அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

இரா முருகன்


சங்கரன் தெருவில் இறங்கி நடக்கும்போது மத்தியானமாகி விட்டிருந்தது. சமுத்திரக் காற்று தயங்கித் தயங்கி அடிக்க ஆரம்பித்து வெய்யில் தணிந்திருந்தது. இந்தக் காற்றுக்கும், கழித்த போஜனத்துக்கும், இப்பவே இங்கேயே ஏதாவது ஒரு திண்ணையில் கட்டையைச் சாய்த்து தூங்க வேண்டும் போல ஒரு அசதி.

வேறே நாளாக இருந்தால் அவன் கிரமமாகக் கிளம்பி கருத்தானைப் பார்த்துப் பேசி ஆகக்கூடிய காரியம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பான். கிரகணம் நடுவில் வந்து விழுந்து தொலைத்தது. போதாக்குறைக்கு வைத்தி சார் கிளார்க் உத்தியோகம் பார்க்கக் கோட்டைக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை வேறு.

காலையிலிருந்து வைத்தி சாரோடு அதும் இதும் பேசிக் கொண்டு வெட்டி அரட்டையிலும் நாலைந்து குவளை காப்பியிலும் நேரம் போய்விட்டது. அதுவும் காப்பி என்பதானது ஒரு வினோத திரவம். குடித்தால் அக்கடா என்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்து ஏதாவது கதைக்கச் சொல்கிறது. பேசி ஓய்ந்தால், இன்னொரு வாய்க் காப்பி எங்கேடா என்று ஏங்க வைக்கிறது. கோமதி மன்னி வேறு காப்பிக்குக் கிரகணத் தீட்டு இல்லை என்று காமதேனுவாக அதைக் கலந்து கலந்து வந்து கொடுத்த மணியமாக இருந்தாள்.

வைத்தி கொல்லைப் பக்கம் போனபோது, அவன் பிள்ளைகள் எங்கேயோ இருந்து ஒரு உடைந்து போன கண்ணாடிச் சில்லை எடுத்து வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இது பாதத்திலே குத்தினா வேறே வெனையே வேண்டாம். காலையே வெள்ளைக்கார மருத்துவனும் டிரஸ்ஸருமா முழுசா நறுக்கி எடுத்துடுவான். அப்பறம் கட்டையை வச்சுண்டு நொண்ட வேண்டியதுதான்.

கோமதி பயமுறுத்தியதை லட்சியமே செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வாசல் திண்ணையில் அகல்விளக்கைக் கொளுத்திக் கண்ணாடியில் கரிபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்க வாத்தியார் சொல்லியிருக்கார்.

அதுகள் சொன்னபோது சங்கரன் பட்டணத்து வாத்திமார் எல்லாம் அரைக் கிறுக்காக இருப்பார்களோ என்று அதிசயப்பட்டான். விஜயதசமிக்கு நெல்லைப் பரப்பிக் காப்பரிசி விநியோகித்து ஹரி ஸ்ரீ, தட்சிணாமூர்த்தி ஸ்லோகம், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மஞ்ஞாடி, எண் கணிதம், நவராத்திரிக்குக் குழந்தைகளுக்குச் சோளக்கொல்லைப் பொம்மை மாதிரி வேஷ்டியும் புடவையும் கட்டித் துருவ சரித்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் இப்படி ஊரில் விஸ்தாரமாகப் படிப்பித்துப் பிள்ளைகளை புத்தியோடு நடமாட விடும் வாத்திமார்கள் எங்கே, இந்த ஊர் மனுஷர்கள் எங்கே.

பாதிரி வாத்திகள் கண்டதையும் தான் சொல்வா. வித்தை சொல்லித்தர அவாளுக்கு அழற தட்சணை கொஞ்ச நஞ்சமில்லே. எல்லாத்தையும் வாங்கி ராபணான்னு அங்கியிலே போட்டுண்டு வாயிலே வரதைச் சொல்ல வேண்டியது. அவாளுக்கு அசூயை நம்ம ஆசார அனுஷ்டானத்தைப் பாத்து. கோணல் புத்தி வேறே. இல்லாட்ட கிரகண காலத்துலே அட்டுப் பிடிச்சாப்பலே கண்ணாடியைக் கருப்பாக்குன்னு சொல்லியிருப்பாளாயிருக்கும் அதைப் போய் பிரம்ம வாக்கா நம்பிண்டு இதுகளும் கூத்தாடிண்டு இருக்கு.

கோமதி கண்டித்தபோது சங்கரனுக்கு இன்னும் ஆச்சரியமாகப் போனது. பெரிய பாவாடை கட்டின பாதிரிகள் அறியாப் பாலகர்களுக்கு இப்படிக் கண்ணாடியைக் கருப்பாக்கு, கரிக்கட்டைக்குச் சுண்ணாம்பு பூசு என்று கண்டதையும் கற்பிக்கிறதும் அதற்குத் தகுந்தமாதிரி காசு பிடுங்குகிறதும் பட்டணத்து அநியாயம் போல என்று தோன்றியது.

அப்புறம் கிரகணம் ஏறின போது மாடிக்குப் போய்க் குழந்தைகள் அந்தக் கண்ணாடிச் சில் வழியாக ஆகாயத்தைப் பார்த்தார்கள். வைத்தியும் வயிற்றைத் தடவிக் கொண்டு வந்து சில்லை வாங்கிப் பார்த்துவிட்டு ஆஹா என்று காணாததைக் கண்டதுபோல் ஆச்சரியப்பட்டான்.

சங்கரா நீயும் பாருடா. சூரியனை எப்படி கிரகணப் பீடை பிடிச்சுருக்கு பாரு. ராகுவோ கேதுவோ தெரியலை எந்தக் கடன்காரன்னு. ஈஸ்வரானுக்ரஹத்துலே எல்லாம் சரியாகணும்.

கண்ணாடிச் சில்லைப் பயபத்திரமாகக் கொடுத்துவிட்டு வைத்தி கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

அப்பா, அது நம்ம பூமியோட நிழல். ராகுவும் இல்லே. கேதுவும் இல்லே.

ஆமாடா. நாளைக்கு சிவனும் இல்லே விஷ்ணு பகவானும் பொய்யின்னு அந்த பாவாடைக்காரன் சொல்லித் தருவான். அதையும் வந்து சொல்லுவே. தோ பாருங்கோ, இது ரெண்டுக்கும் புரட்டாசி பொறந்ததும் பூணூல் போட்டு வச்சுடுங்கோ. இல்லியோ அந்தப் பாதிரிக் கட்டால போறவன் இழுத்துண்டு போய்ப் பாவாடை கட்டி விட்டுடுவான்.

கோமதி சிடுசிடுத்தபடி மேலே வந்து சாஸ்திரி வந்தாச்சு என்றாள்.

சங்கரன் கையில் கண்ணாடிச் சில்லைக் கொடுத்துவிட்டு வைத்தியும் பிள்ளைகளும் அவள் கூடக் கீழே போனார்கள்.

அவன் அந்தச் சில் வழியாகப் பார்த்தபோது ஓரத்தில் மட்டும் நெருப்பு வளையமாகப் பிரகாசித்துக் கொண்டு உள்ளே அட்டைக் கருப்பாக ஆகாயத்தில் ஒரு சூரியன். செளக்கியமாடா என்றது அது சாமிநாதன் குரலில்.

சங்கரா, இன்னிக்கு நீ கிரஹஸ்தனாகப் போறேடா. போகம் லபிக்கப் போறது.

நடுங்கிப் போய்த் தொப்பென்று கண்ணாடிச் சில்லைக் கீழே போட்டான் சங்கரன். அது ஏழெட்டுச் சின்னக் கீற்றுகளாக நொறுங்கிப் போனதை அப்படியே விட்டு விட்டு அவன் மாடிப்படி இறங்கி ஓட்டமும் நடையுமாகப் போக, கூடத்தில் கிரகணப் பீடைக்குப் பரிகாரம் செய்ய வந்த பட்டணத்து வைதீகன் குவளையில் பல் படாமல் காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

இதார் ? உம்ம ஜ்யேஷ்டனா ?

அவன் வைத்தியை விசாரிக்க, நெற்றியைச் சுற்றிப் பெரிய ஓலை நறுக்கைக் கட்டிக் கொண்டிருந்த வைத்தி, ஒன்று விட்ட தம்பி என்றான்.

கோட்டையிலே உத்தியோகம் ஆகி வந்திருக்கேளா ?

மூக்குத் தூள் விற்க வந்ததாக இந்த மனுஷரிடம் சொன்னால் இளக்காரமாகப் போகும். சங்கரன் சொந்த வேலை விஷயமாகப் பிரயாணம் வைத்ததாகச் சொன்னான்.

என்ன நட்சத்திரம் ?

அவன் நட்சத்திரத்துக்குப் பீடை இல்லை என்றான். மற்றப்படி மூணு பட்டம் கட்டினதுக்கு முக்கால் ரூபாய் தட்சிணை வாங்கிக் கொண்டு காலில் வெந்நீர் விசிறின அவசரமாகக் கிளம்பினான் வைதீகன்.

மைலாப்பூர் பிரதேசத்துலே கோவில் பக்கமா என்னோட ஜாகை. என்ன நல்லது கெட்டதுன்னாலும் வந்து கூப்பிடுங்கோ. வேம்பு சாஸ்திரிகளாம் எதுன்னு விஜாரிச்சா பச்சைக் குழந்தை கூடச் சொல்லும்.

நொங்கம்பாக்கத்துக்கு வைத்தி சார் பிரபல மனுஷ்யன் போல் மயிலாப்பூருக்கு வேம்பு சார் பிரபலஸ்தனோ என்று சங்கரன் வைத்தியிடம் விசாரித்தான்.

இவனா ? சிதம்பரம் பக்கம் பொணம் தூக்கிண்டு இருந்துட்டு இங்கே பட்டணக்கரைக்கு வந்த மனுஷன். தத்து சாஸ்திரி. மூத்திரச் சந்திலே ஜாகை. பக்கத்துலே இன்னும் ஏழெட்டுப் பேர். எல்லோரும் மாஜி சவண்டிக்காரன். பட்டணத்துலே இவாதான் வைதீகாள்.

பெரிய விகடத்தைச் சொன்னமாதிரி வைத்தி சிரித்தான்.

ஆனா இங்கேயும் பண்டித சிரோமணிகள் எல்லாம் இருக்கா. ஆத்துலே ஆயுட்ஷேமம், கணபதி ஹோமம், மங்கல காரியம் வந்தா அவாளைக் கூப்பிடற வழக்கம். தட்சணை எம்புட்டுத் தெரியுமோ. மருத்துவம் பார்க்க டாக்டர் தொரை கிட்டேப் போனாக் கூட அம்புட்டுக் கொட்டித்தர வேணாம்.

கோமதி மன்னி தர்ப்பையைக் காலில் படாமல் ஒதுக்கி ஓரமாகப் போட்டபடி சொன்னாள்.

சங்கரனுக்குச் சாமிநாதன் நினைவு மறுபடி வந்தது. அவன் மட்டும் நல்ல படிக்கு இருந்தால் இங்கேயே ஜாகை வைத்துக் கொண்டு அவன் படித்த வேதத்தை முதலாக முடக்கி என்னமாகச் சம்பாதித்திருப்பான். அவனுக்கு அதுக்கு புத்தி போகாதுதான். ஆனாலும் எட்டுக் கிரகமும் கூடி வந்திருந்தால் படிந்து வந்திருக்க மாட்டானா என்ன ? இப்படி ரெட்டைக் கட்டு வீடும், விஸ்தாரமான தோட்டமும், பெண்டாட்டி, குழந்தை குட்டியுமாக அவனும் காசு பெருத்துத் தொந்தியும் தொப்பையுமாகக் கொழித்திருப்பான். சங்கரன் இங்கும் அரசூரூக்குமாகப் போய்வந்து புகையிலை வியாபாரத்தையும் நாசீகா சூரண வியாபாரத்தையும் விருத்தி பண்ணிக் கொள்வான். தினசரி காப்பி சாப்பிடுவான். சாமிநாதனுக்கும் அதன் ருசி பிடித்துப் போகும். அவன் சாமவேதம் சொல்லி அழைக்கிற தேவர்களுக்கும் தான்.

கொழுந்தனாரே, குளிச்சுட்டு வாங்கோ. முட்டைக் கோசு பொறியல் பண்ணி வச்சிருக்கேன். பீர்க்கங்காய்த் தொகையல். எலுமிச்சை ரசம்.

கோமதி மன்னி தலையில் வேடு கட்டியதை அவிழ்த்துத் தலையாற்றியபடி ஈரத்துணிகளோடு மாடிக்குப் போனாள்.

அரசூரில் வீட்டில் நுழையாத வெங்காயமும், முட்டைக் கோசும், முள்ளங்கியும், பீர்க்கங்காயும் பட்டணத்தில் ஸ்வாதீனமாக பிராமண கிரகங்களில் நுழைந்து விட்டிருக்கிறது. எல்லாமே ருஜியான விஷயம் தான். சாமிநாதன் இருந்து, இங்கே பரம வைதீகனாக பூணூலை இழுத்துவிட்டுக் கொண்டு நடந்தால் நித்தியப்படிக்கு சங்கரனுக்கும் அதெல்லாம் கிடைக்கும்.சாமா தான் திரும்பத் திரும்ப இன்றைக்கு ஞாபகம் வருகிறான். மந்திரம் சொல்லிய அவன் வாய் கிரகணச் சூரியனின் கறுப்புக் கிணற்றுக்குள் இருந்து போகம் போகம் என்கிறது.

கோமதி மன்னியின் தங்கையைக் கல்யாணம் செய்துகொண்டு இங்கேயே தங்கித் தொழில் விருத்தி பண்ணினால் என்ன என்று குளிக்கும்போது அல்பத்தனமாக ஒரு யோசனை.

போயும் போயும் இந்த நாற வெங்காயத்தைச் சாப்பிடுவதற்காக அந்த திவ்ய சுந்தரியான பகவதிக்குட்டியை வேணாம் போ மூதேவி என்று ஒதுக்கி விட்டு இன்னொரு கன்யகையை வரிக்கணுமா என்ன ? இந்தப் பெண்ணரசி எப்படியோ தெரியாது. ஆனால் நிச்சயம் கோமதி மன்னி மாதிரிக் காப்பி கலந்து தருவாளாயிருக்கும்.

குளித்து விட்டு இலைக்கு முன் உட்கார்ந்தபோது முகத்தில் ஒரு வார தாடி புரண்டு கொண்டிருப்பது தெரிந்தது. பச்சைத் தகரப் பெட்டியோடு தெரு நீள நடந்து போகும் நாவிதனை இன்றைக்காவது கூப்பிடலாம் என்று இருந்தது முடியாமலேயே போய்விட்டது.

ரிஷி மாதிரி இருக்கேடா சங்கரா.

இலையைச் சுற்றி நீரைத் தெளித்து பரசேஷணம் செய்து கொண்டே சொன்னான் வைத்தி.

முட்டைக் கோசும், பீர்க்கங்காய்த் துவையலும் சாப்பிடும் ரிஷி.

கோமதி மன்னி சீண்டினாலும், இலையில் பாதிக்கு கோசுக் கறியை வட்டித்தாள். பருப்பும், புது தினுசு வாடையுமாக அது அமிர்தமாக இருந்தது சங்கரனுக்கு.

ரிஷிகள் அந்தக் காலத்துலே மாம்ச போஜனம் பண்ணியிருக்காளாக்கும். அஜம், பக்ஷி, ஏன், பசு.

வைத்தி சொல்ல ஆரம்பிக்க கோமதி மன்னி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

போறும் சமத்து வடிஞ்சு எலையிலே வழியறது. போஜன நேரத்துலே எதுதான் பேசறதுன்னு இல்லியா ? அதுவும் குழந்தைகள் கேட்டுண்டு இருக்கான்னு ஒரு போதமே இல்லியாக்கும்.

சாப்பிட்டு விட்டுத் தலைக்கு ஒரு பஞ்சுத் தலகாணியை வைத்துக் கொண்டு வைத்தி சிரம பரிகாரம் செய்து கொள்ள, அடுக்களை ஒழித்துப் போட்டு வந்த மன்னியும் கதவோரமாக வெறுந்தரையில் படுத்து நித்திரை போனாள். குழந்தைகள் எங்கேயோ விளையாடப் போன வீடு நிசப்தமாகக் கிடக்க, வாசல் கிராதிக் கதவைச் சார்த்திக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் படி இறங்கினான் சங்கரன்.

நாலு தெரு நடந்தால் முச்சந்தி வரும். அங்கே அரை மணி காத்திருந்தால் கருப்புப் பட்டணம் போகும் வண்டி வரும். கருத்த ராவுத்தன் காத்திருப்பான். அந்தத் தெலுங்குப் பிராமணப் பையனும் தான்.

முச்சந்தியில் வண்டிக்காக நாலு பேர் நின்றிருந்தார்கள். பருமனான ஒரு மனுஷ்யன் தலையில் பெரிய முண்டாசும், தொளதொளவென்று வஸ்திரமும் கையில் பிடித்த சிலுவையுமாக ஏதோ பெரிய கூட்டத்தை எதிர்கொண்டது போல உரக்கப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்.

பரணி ஆண்டி சொல்கிறேன். சென்னப் பட்டணத்து மகா ஜனங்களே இந்த சத்ய வார்த்தையைக் காது கொடுத்துக் கேளுங்கள். நானும் சாதாரண ஹிந்துவாக இருந்தவன் தான். இப்போது உன்னத ஹிந்துவாகி இருக்கிறேன். அதெப்படி என்று கேட்பீராகில் சொல்லுவேன், நான் பிரஜாபதியை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டேன். அவரை நமஸ்கரிக்கிறேன். நித்யமும் அனுசாந்தானம் செய்து அஷ்டோத்திரமும் சகஸ்ரநாமமும் சொல்லி அந்த மஹா மூர்த்தத்தை அர்ச்சிக்கிறேன்.

கண்கள் செருக ஆகாயத்தைப் பார்த்தான். கிரகணம் விட்டுப் போன சூரியன் அவனைக் கஷ்டப்படுத்தினதாகத் தெரியவில்லை. அப்புறம் அந்தப் பிரசங்கியின் பார்வை புதிதாக வந்து சேர்ந்து முகத்து வியர்வையைத் தோள் துண்டால் துடைத்துக் கொண்டிருந்த சங்கரன் மேல் விழுந்தது.

இதோ நிற்கிறாரே இந்தப் பிராமணோத்தமர் போல் பெங்காளத்தில் ஞான சூரியனாக இருக்கப்பட்டவர் கிருஷ்ண மோஹன் பானர்ஜியா. அந்த மகாநாமத்தை இன்னொரு தடவை சொல்கிறேன் கேளுங்கள். கேட்ட மாத்திரத்திலேயே பீடையெல்லாம் விலகி ஓடும். கிருஷ்ண மோஹன். எந்தக் கிரகணமும், ராகுவும் கேதுவும் பற்றிப் பிடித்து தொந்தரைப்படுத்த உத்தேசித்தாலும் அந்த மஹாத்மாவிடம் அது ஈடேறாது. அவர் எனக்குக் காட்டித் தந்த பிரஜாபதிதான் கிறிஸ்து மஹரிஷி. ஓம் நமோன்னமஹ வந்தே என்று ஹிந்துக்களான நாமெல்லாரும் போற்றித் துதிக்கத்தக்க தெய்வ துல்யமான அந்த புண்ணிய ஸ்வரூபனையும், அவருடைய புண்யமாதாவான சர்வேஸ்வரி மஹாமேரி அம்மனின் மங்களகரமான சித்திரத்தையும் நீங்கள் தரிசிக்க இப்போதே காட்டித் தருகிறேன்.

அந்த மனுஷ்யன் தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அவன் நின்ற மரத்தடி நிழல் சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இவன் எல்லாத் தெய்வத்தையும் தரிசனப்படுத்தி அந்தாண்டை போகட்டும். அந்த தெய்வங்களின் கிருபை இவனுக்குப் பரிபூர்ணமாகக் கிட்டட்டும். ஒரு நொடிப் பொழுது அந்த விருட்ச நிழலை ஒழித்துக் கொடுத்தால் சங்கரன் இளைப்பாறிப் போவான்.

பரணி ஆண்டி ஓய்கிற வழியாக இல்லை. கருப்புப் பட்டணத்துக்கும், சமுத்திரக் கரைக்கும் போகும் ஒரு வண்டி கூட வந்து சேராத காரணத்தால் அவனுக்கு முன்னால் ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டு ஒரு கூட்டம். அதில் இப்போது பத்துப் பேராவது இருப்பார்கள்.

முச்சந்தியை ஒட்டி விரிந்த தெருவில் பூட்டிக் கிடந்த ஒரு மடத்துத் திண்ணை சங்கரனை வாவா என்றது. மஹரிஷிகளை அப்புறம் தரிசனப்படுத்திக் கொள்ளலாம். மரநிழல் தெய்வங்களுக்கே துணைபோகட்டும்.

சங்கரன் விலகி நடந்தபோது நாலு வீட்டோடு அந்தத் தெருவே முடிந்து போயிருந்தது தெரிந்தது. எல்லா வீடும் சொல்லி வைத்த மாதிரிப் பூட்டி வைத்திருந்த தெரு அது.

சஞ்சியைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டான். உத்தரியத்தை விரித்தான். ஊருக்குப் போவதற்குள் வைத்தி சார் உத்தியோகத்துக்குப் போட்டுப் போகிறது போலவோ, கருத்தான் மாட்டிக் கொண்டு திரிகிற தரத்திலோ ஒரு குப்பாயம் தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். கருப்புப் பட்டணத்தில் துணியை வெட்டி, ஊசியில் நூல் கோர்த்துச் சதா தைத்துக் கொண்டு திண்ணைகளில் உட்கார்ந்திருக்கிற தையல்காரர்கள் நிறைய உண்டு என்பதைக் கவனித்திருக்கிறான் அவன்.

ஏதோ சத்தம். திண்ணையில் படுத்தபடி சங்கரன் அரைக் கண்ணைத் திறந்து பார்த்தான். நூதன வாகனம் ஒன்று வந்து நின்றது.

சாமிநாதனின் சிநேகிதர்களாகிய ரெண்டு பேரும் இறங்கினார்கள். விநோதமான குப்பாயம் உடுத்தியவர்கள். இது கூட நேர்த்தியாகத் தான் இருக்கிறது. என்னத்துக்கோ தோள் பாதிக்கு மேல் தெரிகிறது. ஆனாலும் உத்தரீயத்துக்கு இது பரவாயில்லை. என்ன தரித்து என்ன ? கனவான் களைதான் காணோம். முழுக் களவாணிக் களை. அது குப்பாயத்தால் வந்ததில்லை. முகத்தில் எழுதி ஒட்டி இருக்கிறதே.

சின்னச் சாமிகளே, பழுக்காத் தட்டு வேணுமா ?

பெரியவன் கேட்டான்.

என்னத்துக்கு அதெல்லாம் ?

மூக்குத் தூளும் விக்கற பெரிய கடையாச்சுதே. இதெல்லாம் வைத்தால் நாலு பேர் வேடிக்கை பார்க்க வருவான். அதிலே ரெண்டு பேர் வியாபாரம் பண்ணிப் போவான்.

ஆனாலும் என் காலத்துச் சரக்கா இருக்க வேணமா ?

அதான் பொடியும் புகையிலையும் இருக்கே. அது உங்க காலத்து சமாச்சாரம் தானே.

வேணாம். சரிப்படாது. அங்கே மரத்தடியிலே ஒரு சாது பிரசங்கம் பண்றார். அவருக்கு வேணுமாயிருக்கும். நான் சித்த தூங்கி எந்திருக்கறேனே ? கருத்தான் காத்துண்டிருப்பான். போகணும்.

பழுக்காத்தட்டு இருக்கட்டும், இந்தப் படங்களைப் பாருங்க. மஹா உல்லாசமான விஷயம் எல்லாம்.

குட்டையன் வெங்காயம் சாப்பிட்ட நெடியடிக்கப் பக்கத்தில் இருந்து வார்த்தை சொல்லியபடிக்கு ஒரு புத்தகத்தை நீட்டினான். அதில் பக்கத்துக்குப் பக்கம் பலவிதத்தில் போகத்தில் ஈடுபட்ட வெள்ளைக்காரிகள். நடுவே கட்டுக் குடுமியோடு சங்கரன்.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts