ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ந்தேதி காலை 8 மணி..

ஜெயத்தையும், பார்வதியையும் தவிர மற்றவர்கள் செங்கற் பொடி தேய்த்து பல் துலக்கிவிட்டு டா. குடித்தாயிற்று. பார்வதியை ஜெயம் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தாள். ‘பச்சை தண்ணீர்கூட பல்லில் படக் கூடாது ‘ எனப் பிடிவாதமாக இருந்துவிட்டாள். பார்வதிக்காக

ஜெயம் பட்டினிக் கிடப்பதைப் பார்த்த அவள் புருஷன் தணிகாசலம், தனியாக அழைத்து போய் அவளுக்கென டாக்கடையில் வாங்கிவந்திருந்த இட்டலிப் பொட்டலதை எடுத்துப் பிரிக்க அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. வாங்கி அதனை அங்கே சுற்றித் திரிந்த நாய்க்கு எறிந்தாள்.

‘ போய் ஆக வேண்டியதைப் பாரு.. டாக்டரு என்ன சொல்றாருன்னு கேளு. பலகாரம் சாப்பிடற நேரமாயிது. . ஒரு வாய் வெத்திலையிருந்தா கொடு. காலையிலிருந்து வாய் நம நமங்கிது ‘ என்று சொன்னவள், புருஷன் கொடுத்த வெற்றிலையைக் கொண்டுபோய் பார்வதியிடம் கொடுத்தாள்;

‘அக்கா வெத்திலை போடு, பசி எடுக்காது ‘ என்று சொன்ன ஜெயத்தின் மனதைக் கண்டு நெகிழ்துபோன பார்வதி,

‘வேண்டாம் நீயே போட்டுக்க.. என் தலையெழுத்து நான் கஷ்டப் படறேன். உனக்கென்ன வந்தது. அண்ணங்கூட போயிட்டு ஒரு கிளாஸ் டாத் தண்ணியாவது குடிச்சுட்டு வா ‘ என்று கம்மிய குரலில் சொன்னபோது, ஜெயத்தினால் துயரத்தினை அடக்க முடியவில்லை. வாயில் முந்தானையை வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அங்கே ஒரு சின்னக் கூட்டமே கூடிவிட்டதைப் பார்த்து, ஆஸ்பத்திரி ஆள் ஒருவன் அதட்டிவிட்டுச் சென்றான்.

டாக்டரைப் பார்தத சிறிது நேரத்திற்குள் தணிகாசலம் பெண்களிடம் ஓடிவந்தான்.

‘ என்னண்ண சொல்றாங்க ? அவரை எப்பக் கொடுப்பாங்களாம் ? ‘ பார்வதிக்கு புருஷனை எப்படி அழைப்பது என்பதில் குழப்பமிருந்தது. இது வேறுமாதரியான குழப்பம்.

‘போஸ்ட்மார்ட்டம் செஞ்சிட்டாங்க. டாக்டர் ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டான். இப்பப் போயிட்டு போலீஸ்காரங்கக்கிட்டருந்து எப்.ஐ.ஆர். காப்பி வந்துச்சுனா. சர்டிபிகேட்டையும், பொணத்தையும் கொண்டுபோயிடலாங்கிறான். ‘

‘அய்யய்யோ அப்புறம் ? ‘

‘அப்புறமென்ன அப்புறம். கொஞ்சங்கூட இரக்கமத்த பசங்க. அந்த நாய் அதை நேற்றே சொல்லியிருக்கணும். அதற்குள்ள எதற்குக் காச கொடுத்தீங்க ? பாடியைக் கொடுக்கும்போது, கொடுக்கலாமில்லை.. நாளைக்கு மறுபடியும் கேட்டுத் தொலைச்சாண்ணா என்ன பண்ணுவீங்க ? ‘

‘வாஸ்தவம் மாமா நீங்க சொல்றது. இவரு இப்படித்தான்.. எதையாவது செஞ்சிட்டு வந்து முழிப்பாரு. ‘ நாளைக்குப் பார்வதிக்குப் பதில் சொல்லவேண்டுமே என்கிற இய்ல்பான பயம் ஜெயத்திற்கு.

‘ ஜெயம் நீ சும்மாயிரு. அண்ணன் என்ன செய்வாரு. அவங்க இப்படி இருக்கும்போது நாம செஞ்சுதானெ ஆகணும். விடு. அதை பெரிசுபடுத்தாதே.. எம்மகராசனே போயிட்டாரு. இதுலதானா என் குடி முழுகிடப்போகுது ‘

ஜெயம் பார்வதியின் பதிலில் சமாதானமடைந்தாள்.

தணிகாசலம் பெரியவர் ஆறுமுகத்திடம், ‘ மாமா நீங்க இங்கேயே இருங்க. நான் ஜெயத்தையும் பார்வதியையும் அழைத்துக்கொண்டு கோட்டைமேடு ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்திடறேன் ‘. என்றான்.

காலை 10 மணி….

தணிகாசலம் கோட்டைமேட்டில் இறங்கியவுடனே, பொடிகடை கறீம்பாயைத் துணை சேர்த்துக் கொண்டான். கறீம்பாயை கோட்டைமேடு சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் தெரியும். ஸ்டேஷனுக்கு எந்த அதிகாரி வந்தாலும் கறீம்பாயை தெரிந்து கொண்டு வந்துவிடுவார்கள். சுற்றுவட்டாரத்தில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் கறீம்பாயிடம் வந்தால் விஷயம் முடிந்துவிடும். எந்தெந்த கேஸுக்கு போலீஸ்காரர்கள் எவ்வளவு எதிர்பார்பார்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆளும் கட்சிக்காரர்களாயிருந்தால் கூட பிரச்சினையென்றுவந்துவிட்டால் கறீம்பாய் இல்லாமல், ஸ்டேஷனில் கால் வைக்க முடியாது..

தணிகாசலமும் கறீம்பாயும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது கான்ஸ்டபிள் ஒருவர் தீவிரமாக பற்குத்திக் கொண்டிருந்தார். பற்றொருவர் அரதப்பழசான மேசையில் பழுப்பு ரிஜீஸ்தரில் எழுதிக் கொண்டிருந்தார். வாயுத் தொல்லையால், அடிக்கடி எழுந்து உட்கார்ந்தார்.

‘என்ன ஏட்டய்யா ரெண்டு நாளா டூட்டியிலே காணோம். அவுட் ஆப் ஸ்டேஷனா ? ‘ எதோ ஜோக் சொல்லிவிட்டவர்போல கறீம்பாய் கடகடவென்று சிரித்தார்..

‘வாங்க கறீம்பாய். வயித்துல பிராப்ளம். எது சாப்பிட்டாலும் செரிக்கமாட்டேங்குது. நெஞ்செரிச்சல் வேறு. நானும் பார்க்காத வைத்தியமில்லை ‘

‘அப்படாங்களா! சாயந்திரம் வீட்டுபக்கம் வாங்க. நான் ஒரு வைத்தியம் சொல்றேன். ஆனா மீனு, முட்டை கோழி அப்படாண்ணு எதையும் கிட்டச் சேர்க்கக் கூடாது.. இரண்டு மாதத்துக்கு ஒழுங்கா இருக்கணும். முடியுமா ? ‘

‘வேற ஏதாச்சும் பத்தியமில்லாத வைத்தியம் சொல்லுங்க பாய்.. என்னால முடியாததைச் சொல்லாதீங்க. அப்புறம் இன்ஸ்பெக்டரு ஐயா

உங்களைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டுருந்தாரு. வெரால் மீன் வேணுமாம். எங்கயாவது பக்கத்துல ஏரி குளத்துள மீன் பிடிச்சா ஏற்பாடு பண்ணுங்க. ‘

‘ஆமாய்யா பொம்பிளை முதற்கொண்டு எங்கிட்ட கேப்பீங்க. நான் சொல்றதை எதையும் செய்யமாட்டாங்க. சரி உங்க ஐயா எங்க ?. ‘

‘ ஐயா.. ‘வேணு எம்போரியம் வரைக்கும் போயிருக்காரு. வீட்டுக்கு இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் அனுப்பச் சொல்லி ஆள் அனுப்பனா, நாயுடு காசு கேட்கிறராம்.. விசாரிச்சுட்டு வரேன்னு போயிருக்காரு. என்ன சாவடி விவகாரமா ? ‘

‘ஆமாங்க ஏட்டய்யா. அவரு பொணம் திண்டிவனத்திலேயேக் கிடக்குதுங்க. இரண்டு நாளா தண்ணிவென்னியில்லாம கிடக்கோம். நீங்கதான் மனசுவெச்சு.. ‘ ஜெயம் முடிக்கவில்லை.

‘மனசென்னம்மா மனசு… பொறம்போக்குப்பசங்க, நேற்றுக் கண்டமேனிக்கு எங்களைத் திட்டினாங்களாமே ? ஐயா ரொம்ப கோவமாயிருக்காறு.. அந்தக் கிழவன் ஆறுமுகம் எங்கே ? போயிட்டு அந்த ஆளோட வாங்க. ‘..

‘இல்லைங்க நேற்று விபத்து நடந்தது காலையில. சப்-இன்ஸ்பெக்டர் ஐயா வர நேரமாயிடுத்து. அதுல ஊர் ஜனங்க, அதிலும் இளவட்டங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டாங்க. அதிலேதான் ஆறுமுக மாமா அப்படி கேட்டுட்டாரு. ‘- தணிகாசலம்

‘ அந்தக் கிழவன் கொஞ்சம் விவகாரமானா ஆளாமே.. கொஞ்சம் தட்டிவைக்கணும்ணு ஐயா சொல்லிக்கிட்டிருக்காரு. கும்பல் சேர்ந்தா நீங்க என்னவானா சொல்லப் போகுமா ? எங்களுக்கும் ஆயிரத்தெட்டு ஜோலி இருக்குய்யா. நாங்க என்ன இங்க ஆட்டிக்கிட்டா. இருக்கோம். ‘

‘ஏட்டய்யா விடுங்க. அதைப் பெரிசுப்படுத்தாதீங்க. யோவ் தணிகாசலம் கையிலே எவ்வளவு இருக்குது ?

‘ஐந்நூறுங்க ‘ தணிகாசலம் ரூபாய் நோட்டுக்களை கறீம்பாயிடம் கொடுத்தான். ‘

‘இதை நாங்கப் பின்னாடிதான் தேய்ச்சுக்கணும். நீங்களே வச்சுக்குங்க. இன்ஸ்பெக்டரு ஐயா வந்திடுவாறு. அவர்கிட்ட நேரா பேசிக்குங்க. உங்க எதிர்பாட்டி, அதான் கார்க்காரன் உங்கமேல கம்ப்ளெயிண்ட்கொடுத்திருக்கான். செத்துட்டவன் பொண்டாட்டி பேரு என்ன பார்வதியா ? அவளும் ஆறுமுகமும் சேர்ந்து அவங்க காருலவிருந்த டேப் ரிக்கார்டர திருடிட்டாங்களாம். ‘

‘ ஐயா!.. அவனுங்க வெளங்க மாட்டாங்க, நான் புருஷன பறிகொடுத்துட்டு நிக்கிறன். எம்மேல இப்படியொரு பழியா. மாரியாத்தாதான் கூலி கொடுக்கணும். ‘

‘ ஏம்மா பார்வதி. கொஞ்சம் சும்மாயிரு. ஏட்டு இந்தாங்க கூட ஒரு ஐந்நூறு. வச்சுக்குங்க. காரியத்தை முடிங்க. இன்ஸ்பெக்டர் ஐயாக் கிட்ட கறீம்பாய் சொன்னார்ணு சொல்லுங்க. எப்.ஐ.ஆர். காப்பியைக் கொடுங்க பிறகு வந்து பார்க்கிறேன். ‘

‘பாய் ஐயா கிட்ட நீங்கதான் சமாதானம் சொல்லணும். மோட்டார் ஆக்ஸிடெண்ட் கேசு. ஒழுங்கா கோர்ட்ல போட்டு கேசு ஜெயிக்கணும். இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுக்க மறந்துடாதீங்க இப்ப விட்டா அவனுங்க பிறகு எட்டி பார்க்கமாட்டானுங்க. ‘

‘ ஏட்டு நான் பொறுப்பு.. நீங்க எப்.ஐ.ஆர கொடுங்கன்னு சொல்றேன்ல்ல. கேக்கணும். சும்மா வளவளன்னு பேசாதீங்க ‘

பார்வதியையும் ஜெயத்தையும் அழைத்துக்கொண்டு தணிகாசலம் திண்டிவனத்தை அடைந்தபோது மதியம் மணி இரண்டாகியிருந்தது..

மீண்டும் அடுத்த வெள்ளிக்கு….

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts