ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சென்ற வாரத் தொடர்ச்சி….

1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந்தேதி பிற்பகல் மணி 2

விபத்து நடந்து நான்கு மணி நேரம் ஆகியிருந்தது..கொளுத்தும் வெய்யிலில், தார்ச்சாலையில் கிடந்த ராமசாமியின் உடல் கருத்து இறுகிக்கொண்டு வந்தது..விபத்துச் செய்தி பரவிய வேகத்தில், உறவினர்கள் தெரிந்தவர்களென சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து பொடிநடையாகவே ஓடிவந்தவர்கள், பொய்யாகவோ மெய்யாகவோ துக்கத்தை வெளிப்படுத்திவிட்டு, கொதிக்கும் தார்ச்சாலையில் சிறிது நேரம் கால் மாற்றி நின்று, பின்னர் நிழல் தேடி ஒதுங்கினர். சாலையின் எதிரெதிர் திசைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து, பேருந்துப் பயணிகளிடம் வேர்க்கடலை, முறுக்கு, இளநீ, சோடா வியாபாரம். ஒரு சில சிறிய வாகனங்கள் வரிசையை உடைத்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்க, பாதை ஏதேனும் கிடைக்குமா என்று முயற்சித்தது. விபத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம், அவைகளைத் துரத்திச் சென்று கல்லெறிந்தது. இந்தச் சந்தடியில் நாயொன்று ராமசாமியின் உடலருகேச் சென்று காலைத் தூக்க, ஒரு பெரியவர் வெற்றிலை எச்சிலை, உதட்டைக் குவித்து இரு விரல்களுக்கிடையில் பீச்சித் துப்பிவிட்டு, நாயின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்பி, கல்லைத் தேடினார். இரண்டொருவர் சூழ்நிலை மறந்து சிரிக்கவும் செய்தனர்.

கேசவன் கடையில் டா வியாபாரம் இறக்கைக் கட்டிப் பறந்தது. டா கேட்டவர்களுக்கு நான்கைந்து நாட்களாக விற்காமல் கிடந்த மசால்வடையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு; காசை மறக்காமல் கேட்டு வாங்கி மேசையில் போட்டான். இப்படி ஏதேனும் எதிர்பாராத காரணமிருந்தால்தான் அவன் கடையில் கூட்டத்தைப் பார்க்க முடியும்.. கேசவன் மதிப்பீட்டின்படி இன்றைக்குக் கூட்டம் அதிகம்.. – தலைப்பாகையுடனும், தலைப்பாகையில்லாமலும் – சட்டையுடனும் சட்டையில்லாமலும் – வதங்கிய உடல்களை அழுக்கேறிய சால்வைகளில் மறைத்து பொது அறிவை தினத்தந்திகளில் வளர்த்து, குத்துக் காலிட்டு உட்கார்ந்து பீடி குடிக்கும் கூட்டம் – நிறையப் பேசி குறைவாகச்ாதிக்கும் கூட்டம் – எல்லாம் தெரிந்ததாக பாவலாசெய்துக் கொண்டு எளிதாக ஏமாறும் கூட்ட.ம் – சராசரி தமிழர்க் கூட்டம். டாயைக் குடித்து முடித்து, மடியிலிருந்து ஓலை பையிலிருந்து நரம்பெடுத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, சொத்தைக் களிபாக்கினை கடைவாய்பற்களில் வைத்து கடித்து உள்ளே தள்ளி, கூடவே புகையிலைக் காம்பை சேர்த்து அடக்கிக்கொண்ட ஆனந்தக் கவுண்டர் ‘போலீஸுக்கு தகவற் போயிட்டுதா ? என்ற கேள்வியை தன் சக கிராம வாசியான ஆறுமுகச் செட்டியாரிடம் எழுப்பினார்.

‘பொன்னுகண்ணு செட்டியார் பத்து மணிக்கே, போன் போட்டு சொல்லிட்டாராம். இன்ஸ்பெக்டர் இல்லையாம். ஏதோ பந்தோபஸ்துக்கு விழுப்புரம் போயிட்டாராம்.. ஏ.எஸ்.ஐ, கள்ளச் சாராய கேஸுக்கா திண்டிவனம் கோர்ட்க்கு போயிருக்காராம்.. ஸ்டேஷனில் ரைட்டர் மட்டும்தான் இருக்காராம்.. சோம்பேரி நிர்வாகத்தினர்; சொல்லுகின்ற காரணங்கள். எப்பச் சீக்கிரம் வந்திருக்காங்க ?.. போனமாசம் இப்படித்தான் இதே இடத்துல நடந்த ஆக்ஸிடெண்டுக்கு விடிகாத்தாலதான் வந்திருக்கானுங்க. செத்தவரு நம்ம எக்ஸ். எம்.எல்.ஏ மாமனாரு. பொறுத்து பொறுத்து பார்த்த எம்.எல்.ஏ., விழுப்புரத்திலிருந்த எஸ்பியை கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட்டா வாங்கிட்டாரில்ல. ‘ -ஆறுமுக செட்டியார்.

‘யோவ் பெருசு சும்மா இரு. நீ ஏதாச்சும் சொல்லிவைக்க, அவனுங்க காதுக்கு எட்டுச்சுன்னா நம்மை கடிச்சி குதறிடுவானுங்க. அதற்குவேறத் தனியா எலும்பு போடனும் ‘ – டா கடை கேசவன்.

மாலை மணி ஐந்து…

விபத்து நடந்து ஏழுமணி நேரம் ஆகியிருந்தது. ராமசாமியின் உடல் கூட்டத்தினரின் கவனங்களில் அலட்சியப்படுத்தபட்டுக் கிடந்தது. இப்போது ஏதேனும் ஒரு நாய் வந்து காலைத் தூக்கினால், பார்வதி மட்டுமே கல்லெடுக்கவேண்டியிருக்கும். அதற்குப் பிறகு யாரேனும் இரத்த உறவுகள் வேண்டுமென்றால் அவள் பின்னே ஓடிவரலாம்.

கேசவன் டாக் கடைக்கு பார்வதியைக் கைத்தாங்கலாக அழைத்துவந்தவள் அவளோடு எந்த நேரமும் வேலிக்கானச் சண்டையில் மல்லுக்கு நிற்கும் பக்கத்து வீட்டு ஜெயம். துன்பம் நேரிட்டது எதிரிக்கேயென்றாலும் உதவ ஓடிவரும் கிராமத்துக் குண வழக்கபடி நேசக்கரம் நீட்டியிருந்தாள். பார்வதியை உட்கார வைத்தவள், கலைந்து கிடந்த முந்தானையை சரிசெய்து, இடது தோளில் வாங்கி பின் இடுப்பிற் செருகினாள். உடலில் ஒட்டிக் கிடந்த சாலைப் புழுதியைத் தட்டி விட்டாள். சிக்கலாகக் விழுந்து கிடந்தக் பார்வதியின் கூந்தலை பின் கழுத்தருகே இடதுகையிற் பற்றி அவளது கழுத்து வியர்வையை முந்தானையால் அழுந்தத் துடைத்துவிட்டு, இடைஞ்சலாகவிருந்த தனது பிளாஸ்டிக் வளையல்களை முழங்கைக்குத் தள்ளி நிறுத்தி, பார்வதிக்கு-லாவகமாக கோடாலி முடிச்சுப் போட்டு முடித்தாள். கலைந்து கிடந்த பார்வதியின் நெற்றிக் குங்குமத்தைச் சரி செய்ய எத்தனித்த வலது கரத்தை வெடுக்கெனப் பின்வாங்கிக்கொண்டு கேசவனைப் பார்த்தாள். கேசவன் தயாராக உடைத்து வைத்திருந்த சோடாவை ஜெயத்திடம் நீட்டினான். வேண்டாமென்று முதலில் அடம்பிடித்த பார்வதி, ஜெயத்தின் புருஷன் தணிகாசலத்தின் அணைப்பிலிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்த திருப்தியில், கொடுத்தச் சோடாவை மடமடவென்று குடித்து, மீண்டும் மயங்கி ஜெயத்தின் தோள்களைப் பற்றி ஒருக்களித்துச் சாய்ந்தாள்.

மாலை மணி ஏழு….

‘இங்கே யாரும்மா பார்வதி ?.. ‘ பழுப்புநோட்டும் கார்பனுமாக கோட்டைமேடு ஏ.எஸ்.ஐ. கேசவன் டாக்டைக்குள் தலையைக் குனிந்து உள்ளேவந்தார். கூட்டம் அமைதிகாத்தது. டாக் குடித்துக் கொண்டிருந்த இரண்டொருவர், கிளாஸைப் பக்கத்திலிருந்த பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்து நின்றனர்.

‘வாங்க இன்ஸ்பெக்டரு அய்யா.. இப்படி பெஞ்சுமேல குந்துங்க.. மவரசான் வீண் வம்பு தும்புக்குப் போகமாட்டான். இப்படி கொள்ளையிலே போயிட்டான். போனவன் ரெண்டு பொட்டை புள்ளைகள வாரிக் கொடுத்துட்டுப் போயிருக்கான்.. ஆத்தா கொற நாளுக்கும் என்ன பாடுப் படப்போகுதோ ? ‘ கிராமத்தில் அறுவடை நாட்களில் கை முறுக்கு விற்கும் சாவித்திரி கிழவியின் புலம்பல்.

‘ஏ..கிழவி! ஒம்புலம்பல நாளைக்கு ஒப்பாரியில வச்சுக்க. இப்ப அய்யா கேக்குற கேள்விக்கு அவங்களைப் பதில் சொல்ல விடுங்க ‘ – டா கடை கேசவன்.

‘ஏங்க நாங்க இங்க பொணத்த வச்சிக்கிட்டு தண்ணி வெண்ணில்லாம காலையிலிருந்து கிடக்கோம். நீங்க என்னடான்னா சாவகாசமா வறீங்க ?. ‘ -ஆறுமுகச் செட்டியார்

‘நீ யாருய்யா ? செத்தவனுக்கு என்ன வேணும் ? ‘

‘ஆறுமுகமுங்க.. ராமசாமி ஊர்க்காரங்க ‘

‘ஊர்க்காரானாயிருந்தா ? உங்க ஊர்க்காரங்ககிட்டப் பேசினா எடுபடும். எங்கக்கிட்டப் பேசகூடாது. ‘

‘ஏங்க இங்க என்ன நான் தப்பா பேசிட்டேன். ? இங்கே பத்துமணி நேரமா பொணத்தை ரோட்டுலபோட்டுட்டுகிடக்கோம். அங்கப் பாருங்க செத்தவன்புள்ளைகள. அன்னம் ஆகாரமில்லாம புறாாக்குஞ்சுகளா சோர்ந்துகிடக்குதுங்க. வெளியில போக்குவரத்தில்லாமா, பஸ்ஸுல ஜனங்க தவிச்சுக்கிட்டு… எங்க தலையெழுத்துய்யா. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து இப்படித்தான் விமோசனமில்லாம கிடக்கோம்.. நீங்க பொழைக்கத் தெரிஞ்சவங்க.. நாங்கத்தான் ஓட்டப்போட்டுட்டு ‘கவர்மென்ட், ‘ ‘மசுருன்னு ‘ காலத்துக்கும் காத்துக் கிடக்க பழகிக்கிட்டோம். ‘ – துண்டை உதறி தோளில் போட்டபடி ஆறுமுகம் எழுந்திருந்தார்.

‘யோவ் நில்லுய்யா.. விட்டா நீ பாட்டுக்கு பேசிட்டுப்போற. மனசுல என்ன பெரிய நாட்டாமைன்னு நினைப்பா….. ‘

‘சார் விடுங்க ஏதோ பெரியவர். வேகத்துல பேசிட்டார். நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க. ? ‘ டா கடை கேசவன்.

‘என்னய்யா பெரியவர். கிழவனைக் கொஞ்ச அடக்கமா இருந்துக்கசொல்லு. சாகப்போறவயசுல சங்கடம் தேடிக்க வேண்டாம். லாடங்கட்டி காயடிச்சுறுவோம். ‘

‘இல்லை..சார். நம்ம நாட்டு நிலைமை தெரியாம, நீதி நேர்மைன்னு சதா பெட்டிஷன்போட்டுகிட்டு அலைவாரு. மத்தபடி நல்ல மனுஷன் ‘ – இளைஞன் ஒருவன் குரல் கொடுத்தான்

‘ தம்பி நீ போப்பா.. ஆளாளுக்கு ஏதாவது சொல்லிகிட்டு.. இன்ஸ்பெக்டர் அய்யாவை வேலை செய்ய விடுங்க ‘ மீண்டும் டா கடை கேசவன்.

‘என்ன ? போலீஸ்காரன்கிட்டேயே கிலுகிலுப்பு ஆட்டறிங்களா ?. நாளைக்கு ஸ்டேஷனுக்கு வாங்க பேசிக்கிறேன். ‘

பார்வதியைப் பற்றிய தகவல்களையும், ராமசாமியைப் பற்றிய தகவல்கைளையும் எழுதி முடித்து நிமிர்ந்த ஏ.எஸ்.ஐ.,

‘ யோவ் கேசவன்..பாடியை திண்டிவனம் முனிசிபல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். நீங்க பாட்டுக்கு மசுராச்சிண்ணு வீட்டுக்குப் கொண்டு போயிடாதீங்க. ஆம்புலன்ஸ் வந்துகிட்டிருக்குது. நான் முத்தியால் பேட்டையிலிருந்து ஆட்டோவில வந்திருக்கன். எல்லாத்தையும் கவனத்துல வச்சிக்குங்க. நான் கிளமபறேன்.

‘ ஆகட்டுங்க. ‘ டா கடை கேசவன் பக்குவாகப் பேசி அனுப்பிவைத்தான்.

இரவு மணி பத்து…

முன்னிரவு பின் நிலாக்காலம். தமிழ்நாடு அரசின் மின் விளக்குகள் எப்போதும்போல சோர்ந்திருந்தன. திண்டிவனத்தின் காலடியில் கிடந்தது அந்த முனிசிபல் ஆஸ்பத்திரி. நாட்டின் தரித்திரத்தை அங்கீகரிக்கும் அரசின் அடையாளம் திண்டிவனத்தை ஒட்டிய நாற்பது கி.மீ எல்லையிலான துர்மரணங்களை அரசுச் சம்பிரதாயங்கள் அறிய முயற்சிக்கும் சவப் பரிசோதனை இடமும் அதுதான். அதன் ஆரோக்கியமே பரிதாபமாக இருந்தது. ஆஸ்பத்திரி கூரையில் மங்களூர் ஓடுகளைப் பாதுகாத்தது என்னவோ அரச மரத்து பழுத்த இலைகளும், சைக்கிள் டயர்களுமே. காரை பெயர்ந்து, வெள்ளை மறந்து, காமராஜர் காலத்து ஒட்டடைகளும், புதிய பழைய சிலந்திவலைகளுமாக, குளவிக் கூடுகளுடன் அரைத் தூக்கத்திலிருந்தது.

டூட்டி டாக்டர், தனது நாற்காலியை வருகின்ற அவசரங்களுக்கு அடையாளமாக நிறுத்திவிட்டு, பாண்டிச்சேரியிலிருந்தார். ஜெயத்தின் புருஷன் தணிகாசலம் – நான்காவதுமுறையாக – கொஞ்சமான பயத்துடன் – வெள்ளை புடவையும் பெரிய மார்புமாய், சற்று முன்னர் ஒரு பெரிய நோட்டில் ‘ராமசாமி ‘ உடல் வருகையின் காரணத்தை, வேண்டியத் தகவல்களுடன் பதிவு செய்துவிட்டு, ‘ராணி முத்து ‘ வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் கனத்தச் சரீரப் நர்ஸை கேட்டபோது, தணிகாசலம் எதிர்பார்த்தது போலவே சுருக்கென அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ ஏய்யா.. ‘வந்திடுவார்னு ‘ எத்தனை முறை சொல்றது. கிராமத்தானுவங்கிறது சரியாயிருக்குது. கோவிந்தசாமி…. ‘

சிகரட் பிடித்துக் கொண்டிருந்த அட்டெண்டர் கோவிந்தசாமி, சாவகாசமாக நடந்துவந்தான்.

‘என்ன செய்யற ? அந்த ஆளு சும்மா வந்து தொந்திரவு கொடுக்கான். டாக்டர் வந்திடுவார்னு சொல்லு. எவ்வளவு செலவாகுங்கிறதை விவரமாச் சொன்னியா ? ‘

‘எல்லாத்தையும் சொல்லீட்டம்மா.. ‘

‘பிறகென்ன ? யோவ் அங்காலப் போய்ட்டுப் படு டாக்டர் வந்தா கூப்பிட்டுச் சொல்றேன் ‘

தணிகாசலம் மீண்டும் அரசடிக்குத் திரும்பிய போது, உடலுடன் வந்திருந்த கிராமத்து உயிர்கள் சுருண்டு கிடந்தன. முந்தானையை தரையில் விரித்து முழங்கையைத் தலைக்கு வைத்து பார்வதியும் ஜெயமும் அடுத்தடுத்து முடங்கிக் கிடந்தனர். தூக்கமிழந்திருந்த பார்வதி தணிகாசலத்தின் வருகையை உணர்ந்திருக்க வேண்டும் எழுந்து உட்கார்ந்தாள்.

‘என்னம்மா பார்வதி ?.. ‘

‘சொல்லுண்ணா.. ‘

‘என்னத்தை சொல்றது. டூட்டி டாக்டரு காலையிலதான் வருவாருண்ணு அட்டெண்டர் சொல்றான் ‘

‘பேச்சுக்குரல் கேட்டு ஜெயமும் எழுந்துகொண்டாள் ‘

‘நீதான் கிட்ட இருந்து பாரேன். அக்காவை என்னத்துக்கு கேட்டுங்கடக்கிற ? ‘ -ஜெயம்.

‘பிரச்சினை அது இல்லை. ஆம்புலன்ஸ்காரன் நிக்கிறான். காலையில ஊருபோயி சேர்ந்ததும் அவனுக்குப் பட்டுவாடா பண்ணனும். இங்க ஆஸ்பத்திரி செலவு வேற இருக்குது. டாக்டருக்குக் கொடுக்கணும். அறுக்கருவங்களுக்கு வாய்க்கரிசி போடணும். அவனுங்க குடிக்காம பொணத்துல கையை வைக்கமாட்டாங்களாம், அட்டெண்டர் இருநூறு வாங்கிட்டான். இன்னும் ஆளுக்கு ஒரு ஐம்பதாவது கொடுக்கணும். டவுனுக்குப் போயிட்டு காடாதுணி, ஆர்.எஸ்.பதி.தைலம், நூல்கண்டு, பன்னீர்ன்னு ஒரு பெரிய லிஸ்டே கொடுத்திருக்காங்க, வாங்கிட்டு வரணும். ‘

‘எங்கிட்ட ஒத்த தம்பிடி இல்லைன்னா.. என்ன செய்யப் போறேன் ? அங்காளம்மா…! ‘ -பார்வதி.

‘தெரிஞ்சுதானோ என்னவோ காசாம்பு முதலியும் வந்திருக்கான். அவன்கிட்ட கைமாத்தா வாங்கிக்குவோம். பொறவு பாத்துக்கலாம். நாளைக்கு மொறையா நடந்துக்கோ. கை காலு மிச்சமிருந்தா ஒழைச்சுச் சம்பாதிச்சுக்கலாம் ‘

‘சரிண்ணா.. உங்க இஷ்டப்படி செய்யுங்க ‘ பார்வதிக்கு இப்போதைக்கு முடிந்தது தலையாட்டுவது. ஆட்டினாள்.

மீண்டும் அடுத்த வெள்ளிக்கு….

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts