அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

இரா முருகன்


நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல செளகரியம் கூடியும் இருந்தது.

வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று விட்ட சித்தப்பா என்பதால் இவன் ஒன்று விட்ட அண்ணா. சங்கரனுக்கு அண்ணா என்று கூப்பிட்டால் சாமாதான் சதா ஞாபகத்துக்கு வருகிறான். தவிரவும் இவன் பெரியண்ணா, மாமா மாதிரி நாற்பத்துச் சில்லரை வயசும் தொந்தியும் தொப்பையும் முக்கால் வழுக்கைத் தலையுமாக இருந்தான்.

தெருவில் எல்லோருக்கும் அவன் மேல் நிறைய மரியாதை இருந்தது. அவன் வெளியே போகும்போதும் வரும்போதுமெல்லாம் அக்கம்பக்கத்திலே இருக்கப் பட்டவர்களும், எதிர்ப்பட்டவர்களும் அவனை சார் என்று மரியாதையாக விளித்தது சங்கரனுக்கு விநோதமாகப் பட்டது. அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு ஜயா என்றோ எஜமான் என்றோ அர்த்தம் என்று ஊகித்திருந்தான் அவன். கோட்டையில் வேலை பார்க்கிற ராஜாங்க உத்தியோகஸ்தன் என்பதால் வைத்தியநாதனுக்கும் அப்படியே எல்லோரும் கூப்பிடுவது பழகிப் போயிருந்ததோடு பிடித்தும் இருந்தது.

வைத்தியநாதய்யன் கோட்டையில் குமஸ்தன் வேலை பார்க்கிறதாகச் சொன்னான். துறைமுகத்தில் வந்து சேரும், புறப்படும் கப்பல் போக்கு வரத்து பற்றிய கணக்கு எல்லாம் அவன் தான் எழுதியாக வேண்டுமாம். அதுவும் துரைத்தனத்து மொழியில். இவன் கணக்கு எழுதாமல் எந்தவொரு பரங்கித் துரையோ, துரைசானியோ சென்னைப்பட்டணத்துக்குள் காலெடுத்து வைக்க முடியாது. அதே பிரகாரம், கப்பலேறி ஊரைப் பார்க்கவும் புறப்பட முடியாது என்று வைத்தியநாதய்யன் சொன்னபோது சங்கரனுக்கும் அவன்மேல் சொல்ல முடியாத அளவு மரியாதை வந்து சேர்ந்தது.

வைத்தி சார், இங்கிலீஷிலே வார்த்தையும் கணக்கும் எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே ?

சங்கரன் அவனைக் கேட்டான்.

கச்சேரி ராமநாதய்யர் கோர்ட்டுக் கச்சேரியில் சிரஸ்ததார் என்ற உத்தியோகத்தில் பல வருஷம் இங்கே சென்னப்பட்டணத்திலேயே இருந்ததால் அதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சிரமமில்லாமல் படிக்கத் தனக்கு வாய்த்தது என்றான் வைத்தி.

கச்சேரி ராமநாதய்யர் அவனைச் சீமைக்கு அனுப்பி பி.ஏ பரீட்சை கொடுத்துவிட்டு வரவும் ஏற்பாடு செய்திருந்தாராம். உள்ளூர் வைதீகர்கள் அப்படி அனுப்பினால் அடுத்த க்ஷணமே ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகப் பயமுறுத்தவே அதைக் கைவிட்டுக் கோட்டையில் குமஸ்தனாகப் போக வேண்டிப் போனதாக வருத்தப்பட்டான் வைத்தி.

வைதீகர்கள் இந்தப் பெரிய பட்டணத்திலும் இருக்கிறார்கள் என்பதே சங்கரனுக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது. கருப்புப் பட்டணத்திலும், மற்ற இடத்திலும் சகல ஜாதியினரும் நிரம்பி வழிந்து மூச்சுக் காற்று முகத்தில் பட, வியர்வை தோளில் ஈஷ, பிருஷ்டம் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு ஊர்ந்து போகும் ஸ்தலத்தில் அவர்கள் தர்ப்பைக் கட்டையோடு இறங்கினால், ஒவ்வொரு பத்தடி போனதற்கும் திரும்பி வந்து குளித்துத் தீட்டுப் போக்கவே நாள் முழுக்க நேரம் சரியாக இருக்கும். அப்படியும் மிஞ்சிய நேரத்தில் எள்ளை இறைத்துத் தர்ப்பணமும், அப்தபூர்த்தி ஹோமமும் செய்து நாலு காசு சம்பாதிக்கவும், அதற்கும் எஞ்சி நேரம் கிடைத்து கச்சேரி ராமநாதய்யர் சீமந்த புத்திரனை ஜாதிப்பிரஷ்ட விஷயமாக மிரட்டிவிட்டுப் போகவும் அவர்களுக்கு எப்படி ஒழிந்தது என்று சங்கரனுக்குப் புரியவில்லை.

என்ன, எங்கப்பா கொஞ்சம் முந்திக் கோமணத்தை அவுக்காம இருந்தா நான் பத்து இருபது வருஷம் காலம் தாழ்த்தி உன்னை மாதிரிப் பிறந்திருப்பேன். லண்டனுக்குப் போய் பி.ஏ பரீட்சை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாம, இங்கேயே அதைக் கொடுக்கவும், அதுக்காகப் படித்து முஸ்தீபு செய்யவும் கலாசாலை எல்லாம் எழுப்பி வைச்சுருக்கா இப்போ. நான் உன் வயசிலே இருந்த போது அதொண்ணும் கிடையாது. ஆனாலும் பாரு, பகவான் மாதிரி இந்த வெள்ளக்காரா நம்ம பரத கண்டத்து மேலே காருண்யம் வச்சு எவ்வளவு கடாட்சம் பண்றான்னு நினைச்சுப் பார்த்தியோ. இவா மாத்திரம் இல்லாட்ட நீயும் நானும் இங்கே இப்படி ஒரு பெரிய கிரஹத்துலே காத்தாட உக்காந்துண்டு விச்ராந்தியாப் பேசிண்டு இருக்க முடியுமோ ?

எந்தத் துரையும் வந்தாலும் வராவிட்டாலும் சங்கரன் அவன் பாட்டுக்கு அரசூரில் புகையிலை விற்று நாலு சல்லி வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் வைத்தியநாதய்யன் கோட்டையில் உத்தியோகம் பார்த்து இப்படி நொங்கம்பாக்கத்தில் ரெண்டு கட்டு வீடும் தோட்டமும், கிணறுமாக எழுப்பி சவுகரியமாக ஜீவித்துக் கொண்டிருக்க முடியாது என்பது வாஸ்தவம்தான். அவன் பின்னே என்ன செய்து கொண்டிருப்பான் ? தர்ப்பைக் கட்டோடு ஜாதிப் பிரஷ்டம் பண்ணி வைக்க அலைந்திருப்பானோ ? முன்சீப்புக் கச்சேரியில் தலைப்பாகை கட்டிக் கொண்டு உத்தியோகம் பார்த்திருப்பானோ ? இல்லை கருத்த ராவுத்தன் கடைக்கு எதிர்க்கடை போட்டு கிண்டி அய்யனைக் காரியஸ்தனாக வைத்து இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்துக் கணக்கு எழுதச் சொல்லி மூக்குத்தூள் விற்றுக்கொண்டிருப்பானோ ?

என்னத்தைப் புகையிலை விற்று. அது வண்டியில் ஏறுகிறதா, அனுப்பிய இடத்துக்கு எந்த சேதமும் வராமல், வழியில் திருட்டு, விபத்து எதுவும் இல்லாமல் போய்ச் சேர்கிறதா, விற்ற பணம் கிரமமாக வசூலாகிறதா என்று பார்த்துப் பார்த்துக் கணக்கெழுதி, தாக்கல் வரக் காத்திருந்து நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறது ? இரண்டு தலைமுறையாக விற்றதெல்லாம் தன நஷ்டம், தானிய நஷ்டம், ஜீவன் நஷ்டம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இது போல், இதைவிட இன்னும் பெரிசாக எழுப்பிய வீடு தீயில் வெந்து போய்விட்டது. அந்த நாற்றம் பிடித்த வஸ்துவைக் கட்டியழாமல் இப்படி துரைக்குத் தெண்டனிட்டு விழுந்து கோட்டையில் உத்தியோகம் பார்த்து நாலு காசு சம்பாதிப்பது எவ்வளவோ மேல் இல்லையோ. பகவதிக்குட்டி கேளடி. நம்ம குழந்தைகளை எப்பாடு பட்டேனும் இங்கிலீஷ் படிக்க வச்சுடணும். கதவடைச்சுட்டு வந்து படு. நான் வண்டி வண்டியா சேட்டு கடை அல்வா வாங்கிண்டு வந்து தரேன். துரை கடை வச்சு அப்படி ஏதேனும் உன்னதமான சரக்கு விற்றாலும், என்ன காசு செலவானாலும் வாங்கி வரேன். நாவிகேஷன் ரிக்கார்ட் போர்ட் செயிஞ்ச் சார்ஜ் கிளார்க் தெரியுமாடி உனக்கு ? படுத்துண்டு எல்லாம் சொல்றேன். வேண்டாமா ஏண்டி வேணாம்கிறே ? நல்ல நேரம்டி இப்போ.

கொட்டகுடித் தாசி சங்கரன் கோவணத்தை உருவிவிட்டு இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்று துரைசானி போல் போலி செய்து கொண்டு சிரித்தாள்.

இவள் வேறு எங்கே போனாலும் கூடவே வந்துவிடுகிறாள். சாமிநாதனோடு போகம் கொண்டாடிய அந்த ஸ்திரி போல்.

சங்கரா என்னடா பேசிண்டு இருக்கும்போதே பிரமை பிடிச்சது மாதிரி உத்தரத்தையே வெறிச்சிண்டு உக்காந்துட்டே.

இல்லே வைத்தி சார். கலாசாலை, துறைமுகம், கோட்டை அது இதுன்னு நிறையச் சொல்றேள். அங்கெல்லாம் மழைக்கு ஒதுங்கக் கூட எனக்கு யோக்கியதை இல்லைன்னு தெரியும். பக்கத்திலே வச்சாவது பாக்க சந்தர்ப்பம் கிடைக்குமான்னு யோஜிச்சேன்.

சங்கரன் சமாளித்தான்.

நீ இங்கே இருக்கிற நாளுக்குள் ஒரு தினம் உன்னைக் கோட்டைக்கும் அப்படியே துறைமுகத்துக்கும் கூட்டிக் கொண்டு போய் விநோதம் எல்லாம் காட்டறேன்.

வைத்தி உள்ளபடிக்கே பிரியமாகச் சொன்னபடி, வா போஜனம் பண்ணலாம் என்று எழுந்தான்.

இல்லே சார், நான் இன்னும் குளிக்கவே இல்லை. நீங்க போஜனம் முடிச்சு உத்தியோகத்துக்கு இறங்குங்கோ. மெள்ளக் கிளம்பிப் போய்க்கறேன் நான்.

அசடே, இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. வேலைக்குப் போகவேண்டாம். போன வாரம் எப்படி நீ வந்தபோது மாம்பலம் பக்கம் நின்னு கூட்டிண்டு வந்தேன்னு நினைக்கறே ?. ஞாயித்துக் கிழமைங்கறதாலே தானே. வார நாளா இருந்தா நான் வந்திருக்க முடியுமா என்ன ? எவனாவது வேலைக்காரனை அனுப்பியிருப்பேன். அவன் உன்னை விட்டுட்டு வேறே யாரையாவது எட்டு முழ வேஷ்டியும், கிராமத்துக் களையும், கட்டுக் குடுமியுமா இங்கே படியேத்த வச்சிருப்பான். இவளும் அசடு மாதிரி விழுந்து விழுந்து உபச்சாரம் பண்ணிண்டு இருப்பா.

வைத்தி சிரித்தான். அவன் பெண்டாட்டி கோமதி கையில் தருப்பைப் புல்லை வைத்துக் கொண்டு வீடு முழுக்க இரைத்துக் கொண்டு போனவள் அவன் மேல் ஒன்றை வீசிப் போட்டபடி சொன்னாள் –

என் கொழுந்தனார் ஒண்ணும் அசடு இல்லே. நானும்தான். இப்ப இங்கே முழு அசடு நீங்க மட்டும்தான்னா.

ஏண்டி கழுதே. என்னப்பாத்து அசடுன்னு சொல்லவா உங்கப்பன் மிராசுதார் கோபாலன் உன்னை என் கழுத்துலே கட்டி வச்சான் ?

சும்மாவா கட்டி வச்சார் எங்கப்பா ? முன்னூறு சவரன் நகை, வெள்ளிப்பாத்திரம், பட்டு வஸ்திரம்.

அவள் பால் பாத்திரத்தைத் திறந்து அதில் ஒரு இழை தருப்பையை மிதக்கப் போட்டாள்.

வரதட்சணை அட்டவணையை அடுக்கறபோது. என் காதுலே வைரக்கடுக்கனையும் சேர்த்துக்கோ. அந்த காசியாத்திரை கொழும்புக் குடையையும்.

வைத்திக்கு உள்ளபடியே பெருமைதான் இப்படித் தனலட்சுமியாகப் பெண்டாட்டி வந்து சேர்ந்ததில். அவனுடைய ரெட்டை நாடி சரீரத்துக்கும் இவளுடைய சோனி உடம்புக்கும் பொருத்தமில்லை தான். ஒரு சாண் வைத்தியைவிடக் கூட இவள் உயரம் என்று சங்கரனுக்குப் பட்டது. சேர்ந்து நின்றால் கண்டுபிடித்து விடுவான். கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறதாம் ? மூணு பிள்ளை வைத்திக்கு வரிசையாகப் பெற்றுப்போட கோமதி மன்னிக்கு உயரம் ஒன்றும் தடையாக இல்லைதான். அதுகளுக்கும் காது குத்தி, வைரக்கடுக்கன் மாட்டி அழகு பார்த்திருந்தார் கோமதியின் தகப்பனார்.

வைரக்கடுக்கன் போட்டுக்க மட்டுமில்லே காது. விஷய ஞானத்தைக் கிரகிச்சுக்கறதுக்கும்தான்னு இவர்கிட்டே சொல்லுங்க கொழுந்தனாரே.

கோமதிக்கு சிநேகிதமான சுபாவம். வந்த நாள் முதல் சங்கரனை வைத்தியின் கூடப் பிறந்த சகோதரன் போல் நினைத்து எல்லா வசதியும் செய்து தந்து பிரியமாக இருக்கிறாள். சாமிநாதன் இருந்து, சித்தப் பிரமை தெளிந்து கல்யாணம் செய்து அகத்தில் மன்னி வந்தால் இப்படித்தான் இருப்பாளோ.

எரிந்து கரிபிடித்த வீட்டில், கூரை சரிந்த கூடத்தில் ஊஞ்சலில் சாமிநாதன் உட்கார்ந்திருக்க, தரையில் மழையில் நனைந்தபடி பாடிக் கொண்டிருந்த ஸ்திரி. அவள் தான் மன்னியா ? அவள் பாடினதும், வாசல் திண்ணையில் சாய்ந்து கொண்டு இன்ஸ்பெக்டர் துரை கேட்டு உறைந்து போய் நிற்க சுப்பம்மா அத்தை பாடியதும், சாமிநாதன் நக்னமாக மாடியறையில் நின்றபடிக்குச் சுழல விடும் பழுக்காத்தட்டிலிருந்து ஒலித்ததும் ஒரே சங்கீதம் தானா ?

உன் கொழுந்தன் திரும்ப நிஷ்டையிலே உக்காந்துட்டான்.

வைத்தியநாதன் சங்கரனைப் பிடித்து உலுக்கினான்.

அவருக்கு என் தங்கையை முடிச்சு வச்சுடுங்கோ. எல்லாம் சரியாயிடும். நாள் முழுக்க பத்துப்பேரை ஏவிண்டு புகையிலையும், மூக்குப்பொடியும் வித்துண்டு நூதன கிரஹப் பிரவேசம் செஞ்சு, ஆயுசும் சந்ததியுமா அவரும் பட்டணத்துலே சவுக்கியமா இருக்கலாம். ஆனாலும் இன்னிக்கு அவருக்கும் கூடக் காலம்பற கொலைப் பட்டினின்னு விதிச்சதை யாராலும் மாத்த முடியாது.

மன்னி, நீங்க அன்னபூரணி. சாப்பிடுடா கொழந்தேன்னு ரெண்டு பிடி அன்னம் வச்சா சரின்னு வழிச்சுப் போட்டுண்டு வேலையைப் பார்க்கக் கிளம்புவேன். இல்லியோ, கிணத்து ஜலம் ஜில்லுனு இருக்கோன்னோ, குளிச்சுச் சந்தியாவந்தனம் பண்ணிட்டு பஞ்ச பாத்திரத்திலே அதை ஏந்திக் குடிச்சுட்டுப் புறப்படுவேன். அண்ணா தான் பாவம்.

ஆமாண்டி. ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு ஊறப்போட்டு சுடச்சுட இஞ்சித் துவையலோட பண்ணித்தருவியே எப்பவும். வெங்காய சாம்பார் வேறே மொறுமொறுன்னு உரப்பா. அதொண்ணும் கிடையாதா இன்னிக்கு ?

வைத்தி ஏக்கத்துடன் கேட்டான்.

எப்படிக் கிடைக்கும் ? இன்னிக்கு சூரிய கிரகணம்னு நினைவு வரலியா ? பத்தரை மணிக்குக் கிரகணம் விலகினதும்தான் உலையேத்தணும். உங்க நட்சத்திரத்துலே வேறே பிடிக்கறதா ? சாஸ்திரிகள் வந்து நெத்திப்பட்டம் கட்டி விடுவார். சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கோ.

ஒரு வாய்க் காப்பியாவது கண்ணிலே காட்டேண்டி அன்னபூரணி.

வைத்தி கையெடுத்துக் கும்பிடுவது போல் நடித்துப் பிரார்த்தித்தான்.

சங்கரனுக்கு இங்கே வந்தது முதல் பழக்கமாகி இருந்தது அந்தப் பானம். அரசூரில் இருந்து கிளம்பி, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, மாயவரம் மார்க்கமாகக் குதிரை வண்டியும், மாட்டு வண்டியும் மாறி மாறி வந்ததில் முதலில் தஞ்சாவூரில் காப்பி என்ற பானம் குடிக்கக் கிடைத்தது. புதிதாக ஏற்படுத்திய சோற்றுக் கடையொன்றில் இரண்டு பிராமணர்கள் அடுப்பில் பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, கருப்புத் திராவகமாக எதையோ ஊற்றி அஸ்காவைப் போட்டு வீசி வீசி ஆற்றிக் கலந்து நீட்டியதை வாங்கி ருஜிக்க ஊரே திரண்டிருந்த மாதிரித் தெரிந்தது சங்கரனுக்கு.

கண்டதையும் வழியில் சாப்பிட்டாலோ, குடித்தாலோ வாந்திபேதியும், வயிற்றுக் கடுப்பும் உண்டாக வழியுண்டு என்று அவன் யாழ்ப்பாணத்துக்கும், அங்கே இருந்து மலைப்பிரதேசத் தோட்டங்களுக்கும் புகையிலை விற்கப் போனபோது அனுபவத்தில் தெரிந்திருந்ததால், சென்னைப்பட்டணம் போய்ச் சேரும் வரைக்கும் வெளியிலே போஜனம் செய்யாமல் ஜாக்கிரதையாக இருந்தான்.

சுப்பம்மாள் வாழை இலையில் கட்டிக் கொடுத்த சித்திரான்னமும், தோசையும் கிளம்பின தினம் முழுக்கச் சாப்பிடத் தக்கதாக இருந்தது. அடுத்த இரண்டு நாள் அதிரசமும், தேங்குழலும், பூவன் பழமுமாகப் போனது. அப்புறம் ஒரு நாள் பூந்தி லாடு, சேவு, தேங்காய் பர்பி, சுவியன் என்று தீபாவளி பட்சணம் போல் நாள் முழுக்கச் சாப்பிட்டுக் கழிந்தது.

எல்லாம் சுப்பம்மாளும், வேத பாடசாலை ராமலட்சுமிப் பாட்டியும், அப்பாவின் அத்தான் சுந்தரகனபாடி மாமாவாத்துக்காரியும் சேர்ந்து இவன் பிரயாணத்துக்கென்று சித்தமாக்கி, ஓலைக் கொட்டான்களிலும், தகரப் பெட்டிகளிலும் அடைத்துக் கொடுத்தது. ஜலம் மட்டும் மானாமதுரை மண் கூஜாவில் அங்கங்கே இடம் பார்த்து சுத்தமானதாக இருக்கும் என்று தீர்மானம் செய்து வாங்கி நிறைத்துக் கொண்டான்.

சாப்பிட்டுத் தீர்ந்த ஓலைக் கொட்டான்களை அங்கங்கே வீசிக் கழித்தாலும், வைத்தியனாதன் அகத்தில் தரச்சொல்லிக் கொடுத்து விட்ட தகரப் பெட்டி நிறைய பட்சணங்களைத் தனியே எடுத்து வைத்து அங்கங்கே ஏற்றி இறக்க சிரத்தை எடுக்க வேண்டிப் போனது. அசதியோடு, ஐந்து நாள் பயணத்தில் கடைசி நாளில் ஏகத்துக்கு இனிப்புப் பட்சணம் சாப்பிட்டது மதராஸில் வந்து சேரும்போது மலபந்தமாகி வயிறு ஊதிப் போயிருந்தது சங்கரனுக்கு.

தாம்பரத்திலிருந்து வந்த மூடுவண்டிகளிலிருந்து இறங்கிய கூட்டத்தில் எப்படித்தான் சங்கரனைக் கண்டு பிடித்தானோ வைத்தியநாதன்.

செயிஞ்ஜார்ஜ் போர்ட் நேவிகேஷன் ரிக்கார்ட் கிளார்க் என்று அவன் விலாசத்தைச் சொன்னால் உடனே நொங்கம்பாக்கத்தில் அவன் கிரகத்துக்கு யாரும் வழிசொல்வார்கள் என்று கச்சேரி ராமநாதய்யர் சொல்லி, ஒரு காகிதத்திலும் நீள எழுதிக் கொடுத்திருந்ததை வழியெல்லாம் உருப்போட்டிருக்க சிரமமே பட்டிருக்க வேண்டாம் சங்கரன். ஆயிரம் பேர் கூடிய சபையில் வைத்தும், புகையிலை வாடையும், புளியஞ்சாத, பட்சண வாடையும் அடிக்கும் சங்கரனைக் கண்டுபிடிக்க முடியாத புத்திசாலியாக இல்லாத பட்சத்தில் அவனுக்குத் துரைத்தனம் நேவிகேஷன் ரிக்கார்ட் கிளார்க் உத்தியோகம் கொடுத்திருப்பார்களா என்ன என்று சங்கரனுக்குத் தோன்றியது அப்போது.

வைத்தியநாதன் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய குதிரை வண்டியில் அவனோடும், மடியில் பணம், செட்டிமார் லேவாதேவிக்கடை தரிசன உண்டியல், பட்சண மூட்டை, வயிற்றில் வாயு என்ற சங்கதிகளுமாக நொங்கம்பாக்கம் போய்ச் சேர்ந்த க்ஷணமே வைத்தியநாதனை விடப் புத்திசாலி அவன் பெண்டாட்டி கோமதி என்று புரிந்து போனது சங்கரனுக்கு.

கொதிக்கக் கொதிக்கப் பித்தளைப் பாத்திரத்தில் கொண்டு வந்து வைத்து அவள் கொழுந்தனாரே சாப்பிடுங்கோ என்றதை மறுபேச்சில்லாமல், பல் படாமல் நாக்கில் அன்னாந்து விட்டுக் கொண்டதும் நாக்கு பொள்ளிப் போனாலும் ருசியாகத் தான் இருந்தது. சரியாயிட்டேன் என்று வயிறு வேறு சந்தோஷமாகக் கலகலக்க ஆரம்பித்தது.

பகவதிக் குட்டியோடு படுத்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்காதோ ?

காப்பிச் சுவையை இன்னும் நாக்கில் அனுபவித்தபடி, தோட்டத்துக்கு எப்படிப் போகணும் என்று வைத்தியநாதனை அவன் விசாரித்தது இன்றைக்கு ஒரு வாரம் முன்னால், போன ஞாயிற்றுக்கிழமை. கிட்டத்தட்ட இதே நேரம்தான்.

மன்னி, எனக்கு ஒரு குவளை காப்பி கொடுங்கோ. ராகுவும் கேதுவும் சூரியனை முழுங்கிட்டு என்னையும் முழுங்க வந்தாலும் பரவாயில்லே. இந்தத் தேவபானத்தைக் குடிச்சா எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்.

சங்கரன் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெகு விநயமாகச் சொல்ல, வைத்தியநாதன் இவன் அரசூர்ப் போக்கிரி, உன் தங்கையை இவனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தால் காப்பி சாப்பிட்டே சீதனத்தை ஒழித்துவிடுவான் என்றான் சங்கரனின் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டே.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts