இரா முருகன்
குரிச்சி போட்டு உட்கார்ந்திருக்கிறான் துரை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு தொப்பியை எடுத்து மடியில் வைத்தபடி இருக்கிறான் அவன். வாயில் புகைக் குழாய். நல்ல கருப்பாகவும் பழுப்பாகவும் அதிலிருந்து புகை அவ்வப்போது எழுந்து மூக்கில் குத்துகிறது. வயோதிகன். அந்திம காலத்தில் ஊரை விட்டு இங்கே விரட்டியிருக்கிறார்கள். அந்த எரிச்சலோ என்னமோ, எதிர்ப்பட்ட எல்லோரையும் இடுப்புக்குக் கீழ் ரோமமாகப் பார்க்கிறான். அவனுக்குப் பின்னால் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு கருங்காலிக் கட்டை போல ஆறு சிப்பாய்கள் நிற்கிறார்கள். வாசலிலே இவர்கள் எல்லோரும் வந்த குதிரைகள் கட்டி வைத்தபடிக்குச் சாணம் போட்டபடி கொள்ளுத் தின்று கொண்டிருக்கின்றன.
துரைக்கு முன்னால் அவன் குடித்துப் போட்ட இளநீர் நாலைந்து தரையில் உருண்டு கிடக்கிறது. ஒரு குலை பனை நுங்கு. நல்ல செம்பனையாகப் பார்த்துப் பறித்து வரச் சொன்னது. ஒரு ஓரத்தில் அது பாட்டுக்குக் கிடக்கிறது. முகர்ந்து பார்த்து முகத்தைச் சுளித்து அசுத்த வஸ்துவெல்லாம் ஒண்ணும் வேணாம் என்று சொல்லிவிட்டான்.
துரைக்கு முன்னால் பெரிய நாற்காலியில் ராஜா. அது கொஞ்சம் கால் ஆடிக் கொண்டிருக்கிறது. தச்சனை நாலு தடவை முகவாய்க்கட்டையைப் பிடித்துக் காரியஸ்தன் அழைத்தும் வராமல் செட்டிமார் நாட்டில் வீடு கட்ட இழைப்புளியும் ரம்பமுமாகப் போய்விட்டான். ஏற்கனவே பார்த்த வேலைக்குக் காசு இன்னும் கிட்டாத கோபம் அவனுக்கு.
நாற்காலி அசெளகரியம் மாத்திரம் இல்லை ராஜாவுக்கு. இந்தக் வெள்ளைப்பாண்டுக் கிழவன் வரப் போகிறான் என்பதால் குப்பாயம், குஞ்சம் வைத்த சரிகைக் குல்லா, துருக்கி தேச சுல்தான் மாதிரி கால்சட்டை, இடுப்பில் கச்சை, அதில் செருகின வாள், நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று சித்திரக்காரன் வரைய வசதியாக உட்காருவது போல் வாரிப் போட்டுக் கொண்டு உத்தியோக உடுப்பில் ராஜா உட்கார வேண்டிப் போனது.
அப்புறம் தஞ்சாவூர் சாயபு அத்தர். அது போதாதென்று ராணி சொன்னபடி, ஜவ்வாதைக் குழைத்துக் கம்புக்கூட்டில் எல்லாம் தடவி விட்டிருக்கிறார்கள். அது வேறே உலர்ந்து போய் அரிப்பெடுக்கிறது. எல்லா வாடையும் சேர்ந்து தலை வேதனை. ராத்திரி சரியாக நித்திரை போகாத அயர்ச்சி வேறு.
தண்ணீரில் நனைத்த வெட்டிவேர்த் தட்டிகள் கூடம் முழுக்கத் தொங்க விட்டிருக்கிறது. பங்கா இழுக்கிறவர்கள் தூங்கிவிடாமல் சுறுசுறுப்பாக மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைக்கே காரியஸ்தன் நினைவு படுத்தி அவர்களுக்குச் சம்பளம் மிச்சமில்லாமல் கொடுத்து மேலே ராட்டினத்தையும் எண்ணெய் போட்டு வைத்தாகி விட்டது. என்ன இழுத்தாலும் காற்று என்னமோ வருவேனா என்று அடம் பிடிக்கிறது.
வெள்ளைக்காரன் தொப்பி தரையில் விழுகிறது. இது எத்தனையாவது தடவையாக என்று கணக்கு மறந்து போனது ராஜாவுக்கு.
சலிக்காமல் அதை எடுத்துப் பயபக்தியோடு நீட்டுகிறான் பக்கத்தில் நிற்கும் துபாஷ். அவன் முறுக்காக இருக்கிறான். ஆற்காட்டுத் துருக்கனாகவோ இல்லை முதலியாகவோ இருக்க வேண்டும் என்று ராஜா தீர்மானித்திருக்கிறார்.
அவன் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தால் நொடியில் சொல்லிவிடுவார் அவர். ஆனால் துரை பேசினால் தான் அவன் பேசுவான். அவர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்வது தவிரச் சாப்பிடவும் கொட்டாவி விடவும் தான் வாய் என்று ஆகிப் போயிருக்கிறது போல.
இன்னொரு இளநீரைக் குடித்துப் போட்டு விட்டு சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தின்பதுபோல் ஏதோ சொன்னார் துரை.
ரொம்ப வெப்பமாக இருக்கிறது என்று மொழிபெயர்த்தான் துபாஷ்.
வெய்யில் ஏறினால் இன்னும் சகிக்க முடியாது போய்விடும் என்றார் ராஜா.
அப்படியாவது துரை மத்தியானத்துக்குள் கச்சேரியை முடித்துக் கிளம்பி விட மாட்டானா என்று நப்பாசை அவருக்கு.
அவன் தலையை ஆட்டியபடி வாயிலிருந்து புகைக் குழாயை எடுத்துப் பின்னால் துப்பாக்கி உயர்த்திப் பிடித்தபடி நின்ற சிப்பாயிடம் கொடுத்தான். ஓரமாகப் போய்ப் புகைக் குழாயிலிருந்து சாம்பலை ராஜாவின் அரண்மனைக் கூடத்து மூலையில் எக்கித் தள்ளிவிட்டு வந்தான் அந்தச் சிப்பாய்.
இதுக்கெல்லாம் சேர்த்து இவனுக்குச் சம்பளம் கொடுப்பார்கள். ராஜாவுக்குக் கொடுக்க மட்டும் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வார்கள். ராஜாவும் புகையிலைக் குழலில் அடைத்துக் கொடுத்தால் சரிக்கு மானியம் கொடுப்பார்களோ என்னமோ.
இந்த மனுஷன் புகை ஊதுகிறவன் என்று தெரிந்திருந்தால் பக்கத்து வீட்டு அய்யனிடம் சொல்லி வாங்கி வைத்திருக்கலாம் என்று தோன்றியது ராஜாவுக்கு.
குட்டிச் சாத்தான் வேலை போல் இவர் நினைக்கும்போதே பக்கத்து வீட்டுப் பக்கம் கையைக் காட்டி ஏதோ சொன்னான் துரை. அந்த வீடு எப்படி எரிந்து போனது என்று துபாஷி அதிகாரமாக ராஜாவைப் பார்த்தபடி கேட்டான்.
ராஜா காரியஸ்தனைப் பார்த்தார். அவன் முகத்தில் விநோதமாக ஒரு நிம்மதி தெரிந்தது. கணக்குப் புத்தகத்தைப் பார்த்து அவனைக் கழுவேற்ற வரவில்லை காருண்யம் மிக்க துரை. விசாரணைக்கு வந்திருக்கிறான். அதெல்லாம் ராஜா தீர்மானிக்க வேண்டிய விஷயம். அவனுக்கு ஒண்ணுமில்லை.
ராஜா தான் பதில் சொல்ல வேண்டும். அவர் காரியஸ்தனிடம் இருந்த கோபத்தை துபாஷி மேல் வைத்து விரோதமாகப் பார்த்தார்.
என்னமோ எரிஞ்சு போச்சு. எனக்கு என்ன தெரியும் ? ஊருக்கு நானு ராஜாவா இந்த மனுஷ்யரா ?
துபாஷி உள்ளபடிக்கே பயந்து போனான். தொந்தியும் தொப்பையும் மேலே மறைக்கிற சரிகைக் குப்பாயமுமாக உட்கார்ந்திருப்பவன் தன்னைப் போல் துரைத்தனத்திடம் சம்பளம் வாங்கி ஜீவிக்கிற உத்தியோகஸ்தன் இல்லை. நூறு இருநூறு பட்டி தொட்டி, கிராமம், இந்த மாதிரிப்பட்ட சின்னப் பட்டணம் எல்லாம் மரியாதை செய்கிற ஜமீந்தார். ராஜா என்று ஊரில் சொல்வார்கள். நாளைக்கே இந்தத் துரையோ அல்லது ராஜதானியில் இருக்கப்பட்ட எல்லாத் துரைகளும் துரைசானிகளும் ஊரெல்லாம் ரொம்ப புழுக்கமாக இருக்கிறபடியால் இங்கே இருக்க வேண்டாம் என்று தீர்மானித்துக் கப்பலில் கிளம்பிப் போனால் அப்புறம் துபாஷியும் சிப்பாயும் எல்லாம் இந்த மாதிரி ஜமீந்தார்களைத் தான் அண்டிப் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.
ராஜா நல்ல நித்திரையில் இருந்தபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அவன் பணிவோடு துரைத்தனத்துப் பாஷையில் அறிவித்து அப்படிச் சொன்னதையும் உடனடியாக ராஜாவிடம் சொல்லிப் போட்டான்.
இப்போது பயப்பட வேண்டிய நேரமாய்ப் போனது ராஜாவுக்கு. இவனிடம் அவ்வளவு கெத்தாக, காரியஸ்தன் மேல் இருந்த கோபத்தை எல்லாம் ஏற்றி வார்த்தை விட்டிருக்க வேண்டாம். அவன் ராஜா சொல்வதை எல்லாம் என்ன மாதிரி பாஷை மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறானோ.
இந்தா வைத்துக்கொள் என்று ராஜாவுக்குத் தாத்தன் காலத்தில் கொடுத்த சன்னத்தையும் பிடுங்கிக் கொண்டு விரட்டச் சொல்லி துரை உத்தரவு போட்டாலோ அல்லது அப்படிப் போடத்தக்க வண்ணம், வேண்டியவர்களிடம் சொன்னாலோ ராஜா நிலைமை கவலைக்கிடமாகி விடலாம்.
துரை சடாரென்று எழுந்தான். சிப்பாய்கள் துப்பாக்கியை தோளுக்கு இன்னும் மேலே உயர்த்திப் பிடித்து என்ன இழவிற்காகவோ தரையில் தோல் செருப்புக் காலால் ஓங்கி அறைந்தார்கள். அவர்களை வாந்திபேதி கொண்டு போக.
வா. போய்ப் பார்க்கலாம்.
தொப்பியைத் தலையில் பொருத்திக்கொண்டு துரை கிளம்பினான். பின்னாலேயே பரிவாரம் எல்லாம் போக, ராஜாவும் மெல்ல நடந்தார்.
பின்னாலே யாரோ ஓடி வரும் சத்தம். ராணியின் சேடிப்பெண்.
இவளைக் கொஞ்சிக் கொண்டிருக்க இப்போது நேரம் இல்லை. வெள்ளைக்காரன் போயொழியட்டும். அப்புறம் மதிய நேரம் தூக்கம் முடிந்து நாலு நெய்த் தேன்குழல் சாப்பிட்டு விட்டு சுத்த ஜலம் குடித்துவிட்டு அதெல்லாம் வைத்துக் கொள்ளலாம்.
துரை என்ன கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லச் சொன்னாங்க மகாராணியம்மா.
அவள் ராஜாவின் காதில் ரகசியமாகச் சேதி சொல்ல வந்தவள். ராணி வீட்டுக்கு விலக்காக உள்ளே இருக்கிற படியால் நேரடியாகப் பேச முடியாது. இல்லாமல் இருந்தாலும் துரை பார்க்க அவள் வெளியே வந்து நிற்கவோ உட்காரவோ மாட்டாள்.
பின்னால் துடைத்துப் போட்டுவிட்டுக் குளிக்காமல் கொள்ளாமல் திரிகிற இவர்களைப் பார்த்தாலே சகித்துக் கொள்ள முடியாமல் குமட்டல் ஏற்படுவதாக அவள் சொல்லியிருக்கிறாள்.
குளிர் தேசமாச்சா ? ஜலத்தைத் தொட்டாலே கை விரைத்துப் போகும். அப்போ வேறே என்ன செய்வார்கள் ?
குமட்டினாலும், காசு கொடுக்கிற துரைத்தனம் என்பதால் அதை எல்லாம் சகித்துக் கொள்ள வேணுமென்று ராஜா அவளுக்குச் சொல்லிச் சமாதானப்படுத்தியது நேற்று முன்னிரவில் தான். அப்படிச் சகித்துக் கொள்ளாவிட்டால் சொப்பனத்தில் கண்டது போல் பரங்கி தேசத்தில் போய்க் கையேந்திக்கொண்டிருக்க வேண்டி வரும்.
அங்கே போறதுக்கு யாரு உனக்குக் கப்பல் கூலி கொடுப்பாங்க ?
புஸ்தி மீசைக் கிழவன் வகையறாக்கள் கூடவே நடக்க ஆரம்பித்திருந்தார்கள் இடக்கலாக வார்த்தை சொன்னாலும், சதையும் உடம்புமாக இல்லாம போனாலும், நம்ம சாதி சனங்கள் என்று பத்திருவது பேர் கூட வருகிற தெம்பு ராஜா நடையில் தெரிந்தது.
இடிந்து விழுந்திருந்த சுவரோடு நின்ற அந்த வீட்டை இப்போதுதான் பக்கத்தில் வைத்துப் பார்த்தார் ராஜா. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் துரை மூக்கை உறிஞ்சியபடிக்கு.
ராஜா அவனோடு நடந்தபோது இங்கே தான் எங்கேயோ அந்தப் பழுக்காத்தட்டுக்களைச் சுழல விட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற நினைவு வந்தது.
எல்லாம் எரிஞ்சு அடங்கியாச்சு.
துரை சொன்னது மொழிபெயர்க்காமலேயே புரிந்தது அவருக்கு.
கருவாளித்து நின்ற சுவர்ப் பக்கம் நின்றார் ஒரு வினாடி துரை. துபாஷியிடம் என்னமோ சொன்னார். அவன் அதை மொழிபெயர்ப்பான் என்று ராஜா எதிர்பார்க்க, துபாஷியோ பணிவாகத் தலையாட்டிக் கொண்டான்.
அவன் பக்கத்தில் இருந்த சிப்பாயிடம் சொல்ல, அவனும் துரிதமாக வெளியே ஓடினான்.
புகார் வந்திருக்கிறது. புகையிலை வியாபாரி சுப்பிரமணிய அய்யர் சென்னை ராஜதானிப் பிரபுவான பெரிய துரைக்குக் கடுதாசி அனுப்பியிருக்கிறார். உயிரும் உடமையும் ஆயிரக் கணக்கில் சொத்தும் நாசமானதாக. அதை விசாரிக்கத் தான் இந்தத் துரை வந்திருக்கிறார்.
துபாஷி மெதுவாகச் சொல்ல ராஜா பயத்தோடு பக்கத்தில் நின்ற புஸ்தி மீசைக் கிழவனைப் பார்த்தார்.
வீடு முழுக்க மிதந்து கொண்டு சாம்பல் வாசனையை அனுபவித்தபடி நீ ஏதொண்ணுக்கும் பயப்படாதே என்று முன்னோர்கள் ராஜாவைச் சமாதானப்படுத்தினார்கள். இந்த அமாவாசைக்காவது சாராயம் ஊத்திடு எங்களுக்கு. எல்லாம் சரியாயிடும் என்றார்கள் அவர்கள்.
எனக்கும் என்று பாப்பாத்தியம்மாள் குரலும் கேட்டது.
ராஜா சரியென்று தலையை ஆட்ட வெள்ளைக்காரன் குழப்பத்தோடு பார்த்தான்.
சுப்பிரமணிய அய்யர் தளர்ந்து போய் நடந்து வந்தார். கூடவே ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம்.
மற்ற எல்லோரும் வாசலில் நிற்க, அவரும் கூடவே அவர் மகனும் உள்ளே நுழைந்ததை ராஜா கவனித்தார். மரியாதைக்குக்கூடத் தானும் ராணியும் துக்கம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்குப் போகாதது நினைவு வந்தது அவருக்கு.
வீடு எரிந்துபோன இந்த மனுஷன் எங்கே தங்கியிருக்கிறானோ ? குடக்கூலிக்கு வீடு எடுத்திருப்பானாக இருக்கும்.
எதானாலும் அரசூர் என்ன சென்னைப் பட்டணமா சளேர் என்று விரிந்து பரந்து கிடக்க ? நாலு தெருவில் எந்தத் தெருவில் ஜாகை என்று தேடிவந்து சொல்லும்படி காரியஸ்தனை ஏவினால் நொடியில் தகவல் வந்திருக்கும்.
சுப்பிரமணிய அய்யர் எல்லோருக்கும் மெளனமாக நமஸ்காரம் சொன்னார்.முகத்தில் வெள்ளைப் பஞ்சை ஒட்ட வைத்ததுபோல் தாடி மண்டிக் கிடந்தது. ஊரெல்லாம் புகையிலை விற்றுக் காசு சேர்த்து இரண்டு அடுக்கு வீடு கட்டினவராகத் தெரியவில்லை அவர். ராஜாவுக்கு ஏனோ பிரேதம் சுமந்து போகிற பிராமணர்கள் நினைவு வந்தார்கள்.
துரை அய்யரிடம் ஆறுதல் வார்த்தை சொல்லி, அதைத் துபாஷி மொழிபெயர்க்கும் முன் தடுத்து நிறுத்தினான். அவருக்குப் புரிந்திருக்கும் என்றான் வெற்றுப் புகைக்குழாயைக் கடித்தபடி.
அவன் சொன்னதாக இப்படிப் புஸ்தி மீசையான் பாப்பாத்தியம்மாளிடம் விவரித்தது பின்னாலிருந்து கேட்டது ராஜாவுக்கு. ஆகக்கூடி இவனுக்கும் துரைத்தன பாஷை அர்த்தமாகிக் கொண்டிருக்கிறதா ? போகட்டும்.
இவன் அந்தப் பெண்பிள்ளையிடம் சில்மிஷம் செய்யாமலிருக்க வேண்டுமே என்று நினைத்தார் ராஜா. இருக்கிற தொந்தரவு போதாதென்று அப்புறம் அது வேறு அக்கப்போராகி விடும். அதுக்கும் சேர்த்து யந்திரம் செய்ய ஜோசியக்கார அய்யர் இருக்கப்பட்ட ஆஸ்தி எல்லாம் கேட்டு வாங்கிவிடுவார்.
எல்லாவற்றிலிருந்தும் பிய்த்துக் கொண்டு பரங்கி தேசத்துக்குப் பறந்து போய் இறக்கிவிட ஏதாவது யந்திரம் அமைத்துத் தரமுடியுமா என்று ஜோசியரை விசாரிக்க வேணும்.
எதுக்கு ? அங்கே போய்த் தனியாப் பிச்சை எடுக்கவா ?
துரை கேட்டதுபோல் இருந்தது. இந்த மனுஷருக்கு எவ்வளவு நஷ்டம் என்று உங்களுக்குத் தெரியுமா என்று அவன் கேட்டதை மொழிபெயர்த்தான் துபாஷி.
நிறைய என்று கேள்விப்பட்டேன். எனக்கு அதிலே மிகுந்த வருத்தம் உண்டாச்சுது.
ராஜா உள்ளபடிக்கே வருத்தத்தோடு அய்யரைப் பார்த்துச் சொன்னார். அவர் சும்மா இருக்க, சடாரென்று கூட வந்த அய்யரின் பிள்ளை உரக்கக் கத்தினான்.
தீ வச்சதே இந்த மனுஷன் தான்.
ராஜாவுக்கு முதுகுத் தண்டு சிலிர்த்துப் போனது.
நானா ? நானா தீ வைச்சேன் உங்க வீட்டுக்கு ? என்ன சாமி சொல்றீங்க ? உங்களுக்குப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கு. நெசம்தான். அதுனாலே பக்கத்திலே யாரு வந்தாலும் பழியைப் போட்டுடுவீங்களா ?
ராஜா குரல் தழதழத்தது. இப்போது வீரத்தைக் காட்டிப் பேச வேண்டும். என்னமோ மனம் அதற்கு இடங்கொடுக்கவில்லை.
அய்யர் வீடு எரிந்து போனதற்கும் அவர் வீட்டில் இருந்ததாகச் சொல்லப்படும் புத்தி சுவாதீனமில்லாத மகன் உயிரோடு சாம்பலாகப் போனதற்கும் தானும் ஏதோவொரு விதத்தில் காரணம் என்று அவருக்குத் தெரியும்.
ராணி என்ன செய்தாள் என்று முன்னோர்களும் சரியாகச் சொல்லவில்லை. அவர்கள் கூடவே வரும் பாப்பாத்தியம்மாளையும் சொல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் என்னமோ ராஜா முதுகுக்குப் பின் நடந்துதான் போயிருக்கிறது.
சும்மா தத்துப்பித்துன்னு உளறாதேடா சங்கரா என்றார் அய்யர். இது நமக்குத் தொழில்லே விரோதம் கொண்டாடறவா யாரோ செஞ்ச சதிவேலை. அதான் விசாரிக்கச் சொல்லி இவாளோட எஜமானுக்கு மனுப் போட்டேன்.
ராஜாவுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஐயருடைய விரல் தன்னைக் குற்றம் சாட்டி நீளவில்லை என்பது பெரிய உபகாரமாகப் பட்டது.
சாமி எங்கிட்டே சொல்ல்லியிருந்தீங்கன்னா நொடியிலே களவாணி, மொள்ளமாரிப் பயலுக எங்கே இருந்தாலும் பிடிச்சுவரச் சொல்லி நிறுத்தியிருப்பேனே ?
அவர் கேட்டபோது, கிழித்தீர் நீர். தீ வைக்க ஆளை ஏவி விட்டுட்டு இந்தப் பக்கம் இப்படி ஒரு பாசாங்கா என்று சங்கரன் திரும்ப இரைந்தான்.
இந்த வாலிபனை உடனே வெளியே கொண்டுவிட்டு வாருங்கள் என்றான் துரை. அவனால் இரைச்சலில் காலம் தள்ள முடியாது. உடம்பு தளர்ந்து கொண்டு வருகிறது என்பதுபோல் முகத்தை தீனமாக வைத்துக் கொண்டு புகையிலைக் குழாயை நிரப்பித்தரச் சிப்பாயிடம் நீட்டினான்.
வரலட்சுமி முகம் வரைந்த சுவர் பக்கம் சிப்பாய் திரும்பி நின்று புகையிலையைக் குத்திக் குத்தி அந்தக் குழாயில் அடைத்தபடி இருந்தான். மற்ற சிப்பாய்கள் சங்கரனை மெல்லத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துப் போகும்போது அவர்கள் ராஜாவைப் பார்த்த பார்வை சரியில்லை. இந்த ஆள்தான் எல்லாம் செய்திருப்பான் என்று அய்யமார்ப்பிள்ளையிடம் அவர்கள் பார்வையிலேயே சொன்னது போல் இருந்தது.
குடிபடைகளைக் காத்து சம்ரட்சிக்க வேண்டியது உம்ம கடமை. ஆதலினால், இந்த மனுஷ்யர் இழந்ததற்கு துரைத்தனம் நஷ்ட ஈடு ஏதும் தர முடியாது. நீர் தான் ஏதாவது சகாயம் செய்து தர வேண்டும் இவருக்கு.
துரை அறிவித்தபோது ராஜா அதிர்ந்து போனார். என்ன வகையில் இந்த அய்யனைச் சகாயிப்பது என்று அவருக்குப் புரியவில்லை. நாற்றப் புகையிலை விற்று இவன் சேர்த்து வைத்திருந்த அல்லது இன்னமும் வைத்திருக்கும் பணம் ஜமீந்தார் நாலு தலைமுறைக்குக் குருவி போல் சேர்த்தும் சம்பாதிக்க முடியாத அளவு இருக்கும் என்றான் பக்கத்தில் நின்ற முப்பாட்டன் ஒருத்தன்.
வாசலில் புகையிலைக்கடை அய்யனின் மகன் இரைந்து கொண்டிருந்தான். அதை மீறிப் பழுக்காத்தட்டு சங்கீதம் அச்சு அசலாக அங்கே இருந்து மிதந்து வந்தது. ஆண் குரலிலும் பெண்குரலிலுமாக இருந்தது அது.
வாசலில் ஒரு பிராமணக் கிழவி தூணில் தலை சாய்த்து உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.
ஜோசியர் அய்யங்கார் சச்சதுரமாக ஒரு பெரிய தகட்டைத் தலையில் சுமந்தபடி அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தது ராஜா கண்ணில் பட்டது.
(தொடரும்)
- எழுதாதக் கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- மாயக்கவிதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- Recipe: Fried Rice With Peas and Chicken
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- புனிதமாகிப்போனது!
- வெளிநடப்பு!
- மனித வெடி
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- வைரமுத்துக்களின் வானம்- 7
- ஊர்க்குருவி
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- கவிதைகளே ஆசான்கள்
- கொடி — மரம்
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- வேண்டாமா இந்தியா ?
- திறவி.
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா
- தண்டனை போதும்!
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தழும்புகள்
- கலர்க் கண்ணாடி
- மொரீஷியஸ் கண்ணகி
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- வெளிச்சம்
- விடியும்! (நாவல்) – (20)
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- சூரியக்கனல்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது