அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

இரா முருகன்


பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே ?

என்ன அய்யர்சாமி சமுத்திரக்கரையை வளைச்சுப்போட்டுக் கல்லுக் கட்டடம் உசரமா எலுப்பி இந்தாண்ட ஒண்ணுலே மூக்குத் தூள் அன்னாண்ட அடுத்ததிலே புகையிலைன்னு வித்துச் சாரட்டுலே ஓடற சொப்பனமா ?

கருத்த ராவுத்தன் கடகடவென்று சிரித்தான்.

சுப்பிரமணிய அய்யரின் தொழில் முறை சகபாடி பெங்களூர்க்காரன் பிச்சை ராவுத்தரின் மகன் அவன்.

கருத்தா, என்னை அய்யர் சாமின்னு கூப்பிட வேணாம்னு எம்புட்டுத் தடவை சொல்லியிருக்கேன். கேக்கவே மாட்டேன்கிறியே. சங்கரான்னு கூப்புடு. சங்கடமா இருந்தா சங்கரய்யரேன்னு கூப்பிடு.

ஜாக்கிரதையாக இடைவெளி விட்டு சமுத்திரக் கரையில் கூட உட்கார்ந்திருந்த ராவுத்தனைப் பார்த்துச் சொன்னான் சங்கரன்.

சாமியைச் சாமின்னு கூப்பிடாம அரே தோஸ்த்னு கூப்பிடச் சொல்றீஹளா அய்யர் சாமிகளே ?

கருத்தான் இன்னும் பலமாகச் சிரித்தான். அவன் எதைப் பேசினாலும் முன்பாரம் பின்பாரமாக மனதை விட்டுச் சிரிக்கிறது பழக்கமாகியிருந்தது சங்கரனுக்கு இந்த மூன்று நாளில்.

சுப்பிரமணிய அய்யர் தான் சங்கரனைப் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தது.

இப்படி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மோட்டு வளையைப் பாத்துண்டு கிடப்பே. போனவன் போய்ச் சேர்ந்தாச்சு. இருக்கப்பட்டவா ஏந்திந்து அவாவாளுக்கு விதிக்கப்பட்டதைப் பார்க்கப் போகணுமா இல்லியா ? கடைக்கும் போக மாட்டேங்கிறே. ஆத்துலேயும் சகஜமா இருக்க மாட்டேங்கிறே. பழையாத்து வாசல்லே போய்ப் பிரமை பிடிச்ச மாதிரி நிக்கறேன்னு ஐயணை இதுவரைக்கும் நாலு தடவை கூட்டிண்டு வந்து விட்டுட்டான். இதொண்ணு சரிப்படாது. நீ கொஞ்ச நாள் பட்டணக்கரைக்குப் போய்ச் சமுத்திரக் காத்து வாங்கிண்டு வா.

நான் எதுக்கு இப்பப் பட்டணத்துக்குப் போகணும் ? சங்கரன் கேட்டான்.

பிச்சை ராவுத்தன் பிள்ளை கருத்தான். அங்கே எதோ எஸ்பி. என்னமோ வாயிலே நுழையாத பேரு இருக்கப்பட்ட இடம். வெள்ளக்காரன் அப்படி வச்சுத் தொலச்சுட்டான். அங்கே நாசீகா சூரணம் கடை திறந்திருக்கானாம் கருத்தான் ராவுத்தன்.

அது எஸ்பி இல்லே எஸ்பிளனேட்.

சுப்பம்மா அத்தை ஸ்பஷ்டமாகச் சொன்னாள்.

பரதேவதைகள்ளாம் வந்துட்டா பாரு உன்னை ஆசீர்வாதம் பண்ண.

சுப்பிரமணிய அய்யர் புளகாங்கிதம் அடைந்து தலைக்கு மேலே இரண்டு கரத்தையும் கூப்பி நமஸ்கரித்தார்.

வீட்டுக்கு உள்ளே முனகல் சத்தம். கல்யாணி அம்மாள் தான். படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். மதுரையில் தாணுப்பிள்ளை ஜாகையிலிருந்து அவளைப் படுத்தபடிக்கே மாட்டு வண்டியில் கொண்டு வந்து இங்கே கிடத்தியது.

நினைத்து நினைத்து அழுகிறாள்.

சாமா, வந்து பால் குடிடா. மாருலே பால் கட்டிண்டு இருக்கு. சாமா, நீயும் உன் பொண்டாட்டியுமா பெரியவா எல்லாரையும் நமஸ்காரம் பண்ணுங்கோ. ஊஞ்சல்லே உக்காருடா. பால் பழம் கொடுங்கோ சுப்பம்மா அத்தை தம்பதிகளுக்கு. சாந்தி முகூர்த்தத்துக்கு இலவம்பஞ்சு தலகாணி பஞ்சடைக்கக் கொடுத்தாச்சா ?

அவ்வப்போது நினைவு திரும்ப வரும்போது உரக்கச் சத்தம் போடுகிறாள். மயங்கித் தரையில் சாய்கிறாள். அப்படிச் சாய்வதற்குள் சொல்ல வேண்டியதைப் சொல்ல வேண்டியே ஆக நிர்ப்பந்தம் ஏதோ இருப்பதுபோல் அவசர அவசரமாக அவள் பேச்சு இருக்கிறது.

சுப்பம்மாளை வீட்டோடு இருந்து அவளுக்கு சிஷ்ருசை செய்யும்படி சுப்பிரமணிய அய்யர் காலில் விழுந்து கும்பிடாத குறையாகக் கேட்டுக் கொண்டபோது அவளால் முடியாது என்று சொல்ல முடியவில்லை.

அவளுக்கும் சாமா இப்படி அகாலமாகப் போய்ச் சேர்ந்ததில் துக்கம்தான். அந்தத் துர்மரணப் பெண்டு சுசீந்திரம் கோயிலில் வைத்து அழுது தொழுது கூப்பிட்டது எல்லாம் மனதில் அப்படியே உளியால் வடித்தெடுத்த மாதிரிப் பதிந்து கிடக்கிறது. அவள் என்ன செய்ய முடியும் ? கூடவே வரும் மூத்த குடிப் பெண்டுகள் தான் என்ன செய்ய முடியும் ?

அவர்கள் நடந்து போனதைச் சாங்கோபாங்கமாக விஸ்தாரமாக எடுத்துச் சொல்ல முடியும். நல்லதாக நாலு வார்த்தை மங்களகரமாகப் பேச முடியும். பேசினார்கள். சங்கரன் பட்டணம் போய்க் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வந்தால் அவனுடைய தேக ஆரோக்கியம் விருத்தியாகும் என்றும், வியாபாரம் செழிப்பாக வளரும் என்றும். அகத்தில் திரும்ப சுபிட்சம் ஏற்படும் என்றும்.

மூத்த குடிப் பெண்டுகள் சங்கரன் கல்யாணம் நிச்சயித்தபடிக்கு நடக்க வேண்டும் என்றும் சொல்லிப் போனார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் அத்தான் சுந்தர கனபாடிகள் அதை சாமாவின் வருஷாப்திகத்துக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்றபோது, நீ உன் தெவச மந்திரத்தையும் விஷ்ணு இலையிலே எள்ளுருண்டையையும் பாகற்காய்ப் பிட்லையையும் பாத்துண்டு போடா கொழந்தே மாட்டுக்கண்ணு சுந்தரம் என்று சுப்பம்மாள் சத்தம் போட்டாள். அது மூத்த குடிப் பெண்டுகள் அவள் வாயில் வந்து சொன்னதா அவளே சொன்னதா என்று சுப்பிரமணிய அய்யருக்குத் தெரியவில்லை.

அந்தத் துர்மரணப் பெண்டு தன்னை அதற்கப்புறம் தொடரவில்லை என்பதில் சுப்பம்மாளுக்கு நிம்மதி. ஜோசியர் அண்ணாசாமி அய்யங்காரின் யந்திரத்தையும் கட்டிச் சுமந்து கொண்டு வளையவர வேண்டியதில்லை இப்போதெல்லாம்.

மாமி, தேவதைகளைப் பட்டினி போட்டுடாதீங்கோ என்று அவர் கேட்டுக் கொண்டபடி தினசரி பால் அபிஷேகமும் நைவேத்தியமும் மாத்திரம் செய்து கொண்டிருந்தாள் அந்த் யந்திரத்துக்கு. ராத்திரி வேளைகளில் சில நேரம் யந்திரம் வைத்த சம்புடத்தில் இருந்து தேவதைகள் மொணமொணவென்று சண்டை போட்டுக் கொள்வது கேட்கும். அப்புறம் சமாதானமாகி இழைவதும், ஒன்றாகச் சேர்ந்து பாடுவதும் கூடக் கேட்பதுண்டு. அந்தச் சத்தத்திலேயே சுப்பம்மாள் அயர்ந்து நித்திரை போய்விடுவாள்.

தேவதைகள் ராத்திரி சண்டை பிடிச்சுக்கறது பாவமா இருக்கு. இத்தணூண்டு எடத்துலே அதுவும் புழுக்கமான ராத்திரியிலே ஒத்தரோட ஒருத்தர் தேகம் இடிச்சுக்கறமாதிரி ஒண்டிண்டு இருக்கறது கஷ்டமான விஷயமில்லியா ?

அவள் ஜோசியரைக் கேட்டாள்.

லோக க்ஷேமத்துக்காக ஜமீந்தான் பங்களாத் தோட்டத்துலே பெரிசா யந்திரம் ஒண்ணு ஸ்தாபிச்சிருக்கேன். அதிலேயே இந்தத் தேவதைகளையும் ஏத்திடறேன். கொஞ்சம் சிக்கலான க்ஷேத்ர கணிதம் எல்லாம் போட வேண்டியிருக்கு அதைச் செய்யறதுக்கு. நேரமே கெடைக்க மாட்டேங்கறது. யாருக்காவது எருமைமாட்டை தேடச் சோழி உருட்டவும், ருது ஜாதகம் கணிக்கவுமே சரியா இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்குங்கோ மாமி.

ஜோசியர் கேட்டுக் கொண்டதை அவள் அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருந்தாலும் அவர் இன்னும் எருமை மாடு பிடிக்கத்தான் சோழி உருட்டிக் கொண்டிருக்கிறார்.

சோழி உருட்டி அவரும் சங்கரனுக்கு ஸ்தல மாற்றம் அவசியமானதென்று சொன்னபோது சுப்பிரமணிய அய்யர் அவனைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பிவைக்கத் தீர்மானித்தார்.

பிச்சை ராவுத்தன் வேறு நீளமான பழுப்புக் காகிதத்தில் கருப்பு மசியால் மடித்து மடித்து லிகிதம் எழுதி அனுப்பியிருந்தான் அவருக்கு.

சாமிநாதன் அகாலமாகப் போனதற்கு வருத்தம் சொல்லி அவன் நல்ல கதிக்குப் போய்ச் சேர துவா செய்து கொள்வதாக எழுதியிருந்தான். துவா என்றால் என்ன என்று சுப்பிரமணிய அய்யருக்குப் புரியாவிட்டாலும் அடுத்து எழுதியிருந்தது ஸ்பஷ்டமாகப் புரிந்தது.

என் மூத்த மகன் கருத்தானுக்குப் பட்டணத்தில் தனிக்கடை வைத்துக் கொடுத்திருக்கிறேன். அவனுக்கு வியாபார நெளிவு சுளிவு புரிந்தாலும் கணக்கு வழக்கில் சாமர்த்தியம் போதாது. பட்டணத்திலே நிறைய அய்யமாரும், முதலிகளும் மாசம் நாலு ரூபாய் துரைத்தனத்துப் பணம் சம்பளம் வாங்கிக் கொண்டு கணக்கெழுதுகிற உத்தியோகத்துக்குக் கிடைப்பார்கள். உங்கள் புத்திரன் ஒரு பத்து நாள் பட்டணத்துக்கு வந்தால், மூக்குத்தூள் வியாபாரத்தைத் தெற்கில் விஸ்தரிப்பது பற்றித் பேசித் தீர்மானித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். அப்படியே மதராஸிலே கருத்தானுக்குக் கணக்கனைப் பிடித்துப்போடவும் தக்கவர்களைப் பரீட்சித்து உத்யோகத்தில் ஏற்றலாம். இங்கே பீவியின் தங்கைக்கு வைசூரி கண்டிருப்பதால் நான் இப்போது பிரயாணம் வைக்கமுடியாத ஸ்திதியில் இருக்கிறேன். தேவரீர் மன்னிக்க வேணும்.

சங்கரனிடம் அந்த லிகிதத்தையும் கூடவே ஐநூறு ரூபாய் பணமும், பினாங்கு சோமசுந்தரம் செட்டி வகையறாக்கள் அவர்களுடைய சென்னைப்பட்டணம் தம்புச்செட்டித் தெரு லேவாதேவிக் கடை மேல் எழுதிய தரிசன உண்டியல்களாக ஆயிரம் ரூபாயும் கொடுத்து அனுப்பியிருந்தார் சுப்பிரமணிய அய்யர்.

நொங்கம்பாக்கத்துலே ராமநாதனோட, அதாண்டா உன்னோட ஒண்ணு விட்ட சித்தப்பன் கச்சேரி ராமநாதய்யனோட பிள்ளை வைத்தியநாதன் இருக்கான். கோட்டையிலே உத்தியோகம். பிரக்யாதியோட கொடி கட்டிப் பறக்கறான். அவாத்துலே தங்கி இருந்துக்கோ. ராமநாதனும் அவன் பிள்ளைக்குச் சேதி சொல்லி விட்டிருக்கான் நீ வருவேன்னு.

ஆக, சங்கரன் கிளம்பத் தீர்மானிக்கும் முன்னமேயே சதுரம் வரைந்து மஞ்சாடி எடுத்து வைத்தாகி விட்டது. அவன் தாயக்கட்டையை உருட்ட வேண்டியது தான் பாக்கி.

வந்ததிலிருந்து அதுதான் செய்து கொண்டிருக்கிறான்.

கருத்தா, அந்தத் தெலுங்கு பிராமணன் எப்போ வரேன்னு சொன்னான் ?

யாரு ? சீனிவாச ராவோ பகலோ அந்த மனுஷனா ?

ஆமாமா, அவனே தான். நேத்துக்கு நாம பாத்ததிலே அவன் தான் தீட்சண்யமா இருந்தான்.

ஆனாலும் ஆறு ரூபா மாசாமாசம் கேக்கறானே அய்யர்சாமி ? தெலுங்கனுக்குக் கொடுத்து, தொரைக்கு வரி கட்டி, கடைக்குக் குடக்கூலி கொடுத்து அப்புறம் கண்டுமுதலா என்ன மிஞ்சும் ?

அட, ஆறு ரூபா அவன் கேட்டா நீ கொடுக்கவா போறே கருத்தா ? நாளைக்கு வரட்டும், நான் பேசி முடிக்கறேன். நீ சும்மா வாய் பாத்துண்டு இரு அது போதும்.

அய்யர்சாமியே அப்படியே மாசாமாசம் தெலுங்கனுக்குச் சம்பளத்தையும் கொடுத்துட்டா உபகாரமா இருக்கும்.

கருத்த ராவுத்தன் வலக்கையை நெற்றிக்குக் கொண்டு போய் சலாம் வைத்தபடி கண் அடித்தான்.

நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா ?

கருத்தான் கடகடவென்று சிரித்தான் எப்பவும் போல்.

அந்த ராவ் எங்கேயோ பக்கத்துலே கிராமத்திலே இருக்கறதாச் சொன்னானே. நித்தியப்படிக்கு அங்கேயிருந்து விடிகாலையிலே கிளம்பி வந்து ராத்திரி கடையை எடுத்து வைக்கறது மட்டும் இருக்க முடியுமான்னு விஜாரிக்கணும்.

அய்யர்சாமி. அவன் பக்கத்துலே கிண்டி கிராமத்துலே தான் இருக்கான். அங்கேயிருந்து ரெண்டு ஜட்கா வண்டி மாறினா எசுபிளனேடு தான்.

கிண்டியோ, பிருஷ்டமோ போ. வண்டியிலே வரானோ. கால் நடையா வரானோ. வந்தாச் சரி. அதுவும் நீ கொடுக்கப் போற மூணே முக்கால் துட்டுக்கு.

முக்கால் அவன் இல்லே. நாந்தான்.

கருத்த ராவுத்தன் தன் இடுப்புக்குக் கீழே காட்டிக் கொண்டு கடல் இரைச்சலை விட அதிகமாகச் சத்தம் போட்டுச் சிரித்தான்.

அது பாட்டுக்கு தேமேன்னு இருக்கு. ஏண்டா அதைப் போய் நறுக்கணும் ?

அதை எங்க வாப்பா கிட்டே இல்லே கேக்கணும் அய்யர் சாமி ?

சங்கரன் அவனோடு கூடச் சேர்ந்து சிரித்தான். மனம் லேசாகப் போயிருந்தது அவனுக்கு.

கருத்தா, நாளைக்காவது தம்புச் செட்டி தெருவிலே செட்டிமார் கடைக்குப் போய் தரிசன உண்டியலை மாத்தணும்டா. இல்லேன்னா நீ மூக்குத்தூள் தரமாட்டே.

நல்லா மாத்தலாம் அய்யர் சாமி. நீங்க மாத்தினாலும் மாத்தாட்டாலும் ராவுத்தன் பொடியும் முக்காலும் முழுசும் எல்லாம் சாமிக்குத்தான்.

முக்கால் எல்லாம் எனக்கு வேணாண்டா கருப்பா. உன் வீட்டுலே அதுக்கு ஆள் இருக்கு இல்லியோ ?

சாமியை இந்த விஷயத்துலே நான் முந்திக்கிட்டாச்சு. இருட்டிக்கிட்டு வரது. போகலாம் சாமி. வூட்டுலே பேகம் முழுவாம நிக்கறா. போற வழியிலே சேட்டு கடையிலே அல்வா வாங்கிட்டுப் போகணும்.

பகவதிக்குட்டிக்கும் அல்வா வாங்கிப் போய் ஊட்ட வேண்டும். அவள் வாயில் முத்தம் ஈந்து எச்சிலோடு திரும்ப எடுத்துச் சுவைக்க வேண்டும்.

நான் கொடுத்தால் வேணாமோ என்றாள் கொட்டகுடித் தாசி.

(தொடரும்)

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts