அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

இரா முருகன்


26

அந்த வயசனைச் சாடிப் பறக்க விட்டு, நீங்களெல்லாரும் வீட்டில் சுகமாயிட்டு அவல் கேசரியும் இலையடையும் கழித்துக் கொண்டிருந்தீர்களா ?

கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயர் குப்புசாமி அய்யனிடம் சிரித்தபடி கேட்டான்.

பகவதியைப் பெண்ணு பார்த்து சம்பிரதாயமாகத் தாம்பூலம் மாற்றிக் கொண்டு அரசூர் புகையிலைக்கடை ஐயர் குடும்பமும், கூட வந்தவர்களும் கிளம்பிப் போனதற்கு நாலு நாள் கழித்து அது.

அதை ஏன் கேக்கறே போ. என் சேட்டன் கிட்டனுக்குத் தான் செலவு ஜாஸ்தி இந்த வகையிலே.

குப்புசாமி அய்யன் பாக்குவெட்டியில் அடைக்காயைத் துண்டித்துக் கொண்டு சொன்னான்.

கோழிக்கு முலை வந்தது போல வயசன் என்னத்துக்காக்கும் பறக்கணும். நமக்கு அது மாதிரி வாய்ச்சாலும், ஓடிச் சாடி இன்னும் நாலு சக்கரம் சஞ்சியில் பணம் சேர்க்கலாம்.

குப்புசாமி அய்யன் வெற்றிலைச் சாறு தலைச்சோறில் ஏற்றிய லகரியோடு தலையாட்டினான். ஏதாவது வர்த்தமானம் சொல்லியும் கேட்டும் கொண்டிருந்தால் போதும் இந்த நேரத்தில். நம்பூத்திரிகள் பற்றிய சிரிப்பு வரவழைக்கிற விநோதக் கதைகள் சொல்வதில் சங்குண்ணி வெகு சமர்த்தன். கிட்டாவய்யன் மாமனார் ஊரோடு தாழப் பறந்து போனதை விடப் பேச ரசமான விஷயமாக அதெல்லாம் இருக்கும்.

சங்குண்ணி, நம்பூத்ரி பலிதம் ஒண்ணு சொல்லடா.

குப்புசாமி அய்யன் வெற்றிலைச் சாறை உமிழ்ந்துகொண்டே சொன்னபோது, எடுபிடிக்கார கேசவன் வந்து கூப்பிட்டான். வந்துடறேன் என்று எழுந்து போனான் சங்குண்ணி.

வெற்றிலை லகரி போகத்தின் லகரி போல் உச்சத்துக்குப் போகக் குப்புசாமி அய்யன் சற்றே கண்ணை மூடிக் கொண்டான்.

பகவதிக்கு வாய்த்த மாப்பிள்ளை நல்ல லட்சணமா இருக்கான். கறுப்புத்தான். ஆனாலும் நல்ல களையில்லியோ ?

விசாலாட்சி கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. அவளுக்கு சுபாவமாகவே எல்லோர் மேலும் வாத்சல்யம் பொங்கி விடும். அது நெஞ்சுக்குள்ளே நிறைந்து நிறைந்து வர, வார்த்தையிலும் பார்வையிலும் மொண்டு எடுத்து வெளியே வாரி வீசி வீசித் தெளித்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷமே அவளை இன்னும் பிரியம் காட்ட வைத்தது.

அது நேரம் வெளுத்தபோது பதுங்கிப் பதுங்கி அடுக்களையில் நுழையும் பூனைக் குட்டியாக இருந்தாலும், நடு மத்தியானம் கரண்டிச் சோறை எதிர்பார்த்தபடி தோட்டத்து வாழைக்குலையில் ஏறி விளையாடி இருக்கும் அணில்பிள்ளையாக இருந்தாலும், ராத்திரி சேகண்டியும் தோளில் அழுக்கு வஸ்திர சஞ்சியுமாகப் பாடிக் கொண்டு தெருவில் பிச்சையெடுத்துப் போகிறவனாக இருந்தாலும்.

அவன் பாட்டு மனசுக்கு எவ்வளவு இதமா இருக்கு கேட்டேளா ? விசப்பும் ஷீணமும் அவன் தேகத்துக்குத் தான் போல் இருக்கு. மனசுக்கு அதெல்லாம் கிடையாதோ என்னமோ.

சேகண்டிக் காரனின் மண்சட்டி நிறையச் சோற்றையும், கூட்டானையும் வர்ஷித்துவிட்டு வீட்டுக்குள்ளே வந்து குப்புசாமி அய்யனிடம் சொன்னாள் விசாலாட்சி.

அந்த யாசகன் இப்போ வயறு நிறையச் சாப்பிட்டுட்டு வாசல்லே உக்காந்து பாடப்போறான். பாட்டு வாத்தியான் தெலுங்கு பிராமணன் ஜாகையைக் காலி செஞ்சுண்டு அவன் தேசத்துக்கே ஓடப் போறான் பாத்துக்கோ. அதாக்கும் நடக்கப் போறது.

குப்புசாமி அய்யன் அவளைச் சீண்டினான். பகவதியின் ஜன்ம நட்சத்திரம் வந்த திருவோண நாள் ஆனதால் அரசூர் குடும்பம் புறப்பட்டுப் போனதும் வீட்டில் எல்லோரும் அம்பலத்துக்குப் போயிருந்தார்கள். விசாலாட்சி தூரம் குளித்த நாள் என்பதால் வீட்டில் இருக்க வேண்டிப் போனது. அது நல்லதுதான் என்று பட்டது குப்புசாமி அய்யனுக்கு.

நீங்க ஒரு இஞ்சி. உங்க கிட்டப் போய்ச் சொன்னேன் பாருங்கோ.

விசாலாட்சி செல்லமாக அவனை அரையில் தடவினாள்.

அவளோடு அந்தக் கணமே கலக்க வேண்டும் என்று குப்புசாமி அய்யனுக்கு வெறியெழ, வெற்றிலையும், பாக்குத் துகள்களும், பூவும், மஞ்சள் அட்சதையும், காலடி மண்ணுமாகச் சிதறிய ஜமக்காளம் விரித்திருந்த கூடத்தில் அவளை வலுக்கட்டாயமாகக் கிடத்தியபோது யாரோ வாசல் கதவைப் பலமாகத் தட்டுகிற சத்தம்.

நேரம் கெட்ட நேரத்துலே தான் உங்களுக்கு இதெல்லாம் வரும்.

விசாலாட்சியின் கோபம் குப்புசாமி அய்யன் மேல் இல்லை என்று தெரிந்தாலும் அவன் வாசல் கதவைத் திறக்கப் போகாமல் அசதியோடு கூடத்து ஜமக்காளத்திலேயே மல்லாந்து படுத்தான். மதியம் பழுத்த சுமங்கலியான ஒரு கிழவி வாயைச் சுற்றித் துணி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இடத்துச் சுவரில் அவள் எண்ணெய்த் தலை பதிந்து ஒரு சித்திரத்தை வரைந்திருந்தது கண்ணில் பட்டது. நெருங்கி வரும் கருத்த வெளவால் போல் இருந்தது அது.

விசாலாட்சி வாசல் கதவைத் திறந்தாள். கொளுத்திப் பிடித்த தீப்பந்தமும் கையுமாக யாராரோ நின்று கொண்டிருந்தார்கள். பின்னால் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து உடம்பு முழுக்கப் போத்தி யாரையோ இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் அம்பல மேல்சாந்திக்காரன் மகன் நாராயணன் எம்ப்ராந்திரி.

இறக்கி வைத்த கட்டிலில் சிநேகாம்பாளின் தகப்பனார். விசாலாட்சிக்குக் கொழுந்தன் கிட்டாவய்யனின் மாமனார்.

விசாலாட்சி போட்ட சத்தத்தில் விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்தான் குப்புசாமி அய்யன்.

வயசனுக்கு உடம்பில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட நார்க்கட்டில் பக்கம் குனிந்து அவர் நாடியைப் பிடித்துப் பார்த்தான் அவன்.

அவருக்கு ஒண்ணும் ஆகலே. வெடி வழிபாட்டுக்காரனுக்குத் தான் காலிலே பருக்கு. விரலைக் காணோம்.

தூக்கி வந்த ஒருத்தன் சொன்னான்.

இவர் வீட்டு மச்சில் தானே அடைந்து கிடக்கப்பட்டவர் ? கொஞ்சம் மிதந்து கொண்டு போய்த் தோட்டத்தில் மாமரச் சுவட்டிலோ வேப்ப மரத்தை ஒட்டியோ மூத்திரம் ஒழித்துவிட்டு மேலே போவார். போன சனியாழ்ச்சைக்கே இவரை ஆலப்பாட்டில் விட்டு வரவேணும் என்று தம்பி கிட்டாவய்யனிடம் சொல்லி வைத்திருந்தான் குப்புசாமி அய்யன்.

இல்லே அண்ணா. பிஷாரடி வைத்தியர் வந்து பார்த்து, பலகீனம் காரணமாகத்தான் இவர் இப்படிக் கோழியிறக்கை போல மிதக்கிறார் என்று சொல்லி கால் வீசை குளிகை கொடுத்துப் போனார். காலிலும் உச்சந்தலையிலும் புரட்டிக் கொள்ளப் பிண்டத் தைலம், குங்கிலிய நெய் எல்லாம் கூட உண்டு. துரைத்தனப் பணமாக ரெண்டு ரூபாய் வாங்கிப் போய்விட்டார். ஒரு பத்து நாளில் பூரண சுவஸ்தமாகி விடுமாம்.

கிட்டாவய்யன் கையில் பிண்டதைலமோ, சிநேகாம்பாளுக்கு எண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டியதோ வாசனை யடிக்கச் சொன்னான் அப்போது.

பகவதியைப் பெண்ணு பார்க்க பாண்டிச் சீமையிலேருந்து பெரிய மனுஷா எல்லாம் வரப் போறா. இவர் இப்படி ஏடாகூடமாப் பறந்து சங்கடப் படுத்திடப் போறார். அப்புறம், தோட்டப் பக்கமே போகமுடியலேடா கிட்டா. மாமரச் சுவடோ, தென்னைமரச் சுவடோ இல்லே வேம்போ எல்லா இடத்திலேயும் மூத்திர வாடை. உன் அகத்துக்காரியும், காமாட்சியும் விசாலியும் பொழுது முழுக்கக் கிணத்துலே வெள்ளம் கோரி வாரி அடிச்சும் போகாத வாடை.

பிஷாரடி வைத்தியர் கிட்டே கேட்டு அதுக்கும் குளிகை வாங்கிடலாம் அண்ணா. அப்புறம் குடம் குடமாக் கொட்டினாலும் வாடையே வராது.

கிட்டாவய்யனை சிநேகாம்பாள் சொக்குப்பொடி போட்டதில் ஆலப்பாட்டு வயசன் மாமனாரின் மூத்திர வாடை அவனுக்கு நாசியில் ஏறவில்லை என்பது புரிந்தது குப்புசாமி அய்யனுக்கு. விசாலாட்சிக்குத் தகப்பனார் காலமாகாமல் இருந்து பறக்க ஆரம்பித்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும்.

ஆனாலும், கிட்டாவய்யனுக்கு வாய்த்த மைத்துனர்கள் குப்புசாமி அய்யனின் மைத்துனர்கள் போல் இல்லை. நாலு தடவை ஆளனுப்பிச் சொல்லிவிட்டும், வயசனை வந்து கூட்டிப் போக அவர்களுக்கு சமயம் வாய்க்காமல் ஊர் முழுக்கப் பில்லி சூனியம் ஏவலை எடுத்துக் காசு பண்ணுவதிலேயே மும்முரமாக இருந்தார்கள் அவர்கள்.

வயசர் பாவம். இருந்துட்டுப் போகட்டும். சாப்பாடு கொடுத்து, குளிகையும் கொடுத்து மச்சுக் கதவைச் சார்த்தி வைத்தால் அவர் பாட்டுக்குத் தூங்கி விடுவார். பக்கத்தில் வேண்டுமானால் ஒரு மூத்திரச் சட்டியைக் கட்டிலுக்கு அடியே வைத்து விடலாம்.

விசாலாட்சி சொன்னபோது சிநேகாம்பாள் அவள் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

மன்னி, நீங்க க்ஷேத்ரத்திலே தேவி மாதிரி. பகவதியைப் பொண்ணு பார்க்க வரும்போது என் தோப்பனாராலே எந்தத் தடசமும் இருக்காது. நானும் இவரும் அதுக்குப் பொறுப்பு.

சிநேகாம்பாள் சொன்னது போலவே மணிக்கூறுக்கு ஒரு தடவை கிட்டாவய்யன் மச்சுக் கதவைத் திறந்துபோய் வயசனைக் கையைப் பிடித்து நிறுத்தி முன்னால் மண்சட்டியை வைத்து, படுக்கை நனைக்கும் குழந்தையை நல்ல தூக்கத்தில் அமிழ்கிறதுக்கு முன் எழுப்பிச் சுமந்து வாசலுக்கு வந்து நீர் கழிக்க வைக்கிற தகப்பன் போல் சிரத்தையாகச் செயல்பட்டான்.

கிழவர் கீழேயோ தோட்டத்துக்கோ இறங்கவில்லைதான். ஆனாலும் பிஷாரடி வைத்தியர் சொன்ன விகிதத்துக்கு மேலே அதிகமாகவே குளிகைகளைக் கிட்டாவய்யனும் சிநேகாம்பாளும் அவருக்குக் கழிக்கக் கொடுத்ததாலோ என்னமோ அவர் வழக்கத்துக்கு விரோதமாக வெளிப்புறமாகச் சாடி இறங்கிப் போய்விட்டிருந்தார். அது எப்போது நடந்தது என்று குப்புசாமி அய்யனுக்குப் புரிபடவில்லை.

வயசனைக் கட்டிலை விட்டு இறக்கிக் கூடத்தில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவர் அப்போதும் கண் திறக்கவில்லை. மேலே மூடி இருந்த அழுக்கு வஸ்திரத்தை எடுக்கப் போனான் குப்புசாமி அய்யன்.

அய்யோ அதொண்ணும் வேணாம். வயசன் முழு நக்னனாக்கும்.

அம்பல மேல்சாந்திக்காரன் மகன் நாராயணன் சொன்னான்.

குப்புசாமி அய்யன் வேகமாக உள்ளே போய் ஒரு உத்தரியத்தை எடுத்து வந்து, அழுக்குத் துணியை விலக்கி விட்டு வயசன் அரையில் மூட, விசாலாட்சி சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். வாரணமாயிரம் பாடிய பழுத்த சுமங்கலிக் கிழவி தலை சாய்த்து உட்கார்ந்திருந்த இடம் அது.

அவளுக்கும் அங்கே ஒரு வெளவால் தெரிந்தது. நீ அகத்துக்காரனை அரையில் தடவறபோது இங்கே என்ன பெகளம் ? நான் மிச்சமும் பார்க்கணும்னு எம்புட்டு ஆசையா இருந்தேன் தெரியுமா என்று கேட்டது அது.

சுமங்கலிக் கிழவியோடு வந்தியேன்னு சும்மா விடறேன். ஒழிஞ்சு போ நாறச் சனியனே.

விசாலாட்சி தலையைத் திருப்பிக் கொண்டாள்.

வெடி வழிபாட்டுக்காரனுக்கு என்ன ஆச்சு ?

குப்புசாமி அய்யன் நாராயணன் எம்பிராந்தரியைக் கேட்டான்.

அதை ஏன் கேக்கறீர் ? இவர் தரையிலே கால் பாவாம மிதந்த படிக்குத் தெருவோட போனாரா. வீட்டு வாசல்லே உக்காந்திருந்த பெண்டுகள் எல்லாம் பிரேத உபாதை பிடிச்ச யாரையோ ஷேத்திரத்துக்கு வேறே யாரோ மந்திர உச்சாடனத்துலே செலுத்திண்டு இருக்கா. குறுக்கே போக வேண்டாம்னு விலகிண்டு வீட்டுக்குள்ளே ஓடிப் போனா. தெருவில் சப்பரம் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வித்தைக்காரன்னு நினைச்சு கூடவே கூச்சலும் கும்மாளமுமா ஓடறபோது பெரியவா பிடிச்சு இழுத்து விளையாடப் போகச் சொன்னா. இவர் க்ஷேத்ரத்துக்குப் பக்கமாப் போனபோது பலமா ஒரு காற்று.

அப்புறம் ?

விசாலாட்சி கேட்டாள்.

எல்லோரும் சொல்ல ஆரம்பித்ததால் சப்தம் குழம்பிப் போன சூழ்நிலையில் குப்புசாமி அய்யனுக்குப் புலப்பட்டது இதுதான்.

காற்றில் வயசன் எவ்வி உயரே உயரே பறந்தான். அப்போது அவன் இடுப்பு முண்டும், உள்ளே தரித்த கெளபீனமும் விடை வாங்கிப் போய் அம்பலத்துக்கு அடுத்து எங்கேயோ போய் விழுந்து விட்டது.

நக்னமான வயசன் கோவில் கொடிமரப் பக்கம் இறங்கி அற்ப சங்கையைப் பறந்தபடி தீர்த்துக் கொண்டபோது, மேல்சாந்தி அலறிக் கொண்டே ஓடி வந்து கோவிலை அடைத்துப் பூட்டிவிட்டு, தீட்டு நேர்ந்ததற்குப் பரிகாரம் என்ன என்று பிரச்னம் வைக்கக் கிளம்பிப் போனார். வயசனை அவர் எதுவும் திட்டவோ அடிக்கவோ செய்யவில்லை.

அவனுக்குள் புகுந்த பிசாசு ஏதோ இந்த மாதிரி விஷமம் செய்ய வைப்பதாகப் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னபோது கோவில் தரிசனத்துக்கு வந்த பிஷாரடி வைத்தியர் இது பலகீனத்தால் ஏற்பட்டதே தவிர வேறு ஒரு சுக்கும் இல்லை என்றார். தருக்கமும் விஞ்ஞானமுமே உலகை இனி உய்விக்கும் என்று அவர் மூக்கில் புகுந்த கொதுகை எடுத்து விட்டுக் கொண்டு அறிவித்தபோது, மேல்சாந்தி பேய், பிசாசு, பூதம், துர் ஆவிகள் பற்றி ஆதியோடந்தமாக எடுத்துத்தோதத் தொடங்கினார். ஏகப்பட்ட கிரந்தங்களையும் அவற்றில் இடம்பெற்ற சூத்ரங்களையும், ஸ்லோகங்களையும் இதற்கு ஆதாரமாகக் காட்டினார் அவர்.

கூடியிருந்த எல்லோரும் இந்த வாதப் பிரதிவாதங்களில் மூழ்கி இருந்தபோது, வயசன் திரும்பப் பறந்து போய், அம்பலத்தில் வெடி வழிபாடு செய்யும் இடத்தில் மிதந்தான். அங்கே வழிபாடுக்காகக் கொளுத்திய வெடி வெடித்த பெருஞ்சத்தத்தில் நித்திரை கலைந்து நேராக அவன் தரையில் விழுந்தது வெடி வைப்புக்காரன் மேல்.

கையில் எடுத்த வெடியைக் கொளுத்திக் கொண்டிருக்கும் போதே, ஆகாயத்திலிருந்து மூத்திர வாடையோடு ஒரு நக்னமான வயசன் தன் மேல் விழுந்தது கண்டு திடுக்கிட்ட வெடிக்காரன் வேறு பக்கமாக உருள, கையில் எடுத்திருந்த வெடி வெடித்து அவனுக்குக் காயம். காலில் ஒரு சுண்டுவிரல் போன இடம் தெரியவில்லை. எல்லோரும் இருட்டில் அதைத் தேடிக் கொண்டிருந்த போது, பிஷாரடி வைத்தியர் சொன்னபடி வயசனைக் கட்டிலில் கிடத்தினார்கள். இங்கே தூக்கிக் கொண்டு வரும்போதே அவன் திரும்பத் தூங்கி விட்டான்.

வெடிக்காரன் கால் சுவஸ்தமாக ஏற்படும் செலவு முழுக்கவும் கிட்டாவய்யன் தலையில் விழும் என்று குப்புசாமி அய்யனுக்குப் பட்டது.

வைத்தியர் சொல்வது போல் இது பலகீனம் காரணமாக ஏற்பட்டது தான். என் தகப்பனார் நினைப்பது போல் பிரேத உபாதை இல்லை. இந்த பரசுராம பூமியில் எப்போது தான் எல்லோருக்கும் உண்மையான ஞானம் வாய்க்குமோ தெரியலியே.

சலித்துக் கொண்டே நாராயணன் எம்பிராந்திரியும் அவனுடைய கூட்டுக்காரர்களும் இறங்கிப் போனபிறகு கிழவன் வேட்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

‘வீட்டோட வச்சுக் கொளுத்தியாச்சு, குப்புசாமி ‘

அவன் குரல் தெளிவாக இருந்தது அப்போது.

எடோ குப்புசாமி. உக்கார்ந்தே தூங்கறியா என்ன ? நீயும் வயசன் மாதிரி பறந்து என் பரம்பில் மூத்ரம் ஒழிக்கப் போறே.

சங்குண்ணி விலாவில் குத்தியபோது குப்புசாமி கண்ணைத் திறந்து பார்த்தான்.

யார் வீட்டை யார் கொளுத்தியிருப்பார்கள் ? அவனுக்கு இன்னும் புரியவில்லை.

வயசனிடம் கேட்கலாம் என்றால் அவனுடைய பிள்ளைகள் முந்தாநாள் வந்து அவனை ஆலப்பாட்டுக்குக் காளைவண்டியில் கூட்டிப் போய்விட்டார்கள். அவன் அப்போது பூரண சுகம் அடைந்து இருந்தான். கால் தரையில் பட வீட்டுக்குள் நடந்து திரிந்தான்.

ஆனாலும் மாமரச் சுவட்டில் குத்த வைப்பதை ஏனோ அவன் நிறுத்தவே இல்லை.

(தொடரும்)

eramurukan@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts