்வாதும், அரகஜாவுமாக மூக்கைத் துளைத்தது. கருத்தானை விட ரெண்டு மடங்கு பெரிய ஆகிருதியோடு சரிகைக் குல்லாய் வைத்துக் கொண்டு ஒரு துருக்கன் கருத்தானுக்கு சலாம் சொன்னான்.

இரண்டு பக்கத்துப் பலகையையும் பார்த்துவிட்டு, அவன் தெலுங்கு பிராமணன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவன் கொஞ்சம் தள்ளி உட்கார, துருக்கனும் அதே விதம் தள்ளிப் போனபடி சிரித்தான்.

ஏன் அய்யரே ஓடறே. உன்னோட வியர்வை என்னைக் கஷ்டப்படுத்தாது.

தெலுங்கன் இந்த மாதிரித் தருணங்களில் மெளனமாக இருப்பதே நல்லது என்பதுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு பொடி வாங்க அடுத்து வந்த ஒரு சிப்பாய் இடுப்பில் செருகி இருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

சிப்பாய் கடன் சொல்லிப் பொடி வாங்கிப்போக, அவன் போன பிறகு சைத்தான் கா பச்சா என்றான் கருத்தான்.

கொடுக்க மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே பாய் ? கொட்டையையா நெறிச்சுடுவான் ?

வந்த துருக்கன் பலமாகச் சத்தம் போட்டுக் கேட்டான். தெருத் திரும்பிக் கொண்டிருந்த சிப்பாய்க்கு அது கேட்டிருக்கலாம் என்று சங்கரனுக்குச் சந்தேகமாக இருந்தது.

சுலைமான், வாயை மூடிட்டு இருக்க மாட்டியா ?

கருத்தான் அவனைக் கடிந்து கொண்டான்.

இல்லே மாப்பிள்ளே. இவனுஹள ஒரு மட்டத்துலே வைக்கணும். பயந்தா கொருமா பண்ணித் தின்னுடுவான் நம்மளை.

அந்தச் சனியன் பிடிச்சவனை விடு. இவுஹ தான் அய்யர்சாமி. நம்ம வாப்பா தோஸ்த் இல்லே அரசூர் பெரிய அய்யர்சாமி அவரோட மகன்.

துருக்கன் ஏழடி நாலடியாகக் குனிந்து சங்கரனுக்கு சலாம் சொன்னான்.

நம்ம பாகஸ்தரா ? வாரே வா தோஸ்த். சுலைமானுக்கு ரொம்ப சந்தோசம் உன்னைப் பாத்ததுலே.

கருத்தான் சங்கரனிடம் ஏற்கனவே சுலைமானைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். இந்த வியாபார அபிவிருத்தியில் மூன்றாவது பாகஸ்தன். கருத்தானின் குப்பி அதாவது அத்தை மகன். அவனும் அவன் அப்பனும் ஊரில் ஏகப்பட்ட தொழில், வியாபாரம் என்று பார்க்கிறார்கள். கப்பலில் வந்து இறங்கும் வெள்ளைக்காரர்களைக் கரைக்குக் கூட்டி வந்து அவர்கள் செளகரியத்தைக் கவனித்துக் கொள்வதிலிருந்து, மூக்குப்பொடி, தோல் செருப்பு, இடுப்பு வார், உலர்ந்த திராட்சைப் பழம் விற்பது என்று ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.

அடுத்த வாரம் சரக்கு வரது. சுலைமான் காக்கா கிட்டப் பணம் கொடுத்து விட்டுடலாம் என்று சொல்லியிருந்தான் கருத்தான்.

சங்கரன் கையில் பிடித்திருந்த சஞ்சியிலிருந்து செட்டியார் கடை தரிசன உண்டியலை எடுத்தான்.

மன்னிக்கணும். இந்தக் கருத்தான் கடன்காரன் தம்புச்செட்டி தெருவிலே உண்டியலை மாத்தி ரொக்கமாக்க இன்னிக்குப் போகலாம் நாளைக்குப் போகலாம்னு சொல்லிண்டே இருக்கான். பிருஷ்டம் வணங்க மாட்டேங்கறது அதுக்கு. எப்படியும் நாளைக்கு மாத்தி சரக்கு பிடிக்கப் பணம் கொடுத்துடறேன்.

சங்கரன் சொல்லி முடிப்பதற்குள் தெலுங்கன் குறுக்கே புகுந்தான்.

அதெதுக்கு சார் ? நீங்க இவாளுக்கு இண்டார்சு பண்ணிக் கொடுத்திட்டாப் போறது. தரிசன உண்டிதானே ? இவாளே மாத்திக்கலாம். இல்லே இவா சரக்கு வாங்கற எடத்துலே அவா பேர்லே இன்னொரு இண்டார்சு பண்ணினாத் தீர்ந்தது விஷயம். பேரேட்டிலே உண்டியலுக்கு ஒண்ணும், காசு வசூல், வரவு செலவுக்கு ஒண்ணுமாக் கணக்கு எழுதி அப்புறம் வரவு செலவு நிலுவை எடுத்தாப் போதும். நீங்க சப்ளை பண்ணப் போறவா கிட்டேயும் உண்டியலாவே வாங்கிண்டா ராஜாங்கத்துக் கட்ட வேண்டிய வரியும் மிச்சமாகுமே.

அவன் கண்ணுக்கு முன் தான் அற்பப் பதராகக் குறுகிப் போனதாக சங்கரனுக்குத் தோன்றியது. கிணறு வெட்ட வெட்ட பூதமும் புதையலும் வருகிறது போல, தெலுங்கனிடம் கோணிச்சாக்கில், துணிப்பையில், மடிசஞ்சியில், சருவப் பானையில், குண்டானில், குவளையில் எல்லாம் பிடித்து வைத்தாலும் தீராத விஷய ஞானம் இருக்கிறது. துரைத்தன பாஷை சரிக்குப் பேச வராவிட்டாலும் அர்த்தமாகிறது. மட்டுமில்லை. சரியான நேரத்தில் சரியான பிரயோகத்தை வாக்கில் கொண்டு வந்து நிறுத்துகிற சரஸ்வதி கடாட்சம் வேறே இவனுக்குப் பூரணமாக இருக்கிறது. தவிர, துரைகள் திட்டம் செய்து வைத்தது போல கணக்கு எழுதக் கூடியவன்.

சுலைமானும் கருத்தானும் அந்த வத்தல்காச்சித் தெலுங்கனைப் புது மரியாதையோடு பார்த்தார்கள்.

சாமி, நாளைக்குக் காலையிலே வந்துடுங்க. நாள் எல்லாம் நல்லாத் தானே இருக்கு ?

கருத்தான் தெலுங்கனுக்கு மாசாமாசம் ஐந்து ரூபாய் கொடுக்க சம்மதித்துவிட்டான்.

சம்பளம் தவிர வெள்ளிக்கிழமை பகலுக்கு மேல் கருத்தான் தொழுகைக்குப் போகிறபோது வாரம் அரை நாள் கடை அடைப்பு. அமாவாசைக்கு முழு அடைப்பு. ரம்ஜான், தீபாவளிக்குக் கடைக்கு வர வேண்டாம்.

தெலுங்கன் அந்த இரண்டு துருக்கர்களுக்கும், தமிழ்ப் பிராமணனுக்கும் தனித்தனியாக நமஸ்காரம் சொல்லி, கையில் ஐந்து ரூபாய் முன் பணமாக வாங்கிக் கொண்டு கிளம்பிப் போனான்.

கம்பேனி காரியஸ்தன்னா கெளரதையான உடுப்பு வேணும். நாளைக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டு, புதன்கிழமை வரேன். நாள் நல்லா இருக்கு அன்னிக்குத்தான்.

அவன் சொன்னதற்கு யாருமே மறுப்புச் சொல்லவில்லை.

நெறைய விஷயம் தெரிஞ்சவனா இருக்கான். ஒரு விதத்துலே நல்லது.

சுலைமான் சொன்னான்.

வேறே எதாவது விதத்துலே நல்லது இல்லியா ?

சங்கரன் கேட்டான்.

அது நாம நடந்துக்கறதைப் பொறுத்த விஷயம் தோஸ்த்.

சங்கரனுக்கு என்ன என்று சொல்ல முடியாத நிம்மதி.

கருத்தா, இருட்டிண்டு வரதே. கடையை எடுத்து வச்சுட்டு வா. சமுத்திரக் கரையிலே காலாற நடந்துட்டு வரலாம்.

அவன் கூப்பிட்டபோது சுலைமான் வேண்டாம் என்று கையைக் காட்டினான்.

கருத்தான் போவட்டும். பீவி வாயும் வயறுமா நிக்கிறா அவனுக்கு. நீ வா. கப்பலுக்குப் போகலாம். மத்தியானம்தான் வந்து நங்கூரம் போட்டுச்சு.

நானா ? கப்பலுக்கா ?

ஏன் அய்யரே, கப்பல்லே ஏறினா தீட்டுப் பட்டுப் போயிடுவியா ? கடல்லே சவாரி போனாத்தானே உங்க ஆளுகளுக்குத் தீட்டு ? நீ அதும் போயிட்டு வந்ததாச் சொன்னானே கருத்தான் ?

தீட்டுக்கு இல்லே. நான் கப்பல்லே வந்து என்ன பண்ணப் போறேன் ?

நாலு மனுஷாளைப் பார்க்கலாம் சாமிகளே.

கருத்தான் கடைக்குள் இருந்து சுண்ணாம்புக் கட்டியால் என்னமோ குறித்திருந்த பலகைகளை எடுத்து வந்து வாசலில் வைத்தபடி சொன்னான்.

சங்கரனுக்குக் கப்பலில் ஏறி உள்ளே போய் யந்திரங்களை, பிரயாணமாக வந்தவர்களை, அவர்களுக்கு வாய்த்த வசதிகள், செளகரியம் எல்லாம் பார்க்க இஷ்டம் தான். ஆனால் இருட்டிக் கொண்டு வருகிறதே.

ஏன் கவலைப்படறே தோஸ்த். பக்கத்துலே தான் வூடு. வண்டியை ஒரு விரட்டு விரட்டினா பத்து நிமிசத்துலே ஆர்பர். அப்புறம் கட்டு மரத்துலே இன்னொரு பத்து நிமிசம் கடல்லே போனா கப்பல். ஏறிப்பாத்துட்டு ராத்திரி ஒம்பது மணியைப் போல வந்துடலாம். நொங்கம்பாக்கத்துக்கு உன்ன வண்டியிலேயே கொண்டு விட்டுடறேன். ஆளு அம்பு ஆனை குருதை அல்லாம் இருக்கு நம்ம கிட்டே படச்சவன் கிருபையிலே.

ஒரு கவலையும் இல்லை. கப்பலில் ஒண்ணுக்குப் போக எல்லாம் சவுகரியம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆபத்துக்குப் பாவம் இல்லை. சுலலமான் வீட்டிலேயே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு தோட்டத்துக்குப் போய் அற்ப சங்கையை தீர்த்துக் கொண்டு, ஜலம் வாங்கிக் கைகால் கழுவிக் கொண்டால் ஆச்சு. துருக்க வீட்டில் நுழைந்தால் ஜாதிப் பிரஷ்டம் பண்ணுவதாக பட்டணத்து வைதீகன் எவனாவது சொன்னால் ?

அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. பட்டணத்து வைதீகன் எல்லாம் மயிலாப்பூரில் மூத்திரச் சந்தில் கிரஹணத்தை விரட்ட மந்திரம் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கட்டும். அரசூர் வைதீகர்களுக்கு சங்கரன் பட்டணத்தில் எக்கேடு கெட்டு யாரோடு சுற்றித் திரிந்தாலும் ஒரு கவலையும் இல்லை. அவன் திரும்பிப் போய், ஆவணி அவிட்டத்துக்குப் பூணூல் மாற்றிக் கொண்டு தட்சணை கொடுத்து அபிவாதயே சொல்லி நமஸ்காரம் பண்ணினால் போதும்.

கிளம்பலாம் என்றான் சங்கரன்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts