அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

இரா முருகன்


25

ராஜா புகை வாடை மூக்கில் ஆழமாக ஏறி, இருமலில் நித்திரை கலைந்து எழுந்தார்.

எங்கோ எதுவோ பற்றி எரிகிறது. இல்லை யாரையோ யாரோ இலுப்பெண்ெணைய் ஊற்றிச் சாவகாசமாக எரித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொய்யா மரம், கொல்லைச் செங்கல், மச்சில் சார்பு வைத்துச் சரித்து அடுக்கிய ஓடு, துளசிச் செடி, அசுவினி உதிரும் கொடி, இடுப்பிலிருந்து விழுத்துப் போட்ட துணி, மீந்து போன சாப்பாடு, கழித்த மலம், சால் கட்டித் தேங்கிய மூத்திரம் என்று சகலமானதும் எரிகிறது.

புஸ்தி மீசைக் கிழவனை எரித்துக் கொண்டிருக்கிறார்களா ? அவன் அந்தப் பாப்பாத்தி மேல் கை வைத்து ஏடாகூடமாகி, இவன் உடம்பு மண்ணுக்கடியில் இருக்கும் வரைக்கும் இவனுக்குக் குறி விறைத்துக் கொண்டுதான் கிடக்கும். கொளுத்திப் போடு என்று முன்னோர்கள் தாக்கீது பிறப்பிக்க, அய்யர் சரியென்று சம்மதித்து நடவடிக்கை எடுக்க, மைத்துனன் மொட்டையனும் கிழவனின் வைப்பாட்டியும் பங்காளி வாந்திபேதிக் கிழவனும் ஆளுக்கொரு பக்கம் அவனைத் தோண்டி எடுத்துக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்களா ?

ராஜாவுக்கு ஒரு வினாடி வந்த யோசனையை சீபோ என்று புறந்தள்ளினார். இது அரண்மனை. அவர் சகல கெம்பீரத்தோடும் ராஜாங்கம் நடத்தும் இடம். புஸ்தி மீசைக் கிழவனைப் புதைத்தது அரண்மனைச் சிறுவயல் பக்கம், அதிகாலை நேரத்தில் குத்த வைக்கிற இடத்துக்குப் பக்கத்து இடுகாடு. அங்கே அய்யர் என்னத்துக்குப் போக வேண்டும் ? அவனை எடுத்து வந்து இங்கே அரண்மனைப் பக்கம் போட்டு வைத்து ஏன் நடு ராத்திரியில் கொளுத்த வேண்டும் ?

ராஜா மெல்லச் சாளரப் பக்கம் நடந்தார். அந்தப் பக்கம் இருந்து தான் புகையும் நெருப்பும் தெரிகிறது. யார் யாரோ பேய்கள் போல அங்கேயும் இங்கேயும் ஓடித் தீயைத் தணிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது நிழலும் வெளிச்சமுமாக மாறி மாறிக் கண்ணில் படுகிறது.

புகையிலைக்கடை அய்யர் வீடுதான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வேறு விஷயம் இல்லை. என்னமோ விபத்து. அசம்பாவிதம் போல.

நாளை முதல் பழுக்காத் தட்டு சங்கீதம் கேட்காது என்பது கொஞ்சம் வருத்தமானது தான். ராஜா என்ன செய்ய முடியும் அதுக்காக ?

ராஜா சமாதானமாகி, படுக்கைக்கு ஓரம் வைத்த செப்புப் பாத்திரத்தில் ஒரு முறை சிறுநீர் கழித்தார். ராத்திரியில் எழுந்து கொல்லைப் பக்கம் நடக்க முடியாததால் இந்த ஏற்பாடு. ராப்பகலாகக் காவல் நிற்கச் சிப்பாய்கள் இருந்த போது கொல்லைக்கு நடக்கச் சாத்தியமாக இருந்தது. ராத்திரி எத்தனை பொழுதுக்கு எழுந்து சயன அறைக்கு வெளியே வந்தாலும் தூங்காமல் நிற்கிறவர்கள். ராஜா தலை தெரிந்ததும் பெரிய தீப்பந்தத்தைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு முன்னால் நடப்பார்கள்.

துரைத்தனம் கொடுக்கும் மானியத்தில் படை பட்டாளமாகச் சிப்பாய்களை வைத்துக் கொள்ள நிதி நிலைமை இடம் கொடுக்காத காரணத்தால் ராஜா அவர்களை வேண்டாம் என்று சொல்லி நிறுத்திப் போட்டார். கடைத் தெருவில் பலாச்சுளையும், ராத்திரி முழுக்க நிற்க வைக்கும் அதி வீரிய மயில் எண்ணெயும் விற்கிற அவர்களைத் தெருவில் எப்போது பார்த்தாலும் ராஜாவுக்கு மனம் இளகி விடும். மூத்திரம் முட்டிக் கொண்டு வரும். ஒரு காசு, இரண்டு காசு கொடுப்பது வழக்கம்.

அதிலும் மயிலெண்ணெய் விற்கிறவன் தெருவில் செத்த மயில்களைப் பாடம் பண்ணிப் பரப்பி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். இவரைப் பார்த்ததும் வேட்டியைத் திரைத்துக் கெளபீனம் தெரிய ஒரு முறை விரித்துக் கட்டிக் கொண்டு வேண்டா வெறுப்பாகவோ என்னமோ எழுந்து நின்று கும்பிடவும் தவறுவது இல்லை. கொட்டகுடித் தாசிக்கு அவன் சிநேகிதத்துக்கு ஆள் பிடிப்பதாக காரியஸ்தன் ஒரு தடவை சொன்னான்.

அவனும் அவன் கோவணமும் நாசமாகி இந்த நெருப்பில் எரிந்து போகட்டும்.

மூத்திரச் சட்டியை ஓலைத் தடுக்கால் மூடி விட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டார் ராஜா. பக்கத்தில் ராணி வாயைத் திறந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். ராத்திரிப் பூரா எரியும் திரி நனைத்த விளக்கு வெளிச்சத்தில் அவள் மீசை இல்லாத மொட்டையனுக்குப் பெண் வேஷம் கட்டினது போல் தெரிந்தாள். எதற்காக இப்படி அலறுகிறதுக்கு ஏற்பாடு செய்வது போல் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறாள் ?

வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.

ராஜா ஒரு சிலிர்ப்போடு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.

ராணி அலறினாளே, கொலைச் சிந்து பாடிக் கொண்டிருந்தபோது. அந்தப் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தி குரல் வீறிடுகையில் ஒரு நிமிஷம் சூழ்ந்த அமானுஷ்யம் கூடம் முழுக்கச் சாவை அப்பிப் போனது அப்போது.

கொலைச் சிந்துக்காரர்கள் சட்டென்று கோடாங்கி அடித்து அம்மன் மகிமையை உச்சக் குரலில் பாட ஆரம்பிக்க, காது வளர்த்த வைப்பாட்டியும் மற்றவர்களும் என்ன எது என்று புரியாமல் கற்பூரம் கொளுத்தி ராணிக்கு முன்னால் தீபாராதனையாகச் சுற்ற, அவள் மூர்ச்சையாகிச் சாய்ந்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜா எச்சில் கையோடு ஓடி வருவதற்குள் மைத்துனன் வீட்டுக்காரியான புலியடிதம்மம் பெண்பிள்ளையும் சேடிப்பெண்ணும் அவளை அப்படியே தலையிலும் காலிலும் பிடித்துத் தூக்கி வீட்டுக் கூடத்துக்குக் கொண்டு வந்து புஸ்தி மீசைக் கிழவன் கிடந்த இடத்துக்குப் பக்கமாகப் படுக்க வைத்தார்கள்.

ராஜா இடது கையால் தென்னோலை விசிறியை வாங்கிக் குனிந்து தரையில் உட்கார முயற்சி செய்து முடியாமல் போக அந்த விசிறியால் தனக்குத் தானே விசிறிக் கொண்டு நின்றிருந்தார்.

சாவு வீடு இல்லியா ? ஏதோ காத்து கருப்போ, தெய்வமோ கடந்து போயிருக்கு போலே இருக்கு. மருதையன் கருமாதி வரைக்கும் இப்படி நடமாட்டம் இருந்துக்கிட்டுத் தான் இருக்கும். சுத்த பத்தமா இருக்கணும்ப்பூ.

பங்காளிக் கிழவன் சொல்ல, ராஜாவின் மைத்துனர்கள் அதேதான் என்று உடனே ஆமோதித்தார்கள். வயசு காரணமாக அந்தப் பங்காளிக் கிழவன் இந்த இடத்தில் நிர்வாகப் பதவியைத் தன்னிடமிருந்து தட்டிப் பறித்ததை ராஜாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மாப்புளத் தொரே. கை காய நிக்கறீகளே.

புஸ்தி மீசையான் வைப்பாட்டி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள்.

இன்னும் கொஞ்சம் சோறும் கறியும் தயிரும் கிடாரங்காய் ஊறுகாயுமாக ஆகாரம் பண்ண வேண்டும் என்று ராஜாவுக்கு வயிறு சொன்னது.

என்னத்த. இனிமேலே சோத்துலே கையை நனைக்க முடியாது. மரியாதை இல்ல. இவ வேறே எக்குத்தப்பா சத்தம் போட்டு விழுந்து கிடக்கா.

ராணி அன்றைக்கு அரண்மனைச் சிறுவயல் வீட்டுக் கூடத்தில் அப்படியே தொடர்ந்து நித்திரை போய்விட்டாள். கொலைச் சிந்து பாடகர்களை வீட்டுக்கு வெளியே இட்டுப்போய்க் குமருகள் ரிஷிபத்தினி கள்ளப் புருசனைக் கூந்தலில் ஒளித்து வைத்துப் பேனாக எடுத்து வந்த கதையை சத்தம் தாழ்த்திச் சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜாவுக்கு அதில் கலந்து கொள்ள இஷ்டம் என்றாலும் கால்மாடு தலைமாடு முழுக்க முன்னோர் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பாப்பாத்தியம்மா நல்லவளோ கெட்டவளோ. நம்ம வீட்டுக் கொழந்தைக்கு புத்தி நிதானம் வேணும்.

எந்தக் குழந்தைக்கு என்று புரியாமல் கேட்டார் ராஜா.

அதான் ‘பா உன்னோட வீட்டுக்காரி.

அவ என்ன செய்யணும் ?

ஒண்ணும் செய்யாம இருந்தாலே போதும். அதது தன் பாட்டுக்கு நடக்கும்.

குளிக்க வேணாமா ?

வீட்டுக்குள்ளாற குளிக்கச் சொல்லேன்.

சரி சொல்லறேன். கொத்தன் சொல்லுறான் ஸ்நான அறை கட்டி நிறுத்தப் பத்து துரைத்தன ரூபா ஆகுமுன்னு. நான் பணத்துக்கு எங்கே போவேன் ?

ராஜா பஞ்சப் பாட்டு பாட, அவர்கள் ஏதோ பேசுவதற்குள் புஸ்தி மீசைக் கிழவன் சாராயம், சுருட்டு எல்லாம் வேணும் என்று ராஜா கையைப் பிடித்து எழுப்பிப் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான்.

இங்கே தொரைங்க எல்லாம் நாசிகா சூரணத்தோட அலையறானுங்க. அதுவும் ஏற்பாடு செய் கருமாதிக்கு.

துரை மாதிரி உத்தரவு போட்டான்.

அப்ப எனக்கு வாய் உபச்சாரம் செய்யுடா வக்காளி என்றார் கோபத்தோடு ராஜா.

கிழவன் நிறுத்தாமல் வைதான். இவனோட இளவு கொண்டாடறதுக்கே எங்க நேரம் எல்லாம் போயிடுது. நீ வேறே எதுக்கு அவனை உசுப்பி விடறே ?

முன்னோர்கள் ராஜாவைத் தான் கோபித்துக் கொண்டார்கள். எது நடக்கணுமோ அது நடக்கட்டும். நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும். அம்புட்டுத்தான். மருதையா, என்ன நான் சொல்றது ?

குதிரை மாதிரி முகத்தோடு ஒரு முன்னோன் தலையாட்டிக் கொண்டு சொல்லிவிட்டு, புஸ்தி மீசைக் கிழவனைத் தரதர என்று கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போக மற்றவர்களும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு புகையாகக் கலைந்து போனார்கள்.

ராஜாவுக்கு அதெல்லாம் இந்த ராத்திரியில் நினைவு வர, அயர்ந்து தூங்கும் ராணியைப் பார்த்தார்.

இவள் வைத்த தீயா இது ?

தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பித் தீ வைத்தாயோடி என்று விசாரிப்பது ராஜ லட்சணம் இல்லை. குறைந்த பட்சம் புருஷ லட்சணம் கூட இல்லை என்று பட்டது.

மெல்ல எழுந்து நித்திரை பிடிக்காமல் வெளியே வந்தார்.

அவள் வைத்ததாகத் தான் இருக்கட்டுமே. குளிக்கும்போது குல ஸ்திரி மேல் கண் போடுவது நீசமான விசயம் இல்லையோ. அதனால் தான் வீட்ைடைப் பொசுக்கிப் போட்டது. தர்மம் என்று ஒன்று இருக்குதே. இன்றைக்கு இப்படி எரியாவிட்டால் நாளைக்கு வேறே மாதிரி யாராவது சபித்து எல்லாம் பஸ்பமாகிப் போயிருக்கும்.

ஊரில், அக்கம் பக்கத்தில் எத்தனை ஊருணி, ஏரி, குளம் இருக்கிறது ? அங்கெல்லாம் எத்தனை புஷ்பிணியான பெண்கள், கர்ப்ப ஸ்திரிகள், வீட்டு விலக்காகி மூன்றாவது நாளானவர்கள், இளம் வயதுக் கைம்பெண்டுகள் எல்லோரும் குளிக்கிறார்கள். தண்ணீர் மொண்டு வருகிறார்கள். இந்த அடுத்த வீட்டுப் பழுக்காத் தட்டு சங்கீதப் பயல்கள் ராணியை எட்டிப் பார்க்காத போது, சங்கீதம் கேட்காத போது காலாற நடந்து போய் அதையெல்லாம் பார்த்திருப்பார்கள்.

ஊருணி எல்லாம் வெக்கையின் சூட்டில் வரண்டு கிடப்பதால் அங்கே யாரும் இப்போது குளிப்பதில்லை என்று நினைவு வந்தது.

அரண்மனைக்கு வெளியே நடந்து அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குடிபடைகளை என்ன சமாச்சாரம் என்று விசாரிக்கலாம் என்றும் ராஜாவுக்கு அடுத்து ஒரு யோசனை வந்தது.

உம்ம சோலி மயித்தைப் பாத்துட்டுப் போம் என்று யாராவது இருட்டைச் சாக்காக வைத்து வார்த்தை விட்டுவிடக் கூடும். அவருக்கு என்னமோ அந்தப் பழைய ராக்காவல் சிப்பாய் நினைவில் முளைத்தான். கொட்டகுடித் தேவடியாளுக்கு சிநேகிதம் பிடிக்க ஆள் கிடைக்காமல், முழங்கையில் மயில் எண்ணெயைப் பூசிக் கொண்டு இங்கே எங்கேயாவது புகையிலையைக் குதப்பிக் கொண்டு நிற்பான். அவன் நிச்சயம் சொல்வான்.

அய்யர் வீடு வடமேற்கு திசையில் நீண்டு போகிற கல் பாவிய வீதியில் தானே இருக்கிறது ?

அங்கே போய் இந்த ராத்திரியில் கதவைத் தட்டுவது உசிதமானதில்லை. ராஜா என்ற மரியாதையைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படிப் போனாலும் என்ன விசாரிப்பது ?

அவர் தான் அடுத்த பெளர்ணமியன்றைக்கு யந்திரம் நிர்மாணித்துப் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தியம்மாளை அவர்கள் வீட்டோடு அடங்கி இருக்க வழி செய்து தருவதாகச் சொன்னாரே.

உங்க சாதிக்காரங்க மேலே செய்வினை செய்யணும்னு இல்லே சாமி.

ராஜா வராகனைக் கொடுத்தபடி சொன்னபோது, அய்யர் அப்படியொன்றும் இல்லையென்றார்.

அவாள்ளாம் ஸ்மார்த்தா. நாங்க வைஷ்ணவா. அது இல்லாட்டாலும் இது தொழில். அதோட ஜாதியைப் போட்டுக் குழப்பிக்கக் கூடாதுன்னு இருக்கா பெரியவா எல்லாம்.

அய்யர் சொன்னபோது அவர் தொழிலிலும் நாணயத்திலும் அவர் வீட்டு முன்னோர் மேலும் மிகுந்த மரியாதை ஏற்பட்டிருந்தது ராஜாவுக்கு. அய்யருடைய முன்னோர்கள் யாரும் சாராயமோ, நாசிகா சூரணமோ எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தோன்ற அவர் மேல் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

அய்யர் வடமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக, தேவதைகளுக்குப் ப்ரீதியான செய்யுளை எழுதி அதை யந்திரத்தில் தேவதைகள் நிற்க இடம் விட்டது போக மிச்ச இடத்தில் பக்கத்துக்கு ஒன்றாகப் பதித்து, அந்த யந்திரத்தை மேற்குப் பார்த்து, அதாவது புகையிலைக் கடைப் பார்ப்பான் கிரஹம் இருக்கிற திசை நோக்கி நிறுத்தினால், ராணிக்கு பிரேத அவஸ்தை எல்லாம் ஒழிந்து சொஸ்தமாகி விடும் என்று சொல்லிப் போனார்.

வடமொழி ஸ்லோகத்தைக் காரைக்குடியில் ஒரு வித்துவானிடம் எழுதி வாங்கிக் கொள்வதாகச் சொன்ன அவர், தமிழில் அது கடைசி அடியில் பிறப்பு என்றபடி முடியும் இயற்சீர் வெண்பாவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். தளை தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், பிழையான வெண்பாவை யந்திரத்தில் ஏற்றினால் தேவதைகள் சபித்துப் போடுவார்கள் என்றும் அது பின்னும் கஷ்டத்தில் கொண்டு விடும் என்றும் கூடச் சொல்லியிருந்தார் அவர்.

வெண்பா இயற்றுவதில் கொட்டகுடித் தாசியை மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது என்ற அவர் தானே ஆளனனுப்பித் தன் அகத்துக்கு அவளை வரவழைத்து இயற்றி வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்.

அவள் வேண்டுமானால் அரண்மனையில் சவுகரியமாக ஒரு பொழுது இருந்து அதைச் செய்யட்டுமே ?

ராஜாவுக்கும் அவளை ஏதாவது ஒரு சாக்கு வைத்து அரண்மனைக்கு அழைத்துப் பார்க்க வேண்டும் போல் இருந்தது உண்மைதான். ஆனால் ராணி பக்கத்தில் இருக்கும் வரை அதெல்லாம் நடக்காது. அவள் பகலில் தூங்கும் போது கிடைக்கும் சொற்பப் பொழுதில் கொட்டகுடியாளைக் கூப்பிடலாம். ஆனால் ஜாக்கிரதையாக எழுத்தெண்ணிப் பரிசோதித்துப் பிறப்பு என்று முடியும்படிக்கு அவள் எழுதித் தருவதற்குள் ராணி நித்திரை கலைந்து எழுந்து விடுவாள். இடைப்பட்ட பொழுதில் சேடிப் பெண்ணுக்கு வேண்டுமானால் காசு கொடுத்துக் கால் பிடித்து விடலாம். அவள் பாட்டு எல்லாம் இயற்ற மாட்டாள்.

அய்யருடைய யந்திரத்துக்குத் தேவையே இனிமேல் இருக்காது என்பது போல் புகையிலைக்கடை அய்யர் வீடு பற்றி எரிந்து அடங்கிக் கொண்டிருந்தது. ஒரு பெருஞ் சத்தத்தோடு மர உத்தரங்கள் தீயோடு கீழே விழ, சுற்றி நின்றவர்கள் கூப்பாடு இட்டபடி ஓடினார்கள்.

அவர்கள் அரண்மனைப் பக்கம் வருவதற்குள் ராஜா வேகமாக உள்ளே நடந்தார்.

ஜோசியக்கார அய்யருக்கு ஒரு வராகன் வீணாகத் தத்தம் கொடுத்திருக்க வேண்டாம் என்று அவருக்குப் பட்டது.

(தொடரும்)

eramurukan@yahoo.com

Series Navigation

author

இரா.முருகன்

இரா.முருகன்

Similar Posts